இதயமே இளகுமா (இறுதிஅத்தியாயம்) 27

5
(8)

மூன்று வருடங்களுக்கு பிறகு….

தென்றல் காற்று இதமாக வருட மூன்று வருடங்களுக்கு பிறகு தன் கிராமத்திற்கு வந்தாள் செம்பா.

“செம்பா நம்ம ஊர் ரொம்ப மாறிடுச்சில்ல” என்றாள் அவள் பக்கத்தில் இருந்த கோகி.

“ம்ம்ம்” என்றவளின் கண்கள் அந்த ஊரின் அழகை ரசித்தபடி வந்தது.

காரின் கண்ணாடி வழியாக தன் மனைவியின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை கவனித்த படி வந்த சமர், செம்பாவின் வீட்டின் முன் காரை நிறுத்தினான்.

ராசாத்தி கையில் செம்பா சமரின் புதல்வன் சிவநேத்ரன் இருந்தான். ஒரு வயது ஆகிறது. செம்பாவின் கையில் அவள் செல்ல மகள் சந்தனாஷ்வி இருந்தாள். இரட்டை செல்வங்கள். இருவருக்கும் தன் பெற்றொரின் பெயரை இணைத்து பெயரிட்டிருந்தனர்.

செம்பா இறங்கியதும், சமர் அவளிடம் இருந்த தன் மகளை வாங்கி கொண்டான்.

ராசாத்தி வீட்டை பார்த்ததும் கண்கலங்கி நிற்க “ ஏன் அத்தை அழறிங்க, அவங்கதான் இப்போ நம்ம கூட தானே இருக்காங்க” என தன் இரட்டை குழந்தைகளை கண்காட்டிட.

“ஆமா” என கலங்கிய கண்களை துடைத்தபடி அவர்கள் வாழ்ந்த வீட்டிற்குள் நுழைந்தார் ராசாத்தி.

“வா கோகி உள்ளே போலாம்” என செம்பா அழைக்க…

“உன் பக்கத்துல அண்ணா இருக்காங்க, என் புருஷனை இன்னும் காணும்” என பின்னால் பார்க்க, இன்னொரு கார் வந்தது.

“அதோ கோகுல் அண்ணா வந்துட்டாங்க” என்றாள் செம்பா.

கோகுல், கோகிலா இருவருக்கும் திருமணம் முடிந்து மூன்று மாதம் ஆகிறது. வீட்டில் இருக்க போரடிக்க சமரின் மருத்துவமனையிலே வேலைக்கு சேர்ந்தாள் கோகி. அங்கேயே கோகுலும் வேலை செய்ய, இருவருக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான்‌. இருவர் இருக்கும் இடமும் எப்போதும் சண்டையில் முடிந்தது. மோதல் காதலில் முடியும் என்பது போல் இருவருக்குள்ளும் காதல் மலர ஒருவரை ஒருவர் மனதார நேசித்தனர். முதலில் செம்பாவிடம் கோகி சொல்ல அவள் நம்பவேயில்லை. பின் கோகுல் சமரிடம் பேசிவிட்டு தன் குடும்பத்தினருடன் வந்து ராசாத்தியிடம் கோகிலாவை பெண் கேட்டதும்தான் செம்பா நம்பினாள். சமரிடம்தான் “என்ன சொல்லலாம் தம்பி” என கேட்டார் ராசாத்தி.

“கோகுல் ரொம்ப நல்ல பையன்ம்மா. உங்களுக்கு விருப்பம் இருந்தால் தாராளமா கோகியை கல்யாணம் செய்து கொடுக்கலாம்” என்றதும், ராசாத்தி சம்மதித்தார். ஆனால் கோகுலின் அப்பா. கோகுலிற்கு ஒரு தங்கை இருப்பதால் அவளுக்கு திருமணம் முடித்ததும், இவர்களின் திருமணத்தை வைத்துகொள்ளலாம் என பேச எல்லாரும் அதற்கு சம்மததித்தனர்.

எதற்கும் இருக்கட்டும் என கோகியின் அண்ணண் என்ற முறையில் ஏழுமலையிடம் திருமணத்தை பற்றி சொன்னார் ராசாத்தி. அவனுக்கும் சந்தோஷம்தான் ஆனால் தன் மனைவியை மீறி அவனால் எதுவும் செய்யமுடியாத கையறு நிலையில் திருமணத்திற்கு வருகிறேன் என்றதோடு நிறுத்தினான். இரண்டு வருடத்திற்கு பிறகுதான் கோகுல் தங்கை திருமணம் முடிந்தது. அதன்பின் ஆறு மாதம் கழித்து கோகி, கோகுல் திருமணம் நல்லபடியாக கோயம்புத்தூரில் நடந்து முடிந்தது.

இப்போது எல்லாரும் குகன், ஆத்வியின் திருமணத்திற்காக கிராமத்திற்கு வந்திருக்கின்றனர்.

ஆத்வி குகனிற்கு தன் காதலை புரியவைத்து அவனின் காதலையும் வென்றுவிட்டாள்.

அவனுக்காக தன் சொந்த ஊரைவிட்டு அவன் கிராமத்திற்கு வந்தாள். ஆத்வி செம்பாவின் வீட்டில்தான் தங்கியிருக்கிறாள். அவள் அம்மா, அப்பா வாழ்ந்த வீட்டை இடிக்காமல் அதையொட்டி இன்னொரு வீடு கட்டினான்‌. ஏதாவது விஷேசத்திற்கு வந்தால் தங்கலாம் என்று. அந்த வீட்டில்தான் ஆத்வியை தங்க வைத்தான். அவனின் மருத்துவமனையை பாலாவும் ஆத்வியும் சேர்ந்து நடத்தி கொண்டிருக்கின்றனர்.

முதலில் ஆத்வி இங்கே இருக்க முடியாமல் சென்றுவிடுவாள் என ஏளனமாக நினைத்த குகன் அவளின் காதலில் ஆடித்தான் போனான். தினமும் அவன் அம்மாவை சோதனை செய்து இப்போது நன்றாக நடக்க வைத்து அவனுடன் விவசாயம் செய்யும் அளவிற்கு மாற்றி இருக்கிறாள். ஆத்வியின் மனதை அறிந்த குகனின் அன்னை, அதன்பிறகு அவனுக்கு பெண்பார்க்க எங்கும் செல்லவில்லை. தன் மகன் கண்டிப்பாக மனம் மாறி ஆத்வியை ஏற்றுகொள்வான் என ஆத்வியோடு அவரும் காத்திருந்தார்.

அதன் பின்தான் ஆத்வியின் மீது குகனின் பார்வை விழுந்தது. அவனை அறியாமல் அவளை ரசிக்க ஆரம்பித்தான். முதலில் கவனிக்காத ஆத்வி அவனின் கள்ளபார்வையை கண்டுகொண்டாள். ஆனாலும் குகன் மனதில் இருப்பதை சொல்ல தெரியாமல் தவிக்க அதற்கான நாளும் வந்தது.

குகனை பார்த்து பேசுவதற்காக ஆத்வியின் அப்பா கிராமத்திற்கு வந்திருந்தார்.

அவர் முன் ஆத்வி, குகன், அவனின் அம்மா முவரும் நின்றிருந்தனர்.

“தம்பி நான் எதுக்காக வந்திருக்கேன் என்று உங்களுக்கு நல்லாவே தெரியும். இன்னும் பொண்ணுக்கு கல்யாணம் மெதுவா பண்ணலாம்னு என்னால் வைக்க முடியாது. அவள் வயது என்னன்னு உங்களுக்கு தெரியும். சமரோட வயது அவளுக்கு. அவங்களுக்கே கல்யாணம் முடிந்து குழந்தை பிறந்தாச்சி. இன்னும் என் பொண்ணு இப்படியே இருக்குறதுல எனக்கு விருப்பம் இல்லை. அவள் உங்களை நினைச்சிட்டு வேற யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொல்றாள். நீங்களும் கல்யாணத்துக்கு சம்மதிக்கிற மாதிரி தெரியலை. எல்லாரையும் மாதிரி எனக்கும் என் பொண்ணுக்கு கல்யாணம் செய்து அதை கண்குளிர பார்க்கனும்னு ஆசை இருக்கும்ல. ஒன்னு நீங்க அவளை கல்யாணம் பண்ணுங்க, இல்லை அவளை வேண்டாம்னு சொல்லி என்கூட அனுப்புங்க. இந்த தடவை நீங்க சொன்னால் இந்த ஊரைவிட்டு வந்துடறேன்னு சொல்லிட்டாள். இப்போ முடிவு உங்க கையில்தான். நீங்க என்ன சொன்னாலும் எனக்கு சம்மதம்” என்றார் அந்த பெரிய மனிதர்.

குகனின் அம்மா, ‘அவன் பதில் நல்லபடியா இருக்கனும்’ என கடவுளை வேண்டி கொண்டிருந்தார்.

ஆத்வியின் பார்வை அவன் மீது அழுத்தமாக பட கண்களை முடி திறந்து பெரூமூச்சொன்றை விட்டவன் “கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்றான்.

“புரியலை” என முவரும் ஒன்றாக கேட்க…

“எனக்கும் ஆத்விக்கும்தான் கல்யாணம் நடக்கும் போதுமா”

“உண்மையாவா” என ஆத்வி கேட்க…

“ஆமா” என்றதும் ஓடிப்போய் அவனை இறுக்கமாக அணைத்துகொண்டாள் ஆத்வி. அவளின் காதல் வென்ற சந்தோஷத்தில் கண்ணிர் கரைபுரண்டது. அவளை மெதுவாக அவனிடம் இருந்து விலக்கியவன் கண்ணிரை துடைத்தபடி “சாரிம்மா உன்னை ரொம்ப நாள் காக்க வச்சதுக்கு, என்னை மன்னிச்சிடு” என்றான்.

“பரவாயில்லை உங்க காதல் கிடைக்க எத்தனை வருஷம் ஆனாலும் காத்திருப்பேன்” என்றாள் ஆத்வி.

“ஆமா மாப்ள. இப்படி வந்து பேசுங்கன்னு சொன்னதே சமரும் இவளும் தான். அப்போதான் உங்க மனசுல என்ன இருக்கும்னு தெரியும்னு என்னை அனுப்பி வச்சாங்க” என்றதும் போலியாக ஆத்வியை முறைக்க, அவன் மார்போடு சாய்ந்து கொண்டாள்.

“ஆனால், மாமா கல்யாணம் உடனே வேண்டாம். நான் வீடு கட்டி முடித்ததும் கல்யாணம் வைக்கலாம்” என்றான்.

ஆத்வி ஏற்கவில்லை. அவளை கஷ்டபட்டு சமாதானம் செய்தான். “நீ ரொம்ப வசதியா வாழ்ந்த பொண்ணு எனக்காக நிறைய விட்டுகொடுத்து இந்த ஊர்ல இருந்திருக்க… உனக்காக நான் இதைக்கூட செய்யமாட்டேனா” என்றவன் அவன் சொன்னதுபோலவே வீடு கட்டிமுடித்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்தான்.

இரண்டு நாளில் திருமணம். அதற்காகத்தான் எல்லாரும் செல்வபுரத்திற்கு வந்திருக்கின்றனர்.

செம்பா வந்ததை கேள்விபட்டதும் தன் மூன்று வயது மகனோடு அவளை பார்க்க வந்திருந்தாள் ரஞ்சி.

“செம்பா எப்படிடா இருக்க?” என அவள் கையில் இருந்த பெண்குழந்தையை வாங்கிகொண்டாள் ரஞ்சி.

“நல்லா இருக்கேன் அக்கா. என் பையனை மட்டும் கொண்டு வந்திருக்க என் பொண்ணை எங்கே..?”

“அவ ஸ்கூல் போய்ருக்காள். வந்ததும் உங்க மாமா கூப்பிட்டு வருவார்டி”.

“மாமா, பாட்டி எப்படி இருக்காங்க அக்கா”.

“மாமா நல்லா இருக்காங்க. பாட்டிதான் ரொம்ப முடியாமல் இருக்காங்க. முன்ன மாதிரி நடக்க முடியலை வீட்டுக்குள்ளேயே இருந்துக்கறாங்க”.

“அந்த அம்மா எப்படி இருக்கு?”.

“சாவு எப்போ வரும்னு நினைச்சிட்டு இருக்கு. பக்கவாதம் வந்து கை, கால் விழுந்துடுச்சி. எல்லாமே படுக்கையிலன்னு ஆகிடுச்சி. அதுவே நரக வாழக்கைதானே‌. அதைவிட நரகம் நான் அந்த வீட்ல வாழுறது. மாமாதான் அவங்களை பார்த்ததுட்டு ரொம்ப  கஷ்டபடுறாங்க செம்பா”

“மாமா அவங்களை சரிபண்ண முடியும்னு சொன்னாரா?”

“அவங்க உடம்பு ஒத்துழைக்க மாட்டுதுன்னு சொன்னார் பாப்பா. என்ன இருந்தாலும் அவரோட அம்மா இல்லையா. அந்த பாசத்துல மனுஷன் என்னலாமோ பண்றார். அவருக்காகவாவது சரியாகிடனும்னு தோணுது” என இருவரும் பேசியபடி இருக்க…

“அக்கா” என்ற கோகி சத்தத்தில் திரும்பினாள் ரஞ்சி.

‘அட வாங்க புதுபொண்ணு, எங்கேடி உன் வீட்டுக்காரர், ஜோடி கிளி இல்லாமல் தனியா சுத்திட்டு இருக்க.” என கிண்டலாக ரஞ்சி கேட்க…

“அவர், அவங்க ப்ரெண்ட் கூட வெளியே போய்ருக்கார்.” அக்கா என்றாள் கோகி.

“வெளியே போகாமல் என்ன பண்ணுவார் அக்கா. ரெண்டு பேரும் இரண்டு நிமிஷம் சேர்ந்து இருந்தாலே இரண்டாவது உலகப்போர் வந்துடுது. எப்படிதான் காதலிச்சி கல்யாணம் பண்ணாங்களோ தெரியலை” என தலையில் அடித்தாள் செம்பா.

“என்ன சண்டை வந்தாலும் சமாதானம் ஆகுற வித்தை தெரிஞ்சிக்கனும்டி செம்பா” என தன் சுடிதார் காலரை தூக்கிவிட

“ஆஹ்ஹா… அப்படியா” என சிரித்தாள் செம்பா.

“உனக்கும் சமர் அண்ணாவுக்கும் தான் சண்டையே வர்றது இல்லையே. பின்ன எங்கே இருந்து சமாதானம் பண்றது” என கோகி உதட்டை சுழிக்க

“கண்ணுவைக்காதேடி” என்றார் ராசாத்தி.

“இதோ வந்துட்டாங்களே ராஜமாதா. எங்கடா இன்னும் காணலையேன்னு நினைச்சேன்.”

“ரஞ்சியின் கையில் இருந்த குழந்தையை வாங்கியவர், சுடுதண்ணிர் வச்சி பிள்ளைக்கு மேல் கழுவனும். ரொம்ப தூரம் வந்துருக்கோம்ல உடம்பு வலிக்கும். வாங்க தங்கம் குளிக்கலாம் என்றதும் பொக்கை வாயை காட்டியபடி “ங்கேங்கே ஹிஹி” என சிரித்தாள் சமரின் மகள் .

“உங்க பேரனை குளிப்பாட்டினிங்களா அத்தை’ என செம்பா கேட்க

“ஆமாடா, குளிக்க வச்சி உன் மாமியார் கிட்ட கொடுத்துட்டேன்” என்றார் ராசாத்தி.

“ஆத்வி எல்லாரையும் குளித்துவிட்டு சாப்பிட வாங்க” என்றாள்.. எல்லாரும் தயாராகிவிட்டு சாப்பிட அமர ஆத்விதான் பரிமாறினாள்.

“ஹேய்! சாப்பாடு சூப்பர் யார் சமைத்து?” என சமர் கேட்க.

“நான்தான் சமர்” என்றாள் ஆத்வி‌.

“உண்மையாவா” என ஆச்சரியமாக கேட்டான்.

ஆத்வி சிரிப்பை மட்டும் பதிலாக கொடுத்தாள்.

“உண்மையாவே உங்க சமையல் சூப்பர் அண்ணி” என்றாள் செம்பா.

எல்லாரும் சாப்பிட்டு முடித்து குகனின் குலதெய்வத்திற்கு பொங்கல் வைக்க கிளம்பினர். சாமி கும்பிட்டு வர இரவானது‌. ஏற்கனவே நெடுந்தூர பயணம் அலைச்சலில் உடல் வலியில் எல்லாரும் சீக்கிரம் தூங்கினர்.

விடியலில் இருந்து திருமண வேலை சுறுசுறுப்பாக நடைபெற்றது. ஊரின் அம்மன் கோவிலில் முகூர்த்த புடவை, தாலி, பூ, பழம் எல்லாவற்றையும் வைத்து திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என சிறப்பு பூஜை செய்து ஊருக்கே விருந்து வைத்தனர்.

இரவு மணமக்களுக்கு தனிதனியாக நலங்கு வைத்தனர். விடிந்தால் திருமணம். ஆத்வியின் மனம் படபடத்தது. குகனை பார்க்க வேண்டும் என தவிக்க ராசாத்திதான் “கல்யாணத்துக்கு முன்னாடி பார்க்க கூடாது தங்கம்” என அவளை சமாதானம் செய்தார்.

இரவோடு இரவாக குகன் வந்து ஆத்வியை திருட்டுத்தனமாக பார்த்துவிட்டு சென்றது தனிக்கதை.

சமர் வேலை செய்த சோர்வில் நன்றாக தூங்கிகொண்டிருக்க அவன் அருகே வந்தாள் செம்பா. இரு குழந்தைகளும் அவன் பக்கத்தில் நன்றாக தூக்கத்தில் இருந்தனர். லேசாக சத்தம் கேட்டால்கூட இரண்டு வாண்டுகளும் முழித்துவிடும் என்பதால் அமைதியாக சமரின் அருகே அமர்ந்தாள். அவனின் தலையை கோதி விட அப்படியே தூக்க கலக்கத்தில் உருண்டு அவள் மடியில் தலை வைத்தான். அவனின் நெற்றியல் படர்ந்திருந்த முடிகளை ஒதுக்கியவள் அவன் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டவள், அவன் தூக்கம் கலையாத வண்ணம் தலையை தலையணையில் வைத்துவிட்டு, வெளியேற, அவள் சென்றுவிட்டால் என தெரிந்ததும் சமரின் இதழ்கள் புன்னகையில் விரிந்தது. அவன் முழித்திருந்தால் அந்த நெற்றி முத்தம் கிடைத்திருக்காதே. அதான் தூங்கியது போல நடித்தான்.

மங்களயிசை அந்த வீட்டின் முன் ஒலித்துகொண்டிருந்தது. குகனின் உறவினர்கள், ஆத்வியின் உறவினர்கள் என எல்லாரும் வந்துகொண்டிருந்தனர்.

“செம்பா நேரம் ஆகிடுச்சி இன்னும் நீ கிள்மபலையா” என கோகி தயாராகி அவள்‌ அறைக்குள் வர… குழந்தைகள் இரண்டும் அவளை தயாராக விடாமல் சேட்டை செய்துகொணடிருந்தது.

“ஐயோ‌ என் தங்கங்களா நீங்க இன்னும் கிளம்பலையா? செம்பா அம்மாவை எங்கே?” என கோகி கேட்க

“காலையிலேயே கோவில்ல வேலை இருக்கு, நாங்க குழந்தையை ரெடி பண்ணிட்டு கிளம்பட்டுமான்னு ரெண்டு பேரும் கேட்டாங்க. நான்தான் பார்த்துக்கறேன்னு சொல்லி, அவங்களை கோவிலுக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் இவங்களை என்னால் சமாளிக்க முடியலை” என தலையில் கையை வைத்தபடி அமர்ந்தாள் செம்பா.

“சரி நீ ரெடியாகு, வாங்க தங்கங்களா அத்தை உங்களை ரெடி பண்றேன்” என குழந்தைகளையும் உடைகளையும் தூக்கிகொண்டு அவள் அறைக்குள் வந்தவள், அங்கே கிளம்பிருந்த கோகுலிடம் ஒரு குழந்தை கொடுத்து தயாராக்க சொல்ல, இன்னொரு குழந்தையை அவள் ரெடி செய்தாள்.

அப்போதுதான் சமர் செம்பாவை இன்னும் காணாமல் அறைக்குள் வர, புடவையின் மடிப்பு எடுக்க முடியாமல் திணறி கொண்டிருந்தவளை கண்டு , அங்கே வந்த சமர், தன் மனையாளுக்கு அழகாக புடவை கட்டி விட்டு, அந்த புடவைக்கு மேட்சாக ஒரு ஆபரணத்தை அணிவித்து, தலையை அழகாக பின்னி மலரை சூடியவன், அவள் உச்சி வகுட்டில் குங்குமம் வைத்து அவளை கண்ணாடி முன் நிறுத்தினான், பெண்களின் பின்னால் நின்று அணைத்தபடி இருவரின் பிம்பமும் கண்ணாடியில் தெரிய, “இப்போ சூப்பர்” என கண்ணடிக்க, அவன் செயலில் செம்பாவின் முகம் செவ்வானமாய் சிவந்தது. “ரொம்ப வெட்கபடாதே பொண்டாட்டி, இன்னைக்கு குகன் அண்ணாக்கும் ஆத்விக்கும் கல்யாணம் போகாமல் வீட்ல இருக்க முடியாது” என மறைமுகமாக எதையோ உணர்த்த அவனை போலியாக முறைத்தவள் கிளம்பாலாம் என்க…

“ஏய்! ஆமா என் புள்ளைங்களை எங்கேடி” என சமர் கேட்க…

“கோகி தூக்கிட்டு போய்ட்டாள்” வாங்க என இருவரும் வெளியே வர…

“ஏன்டா இவ்வளவு நேரம், கல்யாணம் கோவில்லன்னு உனக்கு தெரியாதா, குகன் அண்ணா போன் பண்ணிட்டே இருக்காங்க, உனக்கு ரொமன்ஸ் பண்ண நேரமே கிடைக்கலைய்யா,” என பாலா பேச… அவன் பக்கத்தில் வந்த சமர் சட்டையில் ஒட்டியிருந்த குங்குமத்தை தட்டிவிட்டபடி “உன் பொண்ணு ஸ்கூல் போக ஆரம்பித்துவிட்டாள், நீங்களே இன்னும் ரொமன்ஸ் பண்ணும்போது நாங்க பண்ணகூடாதா” என்றான் பாலாவின் காதில்…

“சரி சரி!, விடு நேரம் ஆகிடுச்சி, நீ காரை எடுத்துட்டு குகன் அண்ணாவை அழைச்சிட்டு வா, நாங்க ஆத்வியை அழைச்சிட்டு கோவிலுக்கு வந்துடுறோம்” என்றதும் குகனை அழைத்துகொண்டு வர சமர், கோகுல் கிளம்பினர்.

மணமக்கள் இருவரையும் கோவிலுக்குள் அழைத்து வந்தனர். சிவப்பு நிற பட்டில் அழகாய் ஜொலித்தாள் ஆத்வி. மணமகனாய் கம்பிரமாய் நின்றிருந்தான் குகன். இருவரின் பார்வையும் ஒருவரை ஒருவர் வருடி கொண்டிருந்தது.

கோவிலில் பூஜை ஆரம்பித்தது. மாங்கல்யம் அம்பாளின் பாதத்தில் வைத்து பூஜை செய்து தாம்பூலத்தில் வைத்து குகனிடம் நீட்ட, சாமியை கும்பிட்டு தாலியை தன் கைகளில் எடுத்தவன், கெட்டிமேளம் முழங்க, அட்சதை அவர்களின் சிரத்தில் விழ, ஆத்வியின் கழுத்தில் மூன்றுமுடிச்சிட்டு தன் சரிபாதி ஆக்கினான் குகன்.

ஐயர் கொடுத்த குங்குமத்தை, ஆத்வியின் உச்சந்தலையில் வைத்தவன், அவள் கால்விரலில் மெட்டியை அணிவித்தான்.

“மாப்பிள்ளையும் பொண்ணும் சன்னதியை மூனு தடவை சுத்தி வந்து அம்பாளை வணங்குங்க” என ஐயர் சொன்னதும், அதேபோல் மூன்று முறை சுற்றி வந்து அம்பாளை தரிசித்துவிட்டு கோவிலை விட்டு வெளியே போடபட்டிருந்த மேடையில் மணமக்கள் நின்றிருந்தனர். நண்பர்கள், உறவினர் என எல்லாரும் வந்து வாழ்த்திவிட்டு சென்றனர். இறுதியில் மொத்த குடும்பமும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்தது.

மணமக்களை வீட்டிற்கு அழைத்துவந்து சாமியறையில் விளக்கேற்ற வைத்து பாலும், பழமும் கொடுத்து சில சடங்குகளை செய்தனர். பின் இருவரையும் தனித்தனியாக ஒய்வெடுக்க அனுப்பிவிட்டு, வீட்டிற்கு வருபவர்களை ரஞ்சி, செம்பா, கோகி முவரும் கவனித்து கொண்டனர்.

இரவு சாந்தி முகூர்த்ததிற்கான நேரம் நெருங்க, ஆத்வியை அலங்காரம் செய்து குகனின் அறையில் விட்டனர். குகனும் ஆத்வியும் தங்கள் வாழ்க்கையை இனிதே தெடங்கினர்.

செம்பா தூக்கம் வராமல் தன் வீட்டிற்கு வந்தவள், தன் அப்பா அம்மா இருந்த அறைக்குள் வந்தாள். மனம் முழுவதும் ஒருவித நிம்மதி இருந்தது. அவர்கள் புகைப்படத்தை பார்த்தபடி வெளியே இருந்த திண்ணையில் வந்து அமர்ந்தாள்.

செம்பாவை காணாமல் தேடிய சமர் ‘அவள் இங்கேதான் இருக்கவேண்டும்’ என நினைத்து அந்த வீட்டிற்கு வர, அவன் நினைத்தது போலவே வெளியே அமர்ந்திருந்தாள்

அவள் அருகில் அமர்ந்தவன் “என்னடா இங்கே இருக்க?”

“பசங்களைதானே பார்த்துட்டு இருந்திங்க, நீங்க ஏன் இங்கே வந்திங்க?”

“வைஷூ அம்மாவும், ராசாத்தி அம்மாவும், அவங்க இரண்டு பேரையும் தூங்க வச்சிட்டாங்க பட்டாசு”

இரவு நேர தென்றல் காற்று முகத்தில் மோத காற்றை நன்றாக சுவாசித்து வெளியேற்றினாள்.

“என்ன மேடம் உங்க நடவடிக்கை வித்யாசமாக இருக்கே”

“நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அதனால் இருக்கலாம் புருஷா”

“உங்க வீட்டுக்கு வந்ததாலா? பட்டாசு”

“இல்லை, நீங்க என் வாழ்க்கையில் வந்ததால், அதனால்தான் திரும்ப என் அம்மாவும் அப்பாவும் எனக்கு கிடைச்சிருக்காங்க, என்னை புரிந்துகொண்டு நடந்துக்குற மாமனார், மாமியார் கிடைச்சாங்க. எப்பவும் என்னை ஒரே மாதிரி நேசிக்கிற என் ஜித்து. என் கூடவே இருக்குற என் சொந்தம். இதெல்லாம் எல்லாருக்கும் அமையாதுங்க. நான் ரொம்ப கொடுத்துவச்சவ, முன்ஜென்மத்துல என்ன புண்ணியம் செய்தேனோ தெரியலை. இந்த சந்தோஷம் எப்பவும் என் வாழ்க்கையில் இருக்கனும்” என சமரின் தோள் சாய, “கண்டிப்பா எல்லாரும் உன் கூடவே இருப்போம் பட்டாசு” என அவளை தன் தோளோடு அணைத்தான் செம்பருத்தியின் சமரஜித்ரன்.

இருவரும் இதேபோல் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்த்துவோம்.

வாழ்க்கை என்றால் சந்தோஷம், துக்கம், துரோகம், ஏமாற்றம் என எல்லாமே இருக்கும். பிறக்கும்போதே எல்லாரும் நல்லவங்களாகவோ, கெட்டவங்களாகவோ பிறக்குறது இல்லை. அவர்கள் வளரும் சூழ்நிலைதான்  எல்லாவற்றையும் முடிவு செய்யும்.  நமக்கு ஒரு விஷயம் பிடித்தால் எப்படியாவது அதை அடைய நினைக்கிற மனம். அதை இன்னொருவருக்கு பிடித்தால் விட்டு கொடுக்குமா. அந்த மனப்பக்குவம் எல்லாருக்கும் இருக்காது. அதுபோல்தான் சிலரின் வாழ்க்கை. தவறு செய்து வாழும்போது தண்டனை கிடைத்தவர்கள் குறைவுதான். எல்லாரும் கஷ்டபடவில்லை, நல்லவர்கள் கஷ்டபடுவதையும் பார்த்ததுட்டு, கெட்டவர்கள் நன்றாக வாழ்ந்ததையும் பார்த்ததுண்டு. கடவுள் கொடுத்தது ஒரு வாழ்க்கை. இருக்கும்வரை நம்ம வாழ்க்கையை அடுத்தவர்களுக்காக வாழாமல் நமக்காக வாழ்வோம்.

                  …..முற்றும்….

என் கதையை படித்துவிட்டு, நிறை குறை எதுவாக இருந்தாலும் மறக்காமல் கருத்துக்களை பதிவிட்டு செல்லுங்கள் தங்கம்ஸ்.  

               நன்றி🙏

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

1 thought on “இதயமே இளகுமா (இறுதிஅத்தியாயம்) 27”

  1. அருமையான கதை…
    அதற்குள் முடிந்து விட்டதே என்று நினைக்க வைத்த கதை..
    ஆத்வி குகன் காதல் மனதை கொள்ளை கொண்டது…
    பாலா ரஞ்சி காதல் வெறுப்பையும் கோபத்தையும் உண்டு பண்ணியது…

    கோகி – கோகுல் காதல் கலகலப்பு

Leave a Reply to DEEPA V Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!