அரிமா -15

4.5
(15)

 “போ. ” உச்சஸ்தாதியில் அலறிய மதுமதியின் குரலில் அதிர்ந்தது அரண்மனை மட்டுமல்ல ஆதித்யாவும் தான் .

” மதி ” என்ற ஆதித்யா மறுநொடி அவள் இருக்கும் தன் அறையை நோக்கி ஓடினான்.

மதியின் அலறலில் ஏற்பட்ட பதற்றத்தால் மின்தூக்கி மறந்து வேகமாக படிக்கட்டுகளில் ஏறி, தன் அறைக்கு விரைந்தான் ஆதித்யா .

உள்ளே போக பயந்து கொண்டு வாசலில் தங்களின் கைகளை பிசைந்தபடி நின்ற வேலையாட்களிடம் நெருங்கியவன் .

” என்னாச்சு ??” கண்டிக்கும் குரலில் கேட்டான் .

” அங்க ஏன் கேட்குறீங்க என்கிட்ட கேளுங்க “என நெற்றியில் வழியும் இரத்தத்தை. மேலும் வழிய விடாமல் ஒரு துணியால் அழுத்தி பிடித்தபடி அவன் எதிரே வந்தாள் தாரா .

“மதி எப்படி இருக்கா. ??யார் இப்படி பண்ணினது. ?? செக்யூரிட்டி எல்லாரும் எங்க ?? ” என்ற தாராவின் நிலையை கண்டதும் ஆதித்யாவுக்கு மதியின் அலறல் நினைவுக்கு வர பதறியவன் , தாராவிடன் அவளை பற்றி விசாரித்தான். ஆதனால் ஆதித்யா மீது ஆத்திரம் கொண்ட தாரா ,

” ஆதித்யா என்னை கீழ தள்ளிவிட்டதே மதி தான். என்னை மட்டும் இல்லை இதோ ” என்று கையில் கர்சீப்பை கட்டிக்கொண்டு நிற்கும் வீராவை காட்டி,

 “என்னை காப்பாத்த வந்த வீராவோட கையையும் கத்தியால கிழிச்சிட்டா ” ஆதங்கத்தில் தன் உதடுகள் துடிக்க கூறினாள் தாரா.

” வாட் அவளா ! ? நீங்க அவளை என்ன பண்ணுனீங்க.?? ” ஆதித்யாவின் பார்வை வீராவை ஆழ துளைத்தது.

 உடனே பதறிய வீரா ,

” ஆதி நான் எதுவும் பண்ணல. தாரா அவளுக்கு ட்ரீட்மென்ட் பார்க்க போயிருக்கா , கிட்டவே வர விடாம தாராவை புடிச்சு மது தள்ளிருக்கா,

அந்த வழியா நான் ஒரு வேலையா போனேன் அப்போ உன் ரூம்ல இருந்து சத்தம் கேட்டு உள்ள வந்து பார்த்தேன். தாரா தலையில அடிபட்டு கீழ கிடந்தா. மதுகிட்ட என்னாச்சுன்னு தான் கேட்டேன். திடிர்னு பழம் வெட்ட வச்சிருந்த கத்தியை எடுத்து என் கைய கிழிச்சிட்டா, கிட்ட போனா’ என்னை மன்னிச்சிடு நான் வேணும்ன்னு பண்ணல போ போன்னு’ கத்துறா. என்னாச்சுன்னு தெரியல? ஆனா ஆதி அவ ரொம்ப பயந்து போய் இருக்கா “

சரி நீங்க போங்க, நான் மதியை பார்த்துக்கறேன் ” என்ற ஆதித்யா தன் அறைக்குள் நுழையவும் அவனை தடுத்த தாரா,

 ” ஆதி அவ சைக்கோ மாதிரி நடந்துகிறா. கையில கத்தி வச்சிருக்கா. நீங்க உள்ள போகாதீங்க. உங்களை ஏதாவது செஞ்சிட போறா ” என்க,

” நான் பார்த்துகிறேன் தாரா. ஐ கேன் ஒன்லி ஹண்டில் ஹெர்.” – என்னால மட்டும் தான் அவளை சமாளிக்க முடியும் என்றவன் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான் .

 அறை முழுவதும் தேடிய ஆதித்யா, மதி அங்கே இல்லாது போகவும், வேகமாக வந்து குளியல் அறையின் கதவை திறந்து பார்க்க, அங்கே அவள் இருந்த கோலம் கண்டு அவன் இதயத்தில் சுருக்கென்று வலித்தது.

தடதடவென ஆடும் தன் கால்கள் இரண்டையும் தன் நடுங்கும் கரங்களால் வளைத்து பிடித்து, முழங்காலுக்குள் தன் முகத்தை புதைத்து கொண்டு, குளியல் அறையின் ஒரு ஓரத்தில் இருக்கும் ஷவருக்கு அடியில் அரண்டு போய் அமர்ந்திருந்த மதியை கண்டதும் சில நொடிகள் வாசலிலே நின்றுவிட்டான் ஆதித்யா .

 மதியின் இந்த நிலைக்கு காரணம் தான் என்கிற எண்ணமே அவனை வலிக்க செய்ய, ஆணவனின் மனதில் ஏதேதோ உணர்வுகள், போராட்டங்கள், மேலும் ஒருவித குற்ற உணர்ச்சி, இன்னதென்று அவனால் வரையறுக்க முடியவில்லை.

ஓரிரு நிமிடங்கள் கழித்து உள்ளே ஆதித்யா உள்ளே நுழைய, அவன் மதியிடம் நெருங்க நெருங்க அவளிடம் இருந்து வெளிப்பட்ட விசும்பல் சத்தம் அவனை மேலும் சங்கடப்படுத்த பெருமூச்சோடு அவள் முன்பு மண்டியிட்டு அமர்ந்தான்.

ஆதித்யாவின் கை தானாக அவளது சிகையை தொட்டு தடவ, இறுக்கி பிடித்தும் தட தடவென நடுங்கிய அவளது மென்கரத்தை ஆதி மெதுவாக வருடினான், அவனது நெஞ்சுக்குழிக்குள் ஏதோ ஒன்று அழுத்தியது. கத்த வேண்டும் போல் இருக்க, ஆனால் அடக்கிக் கொண்டான்.

 கயிற்றால் இறுக்கமாக கட்டப்பட்டிருந்த மதியின் மணிக்கட்டில் சதை கிழிந்து காய்ந்திருந்த ரத்த துளிகளை கண்டதும் அடிவயிற்றில் இருந்து எழுந்து வந்த துக்கம் அவன் நெஞ்சை முழுவதுமாக ஆக்கிரமித்தது.

 மெதுவாய் அவளது கரத்தை பிடித்து , காயம் பட்ட அவளது கையை மெதுவாக வருடியவன், அங்கே அவளுக்கு வலிக்காது தன் இதழ் பதிக்க, ஆதிக்கு தொண்டைக்குழி அடைத்தது. அவளது தளர்ந்த மென் கரத்தை மென்மையாக பற்றி தனது வலிய கரத்திற்குள் பாதுகாப்பாக வைத்து கொண்டான். அவளுடைய காயம், அவளுடைய வலி, அவளுடைய துயரம் அனைத்தும் ஆதித்யாவை பெரிதும் பாதித்தது .

சில நிமிடங்கள் கண்களை மூடி தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டவன் தன் கண்களை திறந்த பொழுது, மதியின் சோர்வான பார்வையை சந்தித்தான்.

அவளது பார்வை அவனை கேள்வி கேட்டது. அவன் மீது குற்றம் சுமத்தியது. சட்டென்று மனம் கனத்து போக ஒருவித வலியுடன் அவளை பார்த்தவன் ,

” ஆர் யூ ஓகே டா மா ?? எப்படி இருக்க ” சரிந்து விழுந்திருந்த கேசத்தை காதோரம் ஒதுக்கியபடி கேட்டான் .

மதியின் கண்களில் தெரிந்த தளர்ந்த பார்வை இப்பொழுது அக்னி பார்வையாக மாறியது ,

” இன்னும் செத்துபோல “வெறுப்புடன் அவனை பார்த்தாள். அவளது வெறுப்பு கலந்த அக்னி பார்வை அவனது மனதை பொசுக்க, அவன் உடல் விறைத்தது.

தடித்த தன் கீழ உதடுகளை பற்களால் அழுத்தி மூடிய ஆதித்யா, சில நொடிகள் எதுவும் பேசாமல் மெளனமாக இருந்தவன். அவளது கரங்களை இன்னும் அழுத்தமாக பிடித்துக்கொண்டு,

” நான் இருக்கேன் மதி. என்னை நம்பு ” என்றான் .

” மாட்டேன். நா..நம்..பவே..மாட்டே..ன்.” உடனே எழுந்து கொண்டவள், தன்னிடம் இருந்த கத்தியை அவன் முகத்திற்கு எதிரே நீட்டி கடுங்கோபத்துடன் கத்தினாள்.

” மதி, கத்திய கீழ போடு. உனக்கு ஒன்னும் ஆகாது என்னை நம்பு ” அவளை அமைதி படுத்த முயற்சி செய்தான் ஆதித்யா .

” நா. நம்ப. மாட்டேன். நான் சாக போறேன். என்னை அவன் கொலை பண்ண போறான் ” வெறிபிடித்தது போல ஆக்ரோஷமாக கதறினாள் .

” மதி ” ஆதித்யா மதியை நெருங்க முயன்றான் .

“ஏய். போ. கிட்ட வராத என்னை அவன் கிட்ட கொண்டு போக தானே வந்த போ இங்க இருந்து” கத்தியை நீட்டி எச்சரித்த படி இன்னும் பின்னால் சென்றாள்.

” மதி நான் சொல்றதை கொஞ்சம் கேளு. நான் உன்னை காயப்படுத்த வரல ” மீண்டும் அவளை நெருங்கினான் .

“வராத யு ப்ளடி, வெளிய போடா” அகோரமாக கத்தியபடி, ஷாம்பூ பாட்டில் துவங்கி கண்ணில் பட்டத்தை எல்லாம் தூக்கி அவன் மீது தூக்கி அடித்து ரகளை செய்ய, தடுக்காமல் வாங்கிக்கொண்ட ஆதித்யா, ஒரு கணம் கூட மதியை விட்டு அகல வில்லை .

” வெளிய போ இல்லைனா, என்னை நானே குத்திக்குவேன் ” என தன்னை தானே காயப்படுத்திக்கொள்ள அவள் துணிந்த மறுநொடி, தன் இரும்பு கரங்களால் அவளை தன்னோடு இறுக்கி பிடித்துக்கொண்ட ஆதித்யா , அவளது கையில் இருக்கும் கத்தியை பிடுங்க முயற்சிக்க, அவளோ அவனிடம் இருந்து விடுபட போராடி கத்தி கதறினாள். ஆனால் அது முடியாது போகவும் ஆதித்யா மீதுள்ள கோபம் ,ஏமாற்றம் , துக்கம் , போதாக்குறைக்கு காயத்தால் ஏற்பட்ட வலி என அனைத்தும் ஒன்றாக சேர்ந்து கொள்ள, ஆத்திரத்தில் சிவந்த வதனத்துடன் ஆவேசமாக,

“ஏய்” என்று சீறியவள் தன் கையில் இருந்த கத்தியை ஆதியின் நோக்கி வீசியிருக்க, அது அவன் மார்பை குத்தி கீறியது .

” ஸ்ஸ். ” என்று கண்களை மூடித் திறந்த ஆதித்யாவுக்கு வலிக்கதான் செய்தது. ஆனாலும் காட்டிகொள்ளாதவன் அவள் கையில் இருந்த கத்தியை எப்படியோ அவளுக்கு சேதாரம் வராமல் வாங்கி கீழே எறிந்து விட,

அவ்வளவு தான் அடுத்த நொடியே,

” வேண்டாம் என்னை விட்டுடு ” என்ற மது கதறி அழுதபடி வேகமாக பின்னால் செல்ல, தவறுதலாக அவளது கரம் பட்டதில் ஷவரில் இருந்து நீர் கொட்ட துவங்க, பெண்ணவளோ இன்னும் பதறி விட்டாள்.

” மதி ரிலாக்ஸ் ஈஸி ஒன்னும் இல்லை “

 என்று அவளை ஆசுவாசப்படுத்திய ஆதித்யா, ஷவரை அணைக்க முனைந்த போது, பயத்தில் தன்னை நெருங்கியவனை தள்ளி விட்டவள்,

“போ” என்று கத்தியபடி கண்களை மூடிக்கொண்டு அழ,

“ஐயோ மதி” என்று கோபத்தில் பல்லை கடித்த ஆதித்யா, பின்பு அவள் நிலையை கண்டு தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன், பயத்தில் புலம்பிக்கொண்டிருந்தவளிடம்,

 ” நான் உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன் மதி” இயலாமையுடன் கூறினான் .

“நோ நான் சாக போறேன். அவங்க என்னை கொலை பண்ண போறாங்க” – அழுகை அதிகமானது. ஆதித்யாவுக்கு

 என்ன செய்வதென்றே புரியவில்லை .

” இனிமே இப்படி நடக்காது மதி” ஆதித்யாவின் குரல் சோர்ந்து ஒலித்தது.

” இல்லை இல்லை நான் செத்துருவேன் ” கண்களை இன்னும் அழுத்தமாக மூடிக்கொண்டு குளிர்ந்த நீரில் உடல் நடுங்க கூறினாள்.

” கடவுளே என்னை நம்புடி. உனக்கு ஒன்னும் ஆக விடமாட்டேன்”அவனது முயற்சிகள் பலன் அளிக்காமல் போனதும் கோபத்தில் கத்தினான் ஆதித்யா .

அவளோ விடமால் உளறிக் கொண்டே இருக்க, நேரம் ஆக ஆக அவள் உடல் வேறு இன்னும் அதிகமாக நடுங்க துவங்க, இப்படியே விட்டால் அவளுக்கு ஏதும் ஆகிவிட கூடும் என்று உணர்ந்தவனாக, மதியின் உதறல்கள் அத்தனையும் உதறித் தள்ளிவிட்டு உடனே அவளை பற்றி இழுத்து தன் மார்போடு அணைத்துக் கொண்டான் ஆதித்யா.

 மதி எவ்வளவு திமிரினாலும் தன்னை விட்டு விலகாதபடிக்கு இறுக்கமாக அணைத்துக் கொண்ட ஆதி, முதல் வேலையாக ஷவரை அணைத்தவன், நடுங்கும் அவளது முதுகை வருடிகொடுத்து,

” சாரி சாரி பேபி. நான் எல்லாத்தையும் சரி பண்ணிடுவேன், உனக்கு எதுவும் ஆக விட மாட்டேன் ” ஆசுவாசப்படுத்தினான்.

ஆனால் அவளோ ,

” என்னை விடு ” என்று பிதற்றிக்கொண்டு அவனிடம் இருந்து விடுபட பார்க்க, விடாப்பிடியாக அவளை தடுத்து தன் பிடிக்குள் கொண்டு வந்தான் ஆதித்யா .

” விடு. ” – வான் பிளக்க கத்தினாள்.

” ஷட் அப் ” – பதிலுக்கு கத்தியபடியே மதியின் விழிகளை நேருக்கு நேராக பார்த்த ஆதித்யா ,

” நீ மட்டும் தனியா இல்லை பேபி. நானும் உன் கூட இருக்கேன். இதை சரி பண்ணிடலாம்” – உறுதியாக கூறினான்.

” இல்லை… ” என்று கத்த போனவளின் வாயை தன் கரம் கொண்டு மூடியவன்,

” நம்புடி” வேதனையுடன் கூறினான் .

 மாட்டேன் என்பதாய் தலையை மட்டும் மறுப்பாக அசைத்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிய, அடுத்த கணமே மதியை அணைத்துக்கொண்டான் ஆதித்யா. இன்னும் அழுதாள்.

“காம் டவுன் காம் டவுன் மதி இனி இப்படி நடக்காது ” – அவள் தலையை ஆறுதலாய் வருடி கொடுத்தான் அவளது கண்ணீர் மேலும் அதிகரித்தது. அவனுக்குள் இருக்க வேண்டிய ஏதோ ஒன்று அவனை விட்டு நழுவ, மிகவும் பலவீனமாக உணர்ந்தான்.

தன்னிலை மறந்து சற்று நேரம் அவனது அணைப்பில் அடங்கிருந்தவள். சில நொடிகள் கழித்து எதோ ஒன்று தன் மனதை அழுத்த திடீரென்று அவனிடம் இருந்து விலகினாள். குளிரில் நடுங்கியபடி நின்றவளை கண்டவன், எதுவும் பேசாமல் குளியல் அறைக்குள் இருக்கும் கப்போர்டை திறந்து ஒரு துண்டை எடுத்து அவளது உடம்பில் சுற்றி விட்டு, இன்னொரு துண்டை எடுத்து அவளது கையில் கொடுத்து,

 ” ரொம்ப நேரம் ஈரத்துல நிக்காத. ” என்று கூறிவிட்டு வெளியே வந்தான்.

பின்பு சில நொடிகள் கழித்து பாத்ரூமின் கதவை தட்டியவன் அவள் கையில் மாற்று உடையை கொடுத்து,

” இது என்னுடையது தான், இன்னைக்கு இதை போட்டுக்கோ. நாளைக்கு உன்னை நான் வெளிய கூட்டிட்டு போறேன். உனக்கு வேண்டியதை வாங்கிக்கலாம்.. ” என்று அவள் முகம் பார்க்காமல் கூறியவன் அங்கிருந்து சென்றுவிட, மதியும் அவன் கொடுத்ததை மறுக்காமல் வாங்கிக்கொண்டாள் .

சோர்ந்து போய் இருந்த உடம்பில் காயங்களுடன் சேர்த்து ஆங்காங்கே கடுமையாக வலித்தது. அவளது மெலிந்த உடலுக்கு கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாத அவனது டீ ஷர்ட்டையும், ட்ராக் பேண்ட்டையும் அணிந்து கொண்டவளின் தளர்ந்த கால்கள் நடக்க கூட வலுவில்லாமல் பின்ன, மிகவும் சிரமப்பட்டு வெளியே வந்தவள் மெதுவாக வந்து கட்டிலில் அமர்ந்தாள்.

 கத்தி முடித்திருந்ததில் அவளது மனதில் உள்ள அழுத்தம் சற்று குறைந்திருக்க, அப்படியே கண்களை மூடியவளுக்கு அப்பொழுது பார்த்து, துரியன் தன்னை சுட வந்தது, தன்னை காயப்படுத்தியது, அதை பார்த்தும் ஆதித்யா தடுக்காமல் சிலை போல நின்றது என அனைத்து நினைவுகளும் அழையா விருந்தாளியாக, மீண்டும் அவள் நினைவில் தோன்ற பாறையை சுமந்து போல மதியின் மனம் கனத்தது.

எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம்!

அதை செய்தது மட்டுமல்லாமல். இப்பொழுது நம்மிடம் வந்து வேஷம் போட எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும் என்று அவள் உள்ளம் கோபத்தில் கொதித்துக்கொண்டிருக்க,

 ஈரத்தலையும் வெற்று மார்புமாக கருப்பு நிற ட்ராக் பேண்டை மற்றும் அணிந்து கொண்டு உள்ளே இருக்கும் வேறு ஒரு அறையில் இருந்து வெளியே வந்தான் ஆதித்யா .

அவனை கண்டதும் மது தன் தலையை வேறு பக்கம் திருப்பிக் கொள்ள , அதை கண்டு கொண்ட ஆதித்யா எதுவும் பேசாமல் தன் அறையில் இருக்கும் கப்போர்டை திறந்து முதலுதவி பெட்டியை எடுத்துக்கொண்டு மதியின் அருகில் வந்து அமர்ந்தவன், அதில் இருந்து மருந்தை எடுத்துக்கொண்டு அவளை பார்த்தான்.

அவளும் இப்பொழுது அவனை தான் பார்த்துக்கொண்டிருந்தாள். இருவரின் பார்வையையும் ஒன்றை ஒன்று பின்னிக்கொண்டது. ஆணவனின் பார்வையில் தெரிந்த மென்மை, அவளது காயத்தை வருட, அவன் தொடாமலே உடம்பில் ஒருவித சிலிர்ப்பை உணர்ந்தாள் பெண்ணவள்.

சில நொடிகளுக்கு முன்னால் அவன் மீது இருந்த கோபமெல்லாம் காற்றில் கரைந்து போக, அப்படியே உறைந்து விட்டாள்.

மெதுவாக நாடியை சற்று தூக்கி கழுத்தில் இருந்த காயத்திற்கு மருந்தை பூசினான், அப்பொழுது மதி வலியில் முனங்க, உடனே மருந்திடுவதை நிறுத்திய ஆதி,

 ” ரொம்ப வலிக்குதா ?? வேகமாக பண்ணிட்டேனா ” அக்கறையுடன் கேட்டான் .

உருகிருந்த அவளது மனம் அவன் கேட்ட கேள்வியில் சட்டென்று இறுக, பெண்ணவளோ கோபமாக அமர்ந்திருந்தாள் அப்பொழுது,

” என்னாச்சு ரொம்ப வலிக்குதா ??” அக்கறையுடன் வினவினான்.

” எப்படி உங்களாலா முடியுது. ??எல்லாம் பண்ணிட்டு , எதுவுமே நடக்காத மாதிரி, என் முன்னாடி உக்கார்ந்துக்கிட்டு, வலிக்குதான்னு

 கேட்க முடியுது. ??குற்ற உணர்ச்சியா இல்லை ?” ஆத்திரத்தில் படபடவென மூச்சு வாங்க பொறிந்து தள்ளினாள் மது.

” இன்னைக்கு மட்டும் இதை எத்தனை தடவை உன் கிட்ட சொன்னேன்னு தெரியலை. ஆனாலும் சொல்றேன். ஐயம் சாரி.எல்லாம் சரியாகிடும் மதி” வருத்தத்துடன் கூறினான் ஆதித்யா.

” வாவ் எல்லாம் சரியாகிடுமா ?? ஹா ” சிரித்தபடி தன் கைகளை தட்டினாள். இயலாமையுடன் அவளை பார்த்தான் .

” எதுக்கு என்னை மூணு தடவ காப்பாத்துனீங்க ஆதி.இப்படி என்னை கொடுமை படுத்தவா.??” கேட்கும்போதே அவளது விழிகளில் நீர் வழிந்தது . அவனால் பதில் சொல்ல முடியவில்லை. மௌனமாக தன் முன்னே அமர்ந்திருக்கும் ஆதித்யாவை ஒரு கணம் அழுத்தமாக பார்த்தவள்,

” நான் போகணும் ” இன்னும் அழுத்தமாக அவன் முகத்தை பார்த்தபடி கூறினாள் .

” எங்க? “

” என் வீட்டுக்கு ?”

” இப்போதைக்கு நீ எங்கையும் போக முடியாது, வெளில உனக்கு பாதுகாப்பு இல்லை “

” ஓ அப்போ இங்க இருக்கு ” நக்கலாக கேட்டாள். அவனது முகம் கோபத்தில் சிவந்தது. ஆனால் அதை புறக்கணித்தவள் ,

” நீங்க என்ன சொல்றது, நான் போறேன் , அவ்வளவு தான் “

 வெடுக்கென்று அவன் நெஞ்சில் கைவைத்து அவனை வேகமாக தள்ளியபடி எழுந்தாள். அப்பொழுது அவளது கரம் தவறுதலாய் அவன் நெஞ்சில் சற்று முன் அவள் ஏறப்படுத்திய காயத்தின் மீது பட்டுவிட,

“ஸ்ஸ்ஸ். ஆஆ ஆ ” வலியில் தன் தடித்த அழுத்தமான இதழை கடித்தவனின் முகம் ஜிவுஜிவு என்று சிவந்து விட, தனது நெஞ்சில் இருந்து ரத்தம் வந்த காயப்பட்ட பகுதியை அழுத்தி பிடித்து கொண்டான் .

அவன் கையில் தெரிந்த ரத்தத்தை கண்டு பதறிய மதி, வேகமாக அவனது கையை எடுத்துப் பார்க்க, அப்பொழுது தான் அவனது மார்பில் இருந்த காயத்தை பார்த்தாள், நான் செய்த காரியம் இப்பொழுது மெதுவாக அவளது நினைவிற்கு வர குற்றஉணர்வில் மிகவும் வருந்தியவளாக,

சட்டென்று அவன் அருகில் இன்னும் நெருங்கி வந்து அவன் நெஞ்சில் இருந்த காயத்தை தொட்டு பார்த்தாள். அவன் ஒரு வார்த்தை பேசவில்லை. இரும்பு மனிதன் போல, அவளையே வெறித்தபடி அமர்ந்திருந்தான். அவனது உணர்வற்ற பார்வை அவளை வெகுவாய் வருத்தியது .

” ப்ளட் வருது ஆதி” தன் கையில் இருக்கும் அவனது ரத்தத்தை பார்த்தபடி பதறியவள், உடனே அவனது காயத்தை சுத்தம் செய்து மருந்திட்டாள். அவனது காயம் அவளை வெகுவாய் பாதித்தது. துரோகம் செய்தவன் தான் ஆனாலும் அவனுக்காக அவள் மனம் தவித்தது. கண்கள் கலங்கியது. அவனது காயம் அவளுக்கு வலியை கொடுத்தது.

” ஆதி இதெல்லாம் வேண்டாம்.. என்னால முடியல. நான் இங்க இருக்க முடியாது ..நான் போகணும் ப்ளீஸ் என்னை விட்டுடுங்க இப்போவே போறேன் ஆதி. உங்களால என்னை புடிச்சு வைக்க முடியாது ” என்று அழுதபடி எழுந்தவளை ,

அவளது முன்னங்கையை பற்றி இழுத்து தன் மார்போடு அணைத்தவன் அவளது காதோரம் குனிந்து ,

” முடியாது வெளியில உன் பாதுகாப்புக்கு எந்த பிரச்சனையும் இல்லைன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் தான் என்னால உன்னை விட முடியும், அதுவரை நீ இங்க தான் இருக்கனும் ” என்றவனின் மூச்சு காற்று அவளது காதுமடலை தீண்ட., இதயத்தில் ஒருவித படபடப்பு பரவியது. சட்டென்று அவனிடம் இருந்து விலகியவள்,

” ஆதி என்னை நீங்க கஷ்டப்படுத்துறீங்க, அது உங்களுக்கு புரியலையா ” கண்களில் கண்ணீருடன் கேட்டாள். தன் தலையை அழுந்த கோதி தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொண்டவன் , அவளது விழிகளை பார்க்க மறுக்க, வலுக்கட்டாயமாக அவனது தாடையை பற்றி தன் முகம் பார்க்க வைத்தவள், தன் இடது பக்க கன்னத்தைக் காட்டி,

” இது என்னன்னு தெரியுதா, உங்க நண்பன் என்னை அடிக்கும் போது உங்க கண்ணுல ஒரு சின்ன வருத்தம் கூட இல்ல, நீங்க என் பாதுகாப்பை பத்தி பேசுறீங்களா? ஹான் ” என்று கேட்டவளுக்கு கண்ணீர் வழிந்து கொண்டே இருக்க, மிக மிக மென்மையாக அவளது கன்னத்தில் இருந்த காயத்தை தன் புறங்கையால் வருடியவன், இன்னும் மென்மையாக தன் இதழை அவளின் கன்னத்தில் ஒற்றி எடுத்து, “சாரி ” என்க,

“சாரி சொன்னா எல்லாம் சரியாகிடுமா? உங்களை எவ்வளவு நம்பினேன் ஏன் இப்படி பண்ணுனீங்க.” வாய்விட்டே கதறி அழுதவளின் வதனத்தை தன் இரு கைகளிலும் ஏந்தி கொண்டவன்,

“இனி இப்படி நடக்காது மதி! உன்னை அந்த மாதிரி நடத்திருக்க கூடாது. !எல்லாம் என் தப்பு தான்.! இனிமே உன்கிட்ட இங்க யாரும் இப்படி நடந்துக்க மாட்டாங்க. நடக்கவும் விடமாட்டேன். சோ அழாத மதி என்னால உன்னை இப்படி பார்க்க முடியல” அவளது விழிகளை பார்த்தபடியே கூறினான்.

“ஏன்” அவளும் அவன் விழிகளை பார்த்துக் கொண்டே வினவினாள்.

 அஞ்சன விழிகளும் அரிமா அவனின் கனல்விழிகளும் ஒன்றை ஒன்று முத்தமிட்ட தருணம், ஆணவனின் இறுக்கமான இதழ்கள் பெண்ணவளின் மெல்லிய இதழ்களை அணைத்து கொண்டது.

ஆழமாக!

அழுத்தமாக!

ஆத்மார்த்தமாக!

மது விலக்கவில்லை மாறாக அவளது கண்களில் இருந்து கோடாக கண்ணீர் இறங்க, அவளது காரங்களோ உயர்ந்து அவனது சிகைக்குள் நுழைந்து கொள்ள, இங்கே முத்தம் கொடுக்கப்படவில்லை! பரிமாறபட்டது!

காமத்தில் சேராத அவர்களது ஆழ்ந்த இதழ் அணைப்பு இரு உள்ளங்களின் ஆத்மார்த்த காதலை வெளிப்படுத்த, நீண்ட நேர இதழ் அணைப்பின் முடிவில், முதலில் விலகிய ஆதித்யா, தனக்குள் ஆர்ப்பரிக்கும் உணர்வுகளை மிகவும் சிரமப்பட்டு தனது கட்டுக்குள் கொண்டு வந்தவன், இன்னும் உணர்வுகளின் பிடியில் சிக்கிக்கொண்டு வெளிவர முடியாது தலை தாழ்த்தி அமர்ந்திருந்த மதுவை பார்த்தான்.

 பார்த்ததுமே பெண்ணவளின் நிலையை புரிந்து கொண்டவன், மதியை மேலும் சங்கடப்படுத்த விரும்பாது, மிகவும் இயல்பாக அவளை அணுகினான்.

அதன்படி முடிந்தளவு அவளது அனைத்து காயங்களுக்கும் மருந்திட்டவன், அவளுக்கு வலி மாத்திரை ஒன்றையும் கொடுத்தான்.

பின்பு மதுவின்  ஈர கூந்தலை டிரையர் மூலம் காய வைத்தவன்,

” குட் நைட்” என்று அவளது முகத்தை கூட பார்க்காது கூறிய ஆதி மெத்தையில் இருந்து எழுந்து கொள்ள, அவனது கரத்தை மதுமதி இப்பொழுது பிடித்திருந்தாள்.

 கண்களை மூடி திறந்த ஆதி, இப்பொழுது மதுவின் முகத்தை பார்க்க, துடிக்கும் இதழ்களுடன் மருண்ட விழிகள் அழ தயாராக அவனைப் தான் பார்த்தாள் பெண்ணவள்.

அவளது விழிகளில் தெரிந்த பயம், தவிப்பு, கவலை என அனைத்தையும் உள்வாங்கிய ஆதித்யா, மெதுவாக அவளது தோள்களைப் பற்றி மெத்தையில் படுக்க வைத்தவன், அவளது நிறைந்திருந்த இரு விழிகளிலும் மாறி மாறி முத்தமிட்டு விழவிருந்த கண்ணீரை தன் இதழ்களுக்குள் இழுத்துக் கொண்டான்.

பின்பு, “தூங்கு டா எதையும் யோசிக்காத.” என்று கூறி பெண்ணவளின் நெற்றியில் இதழ் பதித்து, நான் இருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்லி, மெதுவாக அவளது கேசத்தை தடவி கொடுக்க, மருந்தின் வீரியத்தில் தன் கண்களை மூடினாள் மதுமதி.

 

காதல் சொல்வான்!!

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!