அன்னமே 42, 43, 44

5
(7)

அன்னமே 42, 43, 44

 

புடிச்சிருக்குதுன்னு வம்பா கட்டிக்கிட்டார். அதுவும் அத்தன பேரு நிக்கையில அன்னைக்கு சொன்ன மாதிரியே கல்யாணம் பண்ணிக்கிட்டான். “நீயா வந்து கால்ல உழுந்து கேட்டாத்தான் உந் தங்கச்சியா கட்டிக்குவேண்டா” ன்னு சொன்னதை அப்படியே நடத்திட்டான்.

 

உடம்பு சரியில்லன்னு விலகி போராப்லயாட்டம் இருக்குதுன்னு அவளா நெனச்சுக்கிட்டு விட்டுட்டா. அவன்கிட்ட இருக்க முரட்டுக்குணம், முரட்டு பேச்சு இதெல்லாம் காணலை. சின்ன வயசுல இருந்தே அவளைப் பாத்தாவே அடிப்பதும் கொட்டுவதுமா இருப்பான். உன்னாலதாண்டி சண்டை வந்துச்சு. சிறுக்கி மவளுக்கு காதுல கம்மல் இல்லைன்னுதான் அழுவுதுன்னு ஒத்தைக் காதுல இருக்க கம்மலை புடுங்கிக்குவான்.

 

ஆசையா கழுத்துல கையில எதையும் தங்கத்துல போட்டுக்க வழியில்ல. வழிப்பறி கொள்ளைக்காரன் மாதிரி அடிச்சு புடிங்கிட்டு போவான்.

 

தெனத்துக்கும் சுலோச்சனாகிட்ட பேச்சும் வசவுமாவே போவும். அடிச்சா கருப்புச்சாமி மாதிரி ஒட்டாமையே தள்ளிப் போவான்னு பயந்து அன்னத்தை அடிக்க கை ஓங்க மாட்டார்.

 

ராமாயி, தயாளன்தான் சுலோச்சனா போனதும் அன்னத்தை புடிச்சு கேள்வியா கேப்பாங்க. காணாம போன ரெண்டு கிராம் தங்கம் அவங்களுக்கு பெருசு கெடையாதுங்கறது ஒருபக்கம் இருக்கட்டும். இப்படி எல்லாத்தையும் தொலைச்சுட்டு வந்து நிக்கறான்னா. என்னவோ விஷயம் இருக்குதாட்டம் இருக்குதுன்னு அவங்க அன்னத்துகிட்ட கேட்டார்கள்.

 

“ஏங்கண்ணு தொலைச்சுப்புட்டு வந்துட்டேன்னு அடிச்சுப் போட்டாளா?” தயாளன்.

 

“அட நீ இருடா நா என்னன்னு கேட்டுப்புடறேன். எந்தங்கம் நா கேட்டா புட்டு புட்டு வைக்கும் உண்மைய” ன்னு ராமாயி கேட்டார்.

 

“என்ற சாமி. அவ அப்பாரு மாதிரி. புடம் போட்ட தங்கம். இல்லாதப்பட்டவங்களுக்கு கொடுக்குறதுல அவரை அடிச்சுக்க இந்த ஜில்லாவுலயே ஆளு இல்ல” ன்னு பெருமை பாடினவர்,

 

“கூடப் புள்ளைகளுக்கு படிப்புச் செலவுக்கு காசு பத்தலைன்னு வித்துக் கொடுத்துட்டியா கண்ணு. அப்பத்தாகிட்ட கேட்டா நானே எங் கைக்காச எடுத்து தருவனே” நைச்சியமாய் விஷயத்தை போட்டு வாங்க பாத்தார்.

 

“சத்தியமா தொலைச்சுட்டேன் அப்பத்தா” பொங்கி வந்த அழுகையோட கண்ணீர் விட்டாள் அன்னம். உண்மைய சொன்னா என்ன நடக்குமுன்னு நேர்லயே பாத்தவ அவ. அதனால கோந்தை முழுங்கிட்டேன்னு மனசுல ஒப்பேத்திட்டு கப்புன்னு இருந்துட்டாள்.

 

“ஏங்கண்ணு ஒரு நாலு ரெண்டு நாலுன்னாக்கா பரவால்ல. தெனத்துக்கும் ஒண்ண தொலைச்சா நானு என்னன்னு புள்ள நெனைக்கறது. உங்கப்பன் என்ன அச்சடிக்கற மெசினா வச்சிருக்கன்” உண்மைய சொல்லவே மாட்டேங்கரான்னு தயாளனுக்கு பொறுமை காணாம போனது.

 

பயத்துல அன்னம் அப்பத்தா பக்கத்துல நெருங்கி உக்கார்ந்தாள்.

 

“அட ஆருடா இவன். எந்திருச்சு போடா அங்குட்டு. புள்ளைகிட்ட நானே கேக்கறே”ன்னு வீட்டுல சத்தியசீலனை தொட்டு பெரிய கலவரமே நடக்கும்.

 

ஆனா எதையும் காட்டிக் கொடுக்க மாட்டாள் அன்னம். சத்தியசீலன் எண்ணமே இவ போயி ஊட்டுல சொல்லோனும் அதைக் கேட்டு குடும்பமே சண்டைக்கு வரணும்னுன்னு காத்துக்கிட்டு இருந்தவனுக்கு அன்னத்தோட அமைதி ஏமாற்றத்தை கொடுத்துச்சு.

 

‘ஊமைக்கோட்டான் எதுக்கும் ஆவாதாட்டம் இருக்கே. இவள வச்சு ஒரு சண்டைய உருவாக்கி கலவரம் பண்ணலாமுன்னு பாத்தா கதைக்கு ஆவமாட்டாளாட்டம் இருக்குது’ நெனச்சவன் அவ கையில கெடச்சாவே கொமட்டுல குத்த ஆரம்பிச்சான்.

 

அப்ப பயந்து நடுங்கினவ இன்னைக்கு அதிசயத்திலும் அதிசயமா அவன் கோபத்தை பார்க்க விரும்பினாள் அன்னம். இது அவன் குணமில்லையேன்னு கதவு தெறக்கற சத்தம் கேக்க படுத்தவாக்கிலயே அவன் பக்கமா திரும்பி பாத்தாள்.

 

“இன்னுமா தூங்காம இருக்க?” கேட்டுகிட்டே உள்ள வந்து கதவ சாத்தினான்.

 

“கேட்ட பூட்டிட்டு வர இம்புட்டு நேரமா?” அவனை பார்த்து கேட்டாள்.

 

“கேட்ட பத்து நிமிஷம்தா தெறந்து போட்டுட்டு அக்கட்ட வந்தன் புள்ள. அந்த நேரத்துக்குள்ளார தெருநாயி உள்ளார வந்துருச்சு. தூரத்திவிட்டு வந்தேன். உள்ளேயே கெடந்துட்டு போவட்டுமுன்னு தூரத்த சோம்பல் பட்டுட்டு வந்துட்டா, வெளியே போவறேன்னு கத்திட்டே கெடக்கும் அத்தனையும்” சட்டைய கழட்டி போட்டுட்டு அவ பக்கத்துல படுத்தான்.

 

சுத்தம் சுகாதாரம் விரும்பியான அன்னத்துக்கு, ஆம்பளைங்க வியர்வை வாசனைன்னா புடிக்காது. அவ கூடப்படிக்கற பசங்க அவ பக்கத்துல உக்கார்ந்து டவுட் கேக்கறப்போ மூக்கை மூடிக்க கை துடிக்கும். அது நல்லாருக்காதேன்னு முள்ளு மேல இருக்காப்புல எப்ப போவான்னு நெனைப்பாள்.

 

சத்தியசீலன்கிட்ட அப்படி ஒண்ணுமே தோணல.

அவன் தினமும் ரெண்டு தடவ குளிக்கறதில் பெருத்த நிம்மதி. கல்யாணத்துக்கு முன்ன இதுதான் பயத்தை கொடுக்கும் அவளுக்கு தனக்கு புருஷனா வரவன் அழகா இருக்கானோ என்னமோ அது ஒரு பக்கம் கெடக்கட்டும். குளிச்சுட்டு சுத்தபத்தமா வியர்வை வாசனையோட பக்கத்துல வராம இருந்தா சரின்னு நெனப்பாள்.

 

சத்தியசீலன்கிட்ட அந்த அவதியெல்லாம் இல்ல. சுத்தபத்தமாத்தான் மணக்க மணக்க இருந்தான.

 

போர்வைய நல்லா இழுத்து போர்த்தி படுத்தாள்.

 

“குளுருதா புள்ள?”

 

“ஆமாய்யா மாத்தியான நேரம் புழுக்கமா இருக்குது. இப்ப பாரு ஊசியாட்டம் குத்துது குளிரு” உடம்பை சிலிர்த்த அன்னம் அவன் பேசாதிருக்க.

 

“உங்கிட்ட ஒண்ணு கேக்கனும்” அவன் பக்கம் திரும்பி படுத்தாள்.

 

“சொல்லு” அவள் அழைக்கும் முறை மனசை குத்தினாலும் கண்டுக்கலை அவன். எந்த மொறையும் வச்சு கூப்பிடாம வா போங்க நா என்ன நாயா? அதுக்கு மேல யோசிக்கவே கூச யோசனையை நிப்பாட்டினான்.

 

“உடுத்திக்கற துணிய நெருப்புல எரிக்க கூடாதுன்னு அப்பத்தா சொல்லும். நீ என்னடான்னா அடுப்புக்குள்ள போட்டு எரிச்சிட்ட?”

 

அது போடாத இதை பண்ணாதன்னு அடக்கி ஒடுக்கி ஊட்டுக்குள்ளயே வைக்க நெனைக்கறானா படிச்சவ புத்தி ஆணாதிக்கம் பேசியது.

 

“எனக்கு தெரியாது புள்ள. அதெல்லாம் நீ உடம்பு சரியில்லாதப்ப எடுத்தது. அத பாத்தாவே எனக்கு அதான் நினைவுக்கு வருது. குறை உசுரா சுயமில்லாம படுக்கையில படுத்துட்டு இருந்தவளுக்கு உசுரோட செத்தவன் கஷ்டம் புரியாது புள்ள. ஒரு நூலு தப்புனாலும் நாந்தேன் உன்னை கொல்லப் பாத்தேன்னு உள்ள போவனும். நீ எந்திருச்சு கண்ணை முழிச்சு பாக்க வரைக்கும் நா நானா இல்ல புள்ள.

அதான் அந்த நெனப்பு விட்டுப் போவணுமுன்னு அம்புட்டையும் மொத்தமா எரிச்சுப்புட்டேன். உனக்கு அதான் உடுத்தனும்னா சொல்லு புள்ள. எனக்காக நீ மாத்திக்க அவசியமில்ல. நாளைக்கே போய் வாங்கிட்டு வரேன்” அவளுக்கு முதுகு காட்டி அவன் படுத்துவிட.

 

“நைட்டியே நா போட்டது இல்ல தெரியுமா. வீட்டுல எந்நேரமும் யாராவது வரப்போக ஆளுங்க நடமாட்டமா இருக்கும். அதனால சுடிதார் போட்டுக்குவேன். நீ சொன்னதுல கோவமில்லைய்யா. ஆனாக்கா தீயில எரிச்சதுதான் தப்புக்கறேன். செத்தவங்க உடுப்பைத்தான் எரிக்கணும்னு பெரியவங்க சொல்ல கேட்டிருக்கேன். அதத்தான் இப்ப உங்கிட்ட சொன்னேன்” அவன் கோவத்தை குறைக்க நெனச்சாள்.

 

“வேணும்னா பதிலுக்கு எம்பட துணிய எரி. சரியா போவும்” அவளை நோகடிக்கறோம்னு யோசிக்காம சொன்னான்.

 

அவன் பேச்சு சுருக்கென தைக்க அவ பதிலுக்கு எதையும் பேசல. இப்படி பேசுறது அவன் குணம்னு புரிஞ்சது. ஆனா மனசுக்குள்ள முள்ளு மாதிரி குத்துச்சு.

 

“புருஷன் பொண்டாட்டிக்குள்ள பதிலுக்கு பதிலுன்னு போனா பொழப்பு என்னாகறது?” மனசு கேக்காம இதைக் கேட்டே ஆவனுமுன்னு கேட்டு அவன்கிட்ட பதிலில்ல.

 

அவள் சேலை நுனி கூடப் பட்டுவிடாத தூரத்தில் படுத்திருந்தான்.

 

அவன் முதுகையே வெறிச்சுப் பாத்தவளுக்கு ஏக்கமாய் இருந்துச்சு.

 

அவள் பார்வை முதுகை துளைக்க கண்டுக்காம தூங்க முயற்சி பண்ணினான். அவன் மனசுல என்ன இருக்குன்னு அவனா சொன்னாத்தான தெரியும்.

 

வீட்டு வேலைகள் படபடவென நடந்தது. விட்டா ஊட்டையே இடிச்சு கட்டுவாளாட்டம் இருக்கே அவ பக்கத்துல போனவன்

 

“நம்ம ரூமுக்குள்ள நல்லாத்தான இருக்கு புள்ள அங்க என்ன வேல?” கேட்டான் அவளோட ஆட்டம் தாங்க முடியாம.

 

“பகல்ல வெக்கையா இருக்குய்யா. தூங்கவே முடியல அதான் ஏசி மாட்டலாமுன்னு பாக்கறேன்” அவனை கண்டுக்காம மேஸ்திரிகிட்ட தன் திட்டத்தை விளக்கினாள்.

 

தரையில் உட்கார்ந்து சமைக்கிற மாதிரி இருந்த சமையல் அறையை இடிச்சே புது மாடலில் கட்ட சொன்னவள் வீட்டுக்குள்ள இருந்தே சமையல் அறைக்குள் நுழைறாப்பிடி நுழைவு கட்ட சொல்லிட்டாள்.

 

“ஏனுங்கம்மிணி பேசாம இடிச்சே கட்டிட சொல்லறது?” மேஸ்திரி இதைக் கேட்டு அவன் நெஞ்சுல இன்னும் தீயை அள்ளி கொட்டினாரு.

 

சத்தியசீலனுக்கு அவ போற போக்க பாத்துட்டு பதக்குன்னு ஆச்சு.

 

பாவி மவ பாத்ரூம் கட்ட சொல்றேன்னு வரச் சொல்லிட்டு இப்ப வீட்டையே தலைகீழா மாத்திட்டு இருக்காளேன்னு.

 

“ஆனைக்கு தீவனம் போட்டு முடியாதுன்னு சொல்லுவாங்கடி. அத அப்படியே நிரூபிக்கற” சொல்லிட்டு அவளை மேலும் கீழும் பாத்தவன் “குட்டி யானை” சொன்னான்.

 

“ஏப்பா சத்தியா ஊட்டுக்காரம்மாகிட்ட சொல்லி டீ வச்சி தரச் சொல்லுப்பா” மேஸ்திரி சத்தியசீலன் வீட்டு வெவரம் புரியாம அவன்கிட்ட சொன்னார்.

 

“ஒரு வாரமாச்சு கழுத இன்னும் அழுவா மூஞ்சியாவே இருக்கா. சிறுக்கிய கட்டிக்கிட்ட பாவத்துக்கு நாந்தேன் தலைல துண்ட போட்டுட்டு உக்காரனும்” கஷ்டப்பட்டு உழைச்ச பணம் தண்ணியா கரையுதேன்னு மூக்கால அழுதான்.

 

செலவே பண்ணி பழக்கமில்லாதவன். செலவுன்னு சொன்னா கருணா கடையில வாங்கி திங்கற டீயும் பஜ்ஜியும்தான். அது போவ பசிச்சா கடையில திங்கறதுக்கு கொடுக்கற காசுதான்.

 

அது போவ டெம்போவில வந்து இறங்கினதை பாத்தவனுக்கு நெஞ்சே வெடிச்சுப் போனது. மிக்சி கிரைண்டர் குளிரசாதன பெட்டி இப்படி பாத்தவனுக்கு கண்கள் கட்டியது.

 

“ஏம்மா புண்ணியவதி இதுக்கெல்லாம் துட்டு ஏது?” கருப்புபன்னிக்கிட்ட இருந்து வாங்கினேன்னு சொல்லட்டும் அப்பன் வீட்டுக்கு இவளையும் சேர்த்து பார்சல் பண்ணிடுறேன் கண்கள் கோவைப்பழமா சிவந்தது.

 

“நீ கொடுய்யா. கடை மேனேஜர் வந்துருக்காரு. கணக்கு போட்டு பணத்தை செட்டில் பண்ணி அனுப்பு” சொன்னவ அதுக்கப்புறம் படுக்க வர வரைக்கும் அவன் இருக்க திசைப்பக்கமே வரல.

 

 

 

அத்தியாயம் 43

 

 

துக்க வீட்டுல கூட நாப்பத்தெட்டு நாலு காரியம் முடிஞ்சுதுன்னா செத்தவங்க பத்தின சோகம் போயிடும். மனுஷன் எத்தன நாளுக்குத்தான் அழுதே வடிய முடியும் சிரிப்பு வராத இருக்க இயந்திரத்தாலதான் ஆவும்.

 

பெத்ததுங்களுக்கு ஒரு கஷ்டமுன்னா மனசை அதுவே குடையும். கண்ணு முன்னயே வச்சுக்கிட்டு எங்கிட்டு சிரிக்க, வசதியான வீட்டுக்காரன்னா அவங்க காதுல விழுந்தா வம்பு வருமுன்னு காணாம வதந்தியோ ஆறுதலோ எதையுயோ பேசிட்டு போயிடுவாங்க சில வக்கிர மனசுகார ஜென்மங்கள்.

 

இல்லாதப்பட்டவன் வீட்டில அந்த சாங்கியமெல்லாம் இல்ல. பொழுது போவாத கொறைக்கு கண்ணப்பன் வீட்டுப் பக்கம் வருவாங்க சொந்த பந்தங்கள் இதுல மாமன் மச்சான் எண்ணிக்கைதான் அதிகம் இருக்கும். அவனுக்குத்தான் அம்புட்டு சந்தோசம் பங்காளி ஊட்டுல பிரச்சனைன்னு தேடிப்போவானுங்க.

 

அவனுங்க கருப்புச்சாமிக்கு பங்காளியா இருக்க போக முழு சப்போர்ட்டும் அவங்க பக்கம்தான் போச்சு, ஆம்பளைன்னா அப்படித்தான் கட்டிகிட்டவள அடிப்பாங்க புடிப்பாங்க. பொண்ண கட்டிக்கொடுத்தா பணிஞ்சுதான் போகணும். கழுத்துல தாலி ஏறிட்டாலே புள்ள அடுத்தவன் வீட்டு பொண்ணுதான. எம்புட்டு நாலு இப்படியே பொத்தி வைப்ப. போ போய் காலுல கைல விழுந்தாவது புள்ளைய புருசனோட சேத்தி வைக்கற வழிய பாருப்பா புத்திமதி சொல்ல காசா பணமா இஷ்டத்துக்கு சொல்லிட்டு போனார்கள்.

 

காபி தண்ணி குடுத்து உபசரிக்கறது பண்பாடு. ஆனாக்கா இருக்கற வதையில இவனுங்களை உபசரிச்சுட்டு வம்பு பேச்சையும் கேட்கணுமான்னு அமுதா வெளியவே வரதில்ல.

 

அதைக் கேட்டு கேட்டு கண்ணப்பனுக்கு அதே யோசனை வர, தோள்ள துண்டை உதறிப்போட்டுட்டு செருப்பை கால்ல போட்டார்.

 

“எங்கப்பா போற?” போறப்ப எங்க போறன்னு கேட்டா அமுதா விளக்குமாறுல சாத்துவார். தெரிஞ்சே வேணும்னு கேட்டா செவ்வந்தி.

 

கண்ணப்பன் அதுக்கு பதில் சொல்லவே இல்ல, சைக்கிளை பட்டியில இருந்து எடுத்தார்.

 

“போறது எனக்காவன்னு இருந்துச்சுன்னா சேத்து கிணத்துல குதிச்சு சாவறன். கட்டுனவனுக்கு ஒரே நாள்ல பாரமா போயிட்டேன். இப்ப பெத்தவங்களுக்கும் பாரமா போயிட்டேன். பாதியில கைவிட்டவன் கால்ல பெத்தவங்கள விழவைச்சு புருசனோட பொழைக்கறதுக்கு சாவலாம். இனிமேட்டு உசுரோட இருந்து என்னத்த பாக்க போறன்” செவ்வந்தி பேச்சு ஈரக்குழைய நடுங்கச் செய்தது பெத்தவங்களுக்கு.

 

“இப்ப என்னம்மா நா இங்க இருந்தா ஊருக்கு பதிலு சொல்லோனும். வாழாவெட்டியா வெச்சிருக்கான்னு சொல்லுறாங்க அம்புட்டுத்தான” செவ்வந்தி பேச்சு அடங்கிப்போக.

 

கண்ணப்பன் சைக்கிள அப்படியே போட்டுட்டு அது மேலயே சாஞ்சு உக்கார்ந்துட்டார் உடம்பெல்லாம் தளர்ந்து போவ. மவ பேச்சுல மனுஷனுக்கு குறை உசுரும் போவும் போலானது.

 

அமுதா தலை தலையா அடிச்சுக்கிட்டார், விரலுக்கு தக்க வீக்கம் வேணுமுன்னு சும்மாவா சொன்னாங்கன்னு நெனைக்கயில இப்பவே போயி சுலோச்சனா மென்னிய முறிக்க ஆத்திரமா வந்துச்சு அவருக்கு.

 

ஆடுமாடு கட்டி வைச்சிருக்கற பட்டியிலேயே கெடையா கெடந்தார் கண்ணப்பன். கால்நடைகள் குடிக்க கழனி தண்ணி, குடிதண்ணீர் வைக்க பட்டியில் நீளம் தொட்டு திண்ணை ஒண்ணு கட்டியிருக்கும்.

 

அதுமேல அவர் படுத்துக்கிடக்க, தண்ணிய குடிச்சுட்டு சும்மா போவாம எதுக்கு இப்படி படுத்திருக்கேன்னு அவரை மூக்கால் முட்டி மோதியது வாயில்லா ஜீவன்கள்.

 

அதுகளை திரும்பி பாத்தவருக்கு இதுங்களுக்கு இருக்க ஈவு இரக்கம் பாசம் கூட மனுஷனுக்கு இல்லையே. எம்மவ வாழ்க்கையை அழிச்சுப்புட்டானுகளே பாவிகளா. வாயில துண்டை பொத்தி அழுது தீர்த்தார்.

 

அமுதா ஒருபக்கம் பின்கட்டுப் பக்கமே கதியா கெடந்தார்.

 

துக்கம் கேட்டு வந்தவுங்க இவங்க நிலையை பாத்து எதுவுமே கேட்டுக்காம ஆறுதலுக்கு சித்த கூட இருந்துட்டு போனார்கள்.

 

பக்கத்து வீட்டுல இருக்கற மக்களும் செவ்வந்திய பத்துன கவலையில கறி புளின்னு எதையும் ஆக்கிக்கல. செவ்வந்தி மேல அங்கிருக்க ஜனங்களுக்கு அம்புட்டு பாசம் இருந்துச்சு.

 

கருணா அம்சா கடையை மவகிட்ட விட்டுட்டு இங்கேயே வந்துட்டாங்க.

 

“அண்ணா தூக்க வீட்டுக்கு போற கூட்டம் கடைக்கு வரும். போய் பொழப்ப பாருங்கண்ணா. எங்க கஷ்டம் தீரவா போவுது நாளைக்கு பின்ன வாங்க” அமுதா முந்தானையால கண்ணை துடைச்சுக்கிட்டு பேசினார்.

 

“எம் மவ கடையில இருக்கா தங்கச்சி. மாமனாரு மாமியாரு வந்துருக்காரு புள்ளைக்கு கூடமாட ஒத்தாசையா இருப்பாங்க” கருணா தலைக்கு கையை கொடுத்து படுத்திருக்கும் கண்ணப்பனை வேதனையாக பார்த்தார்.

 

அம்சா இளவரசன் காதுல என்னத்தயோ சொல்லி கடைக்கு அனுப்பிட்டு அவரே சமையலை பண்ணி முடிச்சுட்டார். யாரும் ஏதும் பேசல. எதையும் கேட்டுக்கலை.

 

சும்மா வந்தோமுன்னு காட்டிகிட்டாங்க அம்சாவும் கருணாவும். இருக்கற புண்ணுல நாமளும் மிளகாய தடவ வேண்டாமுன்னு அமுதாவும் கண்ணப்பனுமே பேசட்டுமுன்னு விட்டுட்டார்கள்.

 

“யோவ் அதுங்க பசியில கத்துங்க எந்திருச்சு தவிடு கலந்து வை. இன்னொரு தொட்டியில வெறுந்தண்ணிய மாத்தி வை” புருஷனை வேலைக்கு ஏவினார் அம்சா.

 

மத்த நாளா இருந்தா அண்ணனும் நாத்தனாரும் வந்துருக்க விருந்தே வைக்கறேன் அம்சா. நீ உக்காரு நா ஆக்கி தரேன்னு அமுதா கோழி அடிச்சு குழம்பை வைப்பார். கருணாவும் அம்சாவும் வீட்டுக்கு வந்துட்டா அவங்களுக்கு சந்தோசமா இருக்கும்.

 

நடக்கறதையெல்லாம் பாத்தாலும் தடுக்க தெம்பு இல்ல அவங்களுக்கு. கண்ணப்பன் தொழுவத்த கூட்டி சுத்தம் பண்ண மாடு கண்ணை குளிப்பாட்ட எதையும் தடுக்கல.

 

வெறுத்துப் போய் கிடந்தனர். வீட்டுக்கு முன்ன போட்டிருந்த பந்தல அண்ணாந்து பாத்த அமுதாக்கு நெஞ்சு அடைச்சுகிட்டது.

 

“போட்ட பந்தலு ஈரம் கூட காயலையே. தின்னு போட்ட வாழை இழையில மிச்சம் இருக்க சோத்துப் பருக்கை கூட வரண்டு போவல. ஆனாக்கா எம்மவராசிய போன சுருக்குல கழுத்த புடிச்சு வெளியே தள்ளிட்டானுங்களே” இருந்திருந்தாப்புல அமுதா குரல் பாட்டா ஒலிக்க அதை தொடர்ந்து கண்ணப்பன் தொண்டையில அடைச்சுக்கிட்டு இருந்த கேவல் பெரும் சத்தமா வெளியே வந்தது.

 

“பொண்ணரசிய பெத்த மனுஷன் புள்ளைய ஒருக்கா கூட கண்ணு கலங்க விட்டதில்ல. அம்புட்டு வாயி பேசற புள்ள இப்ப ஊமையாட்டம் கெடக்குறத பாக்க அடி வயித்துல தீய கொட்டுனாப்புல எரியுது. எம்மவ வாழ்க்க போன சுருக்குல முடிஞ்சு போச்சே” அமுதா கதறல் கேக்கறவங்க மனச நோகடிச்சது.

 

கண்ணப்பன் எந்திரிச்சு உக்கார்ந்தார். அவர் பக்கத்துல போன கருணா “எம்புட்டு நாளைக்கு இப்படியே இருப்ப கண்ணப்பா. கல்யாணத்துக்குன்னு வாங்குன கடன கட்டனும். உம்மவனுக்கு அவன் வெளிய வாங்குன கடனை கட்டி முடிக்கனும். அவனுக்கும் ஒரு நல்லதை பண்ணி பாக்கணும். எம்புட்டு இருக்கு நீ நின்னு பாக்க. இப்படி துக்கத்துல கெடந்தா ஆரு பாப்பா இதையெல்லாம்?” கருணா பேசுனது இன்னுமே சோகத்த தூண்டியது.

 

சேருற இடம் பாத்து சேரனுமுன்னு சொல்லுறாப்புல பொண்ணு கேக்க வந்ததும் மாப்பிள்ளை தங்கமானவன்னு நம்பி எதையும் விசாரிக்காம கொடுத்த மடத்தனத்த நெனச்சு நொந்துகிட்டார்.

 

“விசாரிக்காம தப்பு பண்ணிட்டேனப்பா” கண்ணப்பன் நோக.

 

“கருப்புச்சாமி நல்லவந்தான் கருணா. என்ன நேரமோ ஆட்டி படைக்குது எல்லாத்தையும்” கருப்புச்சாமி குணத்தை பத்தி கண்ணப்பனுக்கும் தெரியும்.

 

“எம்புட்டு நல்லவனா இருந்து என்ன கருணா. எம்மவள வச்சு வாழ துப்பில்லையே அவனுக்கு” கண்ணப்பனுக்கு கருணா சொன்னதும் சரியாத்தான் பட்டுச்சு.

 

எம்புட்டு நாளைக்கு இப்படியே இருக்கறது. வயித்துப்பாட்டுக்கு உழைச்சாவனுமேன்னு அங்க இருந்த மூணு பேருக்குமே பட்டுச்சு.

அத்தியாயம் 44

 

பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கா போன கதையாச்சு கருப்புச்சாமி கதை.

 

வயக்காட்டு குடிசையில செவ்வந்திகிட்ட ஆசைப்பட்டது கேட்டு கிடைக்காம போவ, ஏமாற்றத்தோட சண்டை போட்டுட்டு வீட்டுக்கு வந்தான் கருப்பன். சித்த நேரம் போனா அவனே போய் பொண்டாட்டிய கூட்டிட்டு வந்துருவான். அவன் போவலைன்னா செவ்வந்தியே வந்து அவனை சமாதானம் பண்ணி வச்சிருப்பா.

 

ஆனாக்கா கெட்ட புத்தியோட கூனியாட்டம் அத்தனை பழியையும் செவ்வந்தி மேல போடக் காத்திருந்த சுலோச்சனா அதுக்கு விடலை. அப்பத்தா செத்த துக்கம், பெத்த மவ வாழ்க்கை நெனச்ச மாதிரி படிச்சவன் கூட அமையாம, வேண்டான்னு நெனைக்கற ஒருத்தனோட அமைஞ்சதுல உண்டான வெறுப்பை வெளிய காட்ட முடியாம உள்ளேயே அடக்கிட்டார்.

 

அன்னத்தை புருசனோட வீட்டுக்கு அழைச்சு விருந்தாட முடியாம தவிக்க, செவ்வந்தியை கெழவி பாத்து பாத்து வீட்டு மருமவளா நகை நட்டுன்னு போட்டு அழகு பாத்து உபசரிக்க வன்மம் கூடினது அவருக்கு.

 

வீட்டுக்கு வந்தவனுக்கு அதிர்ச்சி தர மாதிரி அவனை தூக்கி வளர்த்த அப்பத்தா செத்தது தெரிய தலையில இடி விழுந்த மாதிரி ஆனது. அப்பத்தா சவத்துக்கு பக்கத்துல உக்காந்தவன் அங்கிட்டு இங்கிட்டு அசையல. ஓடியாடி வேலை செய்ய வேண்டியவன் இடிவிழுந்த கணக்கா இருக்க, தயாளன்தான் அம்புட்டு வேலையையும் பாக்க வேண்டியதா போனது.

 

சோகத்துல இருந்தவனை உசுப்பியது வீட்டு பொம்பளைங்க சண்டை.

 

மாமியார் மருமகள் தகுதி தராதாரம் தெரியாம வாசல்ல நின்னு வாக்குவாதம் பண்ணிக்கிட்டு இருக்க, மாமன் மச்சான் பங்காளி உறவு கூட்டம் அவங்கள தடுக்காம நின்னு வேடிக்கை பாக்கறதைப் பாத்து உசுப்பி எச்சரித்தார் சித்தப்பா முறையாகும் நல்ல மனிதர் ஒருவர்.

 

செத்த கெழவி கட்டை கூட வேகாதுடா இம்புட்டு சண்டைய பாத்தா. போய் பொண்டாட்டியை அடக்கி வேற வேலை இருந்தா பாக்கச் சொல்லுன்னு அவர் சொன்னதுல இருக்க உண்மை புரிய,

 

கோபத்துல எந்திரிச்சு போனவன் பெத்தவள அடக்க முடியாத பாட்டுக்கு உரிமைப்பட்டவ இவதான்னு நெனச்சு செவ்வந்தியை அடக்க நெனச்சான்.

 

அவன் கெட்ட நேரமோ என்னமோ அவன் செவ்வந்தியை புடிச்சு ஓரமா நிப்பாட்ட போவ, அவ தடுமாறி கீழ விழுந்து அவன் கையோட கட்டுன தாலியும் வந்துடுச்சு.

 

சுலோச்சனா பேசுன பேச்சுக்கு அதுவும் தூபம் போட இதுதான் சாக்குன்னு கருப்புச்சாமி வாயை கிண்டி பேச வச்சு மொத்தமா அத்துவிட்டுட்டார் புருஷன் பொண்டாட்டியை.

 

அப்பத்தா வீட்டை தன் வீடா நெனச்சான் சின்ன வயசுல இருந்தே. தயாளன் கட்டுன புது வீடு அந்த அளவுக்கு அவனுக்கு ஒட்டவே இல்ல. சுலோச்சனா மிடுக்கும் அலட்டலும் கிராமத்தானுக்கு புடிக்காம போனது. அதுக்காக பாசம் இல்லைன்னு இல்ல அம்மாங்கிற பாசம் இருக்க போய்த்தான் பொண்டாட்டியை கை நழுவ விட்டுட்டு பித்து பிடிச்சவனாட்டம் இருக்கான்.

 

சுலோச்சனா முகத்தை பாக்கவே கசப்பு வழிய, அவர் எதிரே அகப்பட்டா தவிர்க்க முடியாம ரெண்டு பேச்சு பேசிட்டு நகர்ந்தான்.

 

வீட்டு கதவை இழுத்து சாத்திய கருப்புச்சாமி வெளியே வந்தான்.

 

“ஏங்கண்ணு ராத்திரிக்கு சாப்பாடு ஆக்கி வச்சுட்டு போவட்டா” அருக்கானி போனவனை அழைத்து கேட்டார்.

 

“வேண்டாக்கா காத்தால வச்சதே இன்னும் கெடக்கு போதும் அதே. நீ கெளம்பி போ ஊட்டுக்கு” சொல்லிட்டு போவ.

 

“ஏண்டி ஊட்ட சுத்தம் பண்றேன்னு சாவிய வாங்கி வைக்கறதுதான?” சுலோச்சனா அருக்கானிகிட்ட காய்ந்தார்.

 

“அட ஏனுங்கம்மா. தம்பி உள்ளேயே விட மாட்டிங்கறாரு. பெரியம்மா இருந்த காலத்துல நாந்தேன் சுத்தம் பண்ணி சாணிய கரைச்சு மொழுவி விடுவேன். பெரியம்மா செத்து கருப்பு அன்னைக்கு ஊட்ட வழிச்சு விட்டது. அன்னைக்கு ஊட்டுக்குள்ள போனதோட சரி. தம்பி உள்ளேயே விடலையே” தாடையில் கைவைத்து அதிசயத்தார் அருக்கானி.

 

“ஏண்டி அருக்கானி. கெழவிகிட்ட அம்புட்டு பணம் நகைன்னு இருக்காடி? “ சுலோச்சனா கண்ணுல ஆசை மெதந்தது.

 

“அது கெடக்கும் நெறய. தங்கத்துலயே தாம்பாளம் வச்சிருக்குங்கம்மிணி. நாந்தேன் ஒருக்கா துடைச்சு மச்சுல அடுக்கி கொடுத்தேன். அத்தனையும் செவ்வந்திக்கு போய்ச் சேரனுமுன்னு பெரியம்மா சொல்லிட்டு இருந்துச்சு” அருக்கானி சுலோச்சனா வயிறு எரியட்டுமுன்னு சொன்னார்.

 

இந்த நெனப்புலயே வெந்து சாவட்டும் இரக்கமில்லாத பொம்பள. அப்பாவி புள்ளைய எம்புட்டு பேச்சு பேசிருச்சு. இதுக்கெல்லாம் நல்ல சாவே வராது சொல்லிட்டேன் வாய்க்குள் சொன்ன அருக்கானி வீட்டுக்கு கெளம்பி போனார்.

 

வயக்காட்டுக்கு வந்தவனுக்கு அங்க பெருசா வேல வெட்டின்னு ஒண்ணுமில்ல. வேலை இருந்தாலும் நின்னு பாக்க மனசில்ல.

 

எம்புட்டு பெரிய தப்பை பண்ணிட்டோமுன்னு மனாசாட்சி அடிச்சு சொல்ல குற்ற உணர்வில் கெடந்தான் கருப்புச்சாமி. நியாயமா வளர்க்கப்பட்டவனுக்கு தப்பு சரி எதுன்னு அந்த நேரத்துலயே மனசுக்கு பட்டாலும் நிதானமா செயலாற்ற முடியாத நிலையில இருந்தான்.

 

இப்பத்திக்கு அப்பத்தாவ நல்ல மொறையில அடக்கம் பண்ணனும் அதான் நோக்கமா இருக்க மாமியா மருமக சண்டைய தள்ளிப்போட நெனைச்சு அவன் ஒண்ணு பண்ண அது வினையா முடிஞ்சு போனது.

 

மச்சான் மச்சான்னு வெகுளியாட்டம் இருந்த புள்ளய அத்தன பேரு முன்ன அவமானப்படுத்தி அனுப்பிட்டமே. இனி கூப்பிட்டா வருவாளா மனசுக்குள்ள அந்த நெனப்பே போட்டு அழுத்துச்சு. அவ வந்தாலும் அவள பெத்தவங்க விடுவாங்களா அம்புட்டு கோவமா போனாங்களே.

 

பெரிய தலைக்கட்டுல நாலு பேரை கூட்டிட்டு போயி சமாதானம் பண்ணலாமான்னு நெனச்சவனுக்கு தப்பு பண்ணது முழுக்க நாம, இதுல பங்கும் பங்காளிய எதுக்கு உள்ள இழுத்து அவங்களுக்கும் பாவத்த சேர்க்கனும்னு நெனச்சவன் யோசனைய கைவிட்டான்.

 

படுத்தாக்கா முழுசா தூக்கம் வரதில்ல அவனுக்கு. செவ்வந்தி புள்ளய மறக்க முடியாம தவிச்சான். பண்ண தப்பு ஒரு பக்கம் முள்ளா உறுத்த,

 

அவன் உணர்ந்த மென்மையையும், அவன் தொடறப்போ மச்சான் போதும் என அவன் வேகத்தை தாங்க முடியாம தவிக்கும் பொண்டாட்டியை அவனுடம்பு தேடியது. இளமையில் பொண்டாட்டி இருந்தும் பிரம்மச்சாரியம் காக்கறது கொடுமையிலும் கொடுமை என அவனுக்கு புரிய, இப்ப புரிஞ்சு ஆவறது என்ன. பெத்தவ வாய மூடிட்டு இருந்தா இம்புட்டு தூரம் போயிருக்குமா அவன் மனசு சொல்ல.

 

நட்ட நடுராத்திரியில எந்திருச்சு அவளை கூட்டிட்டு வரலாமான்னு கூட நினைப்பான். ஆனாக்கா பண்ண காரியத்துக்கு எப்படிப் போயி கூப்பிடறது. கேட்ட நிமிஷம் எதையும் யோசிக்காம பொண்ணை கொடுத்தாங்களே எப்புடி அவங்க மூஞ்சியில முழிக்கறதுன்னு குடிசையே கதியா கெடந்தான்.

 

பதறுன காரியம் சிதறிப் போவுமுன்னு சொன்ன கணக்கா ஆச்சு அவன் பொழப்பு.

 

கட்டுன புருஷன் அங்க தவிக்க.

 

இங்க செவ்வந்திக்கும் அதே நிலைமைதான்.

 

கருப்புச்சாமி இப்படி பண்ணுவான்னு இன்னுமே நம்ப முடியாம தவிச்சாள்.

 

தன்னால அப்பன் ஆத்தாளுக்கு மனசங்கடம். அவங்க தலையில பாரமா விழுந்துட்டோமுன்னு நெனைக்கயில் எதையும் செய்ய முடியாத நிலை அவளுக்கு.

 

குளிக்கயில முதுகு தேய்க்க வரும் அமுதாவ தவிர்த்தாள் செவ்வந்தி. ஒரு நாலு புருசனோட குடும்பம் நடத்துனதுக்கான தடம் உடம்பில் இருக்க, நல்லபடியா சீரோட பொழைச்சா அந்த தடம் பெத்தவளுக்கு பெருமையை தரும். மவ புருசனோட சந்தோசமாத்தான் இருக்கான்னு.

 

ஆனாக்கா நடந்தது எதுவுமே பொய்யின்னு ஆனப்புறம் உடம்புல இருக்க காயத்தை பாத்தா வெளியே சொல்லாம மனசுக்குள்ளயே குமுறுமேன்னு அவரை வேண்டாமுன்னு தடுத்துட்டாள். “நானே தண்ணி ஊத்திக்கறேன். நீ போம்மா”ன்னு சொல்லிட்டாள்.

 

கல்யாணத்துக்கு முன்ன நெறய கனவு இருந்துச்சு அவளுக்கு, எதைச் செய்யவும் யோசிக்க மாட்டா புள்ளி மானா சுத்துனவளுக்கு இப்ப எதுவுமே தோணல. காலம் நின்னு போன மாதிரி ஆச்சு அவளுக்கு.

 

அத்துப் போட்டுட்டா அம்புட்டுத்தானா எல்லாமே முடிஞ்சு போச்சா? கல்யாண வாழ்க்கை இனி தனக்கு இல்லையா கேவலுடன் வெறுங்கழுத்தை தடவிப் பாத்தவளுக்கு மனசெல்லாம் நைத்து போனது. எல்லாமே வெறுங்கனவா போச்சேன்னு எதையும் ஏத்துக்க முடியாம தவிச்சா செவ்வந்தி.

 

தன்னை நெனச்சு மனசு உடைஞ்சு கெடக்கும் பெத்தவங்களை பாக்க, தனக்கு கல்யாணமுன்னு கடனை உடனை வாங்கி செலவு பண்ணின கூடப் பொறந்தவனை ஏறிட்டு பாக்க கூட அவ மனசு அச்சப்பட்டது.

 

பணக்கார குடும்பம் எதுலயும் குறை வைக்கப்படாதுன்னு தலைய அடமானம் வைக்காத குறையா காசை செலவு பண்ண குடும்பத்துக்கு பெருமைய தேடித் தர முடியாம போச்சே.

 

தன்னால அவமானந்தான வந்து சேர்ந்துச்சு. உடம்பெல்லாம் சோர்ந்து பலவீனமானது அவளுக்கு.

 

 

 

அத்தியாயம் 45

 

 

ஒத்தையாவே இருந்தவனுக்கு என்ன செலவு பெருசா இருக்கப் போவுது?

 

செலவே பண்ணி பழக்கம் இல்லாதவன், அன்னம் ஒரே தடவையில் அவசியத் தேவைக்கு வீட்டுக்கு வேண்டியத வாங்க, அதிசயமா போச்சு அவனுக்கு.

 

குளிக்க ரூம் வேணுமுன்னு ஆரம்பிச்சவ, வீட்டையே ஒரு வாரத்துக்குள்ள அங்க அங்க இடிச்சுக் மாத்தியே கட்ட வச்சுட்டா. ஊட்டுல இருக்கறவ அவதான, பொம்பளப்புள்ள அவளுக்கு புடிச்ச மாதிரி பண்ணட்டும்னு கண்டுக்காம போயிட்டான்.

 

வேலை முடிஞ்சு பெயிண்ட் அடிச்சப்புறம் பாத்தா அவனுக்கே சந்தேகம் வந்துடுச்சு. நம்ம வீடுதானா இதுன்னு. பாத்ரூம் கட்டறேன்னுதான மேஸ்திரிய வரச் சொன்னோம். வெவரமா இம்புட்டு வசதிய பண்ணிட்டா கழுத. யோசிச்சுட்டு நின்னான்.

 

அவனை மாதிரி மரத்துக்கடிய ஊதக் காத்துல கட்டாந்தரையில படுத்த முரட்டு ஆளுங்களுக்கு பஞ்சு மெத்தையும் ஏசிக் காத்தும் ஆடம்பரமாத்தான் தெரியுன்றது நெசம்தான்.

 

குளிர்சாதனப் பெட்டி, மிக்சி, க்ரைண்டர் இதுவெல்லாம் கூட பொறுத்துப் போனான். சரி அவசிய தேவைதான், படிச்ச புள்ள, வேல வெட்டின்னு செய்யாம பதவிசா வளந்துருக்கா வாங்கிட்டு போறான்னு கண்டுக்காம விட்டுட்டான். அதுக்குப் பின்ன இறங்குன தேக்கு கட்டிலும் மெத்தை, ஏசி, வாசிங்மெஷின், ஏர்கூலர்ன்னு பாத்தவனுக்கு அப்பவே நெஞ்சு வெடிச்சு செத்துருவோமுன்னு ஆச்சு.

 

ரெண்டு மாசத்துக்கு ஒருக்கா கரண்டு பில்லு நூறு ரூபாய் வந்தாவே ஈபிகாரன்கிட்ட சண்டைக்கு வேட்டிய மடிச்சுக் கட்டிட்டு போவான். “எம்புட்டு தைரியம் இருந்தா எனக்கு பில்லு போடுவ. திரும்ப ஒருக்கா ரீடிங் எடு வா” ன்னு கூப்பிடுவான்.

 

அவனுக்கு விவசாய நிலத்துக்கு கரண்டு இலவசமா தந்திருக்க, வீட்டுக்கு ஒரு லைட்டும் மின்விசிறியும் போதும், அவன் ஒருத்தனுக்குத்தானே கரண்டு பில்லே அவனுக்கு வராது.

 

இப்ப இதெல்லாம் பாத்தவனுக்கு “யேய் புள்ள. உன்ன யானைக்குட்டின்னு சின்னதா சொன்னது தப்புடி. திமிங்கலத்துக்கு பொறந்துருப்படி நீ. உங்கம்மா புத்திய அப்படியே கொண்டு பொறந்துருக்கடி” ன்னு ஆரம்பிச்சுட்டான்.

 

பொருள இறக்கிட்டு அவனுங்க பணத்தை வாங்கிட்டு “கண்டிப்பா அடுத்த தடவ எங்கள் கடைக்கே வாங்க. நாங்க இருக்கோமு”ன்னு அவனுங்க கும்பிடு போட.

 

அவங்களுக்கு பெரிய கும்பிடா போட்டு, “இந்தப் பக்கமே வராதீங்கன்னு” அனுப்பி வச்சவன், அவளை சகட்டுக்கும் பேசிட்டான்.

 

அவன் பேசிட்டான்னு ரோசப்பட்டு மூஞ்சை தூக்கி வச்சவளுக்கு, கோவமா வந்துச்சு.

 

அம்மியில அரைக்க, ஆட்டங்கல்லுல ஆட்டி கொழம்பு வைக்க, துணிய துவைக்கன்னுதான் என்னை கட்டிக்கிட்டியா. என்னால அழுக்குல கைவைச்சு துவைக்க முடியாது மெஷின்லதான் துவைப்பேன்னு அவ ஒரு பக்கம் பேசிட்டே வேப்பமரத்தடிய உட்கார்ந்து விக்கி விக்கி அழுதுகிட்டிருந்தாள் அன்னம்.

 

துடைக்க துடைக்க கண்ணீர் வந்துட்டே இருந்தது. மதியத்துல ஆக்கி வச்ச சோறும் மீன் குழம்பும் சூடா இருந்தும் அவ திங்கலை.

 

அவளா சாப்பிட கூப்பிடுவான்னு பொறுத்து பொறுத்து பார்த்தவன், மீன் குழம்பு வாசம் மூக்கை துளைக்க, பசியை அடக்க முடியாம,

“வந்து சோறு போடுடி” தானா கூப்பிட்டான்.

 

“எனக்கு பசிக்கல. இன்னைக்கு நீயே போட்டு தின்னுக்கய்யா. உனக்கு கையில்லையா” கோவத்துல கத்துனவளை கண்டுகொண்ட சத்தியசீலன்,

 

“அதுக்கும் ஒரு மெஷின் வாங்கி போடுடி. படுத்தே கெடக்கலாம் பாரு. ஒரு வேலையும் பாக்காம. முல்லைக் கொடி மாதிரி மெது மெதுன்னு இருக்கறவ திராட்சைக் கொடி மாதிரி ஆகிடு நல்லா” ன்னு சொன்னான்.

 

“செலவே பண்ணாம கட்டுக்கட்டா பணத்த வச்சுக்கிட்டு என்ன பண்ணப் போற நீ. செல்லரிச்சுப் போவும் சும்மாவே கெடந்தா. பொண்டாட்டின்னு வந்துட்டா எடுத்து செலவு பண்ணத்தான் செய்வேன். அதுக்கு எனக்கு உரிமை இருக்கு” அவள் நியாயத்தில் அவனுக்கு சிரிப்பு பொத்துக்கிட்டு வந்துச்சு.

 

“அறிவில்லாத கழுத செலவே பண்ண வேணாமுன்னா சொன்னன். பாத்து பக்குவமா புருஷன் நெஞ்சு வெடிச்சு சாவாத அளவுக்கு, கொஞ்சம் கொஞ்சமா தேவைக்கு வாங்குன்னுதான சொன்னேன். நல்லத சொன்னா அம்புட்டு கோவம் வந்து தொலைக்குது இவளுக்கு” பரிமாற வராதவள முறைச்சவன்

“நீயே கொட்டிக்க எல்லாத்தையும். சண்டை வரும் போது கவுச்சி செய்யாதடி கிறுக்கச்சி இனிமேலு” ன்னு அவனும் திங்காம போய்விட்டான்.

 

‘ஒரு நாள் திங்காம போனா ஒண்ணும் ஆவாது போகட்டும் இங்காருக்கென்ன வந்துச்சு’ மூக்கை உறிஞ்சினாள் கண்ணீரைத் துடைத்து.

 

அவனும் வராம போவ, ஆக்கி வச்ச மீன் குழம்பை பாத்தவளுக்கு, ஆசைப்பட்டு திம்பான்னு பண்ணி வச்சேன் சாப்பிடாம போயிட்டாறேன்னு வெசனப்பட்டு அவளே அவன் போன திசையில் போனாள்.

 

கேட்டை திறந்து தோப்புக்குள் இறங்கிப் போனவளுக்கு அவன் பாத்துக்கிட்டிருந்த முக்கியமான வேலைய பாத்து சிரிப்பு வந்துடுச்சு.

 

பசி கண்ணை மறைச்சிருச்சாட்டம் இருக்க, பிச்சுவா கத்தியால வரத்தேங்காய மட்டை வாங்கிட்டு இருந்தான். அது அவன் கைக்கு அகப்படாம அங்கிட்டு இங்கிட்டு போவ, அவ கண்ணு முன்னால வச்சு ஒரு தேங்காய ஒழுங்கா உரிக்க முடியலைன்னு ஆச்சு அவனுக்கு.

 

“இங்க என்னடி வேடிக்க. அதான் நீயே தின்னுனு மூஞ்சியில அடிச்சாப்புல சொல்லிப்புட்டியே. போ போய் கொட்டிக்க, நா வெறும் வயித்தோட பட்டினி கெடந்து உனக்கு ஓடா உழைச்சு கொட்டுறேன்” சொன்னவனை பாக்க பிடிவாதக்கார குழந்தையாட்டம் தெரிஞ்சது அவளுக்கு.

 

“வந்து சோத்த தின்னுய்யா. பசியோட இருக்காத” அழைத்தாள்.

 

“சோறும் வேணாம் மண்ணும் வேணாம் போடி. பசிக்குதுன்னு வந்தா போட்டு தின்னுக்கன்னு சொல்லிட்டு இருக்க. நானே போட்டு தின்னா பொண்டாட்டின்னு நீ எதுக்குடி இருக்க?” பசியில் உண்டான கோபத்தில் அவகிட்டே இரைந்தான்.

 

“தப்புதான் சாமி. இனி இந்த மாதிரி நடக்காது. வாங்க சாப்பிடுங்க” அவன் பசியை உணர்ந்து தனிஞ்சு போனாள்.

 

“நீயே கொட்டிக்க. சம்பாரிச்சு போட மட்டும் உனக்கு புருஷன் வேணும்” வராம வேலையை பாத்துகிட்டு இருந்தான்.

 

“வாய்யான்னா” அவன் கையை பிடிச்சு இழுத்துகிட்டு போவ முயல, யானையை நூலால் கட்டி இழுக்கிற கதையா போச்சு அவள் நிலை.

 

காலை நிலத்தில் ஊனி நின்றிருந்தவனை அசைக்க கூட முடியல அவளுக்கு.

 

“பசியோட இருக்காத. அதான் பண்ணது தப்பு மன்னிச்சுக்கோன்னு வரேன். இன்னும் குழந்தையாட்டம் அடம்புடிச்சா நல்லாருக்கா. எனக்கும் பசிக்குது வா” அவள் கூப்பிட்டாள்.

 

அவளும் பசியோட இருக்கான்னு கோபம் விட்டு அவகூட வந்தான் சாப்பிட.

 

சாப்பிட்டவன் பசியடங்கி கைய கழுவிட்டு திரும்பவும் அவளை வசைப்பாட ஆரம்பிக்க.

 

“நா என்ன அம்புட்டு செலவா பண்ணிட்டேன். எல்லாம் தேவையாத்தான பண்ணுனேன். இதெல்லாம் சாதாரண விஷயம் இதுக்குப் போயி இந்தப் பேச்சு பேசுற?” கேட்டவ அவன்கிட்ட முகத்தை திருப்பிட்டு போய் மரத்தடியில் தஞ்சம் புகுந்தாள்.

 

மரம் காத்துக்கு பேயாட்டம் போட “எம்பொண்டாட்டி அழுவுறதை பாத்து வேப்ப மரமே அரண்டு ஆடிட்டு நிக்குது பாரு. எம்புட்டு அழுவாச்சி கண்ணுக்குள்ள டேம் கட்டி வச்சிருக்கா மவராசி” சத்தியசீலன் அவளை சீண்டி பார்த்தான்.

 

“உனக்கும் எனக்கும் பேச்சில்ல போய்யா. உன் வேலைய மட்டும் பாத்துட்டு போ. தேவையில்லாம வம்புக்கு வராத”

 

“ஏய் யாரைடி வேலைய பாத்துட்டுப் போன்னு சொன்ன?” அவ பக்கத்துல வர.

 

பயந்து வாயை மூடிக்கிட்ட அன்னம் கண்ணை கோபத்துல உருட்டிட்டு வரவனை பாத்து பயத்துல நடுங்கினாள்.

 

அவ பயத்த பாத்து வேகம் குறைஞ்சவன் “அஞ்சு லட்ச ரூபாய்க்கு செலவ இழுத்து விட்டிருக்க. அம்புட்டு செலவு இப்ப எதுக்குன்னு கேட்டா கோவம் வந்து தொலைக்குது உனக்கு. செலவ குறைச்சு பழவு புள்ள. இம்புட்டு செலவு குடும்பத்துக்கு ஆவாது”

 

“இனி பண்ணல” தனிஞ்சு போனாள் அவன் கோபம் கண்டு. நல்லவேள மைக்ரோ ஓவன் ரைஸ் குக்கர் வாங்காம போனோம் நெனச்சவளுக்கு வாங்கியிருந்தா இன்னும் பேசுவானே என்று ஆனது.

 

பேசிப் பேசியே ரெண்டு பேரும் பொழுதை போக்கிட்டார்கள், பொழுது சாய நிலவு வந்துருச்சு.

 

“இந்நேரத்துக்கு இங்க உக்காராதடி. பாம்பு கீம்பு வரும்” அவன் சொல்ல, அவன் பக்கத்துல வந்து நின்னுட்டாள் அன்னம்.

 

அச்சத்துல அவன் கையை பிடிச்சி நிக்க. அவன் மீது சாய்ந்து நின்றாள் பாம்பு மீதான அச்சத்தில்.

 

பயத்தில் அவன் மீது சாய்ந்தவளை தோள் மீது கைவைத்து தாங்கி பிடித்தவனின் விரல் மீது அவள் விரல் உரச, மின்சாரம் தாக்கிய உணர்வில் சிலிர்த்து நின்றான். நிலவொளியில் அவள் நெருக்கம் புதிய கதைகளை உருவாக்க சொல்ல, அவள் நுனி விரல்களை அழுத்தினான் தன் விரல்கொண்டு.

 

“கோவமா இருக்கேன்” அவன் கரத்தை தட்டி விட்டவளுக்கு இப்ப பாம்பு பத்தின பயம் போயே போச்சு. அவன்கிட்ட சண்டை போட்டு பாக்கலாமுன்னு நெனச்சாளோ என்னமோ முகத்தை இறுக்கமா வச்சுக்க முயன்றாள்.

 

“என்னடி இன்னும் கோவமா?” ஊதக்காற்று உரசிப்போக மனசில் இருந்த வெப்பம் போய் உல்லாசமாய் கேட்டான்.

 

கோவமான்னு கேட்டவனின் பேச்சில் நகைப்பு ஒளிஞ்சுக்கிட்டிருந்ததை கண்டுகிட்டவளுக்கு மூக்குக்கு மேல் மொன்ன கோவம் வர, முகத்தை திருப்பிகிட்டாள்.

 

அவள் முகத்த திருப்பிக்க, “மொன்ன கோவமடி. பாம்புன்னு சொன்னாவே நடுங்கிடுவா, தொட நடுங்கி” சீண்டி சிரித்தவன் உல்லாசமாய் சப்தம் எழ சிரித்தான்.

 

அவன் சிரிப்பு அவளையும் தொற்றிக் கொள்ள, இதழ்கடையோரம் மெல்லிய சிரிப்பு அரும்பியது.

 

அவளை ரசனையோட பார்த்தவன், “உனக்கு கோவப்படவே தெரியல புள்ள” அவள் கிட்டே நெருங்கி நின்றான்

 

காற்றில் அலையாடும் கட்டிடாத கூந்தல் அவன் மீதும் உரசி முகத்தில் தழுவியபடி செல்ல. கூந்தலில் இருந்து வரும் சுகந்தத்தில் கண்மூடி சுகித்தான் அந்நேரத்தை.

 

“எனக்கு கோவம் வராதா. வரக்கூடாதா. எம் புருஷன் காசை எடுத்து செலவு பண்ண எனக்கு உரிமை இல்லையா” அவன் நெருங்கி நிற்பது தெரிஞ்சாலும் தள்ளிப் போவாம நின்னாள்.

 

“நானே உனக்குத்தான புள்ள. உன்ன கட்டிக்கிடனும் உன் கூடப் பொழைக்க கொள்ளை ஆசை இருந்துச்சு. ஆனாக்கா அதுக்குப் பின்ன இருக்கறத யோசிச்சுப் பாக்கலை. எல்லாமே புதுசா இருக்க போயித்தான் எதையாச்சும் பேசிப்புடறேன். மனசுல வச்சுக்காத புள்ள. உனக்கு என்ன வேணாலும் வாங்கிப் போட்டுக்கோ புள்ள. நா சாம்பாதிச்சு கொட்டுறேன் உன் கையில” அவள் கரத்தை தன் கையில் எடுத்தவன் விரல் நுனிகளில் முத்தம் பதித்தான்.

 

“உன்னால செலவு பண்ண முடியுமுன்னு தெரிஞ்சுதான் நா அம்புட்டு பொருளையும் வாங்கினேன். இதே குடிசைவாசியா இருந்தீன்னா அதுக்குதக்க வாங்குவேன். எப்ப எம்புட்டு செலவு பண்ணனும்னு நேர் நெதானம் எனக்கும் தெரியுமய்யா. பொண்டாட்டி ஊதாரியா இருக்கான்னு பயப்பட்டு சாவாத என்ன?” மயக்கும் குரலில் சொல்ல, எதிர்பாராம அவள் இதழ்கள் அவன் கன்னத்தை உரசிப்போக,

 

எல்லாத்தையும் மறந்து நின்னான்.

 

“போய் பாருய்யா. புதுப் பொண்டாட்டிக்கு பாத்து பாத்து வாங்கி தறாங்க. நீ என்னன்னா தையா தக்கான்னு குதிக்கற” அவன் கையை பற்றியவள் விழிகள் வெட்கத்துடன் மூட, இதழில் ஒற்றினாள் அவன் விரல்கள் ஒவ்வொன்றாய்.

 

அவளை மரத்தின் மீது சாய்த்தவன், அவள் முகத்தை ஒரு கையால் பற்றி, வலது கையால் அவள் இதழ் வருடினான் கட்டுக்குள் அடங்கா மோகத்துடன். சடுதியில் நடந்த அதிரடியில் அஞ்சி விலகியவளை தன் தேகத்தோடு இறுக்கி கட்டிக்கொண்டான்.

 

அவள் இப்பவே தேவை என அவன் கட்டுப்பாடுகள் தகர்ந்து போனது. அவளுக்குள் கலந்திட தேகம் துடித்தது.

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!