அன்னமே 38,39,40 41
அத்தியாயம் 38
பொண்ணை கட்டிக்குடுக்கும் போது நண்டு சிண்டுல இருந்து அந்தப் பொண்ணுக்கு சொல்ற ஒரே புத்திமதி புருஷன் மனசு கோனாம நடந்துக்க. தப்பு உம்மேல இலைன்னாலும் அனுசரிச்சு இருந்துக்க புள்ள.
சண்ட சச்சரவுன்னு பொறந்த ஊட்டுக்கு பைய தூக்கிட்டு வராதன்னு சொல்லி சொல்லி மனசுக்குள்ள பதிய வைப்பாங்க.
இதுவே பால பாடமா போவ புகுந்த ஊட்டுல மூச்சு விடக்கூட பயமா போவும் பொண்ணுங்களுக்கு.
ஆசை அறுபது நாளு மோகம் முப்பது நாளுன்னு சொல்றாப்புல
அந்த முப்பது நாளுக்குள்ள புருஷனை கட்டி இடுப்புல முடிஞ்சுக்கனும், ஆக்கம் பாத்தாம அவனை அவுத்து விட்டுட்டா அவன் பின்ன நாயா பேயா அலையனும் சாவற காலம் பூராவும்.
செவ்வந்திக்கு கருப்புச்சாமி மேல கொள்ளை பாசம் ஆசை இருக்கப் போய்த்தான் அவனை கட்டிக்கறேன்னு சொல்லிட்டாள்.
அவள் உணர்வை புரிஞ்சுக்காம குருட்டுப்பூனை விட்டத்துல பாய்ஞ்ச கணக்கா அவளை தன் தேவைக்கு பிரட்டி எடுத்தான். அவள் என்ன ஆனாள்? உடம்புக்கு நல்லாருக்கா? எப்படின்னு கேக்கலை.
“மச்சான்” அவனை தேடினபடி வந்தாள் செவ்வந்தி.
“உள்ள வா புள்ள. அங்கிட்டு நின்னே எதையாவது பேசிட்டு கிடக்காத” அவன் சத்தம் போட்டான்.
அவன் கட்டில்ல படுத்திருக்க பக்கத்துல போனவ, “மச்சான் பாங்கு பாக்காம செடி கொடி மண்டிக்கெடக்குது பாம்பு பூச்சி வந்தா தெரியாது. நீங்க படுத்திருங்க நா கைக்கு முடிஞ்சத கொத்தி சுத்தம் பண்ணிக்கறேன்” சொன்னவ கைய புடிச்சு இழுத்து பக்கத்தில படுக்க வச்சான்.
“நா பேசறத காது குடுத்து கேளு மச்சான்” அவன்கிட்ட இருந்து நழுவி எந்திரிக்க போனவளை கட்டிப்பிடிச்சு அசைய விடாம பண்ணினான்.
“வெள்ளாமையை பாக்கறதுக்கா உன்ன அங்கிட்டு இருந்து கூப்பிட்டு வந்தன். மச்சான் பசிய அடக்கு புள்ள முதல்ல” கன்னம் காதில் முத்தம் கொடுத்தவன் அவள் உதடுகளை ருசித்திட்டான்
“சொன்னா கேளு புள்ள” ஆசையின் அளவு அதிகரிக்க அப்பவே தன் மனசு போல நடக்கனும்னு ஆத்திரம் வந்தது
“தெரியாது மச்சான்”
“இப்ப தெரிஞ்சுக்க வா” அவளை தரையில் இழுத்து போட்டான் அவள் மறுக்க மறுக்க பித்தம் பிடிச்சுப் போனது.
“செவ்வந்தி என்ன கோவப்படுத்தி பாக்காத. மனுசனா இருக்க மாட்டன் சொல்லிட்டேன்” அவளை கட்டாயப்படுத்தினான்.
“இதுமட்டும் வாழ்க்கை இல்ல மச்சான் புரிஞ்சிக்க”
“இங்கிட்டு பாரு புள்ள உனக்கு என்னைய புடிச்சிருக்கா?” அவளை தன்னை பார்க்க வைத்து கேட்டான்.
“ரொம்ப புடிக்கும் மச்சான்” அவள் பேச்சில் இருந்த உண்மைய தெரிஞ்சுக்கிட்டு அடுத்த கேள்விய கேட்டான்.
“நா தொட்டது புடிச்சிதா?” அடுத்த கேள்வியில
“போ மச்சான்” வெட்கமாய் அவன் மார்பில் சாய்ந்து முகத்தை மறைத்து நின்றாள்.
நெருங்கி அவள் கையை பிடிச்சு முறுக்கியவன், “இதுக்குத்தாண்டி கல்யாணம் பண்ணி வைக்கறாங்க. ஊரு உலகத்துல புருஷன் பொண்டாட்டிகுள்ள நடக்கறதுதான இதெல்லாம். இதெல்லாம் பண்ணாமையா புள்ள பெத்துக்கிட்டாங்க. எதுவும் வேணாமுன்னா எதுக்குடி கட்டிக்கிட்ட” அடிக்க வந்தான் அவளை.
அவன்கிட்ட இருந்து தள்ளி நின்னுட்டே “அவங்க அன்பா இருப்பாங்க மச்சான்” அவளுக்கு ஏக்கம் வந்துச்சு தனக்கு வாச்ச புருஷன் மட்டும் ஏன் இப்படி இருக்கான். ஆசையா ஒத்த வார்த்தை பேசலை முடிஞ்ச அளவுக்கு மனசை உடம்பை காயப்படுத்தினான். எப்படா விடியும்னு ஆக இந்த வாழ்க்கைய நெனச்சாவே பயம் வந்துச்சு அவளுக்கு.
“நா மட்டும் உன்ன கொடுமையா பண்ணிட்டு இருக்கேன்” ஆத்திரமா அவளை உழுக்கினான்.
“விடுய்யா என்னை. உனக்கென்ன வெறி புடிச்சுப் போச்சாய்யா. இம்புட்டு நாளா நல்லாத்தான இருந்த. நேத்துல இருந்து மனுஷின்னு கூட பாக்க மாட்டேங்குற. உடம்பெல்லாம் புண்ணா கெடக்குய்யா. கல்யாணம் ஆனாக்கா மாடாட்டம் நீ என்ன பண்ணாலும் கேட்டுட்டு கெடக்கனுமா?” கண்ணை துடைச்சுட்டு ராத்திரியில இருந்து பட்ட கஷ்டத்துக்கு பொங்கிட்டாள்.
“என்ன புள்ள பேச்சு ஒரு மாதிரி போவுது?” அவள் பேச்சு புடிக்காம உத்துப் பார்த்தான் அவளை.
“நா சரியாத்தேன் இருக்க மச்சான். உனக்குத்தா புத்தி சரியில்ல. என்ன மனுஷியாவே மதிக்கறது இல்ல. எப்ப பாத்தாலும் உங்கூட கட்டில்லயே கெடந்தா ஆச்சா. அதுமட்டுமா நீ அசிங்கமா எல்லாம் கேக்குற மச்சான். நா என்ன கூத்தியாளா கண்டதையும் பண்ண” பேச கூடாததை எல்லாம் செவ்வந்தியும் பேசிட்டாள்.
“அப்படி தப்பா பேசாதடி. உன்னாட்டம்தான் ஒவ்வொரு பொம்பளையும் பண்ணிட்டிருக்காங்களாடி. புருஷன் கூப்பிட்டா வரமாட்டியா. அப்புடி என்னட பெரிய புடுங்கியா நீ. இம்புட்டு சிலுத்துக்கற. அப்படியே புருசனுக்கு பொண்டாட்டி கூத்தியாளா இருந்தா என்ன தப்புங்கறேன். நா கண்டவள தேடிப்போனாத்தா தப்பு. உன்கிட்டதா இதெல்லாம் கேக்க முடியும் புரிஞ்சுக்க பாரு நீ முதல்ல”
“நேத்து ராத்திரி முடியலைன்னாலும் வந்தன்ல மச்சான். உனக்கு பிடிச்ச மாதிரி இருந்தனுல்ல” கெஞ்சி கைகூப்பினாள்.
“வந்துதான் ஆகணும் புள்ள. புருசனோட படுக்க புடிக்கலைன்னா பொறந்த ஊட்டுலயே கெடக்க வேண்டியதுதானே. என்ன மயித்துக்கு என்ன கட்டிக்கிட்ட. பொண்ணு பாக்க வரப்ப புடிச்சிருக்கான்னு கேட்டுத்தான கட்டிக்கிட்டேன்” ஆங்காரமா ஆணவமாக் கேட்டான்.
அவன் பேச்சில் துடிதுடித்துப் போனாள்.
“சரி பேச்சு போனது போவட்டும். நா சொன்னத கேளு வா” அவளை ஆசைக்கு கட்டுப்படுத்த
அவள் தள்ளி விட சினந்தான்.
“படுக்கைக்கு ஆவாத பொண்டாட்டி எனக்கு வேணாம்டி. உங்கப்பன் வீட்டுக்கே போய்ச் சேரு. அங்கிட்டு வராத” வெளியே போனான்.
அதிர்ந்து நின்றாள். அய்யோ கல்யாணம் ஆவி ரெண்டே நாளுல பொறந்த வீட்டுக்கு சண்டைன்னு போனா அப்பனும் அம்மாளும் என்ன ஆவாங்க
பதறி துடித்து அவன் பின்னே ஓடினாள்.
“மச்சான் நீ என்ன சொன்னாலும் கேக்கறேன் உள்ள வா மச்சான்” தன் மானத்தை விட்டு அவன் பின்னே ஓடி கையைப் பற்றினாள்.
அவள் கையை உதறிட்டு, போன் வர காதில் வைத்து கேட்ட செய்தியில் முகம் பதற, அவள் பக்கமே பார்க்காம போய்விட்டான். நின்னு கூட்டிட்டு போயிருந்தா பின்விளைவுகள் வராம தடுத்திருக்கலாம். சூழ்நிலை கைதியாகாம தப்பி பிழைச்சிருக்கலாம்.
திகைத்து நின்றாள். இப்படி போனா என்ன அர்த்தம் வர வேண்டாமுன்னு சொல்லிட்டுப் போறாரா.
தயங்கி தயங்கி யோசிச்சு சரி பாக்கலாமுன்னு வீட்டுக்கு போனாள்.
வீட்டுக்கு முன்ன அங்க அங்க ஆட்கள் நின்னு பேசிட்டிருந்தார்கள். பந்தலுக்கு வேணுங்கற கீத்தும் பந்தக்காலும் ஒருபக்கம் இறக்கிட்டு இருந்தார்கள் லாரியில் இருந்து.
அங்கே தயங்கி உள்ள போகாம நின்னுட்டாள். வீட்டு சூழ்நிலை அந்த அளவுக்கு சரியில்ல என்னமோ தப்புன்னு மனசுக்கு பட்டுச்சு.
“செவ்வந்தி அப்பத்தா நம்ம எல்லாத்தையும் விட்டுப்புட்டு போயிடுச்சே கண்ணு” அருக்காணி அழுதார்.
“யே புள்ள அருக்கானி. இன்னும் பூச போடுல. அதுக்குள்ள அழுவ கூடாது. வாய மூடிக்க” பங்காளி வீட்டுல ஒருத்தர் அடக்கினார்.
மூத்த பங்காளி வந்து பூஜை போட்டு தேங்கா பழம் மாத்தினாத்தான் மேற்கொண்டு ஆவறதை பாக்கணும்.
செவ்வந்தியை பாத்துவிட்ட சுலோச்சனாவுக்கு வயிறு காந்தியது. எப்ப இவள பாத்தமோ அப்ப ஆரம்பிச்சது சனி. நெனைச்சவர் எழுந்து அவள் பக்கமா போனார்.
அத்தியாயம் 39
கல்யாணமாகி ரெண்டே ரெண்டு நாளுதான் முடிஞ்சிருக்கு. அதுக்குள்ள என்னத்த ஒரு பொண்ணு புரிஞ்சுக்கறது.
மச்சானை நல்லா தெரியும். பேசறதுக்கு பழகறதுக்கு ஒழுக்கமா இருக்கான். விளையாட்டு பேச்சு பேசினாலும் விவகாரமில்ல. இப்படியாக இவனைப் பத்தி நல்லா புரிஞ்சு வச்சிருக்கேன்னு நெனச்சு கட்டிக்கிட்ட புருஷனே மாறுபட்டு நிக்கையில அந்நிய மனுஷங்களை பத்தி எப்படி தெரியும் அவளுக்கு.
முதல் ராத்திரிக்கு அப்புறமா கொஞ்சம் தெளிவு வருமுன்னு சொல்லுவாங்க. செவ்வந்திக்கு அங்க இன்னும் குழப்பந்தான் மிஞ்சுச்சு. விரும்பி போனாலும் வழுக்கட்டாயமா பெறப்பட்ட உறவு உடல் உறுப்புகளில் இருந்த நகம் பற்கள் கீறிய காயங்கள் அவள் பூஞ்சை மனசை காயப்படுத்தியது. பொண்டாட்டின்னா படுக்க மட்டும்தான்னு கருப்புச்சாமி நெனைக்கறது அவளுக்கு புடம் போட்ட மாதிரி புரிஞ்சு போனது.
அந்நியமா பாக்கும் மாமியார் அப்படின்னு ஒண்ணுமே புரியாம நின்னாள் செவ்வந்தி.
அவளுக்கு மட்டுமல்ல அவனுக்கும் அப்படித்தான் இருக்கும். பெத்தவங்க பாத்து வைக்கற கல்யாணத்துல ஐம்பது சதவீதம் வாழ்க்கையோட தொடக்கம் காமமாகத்தான் இருக்கும். கல்யாணமான புதுசுல அதுவரை விரதம் காத்த இளமை பொண்டாட்டிகிட்ட தேவைய மொத்தமா கேக்கும். ஆசை அறுபது நாள் கணக்கா மூணு மாசம் பொண்டாட்டி மயக்கத்துலயே ஆம்பளை இருப்பான்.
திமிரு கொஞ்சம் அடங்குன பின்னதான் வெளி உலகமுன்னு ஒண்ணு இருக்கறதே அவனுக்கு நெனப்பு வரும். அதுக்கு இடையில பொண்டாட்டி மனசையும் தெரிஞ்சு வச்சுக்குவான்.
கருப்புச்சாமி கூட இப்படித்தான். புரிஞ்சுக்கவே வாய்ப்பு இல்ல இந்த ஜோடிக்கு, அன்னைக்குத்தான் மண்ணுல இருந்து முழைச்சு வெளியே வந்த செடி மேல வெந்நீர் ஊத்தினா வாடி வதங்கி மண்ணோட மண்ணா மக்கி போவுமே அது இருந்த எடம் தெரியாம போவும்.
புருஷன் பொண்டாட்டிக்குள்ள மூணாவது மனுஷங்க நுழைய கூடாது எப்பவும். அப்படி வந்து அவங்க சொன்னதை காது கொடுத்து கேட்டா வாழ்க்கை சின்னபின்னமாவும்.
வீட்டு முன்ன என்ன நடக்குது எதுக்கு இம்புட்டு கூட்டமுன்னு புரியாம நின்ன செவ்வந்திய பார்த்த சுலோச்சனாவுக்கு ஆத்திரமாத்திரமா வந்துச்சு.
மாமியாரை எதிரியா பாத்தாலும் அவரில்லாத வீட்டை நெனச்சு கூடப் பாத்தது இல்ல சுலோச்சனா. ராமாயி இருந்தா சுலோச்சனாவுக்கு எந்த பொறுப்புமில்லாம, யாருக்கும் பதில் சொல்லனுமுன்னு அவசியமில்லாம இருக்கும்.
யாரு ஊட்டுப்பக்கம் வந்தாலும் அவர மீறி உள்ள வந்திர முடியாது. அவர் இல்லாதது பெரிய இழப்பு சுலோச்சனாவுக்கு.
அன்னம் தூக்க மாத்திரைய முழுங்கிட்டு தற்கொலை பண்ணிக்க போனதை கேட்டதுல இருந்து வயிறு பத்தி எறிந்தது. அதுக்கு காரணம் தன்னோட புடிவாதம்னு உணரல அவர்.
நாம சொன்னது சொன்னபடி மக விஷயத்துலயாவது நடக்கட்டும்னு நெனைச்சார். ஒவ்வொரு நாளும் தாம் பெத்த பிள்ளைகள் விஷயத்துல சொந்தமா முடிவெடுக்க திராணியில்லாம புருஷன் முகத்துக்காக விட்டுக்கொடுத்து போனவர் அன்னம் கல்யாண விஷயத்துல வீம்பா நின்னார்.
தப்பை தன் மேல வச்சுக்கிட்டு மருமகளா வந்த செவ்வந்தி மேல அவர் வன்மம் பாய்ந்தது.
“எல்லாம் உன்னாலதாண்டி. உடம்ப காட்டி மயக்கி எம்மவன கட்டிக்கிட்ட. எப்ப ஊட்டுக்குள்ள கால எடுத்து வச்சியோ அப்பவே எல்லாம் போச்சு. நிம்மதியா இருந்த குடும்பத்துல மூதேவி மாதிரி பூந்துட்ட” முந்தானைய இடுப்பில் சொருவிய சுலோச்சனா செவ்வந்தியோட கூந்தலை கொத்தா புடிச்சு இழுத்தார்.
“அத்த” அலறிய செவ்வந்தி அவர் கையை தடுத்தாள்.
“அவள விடு சுலோச்சனா. பங்காளிக வர ஆரம்பிச்சுட்டாங்க” தயாளன் தடுத்தார்.
“உம்மவன் இந்த சிறுக்கிகிட்ட மயங்கி கெடக்கிறான். உனக்கென்ன நீயும் இவ மடியில விழுந்துட்டியா?” புருஷன் மருவன்னு பாக்காம அவ கேட்ட கேள்வியில தயாளன் மரித்தே போனார்.
“என்ன மன்னிச்சிடும்மா” பொண்டாட்டியின் கேள்வியில் அமிலம் பட்டாப்புல அந்த இடத்தை விட்டு போய்விட்டார் தயாளன்.
செவ்வந்தியை பொறந்த தினத்துல இருந்தே பாத்துட்டு வறார். எந்நேரமும் பேச்சும் சிரிப்புமாவே விளையாட்டு குழந்தையா இருக்கும் அவளை பாக்க மகள் நெனப்புதான் வரும் அவருக்கு. அன்னம் இப்படி இருந்தா தேவலையே எந்நேரமும் அவ அம்மா முந்தானைய புடிச்சுட்டு அம்மாக்காரி மாதிரியே உம்முன்னு அமைதியா இருக்காளேன்னு நெனைப்பார்.
மருமவ முகத்த பாக்க திரானியில்லாம தலைகுனிந்து அகன்றார்.
கருப்புச்சாமி செவ்வந்திக்கு சொந்தக்காரன் அப்படிங்கறதால அங்க இருக்க கூட்டம் மொத்தமும் அவளுக்கும் சொந்தக்காரங்கதான். எல்லோரும் அவள பாவமா பாக்க அவமானம் பிச்சுத் தின்னது அவள.
“அத்த எல்லாம் பாக்கறாங்கத்த” கண்களில் வழியும் நீரோடு சுலோச்சனா கையை எடுத்துவிட நெனச்சாள்.
“பாக்கட்டும்டி. உன்ற திருகுதாளம் தெரிஞ்சுக்கட்டும். குடிக்கெடுத்த சிறுக்கி எங்குடும்பத்த நாசம் பண்ணிட்டியே” அவள் முதுகில் கன்னத்தில் பலம் கொண்ட மட்டும் அடிச்சார். கோபத்தில் சுலோச்சனாவுக்கு நிதானம் தப்பி போனது. படிச்ச படிப்பு மறந்தது.
“இங்க பாருடி இப்பவே இந்த வீட்டை விட்டு போய்க்கோ. என் மகனுக்கு நீ தேவையில்ல” அவளை அடித்து தூரத்த.
“மச்சான் பாத்துட்டே இருக்கியேய்யா” செவ்வந்தியின் அழைப்பு அவன் செவியில் விழுந்து அவளை நிமிர்ந்து பார்த்தாலும் அவன்கிட்டே எந்த உணர்வும் இல்ல.
அவனுக்கு எதிர்க்க இருக்க அப்பத்தா உயிரற்ற உடம்பே அவன் மனச உடைச்சிருக்க பொண்டாட்டியோட அழுகை கதறல் மனசுல படாம போனது.
அவனை தாலாட்டி சீராட்டி வளத்த அப்பத்தா இனி இருக்காதே. தனக்காக இந்த ஊட்டுல ஆரிருக்கா மனசுக்குள் அழுதவன் அவனுக்காக உயிரையும் தர தயாரா இருந்த பெண்ணை உசுரோட கொன்னுட்டான் தன் அமைதியால.
“அவனை என்னடி கேக்கற. நா சொல்றேன் இனி உன்னோட கால் இந்த வீட்டுல படக்கூடாது போய்த் தொலை” அவளை அங்க இருந்து தூரத்த முயன்றார்.
“அம்மா பாவம் அந்த புள்ள காரியம் முடியட்டும் பேசிக்கலாம்” சொந்தக்காரங்க முடிஞ்ச மட்டும் தடுத்தார்கள்.
“யாரும் என் வீட்டு விஷயத்துல தலையிட கூடாது. இவ என் மவனுக்கு வேண்டாம். இப்பவே போவணும் இல்லன்ன இவ உசுரையும் எடுப்பேன்” அவர் பேசின கெட்ட வார்த்தையில அங்க இருக்கவங்களின் காதே உழுத்துப் போனது.
“போடி வெளிய” அவள் கழுத்தை பிடிச்சு வெளியே தள்ள தரையில் விழுந்தாள் செவ்வந்தி.
ராமாயி செத்த சேதியை கேட்டு வந்த கண்ணப்பனும் அமுதாவும் மகள் கதியை கண்டு இன்னும் வெரசா உள்ளே வந்தார்கள்.
“என்ற கண்ணு” அமுதா மவள தூக்கி நிறுத்தினார்.
“நல்ல புள்ளைய பெத்தீங்க கண்ணப்பா. ராசி கெட்டவ. இல்லாத அதிசயமுன்னு இவளை கட்டிக்கிட்டு வந்தா இப்புடித்தான் குடும்பம் நிர்மூலமா போவும்” சுலோச்சனா கத்தினார்.
“அவங்களோட அவர் பேச்சை கேக்காம செவ்வந்தியின் உடம்புல இருக்க காயத்த வேதனையா பார்த்தார்கள்.
“ஏய் போடி வெளியே” அவர் கத்தலும்
செவ்வந்தியின் “நா போ மாட்டேன்” மறுப்பும் காதுல கேக்க.
“ஏப்பா கருப்பா பங்காளி மாமன் மச்சான் பெரிய தலைக்கட்டு எல்லாம் வந்தாச்சு பூசைய போடணும். போய் உன் வீட்டு பொம்பளைங்க வாய அடக்கு. இம்புட்டு கூச்சலுல பூசைய போட்டா கெழவி ஆத்மா நிம்மதியா போய் சேர வேண்டாமா” ஒருவர் அவனை உசுப்பி விட.
சுலோச்சனா போ போன்னு நாய வெரட்டுற மாதிரி வெரட்ட செவ்வந்திக்கும் கோபம் வந்துச்சு “நீங்கல்லாம் ஒரு அம்மாவா. இப்படியிருக்க போய்த்தான் அன்னம் வாழ்க்கைய கெடுத்தீங்க. இப்ப மவனோட வாழ்க்கையை நாசம் பண்ண பாக்குறீங்க. இப்படியே போனா யாருமத்து போவீங்க பாத்துக்குங்க” முகம் மிளகாயா சிவந்து போக செவ்வந்தி கண்ணீரும் கம்பளையுமா பேசினாள்.
அவள் பேச்சை கேட்டுட்டே வந்த கருப்பனுக்கு கோபம் தலைக்கு ஏறி நின்னுச்சு. இத்தன சொந்தம் கூடி நிக்கையில எம்புட்டு பேச்சை பேசறா பாரு நாவடக்கம் வேண்டாமான்னு பக்கத்துல வந்தான்.
“மச்சான்” பக்கத்துல வந்தவன் தனக்கு ஆதரவா இருப்பான்னு பரிதவிப்போட பார்த்தாள் செவ்வந்தி.
“அதான் போ போங்கறாங்களே. போய்த்தான் தொலையறது. இம்புட்டு சனமிருக்க கோட்டி சிறுக்கி எதுக்கு நாடகமாடிட்டு இருக்கவ”
“நா நாடகமாடல மச்சான். உன்ற அம்மா என்ன துரத்தி விடுறது கண்ணுக்கு அகப்படலையா. அவங்க பேச்சு மண்டைக்கு ஏறலையா” தவிப்பாக அவன் சட்டையை பிடித்தாள்.
இவனும் தூரத்திட்டா பெத்தவங்களுக்கு பாரமா போவமேன்னு அவன்கிட்டயே மானங்கெட்டாவது பொழைக்க நெனச்சாள் செவ்வந்தி. இப்பத்தான் கரையேத்திட்டமுன்னு நிம்மதியா இருக்காங்க. அண்ணனுக்கு சம்பாதிக்கணும் இனிமேட்டு. வாழாவெட்டியா போனா அண்ணன் கல்யாணம் நடக்க தடையா போவமே அஞ்சி அவன் கால்ல விழபோனாள் செவ்வந்தி.
சொந்தக்காரவுங்க கூடி இருக்க அவ சட்டைய புடிச்சதை அவமானமா நெனச்ச கருப்புச்சாமி,
“போடி வெளிய” அவள் கழுத்தை பிடிச்சு தள்ளினான்.
விழாமல் அவன் கைப்பிடியில் நின்னவள் “உன்ன விட்டுப்புட்டு நா போ மாட்டன் மச்சான். உன்கூடவே உனக்கு துணையா இருக்கன். அப்பத்தா போய்டுச்சு நீ தனியா இருந்தா அது இழப்பை தாங்க முடியாம தவிச்சு போவ” அவன்கிட்ட கெஞ்சினாள்.
“போடின்னு சொல்றேன்ல” அவளை ஒரே தள்ளாக தள்ள அவன் கையோட அவன் கட்டுன தாலி அறுந்து வந்துடுச்சு.
அதில கோர்த்து இருந்த மாங்கல்யம் சிதறி மண்ணில் விழுந்தது. அதை கண்ணுற்று தரையில் விழுந்த செவ்வந்திக்கு மனசே அத்துப் போச்சு.
அவன் பங்குக்கு அவனும் அவளை உயிரோட சாகடிச்சுட்டான்.
“அய்யோ இது நல்லதுக்கு இல்லையே தாலிய பிரிச்சு தங்கத்துல கோர்க்க முன்ன இப்படி ஆகப்படாதே” நடக்கற கொடுமைய வாயில கைய வச்சு பாத்த பெருசுக பேசிக்கொண்டது.
“அதான் கட்டுனவனே அத்துப் போட்டுட்டானே. திரும்பி பாக்காம போய்த் தொலை. இல்ல இங்கிட்டு இருக்க ஆம்பளைங்கள வச்சு இழுத்துட்டு முச்சந்தியில விட வைப்பேன்” சுலோச்சனா பொம்பளைங்கறத மறந்து கர்ஜித்தார் மிருகமா.
“மச்சான் நெசமாவே என்னை அத்துப்போட்டுட்டியா. பாவி மனசு உம்மேல பைத்தியமா கெடக்குய்யா. போன்னு சொன்னா எங்கிட்டு போவேன். காலமுச்சூடும் வச்சுப் பொழைப்பேன்னு நெனச்சா ரெண்டே நாளுல கை கழுவிட்டியே. நா உன்கூடவே எங்கிட்டாவது இருக்கேன்யா. அப்பாரு தலையில பாரமா விழுற நேரம் குளம் குட்டைன்னு உழுந்து செத்திருவேன்” அவன் கால்ல உழுந்து கெஞ்சி கதறிய கோலம் கண்டு அங்க நின்னவங்க கண்ணுல கண்ணீருக்கு பதிலா ரத்தம் வர அளவுக்கு மனசு அடிச்சுகிட்டது.
இரும்பா நின்ன கருப்புச்சாமி மனசை அப்பத்தா இனிமேட்டு வரமாட்டான்ற உண்மை கல்லாக மாத்த அவ கதறல் காதுல ஏறவே இல்ல அவனுக்கு.
அவன் பக்கத்துல வந்த கண்ணப்பன் “எம்மவ கதறுறது கேட்டா கல்லுக்கு கூட கண்ணீரு வரும் சாமி. இவதான் வேனுன்னு நீதான பொண்ணு கேட்டு வந்த. உம் முகத்துக்காக மட்டுந்தேன் எம்மவளை கட்டிக்கொடுத்தோம். ஒரு பேச்சு சாதிசனத்துகிட்ட உன்னை பத்தி விசாரிக்கல. செத்துப்போன அந்த மகராசி சொன்ன ஒத்த சொல்லுல கண்ணை மூடிட்டு எம்மவள கட்டி வச்சோம். கழுத்தறுத்துட்ட சாமி” கையை கூப்பியவர் பெருங்குரலெடுத்து அழுதார்.
அப்பாரு அழுகைய பாத்த செவ்வந்தி “அப்பா” தரையில் கிடந்தவள் தலையில் அடித்துக்கொண்டு அழுதாள்.
பெத்த வயிறு பத்தி எரியுதுய்யா நல்லாருப்பீங்க நீங்க” அமுதா புருஷன் வேதனை கண்டு அங்கிருக்க விரும்பாம மகளை அழைத்தார்.
“எந்திரி கண்ணு இதுக்கு மேல இங்க நிக்கறது உனக்கு நல்லதில்ல புள்ள. இவங்க மனுசங்கன்னு நம்பினோம். பொண்ணு கேட்டு வந்த மனுஷி கட்டையில கெடக்க ஆருகிட்ட நாயம் கேக்க. நாம போவலாம். இவங்ககிட்ட உன்னால இனிமேட்டு இருக்க முடியாது கண்ணு. சோத்துல வெசத்த வச்சு கொன்னுப்புடுவாங்க இரக்கமில்லாதவங்க” அமுதா மவ கதியை கண்ணுல பாக்க முடியாம அழுதுட்டே அவளை தூக்கி நிறுத்தினார்.
எந்திருச்சு நின்ன செவ்வந்தி “மச்சான் அப்ப உனக்கு இதுல சம்மதமா. ஆசைக்கு வராத பொண்டாட்டி இனிமேட்டு வேண்டாமுன்னு சொன்னவன் அதை நடத்தியே காட்டிட்டியேய்யா” பேச.
“இப்ப போறியா சாணியை கரைச்சு மூஞ்சியில ஊத்தட்டுமா?” சுலோச்சனா அவளை அனுப்பியே ஆவணும்னு திமிறிட்டு நின்றார்.
அங்க நின்னவங்களையும், கண்டுக்காம நின்ன புருஷனையும் ஒரு பார்வை பாத்த செவ்வந்தி பெத்தவங்களோட வீட்டுக்கு நடந்தாள்.
அத்தியாயம் 40
வேப்பமரத்துக்கு அடியில் சாய்ந்து உக்கார்ந்திருந்த அன்னத்துக்கு இப்ப வெடுக்குன்னு இருந்துச்சு. தூக்கமே வராம இருந்தாலும் புண்ணியமா போவும்னு நெனைக்கற அளவுக்கு தூக்கத்த கண்டாலே பயந்தாள். தூங்க பிடிக்கவே இல்ல ஆனா கட்டாயமா வந்துச்சு இந்த ஒரு வாரமா. உசுரு பொழைச்சதே பெருசுன்னு ஆவ சத்தியசீலன் அவ உபாதையை பெருசு பண்ணிக்கல.
வேப்ப மரக்காத்து சுத்தியும் எந்த வீடும் இல்லாம போக அமைதியா இருந்துச்சு. வீட்டு காம்பவுண்டுக்கு சுத்தியும் அவன் தோப்புதான் இருந்துச்சு.
அன்னம் இப்ப முழுசா குணமாகிவிட்டாள். உடம்பு தேறிவிட்டதால வெளியில என்ன நடந்துச்சுன்னு கவனிக்க முடிஞ்சது அவளுக்கு. அப்பத்தா செத்த கவலையில உடம்பு மெலிஞ்சு போனது. நாமதான் எல்லாத்துக்கும் காரணமுன்னு நெனச்சு குற்ற உணர்வில் நினைச்சு நினைச்சு அழுதாள்.
சத்தியசீலன் அவளுக்கு குணமானதால வேலையில கவனத்தை செலுத்தினான். மரத்தில இருக்க தேங்காயை பறிச்சு மட்டையை உரிச்சு காஞ்ச மட்டையை விற்பனை செய்துவிடுவான்.
தேங்கா நாரை கயிராக திரிச்சு அதையும் விற்பனை செய்வான். கயிறு திருச்சது போக மீதம் இருக்க தேங்காய் நார் துகள்களையும் வாங்கிக்கொள்ள ஆட்கள் இருக்கிறார்கள். மாடித்தோட்டத்துக்கு பயன்படுத்துவார்கள் அதை.
செவ்விளநி வெட்டறதுக்குன்னு தனியா ஐம்பது மரத்தை வளத்தி விட்டிருக்கான் இளநி வியாபாரிகள் வந்து வாங்கிட்டு போவார்கள். இப்படி தனக்கு என்ன வருமுன்னு தெரிஞ்சுக்கிட்டு அதை மட்டும் பாத்துகிட்டு செருக்கோட இருந்தான் சத்தியசீலன்.
கல்யாணம் பண்ண நோக்கமே இல்லாம வெறுங்கட்டையா திரிஞ்சவனுக்கு வீட்டுல இருக்க வசதி அதிகமாத்தான் தெரிஞ்சுது. அவனே சமைச்சுக்குவான் இல்லையா கடையில சாப்பிட்டு பசியாத்திக்குவான்.
கட்டிக்கிட்டு வந்த மவராசி வீட்டுக்குள்ள காலை எடுத்து வச்சதுல இருந்து செலவாவே இருக்க, அவ முட்ட கண்ணை விரிச்சு வீட்டில் இருக்க குற்றம் குறைகளை நக்கீரன் பேத்தி மாதிரி ஒரு பேப்பரை கையில் எடுத்து குறிப்பு எழுதினாள்.
“இந்தக் கருமத்துக்குத்தான் நாலெழுத்து படிச்சு தொலையப்படாதுன்னு சொல்றது. எப்ப பாரு டீச்சரு மாதிரி கணக்கு போட்டுக்கிட்டே இருக்கா” அவ வைக்க போவும் செலவை பத்தி தெரியாம தலையில் அடிச்சுக்கிட்டு,
என்னவோ பண்ணி தொலையட்டும்னு கண்டுக்காம விட்டுட்டான்.
குடும்பமே அரைகுறை அதுல இருந்து வந்த இவ மட்டும் அறிவோடவா இருக்கப் போறான்னு முடிவே பண்ணிட்டான். அம்புட்டு கோபத்தில் இருந்தான் கருப்புச்சாமி மேல. அவனெல்லாம் ஆம்பளையே இல்லைன்னு முடிவே பண்ணிட்டான் மனசில.
அவன் தன்னை பாத்து தலையில் அடிச்சுக்கிட்டு போவவும் முகத்தை வெட்டுன்னு திருப்பினாள்.
“ஏற்கனவே குரங்கு மாதிரியே இருக்கடி. இதுல கோவமா இருக்கன்னு இன்னும் அச்சு அசலா குரங்கா மாற பாக்காத” சத்தியசீலன் அவள் முகம் போன போக்கை பாத்து நகைத்தான்.
நேத்து காத்தால ஆரம்பிச்சு வெளிய குளிக்க புடிக்க அருவெறுப்பு பட்டு மூஞ்சிய இழுத்து வைச்சுக்கிட்டு முரண்டு பிடித்தாள் அவன் எது சொன்னாலும்.
அவன் உதவியில்லாம நிக்க கூட முடியாதுன்னப்ப வசதிகுறைவுகள் கண்ணுல படல அவளுக்கு. இப்ப தெளிவாக உணர. வெட்ட வெளியில எப்படி தண்ணி ஊத்த முடியும் கூச்சம் பிடுங்கித் தின்றது அவளை.
“என்னடி பராக்கு பாத்துட்டிருக்க. அடிக்கிற காத்துக்கு தண்ணி ஆறிப்போவும். வெரசா மேலுக்கு ஊத்திட்டு வா” அவன் சத்தம் உள்ள இருந்து கேக்க.
“ஊத்து ஊத்ததுன்னா எப்படி. என்னால முடியாது” அவள் பதிலுக்கு போட்ட சத்தத்தில்,
“அடக் கொழுப்பெடுத்த சிறுக்கி நோக்காடு சரியாப் போனங்காட்டி திமிரு பேசிட்டு இருக்க” வேட்டியை மடிச்சுக்கட்டிட்டு அவ பக்கத்துல அவன் வர.
அவன் வரும் விசையை பாத்து அஞ்சிய அன்னம் “இங்க தடுப்பு எதுவுமில்லாத குளிக்க வெக்கமா இருக்கு. எந்த மரத்துல யாரு இருக்கான்னு அச்சமா இருக்கு” அவன் அடிச்சுடுவானோன்னு நடுங்கி பின்னே நகர்ந்தாள்.
“இங்கிட்டு சுத்தி பாரு புள்ள நம்ம வீட்ட சுத்தி தென்ன மரம் எதுவும் இருக்காது. கேட்டுக்கு உள்ளாரதான் வேப்ப மரம் ஒண்ணு இருக்கு. எவங் கண்ணும் இங்க எட்டி பாக்காது தெரிஞ்சுக்க. அந்த காலத்துல எங்கப்பன் எல்லாத்தையும் யோசிச்சுத்தான் கட்டிட்டு போயிருக்கான். வயக்காட்டுக்கு சுத்தியும் வேலின்னும் அந்த வேலிக்குள்ளேயும் இதோ நம்ம இருக்க வீட்ட சுத்தி காம்பவுண்டு செவுரும் அதுக்கு ஒரு கேட்டயும் போட்டுருக்கான்” பெருமை தொணித்தது அவன் பேச்சில.
அவன் சொன்ன தகவலில் அவள் கண்கள் விரிந்தது ஆச்சரியமா.
“மிரண்டு சாவாத குளிச்சு தொலை. சாவடிக்கற மனுசன” அவன் போவ.
“என்னால முடியாது. பாத்ரூம் கட்டி தா. அப்பத்தான் குளிப்பேன்” அழுத்தமா சொல்லிட்டு அப்படியே நின்னாள்.
திரும்ப அவள் பக்கம் வந்த சத்தியசீலன் “நா உன்ன கட்டிகிட்டவன் அன்னம். என் எதிர்க்க குளிச்சா என்ன தப்பு?” கேட்டான்.
‘ஐயோ இவருக்கு எப்படி புரிய வைப்பேன் இதுக்குத்தான் அக்கா தங்கச்சியோட பிறக்கணும்னு சொல்றது’ தன் தேவைய வெளிப்படையா சொல்ல கூசினாள்.
“அதான் பொறக்கலையேடி. நீ சொல்லு தெரிஞ்சுக்கறேன்” சொன்னாத்தான்னு பிடிவாதமா நின்றான்.
“இப்ப பாத்ரூம் கட்டுனா என்ன. காசில்லன்னா வளையல கழட்டி தரேன் அத வச்சு கட்டு” முகம் கோபத்தில் சிவக்க சொன்னாள்.
“அடித் திமிரெடுத்த கழுத. எங்கிட்ட செலவுக்கு தரியா. அடிச்சு சாவடிப்பேன் பாத்துக்க” அவள் குரல்வளையை பிடித்துவிட்டான்.
அவள் மூச்சுத் திணறி கண்கள் மூட விடுவித்தான் கீழே. “கொன்னுடுய்யா. நா இருந்து என்னத்த சாதிக்க போறேன். அறிவு கெட்டத்தனமா யோசிச்சு உனக்கு கெட்ட பேரை வாங்கி தந்தேன். இப்ப என்ன வளத்த அப்பத்தா என்னை பத்தின கவலையிலயே போய் சேர்ந்துடுச்சு. நா மட்டும் இருந்து என்னத்த சாதிக்க போறன்” இதையேதான் ஒரு வாரமா சொல்லி சொல்லி அழுதாள்.
அப்பத்தா செத்த அன்னைக்கு சத்தியசீலன் அவளை கைதாங்களா கூட்டிட்டு போய் சவத்தை காட்டிட்டு வந்தான். அழுது பிரண்டவளை ஆறுதலா அணைச்சுக்கிட்டான்.
செவ்வந்திய பத்தின விஷயம் காதுல விழ கருப்புச்சாமி மேல இருந்த மதிப்பு அப்படியே சரிஞ்சுடுச்சு. இவனெல்லாம் ஒரு ஆம்பளையா பொண்டாட்டியை வச்சு பொழைக்க தெரியாதவன். நம்பி வந்தவள அடிச்சு தூரத்த எத்தன திண்ணக்கம் இருக்கணும்
பாவம் செவ்வந்தி புள்ள. தங்கை முறையாகும் செவ்வந்தி மேல இரக்கம் வந்தது அவனுக்கு.
நைட்டியில இன்னும் ஒல்லியா உடம்பு வத்திப்போய் தெரிஞ்சா. மடியில உக்கார வச்சு கட்டிப்பிடிச்சா கொலுக் மொழுக்குன்னு இருப்பா இப்ப எலும்பு நறுக்குன்னு குத்தும் பாத்தவனுக்கு பாவமாவும் இருந்தது. நடந்ததுல அவளைச் சொல்லியும் குத்தமில்லன்னு தோன, அவ தெளிவானா எதுக்கு புடிக்காத கல்யாணத்த பண்ணிக்க தலையாட்டுனான்னு தெரிஞ்சுக்க நெனச்சான்.
பொண்டாட்டி அழுதுட்டே இருக்க “ஆத்தா மகமாயி இன்னைக்கே மேஸ்திரிய வரச் சொல்லிடறேன். பாத்ரூம் டாய்லெட்டுன்னு இந்த வீட்டுல என்ன வசதி குறைவோ எல்லாத்தையும் பாத்து பாத்து எழுதி வை. அவன் வந்தா சொல்லி வேலைய வாங்கிக்க. அவன் போன பிறகு அது நொட்ட இது நொட்டன்னு சொல்லப்படாது எங்கிட்ட” எச்சரித்தான் அவளை.
அவள் சந்தோசமா தலையாட்ட, அவளை ஏற இறங்க பாத்து முறைச்சுட்டு, “அதான் குணமாகிட்டயே பொண்ணா லட்சனமா சேலைய காட்டுடி. எப்ப பாரு இந்த போர்வைய உடுத்துட்டு இருக்கா” ன்னு கொமட்டுல இடிச்சு சொல்லிட்டே போனான்.
எப்ப பாரு எதையாவது சொல்லிட்டே இருக்கணும். மாமியாக்காரி இல்லாத குறைய தீர்க்கறான் அன்னத்தோட மனசு நெனச்சது.
அத்தியாயம் 41
‘அல்லிராணி இன்னைக்காவது சோத்தை கண்ணுல காட்டுவாளா?’ அநியாயத்துக்கு அப்பாவி பொண்டாட்டிய அல்லிராணின்னு சொன்னவன் உள்ள எட்டி பாக்க ஓரமா உக்காந்து கண்ணீர் வடிச்சுட்டு இருந்தா அன்னம்.
‘செத்த கெழவி இந்நேரம் அடுத்த பிறவியே எடுத்துருக்கும். இந்தக் கூறு கெட்ட கழுத மாசக்கணக்குல துக்கம் கொண்டாட்டிட்டு இருக்கா’ ன்னு பெருமூச்சை இழுத்துவிட்டான்.
“பொஞ்சாதி கையால திங்கறதுக்கும் யோகம் வேணுமாட்ட இருக்குது”
மொகரையை மூஞ்சூரு மாதிரி வச்சிருந்தவகிட்ட எதையும் பேசாம அவனே தக்காளி சாப்பாடை செஞ்சுட்டான். மதியம் வந்து செய்யறதுக்கு அவனுக்கு நேரமில்லை. அதனால மொத்தமா ரெண்டு வேலைக்கும் ஆக்கிட்டான்.
ஆட்கள் தேங்காயை மட்டை வாங்கி சுத்தம் பண்ணி ஒரு பக்கமா குவிக்க. அதை எடுத்து எண்ணி இன்னொரு பக்கமா போட்டார்கள் சத்தியசீலனும் அவன் கூட பத்து ஆட்களும் சேர்ந்து.
ஐநூறு ஐநூறா தனித்தனியா குமிச்சிருக்க, வியாபாரிகள் வந்துவிட்டார்கள் வாங்குவதற்கு.
“ஏப்பா சத்தியா வியாபாரிங்க வந்துட்டாங்க. நோட்டையும் பேனாவையும் அங்க வச்சிருக்கேன் எடுத்துட்டு போப்பா” தோப்பில் வேலை பார்க்கும் சாமிகண்ணு அவனை அனுப்பி வைத்தார்.
“நீ இங்கயே இருண்ணா. கூட குறைய போவ போவுது. எச்சா போனா கவலையில்லை ஒரு தேங்கா குறைஞ்சா கூட சொத்தையே புடிங்கிட்ட கணக்கா மானத்தையே கெடுப்பானுங்க மதி கெட்ட நாய்ங்க” ஓரமா கிடந்த சட்டையை எடுத்து மாட்டிகிட்டு போனான்.
“வாப்பா சத்தியா புது மாப்பிளை. மாமனாரு ஊட்டுல இருந்து லாரி லாரியா சீரு வந்து எறங்குச்சாமா. ஊருக்குள்ள பேசிகிட்டாங்க” புது மாப்பிள்ளைகிட்ட இது மாதிரி கேலியா கேக்கறது வழக்கந்தான்.
இங்க சத்தியசீலனுக்கு நெஞ்சுக்குள்ள எரிஞ்சது அடுத்த கேள்வி என்ன வருமுன்னு அனுபவப்பட்டவனுக்கு நல்லாவே தெரிஞ்சு போவ “ஆமாய்யா அதெல்லாம் தோப்புல ஒரு ஓரமா வச்சுருக்கேன், நீ வாங்காத சீரா? காசை கொடுத்துட்டு காய எடுத்துட்டு போய்யா”
அவர்களை அடக்கிவிட்டு ஒவ்வொருத்தரும் லாரியும் டெம்போவிலும் எடுத்து வந்திருக்க, ஒவ்வொண்ணா பாத்து கையோட பணத்தையும் வாங்கிட்டு மறக்காம நோட்டில வரவையும் பாக்கியையும் எழுதி வச்சுக்கிட்டான்.
“சத்தியா பொம்பளை ஆளுங்கள வீட்டுக்கு அனுப்பி வைக்கட்டாப்பா. மணி அஞ்சாவ போவுது” சாமிகண்ணு வந்து நின்றார்.
“சரிண்ணா போவ சொல்லு” தரையில் மல்லாக்க படுத்தான் வியர்வையோட. காத்தால எட்டு மணிக்கு ஆரம்பிச்சது வேல. தேங்கா தோப்புல வேலைக்கு பஞ்சமில்லை நாம பாத்து பண்ணினா பண்ணிட்டே இருக்கலாம். அதுக்கு உடம்புல சத்து இருக்கனும்.
“சத்தியா நீயும் கெளம்பு. அன்னம் ஊட்டுல தனியா இருக்கும். பொறந்த ஊட்டுல வசதியா வாழ்ந்த புள்ளைப்பா நல்லா வச்சுக்க” சாமிக்கன்ணு சொன்ன சூட்டோட வெரசா அங்க இருந்து போனார்.
நின்னு நியாயம் கேட்டா கருப்புச்சாமி குடும்பத்தையே சந்திக்கு இழுப்பான்.
எந்திரிச்சவன் வீட்டுக்கு போனான்.
“என்னை மானமுள்ள பொண்ணு இன்னு…
மதுரையில கேட்டாக…
மன்னார்குடியில் கேட்டாக…
அந்த மாயவரத்தில கேட்டாக…”
டிவியில பாட்டு பாடிட்டு இருக்க, பைக்கை நிறுத்தியவன், “கிழிச்சாங்க மூதேவி. போனா போவுதுன்னு நா வாழ்க்கை கொடுத்தேன். இல்லாட்டி பத்தோட பதினொண்ணா போயிருப்ப பாத்துக்க”
பைக்குல இருந்து இறங்கி வந்தவன் கண்ணுல அண்டாவுல தண்ணி காயறதை பாத்து மனசுக்குள்ள சாரல் அடித்தது. நமக்காக யோசிச்சிருக்கான்னு வலது கைவிரல் தானா மீசைய நீவிவிட்டது கர்வமாக.
அவனுக்கு பழிப்பு காட்டிட்டு எந்திருச்சு சமையல்கட்டு போனாள் அன்னம். அவ போட்டிருந்த நைட்டி அவன் முகத்தை சுளிக்க வச்சது.
வெரசா நடந்து வீட்டுக்குள்ள போனவன் நைட்டி அம்புட்டையும் அள்ளிக்கிட்டு வந்தான், அவ ஆஸ்பத்திரியில இருக்கப்ப வாங்குனது அதெல்லாம். அவனுக்கு போட்டுவிட வாகா இருக்குமுன்னு வாங்கிட்டு வந்தான். ஆனா இந்தப் புள்ள அதையே இருபத்துநாலு மணிநேரமும் மாட்டிகிட்டு திரிய பாக்கறதுக்கு அவனுக்கே எரிச்சலா வந்துச்சு.
எறியற அடுப்புக்குள் போட்டுவிட்டான் எல்லாத்தையும்.
ஜன்னல் வழியா பாத்துட்டு ஓடி வந்தாள் அன்னம், “யோவ் என்ன பண்ணிட்டு இருக்க. எதுக்கு எல்லாத்தையும் அடுப்புக்குள்ள போட்ட” கேக்காம வாங்கி தந்தான்னு சந்தோசப்பட்டா பாவிபய கரியாக்கிட்டானே. கண்ணெல்லாம் கலங்கிப் போச்சு அவளுக்கு.
அவனை பாக்க கருப்பு பூதமாட்டம் இருக்க உதடுகள் துடிக்க நின்றாள் அவனையே பார்த்துட்டு.
நல்லா கொழுந்துவிட்டு எரிய “மொத்தமும் முடிஞ்சுது” சொல்லிட்டு நிமிர்ந்தவனின் பார்வை அவள் போட்டிருந்த நைட்டியில் பதிய.
அவன் பார்வைய புரிஞ்சுக்கிட்ட அன்னம் வீட்டுக்குள்ள ஓடினாள்.
அவள் போன திசையில் போன சத்தியசீலன் “இந்தா புள்ள ஒழுங்கா நீயே சேலையை கட்டிட்டு அதை கழட்டி தா. இல்லாட்டி நானே வந்து கழட்டனும் பாத்துக்க” அவ பக்கத்துல போனான்.
“வீட்டுலதான இருக்கேன். போட்டுக்கறேன். யாரு வருவா இங்க” கேட்டாள்.
“உடம்பு சரியில்லாம இருந்தடி. நீயா போட்டுக்க முடியாதுன்னு இதை வாங்கிட்டு வந்தேன் அம்புட்டுத்தான். இப்பத்தான் நல்லாருக்கயே ஒழுங்கா சேலைய கட்டுடி” பீரோவ தெறந்து அவளுக்கு வாங்கிட்டு வந்த சேலையை எடுத்து அவகிட்ட வீசினான்.
அதை கையில் எடுத்த அன்னத்துக்கு அவன் சொன்னத கேக்கறது தவிர வழி இல்லாம போனது. பாக்கத்தான் நல்லா பேசற மாதிரி இருப்பான் கோவம் வந்தா கிறுக்கு புடிச்ச கணக்கா ஆடுவான்னு நெனச்சவள்,
“கட்டிக்கிட்டு வரேன். நீ போய் காபிய குடிய்யா. அடுப்புல வச்சிட்டு வந்திருக்கேன் அடுப்பை அணைச்சுடு மறக்காம” சொன்னாள்.
“சீக்கிரம் வா. ஆமா உனக்கு சோறாக்க தெரியுமா” ரொம்ப நாளா அரிச்ச பெரிய சந்தேகத்தை கேட்டுவிட்டான் அன்னைக்கு. சுலோச்சனா பெத்த கழுதைக்கு அதெல்லாம் வருமான்னு ஐயம் கொண்டான்.
“அது கூட தெரியாதாய்யா. அதெல்லாம் ஆக்குவேன். ஆனா உன்ன மாதிரி வாய்க்கு ருசியா ஆக்குவனான்னு தெரியல” அவள் சொல்லிவிட்டு சேலையை பிரித்தாள்.
அவ முகத்தை பாத்தவனுக்கு அதில பொழிவே இல்லாம இருப்பது புரிஞ்சுக்க முடிஞ்சது. போவ போவ சரியா போவும் தனக்குள் சொல்லிக்கிட்டு கதவை சாத்திட்டு போனான்.
பொழுது போவ இவ போயி படுத்துட்டா கட்டில்ல. சத்தியசீலன் கேட்டை சாத்திட்டு வரப்போய்ட்டான்.
கட்டில்ல படுத்தவளுக்கு சஞ்சலமாக இருந்தது. சத்தியசீலனின் பேச்சு பார்வை நடவடிக்கை எல்லாத்தையும் பாத்தவளுக்கு அவனோட ஒரு செயல் கூட முன்ன மாதிரியோ பொண்டாட்டிய பாக்குற மாதிரியோ இல்ல.
அக்கறையாத்தான் இருக்கான் அம்மா கூட செய்ய தயங்குற எல்லா பணிவிடையும் செய்யறான் ஆனா என்னமோ சரியாப்படல இப்பதான் சுருக்குன்னு பட்டுச்சு அவளுக்கு.