ஜீவாத்மனைப் பார்த்துக் கொண்டே பழைய நினைவுகளுக்கு சென்றார் பொன்னம்மாள்.
‘
“பாட்டி… இந்த காட்டுல இருக்குறது ஆபத்து. ” என்று ரிஷிவர்மன் முடிப்பதற்குள், கடகடவென நகைத்தார் அந்த மூதாட்டி.
“இந்த காட்டுல இருக்கறது தான் எங்களுக்கு பாதுகாப்பு. இந்த காட்டுக்கு நாங்க பாதுகாப்பு. எங்களைத் தவிர யாராலும் இந்த காட்டை பாத்துக்க முடியாது தம்பி. ” என்றார்.
” சரிங்க பாட்டி.” என்ற ரிஷிவர்மனின் முகத்திலோ ஏமாற்றம் அப்பட்டமாக தெரிந்தது.
இருந்தாலும் மேனகாவிற்காக காத்திருந்தான்.
மேனகாவோ அவனுக்கு மாறாக உற்சாகமாக இருந்தாள்.
” லட்சு கா. நீங்க ரொம்ப ஸ்பீடா மரம் ஏறுறீங்க. எனக்குத் தான் ஏறவே தெரியலை.” என்று சோகமாக கூறினாள் மேனகா.
“இது ஒன்னும் அவ்வளவு பெரிய காரியமில்லை… இரண்டு முறை முயற்சி செஞ்சிங்கன்னா தன்னால வந்துட போகுது. அதுவும் கீழே விழுந்து, எழுந்திருச்சு கத்துக்க்கிட்டீங்கனா காலத்துக்கும் மறக்க மாட்டீங்க மா.”
“என்னது கீழே விழுந்து எந்திருச்சு கத்துக்கணுமா. லட்சுக்கா இப்ப தான் நீங்க ரொம்ப ஸ்வீட்னு சொன்னேன். ஆனால் என்னை கொல்லப் பார்க்குறீங்களே.” என்று லட்சுமியிடம் விளையாட்டாக கூற.
” ஐயோ மா… பெரிய வார்த்தைல்லாம் சொல்லாதீக. என் உசுரு இருக்குற வரைக்கும் உங்களுக்கு ஒன்னும் ஆக விடமாட்டேன். எப்பவும் இப்படி அச்சாணியமா பேசாதீக.” என்று லட்சுமி படபடக்க.
” எதுக்கு இவ்வளவு டென்ஷனாகுறீங்க லட்சுக்கா. நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்.”
” விளையாட்டுக்கு கூட இப்படி பேசாதீக. நம்ம பேசுற வார்த்தைல கவனமா இருக்கணும்மா.” என்ற லட்சுமி இன்னுமே கவலையாக இருந்தாள்.
” சரிங்க லட்சுக்கா. இனி நான் இப்படி பேச மாட்டேன். சரி எனக்கு எப்போ கத்துக்குடுக்க போறீங்க. அதை சொல்லுங்க.” என்று பேச்சை மாற்றினாள் மேனகா.
” இன்னைக்கு எனக்கு ஜோலி இருக்கு. அடுத்த தரவ நீங்க வரும் போது சொல்லித் தரேன் மா.” என்று தயக்கமாக மேனகாவை பார்த்தாள் லட்சுமி.
” அதுக்கென்ன லட்சுக்கா அடுத்த தடவை பார்த்துக்கலாம். இங்க தானே இருக்க போறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஓடி வந்துடுறேன்.” என்று சலசலத்தப்படி ரிஷிவர்மன் இருக்கும் இடத்திற்கு வந்தாள்.
மேனகாவிற்கு இருந்த உற்சாகத்தில் ரிஷிவர்மனின் முகத்தில் இருந்த மாற்றத்தை கண்டுக்கொள்ளவில்லை.
ஆனால் அங்கிருந்த பொன்னாம்பாள் கண்டுக்கொண்டார். அவரது துளைக்கும் பார்வையில் எப்போதாடா அங்கிருந்து கிளம்புவோம் என்று காத்திருந்த ரிஷிவர்மன், ” கிளம்பலாமா மேகி. டைம் ஆயிடுச்சு. ஊருக்கு கிளம்பணும்.” என்றான்.
” அத்தான்… இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கலாம். அதுவும் இங்க சாப்பிடலாம்னு தானே சாப்பிடாம வேற கூட்டிட்டு வந்திங்க. எனக்கு ரொம்ப பசிக்குது.” என்று அவள் செல்லம் கொஞ்சிக் கொண்டிருக்க.
பசிக்குது என்ற வார்த்தை பொன்னம்மாளை சென்று அடைய, அந்த தாயுள்ளமோ பரபரத்தது. இதுவரை ரிஷிவர்மன் மேல் இருந்த கோபத்தை கூட சற்றுத் தள்ளி வைத்து விட்டு, ” நீங்க ரெண்டு பேரும் இன்னும் சாப்பிடலையா. வந்தவுகளோட பசிய கவனிக்காமல் விட்டுட்டேன். ரெண்டு பேரும் முதல்ல வந்து பசியாருங்க.” என்று இருவரையும் அழைத்தார்.
அவர்களை இந்த மலையில் இருந்து கிளப்ப முடியாத கடுப்பில் இருந்த ரிஷிவர்மனோ, ” எனக்கு பசிக்கலை. நீ போய் சாப்பிடு.” என்று மேனகாவைப் பார்த்து கூறினான்.
‘தான் சாப்பிடவில்லை என்றால் அவளும் சாப்பிடாமல் தன்னுடன் கிளம்பி விடுவாள்.’ என்று ரிஷிவர்மன் நினைத்திருக்க. மேனகாவோ,” அப்போ நான் சாப்பிடும் வரை டிஸ்டர்ப் பண்ணக் கூடாது.” என்று ரிஷிவர்மனுக்கு கட்டளையிட்டவள், ” பாட்டி… அத்தானுக்கு வேண்டாமாம். அவரோட பங்கையும் சேர்த்து எனக்கே கொடுங்க. சாப்பாட்டுல நான் கூச்சம்லாம் பார்க்க மாட்டேன்.” என்று ரிஷிவர்மனை பார்த்துக் கண்ணடித்துக் கொண்டே கூறினாள் மேனகா.
ரிஷிவர்மனால் அவளை முறைக்க தான் முடிந்தது.
அதற்குள் லட்சுமி,” வாங்க மா.” என்று மேனகாவை அழைத்துக் கொண்டு கை கழுவ அழைத்துச் சென்றாள்.
சுடச்சுட பொன்னம்மாள் கீரை அடை சுட்டுக் கொடுக்க. லட்சுமி வந்து பரிமாறினாள். வாழைஇலை வாசத்தோடு அந்த அடையின் வாசமும் மேனகாவை இழுக்க ரசித்து ருசித்து சாப்பிட்டாள்.
“சான்சே இல்ல பாட்டி. ரொம்ப சூப்பரா இருக்கு. இப்படி ஹெல்தி புட் சாப்பிட்டு தான் நீங்க இவ்ளோ யங்கா இருக்கீங்க.” என்று கைக்கழுவிக் கொண்டே கூறினாள் மேனகா.
” என்ன தாயி சொல்ற. நீ சொல்றது விளங்க மாட்டேங்குது.”
” அது வந்து லட்சுக்காவுக்கு அக்கா மாதிரி இருக்கீங்க. உங்களை பாட்டின்னு சொல்ல மனசு வரமாட்டேங்குது. ஆனா பேர் சொல்லி கூப்பிட்டாலும் மரியாதை இருக்காது.”என்று வாய்விட்டு புலம்பிக் கொண்டிருந்த மேனகா திடீரென துள்ளிக் குதித்தாள்.
” ஹே… கண்டுபிடிச்சிட்டேன். உங்களுக்கு ஒரு நிக் நேம் கண்டுபிடிச்சிட்டேன். இனிமே நான் உங்களை கோல்டு தான் கூப்பிட போறேன். கோல்டுனா பொன், தங்கம்னு அர்த்தம். இந்த நேம் உங்களுக்கு ஓகேவா பாட்டி.” என்று தலையை சாய்த்து வினவ.
” எப்படி வேணும்னாலும் கூப்பிடு தாயி.” என்றாள் பொன்னம்மாள்.
மேனகா பேசும் வார்த்தைகளை கவனத்தில் கொள்ளாமல், அவளது பாவனையை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ரிஷிவர்மன்.
அதைக் கண்டு கொண்ட பொன்னம்மாளின் முகம் ஒரு நொடி மாறியது.
அதை சமார்த்தியமாக மறைத்தவர், மேனகாவிடம் இயல்பாக பேச முயற்சி செய்துக் கொண்டிருந்தார்.
அதற்கு மேல் அவருக்கு தொந்தரவு குடுக்காமல், ” ஓகே கோல்டு. நான் போயிட்டு வரேன். லட்சுக்கா பாய். குட்டீஸ் சீக்கிரமே நாம மீட் பண்ணலாம்.” என்று ஒவ்வொருவரிடமும் விடைப் பெற்றுக் கொண்டிருந்தாள்.
” நல்லபடியா போயிட்டு வா தாயி. சீக்கிரமே உனக்கு நல்ல குணமான மாப்பிள்ளை துணையா அமையணும்.” என்று வாழ்த்தினார்.
அதுவரை கைகட்டிக் கொண்டு அலட்சியமாக இருந்த ரிஷிவர்மன் வேகமாக மேனகா அருகே வந்து தோள் மேல் கைப் போட்டவன், ” அப்போ கிளம்பலாமா வனமோகினி?” என்று வினவியவனின் பார்வையோ, ‘நான் தான் அவளுக்கு மாப்பிள்ளை.’ என்று சொல்லாமல் சொல்லியது.
அவனைப் புரிந்துக் கொண்ட பொன்னம்மாளோ லேசாக நகைத்தவாறு, ” வனமோகினி… இந்த பேரு கூட நல்லாருக்கு தாயி. நானும் உன்னை அப்படியே கூப்பிடட்டுமா தாயி.” என்றாள்.
” சூப்பர் கோல்டு.” என்று உற்சாகமாக தலையாட்டியவள், ரிஷிவர்மனோடு அங்கிருந்து கிளம்பினாள்.
” அத்தான்… ஏன் இப்படி அமைதியா வர்றீங்க? என்ன பிரச்சினை? உங்க முகமே சரியில்லையே.” என்று ரிஷிவர்மனது முகத்தை அவ்வப்போது பார்த்துக் கொண்டே வினவினாள்.
” ப்ச்… அதெல்லாம் ஒன்னும் இல்லை. முதல்ல பாதையில் கவனம் வை மேகி.”
” அப்போ என் கிட்ட எதுவும் சொல்ல மாட்டீங்க.அதானே.” என்று அவனைப் பார்த்து முறைத்தாள் மேனகா.
“அது வந்து மேகி … அவங்க உன்ன வனமோகினின்னு கூப்பிடுறது எனக்குப் பிடிக்கலை.”
” உங்களுக்கு ஏன் அத்தான் பிடிக்கணும். உங்களையா கூப்பிடுறாங்க… என்ன தானே கூப்பிடுறாங்க. எனக்கு பிடிச்சிருக்கு.” என்றவளோ, ‘ ரிஷிவர்மனை வனமோகினின்னு கூப்பிட்டால் எப்படி இருக்கும்.’ என்று கற்பனை செய்து பார்த்தவள், சிரிப்பை அடக்கிக் கொண்டு, அவனைத் தாண்டி முன்னே நடந்தாள்.
” ஹேய் முட்டக்கண்ணி… கிண்டலா? வன மோகினின்னு நான் மட்டும் தான் கூப்பிடனும். நான் ஸ்பெஷலா உனக்கு நிக்நேம் வச்சா வர்றவங்க, போறவங்கள்லாம் கூப்டிட்டு இருக்காங்க. இரிட்டேட்டிங்கா இருக்கு.” என்றான் ரிஷிவர்மன்.
” அஹான்.” என்றவளோ, அவனைக் கவனிக்காமல் பாதையில் மட்டுமே கவனம் வைத்தாள்.
” ஹேய் திமிர்பிடிச்சவளே… என்ன நினைச்சிட்டு இருக்க.” என்று கோபத்துடன் அவளது கையைப் பற்றி நிறுத்தினான்.
கலகலவென நகைத்த மோகினியோ,” அத்தான்… நிக் நேமெல்லாம் ஸ்பெஷலா, ஸ்பெஸிப்பிக்கா கூப்பிடுறதுக்காக வைக்கணும். அதை வேற யாரும் கூப்பிட்டால் டென்ஷனாவாங்க. இப்படி நீங்க நிமிஷத்துக்கு ஒரு பேர்ல என்னை கூப்பிட்டா என்ன பண்றது.இந்த ஐந்து நிமிஷத்துல எத்தனை பேர் வச்சு கூப்பிட்டிருக்கீங்க. மேகி… இது அத்தை, மாமா செல்லமா என்னை கூப்பிடுற பேரு. அவங்களைத் தாண்டி உங்க வாயில அடிக்கடி இந்த பேர் தான் வரும். மேகியாச்சே ஈஸியாக இருக்கும்னு கூப்பிடுவீங்க போல. அப்புறம் என்ன பேர் சொன்னீங்க முட்டக்கண்ணி. அத்தை, மாமா என்னை பெருமையா பேசும் போதெல்லாம் இந்த பேரை சொல்லி வெறுப்பேத்துவீங்க. பொஸஸிஸ்வ்னஸுனு நினைச்சு அமைதியா போய்டுவேன். ஆனால் இப்போ தான் தெரியுது. அத்தானுக்கு என்ன யார் பாராட்டினாலும் பிடிக்கலை.”
” மேகி…” என்று இடையிட்டான் ரிஷிவர்மன்.
” அத்தான் டென்ஷனாகதீங்க. ஃபுல்லா சொல்ல விடுங்க. உங்களுக்கு பொஸஸிவ் தான். பட் என்னை யாரும் எதுவும் சொல்லக் கூடாது. நீங்க மட்டும் தான் எல்லாமே சொல்லணும்னுங்குற உணர்வு புரியுது.” என்றவளது முகத்தில் மின்னிய வெட்கத்தைப் பார்த்து மெய் மறந்து நின்றான் ரிஷிவர்மன்.
அவனை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே,” உங்களுக்கு கோபம் வந்தா திமிர்பிடிச்சவன்னு கூப்பிடுவீங்க. இந்த வனத்துக்கு வந்த பிறகு வனதேவதையா தெரியுறேன். உங்க கண்ணுக்கு தெரியற மாதிரி அவங்க கண்ணுக்கும் வன மோகினியா தெரியறேன் போல இருக்கு. அவங்களும் கூப்பிட்டா என்ன தப்பு. எத்தனை பேர் அப்படி கூப்பிட்டாலும், நீங்க கூப்பிடுறது எனக்கு சம்திங் ஸ்பெஷல். இப்போ சொல்லுங்க அத்தான். கோல்டு என்னை அப்படி கூப்பிடலாம் தானே.” என்று கிசுகிசுப்பான குரலில் வினவ.
” அத்தான். கோல்டும், லட்சுக்காவும் ஸ்வீட் தெரியுமா? அவங்க மரத்துல இருந்து பாசி எடுக்க கற்றுக் கொடுத்தாங்க தெரியுமா? மரமெல்லாம் அந்த குழந்தைகள் சர்வ சாதாரணமாக ஏறுதுங்க. எனக்குத் தான் ஏறத் தெரியலை. அடுத்த முறை வரும்போது சொல்லித் தரேன்னு சொல்லியிருக்காங்க. “
” ஹேய் மேகி. நமக்கு வேற வேலை இல்லையா? சும்மா சும்மா அங்க போக முடியாது. நீ ஆசைப்பட்டேன்னு ஒரு முறை கூட்டிட்டு போனேன். இனியெல்லாம் அங்க போக வேண்டாம்.”
” நீங்க வரலைன்னா போங்க அத்தான். நான் டைம் கிடைக்கும் போது போறேன்.”
” ஹேய் லூசு. தனியா எல்லாம் போக கூடாது. அவங்களுக்கே அங்க பாதுகாப்பு கிடையாது. வேற இடத்துக்கு போறது தான் நல்லது.” என்று தன்னை மீறி வார்த்தைகளை விட்டான் ரிஷிவர்மன்.
” ஐயோ! அத்தான்… அவங்க தான் இந்த காட்டுல இருக்கிறது தான் பாதுகாப்புன்னு சொல்லிட்டாங்களே. அவங்களுக்கு இந்த காடு தான் மூச்சு. அது அவங்களோட இருந்த கொஞ்ச நேரத்துலையே எனக்கு புரிஞ்சிருச்சு. அவங்களுக்கு விலங்குகளால் வர்ற ஆபத்துல இருந்து எப்படி காப்பாத்திக்கணும்னு நல்லா தெரிஞ்சு வச்சிருக்காங்க. நல்லதோ, கெட்டதோ அவங்க இந்த இடத்தை விட்டு நகர மாட்டாங்க. அதனால திரும்ப இதைப் பத்தி பேசாதீங்க” என்று உறுதியான குரலில் கூறினாள்.
” சரி மேகி. நீ டென்ஷனாகத. ஆனால் தனியாக எல்லாம் அங்க போக கூடாது. உனக்காக நான் வர்றேன்.” என்று அவளை சமாதானம் செய்தவன் மனதிற்குள், ‘இனி அவளை எப்படியும் அங்கே அனுப்பக்கூடாது. ஏதாவது சாக்குபோக்கு சொல்லி அங்கே போகாமல் சமாளிக்கணும்.’ என்று முடிவு எடுத்தவன், ” லக்கெஜ்ஜெல்லாம் ரெடியா தானே இருக்கு. குவார்ட்ஸுக்கு போனதும் கிளம்பிடலாம்.” என்று பேச்சை மாற்றினான் ரிஷிவர்மன்.
” நைட்டே பேக் பண்ணிட்டேன் அத்தான்.” என்றவளின் பார்வை, அவளுடைய குவார்ட்ஸுக்கு அருகே நின்ற ஜீப்பையும், அதற்கு அருகே நின்றவரைப் பார்த்ததும் குழப்பமானது.
“அத்தான்… எதுக்கு நம்ம மேலதிகாரி இங்க வந்திருக்காங்க. நம்ம லீவு போட்டுட்டு வெளியே போயிட்டு வந்தது ஏதும் பிரச்சனையாக இருக்குமோ. நம்ம ஊருக்கு போறோம்னுதான லீவு கேட்டுருந்தோம். ஒன்னும் பிரச்சனையாகாதுல.” என்று சற்று பயத்துடன் வினவினாள்.
” மேகி… கார்த்திக் என்னோட ஃப்ரண்டு தான். என்ன பார்க்க தான் வந்திருக்கான். நீ டென்ஷனாகாத.” என்ற ரிஷிவர்மன், அங்கு நின்று கொண்டிருந்த வன அதிகாரி கார்த்திக்கைப் பார்த்து புன்னகைத்தான்.
கார்த்திக் கண்களால் ஏதோ வினவ. இப்போ பேச வேண்டாம் என்பது போல் ரிஷிவர்மன் செய்கை செய்தான்.
மேனகாவோ அவர்களது பார்வை பரிமாற்றத்தை கண்டு கொள்ளவில்லை.