இன்னிசை-1

4.9
(7)

இன்னிசை- 1

” என்ன முகுந்தன் போகலாமா?” என்று மிடுக்காக வினவினான் ஜீவாத்மன்.

” சார் இருட்டிடுச்சு. காலைல போகலாமா? நீங்களும் இப்பத்தான் ரொம்ப தூரத்துல இருந்து வந்திருக்கீங்க. கொஞ்சம் ஓய்வெடுக்கலாம்ல…” என்று அக்கறையாக கூற.

அவரைக் கூர்ந்து பார்த்த ஜீவாத்மன்,” என்ன பக்கத்து இலைக்கு பாயாசமா?”

என்று வினவினான்.

“சார்…” என்று முகுந்தன் அதிர்ச்சியாக பார்க்க.

“எனக்கு ஒன்னும் டயர்டா இல்லை முகுந்தன். உங்களுக்கு முடியலைன்னா நோ ப்ராப்ளம். நானே போய்ட்டு வரேன்.”

” அப்படியெல்லாம் இல்லை சார். நானே ஜீப் ஓட்டிட்டு வர்றேன்.” என்ற முகுந்தனோ மனதிற்குள்,’ ஐயோ வந்த அன்னைக்கே என்னோட வேலைக்கு வேட்டு வச்சுடுவாரு போல இருக்கு.’ என்று நினைத்தவர் அமைதியாக கூடலூர் வனப்பகுதியை நோக்கி வண்டியை ஓட்டினார்.

ஜீவாத்மன் இன்றைக்கு தான் கூடலூர் மாவட்ட வன அதிகாரியாக பொறுப்பேற்றிருக்கிறான். இன்னும் சொல்லப் போனால் சென்னையிலிருந்து கூடலூருக்கு வந்து சிலமணி நேரமே ஆகிறது.

வந்தவன் ஓய்வெடுக்காமால் வனத்தை சுற்றிப் பார்க்க கிளம்பி விட்டான்.

முகுந்தன் அமைதியாக வர…

“என்ன முகுந்தன் ரொம்ப அமைதியா இருக்கீங்க? என் மேல கோபமா?”

“அதெல்லாம் ஒன்னும் இல்லை சார்.” என்றவனோ மனதிற்குள், ‘இவரு எப்படிப்பட்டவர்னே தெரியலையே! சும்மா, சும்மா வாயை புடுங்குறாரு. முன்னாடி இருந்த சார் எவ்வளவு நல்லவர். அவரை ஏன் ட்ரான்ஸ்பர் பண்ணாங்க…’ என்று தனக்குள் எண்ணிக் கொண்டிருந்தவனோ, மௌனத்தை தத்தெடுத்துக் கொண்டான்.

முகுந்தனை யோசனையாக பார்த்துக் கொண்டே வந்தான் ஜீவாத்மன்.

அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்து விட. கீழே இறங்கிய ஜீவாத்மனோ மூச்சை நன்றாக உள்ளிழுத்தான்.

அந்த வனத்தில் மாலை மயங்கி இருள் சூழ ஆரம்பித்திருந்தது. அந்த ஏகாந்தமும், அமைதியும் ஜீவாத்மனை இளக செய்தது.

 “முகுந்தன் ஏதாவது பேசுங்க…”

” என்ன சார் பேசுறது?” என்று தயங்க.

” ஓகே… பேச எதுவும் இல்லைன்னா பாடவாவது செய்யுங்க.” என்று கூலாக கூற‌.

நடந்துக் கொண்டிருந்த முகுந்தன் அதிர்ந்து நின்றான்.

” என்னாச்சு முகுந்தன்? ஏன் இப்படி நின்னுட்டீங்க? “

” அது வந்து சார்…” என்று முகுந்தன் தயங்க.

” ஓ… பாட தெரியாதா? சரி விடுங்க. இதுக்கு ஏன் இவ்வளவு தயக்கம்.நான் பாடுறேன்.” என்று கூறி புன்னகைத்தான் ஜீவாத்மன்.

 முகுந்தனோ மீண்டும் மனதிற்குள் அதிர்ந்தான். ஜெய்ஹிந்த் படத்துல ரஞ்சிதா பாடும் பாடல் அவனது செவியில் வந்து போக, மிரண்டு போனான்.

அவனது முகத்தைப் பார்த்த ஜீவாத்மனோ, ” பயப்படாதீங்க முகுந்தன்… நான் நல்லா பாடுவேன்.” என்று அவரை தைரியப்படுத்தி விட்டு பாட ஆரம்பித்தான்.

“இளநெஞ்சே வா

தென்றல் தேரினில்

எங்கும் போய் வரலாம்

அட அங்கே பார்

மஞ்சள் வான் முகில்

கையால் நாம் தொடலாம்

அற்புதம் என்ன உரைப்பேன்

இங்கே வர எப்பவும்

என்னை மறப்பேன்

கற்பனை கொட்டிக் குவிப்பேன்

இங்கே அந்த கம்பனை

வம்புக்கிழுப்பேன்….” என்று இனிமையாக பாடினான்.

அவனது குரலைக் கேட்டு திரும்பினாள் அவள்.

யோசனையுடன் அங்கே வர…

அந்த நேரத்தில் ஒரு பெண்ணை அங்கு எதிர்பார்க்காத ஜீவாத்மனும் அதிர்ந்தான். பெண்ணோ, இல்லை வனமோகினியோ என ஒரு நிமிடம் குழம்பித் தான் போனான்.

 வெள்ளை நிற சுடிதாரில் தலையை விரித்து போட்டுக் கொண்டு கையில் எதையோ வைத்திருந்தவளோ, ஜீவாத்மனை வசியப்படுத்தினாள்.

ஒரு சில நொடி அந்த வனமோகினியின் விழி வீச்சில் மயங்கி இருந்த ஜீவாத்மனோ தலையை குலுக்கிக் கொண்டு, “யார் நீ?” இங்கே என்ன பண்ணிட்டு இருக்க?” என்று சற்று கடுமையுடன் வினவினான்.

” முதல்ல நீங்க யாரு? இந்த காட்டுல உங்களுக்கு என்ன வேலை?” என்று அதிகாரமாக வினவினாள் அவள்.

” நான் தான் இந்த காட்டுக்கு ராஜா. அதாவது மாவட்ட வன அலுவலர். இப்போ சொல்லு… நீ யாரு? இங்கே என்ன திருட்டுத்தனம் பண்ணிட்டு இருக்க?” என்று நக்கலாக வினவினான் ஜீவாத்மன்.

” நீங்க ஃபாரஸ்ட் ஆஃபிஸரா இருக்கலாம். அதுக்காக என்ன வேணும்னாலும் பேசலாமா? வார்த்தையை கவனமாக பேசுங்க.” என்று சீற்றத்துடன் வார்த்தைகளை கொட்டினாள்.

ஜீவாத்மனும் கோபத்துடன் ஏதோ கூற வர…

அதற்குள் அருகில் இருந்த டிரைவர், “சார்… சார்… அவங்களும் இங்க வொர்க் பண்றவங்க தான். ஃபாரஸ்டர்…” என்றான்.

” ஓ…” என்ற ஜீவாத்மனோ அவளை மேலிருந்து கீழ் ஆராய்ச்சியாக பார்த்தான்.

 பல்லை கடித்துக் கொண்டு நின்றாள் மேனகா.

” யூனிஃபார்ம் எங்க? “

” டியூட்டி டைம் முடிஞ்சிருச்சு.” என்று எங்கோ பார்த்துக் கொண்டு கூறினாள் மேனகா.

” ஓ… ட்வெண்டி ஃபோர் இன்டூ செவன் டேய்ஸ் வொர்க்கிங் டேய்ஸ் தான். அது உங்களுக்கு தெரியாதா மிஸ்?” என்று கேலியாக, கேள்வியாக முடித்தான் ஜீவாத்மன்.

” எமர்ஜென்சினா தான் வரணும். அது உங்களுக்கு தெரியாதா?” என்றாள்.

” ஓ நல்லா தெரியும். இப்போ ஒன்னும் எமர்ஜென்சி இல்லையே. எதுக்கு இப்போ தேவையில்லாமல் வந்தீங்க? இனி மேல் இது போல் வராதீங்க.” என்று கண்டிப்புடன் கூறினான்.

முகுந்தன் மீண்டும் இடையில் நுழைந்தான். “சார்… மேடம் அவங்க ஓய்வு நேரத்தில் வந்து காட்டுல கிடக்கிற பேப்பர், பாட்டில் இதெல்லாம் எடுப்பாங்க. வேற எதுவும் பண்ண மாட்டாங்க.”

” ஓ… இது ரிஸ்டிரிக்ஷன் ஏரியா தானே முகுந்தன். இங்கே யாரும் வரக்கூடாது. அப்படி இருக்கும் போது இங்கே எப்படி குப்பைகள் எல்லாம் வரும்.” என்று முகுந்தனிடம் வினவியவனின் பார்வை எல்லாம் பாவையிடமே இருந்தது.

“அது வந்து சார்…” என்று என்ன சொல்வது என்று தெரியாமல் முகுந்தன் தயங்க.

மேனகாவிற்கோ பேச்சு போகும் பாதை, வேறு எதையோ நினைவுபடுத்த அங்கிருந்து கிளம்பினால் போதும் என்றானது.

“சாரி சார்… இனிமேல் இப்படி நடக்காது.” என்று கூறி விட்டு அங்கிருந்து கிளம்ப முயன்றாள்.

ஜீவாத்மனோ அவள் பெயரை தெரிந்துக் கொள்ள எண்ணியவன்,” ஹலோ மிஸ்…” என்று அழைத்தான்.

 அவள் திரும்பிப் பார்க்காமலே செல்லவும், ” மோகினி… உங்களைத்தான்…. பேர் என்னன்னு சொல்லிட்டு போங்க.” என்று சற்று வேகமாக கத்தினான்.

திரும்பி அவனை ஒரு நிமிடம் பார்த்தாள் மேனகா. கண்ணீர் அவளது பார்வையை மறைக்க… வேகமாக துடைத்தவள் அங்கிருந்து ஓடி விட்டாள்.

“நான் என்ன தப்பா கேட்டேன்? பேரை தானே கேட்டேன். எதுக்கு அழறாங்க?” என்று யோசனையாக வினவ.

” அது வந்து சார்… அவங்க அத்தை பையன்… அதான் போன மாசம் மர்மமான முறையில் இறந்த ஃபாரஸ்ட் ரேஞ்சர். . அவரு அப்படி தான் கூப்பிடுவாரு. ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்றதா இருந்தது. அந்த பையனுக்கு தான் அந்த குடுப்பினை இல்லை. கடவுள் அழைச்சிக்கிட்டார்.” என்று மெதுவான குரலில் கூறினார்.

‘”ரிஷிவர்மன்…” என்று முணுமுணுத்தவன், ஏன் என்னாச்சு என்று எந்த கேள்வியும் கேட்கவில்லை. ஏனென்றால் அதைப் பற்றிய எல்லா தகவலும் தான் அவனுக்கு முன்பே தெரியும். அதனால் அந்த பேச்சை நிறுத்த எண்ணியவன்,” அது அடுத்தவங்களுடைய பர்சனல். அது நமக்கு எதுக்கு விடுங்க முகுந்தன். அந்த ரிஷிவர்மன் கேரக்டர் எப்படி?” என்று அவரை ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டே வினவினான் ஜீவாத்மன்.

ஒரு நொடி கூட யோசிக்காமல்‍, “ரொம்ப நல்லவரு. காடு தான் உயிர். இப்போ உள்ளவரோ…” என்று ஏதோ கூற வர.

” ஓகே அதை விடுங்க… இனிமே அந்த பொண்ணை இப்படி அன் டைம்ல தனியா வர வேணாம்னு சொல்லுங்க.”

என்றான்.

“சரிங்க சார்…” என்றவனோ, மனதிற்குள், ‘மேடமுக்கு வேலை, பொழுதுபோக்கு, தோழி எல்லாமே இந்த வனம் தானே. வராக்கூடாதுன்னு சொன்னாலும் கேட்க மாட்டாங்களே. இரண்டு பேர் கிட்டேயும் மாட்டிக்கிட்டு இனி நான் தான் முழிக்கப் போறேன்.’ என்று எண்ணினான்.

சாதரணமாக பார்வையாலே அடுத்தவரின் மனதைப் படிக்கும் ஜீவாத்மனோ, அந்த மயக்கு மோகினியின் நினைவில் இருந்ததால், முகுந்தனது கவலையை அறியவில்லை.

ஆனால் இந்த முறை அந்த மயக்கு மோகினியை நினைக்கும் போது அவனது முகம் ஏளனத்தை சுமந்தது.

 அங்கே அவளது இருப்பிடத்திற்கு சென்றவளோ, ‘மோகினி.’ என்ற வார்த்தையை நீண்ட நாள் கழித்து கேட்டதில் கண்கள் கலங்கி தவித்தாள்.

“மோகினி.” என்ற ஒற்றை வார்த்தையில் ரிஷிவர்மனின் முகம் வந்து போனது. பழைய நினைவுகளில் ஆழ்ந்தாள்.

‘ ” மேகி… இந்த எடத்தைப் பார்த்தா என்ன தோணுது.” என்று அவளை ஆர்வமாக பார்த்துக் கொண்டு வினவினான்.

” சூப்பரா இருக்கு அத்தான். யாரோட தொந்தரவும் இல்லாமல் அமைதியா இருக்கு. இயற்கையை பார்க்க, பார்க்க தெவிட்டாது. நீங்க ரொம்ப லக்கி அத்தான்.” என்று ஆர்வமாக சுற்றிப் பார்த்துக் கொண்டே கூறினாள் மேனகா.

” அதெல்லாம் விடு மேகி. வேற ஏதாவது தோணுதா?”

சிறது நேரம் யோசனைத்தவள்,” ஹான்.” என்று முகமெல்லாம் மலர புன்னகையுடன் ஏதோ கூற வர…

” ம்… சொல்லு மேகி…” என்று ஆர்வமாக பரபரத்தான் ரிஷிவர்மன்.

” இந்த இடத்தை பார்த்ததுமே பாடணும்னு தோணுச்சு. பாடவா அத்தான். இல்லை… இங்கே இருக்குற அனிமல்ஸுக்கு டிஸ்டர்பா இருக்குமா?” என்று அப்பாவியாக வினவினாள் மேனகா.

” ஆமாம்… நீ பாடுனா இங்க இருக்க விலங்குகளெல்லாம் தெரிச்சு ஓடிடும். ஊருல இருக்கும் போது தான் பாடி, பாடி என் உசுர வாங்கிறேனு பார்த்தா, இங்கேயும்மா…” சலிப்பாக ரிஷிவர்மன் கூற.

” அத்தான்…” என்று முறைத்தாள் மேனகா.

அப்போது தான் லூஸ்டாக் விட்டதை புரிந்துக் கொண்ட ரிஷிவர்மன் தலையில் லேசாக தட்டிக் கொண்டு, ” சாரி மேகி… அது சும்மா சொன்னேன் டா… நீ சூப்பரா பாடுவ. அதான் அத்தானுக்கு தெரியுமே. அங்க ஊருல தான் உன் கிட்ட பேச முடியலன்னு உன்னை இங்கே வர வச்சேன். நீ பாட்டுக்கும் பாடுறேன், ஆடுறேன்னு போயிட்டா என்ன பண்றது. புரிஞ்சுக்கோ மேகி.” என்று அவளை சமாதானம் படுத்த முயன்றான் ரிஷிவர்மன்.

” அத்தான்… அப்போ அனிமல்ஸ கணக்கெடுப்பதற்காக என்ன வர சொல்லலையா?”

” ப்ச்… அதுக்கும் தான் ஆள் தேவை. ஆனால் அதுக்கு நீ தான் வந்தாகணும்னு அவசியம் இல்லை. நிறைய இயற்கை ஆர்வலர், காலேஜ் ஸ்டூடண்ஸ்னு நிறைய பேர் இருக்காங்க. இதை சாக்காக வச்சு உன் கிட்ட பேசலாம்னு தான் கூப்பிட்டேன்.”

” அத்தான் பொய் சொன்னீங்களா? நீங்க சொன்னதும் உங்களுக்கு உதவுவதற்காக காலேஜுக்கு வேற லீவ் போட்டுட்டு வந்து இருக்கேன்.” என்று ரிஷிவர்மனைப் பார்த்து கூறினாள்.

” ஆமா நீ ஆசைப்பட்டு பி.எஸ்.ஸி ஃபாரஸ்டரில சேர்ந்தியா? என்னோட வொர்க் பண்ணனுங்குறதுக்காகத் தானே சேர்ந்தே?” என்று அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே ரிஷிவர்மன் கூற.

” ஆமாம்… உங்களுக்காகத் தான் சேர்ந்தேன். அதுக்காக என்னை கிண்டல் பண்ணுவீங்களா.” என்று சிணுங்கினாள் மேனகா.

” அது சரி… இப்பவும் எனக்காகத் தான் கூப்பிட்டேன். அப்புறமென்ன? ” என்று அவளை ஆர்வமாக பார்த்துக் கொண்டே வினவினான்.

” இருந்தாலும் அத்தை, மாமாவை விட்டுட்டு வந்திருக்கேன். அவசியமில்லைன்னா வந்திருக்க மாட்டேன்.” என்றாள் மேனகா.

அத்தை, மாமாவுடன் மேனகா ஊட்டியிலிருக்கிறாள். சிறு வயதிலே பெற்றோரை இழந்த அவளுக்கு எல்லாமே அவர்கள் தான். ரிஷிவர்மன் கூட ப்ரெண்ட்ஸோட டூருக்கு செல்வான். ஆனால் மேனகாவோ அவர்களை விட்டு வேறு எங்கும் செல்ல மாட்டாள்.ஏதாவது விசேஷத்திற்கு சென்றாலும் அவளுக்கு அங்கு இருக்கவே பிடிக்காது. எப்போதோடா ஊட்டியிலிருக்கும் வீட்டிற்கு செல்வோம் என்று இருக்கும். அப்படி இருக்க, இன்று ரிஷிவர்மன் உதவிக்கு அழைத்ததும் கிளம்பி வந்து விட்டாள்.

ரிஷிவர்மன் இரண்டு வருடம் ஃபாரஸ்ட் அப்ரண்டீஸாக ட்ரெயினிங் எடுத்து விட்டு கூடலூருக்கு வந்து ஆறுமாதம் தான் ஆகியிருந்தது.

விலங்குகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்க ஆட்கள் வேண்டும் என்று கூற, தனது மாமன் மகளை வர வைத்திருந்தான்.

” எனக்காக வர மாட்டீயா மோகினி.” என்று அவளைப் பார்த்து மென்மையான குரலில் வினவினான்.

அவன் குரல் செய்த மாயாஜாலத்தை எல்லாம் ஒதுக்கி விட்டு மோகினி என்று அவன் கூறியது மட்டும் பெரிதாக எடுத்துக் கொண்டு,” அத்தான் மோகினி சொல்லாதீங்க. எனக்கு பிடிக்காதுன்னு தெரியும் தானே.”

” நானும் தான் அத்தான்னு சொல்லாதேனு சொல்றேன் கேட்குறீயா?”

” அப்புறம் என்ன வாடா ரிஷினு கூப்பிட முடியும்.” என்றவள் அங்கிருந்து சிட்டாக பறக்க….

” அடியே மேகி… எல்லாம் அம்மா, அப்பா கொடுக்குற செல்லம் தான்… என்னை விட நீ தான அவங்களுக்கு முக்கியம்.” என்று பொருமியவன் அவளை துரத்திக் கொண்டே வந்தான்.’

நிகழ்விற்கு வந்த மேனகா கண்களை துடைத்துக் கொண்டாள்.

‘ரிஷி… நான் ஃபாரஸ்டரா வந்தே இருக்க கூடாது. நான் மட்டும் வராமல் போயிருந்தால் நீ உயிரோட இருந்திருப்ப… அத்தையும், மாமாவும் உன்னை இழந்துட்டு தவிச்சு இருக்க மாட்டாங்க. அப்பா, அம்மா இல்லாத என்னைய அந்த குறை தெரியாமல் கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்கிட்டாங்க. ஆனா அவங்களுக்கு நான் செஞ்ச கைமாறு அவங்க பையனை பிரிச்சது தான். இதை நினைச்சாலே என்னால தூங்க முடியலை. குற்ற உணர்ச்சி என்னை கொல்லாமல் கொல்லுது.

 நீ எப்பவும் சொல்லுவியே, என்னை விட நீ தான அவங்களுக்கு முக்கியம்னு. அது உண்மை தான். என்னை அத்தை, மாமா அங்க வர சொல்றாங்க. ஆனா என்னால அங்கு போக முடியல‌. எனக்கு கல்யாணம் பண்ணனுமாம். நீ எங்களை விட்டு போய் ஒரு மாசம் கூட ஆகலை. ஆனா என்னைப் பற்றி கவலைப் பட ஆரம்பிச்சிட்டாங்க. அவங்க மனசை கஷ்டப்படுத்தப் போறேன். என் வாழ்க்கையில் கல்யாணங்குற பேச்சுக்கு இடமே கிடையாது.

 இந்த வனத்தை நேசிச்சு, இங்கேயே வாழ்ந்து என் வாழ்க்கையை முடிச்சுப்பேன்.’ என்று தனக்குள் புலம்பிக் கொண்டு உறங்க முயன்றாள்.

அப்போது அவளுக்குத் தெரியவில்லை… அவளை பாடாய் படுத்தி அவள் மனதில் இடம் பிடிக்க காளையொருவன் வந்து விட்டதை அறியவில்லை.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!