கர்நாடகா மாநிலம் , ஹூப்ளி (hubli ) நகரத்தில் 1999 ஆம் ஆண்டில்,
“ஏன்டா அடம் பிடிக்கிற உள்ள வா” கொட்டும் மழையில் நின்று கொண்டு உள்ளே வர மாட்டேன் என்று பிடிவாதமாக நிற்கும் அவனை இயலாமையுடன் பார்த்தார் மதர் மேரி.
“நீங்க சொல்லாம நான் மாட்டேன் மதர்”குளிரில் வார்த்தைகள் வர மறுக்க, பற்களை கடித்தபடி உளறினான்.
“காய்ச்சல் வேற அதிகமா இருக்கு டா ஜன்னி வர போகுது, செத்து போய்டுவ டா நீ உள்ள வா” இயலாமை கோபமாய் வெளிப்பட வழுக்கட்டாயமாக அவன் கரங்களை பிடித்து இழுத்தபடி ஆக்ரோஷமாக மதர் கூற,
“அப்போ நான் செத்தே போறேன்” என்றான் அவன் இன்னும் ஆக்ரோஷமாக.
அவ்வளவு தான் அவன் சொன்ன வார்த்தையில் துடித்து போனவர், “சூர்யா” என்று கத்தியபடி, அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தவர், பின்பு அவனை கண்ணீருடன் கட்டி அணைத்து கொண்டு,
“சொல்றேன் டா சொல்றேன் ” என்றார்.
அடைமழை அடித்து ஒய்ந்திருக்க, தன் முன்னே அமர்ந்திருந்தவனை பார்த்து,
“சூர்ய பிரகாஷ் இது தான் உன் முழு பேர்” என்க,
“என் அம்மா யாரு மதர்?” தவிப்புடன் கேட்டான் சூர்ய பிரகாஷ்.
@@@@@@
இன்று மும்பையில்,
“ப்ரீத்தா ” ஜன்னல் ஓரம் நின்றுக்கொண்டு இருண்ட வானை வெறித்தபடி நின்றியிருந்த தன் மனைவியை அழைத்தார் ராம்குமார்.
“ராம்”
“தூங்காம என்ன பண்ற”
“தூக்கம் வரல ராம்”
“அக்கா பேசின எதையும் மனசில வச்சிக்காத, அர்ஜுன் கிட்ட பேசியிருக்கல. இனிமே புரிஞ்சி நடந்துக்குவான். நீ வா” என்றவர் மனைவியை வழுக்கட்டாயமாக அழைத்து வந்து உறங்க வைத்தார்.
@@@@
காதலித்தாளா! ஜுவாலா என்னை காதலித்தாளா! அதுவும் ரொம்ப வருடமாக!
அர்ஜுனால் நம்பவே முடியவில்லை, கடந்த கால நிகழ்வுகளை எல்லாம் எண்ணிப் பார்த்தான். அவனுக்காக அவள் பார்த்து பார்த்து செய்த ஒவ்வொரு நிகழ்வுகளும் அவன் கண்முன்னே இப்பொழுது வந்து செல்ல, அன்று அதை இயல்பாக கடந்து வந்தவனுக்கு இன்று முடியவில்லை, நிதானமாய் ஆராய்ந்த அவன் மனம் அதில் இருக்கும் தன்னவளின் மெல்லிய உணர்வுகளை அவன் இதயத்திற்குள் பதிய வைக்க, முதல் முறை தன்னவளின் காதலை உணர்ந்து கொண்ட அர்ஜுனால் இதனால் வரை அவள் அனுபவித்த வலியும் இப்பொழுது புரிந்தது.
எவ்வளவு நேரம் கால் வலிக்க அப்படியே நின்றிருந்தானோ, நிமிடங்கள் பல கடக்க நின்றிருந்தவன் நீண்ட நேரம் கழித்தே தன் அறைக்கு வர, அங்கே தளர்ந்த கொடி போல சோஃபாவில் கால்களையும், கைகளையும் குறுக்கிக்கொண்டு படுத்து கிடந்தாள் ஜூவாலா. அவளை அந்த நிலையில் கண்டதுமே அர்ஜுனின் நெஞ்சுக்குழிக்குள் கூர்மையான ஏதோ ஒன்று பாய்ந்தது .
திருமணம் ஆன நாள் முதல் அவளிடம் கடுமையாக நடந்து கொண்டதை எண்ணி தன்னைத்தானே திட்டிக் கொண்டவனை அவன் மனசாட்சி வேறு மேலும் இம்சிக்க, அவள் அருகில் மண்டியிட்டு அமர்ந்தான்.
கண்ணீர் தடம் பதிந்து அழுது அழுது வீங்கியிருந்த வதனத்தை கலைந்திருந்த கேசம் பாதி மறைத்திருக்க, கலைந்த கேசத்தை சரி செய்ய அவன் முனைந்த நேரம் அவள் இதழ்கள் மெல்ல முணுமுணுக்க, உறக்கத்திலே ஏதேதோ புலம்பினாள். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
“ஜூவாலா ” அவளது தோளை தொட்டு எழுப்பியவன் அதிர்ந்துவிட்டான். மழையில் நனைந்ததால் காய்ச்சல் காரணமாய் உடல் பயங்கரமாக கொதித்தது .
‘ ச்ச ‘ என தன் மீதுள்ள கோபத்தில் பற்களை கடித்தவன், தயக்கம் விடுத்து மெல்ல ஜூவாலாவை தன் கையில் ஏந்தி மெத்தையில் படுக்க வைத்து விட்டு, வேகமாக அறையிலிருந்து வெளியேறியவன் சிறிது நேரத்தில் ஒரு க்ளாஸ் பாலுடன் அறைக்குள் நுழைந்தான்.
பிறகு ஜூவாலாவின் அருகில் வந்து,
“ஜூவாலா கெட் அப் ” மெதுவாக எழுப்பினான். சில நிமிட முயற்சிக்கு பிறகு லேசாக கண் பிரித்தவளால், எழுந்து அமர முடியாமல் போக, இன்னும் சுருண்டு படுத்துகொண்டாள்.
ஜூவாலாவின் நிலையை உணர்ந்தவன் அவள் அருகில் அமர்ந்து அவளை தன் நெஞ்சில் சாய்த்து கொண்டு மெதுவாக பாலை புகட்டினான்.
காய்ச்சல் அடித்த வேகத்தில் தளர்ந்து கிடந்தவள், மறுக்காமல் பாலை குடித்து முடிக்க, அருகிலே தயார் நிலையில் வைத்திருந்த மாத்திரையையும் தண்ணீரையும் அவன் புகட்டவும், அதையும் மறுக்காமல் விழுங்கியவளை மெதுவாக படுக்கையில் கிடத்த அவளோ நன்றாக உறங்கிவிட, இப்பொழுது சோஃபாவில் வந்து விழுந்தவனுக்கு தூக்கம் தொலை தூரமாக, கனம் கூடிய மனதில் பாரம் இன்னும் ஏறி போனது.
@@@@@@
கார்டனில் போடப்பட்டிருந்த மூங்கில் ஊஞ்சலில் கைகளையும் கால்களையும் குறுக்கிக்கொண்டு சோகமாக அமர்ந்திருந்தாள் மதுமதி.
நேற்று இரவு ஆதித்யா அமிலம் என கொட்டிய ஒவ்வொரு சொற்களும்
பிழையின்றி அவள் மனதில் ஓடி கொண்டிருந்தது.
அவள் மனதை உயிரோடு பொசுக்கிய வார்த்தைகள். நேற்று இரவு அவளை நிலைகுலைய செய்த வார்த்தைகள்.
‘ நிஜமா தான் டா சொல்றேன் எனக்கு அவ மேல எந்த விருப்பமும் இல்லை. முழுக்க முழுக்க சுயநலத்துக்காக தான் அவ கூட பழகுறேன்’ இதே வார்த்தைகள் தான். அவள் காதில் மீண்டும் மீண்டும் ஒளித்து அவளை இந்த நொடி வரை உயிரோடு வதைத்து கொண்டிருந்தது.
அன்று ஆதித்யாவுடன் கழித்த இன்பமான தருணத்தை எண்ணி பார்த்தபடி படுத்திருந்தவளுக்கு அவனது நினைவினாலே உறக்கம் வராமல் போக, அவனைப் பார்க்க வேண்டும் போல் மனதிற்குள் தோன்றவும் பல கட்ட யோசனைக்கு பிறகு, தன் அறையின் கதவை திறந்து கொண்டு, ஒரு வித இன்ப படபடப்புடன் ஆதித்யாவின் அறையின் வாசலுக்கு வந்தவள், கதவைத் தட்டும் நேரம்
லேசாக திறந்திருந்த கதவின் வழியாக ஆதித்யா நாகாவிடம் இவ்வாறு பேசுவதைக் கேட்டுவிட, அவள் மனம் சுக்குநூறாக உடைந்தது.
கால்கள் வலுவிழந்து துவண்டு விட, உடல் நடுங்கியது. ஏமாற்றமடைந்த உணர்வில் இதயமே வெடித்துவிடுவது போல இருந்தது. அதுவும் இன்று அவனுடன் இருந்த நெருக்கத்தையும் உரையாடலையும் எண்ணி பார்த்தவளுக்கு அதற்கு மேல் அங்கு நிற்கு முடியாமல் போக, பொங்கி வந்த கேவலை அடக்கிக்கொண்டு, தன் அறைக்குள் சென்று மெத்தை மேல் விழுந்த மதுவின் மனம் துடித்தது.
” சுயநலத்துக்காக தான்னா அப்போ எல்லாமே நடிப்பா! ஆனா ஏன் நடிக்கணும் அப்படி நான் என்ன செஞ்சிட்டேன்? என்னை ஏன் வலிக்க வச்சிட்டே இருக்கீங்க ஆதி. என்றவளோ அவன் முத்தமிட்ட கன்னத்தையும் இதழையும் சிவக்க சிவக்க அழுத்தி துடைக்க கண்ணீர் நிற்காமல் ஓடியது. அழுது அழுது ஓய்ந்தவள், உடல் அசதியில் அவளுக்கே தெரியாது உறங்கி விட்டாள்.
பின்பு பொழுது விடிந்து வெகு நேரம் கழித்து கண்விழித்த மதிக்கு நேற்று இரவு வெகு நேரம் கழித்து ஆதித்யா வந்ததும் தெரியாது, உருக்கமாக பேசியதும் தெரியாது.
சூரியனின் வெப்பம் முகத்தில் சுள்ளென்று அடிக்கவும் கண்விழித்தவளின் மனமும் தலையும் ஒரே நேரத்தில் வலிக்க, சிரமத்துடன் எழுந்து குளித்தவள். உணவு உண்ண பிடிக்காமல் அப்படியே இந்த நாற்காலியில் வந்து அமர்ந்துவிட்டாள் .
இதுவரை மதிக்கு ஆதித்யா மீது இருந்த சின்ன சின்ன அதிருப்தி கூட, இப்பொழுது அதீத சீற்றமாக மாறியிருக்க,
” இவ்வளவு நடந்ததுக்கு அப்புறமும் எப்படி மதி. எவ்வளவு தான் ஏமாற போற? அவன் வாயாலே கேட்டதுக்கு அப்புறம் இங்க இருக்க கூடாது எப்படியவாது போய்டு. இங்க எதுவும் சரி இல்லை” என்றவள் இங்கு வந்தது துவங்கி அனைத்தையும் எண்ணி பார்த்தாள்.
அப்பொழுது முதல் நாள் துரியன் தன் தந்தையை பற்றி கேட்டு தன்னை கொடுமை படுத்தியதெல்லாம் நினைவுகூர்ந்தவளுக்கு, என்றுமில்லாது தன் தந்தையின் நியாபகம் வேறு வந்துவிட,
” இதை எப்படி மறந்தோம் அப்பாக்கும் இவங்களுக்கும் என்ன பிரச்சனை? என்னை சுத்தி என்ன தான் நடக்குது ” என்றவளுக்கு பல பதில் இல்லாத கேள்விகளால், மற்றும் ஆதித்யாவின் பொய்யான நடிப்பினால் கோபத்துடன் சேர்த்து ஆவேசமும் வந்தது.
அப்பொழுது,
” ஏன் இவ்வளவு சோகம் ? ” அந்த குரலை கேட்டதும் சட்டென்று திரும்பினாள் மதுமதி. அங்கே கையில் காஃபியோடு நின்றிருந்தான் வீரா .
‘இவனும் அவன் கூட்டாளி தானே இவன மட்டும் எப்படி நம்புறது ‘ மனதிற்குள் பொறுமியவள்,
” கொஞ்சம் தலை வலி ” எரிச்சலை மறைத்து கொண்டு கூறினாள் .
” சாப்பிடாம இருந்தா தலை தான் வலிக்கும் ” என்றவன் தன் கையில் இருந்த காஃபி கப்பை அவளிடம் நீட்டினான் .
” வேண்டாம் வீரா “
” முதல்ல வாங்கி குடி ” என்று வற்புறுத்தினான். அவளும் பகைத்துக்கொள்ள விருப்பம் இல்லாமல் வாங்கிகொண்டாள் .
” ஏன் இவ்வளவு டல்லா இருக்க ” அக்கறையோடு தான் கேட்டான். ஏனோ அவளால் வீராவை கூட நம்ப முடியவில்லை.
” சொன்னா சரி பண்ணிருவியா “
” சொல்லு கண்டிப்பா பண்றேன் “
” ரொம்ப தலை வலிக்குது வீரா ” வலியில் முகத்தை சுளித்தபடி கூறினாள் .
” என்னாச்சு ” பதறினான் .
” பயப்படாத ஹாஸ்ப்பிட்டல் போனா தான் கேட்கும்ன்னு நினைக்கிறேன் “
” அச்சோ தாராவும் இங்க இல்லையே அவ அவளுடைய வீட்டுக்கு போயிருக்காளே. வர டூ ஹார்ஸ் கிட்ட ஆகுமே. சரி வா ஆதித்யா கிட்ட சொல்லிட்டு, நான் உன்னை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போறேன் “
” ஆத்தியா கிட்ட வேண்டாம் ” மெல்ல கூறினாள் .
“அவன் கிட்ட சொல்லாம எப்படி ” – வீரா தயங்கினான் .
” ப்ளீஸ் நீயே கூட்டிட்டு போ, வந்து சொல்லிக்கலாம் ப்ளீஸ் ” கெஞ்சினாள். வீரா சற்று யோசித்தான். ‘ சரின்னு சொல்லு டா. ‘ மனதிற்குள் இவள் வேண்டினாள் .
” ஆதிக்கு இதெல்லாம் புடிக்காது மதி. அவன் கிட்ட சொல்றதுல என்ன பிரச்சனை ” – தயக்கத்துடன் கேட்டான் .
” பரவாயில்லை என்னால உனக்கு கஷ்டம் வேண்டாம். நான் சமாளிச்சிக்கிறேன்.நாம போக வேண்டாம் ” வாடிய முகத்துடன் கூறினாள். அதை கண்டதும் அவனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.
வலியில் அவள் துன்பப்படுவதை காண முடியாதவன். ஆதித்யா விரும்ப மாட்டான் என்று தெரிந்தும் அவளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆயத்தமானான் .
நீண்ட நேர பயணம் நிசப்தமாகவே கழிந்து கொண்டிருக்க, மதிக்கு தான் படபடப்பாகவே இருந்தது. ஆதித்யாவை பற்றி நினைக்க நினைக்க பயம் கலந்த எரிச்சல் தான் வந்தது .
வெகு நேரமாக சாலையிலே கவனமாக இருந்த வீராவின் பார்வை இப்பொழுது மதியின் மீது விழுந்தது. ஆனால் அவள் கவனம் அவன் மீது விழவில்லை, கடுமையான முகத்துடன் கை விரல்களை பிசைந்து கொண்டு கண்ணாடியையே வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
“ரொம்ப வலிக்குதா. ஹாஸ்ப்பிட்டல் நெருங்கிட்டோம் சீக்கிரமா போய்டலாம் என்ன?” கவலையுடன் கூறினான் .
நிமிர்ந்து வீராவின் கண்களை பார்த்தாள். அவனுடைய விழிகளில் தெரிந்த உண்மையான பாசம் அவள் மனதை வருடியது .
பேசாமல் உண்மையை சொல்லிவிடுவோமா என்று எண்ணினாள். சொன்னால் மட்டும் ஆதித்யாவை மீறி தன்னை காப்பாற்றிவிடுவானா என்ன ? என்றது மனம் .
‘நம்பி நம்பி ஏமாந்தது போதும்’ என்று மனதிற்குள் முடிவெடுத்தவள். தனக்குள் இருக்கும் உணர்ச்சிகளை அழுந்த துடைத்தபடி அவன் முகத்தை பார்த்து. விரக்தியான புன்னகையை அவனுக்கு பதிலாக கொடுத்தாள் .