அரிமா – 11

4.8
(16)

இதற்கிடையில் மதுமதியோ தனது ஆழ்ந்த உறக்கத்திலும் ஆதித்யாவின்  காயம் பட்டிருந்த  புஜத்தை  அழுத்தமாக பிடித்திருக்க, அவனுக்கோ வலிக்காமல் இல்லை ஆனாலும் பொறுத்துக்கொண்டு, மதியின் முகத்தில் விழுந்து கிடந்த முடி கற்றை நீக்கினான்.

அன்று மின்னல் ஒளியில் அவனை ஈர்த்த அதே அழகு மதி முகம் இப்பொழுதும் அவனை ஈர்த்தது. வலியை மறந்து அவளது முகத்தில் இருந்து தன் பார்வையை அகற்றாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் ஆதித்யா.

எங்கோ இருட்டில் கிடந்தவனுக்கு மின்மினியாய் வெளிச்சத்தை கொடுத்தது அவளது முகம்.

மனதிற்குள் ஆயிரம் ஆசைகள் முளைத்தது, இந்த உலகம் இப்படியே நின்றுவிட்டால் எப்படி இருக்கும்? மனம் பேராசை கொண்டது .

“என்ன நடந்தாலும் இப்படி என் கூடவே இருப்பியா மதி” தான் யார்? தான் இருக்கும் நிலை என்ன? என்று அனைத்தும் மறந்து வாய்விட்டே கேட்ட ஆதி, அவளது உச்சந்தலை நோக்கி குனிந்த மறுநிமிடம் மெதுவாக கண்விழித்தாள் மதுமதி.

 மிகவும் சிரமப்பட்டு மெதுவாக இமையை பிரித்தவள், படுக்கையில் இருந்து எழுந்து கொள்ள சிரமப்படுவதை புரிந்து கொண்ட ஆதி அவளுக்கு உதவி செய்ய, ஆதித்யாவின் உதவியுடன் அவனது தோள்களை பற்றியபடி எழுந்து அமர்ந்தவள் ,

” உங்களுக்கு ஒன்னும் இல்லையே ” என்று கேட்டுக்கொண்டே அவனது தோள்களை தவறுதலாக அழுத்தி பிடித்து விட,

” ப்ச் ” வலியில் அவன் சிறு முனங்களுடன் முகத்தை சுளித்ததும் தன் கைகளை எடுத்தவள்,

” சாரி சாரி ஐயம் சாரி ரொம்ப வலிக்குதா ? ” மென்மையாக அவனது காயத்தை பட்டும் படாமல் வருடியபடி கேட்டாள்.

அவனது இதயத்தை தொட்ட அவளது ஸ்பரிசத்தில் அவனுக்கு அவன்  கொண்ட வலி கூட சுகமாக மாறிவிட்டது போல,

 ” இல்லை இப்போ வலி இல்லை ” என்று மென்னைகையுடன் கூறியவன், மது அமருவதற்கு ஏதுவாக  அவள் முதுகில் தலையணைகளை  கொடுத்துவிட்டு கட்டிலில் இருந்து எழுந்தவன்,

” உனக்கு வலி மருந்து கொடுத்திருக்காங்க அதனால இன்னும் ரெண்டு மணிநேரத்துக்கு வலி இருக்காது. அதுக்கப்புறம் கொஞ்சம் வலி அதிகமா இருக்கும். ரொம்ப வலிச்சா சொல்லு மெடிசின் தரேன், நீ ரெஸ்ட் எடு  ” என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பவும், உடனே படுக்கையில் இருந்து எழுந்து நின்ற மது,

” ஆதித்யா நான் இங்க இருந்து ” என்று கூறி  முடிப்பதற்குள்,

” ஆதி ” என்று அழைத்தபடி நாகா உள்ளே வந்தான்.

அவனை கண்டதும் மதி சட்டென்று ஆதித்யாவின் முதுகுக்கு பின்னால் அவனது கரத்தை பிடித்தபடி தயக்கத்துடன் தன்னை மறைத்துக்கொண்டு நின்று கொள்ள , சில நொடிகளில் அவளது தயக்கத்திற்கான காரணத்தை உணர்ந்த ஆதித்யா,

 ” நாகா நீ போ நான் வரேன் ” என்று நாகாவை வெளியே அனுப்ப, ஆதித்யாவுக்கு பின்னால் மறைந்திருந்த மதியை ஒரு பார்வை பார்த்த நாகா வேகமாக வெளியேறினான்.

நாகா சென்ற பிறகு சிறு தயக்கத்துடன் ஆதித்யாவை விட்டு தள்ளி வந்த மதி மலங்க மலங்க விழிக்கவும் , “ரெஸ்ட் எடு மதி”என்ற ஆதித்யா அங்கிருந்து வெளியே சென்றான் .

ஆதித்யாவின் வருகைக்காக வெகு நேரமாக அவனது ஆஃபிஸ் ரூமில் காத்திருந்த நாகா அவனை கண்டதும்,

” என்ன நடக்குது ஆதி ” சற்று கோபமாகவே வினவினான்.

” என்னது என்ன நடக்குது எனக்கு ஒன்னும் புரியல நாகா, முதல்ல வா வந்து உக்காரு ” என்று தான் அமர்ந்திருக்கும் இருக்கைக்கு எதிரே இருக்கும் இருக்கையை காட்டி  அமரச் சொன்ன ஆதி,உள்ளே தாரா வருவதை கவனித்து நாகாவை அமைதியாக இருக்கும் படி செய்கை செய்தவன் அனுமதி கேட்டு நின்றவளை,

 “வாங்க தாரா ” என்று  உள்ளே அழைத்தான்.

” ஆதித்யா அவங்களுக்கு வேண்டியதை கொடுத்துட்டேன். வேணும்ன்னா நான் அவங்களை என் கூட தங்க வச்சுகிட்டுமா. “

” வேண்டாம் நான் பார்த்துகிறேன். வேற ஏதவது சொல்லனுமா ” சொல்ல ஏதாவது இருந்தா சொல்லு இல்லைனா கிளம்பு என்னும் தோரணையில் ஆதித்யா சொன்னதன் அர்த்தத்தை உணர்ந்தவளின் தன்மானம் அடிபட,

” இல்லை” என்று சிறு கோபத்துடன் பற்களை கடித்தாள் .

” தென் ஓகே பார்க்கலாம் ” வெளியே போ என ஆதித்யா நாகரிகத்துடன் கூற. தாரா போலியான புன்னகையுடன் வெளியேறினாள் .

@@@@@

 தான் தங்கி இருந்த அறையில்,

 ” என்னதான் ஆதித்யா நல்லவன் மாதிரி தெரிஞ்சாலும் இங்கையே என்னால இருக்க முடியாது. ஐ ஹேவ் டூ லீவ். ஆதித்யா வந்ததும் இதை பத்தி பேசணும். சந்தியா எப்படி இருக்கான்னு தெரியலை ” என தன் உடலை போர்வைக்குள் குறுக்கிக்கொண்டு சிந்தனையுடன் மதி  படுத்திருக்க, அவளது சிந்தனையை கலைத்தபடி உள்ளே நுழைந்த தாரா , மதி அணிந்துகொள்ள ஒரு செட் ஆடை மற்றும் அவளுக்கு தேவையான பொருட்களை அருகே வைக்க,

” இதெல்லாம் நான் கேட்கலையே ” என மது கூறினாள்.

” ஆதித்யா தான் குடுக்க சொன்னாரு “

” ஆதியா ” மதுவின் இதழ் அழகாய் விரிய. மது ஆதித்யாவை ஆதி என உரிமையாக அழைத்த விதம் தாராவுக்கு எரிச்சலை ஏற்படுத்த, பற்களை கடித்தபடி தாரா வெளியேறினாள் .

 ஆனால் இதை உணராத மதுவோ, தாரா வைத்துவிட்டு சென்ற ஆடையை தன் கையில் எடுக்க, தன் தேவையை கூறாமலே புரிந்து கொண்ட ஆதித்யாவை பற்றியே எண்ணமே பெண்ணவளின் நெஞ்சம் முழுவதும் வியாபித்திருந்தது.

@@@@

” டிபார்ட்மெண்ட்ல அவ்ளோ பெரிய பொசிஷன்ல இருந்துட்டு என்ன வேல பாத்துட்டு வந்து இருக்க அர்ஜுன், கமிஷனர் சொல்லும்போது எனக்கு எவ்ளோ அசிங்கமா இருந்துச்சு தெரியுமா, ஏதோ அவர் எனக்கு வேண்டப்பட்டவர் என்கிறதுனால சரியா போச்சு. வெளியே தெரிஞ்சா எவ்ளோ அசிங்கம்”  வாசலில் நிற்க வைத்து அர்ஜுனை சரமாரியாக திட்டி தீர்த்த ராம்குமார், பின்பு அவன் அருகில் நின்றிருந்த மதனை பார்த்து,

” இந்த நேரத்துல ஏன்டா இவனை அங்க கூட்டிட்டு போன” என்று  சற்று காட்டமாக வினவினார்.

” அச்சோ அங்கிள் எனக்கே அவன் போனது தெரியாது, கமிஷனர் சார் சொல்லி தான் எனக்கே தெரியும், உடனே நான் போய் கூட்டிட்டு வந்துட்டேன்”

” யார் அவன்? அவன் வீட்ல ஏன் இவன் போய் பிரச்சனை பண்ணி இருக்கான் “

 என ராம்குமார் கேட்கவும் அர்ஜுனின் உதடுகள் ஆதித்யாவின் பெயரை உச்சரித்தது.

” ஆதித்யான்னா யாரு” அர்ஜுனை கேட்டார் ராம்குமார்.

” ஆதித்யா சக்கரவர்த்தி. துரியன் ஜித்தேரியோட ரைட் ஹண்ட். ஜித்தேரி சாம்ராஜ்யத்தோட  ரொம்ப முக்கியமான ஒரு ஆள், இப்போ மது அவன் கூட தான் இருக்கா. பழைய பகையை மனசுல வச்சிக்கிட்டு அந்த ஆதித்யா என்னை பழி வாங்குறதுக்காக மதுவை என்கிட்ட இருந்து பிரிச்சிட்டான். அவனை நான் சும்மா விட மாட்டேன். ” என அர்ஜுன் ஆக்ரோஷமாக சொல்ல, பெரியவர்கள் ஒவ்வொருவரின் முகத்திலும் வெவ்வேறு உணர்வுகள் வந்து போயின.

” ஜித்தேரியன்ஸ் அவங்க ரொம்ப மோசமானவங்க பா, தே ஆர் மாஃபியாஸ். மது அவனையா காதலிக்கிறா? அவ அங்க இருக்க கூடாது  ” என அருள் நிதி அதிர்ச்சி கலந்த கவலையுடன் அர்ஜுனை  பார்த்து சொல்ல,

” இருக்க கூடாதுன்னா என்ன பண்ண போறீங்க? போய் கூட்டிட்டு வர போறீங்களா ” எரிச்சலுடன் கேட்டார் மிருதுளா.

” கூட்டிட்டு தான் வரணும், பின்ன நம்ம வீட்டு பொண்ண அந்த மாதிரி ஆளுங்க கிட்ட விட சொல்றியா “

” இங்க இருந்து யாரோ கொண்டு போய் விட்ட மாதிரி பேசுறீங்க, அவளா தானே போயிருக்கா. எல்லாம் தெரிஞ்சுதான் போயிருப்பா, அதனால ஓடிப்போனவளுக்காக ரொம்ப வருத்தப்படாம நம்ம வீட்ட பாருங்க” என்றார் மிருதுளா.

“அம்மா நீங்க பேசுறது சரியே இல்லை, அவ சின்ன பொண்ணுமா அவளுக்கு என்ன தெரியும்? நாம எடுத்து சொன்னா கண்டிப்பா புரிஞ்சிக்குவா” ஒரு அண்ணனாக இளமாறன் கவலையுடன் சொல்ல,

“மாறா மது மேல எங்களுக்கும் அக்கறை இருக்கு, என்ன பண்ணனும்னு பெரியவங்க எங்களுக்கு தெரியும், நீங்க எல்லாரும் உங்க வாழ்க்கைய பாருங்க. இந்த பிரச்சனைய நாங்க பார்த்துக்கிறோம்.” என்ற ராம்குமார் அர்ஜுனை பார்த்து,

 ” இன்னைக்கு நடந்த போல இனிமே நடந்துகிட்டனா நான் மனுஷனாவே இருக்க மாட்டேன். ஆதித்யாவ பழி வாங்க போறேன். அவனை உள்ள தள்ள போறேன்னு தேவையில்லாத வேலையெல்லாம் விட்டுட்டு நீ

 உன் வேலைய மட்டும் பார்த்தா போதும்.” என்று உறுதியாக  கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட,

மதுவைப் பற்றிய எந்த உண்மையும் தெரியாததால், மது தன்னிடம் சொன்னது போல தன் தோழி சந்தியாவுடன் வேறு ஒரு ஊரில் பத்திரமாக இருக்கிறாள் என்று எண்ணி கொண்ட ப்ரீத்தா மது குறித்து நிம்மதி கொண்டாலும், அவருக்கு ஜித்தேரி என்னும் வார்த்தை கலக்கத்தை கொடுத்தது.

@@@@@@@@

கேங்ஸ்டர் கலாச்சாரம் என்பது 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து இந்தியாவில் அதுவும் முக்கியமாக மும்பையில் அதிகமாக உள்ளது. இதில் சிலர் 1950 ஆண்டிலே சின்ன சின்ன சட்டவிரோதமானது பொருட்களை விற்ப்பதன் மூலம் தங்களது இருண்ட வாழ்க்கையை துவங்கினர்.

‘ஜித்தேரி கேங் ‘ – 1972 களில் மும்பையில் தலையெடுத்த இந்த மாபியா கேங் விஷ கிருமி போல மெல்ல மெல்ல நம் இந்திய நாடு முழுவதும் பரவி இப்பொழுது யாரும் அழிக்க முடியாதளவுக்கு மாபெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது.

இவர்களது முக்கியமான பிஸ்னஸ் ஹவாலா பணம் , தங்கம், மற்றும் வைரம்  கடத்துதல் தான் .

நம் நாட்டில் நடக்கும் இது போன்ற முக்கால்வாசி கடத்தல் சம்பவங்கள் இவர்கள் தலைமையில் தான் நடக்கின்றது .இது அனைத்தும் அறிந்திருந்தும் நம் இந்திய அரசால் இதுவரை அவர்களுக்கு எதிராக எந்த வழக்கும் தொடுக்க முடியவில்லை.

 அதற்கு முக்கிய காரணம். இவர்களுக்கு பக்க பலமாக இருப்பது நம் நாட்டை ஆளும் அரசியல் தலைவர்களும். பெரிய பெரிய வெளிநாட்டு நிறுவனங்களை வைத்திருக்கும் பணக்கார முதலைகளும் .

வெளிப்பார்வைக்கு ‘ஜித்தேரி கேங் ‘ ஒரே ஒரு குழுவாக தெரியும் ஆனால் இதற்கு கீழ் பல குழுக்கள் லோக்கல் தாதாக்களின் தலைமையின் கீழ் இயங்கி வருகின்றது .

1795 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஆந்திராவில் இரு நாட்டு மன்னர்களுக்கு எதிரே நடந்த போரில் தோற்கடிப்பட்ட மன்னர் கோட்டா வம்சத்தின் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் எதிரி நாட்டு மன்னரால் விரட்டப்படுகின்றனர். அவர்கள் பிழைப்புக்காக வடநாட்டில் நடந்த கட்டுமான பணிக்காக தங்களின் சொந்த ஊர் ஆந்திராவிலிருந்து இருந்து கூலித்தொழிலாளிகளாக இங்கே வருகின்றனர். அவர்கள் வாழ்ந்த பகுதியே ‘ ஜித்தேரி’  .

அதன் பிறகு., 1880 ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயர் ஆட்சியில் அங்குள்ள ராணுவத்தினருக்கு சேவை செய்து பிழைத்து வந்தவர்கள் .

ஆங்கிலேய ஆட்சி முடிவுக்கு வந்து அவர்கள் நாட்டை விட்டு சென்ற பிறகும், சுகந்திரம் அடையாத இந்த மக்கள் நம்நாட்டு பணக்காரர்களிடம்  கொத்தடிமைகளாக வேலை பார்த்தனர் .

ஜித்தேரி இனத்து பெண்களை அவர்கள் பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொள்ள, அவர்கள் மிகவும் துன்பறுத்த பட்டனர்.  காலம் காலமாக அடிமைகளாகவே இருந்ததினால் ஜித்தேரி மக்கள் பல விதமான துன்பங்களை அனுபவித்துக் கொண்டு ஒடுங்கியே வாழ்ந்த காலத்தில்,

 ‘ காலா ராவத் ‘ என்னும் பதினெட்டு வயது வாலிபன் மட்டும் அதை கண்டு எழுச்சியடைந்தான்.

முதலில் அங்குள்ள மக்களின் உரிமைக்காக வாய்வழியே போராடியவன் ஒருகட்டத்தில் ஆயுதம் ஏந்தினான்.

அவனுக்கு ஆதரவாய் பலரும் கொடிபிடிக்க. உரிமைக்காக அவன் எடுத்த கத்தி அவனை  நிழல் உலகிற்குள் தள்ளியது, காலா ராவத் காலா ஜித்தேரி ஆனான். காலா ராவத்தின் தலைமையில் 1976 யில் உருவாக்கப்பட்டதே ‘ஜித்தேரி கேங் ‘ .

அவருக்கு மிகவும் நெருக்கமான விசுவாசமான ஊழியர்கள் தான் தீன தயாளன் மற்றும் வரதராஜன்.

 இருவரும் நெருங்கிய நண்பர்கள். அனைத்தும் நன்றாக சென்று கொண்டிருக்க, காலா ஜித்தேரிக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட. நீண்ட நாள் காதலர்கள் ஆன காலா ஜித்தேரியின் ஒரே மகள் மாலினிக்கும் தயாளனுக்கும் உடனே திருமணம் நிகழ்ந்தது. அவர்களது திருமணம் முடிந்த சிலநாட்களில்  காலா மரணத்தை தழுவ.

ஜித்தேரியின் ஆணி வேர் ஆட்டம் காண, காலாவின் மரணம்  ஜித்தேரியில் பெரிய புயலை கிளப்பியது. ‘ ஜித்தேரிக்கு ‘ அடுத்த தலைவர் யார்? என்பதில் தயாளனுக்கும் வரதராஜனுக்கும் பெரிய போரே நடந்தேறியது. தயாளன் தலைமையில் சிலர். பிறகு வரதன் தலைமையில் சிலர் என்று ஜித்தேரி கேங் இரண்டாக பிரிந்தது.

இருவருமே சம பலம் கொண்டிருக்க வேறு வழியின்றி ஜித்தேரியின் மூத்த உறுப்பினர்கள் கலந்து பேசி ஜித்தேரி கேங்கை வடக்கு மற்றும் தெற்காக பிரித்தனர்.

அதன் படி ‘ நார்த் ஜித்தேரி ‘ தயாளனுக்கும் மற்றும் ‘ சவுத் ஜித்தேரி ‘ வரதராஜனுக்கும் என பிரித்து 1986ல் இருவரும் தலைமை பொறுப்பை எடுத்துக்கொண்டனர். பிரிக்கும் பொழுதே இருவரும் தொழிலையும் பிரித்து கொள்ள,

தயாளன் தலைமையில் இருக்கும் ‘ நார்த் ஜித்தேரி ‘  கேங் போதை மருந்து மாஃபியா தொழிலை கையில் எடுக்க. வரதன்  தலைமையில் உள்ள ‘ சவுத் ஜித்தேரி ‘ கேங்  கனிம வளங்கள்  மாஃபியாவை கையில் எடுத்தனர்.

 இருவருமே பெரும்புள்ளிகள் .

அனைத்தும் சரியாக சென்று கொண்டிருக்க, எதிர்பாராத விதமாக இரு கேங்குக்கும் இடையே நடந்த கேங் வாரில் தயாளன் , வரதராஜன் மற்றும் அவரது வலது கையான விக்டர் தேசாய் மீது தாக்குதல் நடத்த. இருவரும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். அதில் வரதராஜன் இறந்துவிட. அதன் காரணமாக தயாளன் கேங்கில் அடுத்தடுத்து ஏகப்பட்ட  இழப்புகள் ஏற்பட்டன. ஒருகட்டத்தில் தயாளன் உயிருக்கு பயந்து தப்பி தலைமறைவாக. அவரது தலைமையில் இயங்கிய ‘ நார்த் ஜித்தேரி கேங் ‘ தலைமை இல்லாது முற்றிலும் செயலற்று சிதறி போனது.

 இப்பொழுது ஜித்தேரி மொத்தமும் வரதராஜனின் மகன் துரியனிடம் வந்துவிட, ஜித்தேரியின் வாரிசான துரியனை பாதுகாக்கும் பொறுப்பு விக்டர் தேசாய் எடுத்துக்கொண்டார்.

இப்பொழுது விக்டர் ஜித்தேரிக்கு ஒரு நல்ல விசுவாசியாக இருந்து துரியனை வழிநடத்தி வருகிறார்.

பழி பாவத்துக்கு  அஞ்சாத இவர்கள் இதுவரை செய்யாத வேலையே கிடையாது. உளவு பார்ப்பத்தில் ஆரம்பித்து ஆள் கடத்துதல் கொலை செய்தல் என அவர்கள் கால் பதிக்காத வேலையே கிடையாது. தங்களின் லட்சியத்திற்காக எந்த இழிவான காரியத்தையும் செய்யக்கூடியவர்கள் , மிகவும் ஆபத்தானவர்கள். தனக்கு ஒரு கண் போனால் எதிரிக்கு உயிரே போக வேண்டும் என்கிற வக்கிர குணம் படைத்தவர்கள் .

இப்படி பட்ட கட்டமைப்புடன் இயங்கும் இவர்களை அழிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல.இவர்களை நெருங்குவதே கடினம் இதில். இவர்களை ஒழிப்பது என்பது நடக்காத காரியம் .

இவர்களில் எத்தனை குழுக்கள் உள்ளனர் ??யார் யார் தலைவர்கள் அவர்கள் என்ன என்ன பணிகள் மேற்கொள்கின்றனர் .??இவர்களின் திட்டங்கள் என்ன ?என்று யாருக்குமே தெரியாது .

நம் நாட்டின் வளங்கள், மற்றும் மக்களின் பொருளாதாரத்தை கரையான் போல் அரித்துக் கொண்டிருக்கும் இந்த மாஃபியா கும்பல் அரசாங்கத்துக்கும் போலீசுக்கும் சிம்ம சொப்பதனமாக இருக்கின்றனர்.

ஆனால் இது இதை பற்றியும் முழுவதும் அறிந்திராத மதுமதி,

‘ ஜித்தேரி ‘ என்னும் நரக சாம்ராஜ்யத்தின்  முக்கிய தளபதியான ஆதித்யா சக்கரவர்த்தி என்னும் நிழல் உலக மரண தேவனின்  மனதில்  சிம்மாசனம் இட்டு அமர்ந்துவிட்டாள்.

@@@@@@

ஒரு வழியாக படபடக்கும் தன் இதயத்தை சமன் செய்து கொண்டு கதவை திறந்த ஜூவாலாவுக்கு மனதில் பாரம் ஏறி போனது.

 அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்த பூக்கள் எல்லாம் தரையில் சிதறி கிடக்க, எழில் கோலமாக இருக்க வேண்டிய முதலிரவு அரை, தலைகீழாக மாறி கிடந்ததை பார்த்தவளுக்கு கண்கள் எல்லாம் கலங்கிவிட, தண்ணீரைத் துடைத்துக் கொண்டு அர்ஜுனை தான் தேடினாள். அவன் அங்கு இல்லை என்பது தெளிவாக தெரியவும், அறையில் மூளைக்கு ஒரு பக்கம் கிடந்த தலையணையை எடுத்து கட்டிலில் வைத்தவள், சமையலறைக்குள் சென்றாள்.

 காதல் கொண்ட நெஞ்சமல்லவா இந்த நிமிடம் தன்னவனுக்கு என்ன தேவை என்பதை நன்கு அறிந்து கொண்டவள், கையில் டீ கப்புடன் மாடிப்படி ஏறினாள்.

ஜூவாலா நினைத்தது போலவே தன் இரு கரங்களாலும் தனது தலையை இறுக்கமாக பற்றி கொண்டு, மாடியில் கிடக்கும் ஓய்வு நாற்காலியில் கண்களை மூடி அமர்ந்திருந்தான் அர்ஜுன். அவன் அருகே சற்று முன் அவனால் புகைத்து தள்ளப்பட்ட வெள்ளை நச்சு குழல் அணைந்த நிலையில் கிடக்க, அதை பெருமூச்சுடன் அதை பார்த்தவள்,

” அர்ஜுன் அத்தான்” என்று அழைத்தாள்.

“என்ன கட்டாயப்படுத்தி உன் கழுத்துல தாலி கட்ட வச்ச போல, இப்போ உன் கூட வாழனும்னு சொல்லி அனுப்பினாங்களா   என்ன? அதுக்கு தான் வந்தியா” ஜூவாலா அழைத்த மறுகணம், அவளைப் பார்த்து காட்டு கத்து கத்தினான் அர்ஜுன்.

 வருத்தமாக தான் இருந்தது, ஆனாலும் அவனது நிலையை புரிந்து கொண்டவள், அமைதியாக அவனது விழிகளை பார்த்தபடி அவன் அருகே வந்து, தான் கொண்டு வந்த டீ கப்பை அவன் முன்னே இருந்த டேபிளில் வைத்தவள், நிதானமாக அவனது முகத்தை பார்த்து,

” விருப்பம் இல்லன்னா முடியாதுன்னு சொல்லிட்டு போயிருக்கலாமே, யாரால உங்கள புடிச்சு வச்சிருக்க முடியும். இங்க யாரும் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது அத்தான். சூழ்நிலை தான் மனுஷங்களை கட்டி போடுது.

அப்புறம் நீங்க கட்டின தாலி இன்னும் என் கழுத்துல தான் தொங்கிட்டு இருக்கு, உங்களுக்கு இந்த பந்தம் வேண்டாம்ன்னா நீங்களே தாலியை கழட்டிடுங்க, ஏன்னா கல்யாணம் வேணும்னா சூழ்நிலை காரணமா நடந்திருக்கலாம் ஆனா நாம வாழ போற வாழ்க்கை அப்படி இருக்கக் கூடாது, உங்களுக்கு பிடிக்கணும், நீங்களா சந்தோஷமா என் கூட வாழனும். அதுதான் எனக்கு வேணும்.

 காத்திருக்க சொன்னா காத்திருக்கேன், இல்ல வேண்டாம்னா ஏற்கனவே நான் சொன்ன போல நீங்க கட்டின தாலியை நீங்களே கழட்டிடுங்க நான் போயிடுறேன்” என்றவள், திரும்பி பாராமல் அங்கிருந்து வேகமாக சென்று விட, வாயடைத்துப் போனான் அர்ஜுன்.

நிஜமாகவே அவனுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. அவளது கொழுசணிந்த பாதம் மறையும் வரை அவளையே அழுத்தமாக பார்த்தவன் அவள் சென்றதும் திரும்பி தன் முன்னால் ஆவி பறக்க இருந்த சூடான டீயை பார்த்தான், பின்பு சில நொடிகள் யோசனைக்கு பின் அதை தன் கையில் எடுத்து கொண்டான் அர்ஜுன்.

@@@@@@@@@@@

ஆதித்யாவின் அலுவலக அறையில்,

” அர்ஜுனுக்கும் மிருதுளா பொண்ணுக்கும் கல்யாணம் ஆயிடுச்சு” என்று நாகா சொன்னதுமே ஆதித்யா யோசனையுடன் அவனைப் பார்க்க,

“மது கல்யாணம் வேண்டாம்னு முந்தின நாள் நைட் வீட்டை விட்டு  வெளியே வந்து இருக்கா. அப்ப தான் சிவகுரு ஆளுங்க அவ ஃப்ரெண்ட் சந்தியாவ  அடிச்சு போட்டுட்டு அவளைக் கிட்னாப் பண்ணி இருக்காங்க. சந்தியா இப்போ ஹாஸ்பிடல்ல சீரியஸா இருக்கா. அண்ட் மது எதுக்கு கல்யாணம் பிடிக்கலைன்னு வந்திருக்கா தெரியுமா” என்று நாகா கேட்கவும்,

” என்ன பெரிய காரணமா இருக்க போகுது, ஜூவாலா அர்ஜுன விரும்பி இருப்பா, அக்காவுக்காக மேடம் வீட்டை விட்டு வந்திருப்பாங்க ” என ஆதித்யா சரியாக கணித்திருக்க,

” எனக்கு அப்படி தோனல” என்ற நாகா,

” வாட்ஸ் அப்ல உனக்கு ஒன்னு அனுப்பி இருக்கேன் அதை பார்த்துட்டு சொல்லு ” என்றான்.

 நாகாவை ஒரு கணம் பார்த்துவிட்டு அவன் அனுப்பியதை வாசித்து முடித்து விட்டு ஆதித்யா நாகாவை பார்க்க,

 ” மது வீட்டை விட்டு கிளம்பும்போது எழுதி வச்சு லெட்டர் இது, அந்த அர்ஜுன் சண்டை போடும்போது இத நம்ம வீட்டு முன்னாடி தூக்கி வீசிட்டு போய் இருக்கான், பத்ரி தான் சொன்னாரு, நான் தான் அவரை வாட்ஸாப் பண்ண சொன்னேன். அந்த லெட்டர்ல அவ காதலிக்கிறதா  சொல்லிருக்கறது உன்னை தான் ஆதி.

நீ ஒன்னும் இல்லன்னு சொல்லற ஆனா அந்த பொண்ணு உனக்காக கல்யாணத்தையே விட்டுட்டு வந்திருக்கா, இப்போ இங்கயே  வந்துட்டா, இதெல்லாம் தேவையா உனக்கு ” என்ற நாகாவை பார்த்து சிரித்த ஆதி,

” அந்த லெட்டர்ல என் பேரு கூட இல்ல டா, சொல்லப்போனா அவளுக்கு என் பேர் கூட இப்பதான் தெரியும் “

” ஆனா அதுல அவ உன்னை தான் மென்ஷன் பண்ணி இருக்கா “

” அர்ஜுன் நம்பனும், அவளை வெறுத்துட்டு ஜூவாலா கூட அவன் வாழனும்னு, அதுக்காக இப்படி பண்ணி இருக்கா.”

“சரி ஏதோ சொல்ற அதை விட, இப்போ மதுவை ஏன் இங்க கூட்டிட்டு வந்த, அவள ஹாஸ்பிடல் எங்கேயாவது அட்மிட் பண்ணிட்டு வந்திருக்கலாம்ல”

” அவ தன்னோட உயிரை பணயம் வச்சு என் உயிரை காப்பாத்திருக்கா. எப்படி என்னால விட்டுட்டு வர முடியும்,”

” இதையே சொல்லு,  இப்போ அவளை காப்பாத்திட்ட. எப்பவுமே உன்னால அவளை காப்பாத்த முடியுமா ? உன்கிட்ட இருந்து உன்னால அவளை காப்பாத்த முடியுமா சொல்லு ? உன்னால முடியாது ஆதி. இன்னைக்கு இல்லைனாலும் என்னைக்காவது ஒருநாள் அவ உயிர்க்கு ஆபத்து வரலாம். ஏன் அதை நீயே கூட பண்ணலாம்.இதோ பாய் வந்துட்டு இருக்காரு முதல்ல அவளை போட்டுட்டு தான் பேசவே செய்வாரு அப்போ என்ன பண்ணுவ. ??அவர் கிட்ட இருந்து உன்னால அவளை காப்பாத்த முடியுமா. ?? “

” தேவை பட்டா வேற வழியில்ல நாகா “

“ஆதித்யா என்ன பேசிட்டு இருக்க ஆர் யூ சீரியஸ், நான் கேட்டப்போ அவ மேல எந்த இன்ட்ரஸ்ட்டும் இல்லன்னு சொன்ன, ஆனா இன்ட்ரஸ்ட் இல்லாத எந்த பொண்ணு மேலயும் ஒரு ஆண் இவ்வளவு கேர் எடுக்க மாட்டான் ஆதி. இவ வேண்டாம் டா. இவளால உனக்கு பிரச்சனை மட்டும் தான் வரும். என்னால உனக்கு ஒன்னுன்னா பாத்துட்டு சும்மா இருக்க முடியாது ” என்று உணர்ச்சிவசப்பட்டு கத்திய நாகாவை  அணைத்து விடுவித்த ஆதி,

” பாஸ்ட் வச்சு இவள ஜட்ஜ் பண்ணாத நாகா, மதி ரொம்ப ஸ்வீட் அண்ட் இன்னசெண்ட். எல்லாத்துக்கும் மேல இப்போதைக்கு இந்த கான்வர்ஷேஷனே நமக்கு தேவையில்லை. ஏன்னா எனக்கு என் கடமையை விட  வேற எதுவும் பெருசில்ல, அண்ட் மதி ரெக்கவர் ஆனதும் அவளை அனுப்பிவிடுவேன் ”  என்றான் ஆதித்யா.

அப்பொழுது,

” ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ. ” என்கிற மதுவின் அலறல் சத்தம் ஆபிஸ் ரூமில்பேசிக்கொண்டிருக்கும் ஆதித்யாவுக்கு மிக துல்லியமாக கேட்க,

” மதி..” என்றவன் மறுநிமிடம் நாகாவுடன் தன் அறைக்கு விரைந்தான் .

– காதல் செய்வான்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!