ரஞ்சியை பார்த்ததும் சிலர் அதிர்ந்து நிற்க, ஒரு சிலரோ “இத்தனை நாள் இருக்காங்களா, இல்லையான்னு பார்க்க வராமல், இப்போ அவங்க உயிர் போனதுக்கு அப்புறம் வந்து எதுக்கு” என அவள் காது படவே பேசினர்.
ஊரார் பேசியது எதையும் காதில் வாங்காமல் தன் மூன்று வயது குழந்தையை தூக்கிகொண்டு நிறைமாத கர்ப்பிணியாய் மெல்ல நடந்தாள் ரஞ்சி.
வீட்டின் உள்ளே வந்தவள் கண்களில் விழந்தது, ராசாத்தியின் மடியில் படுத்திருந்து அழும் தன் தங்கையின் கலங்கிய முகம்தான்.
நெஞ்சம் கணத்தது. “செம்பா” என அழைக்க தாயின் குரல் கேட்டு ஓடிவரும் குழந்தை போல எழுந்தவள் வாசலில் நின்றிருந்த தன் அக்காவை பார்த்ததும் ஓடி வந்து அணைத்துக்கொண்டு கதறி அழ, அவளை சமாதானம் செய்ய முடியாமல் தவித்தாள் ரஞ்சி. அவளுடைய சூழ்நிலையும் சரியில்லை. கிட்டதட்ட நிறைமாத கர்ப்பிணி அவள். ராசாத்தி, கோகி, செம்பா மூவரும் அவளை கட்டிக்கொண்டு அழ அங்கிருந்த பெண்மணி ஒருவர் “மாசமா இருக்குற பொண்ணை அழவிடாதிங்க, வயித்துல இருக்குற புள்ளைக்கு நல்லது இல்லம்மா” என்றதும் ராசாத்தி அவள் கண்ணிரை துடைத்தபடி உள்ளே அழைத்து அவளை அமர வைத்தார். தன்னுடன் இரண்டு நாட்களுக்கு முன் நன்றாக பேசிய தந்தை, தாய் இன்று உயிரோடு இல்லை. அவர்கள் முகத்தை பார்த்தவளுக்கு அவளை நினைத்து அவமானமாக இருந்தது. ‘சிலநாட்களுக்கு முன்பே அவர்களை தேடி வந்திருக்கலாமோ’ என மனதால் வெம்பினாள் ரஞ்சி.
வெளியே சிவம் உறவினர் ஒருவர் பாலாவிடம் “தம்பி அவங்களுக்கு கொள்ளி வைக்கனும். வீட்டுல அவங்க பொண்ணு கொள்ளி வச்சிடும். ஆனால் சுடுகாட்டுல ஆம்பளைங்கதான் கொள்ளி வைக்கனும். அவங்க உறவுன்னு கொள்ளி வைக்கிற உரிமை உங்களுக்குதான் இருக்கு. நீங்கதான் தம்பி கொள்ளி வைக்கனும்” என்றார்.
“இல்லை அது என்னால் முடியாது என் சூழ்நிலை அப்படி” என்றான் பாலா.
“இல்லை தம்பி உங்களை தவிர உரிமைபட்டவங்க யாரும் இங்கே இல்லையே. சிவம் குடும்பத்துலயும் ஏழுமலை இருக்கான். அவன் மனைவி கர்ப்பமா இருக்கு. அதனால் அவனாலயும் வைக்க முடியாது. அங்கே வேற யாரும் இல்லை”
“யாரு யாருக்கு கொள்ளி வைக்கிறது. எங்களுக்கும் அவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு உனக்கு தெரியாதா. நாங்க என்ன பேச்சுவார்த்தையில் கொஞ்சி கொலாவிட்டு இருந்தோமா? என கற்பகம் புடவையை தூக்கி சொருகியபடி வந்து நிற்க…
“இல்லம்மா… நான் அப்படி சொல்ல வரலை…”
“பின்ன என்ன சொல்ல வந்த. அதான் அந்த ஓடுகாலி வந்திருக்காளே அவ புருஷனை எங்கே, அவனை வைக்க சொல்லு”
அம்மா அந்த பொண்ணும் மாசமா இருக்கு, அவங்க புருஷன் எப்படி கொள்ளி வைக்கமுடியும். அதான் உங்க பையன்கிட்ட கேட்டோம்.”
“அப்போ அனாதை புணம்னு எவனாவது கொள்ளி வைங்கடா, என் பையனை வைக்க விடமுடியாது” என்றார் கற்பகம்…
“நான் கொள்ளி வைக்கிறேன்” என வந்து நின்றான் சமர்.
“டாக்டர் தம்பி நீங்களா?, நீங்க அவங்க உறவு இல்லையே தம்பி. நீங்க என்ன முறையில் கொள்ளி வைக்கமுடியும். உறவு இருக்குறவங்க தான் இங்கே கொள்ளி வைக்க விடுவாங்க. இல்லன்னா, ஊர்க்காரங்க பிரச்சனை பண்ணுவாங்க தம்பி”
“அவங்க இரண்டாவது பொண்ணை நான்தான் கல்யாணம் பண்ண போறேன். அந்த உரிமையில் நான் வைக்கிறேன்”
“என்ன சமர் தம்பி. புத்தி குழப்பி போச்சா. அந்த பிச்சைக்கார குடும்பத்துல பொண்ணு எடுக்க போறேன்னு சொல்றிங்க, உங்க அம்மா, அப்பா முதல்ல சம்மதிப்பாங்களா?” என்றார் கற்பகம்…
அம்மா, அப்பா என சத்தமாக சமர் குரல் கொடுக்க, அவன் அருகில் நேத்ரனும் வைஷ்ணவியும் வந்தனர்.
“இவங்கதான் அம்மா அப்பாவா, இவங்க ரஞ்சிகூடதானே வந்தாங்க” என யோசனையாக பார்த்தார் கற்பகம்.
வெளியே பேச்சு சத்தம் அதிகமாக கேட்க, செம்பா, ரஞ்சி, ராசாத்தி,கோகி நால்வரும் எதுவும் பிரச்சனை ஆகிவிடகூடாது என வெளியே வந்தனர்.
ஊர் மக்களின் முன்னிலையில் “இவங்கதான் என் அம்மா, அப்பா இவங்களுக்கு செம்பாவை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதுல முழு சம்மதம். அவங்க ஏற்கனவே செம்பாவை பொண்ணு கேட்க வரதாதான் இருந்தாங்க. அதுக்குள்ள இப்படி நடக்குன்னு எதிர்பாக்கலை” என்றான்.
“இல்லை தம்பி. நீங்க அந்த பொண்ணை கல்யாணம் பண்ணபோறவர்தானே தவிர பண்ணலையே தம்பி” என அந்த நபர் சொன்னதும்…
தன் அம்மா அப்பாவிடம் சில விஷயத்தை பேசியவன்
அங்கே நின்றிருந்த செம்பாவை அழைத்தான்.
அவன் முன் வந்தாள். அழுது அழுது முகம் வீங்கி தலைமூடியெல்லாம் கலைந்து பார்க்கவே பரிதாபமாக இருந்தது பெண்ணவளின் முகம்.
“ உன் வாழ்க்கையில் என்னை தவிர வேற யாருக்காவது இடம் இருக்கா?”
“இல்லை” என தலையசைத்தாள்.
“என் மேல உனக்கு நம்பிக்கை இருக்கா பட்டாசு? நான் உன்னை நல்லா பார்த்துக்குவேன்னு”
“இருக்கு” என்றாள்…
இந்த சூழ்நிலையில் நான் கேட்கிறது சரியில்லைதான். ஆனாலும் என் பட்டாசுக்காதான் இதையும் நான் செய்ய போறேன் என்றவன் “என்னை கல்யாணம் பண்ண உனக்கு சம்மதமா?” என கேட்க….
அவன் எதற்காக கேட்கிறான் என்பதை அறிந்தவள் “சம்மதம்” என்றாள்
“அங்கே என்ன நடக்கிறது” என ஓரமாக பார்த்து நின்ற கோகியை அழைத்தான் சமர்.
அவனிடம் வந்து நிற்க, அவளிடம் சில விஷயங்களை கூற அதிர்ந்து அவன் முகத்தை பார்க்க “போ போய் எடுத்துட்டு வா” என்றதும் வீட்டிற்குள் சென்று கையில் மஞ்சள் கயிறுடன் வெளியே வந்தாள் கோகி.
அவள் கையில் இருந்த மஞ்சள் கயிறை வாங்கியவன், தன் அம்மா, அப்பாவிடம் கொடுத்து வாங்கிகொண்டு, அவர்களை பின்னால் வாங்க என்றபடி, செம்பாவை அழைத்துகொண்டு வீட்டிற்குள் சென்றான்.
நேற்று வரை உயிருடன் அந்த வீட்டில் வலம் வந்த இரு ஜீவன்கள் இன்று உயிரில்லாத ஜடமாய் நடுவாசலில் படுக்க வைக்கபட்டிருக்க அவர்கள் முன் செம்பாவுடன் நின்றான்.
செம்பா கேள்வியாய் அவனை பார்க்க, “உங்க அப்பா, அம்மா மனசுல உன்னோட கல்யாணத்தை நல்லபடியா, அவங்க முன்னாடி நின்று நடத்தனும்னு நினைச்சிருப்பாங்கல்ல, அதுதான் முடியாமல் போய்டுச்சி, அவங்க உடல் முன்னாடியாவது நடக்கட்டும். எப்படியும் அவங்களோட ஆத்மா உங்களை சுற்றிதான் இருக்கும்” என்றவன் தன் பெற்றோரை பார்க்க அவர்களும் “கட்டு” என்றதும்… செம்பாவின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டான் சமர்.
சமர் தாலி கட்டவும் கற்பகம் பாலாவிடம் “இனிமே நீ இங்கே இருந்து என்ன பண்ண போற வா” என்றார்.
“நான் வரலை எல்லாம் முடியட்டும் நீங்க போங்கம்மா” என்றான் பாலா…
“அதான் அவங்க உரிமையுள்ள மருமகன் இருக்கானே, அவன் பார்த்துப்பான்” என்றார் சமரை பார்த்து…
“நானும் உரிமையுள்ள மருமகன்தான்.”
“நீ ஒன்னும் அவங்க வீட்ல பொண்ணு கட்டலையே”
“யார் சொன்னால் நான் இந்த வீட்டோட மூத்த மருமகன். ரஞ்சி என்னோட மனைவி” என்றதும் கற்பகம் அதிர்ந்து சிலையாய் நிற்க… நாராயணண், சோலையம்மாள் இருவரும் “என்ன பாலா சொல்ற” என்றனர்.
செம்பா, கோகி, ராசாத்தி மூவரும் ரஞ்சியை பார்க்க கலங்கிய விழிகளுடன் “ஆமா” என்றாள்.
எனக்கும் ரஞ்சிக்கும் நான்கு வருஷத்துக்கு முன்னாடியே கல்யாணம் முடிந்துவிட்டது. இந்த கல்யாணம் நடக்க யார் காரணம் தெரியுமா? நீங்கதான் என்றான் கற்பகத்தை நோக்கி.
“நானா..? நான் என்னடா பண்ணேன்”.
“நீங்க எப்பவும் அத்தையையும் அவங்க பொண்ணுங்களையும் திட்டிட்டு, உங்க வாயில் என்ன வார்த்தை வருதோ அதை பேசிட்டு, என்கிட்ட ஒரு விஷயம் சொல்லுவிங்க நியாபகம் இருக்கா, யாரை வேணாலும் கட்டிக்கோ ஆனால் உங்க அத்தை மகளை மட்டும் கட்டனும்னு நினைக்காதேன்னு அந்த வார்த்தைதான் என்னை ரஞ்சியை பார்க்க வச்சது, நேசிக்க வச்சது. உங்களுக்கு பயந்தே என் காதலை அவள் ஏற்றுக்கொள்ளவில்லை. அடுத்து அத்தை. அத்தையும் அவங்க ஓடிப்போய் கல்யாணம் பண்ணி நிறைய பிரச்சனையை சந்திச்சாங்க. அதனால் கண்டிப்பா எங்க காதலுக்கு சம்மதிக்க மாட்டாங்கன்னு அவள் குடும்பத்துக்காக ரொம்ப யோசித்தாள். முதல்ல என் காதலை ஏற்றுக்கவே இல்லை. கொஞ்சம் கொஞ்சமாய் அவள் மனசை மாற்றி என் காதலையும் ஏற்றுக்க வைத்தேன். நான் படிச்சி முடிக்கவும் ரஞ்சிக்கும் ஏழுமலை அண்ணாவுக்கும் நிச்சயம் நடந்து முடிந்தது. ரஞ்சி பயந்து எனக்கு போன் பண்ணாள். எனக்கு என்ன பண்றதுன்னு தெரியாமல் ஏழுமலை அண்ணாகிட்டவே பேசினேன். அவர்தான் உங்க ரெண்டு பேரோட காதலையும் வீட்ல ஏற்றுக்கமாட்டாங்க. வேற வழி இல்லை. நீங்க வீட்டை விட்டு வெளியே போய் கல்யாணம் பண்ணிக்கோங்க. வீட்டு சம்மதத்தோட கல்யாணம் நடக்கனும்னா, இந்த ஜென்மத்துல உங்களுக்கு கல்யாணம் நடக்காதுன்னு சொன்னாங்க. அதான் ரஞ்சியை கூப்பிட்டு போய் கல்யாணம் முடித்தேன். உங்களுக்கு தெரிந்தால் கண்டிப்பா எங்களை வாழவிடமாட்டிங்க, ரஞ்சியை என்கிட்ட இருந்து பிரிச்சிடுவிங்கன்னுதான் அவள் என்னை கல்யாணம் பண்ணிருக்காள்னு தெரிய கூடாதுன்னு மறைத்தேன். இது என் நண்பர்கள் யாருக்குமே தெரியாது சமரை தவிர. அவன் பாரின்ல படிச்சிட்டு இருந்தேன்.
அவனுக்கும் எனக்கு கல்யாணம் முடிந்து என் பொண்ணு பிறந்தப்போதான் சொன்னேன். எனக்கு கல்யாணம் பண்ணி வைத்து, வீடு எல்லாம் ரெடி பண்ணது நேத்ரன் அப்பாவும் வைஷூ அம்மாவும்தான். நீங்க என்னை பார்க்க வரும்போது சமரோட இன்னொரு வீட்ல தங்கிப்பேன். செம்பாவை சமருக்கு பொண்ணு கேட்கத்தான் ரஞ்சியை இங்கே கூப்பிட்டு வரதாக இருந்தது. ஆனால் அவளை இந்த சூழ்நிலையில் இங்கே கூப்பிட்டு வருவேன்னு நினைக்கலை” என்றான் பாலா.
நாராயணண் அதற்குள் தன் பேத்தியை தூக்கி வைத்திருந்தார். அந்த குழந்தையை பார்த்ததும் கற்பகம் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தது. தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடுமல்லவா… அப்படியே கற்பகத்தின் முக சாயலில் இருந்தாள். அவளை பார்த்ததும் அவருக்கு கர்வமாக இருந்தது.
கற்பகத்தை பார்த்து “பாத்தி” என்றதும் சப்தமும் அடங்கியது அவருக்கு. பாலா எல்லாரின் முகத்தையும் போட்டாவில் அடிக்கடி காட்டியிருப்பதால் கற்பகத்தை பார்த்ததும் அழைத்து விட்டாள். மீண்டும் “பாத்தி தூக்கு, தூக்கு” என சொல்லவும், அங்கே நிற்காமல் அந்த இடத்தை விட்டு கண்ணிரோடு வெளியேறினார் கற்பகம்.
அவர் இத்தனை நாட்கள் சந்திராவை பேசியதற்கு அவளின் மகளே அந்த வீட்டின் மருமகளாய் வந்துவிட்டாள். இதைவிட பெரிய தண்டனை அவருக்கு இருக்காது.
அதன்பின் நடக்கவேண்டிய எல்லா விஷயங்களும் உடனுக்குடன் நடந்தன. இருவரின் உடல் சுடுகாட்டிற்கு கொண்டு சென்று அடக்கம் செய்யபட்டது. சமர்தான் கொள்ளி வைத்தான்.
நேத்ரன், வைஷூ இருவரும் செம்பாவுடன் அவள் வீட்டில்தான் இருந்தனர்.
அந்த நாள் முடிந்து அடுத்த நாள் ஆரம்பமாகியது.
செம்பா அழுதபடியே படுத்து இருக்க, ரஞ்சி அவள் தலையை தடவி கொடுக்க, அவள் செய்வதை பார்த்து ரஞ்சியின் மகள் ஹரிணியும் தடவிவிட, அவளை தன்னோடு அணைத்து கொள்ள அவள் கண்ணிரையும் துடைத்துவிட்டது அந்த மழலை.
“டேய்!, பாலா, பாலா வெளியே வா!” என சத்தம் கேட்க, வெளியே வந்தான் பாலா. கற்பகம் நின்றிருந்தார்.
“என்னம்மா.?”
“எவ்வளவு நேரம் இங்கேயே இருக்க போறிங்க?”
“வறேன்ம்மா, நீங்க போங்க”
“உன்னை கேட்கலை என் பேத்தியை எங்கே என்க…”
“பேத்தியா? அவளை ஏன் தேடுறிங்க” என பாலா முழிக்க…
“என் பேத்திதானே அவ”
“ஆமா…”
“ அப்புறம் நான் தேடாமல் வேற யார் தேடுவாள். நீ வா, வராதே, அது எனக்கு கவலை இல்லை. என் பேத்தியை எங்கே?”
“அவள் உள்ளே அவங்க அம்மாகிட்ட இருக்காள்.”
“போ போய் என் பேத்தியை தூக்கிட்டு வா” என்றதும் பாலா “இருங்க வரேன்” என உள்ளே சென்று குழந்தையை தூக்க “ஏங்க அவ இங்கேயே இருக்கட்டுமே” என பயத்துடன் ரஞ்சி சொல்ல..
“ அம்மா கேக்குறாங்க ரஞ்சி”.
“உங்க அம்மாவா, அவங்க என் குழந்தையை எதுவும் பண்ணிட்டாங்கன்னா”
“அப்படி எதுவும் பண்ண மாட்டாங்க ரஞ்சி கொடு” என்றார் வைஷ்ணவி.
“அம்மா உங்களுக்கு அவங்களை பற்றி தெரியும்ல. எங்களை அவங்களுக்கு சுத்தமா பிடிக்காது.”
“உங்களை பிடிக்காது ரஞ்சி. உன் பொண்ணை இல்லை. இப்போ அவங்க பேத்தி, கொண்டு போ பாலா, என்ன பண்றாங்கன்னு பார்க்கலாம்” என்றதும் பாலா ஹரிணியை தூக்கிகொண்டு வெளியே வந்தான்.
கற்பகத்துக்கு தன் பேத்தியை பார்த்ததும் முகம் பிரகாசித்தது. தன் முகசாயலில் இருப்பதாலே அவளை அதிகமாக பிடித்துவிட்டது. அவளை கைகளில் வாங்க குழந்தை அவருடன் நன்றாக சேர்ந்து கொண்டது.
“உன் பெயர் என்ன தங்கம்.”
“தங்கமில்ல பாத்தி, ஹதிணி” என்றது தன் மழலை குரலில்
“என்ன சொல்றாள்” என பாலாவை பார்த்து கேட்க….
“ஹரிணிம்மா”
“ஹரிணியா” என்றவருக்கு ஒருநாள் பாலாவிடம் உனக்கு மகள் பிறந்தாள் இந்த பெயர்தான் வைக்கனும் என சொன்னது நியாபகத்தில் வர பாலாவை பார்த்தார். “நீங்க வைக்க சொன்ன பெயர்தான்ம்மா” என்றான்.
“சாணியை கலக்கி முகத்திலேயே ஊத்திட்டு, இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. நான் என் பேத்தியை கொண்டு போறேன். அவள் அழுதால் போன் பண்றேன்” என தூக்கி கொண்டு சென்றார்.
நாராயணனிடம் போன் செய்து விஷயத்தை சொல்ல, அவ அங்கே வருவான்னு தெரியும் பாலா. நேற்று அங்கே இருந்து வந்து நேரத்துல இருந்து பிள்ளையை பற்றிதான் பேசினாள். ஒருவார்த்தை கூட வேற யாரையும் பேசலை. என் பொண்டாட்டி நல்லவதான். கொஞ்சம் கோபக்காரி. என் தங்கச்சி பண்ணுண தவறால் அவளை முழுவதும் வெறுத்து அவளை கடைசி வரைக்கும் ஏற்றுக்காமலே போய்ட்டாள். உன் மனைவியை அவ மனதால் ஏற்றுக்கமாட்டாள். அதையே உன் பொண்ணு விஷயத்துல எதிர் பார்க்காதே. உன் கல்யாணம் அவளோட கனவு. உன் குழந்தை அவளுக்கு வரம். அந்த வரத்தை அவளுக்கு நீ கொடுத்துட்ட, இனிமே யாரை பற்றியும் கவலைபடமாட்டாள். அதே மாதிரி நீயும் எங்க பேத்தியை பற்றி கவலைபடாதே, நாங்க எங்க வாரிசை நல்லாவே பார்த்துப்போம் என அழைப்பை துண்டித்தார் நாராயணண்.
“என்ன பாலா. உங்க அப்பா என்ன சொல்றார்” என நேத்ரன் கேட்க,
பாலா அவர் பேசியதை எல்லாம் கூறினான்.
“நான் சொன்னேன்ல உன் பொண்ணை பற்றி கவலைபடாதே. இங்கே நடக்க வேண்டியதை பாருங்க. அப்புறம் நாங்களும் கிளம்புறோம் பாலா. எல்லாரையும் பார்த்துக்கோங்க”, என்றவர்கள் பாலா, சமரை தவிர அவர்கள் நண்பர்களை அழைத்து கொண்டு கிளம்ப, ஆத்வியின் பார்வை முழுவதும் குகனின் மீது இருந்தது. அவனோ அவளை கண்டும் காணாதது போல முகத்தை வேறு பக்கம் திருப்பினான். அந்த ஊரை விட்டு கிளம்ப ஆத்வி மனம் தவியாய் தவித்தது.