அந்த டைனிங் டேபிள் சம்பவத்திற்கு பிறகு கூட்டுக்குள் அடங்கியிருக்கும் சிறு நத்தை போல தத்தை இவளும் தனக்குள் ஒடுங்கியே இருந்தாள்.
ஏனோ வீராவிடம் மட்டும் சகஜமாக பேசுபவள் அவனை தவிர மற்ற அனைவரையும் தவிர்த்தே வந்தாள். அதிலும் முக்கியமாக ஆதித்யாவை கண்டாலே ஓடி ஒளிந்து கொள்வாள் மதுமதி.
ஒரு வாரம் கழிந்தும் ஏனோ அவளால் அந்த இறுக்கத்தில் இருந்து சகஜகமான சூழ்நிலைக்கு வர முடியவில்லை. ஆனால் ஆதித்யா அவளை விடவில்லை .
மதிக்கான ஆடைகளை கூட நேரம் ஒதுக்கி தானே தேர்வு செய்து வாங்கி கொடுத்தான். அவள் வேண்டாம் என்று மறுத்தாலும் உணவு உண்ணும் பொழுது அவளையும் தன்னோடு உணவருந்த வைத்தான். ஆக முடிந்தளவு அவளை தன்னோடு நெருக்கமாக பிணைந்து கொள்வதற்காக தனக்கு கிடைக்கும் சொற்ப நேரத்தையும் அவளுக்காக செலவிட்டான் ஆதித்யா.
ஆனால் அவளுக்கு தான் கூண்டுக்குள் மாட்டிக்கொண்டது போல மூச்சு முட்டியது.
மதுவால் அங்கே இயல்பாகவே இருக்க முடியவில்லை .
தன் வீட்டின் உள்ளவர்களை எண்ணி மிகவும் வேதனை பட்டாள். ப்ரீத்தா அர்ஜுன் , ஜுவாலா , இளமாறன் மற்றும் சந்தியாவின் நினைப்பு அவளை மிகவும் வாட்ட, கண்களில் இருந்து கண்ணீர் கேட்காமலே சுரந்தது.
தன் குடும்பத்தையும் தன் நிலையையும் எண்ணும் பொழுதெல்லாம் அழுது விடுபவள், இதோ இந்த நொடி கூட அழுதுகொண்டு இருக்க, அப்பொழுது பார்த்து அவளுக்கு யாரோ கதவை தட்டும் ஓசை கேட்டது.
” வந்துட்டானா என்ன புதுசா கதவை எல்லாம் தட்றான். டின்னருக்கு டைம் ஆகிடுச்சா என்ன?? பசிக்கவே இல்லை சொன்னா கேட்கவும் மாட்டான் “என அலுத்து கொண்டவள். புறங்கையால் கண்ணீரை துடைத்துவிட்டு, கதவைப் பார்த்தவள்,
“கதவை பூட்டிட்டு உள்ள என்ன பண்ணிட்டு இருக்க ” சீறியபடி உள்ளே நுழைந்தான் ஆதித்யா.
” தூங்கிட்டேன் “
” பூட்டாம தூங்க வேண்டியது தானே “
‘ ஹ்ம் சந்தேகத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. அப்படியே தப்பிக்க விட்டுட்டாலும் தான் ‘ மனதிற்குள் திட்டியவள் .
” சாரி ” மெல்ல முணுமுணுத்தாள் .
” எனக்கு உன் மேல சந்தேகம் எல்லாம் இல்லை. உன் காயம் வேற இன்னும் சரியாகல போதாக்குறைக்கு நீ ரொம்ப வீக்கா வேற இருக்க, கதவு பூட்டிக்கிட்டு ஒரு வேளை நீ மயங்கி விழுந்துட்டன்னா. உள்ள உனக்கு என்ன நடக்குதுன்னு எனக்கு எப்படி தெரியும். அதனால தான் கதவை பூட்டாதன்னு சொல்றேன் ” மதியின் மனதை படித்தவன் தனது செயலுக்கு விளக்கம் கொடுத்தான் .
சட்டென்று நிமிர்ந்து அவனது கண்களை பார்த்தவளுக்கு அவன் கண்களில் உண்மையான அக்கறை தான் தெரிந்தது. ஆனாலும் ஏனோ நம்ப மனம் மறுக்க, அவன் காட்டும் கரிசனம் கூட அவளுக்கு ஐயத்தை தான் கொடுத்தது .
” ஏன் டல்லா இருக்க உடம்புக்கு ஏதும் பண்ணுதா ” அக்கறையாக தான் கேட்டான். ஆனாலும் அவனது குரல் அவளது மனதை தொடவில்லை இல்லை இல்லை தொட அனுமதிக்கவில்லை, அந்த அளவுக்கு தன் மனதை இறுக்கமாக வைத்துக் கொண்டாள் பெண்ணவள்.
” இல்லை நல்லா தான் இருக்கேன் ” ஒட்டுதல் இல்லாது வெளிவந்தன வார்த்தைகள்.
” இன்னும் உனக்கு ட்ரெஸிங் பண்ண தாரா வரலையா? “
” இல்லை ” என்றாள் .
” சரி நீ ஃப்ரெஷ் ஆகிட்டு வா ” என்றவன். உடனே வீராவுக்கு அழைப்பு விடுத்தான்.
ஆதி பேசி முடித்த அடுத்த ஐந்து நிமிடங்களில் கதவை தட்டும் சத்தம் கேட்க, அப்பொழுது பார்த்து குளியல் அறையில் இருந்து முகத்தை துடைத்த படி வெளியே வந்த மதி ,
” நீங்க இருங்க நான் யாருன்னு பார்க்கிறேன் ” என கூறி கதவை திறந்து யார் என்று பார்த்தாள்.
தாராதான் வந்திருந்தாள், மதியோ வாங்க தாரா என்று சொல்வதற்குள்,
” என்ன உள்ள வர வேண்டாமா?? வாசலை அடச்சிட்டு நிக்கிற ” என முறைத்தபடி உள்ளே வந்தாள் தாரா.
ஒரு வாரமாக இதே சிடுசிடுப்பை பார்த்து பழகியதால் தாராவின் செயல் மதுவை பெரிதாக பாதிக்காது போக, மது மௌனமாக அவளைக் கடந்து விட பழகிக் கொண்டாள்,
“என்ன பார்த்துட்டு இருக்க உக்காரு ” என அதட்டிய தாரா வேகமாக காயத்தில் இருந்த பழைய கட்டை பிரிக்க வலி தாங்காமல் மதுமதி, ‘ஆ ‘ என்று கத்திவிட,
அதுவரை தாராவின் நடவடிக்கைகளை தன் பற்களை கடித்த படி, பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு பார்த்து கொண்டிருந்த ஆதியின் பொறுமை அனைத்தும் காற்றில் பறந்து போக அடுத்த நொடி,
” தாரா ” என அந்த அறையே அதிரும் படி அவன் அழைத்ததில் அதிர்ந்து போய் நிமிர்ந்து பார்த்த தாராவின் விழிகள் ஆதித்யாவை கண்டத்தில் பயத்தில் விரிந்தது.
ஆதித்யா மதியின் அறையில் இருப்பதை அறிந்திடாத தாராவுக்கு அவனை அங்கே கண்டதும் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
குத்தீட்டி போல அவளை துளைத்த அவனது பார்வையை கண்டு அவளுக்குள் நடுக்கம் பிறக்க, உடம்பெல்லாம் சில்லிட்டு போய்விட, மிரண்டு போய் நின்றாள் தாரா.
” என்ன பண்ணிட்டு இருக்க ” எரிந்து விழுந்தான் .
” என்னாச்சு ஆதி ” ஒன்றும் தெரியாதது போல மெல்ல கேட்டாள் தாரா.
உடனே தன் கரம் உயர்த்தி தடுத்தவன் ,” கால் மீ சார் ” – என்கிட்ட உனக்கு எந்த உரிமையும் இல்லை என்பதை மூன்றே வார்த்தையில் உணர்த்தினான் ஆதித்யா.
” ஆதி ப்ளீஸ். ” என அவனது சீற்றம் கண்டு பதறிய மதி எங்கே கோபத்தில் தாராவை ஏதும் செய்து விடுவானோ என்று அனிச்சையாக ஆதித்யா கரங்களை பற்றினாள்.
அடுத்த நொடியே அவனது முகத்தில் இருந்த கோபம் எல்லாம் மந்திரம் போட்டது போல மறைந்துவிட, அதை கண்ட தாராவுக்கு தான் ஆத்திரமாக இருந்தது .
‘ எத்தனை வருஷமா ஜித்தேரியில் இருக்கிறேன்.எனக்கில்லா உரிமை இந்த துரோகிக்கு மட்டும் இருக்கிறதா? அப்படி எந்த விதத்தில் இவளை விட நான் குறைந்துவிட்டேன்’ என்று மனதளவில் எரிச்சல் கொண்ட தாராவின் முகம் அவமானத்தில் சிவந்துவிட்டது .
” யஸ் சார் ” அழுகையை அடக்கிய தாராவின் குரல் தழதழத்தது.
” மதிக்கு வலிக்க கூடாது புரியுதா ” உள்ளடக்கிய கோபத்தோடு எச்சரித்தான்.
” யஸ் சார் ” தலையசைத்தவள் மதிக்கு கட்டை பிரித்து காயத்தை பரிசோதித்தாள்.
” எல்லாம் ஓகே தானே ” மதியின் முகத்தை பார்த்தபடியே கேட்டான் ஆதித்யா.
” ஆமா சார், இனிமே கட்டு போடணும்ன்னு அவசியம் இல்லை. மருந்து மட்டும் போட்டா போதும். காயம் ஆறிடும் ” என சன்னமான குரலில் கூறிய தாரா , மருந்தை தன் கையில் எடுக்கவும்,
” வேண்டாம் ! நான் பண்ணிக்கிறேன் நீ கிளம்பு ” என குரலை உயர்த்தாமல் அழுத்தமாக கூறினான் ஆதித்யா .
” ஓகே சார் ” கனனன்று வந்த கோபத்தை தனக்குள்ளே அடக்கிய தாரா வேறு எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றாள்.
தாரா விட்டுச்சென்ற முதலுதவி பெட்டியை திறந்தவன் அதில் இருந்த பஞ்சையும் ஆன்டிசெப்டிக் மருந்தையும் எடுத்து வந்து மதியின் அருகில் அமர,இருவரின் பார்வையும் ஒன்றோடு ஒன்றாய் பின்னிக்கொண்டன.
ஆதித்யாவின் பார்வையில் தெரிந்த நெருக்கம் மதுமதியின் மனதிற்குள் சிலிர்ப்பை ஏற்படுத்த, அதேநேரம் அவள் பார்வையில் தெரிந்த வலி அவனது மனதை பிசைந்தது.
‘வேண்டாம் மது மறுபடியும் ஏமாற போறியா ‘ என்று மதுவின் மனமோ அவளை எச்சரிக்க, அவனது பார்வையை மேலும் சந்திக்க விரும்பாதவள் தன் தலையை தாழ்த்தி கொண்டாள்.
” தாரா விஷயத்தை நீ ஏன் என் கிட்ட சொல்லல ? வீரா கிட்ட சொன்னதை என்கிட்ட சொல்லிருக்கலாமே ” ஆதித்யாவின் கரகரத்த குரலில் தெரிந்த வருத்தம் அவளது மனதை தொட்டது.
சட்டென்று நிமிர்ந்த மதுமதியின் விழிகள் ஆச்ச்சர்யத்தில் விரிந்தது. ஆதித்யா சக்கரவர்த்தி ! அரக்கனையே கொல்லும் அரக்கன் ! எதற்கும் அஞ்சாதவன் தன்னை எண்ணி வருத்தப்படுகிறானா ! மதியால் நம்ப முடியவில்லை. ஆனால் அவன் பார்வை, அதில் சட்டென்று தோன்றி மறைந்த வருத்தம், அதை கண்ட பிறகும் அவளால் நம்பாமல் இருக்க முடியவில்லை .
” நானா வீரா கிட்ட எதுவும் சொல்லல. ரெண்டு மூணு தடவை அவர் தான் பார்த்துட்டாரு.. ” நிமிர்ந்து அவனது முகத்தை பார்த்து கூறினாள் .
சட்டென்று அவன் முகத்தில் ஒருவித புன்னகை தோன்றியது. ரசிக்கும் படியான புன்னகை தான். அவளும் ரசித்தாள் தான் ஆனால் மனதிற்குள் மட்டும்.
” உனக்கு வேண்டாம்ன்னா. வேற யாரையும் அப்பாயிண்ட் பண்ணவா ? ” காயப்பட்ட இடத்தை அவளுக்கு வலிக்காமல் சுத்தம் செய்தபடி கேட்டான் .
‘ ஏதோ இவரு ரொம்ப சாஃப்ட் மாதிரி. மாத்தணும்ன்னா உன்னை தான் டா மாத்தணும் ‘ தனக்குள் முணுமுணுத்தாள்.
” என்ன சென்ன ?” என்று அவன் கேட்டதும் பதறியவள்,
” தாராவே இருக்கட்டும்ன்னு சொன்னேன் ” என சமாளித்தாள்.
“தென் ஓகே எல்லாம் உன் இஷ்டம் தான்.உனக்கு எந்த பிரச்சனையும் இல்லைன்னா தாராவே இருக்கட்டும். உன் விருப்பத்தை மீறி இங்க வேற எதுவும் நடக்காது ” அவளது முகபாவத்தை ரசிப்பதற்காக , அடக்கப்பட்ட சிரிப்புடன் வேண்டுமென்றே கூறினான் .
‘ திமிரு புடிச்சவன் வேணும்னே வெறுப்பேத்துற மாதிரி பேசுறான் ‘ என்று நினைத்துப்பார்த்தபடி நிமிர்ந்து பார்த்தவள் அதிர்ந்தாள் .
ஆதித்யாவின் விழிகள் அவளை அழுத்தமாக பார்த்து கொண்டிருக்க,
” திமிரு புடிச்சவனா நான் ! ” வேண்டுமென்றே, தான் கோபமாக இருப்பது போல காட்டிக்கொண்டு வினவினான்.
‘ஐயோ சத்தமா சொல்லிட்டேனா இப்போ என்ன’ கொஞ்சம் பயமாக தான் இருந்தது.
கட்டிலில் இருந்து எழுந்து கொண்டவள், “ம்ஹூம்” மருண்ட விழிகளுடன் இல்லை என்பதாய் மறுப்பாக தலையசைத்தாள்.
“ஓ அப்போ நான் யாரு” தானும் படுக்கையில் இருந்து எழுந்து கொண்டவன், அவள் அருகே வந்து, மிகவும் நிதானமாக வினவினான்.
” “, அவளோ பதில் சொல்லாது மௌனமாக நிற்க, இன்னும் நெருங்கி வந்த ஆதித்யா,
” ரொம்ப மோசமான அரக்கன் ராட்சசன், இதெல்லாம் தானே நான்” அவளது விழிகளை பார்த்துக் கொண்டே கேட்க்க, என்ன நினைத்தாளோ வேகமாக இல்லை என்பது போல் தலையசைத்தவள்,
” அவ்ளோ எல்லாம் இல்ல, கொஞ்சம் ” என்று தன் விழிகளை சுருக்கி இரு விரல்களையும் சேர்த்து சிறியது என்பது போல செய்கையில் காட்டியவள், ” நல்லவரு, எனக்கு மட்டும் ரொம்ப கெட்டவரு” என்றாள் சின்ன குரலில்.
அதைக் கேட்டு மெலிதாக புன்னகைத்தவன்,
” அப்போ உனக்கு மட்டும் ரொம்ப நல்லவனா மாறிடவா” என்று கேட்க, நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள் கலங்கிய கண்களுடன் “முடியுமா” என்றாள் எதிர்பார்ப்புடன்.
” மாறனுமா?” இருவரது மூச்சு காற்றுகளும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ள, நூல் அளவு இடைவெளியில் நின்றுக்கொண்டு வினவினான்.
“ம்ம்” ஆசையுடன் கூறினாள்.
” அப்போ எனக்காக காத்திருப்பியா?” ஆணவனின் கண்களில் அத்தனை எதிர்பார்ப்பு தெரிய அதை உள்வாங்கிக் கொண்டவளோ,
“காத்திருக்கணுமா?” என்று கேட்ட நொடி ஆதித்யா எல்லையில்லா மகிழ்ச்சியடைய, இருவருக்குள்ளும் இடைவெளி இல்லா நெருக்கம் அதிகரித்தது.
அவனது இடக்கரத்தின் விரல்களோ அவளது விரல்களுடன் இறுக்கமாக பிணைக்கப்பட, அவனின் மற்றொரு கரமோ, அவளின் கன்னத்தை மிருதுவாக வருடிக் கொண்டிருந்தது.
பெண்ணவளோ ‘ காத்திருக்கணுமா’ என்று ஒரே கேள்வியில் தன் பதிலையும் சேர்த்து கூறியிருக்க, ஆணவனோ சொல்லை விட்டுவிட்டு செயலில் இறங்கினான்.
ஆதித்யா தன் விரல்களோடு அவன் விரல்களை பிணைத்துக் கொண்ட பொழுதே, அவனுக்கு அனுமதி அளிக்கும் விதமாக அவள் தன் கண்களை மூடிக்கொள்ள, தன் மீது அவள் கொண்ட காதல் இன்னும் அப்படியே தான் இருக்கிறது, தன்னைப் போலவே தான் அவளும் உள்ளுக்குள்ளே என் காதலுக்காக ஏங்கிக் கொண்டிருந்திருக்கிறாள் என்கிற எண்ணமே ஆணவனை இன்னும் பரவசமடைய செய்திருக்க, இப்பொழுது அவன் தன்னவளின் இதழை நோக்கி குனிந்து முத்தமிட்டான்.
ஆம் முத்தமிட்டான்!! அவள் உயிரை குடித்துவிடுவது போல ஆழமாக முத்தமிட்டான்!! அவளிடம் எதையோ உணர்த்த வேண்டும் என்கின்ற துடிப்புடன் அழுத்தமாக முத்தமிட்டான்!! நின்று கொண்டிருந்தவள் எப்பொழுது அவன் கைகளில் தவிழ்ந்தாள், பின்பு எப்பொழுது மஞ்சத்தில் தஞ்சமடைந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை, வெகு நேரம் கண்களை மூடி படுத்திருந்தவள், தன்னவனின் தீண்டல்கள் இப்பொழுது காணாமல் போகவே மெதுவாக கண் விழித்து, தன்னவனை தேடினாள்.
ஆனால் அவளின் அவனோ இமைக்க மறந்து தன்னவளையே பார்த்துக் கொண்டிருக்க, தன்னவனின் பார்வையின் வீச்சை தாங்க முடியாது திணறிப் போனவளோ, உள்ளம் முழுவதும் காதலையும் ஆசையையும் வைத்துக்கொண்டு தள்ளி நிற்கும் அவனது செய்கைக்கான காரணம் புரியாது, ஒருவித தவிப்புடன் அவனைப் பார்க்க, தன்னவளின் தவிப்பை புரிந்து கொண்டவனோ,
தன்னவளின் பின்னந்தலை தன் நெஞ்சோடு பதியும்படி அவள் பின்னால் வந்து நெருங்கி அமர்ந்தவன், அவள் காதோரம் குனிந்து,
“காதலும் கூடலும் கதைக்கு வேணும்ன்னா அழகா இருக்கலாம் ஆனா நிஜத்துல?” என்ற கேள்வியோடு
நிறுத்தி விட, பக்கவாட்டாக திரும்பி அவன் விழிகளை பார்த்த மதியோ, “நிஜத்துல?” அதே கேள்வியை அவனிடமே திருப்பி கேட்டாள்.
சிறு பெண்ணல்லவா அவளால் அவன் கேள்வியில் இருந்த அர்த்தத்தையும் அறிந்து கொள்ள முடியவில்லை, அவன் விலகலையும் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்த நிமிடம் உணர்வு குவியலுக்குள் சிக்கிக் கொண்டு வெளி வர முடியாது தவித்துக் கொண்டிருந்தவளின் விழிகள் முழுவதிலும்,
எங்கே அவனுக்கு தன்னை பிடிக்கவில்லையோ என்கிற ஏமாற்றமும், அவன் நெருங்கியதும் உருகி குலைந்த தன்னை தவறாக எண்ணி விட்டானோ என்கிற பயமும் மட்டுமே தெரிய, புன்னகையுடன் அவள் விழிகளை ஏறிட்டவன்,
“மதி என்னோட மகாராணி நீ, உன்னை எப்போவுமே அப்டி தான் ட்ரீட் பண்ண நினைக்கிறேன். சகல மரியாதையோட என் வாழ்க்கைக்குள்ள உன்னை கொண்டு வரணும்னு நினைக்கிறேன்.” என்று கூறி அவளது நெற்றியோடு தன் நெற்றியை முட்டிக்கொள்ள, சஞ்சலங்கள் நீங்கி தெளிவான மனதுடன் அவளும் புன்னகைத்து கொண்டாள்.
திறந்திருந்த ஜன்னல் வழியே தென்றல் காற்று அவர்களை தீண்டி போக, ஆதித்யா அவளை பின்னால் இருந்து அணைத்திருக்க, அவளோ அவன் மார்பில் தன் பின்னந்தலை பதிய படுத்திருந்தாள்.
இதே நிலையில் வெகு நேரம் அமர்ந்திருந்தவர்கள் எதுவுமே பேசவில்லை, வார்த்தையால் சொல்லிக் கொண்டே இருப்பதும், முத்தமிட்டு கொண்டே இருப்பதும் மட்டும் காதல் அல்லவே, இதோ எல்லை தாண்டாது கண்ணியம் காப்பதும் காதலில் ஒரு வகை தான் என்பதை ஆதித்யா காட்டியிருக்க, இலக்கணம் மீறா அவனது ஆண்மையில் பெண்மை இன்னும் உருகியது.
இதுதான் ஆதித்யா பெண்ணவளை எவ்வளவு வருத்தப்பட வைக்கிறானோ, அதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு அவளை காதலிக்கவும் வைத்து விடுகிறான்.
ஆதித்யா மீது மதுவுக்கு இப்பொழுதும் நிறைய கோபம் உண்டு, வருத்தம் உண்டு, துரியன் விடயத்தில் அவனிடம் கேட்க வேண்டிய கேள்விகள் பல உண்டு, ஆனாலும் அவன் மீது அவள் கொண்டுள்ள காதல் இது அனைத்தையும் தாண்டி அவள் உள்ளத்தில் ஆழமாக வேர் விட்டிருக்க, அந்த நொடி அனைத்தையும் ஓரம் தள்ளியவள், அவன் கொடுக்கும் காதலை மட்டும் இன்பமாக அனுபவித்துக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது பார்த்து ஆதித்யாவின் அலைபேசி சிணுங்க, எடுத்துப் பேசியவன், இதோ வருவதாக கூறிவிட்டு மதுவை பார்த்தான்.
அவளோ உடனே போக வேண்டுமா எனும் ஏக்கத்தோடு அவனையே பார்த்துக் கொண்டிருக்க,
” இப்படியே ரூம்குள்ள அடஞ்சி கிடக்கணும்ன்னு அவசியம் இல்லை, கார்டன் இருக்கு, லைப்ரரி இருக்கு. கொஞ்சம் பிரீயா இரு ” என்ற ஆதித்யாவிடம், “ம்ம்” என்ற மதிக்கு அவனது கண பொழுது பிரிவை கூட தாங்க முடியாது கண்களில் நீர் கோர்த்து விட, விழுவதற்காக விழியிலே காத்திருந்த அவளது கண்ணீரை கீழே விழுவதற்குள் துடைத்தவன், அவளின் கன்னத்தில் தென்றலில் தீண்டல் போல மெல்லிய முத்தம் ஒன்றை பதித்து, அவள் ஆச்சரியத்துடன் தன்னை பார்க்கவும்,
” என்ன அப்படி பாக்குற அதெல்லாம் தான் வேண்டாம்ன்னு சொன்னேன் மத்ததெல்லாம் உண்டு. நான் எவ்வளவு சாஃப்ட்ன்னு உனக்கு காட்ட வேண்டாம் !. சோ ரெடியா இரு. இனிமே அடிக்கடி காட்றேன் ” என்றவன் விஷமமாய் புன்னகைக்க, திகைப்புடன் அவனைப் பார்த்த மதுமதி, ” ஆக மைண்ட் வாய்ஸ்ன்னு நினைச்சு எல்லாத்தையும் சொல்லிட்டேனா அச்சோ “, என்க, அவளைத் திரும்பிப் பார்த்து சத்தமாக சிரித்துவிட்டு வெளியேறினான் ஆதித்யா.
@@@@@@@@@@
ஆதித்யா சக்கரவர்த்தியின் அலுவலக அறையில் ,
” சொல்லு தாரா என்ன விஷயம் ” கணினியில் பதிந்திருந்த தன் பார்வையை அகற்றாமல் கேட்டான் .
” நான் இனி ஹாஸ்ப்பிட்டல் போகலாமா”
” நான் உன்கிட்ட என்ன சொன்னேன் “
பல்லை கடித்தான் ஆதித்யா .
” மது உடம்பு சரியாகுற வரைக்கும் கூட இருக்க சொன்னீங்க “
” தென் “
” இப்போ அவளுக்கு தான் காயம் ஓரளவு சரியாகிடுச்சே ” தயக்கத்துடன் கேட்டாள் .
” காயம் முழுசா சரியாகுற வரைக்கும் நீ அவ கூட தான் இருக்கனும். அவளை நல்லா பார்த்துக்கோ. நான் சொல்ற வரைக்கும் நீ அவ கூட தான் இருக்கனும். இட்ஸ் மை ஆர்டர் ” என கத்தரித்து பேசியவன், சரி என்று கூறிவிட்டு செல்லவிருந்த தாராவை நிறுத்தி,
“இனிமே அவ கிட்ட ரூடா நடந்துக்கிட்ட இப்படி பொறுமையா பேசிட்டு இருக்க மாட்டேன் ?” கடுமையுடன் எச்சரித்தான்.
“சாரி சார் இனிமே அப்படி பண்ண மாட்டேன் ” தாராவின் குரல் உள்ளே சென்றது.
“ம்ம் இதுவே கடைசி முறையா இருக்கட்டும் ” என்று கூறிவிட்டு அவளிடம் முகம் கொடுக்காமல் கணினியில் மீண்டும் கவனமானான் .
அப்பொழுது தாரா சென்றதும் உள்ளே வந்த நாகா ,
” ஆதி கிட்ட தட்ட ஒருவாரமா கேட்டு பார்த்துட்டோம், வாய திறக்க மாட்டிக்கிறான். இனிமே தாங்குவான்னு தோனலை ” என்றான் .
” சரி லாஸ்ட் சான்ஸ். சொல்லலைன்னா முடிச்சிடலாம் ” என்றவன் நாகாவுடன் பேஸ்மெண்ட் அறைக்குள் நுழைந்தான்.
ஆதித்யா வந்ததும் அவனிடம் வந்த வீரா ,
” உடனே ட்ரீட்மெண்ட் குடுக்கலைன்னா உயிர் பிழைக்கிறது கஷ்டம் தான் ஆதி” என கூறி மருத்துவரின் சான்றிதழை அவனிடம் நீட்டினான் .
அதை வாங்கி படித்த ஆதித்யா மீண்டும் அதை அவனிடமே கொடுத்து விட்டு, தலை தொங்கிய நிலையில் நாற்காலியில் அமர்ந்திருந்த மஹேந்திரனின் அருகில் வந்தான் .
கை கால்கள் பிணைக்கப்பட்டிருக்க கிழிந்த நாராக கிடந்தான் அவன்.
அப்பொழுது அவனது தலை முடியை ஆவேசமாக பிடித்து தொங்கிக்கிடந்த அவனது முகத்தை, அவன் வழியில் அலற அலற அழுந்த பற்றி நிமிர்த்திய ஆதித்யா ,
” என்னை பாரு மஹேந்திரன் ” புயலை உள்ளடக்கிய குரலில் அழைத்தான். மிகவும் சிரமப்பட்டு தன் கண்களை திறந்தவன் ஆதித்யாவை மிரட்சியுடன் பார்த்தான் .
” என்னை விட்ருங்க பாய் தெரியாம பண்ணிட்டேன் ” கெஞ்சினான் .
“தெரியாம பண்றதுக்கு நீ என்ன குழந்தையா ஹான்??எங்க அந்த கமிஷனர்??” அவனது காயம் பட்ட தோள்களை இறுக்கமாக பிடித்து உலுக்கினான் ஆதித்யா .
” தெரியாது பாய் ” அவனது அலறல் ஒலி, அறையெங்கும் எதிரொலித்தது .
” ட்ரீட்மெண்ட் குடுத்தாதான் நீ உயிரோட இருப்ப.உனக்கு கடைசியா ஒரு வாய்ப்பு தரேன்… உயிர் மேல ஆசை இருந்தா உண்மைய சொல்லு ?? ” என ஆதித்யாவுக்குள் இருக்கும் அசுரன் மஹேந்திரனை அச்சுறுத்தினான்.
” மன்னிச்சிருங்க பாய். என்னை விட்ருங்க எனக்கு குழந்தைங்க இருக்காங்க. குடும்பம் இருக்கு ” சொன்னால் கமிஷனர் விட்டு வைக்க மாட்டார், சொல்லவில்லை என்றால் இவர்கள் விடமாட்டார்கள் என்கிற நிலையில் செய்வதறியாது மகேந்திரன் திணறினார்.
” மன்னிப்பு தானே கொடுத்துட்டா போச்சு. அவன் இப்போ எங்க இருக்கான்னு மட்டும் சொல்லு பத்திரமா நானே உன்னை அனுப்பி வைக்கிறேன் ” என்றான் ஆதித்யா .
மகேந்திரன் மௌனமாக இருக்கவும், “சொல்லு ” தன் பிடியின் அழுத்தத்தை அதிகரித்தான் ஆதித்யா.
“ஆ ஆ சொல்லிடுறேன் “என வழியில் துடித்தவன் , இதற்கு மேல் விட்டால் உயிருக்கு ஆபத்து என்னும் நிலையில்,
” அவர் மச்சானுக்கு ஒரு கெஸ்ட் ஹவுஸ் இருக்கு அங்க தான். ” அவன் சொல்லி முடிக்கும் முன்பே. ஆதித்யாவின் பிஸ்டலில் இருந்து வந்த தொடர் தோட்டாக்கள் மஹேந்திரனின் நெஞ்சில் நான்கு முறை மாறி மாறி பாய்ந்தது .
சற்று முன் அந்த மஹேந்திரனை வெறித்தனமாக வதைத்த, ரத்த கறை படிந்த தனது கரங்களைப் பார்த்த ஆதித்யாவுக்கு, இப்பொழுது வெறி அடங்கியதும் என்னவோ போல் இருந்தது.
‘ எனக்கும் குடும்பம் இருக்கு. குழந்தைங்க இருக்காங்க ‘ என்ற அவனது குரல் ஆதித்யாவின் செவியில் இப்பொழுதும் கேட்டுக்கொண்டே இருந்தது.
சில சமயம் இப்படி பட்ட அழுத்தத்தை அவன் உணரும் போது,
” என்ன வாழ்க்கைடா இது ” என்று நினைத்திருக்கிறான். அப்படி தான் இன்றும் நினைத்தான் .
அவசரமாக தன் உடைகளை களைந்து விட்டு பாத்டப்பில் இளம் சூடான நீரில் கண் மூடி அமர்ந்திருந்தவனுக்கோ மனதில் ஒரு வெறுமை. அதற்கு காரணமும் அவனுக்கு தெரியவில்லை .கொலை ஒன்றும் அவனுக்கு புதிது இல்லை. இந்த வெறுமையும் புதிது இல்லை. ஆனால் இப்பொழுதெல்லாம் இது போன்ற காரியங்கள் செய்யும் பொழுது ஏனோ வலித்தது.
‘ ஏன் தனக்கு மட்டும் இப்படி ?’ என்று யோசித்து கொண்டு இருந்தான் .
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
குளித்துவிட்டு இடையில் டவலுடன் வந்தவன் கண்ணாடி முன்னே நின்று தலையை துவட்ட , அவன் வாசல் கதவு தட்டப்பட்டது. தட்டியது வேற யாரும் இல்லை நாகா தான் .
நாகாவின் குரல் கேட்டதும் அவனை உள்ளே அழைத்த ஆதித்யா,
” இன்னும் தூங்கலையா ?” என்று கேட்டான் .
” கொஞ்சம் பேசணும் ” என்று சொல்ல. அவனோ தலையை துவட்டிய டவலை ஒரு ஓரமாக வைத்துவிட்டு ,
” ம்ம் சொல்லு ” என்று அவன் எதிரே வந்து அமர்ந்தான்.
” அத்தை உன்னை கேட்டாங்க. “
” நீ என்ன சொன்ன ?”
” கொஞ்சம் பிசியா இருக்கான். அடுத்த வாரம் வருவான்னு சொன்னேன் “
” அருந்ததியும் குட்டிமாவும் எப்படி இருக்காங்க ” மெல்லிய புன்னகையுடன் வினவினான்.
அதே புன்னகையுடன்,
“ம்ம் நல்லா இருக்காங்க, குட்டிமா தான் உன்னை ரொம்ப தேடுறா” என்றான் நாகா. குடும்பம் என்று வரும் பொழுது இருவரும் இறுக்கம் மறந்து புன்னகைத்துக் கொள்ள, அதன் பிறகு நாகா,
“அப்புறம் மது கிட்ணப் ஆனா நெஸ்ட் டே நைட் மிருதுளா , ஆதவன் ரெண்டு பேரும் ஒருத்தனை சீக்ரெட்டா மீட் பண்ணிருக்காங்க ” என்று சொல்லவும், சட்டென்று ஆதித்யாவின் பார்வை மாறியது .
” அவன் யாரு தெரிஞ்சிதா. ” தீவிர முக பாவத்துடன் வினவினான்.
“இல்லை, நம்ம ஆளுங்க தேடிட்டு இருக்காங்க. அவனை புடிச்சா தயாளனை நாம சீக்கிரமா நெருங்கிடலாம்ன்னு எனக்கு தோனுது”
” சீக்கிரம் கண்டுபிடிக்கணும் நாகா, என்னால முடியல இதுல இருந்து நான் சீக்கிரம் வெளியே வரணும்னு நினைக்கிறேன். நான் ஒன்னு நினைச்சா. வேற ஒன்னு நடக்குது. ” என ஆதித்யா எரிச்சலுடன் கூற, ஆதித்யாவின் ஆழ்ந்து பார்த்த நாகா,
” இதுக்கு தான் மதுமதி கூட எமோஷனலா அட்டாச் ஆகாதன்னு சொன்னேன். இப்போ பாரு அவ உன்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுறா “
” ப்ச் அவளை ஏன் இழுக்குற. நான் அவகிட்ட இருந்து உண்மைய தெரிஞ்சிக்கிறதுக்காக ஜஸ்ட் டிராமா பண்றேன்.”
” இத மத்தவனுங்க வேணும்னா நம்புவாங்க நான் நம்ப மாட்டேன். உன்னைப் பத்தி எனக்கு நல்லா தெரியும். உன் தேவைக்காக ஒரு பொண்ணோட உணர்ச்சிகள் கூட விளையாடி அவளை பகடை காயா பயன்படுத்துற ஆள் நீ கிடையாது” தீர்க்கமாக ஆதித்யாவின் விழிகளை நேருக்கு நேராக பார்த்து கூறினான் நாகா.
” ஏன் செய்ய மாட்டேன் நானும் மனுஷன் தானே” தடுமாற்றத்துடன் கூறினான் ஆதித்யா.
“ஆதி நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் அம்மாக்கு அப்புறம் ரொம்ப சந்தோஷப்பட போறது நான் தான். ஆனா அந்த மது மதி வேண்டாம் டா. உன்னை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு அவளுக்கு என்னடா தகுதி இருக்கு. நீ அவளை விரும்பறது தெரிஞ்சா உன் அம்மா அருந்ததி எல்லாம் ரொம்பவே உடைஞ்சி போயிடுவாங்க” கோபம் கலந்த வருத்தத்துடன் கூறினான் நாகா.
” நிஜமா தான் டா சொல்றேன் எனக்கு அவ மேல எந்த விருப்பமும் இல்லை. முழுக்க முழுக்க சுயநலத்துக்காக தான் அவ கூட பழகுறேன்” என்ற ஆதித்யாவை புருவம் சுருக்கி பார்த்த நாகா,
“ஓ நம்பிட்டேன் நம்பிட்டேன் ” என்று நக்கலாக கூறவும், அவனை முறைத்த ஆதித்யா,
” வெளியே போறியா. ” என்று சொல்லவும், நாகா புன்சிரிப்புடன் வெறியேறினான் .
‘ இப்போ தான் அவளை மறந்திருந்தேன், நியாபகப்படுத்திட்டான் ‘ என்று முனங்கிய ஆதித்யா,
” என்ன ஆனாலும் சரி இன்னைக்கு அவளை பார்க்க போக கூடாது ” என உறுதியாக முடிவெடுத்து. கணினியில் தன் கவனத்தை செலுத்த முயன்று கொண்டிருக்க, விடுவேனா என்பது போல ஆதித்யாவின் சிந்தனையில் அடிக்கடி வந்து சென்றாள் மதுமதி.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
‘நோ ஆதி அவளை நினைக்காதே ‘ என மூளை தீவிரமாக எச்சரித்தது.ஆனால் அவனது மனமோ ‘ அவளது முகத்தை ஒரு நொடியாவது பார்த்துவிட்டு வா ‘ என்று முரண்டு பிடிக்க, போதாக்குறைக்கு
முடிக்க வேண்டிய வேலைகள் வேறு நிலுவையிலே நின்றது. ஆனால் ஒன்றையும் முடிக்க முடியவில்லை.
மனமெல்லாம் அவனவளின் மதி முகமே.
இது போன்ற உணர்வுகள் எல்லாம் ஆதித்யாவுக்கு மிகவும் புதிது. தன் நிலையை எண்ணி எரிச்சல் அடைந்தவன் மடி கணினியை தூக்கி கட்டிலில் வீசிவிட்டு. அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தான் .
‘ எப்படி இருக்கான்னு தானே பார்க்க போற. பார்த்துட்டு வந்துட்டே இரு ‘ என்று தனக்குத்தானே சமாதானம் கூறிக் கொண்டவன், தனது கட்டுப்பாட்டையும் மீறி அவள் அறையை நோக்கி சென்றான் .
விடிவிளக்கின் வெளிச்சத்தில் பாதுகாப்பற்ற குழந்தையை போல மஞ்சத்தில் கால்களை குறுக்கிக்கொண்டு கண்மூடிக் கிடக்கும் மதியை கண்டான் .
அவளது இந்த நிலையை கண்டு மிகவும் வருந்தியவன், தயக்கத்துடன் அவள் அருகில் வந்து அமர்ந்தான் .
சீரான மூச்சுக்காற்று அவளது ஆழ்ந்த உறக்கத்தை உணர்த்த, இன்னும் நெருக்கமாக அவள் அருகில் சென்று அவளது மதி முகத்தை பார்த்தான். பார்க்க பார்க்க தெவிட்டாத வதனம். பார்த்துக்கொண்டே இருக்கலாம் என தோன்றியது .
கடைசியாக அவனது இதழ் தீண்டிய அவளது கன்னத்தை இப்பொழுது மதியின் கற்றை கூந்தல் உரசிக்கொண்டு உறவாட, சிறு பொறாமையுடன் கேசத்தை காதோரம் ஒதுக்கிவிட்டு ,
” நா உனக்கு திமிரு புடிச்சவனா ம்ம்ம் ! ரொம்ப இடம் கொடுத்துட்டேன் டி அதான் என் வீட்ல நீ நிம்மதியா தூங்குற. நான் நிம்மதி இல்லாம தவிக்கிறேன். ” என்று இதழ் கடை ஓரத்தில் முளைத்த சிறு புன்னகையுடன் கூறியவன்.
மறுநொடியே அவளது மிருதுவான கன்னத்தில் அழுத்தமான முத்தத்தை பதித்து வழமை போல அவளது நெற்றியோடு தன் நெற்றியை வைத்து கண்களை இறுக்கமாக மூடி,
” என்ன நடந்தாலும், நான் என்ன செஞ்சாலும். என் கூடவே இருப்பியா மதி ? “ என கேட்டான் அவளது சுகந்தத்தை சுவாசித்தபடி.