இன்னிசை -10

4.5
(2)

இன்னிசை-10

 

மேனகா திகைத்து நின்றதெல்லாம் ஒரு நொடி தான் பிறகு சுதாரித்துக் கொண்டு ஜீவாத்மனை பார்த்தவள்,”நான் இங்கே அடிக்கடி வருவதும், நான் எதுக்கு அழறேங்குறது என்னோட பர்ஸ்னல். அதைப் பத்தி உங்க கிட்ட சொல்லி, என்னைப் பற்றி நிரூபிக்கணும்னு அவசியம் எனக்கு இல்லை. ஆனால் கோல்ட் கிட்ட… ப்ச் பாட்டி கிட்ட தப்பு செஞ்சவுகளுக்கு தண்டனை கிடைக்காது நான் சொன்னதுக்கு காரணம். நம்முடைய ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் தான். இங்க ஒரு மரத்தை வெட்டினாலோ, இல்லை விலங்குகளை காயப்படுத்தினாலும் கூட கடுமையான தண்டனை உண்டு. ஆனால் அவங்கவங்க வேலையை ஒழுங்கா செய்யாதவர்களுக்கு தண்டனை கிடைக்க மாட்டேங்குது. அதைத் தான் அவங்களுக்கு சொன்னேன்.” என்று இயந்திரத்தனமான குரலில் கூறினாள்.

 

” ஷப்பா… கண்ணை கட்டுதே.” என்று புலம்பிய ஆதிரன், ” எனக்கு லைட்டா பசிக்குது. கிளம்புவோமா சார்?” என்று பேச்சை மாற்றினான்.

 

மேனகாவிடம் காட்ட முடியாத கோபத்தை எல்லாம் ஆதிரனிடம் காட்டினான் ஜீவாத்மன், ” உங்களுக்கு சாப்பிடறதுக்கு தான் சம்பளம் கொடுக்குறாங்களா. இப்ப தானே அங்க சாப்பிட்டீங்க. அப்புறம் என்ன? வாங்குற சம்பளத்துக்கு கொஞ்சமாவது வேலைப் பார்க்க வேண்டியது தானே? உங்கள மாதிரி ஆளுங்களால தான் நம்ம ஹோல் டிபார்ட்மெண்டையே குறை சொல்லிட்டு இருக்காங்க. அதை பத்தி எல்லாம் உங்களுக்கு ஒன்னும் கவலை கிடையாது. ஒன்னு சாப்பிடணும். இல்லனா பாட்டு பாடுறேன்னு எல்லாரையும் கூப்பிட்டு வச்சு கூத்தடிச்சிட்டு இருக்க வேண்டியது..” என்று சகட்டுமேனிக்கு திட்டித் தீர்த்தான்.

 

ஆதிரனையும், ஜீவாத்மனையும் திரும்பித் திரும்பிப் பார்த்து முழித்துக் கொண்டிருந்தான் முகுந்தன்.’ சாருக்கு கோபம் வந்தால் தம்பியை கூட பார்க்க மாட்டார் போல இப்படி திட்டுகிறார். நம்ம மாட்டுனோம் அவ்வளவு தான்.’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே மாட்டிக் கொண்டார் முகுந்தன்.

 

” முகுந்தன்… என் மூஞ்சியில என்ன எழுதி இருக்குன்னு இப்படி பார்த்துட்டு இருக்கீங்க. வண்டியை முதல்ல

எடுங்க.” என்று ஜீவாத்மன் கத்த.

 

” இதோ சார்.” என்ற முகுந்தனோ பதட்டமாக வண்டியில் ஏறினான்.

 

மேனகாவிற்கு தான் மனது மிகவும் கஷ்டமாக இருந்தது. ‘தன் மேல் உள்ள கோபத்தை தான் பாவம் இவர்கள் இருவரிடமும் காண்பிக்கிறார்.’ என்று எண்ணியவளோ மௌனமாக தனக்குள் குமைந்துக் கொண்டிருந்தாள்.

 

அவர்கள் இருவரும் செக்போஸ்ட்டில் இறங்கிக் கொண்டு அவனிடம் விடைப்பெற, ஜீவாத்மனோ அவர்களை கண்டுக்கொள்ளவில்லை. ஜீப் கிளம்பியதையும்‍ கவனிக்கவில்லை. மனதிற்குள் ஏதோ யோசனை ஓடிக் கொண்டிருந்தது.

 

அங்கிருந்து மறைந்துக் கொண்டிருந்த ஜீப்பையே மேனகா வெறித்துக் கொண்டிருந்தாள்.

 

” மேனகா.” என்று மென்மையாக அழைத்தான் ஆதிரன்.

 

அவனது கனிந்த முகத்தை பார்த்தவளது மனம் குன்ற,”சாரி சார்.” என்றுக் கூறினாள்.

 

அதே நேரம் ஆதிரனும்,” சாரி மேனகா.” என்றான்.

 

இருவரும் ஒரே நேரத்தில் மன்னிப்பு வேண்டியிருக்க, இருவரது முகத்திலும் புன்னகை மலர்ந்தது.

 

” நீங்க ஏன் சாரி சொல்றீங்க.” என்று மீண்டும் இருவரும் ஒரே நேரத்தில் கூறினர்.

 

இருவரது முகத்தில் புன்னகை இன்னும் மலர்ந்தது. சைகையில் நான் பேசுறேன் என்ற ஆதிரன்,” லேடிஸ் ஃபர்ஸ்ட். நீங்க முதல்ல சொல்லுங்க? எதுக்கு சாரி சொன்னீங்க?” என்றான்.

 

” ஹலோ… உங்க ஆஃபர்லாம் எனக்கு வேண்டாம். நான் பாரதியார் கட்சி. ஆணும், பெண்ணும் சமமுங்குற

அவரது கொள்கையை தீவிரமா ஃபாலோ பண்ணுறவ. அதனால நானே ஃபர்ஸ்ட் உங்களை கேட்குறேன். நீங்க முதல்ல சொல்லுங்க… நீங்க ஏன் சாரி கேட்டீங்க.” என்று ஆதிரனை பார்த்து புன்னகையுடன் வினவினாள்.

 

” அது வந்து… சார் திட்டினார்ல அதுக்காகத்தான் கேட்டேன் மேனகா.”

 

” ஓ… நீங்க கேட்கவே தேவையில்லை சார். நான் தான் உங்கக் கிட்ட சாரி கேட்கணும். என் மேல உள்ள கோபத்தை தான் உங்க கிட்ட காட்டிட்டு போயிட்டாரு. நீங்க ரொம்ப நல்லவரா இருக்கீங்க‌. அதான் எல்லோரும் உங்களை ஏச்சிட்டு இருக்காங்க. வேலையில் தப்பு இருந்தா கூட ஏதாவது சொல்லி இருக்கலாம். ஆனால் சாப்பிடறதெல்லாம் சொல்லிக் காட்டுறாரு. என்ன மனுஷரு இவர்? இப்படி கடுகடுன்னு இருந்தா, வீட்ல உள்ளவங்க எல்லாம் எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ?” என்றாள் மேனகா.

 

“ஆமாம்… ரொம்ப கஷ்டம் தான். அதுவும் இவருக்கு வரப்போற வைஃப் ரொம்ப பாவம்.” என்ற ஆதிரன் கண்கள் மின்ன அவளைப் பார்த்தான்.

 

” அப்படின்னு நீங்க தப்பு கணக்கு போடாதீங்க. இப்போ உள்ள ஜெனரேஷன்ல எல்லாம் வாய் மூடிட்டு அமைதியாகவெல்லாம் யாரும் இருக்கிறது கிடையாது. யார் என்ன எப்படி கொடுக்குறாங்களோ, அது அப்படியே திரும்ப வரும். கணவனே கண் கண்ட தெய்வம் என்கிற சென்டிமென்ட்லாம் வொர்க் அவுட் ஆகாது. என் கிட்ட எல்லாம் இப்படி யாராவது நடந்துக் கிட்டா, அமைதியா எல்லாம் இருக்க மாட்டேன். எதா இருந்தாலும் பட்டு பட்டுன்னு கேட்டுடுவேன். முதல் தடவையே நம்ம இதை தடுக்காம இருந்தா அவ்வளவு தான்.” என்ற மேனகாவைப் பார்த்து, விழுந்து விழுந்து சிரித்தான் ஆதிரன்.

 

” எதுக்கு சார் இப்படி சிரிக்கிறீங்க?” என்று முறைத்துக் கொண்டே வினவினாள் மேனகா.

 

“அது வந்து, துன்பம் வரும் போது சிரிக்கணும்னு வள்ளுவர் சொல்லியிருக்கிறார். அதான் என் மனசுல உள்ள கஷ்டம் தெரியாம இருக்கிறதுக்காக சிரிக்கிறேன்.”

 

” சார்… லூஸா நீங்க… எதுக்கு இப்படி உளறிட்டு இருக்கீங்க.” என்று கடுப்புடன் மேனகா கூற.

 

“ஹேய் வன மோகினி… நான் உன்னோட மேலதிகாரி. அது கொஞ்சமாவது ஞாபகம் இருக்கா?”

 

” அதெல்லாம் நல்லாவே ஞாபகம் இருக்கு சார். அப்புறம் வன மோகினின்னு கூப்பிடாதீங்க சார். வேற எப்படி வேணும்னாலும் கூப்பிடுங்க.” என்றாள் தன்மையாக.

 

“வன மோகினின்னு கூப்பிடக்கூடாதா? ஓகே… ஆனால் அதுக்காக எப்படி வேணாலும் கூப்பிட்டுக்கோங்கன்னு சொன்னால் நான் அப்புறம் இங்க இருக்கிற விலங்குகளோட பெயரை சொல்லி கூப்பிடற மாதிரி ஆகிடும். அப்புறம் அதுவும் உனக்கு போட்டியா வந்து என் முன்னாடி நிக்கப் போகுது.”என்று சொல்லிய ஆதிரன் அவளைப் பார்த்து சிரித்தான்.

 

மேனகாவோ கண் கொட்டாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

அங்கு திரும்ப வந்திருந்த ஜீவாத்மனோ, தம்பியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்த மேனகாவை கண்டு எரிச்சல் அடைந்தான்.

 

” ஏன் வன மோகினி கூப்பிட்டால் என்ன குறைஞ்சு போயிடும் சொல்லுங்க மிஸ் வன மோகினி. முன்னாடி ஃபாரஸ்ட் ரேஞ்சரா இருந்த உன் அத்தை பையன் அவர் அப்படி கூப்பிடலாம். அப்புறம் பொன்னாம்மாள் அம்மா அவங்க அப்படிக் கூப்பிடலாம். உங்க மேலதிகாரி கூப்பிட்டா என்ன? அதுவும் திட்ற அளவுக்கு க்ளோசா ஆகிட்டீங்க. அப்புறம் என்ன?” என்று நக்கலாக ஜீவாத்மன் வினவினான்.

 

” சார்… ” என்று அவள் ஆரம்பிக்கும் முன்பே, “என்ன உங்க ரெண்டு பேரோட பர்ஸ்னல் என்று தானே சொல்ல போற. அது நல்லாவே எனக்குத் தெரியும். அதைப் போல என்னோட பர்ஸ்னல் பத்தி நீங்க எப்படி பேசலாம்.என் வைஃபை நான் எப்படி வேணும்னாலும் பாத்துப்பேன். அதைப் பத்தி உங்களுக்கு என்ன கவலை.” என்று அவளைப் பார்த்து கேலியாக வினவினான் ஜீவாத்மன்.

 

‘ ஐயோ! கடவுளே… எங்கேயாவது போய் முட்டிக்கலாம் போல இருக்கே. இந்த இடியட் இப்ப ஏன் திரும்ப வந்து தொலைச்சான் தெரியலையே.”என்று மனதிற்குள் நொந்துக் கொண்டிருக்க.

 

அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஜீவாத்மனோ, ” ஏன் இவன் திரும்ப வந்தான்னு யோசிக்கிறீயா? இதை கொடுக்க தான் வந்தேன்.” என்று கையில் ஃபோனை வைத்து சுழற்றிக் கொண்டே சொன்னான்.

 

‘ அடப்பாவி அண்ணா… இதை எப்போ எடுத்த. பேண்ட் பாக்கெட்ல தானே வச்சிருந்தேன்.’ என்று மனதிற்குள் எண்ணியவனது கை தானாக பேண்ட் பாக்கெட்டில் தேடியது.

 

” இது யார் ஃபோன்? அதைக் குடுக்கத் தான் வந்தேன்.”

 

‘ டேய் அண்ணா. இந்த மாடல் நல்லா இருக்கும்னு வாங்கிக் கொடுத்ததே நீ தானே. உனக்கு உண்மையிலே தெரியலையா?’ தனக்குள் புலம்பிய ஆதிரன், தமையனை முறைத்துக் கொண்டே,” என்னோட ஃபோன்.”என்று கையை நீட்டினான்.

 

“கொஞ்சம் பொறுப்பா இருங்க ஆதிரன்.”என்று கண்களில் கேலி மின்ன கூறியபடியே ஃபோனைக் கொடுத்தான் ஜீவாத்மன்.

 

“அப்புறம் மிஸ் மேனகா… உங்களுக்கும், அந்த அம்மாவுக்கும் என்ன சம்பந்தங்கறதை கூடிய சீக்கிரமே கண்டு பிடிக்கிறேன். அது மட்டுமில்லை உங்களைப் பத்தின உண்மையையும் அவங்களுக்கு புரிய வைக்கிறேன். உன் அத்தை பையனோட சேர்ந்து செய்த அராஜகத்தை எல்லாம் நிச்சயம் வெளிக்கொண்டு வருவேன். இப்போ வரட்டா வன மோகினி?” என்று அவளை வேண்டும் என்றே கோபப்படுத்தினான் ஜீவாத்மன்.

 

கோபத்தில் ஏதாவது வார்த்தைகளை விடுகிறாளா என்று மேனகாவைப் பார்க்க.

 

அவளோ, ‘ இதுக்கெல்லாம் மசியற ஆள் நான் இல்லை.’ என்று அவனை அலட்சியமாகப் பார்த்தாள் மேனகா.

 

கடுப்புடன் அங்கிருந்து கிளம்பிய ஜீவாத்மன், திடீரென்று ஏதோ தோன்ற, அந்த பழங்குடி மக்களை சந்திக்க மீண்டும் அங்கே சென்றான்.

 

” என்ன சார் ? திரும்ப இப்போ எதுக்கு வந்தீக. உங்களுக்கு என்ன தான் வேணும்.” என்று பொன்னாம்மாள் சிடுசிடுக்க.

 

” அது வந்து மா. நான் உங்க கிட்ட முதல்ல மன்னிப்பு கேட்டுக்குறேன். தப்பு செஞ்சவங்களை கண்டுபிடிச்சிட்டேன். ஆனால் அவங்களுக்கு உடனடியா தண்டனை வாங்கிக் கொடுக்க முடியலை. கூடிய சீக்கிரமே வாங்கி கொடுத்துடுவேன். அவங்க யாருன்னு தெரிஞ்சா உங்களுக்கும் அதிர்ச்சியாக இருக்கும்.”

 

” அப்படியா… முதல்ல யார், யார்னு சொல்லுங்க.” என்றார்.

 

” இதுக்கு முன்னாடி இருந்த ஃபாரஸ்டர், ஃபாரஸ்ட் ரேஞ்சர் ரிஷிவர்மன், அப்புறம் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இங்க வந்துச்சே அந்த பொண்ணு மேனகா. இவங்க மூன்று பேரும் தான் புலியை புடிக்கிறதுக்கான நடவடிக்கை எடுக்காமல் இருந்தாங்க.”என்று கூறியவன் அவரை ஆழ்ந்து பார்க்க.

 

அவன் எதிர்பார்த்தது போல் பதில் வந்தது.

 

ரௌத்தரமான பொன்னாம்மாள்,” உங்களால் தப்பு செஞ்சவங்களை தண்டிக்க முடியவில்லைன்னா, முடியலன்னு சொல்லிட்டு போங்க. அதுக்காக அப்பாவி பொண்ணு மேல பழிய போடுவீங்களா? உங்களை மாதிரி ஆளுங்க கடமையை ஒழுங்கா செய்யாமல் இருந்துட்டு, எங்களுக்காக போராடின அந்த புள்ளையையே குறை சொல்ல வந்துட்டீங்க.” என்றார்.

 

” என்ன மா சொல்றீங்க.” என்ற ஜீவாத்மன் முகத்தில் மலர்ந்த புன்னகையை அடக்கிக் கொண்டு அவரைப் பார்த்தான்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!