திடீரென்று யாரோ தன் வாயைப் பொத்தியதும், நொடி கூட தாமதிக்காமல் உடல் திமிறிய மேனகா,” ஷ்… சும்மா இரு…” என்ற ரிஷிவர்மனின் குரலில் உடல் தளர்ந்தாள்.
வேகமாக அவளை தள்ளிக் கொண்டு வந்த ரிஷிவர்மன், அந்த மூவரின் கண்பார்வையிலிருந்து மறைந்ததும் தான் அவளை விட்டான்.
“லூசா மேகி. நைட்டு நேரம் இப்படி தனியா வருவாங்களா? அவங்க எல்லாம் மோசமானவங்க.” என்று கடிந்து கொள்ள.
” அவங்க மோசமானவங்கான்ன, நீங்க? உண்மையிலேயே நீங்க தான் மோசமானவங்க. ரொம்ப தான் அக்கறை இருக்கப் போல .” என்று தலையை சிலுப்பிக் கொள்ள.
” லுக் மேகி. நீ ஒத்துக்கிட்டாலும் சரி, ஒத்துக்கலைன்னாலும் சரி எனக்கு உன் மேல அக்கறை இருக்கு. அவனுங்க குடிச்சிட்டு தன்னிலை மறந்து இருக்காங்க. முதல்ல இங்கிருந்து கிளம்பு.”
” ச்சே… உங்களை நினைச்சாலே எனக்கு அருவருப்பா இருக்கு. குடிச்சிட்டு கூத்தடிக்கிற அவங்களும், காசுக்காக இந்த மாதிரி கேவலத்தை பண்ணுற நீங்களும் எனக்கு ஒன்னு தான். சின்ன வயசுல இருந்து நேர்மையாய் இருக்கணும்னு தானே அத்தை சொல்லிச் சொல்லி வளர்த்தாங்க. ஏன் அத்தான் இப்படி மாறீட்டீங்க?” என்றவள், அவனது சட்டையைப் பிடித்து அழ.
” நேர்மையால அவங்க என்ன சாதிச்சாங்க. எது கேட்டாலும் இது இப்போ அவசியமா? கொஞ்ச நாள் போகட்டும். இல்லை இது வேணாம், தேவையில்லைன்னு முட்டுக்கட்டை போட்டுட்டே இருந்தாங்க. எனக்கு அதெல்லாம் தேவை கிடையாது. எனக்கு வந்து பணம் தான் முக்கியம். நாளைக்கு என் புள்ள நான் பட்ட கஷ்டத்தைப் படக் கூடாது.” என்றவன், சட்டையிலிருந்து அவளது கைகளை விலக்கினான்.
” ஏன் அத்தான்… நாம ஆசைப்பட்ட அத்தனையும், வாங்கி தரலைன்னாலும் அவசியப்பட்ட அத்தனையும் வாங்கி தந்துட்டுத் தானே இருக்காங்க.” என்றவள் அவனையே வைத்த விழி விலக்காமல் பார்த்துக் கொண்டிருக்க.
” உனக்கு வேணும்னா அதுவே போதுமா இருந்திருக்கலாம். ஆனால் என்னுடைய எதிர்பார்ப்புகள் வேறு…” என்றவன் அவளது பார்வையை தவிர்த்தான்.
“அத்தான்… பணம் தான் முக்கியம்னா, அப்புறம் ஏன் இந்த வேலைக்கு வர்றீங்க? வேற வேலைக்கு போக வேண்டியது தானே. காடு… உயிர்ப்பான இடம். நம்ம நாட்டோட வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கு. இதை நேசிக்கிறவங்க வந்து பார்க்க வேண்டிய வேலை. நீங்க ஏன் வந்தீங்க?” என்று கோபத்தையெல்லாம் கண்களில் தேக்கி வினவினாள்.
” நிறுத்து உன் பிரசங்கத்தை எல்லாம் கேட்க எனக்கு இப்ப டைம் இல்லை. தென் நான் என்ன பண்ணனுங்கறதை நான் டிசைட் பண்ணிக்கிறேன். நீ இதிலெல்லாம் தலையிடாதே.”என்று எரிச்சலாக குரலில் கூறினான்.
” நான் தலையிடக் கூடாதா? நான் தலையிடுவேன். நீங்க செய்யுற வேலையால இந்த காடு அழியுது. காடு அழிஞ்சா இந்த உலகமே பாதிக்கப்படும். அதுக்கு நான் விட மாட்டேன். ஏற்கனவே உங்களைப் பத்தி கம்ப்ளைன்ட் பண்ணிட்டேன். இங்கே வர்றவங்களைப் பத்தி இன்னும் கொஞ்சம் டீடெயில்ஸ் கேட்டாங்க. அவனுங்க என்னைக்கு வருவாங்கான்னு தெரியலையேன்னு எரிச்சலோட இருந்தேன். என் அதிர்ஷ்டம் இன்னைக்கே வந்துட்டாங்க. அவனுங்க எல்லாரையும் நான் என் ஃபோன்ல வீடியோ எடுத்துட்டேன். இனி எல்லாரையும் உள்ள தள்ளாமல் விடமாட்டேன்.”
” இடியட்… சும்மா என்னை மிரட்ட தானே பொய் சொல்லுற?”
“நான் பொய் சொல்ல மாட்டேன்.” என்று அவனை நிமிர்வாக பார்த்துக் கூறினாள் மேனகா.
” இல்லை பொய் சொல்ற…எனக்கு, எனக்கு… ” என்றவனது முகம் வியர்வையில் குளிக்க.
“என்ன அந்த கார்த்திக் கிட்ட இருந்து தகவல் வரலையா? நான் அவன் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணவே இல்லையே.”
” ஊஃப்.” என்று நிம்மதி பெருமூச்சு விட்ட ரிஷிவர்மன் அவளைப் பார்த்து முறைத்தான்.
” நீயும், அவனும் கூட்டு களவாணிங்கன்னு எனக்குத் தெரியும் அதான் கலெக்டர் கிட்ட நேரடியா கம்ப்ளைன்ட் பண்ணிட்டேன்.” என்று ஏளனமாக கூறினாள்.
” ஏய்…” அவளை அடிக்க கை ஓங்கினான் ரிஷிவர்மன்.
அவனது கையைப் பற்றி தடுத்தவள், அவனை கேவலமாக பார்க்க.
அவனோ என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தான்.
ரிஷிவர்மனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவனது ஃபோன் நீண்ட நேரமாக அடித்துக் கொண்டிருந்ததையும் கவனத்தில் கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் அதை நிறுத்துவதாக நினைத்து ஆன் செய்ததையும் கவனத்தில் கொள்ளவில்லை.
அது மட்டுமா? சுற்றுப்புறத்தையும் கவனிக்கவில்லை.
இவர்கள் அருகே வந்த அந்த மூவரையும் கவனிக்கவும் இல்லை.
” ஏய் யார் நீ? இந்த நேரத்துல என்ன பண்ற?” என்று சர்வேஷ் வினவ.
” ஒன்னுமில்லை சர்வேஷ். இவங்களும் இங்கே வொர்க் பண்றவங்க தான். நீங்க போங்க. நான் பார்க்கிறேன்.” என்று ரிஷிவர்மன் அவர்களை அங்கிருந்து நகர்த்துவதிலே குறியா இருந்தான்.
சர்வேஷ,” டேய் எருமை… இதுக்கு போய் வர சொன்னீயா? ஒன்னுக்கு வந்தா, போனமா, வந்ததோமான்னு இருக்கணும். அதை விட்டுவிட்டு, அவங்க ரெண்டு பேரும் ஏதோ வேலை சம்பந்தமா பேசிட்டு இருக்காங்க. நமக்கென்னடா வந்துச்சு.” என்று தனது நண்பனிடம் கூறியவன் திரும்பி செல்ல.
” டேய் மச்சி… நான் வந்தப்போ அந்த பொண்ணு வீடியோ எடுத்ததைப் பத்தி ஏதோ பேசிட்டு இருந்தாங்க.”
” என்ன சொல்ற ராஜேஷ்? உளறாத?” என்று சர்வேஷ் கூற.
” டேய் மச்சி… எத்தனை ரவுண்ட் போனாலும் ஸ்டெடியா இருப்பேன்னு தெரியாதா? முதல்ல அந்த பொண்ணோட ஃபோனை கேளு.” என்றான் ராஜேஷ்.
” ஹேய்…ஃபோனை குடு.” என்று சர்வேஷ், மேனகாவின் அருகில் செல்ல.
அவளுக்கு முன்னே மறைத்தவாறு வந்து நின்ற ரிஷிவர்மன், ” ப்ரோ… நான் பார்த்துக்கிறேன். நீங்க போங்க.” என்று அவர்களை சமாதானப்படுத்த முயன்றான்.
” டேய் ராஜேஷ்… முதல்ல இவனை தள்ளு. நான் அந்த பொண்ணு கிட்ட இருக்க ஃபோனை பார்க்கணும்.” என்ற சர்வேஷின் உத்தரவை கேட்டதும், ராஜேஷூம், நிகிலும் சென்று ரிஷிவர்மனை பிடித்துக் கொண்டனர்.
மேனகாவோ ஃபோனை தராமல் பின்னால் நகர… சர்வேஷ் மேனகாவின் கையை பிடித்து இழுத்தான்.
” டேய் என்னை விடுங்க. அந்த வீடியோவை வாங்கி நான் டெலிட் பண்றேன்.” என்று ரிஷிவர்மன் கத்த.
” ஷ்… சத்தம் போடாதே… இந்த பொண்ணுக் கிட்ட இருந்து எப்படி வாங்கணும்னு எனக்குத் தெரியும். உன்கிட்ட எந்த ஐடியாவும் கேட்கலை. இவளை இப்படியே விட்டால் தானே எனக்கு அந்த கவலை… முதல்ல இவளை வீடியோ எடுத்து நாறடிக்கிறேன். அப்புறம் எப்படி யார் கிட்ட கம்ப்ளைன்ட் பண்றான்னு பார்க்கிறேன் ” என்றான் சர்வேஷ்.
ஃபோனை தராமல் தடுக்க முயன்று கொண்டிருந்த மேனகா, அவன் பேசியதை கேட்டதும் உடல் தளர்ந்தாள். கையிலிருந்த ஃபோன் கீழே விழ… அதை காலால் எட்டி தள்ளிய சர்வேஷ் அவளைப் பார்த்து நக்கலாக சிரித்தான். மற்ற இருவரும் சேர்ந்து சிரித்தனர்.
அவள் பயத்தில் இருக்கிறாள் என்று அவர்கள் எண்ணியிருக்க, மேனகாவோ அவர்களோடு போராடுவதற்காக தன்னை தயார் செய்துக் கொண்டிருந்தாள். இதை எதையும் அறியாமல் வெற்றிப் புன்னகையுடன், அவளது ஆடையை பற்றி இழுத்தான் சர்வேஷ்.
மேனகாவோ காலை ஓங்கி அடிவயிற்றுக்கு கீழே ஒரு உதை உதைக்க.
அவனோ வலி தாங்காமல் அலறித் துடித்தான்.
தன் நண்பன் வாங்கிய அடியில், ரிஷிவர்மனை பிடித்திருந்த இருவரும் அதிர்ந்து நிற்க.
அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட ரிஷிவர்மன், அவர்களிடமிருந்து வேகமாக விலகி தனது பாக்கெட்டில் இருந்து துப்பாக்கியை எடுத்து அவர்களை சுடுவதற்கு குறி பார்த்துக் கொண்டிருந்தான்.
கீழே விழுந்து துடித்துக் கொண்டிருந்த சர்வேஷை அலட்சியமாக பார்த்த மேனகா, ” நீ என்ன பண்ணாலும் பயந்துக்கிட்டு இருப்பேன்னு கனவுல கூட நினைக்காதே. இப்போ உள்ள பொண்ணுங்களெல்லாம் எவ்வளவு தைரியமானவங்கன்னு உனக்குத் தெரியலை. அதுவும் நான் அவ்வளவு ஈஸியா விட்டுட மாட்டேன். அது யாரா இருந்தாலும் சரி தான்.” என்றவள், ரிஷிவர்மனையும் ஒரு பார்வை பார்த்து விட்டு, கீழே விழுந்த ஃபோனை தேடி சென்றாள்.
சற்று நேரம் உயிர் வலியில் துடித்துக் கொண்டிருந்த சர்வேஷ், ரிஷிவர்மனை பார்த்தான். அவனோ இது வரை அவனைப் பிடித்து வைத்திருந்த ராஜேஷையும், நிகிலையும் துப்பாக்கிமுனையில் மிரட்டி முட்டிப் போட்டு கையை தூக்க செய்தவன், அவர்களை கட்டிப் போட ஏதாவது கொடி இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தான்.
ரிஷிவர்மனது கவனம் தன் மேல் இல்லை என்பதை கண்டு கொண்டவன், மெதுவாக தன்னை சமாளித்துக் கொண்டு கீழிருந்து ஒரு கைப்பிடி மண்ணை எடுத்து ரிஷிவர்மனை நோக்கி வீசினான்.
கண்ணில் தூசி விழுந்து, எரிச்சலை கிளப்ப… கண்ணை மூடினான். அவன் தன்னை சமாளிப்பதற்குள் அவனிடமிருந்து துப்பாக்கியை கைப்பற்றினான் நிகில்.
” இங்கே தா நிகில்” என்றான் சர்வேஷ்.
அடுத்த நொடியே சர்வேஷ் கைக்கு துப்பாக்கி வந்தது. அவனோ மேனகாவை சுடுவதற்கு குறி பார்த்தான்.
இதை எதையும் கவனிக்காத மேனகா ஃபோனை எடுத்துக் கொண்டு வந்தாள்.
” மேகி…” என்ற ரிஷிவர்மன் சிவந்த விழியுடன் அவளருகே ஓடினான்.
அதற்குள் துப்பாக்கியிலிருந்த தோட்டா அவனது இதயத்தை துளைத்தது.
இரத்த வெள்ளத்தில் ரிஷிவர்மன் மிதக்க… அந்த மூவரும் பயந்து அங்கிருந்து ஓடிவிட்டனர்.
மேனகா ஸ்தம்பித்து போனாள்.
ஃபோனில் மேனகாவும், ரிஷிவர்மனும் வாக்குவாதம் பண்ணுவதை கேட்டு அங்கு வந்த கார்த்திக்கும் அங்கு நடந்ததைப் பார்த்து செயலற்று போனான்.
கார்த்திக்கைப் பார்த்ததும் ரிஷிவர்மனின் கண்கள் ஒளிர்ந்தது. ” கார்த்திக்…” என்று வாயசைத்தான்.
” ரிஷி…” என்று அவனை மெல்ல தூக்கியவன் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது.
” மேனகாவை பத்தி எந்த விஷயமும் வெளியே வரக்கூடாது. நம்ம ரவுண்ட்ஸ் வரும் போது அவனுங்களைப் பார்த்ததா சொல்லு… கோபத்துல சுட்டதா சொல்லு.” என்று பேச மூடியாமல் பேச.
” நான் பார்த்துக்கிறேன்.” என்றான் கார்த்திக்.
” மேகி…” என்று தீனமான குரலில் காதல் வழிய அழைத்தான் ரிஷிவர்மன்.
” அத்தான்…” என்றவள் அவனைத் தொட வர.
” வேண்டாம்.” என்று தலை அசைத்தான்
அதிர்ந்து விழித்தவளை ஆதுரமாக பார்த்தவன்,” மேகி இங்கு நடந்த எதுவும் வெளியே தெரிய வேண்டாம். நீ போ.” என்று வலியை தாங்கிக் கொண்டு திக்கித், திக்கி கூறினான்.
” நான் உங்களை விட்டுட்டு போக மாட்டேன் அத்தான்.”என்று மேனகா கண் கலங்க.
“ஆனால் நான் உன்னை விட்டுட்டு போகப்போறேன். உனக்கு நான் பொருத்தமானவன் இல்லை. அதான் கடவுள் என்னை கூப்டுறார். இங்கே நடந்த எதையும் நீ அம்மாட்ட சொல்லாதே கஷ்டப்படுவாங்க மேகி.” என்று அவன் பேசப்,பேச மூச்சும் வாங்கியது.
“உனக்கு இதுல விருப்பம் இல்லைன்னு தெரியுது மோகினி.ஆனா எனக்காக… என்னைப் பத்தி அம்மாவுக்கு தெரிய வந்தா வருத்தப்படுவாங்க. வெளியே சொல்ல மாட்டேன்னு சொல்லு. இது என் கடைசி ஆசை.” என்று அவளை ஏக்கமாக பார்க்க.
விருப்பம் இல்லாவிட்டாலும் அவனுக்காக, “சரி.” என தலையசைத்தாள்.
அவளது ஒப்புதல் கிடைத்ததும் ரிஷிவர்மனது உயிர் பிரிந்தது.
” ஐயோ! அத்தான்… நான் வந்தே இருக்க கூடாது. நான் இங்க வேலைக்கு வந்திருக்கக் கூடாது. என்னால தான்… என்னால தான்… எல்லாமே…” என்று ஒரு முறை வாய்விட்டு புலம்பியவள், மறுமுறையோ, “இல்ல நான் செய்தது சரிதான்.” என்று கூறினாள்.
இவ்வாறு மேனகா குழம்பி போயிருக்க.
கார்த்திக் தான் வலுக்கட்டாயமாக அவளை அங்கிருந்து கிளப்பினான்.
அவளது மனக்குமுறல்களை அத்தையிடமும், மாமாவிடமும் சொல்ல முடியாததால் டைரியில் கொட்டி தீர்த்தாள். அதை தனமும், ராமனும் பார்க்க கூடாது என்பதற்காக மறைத்து வைத்திருந்தாள். ஆனால் அவர்கள் அதை பார்த்து விட்டனர். அதை எண்ணி கலங்கியவள் பழைய நினைவுகளில் ஆழ்ந்து கண்ணீர் விட்டுக் கொண்டிருக்க.
அவள் கண்ணீர் விட்டதெல்லாம் போதும் என்று எண்ணிய தனம், ” மேனகா இப்போ வெளியே வர்றியா? இல்லையா?” என்று கதவை தட்டினார்.
முகத்தை துடைத்துக் கொண்டு வெளியே வந்த மேனகா, ரிஷிவர்மனது நினைப்பையும் துடைத்துக் கொண்டு வந்தாள். எப்படியும் அவளது அத்தை ரிஷிவர்மனை பற்றி பேச மாட்டார் என்பது அவளுக்கு நன்குத் தெரியும். அவர் அப்படித்தான்… நேர்மை, உண்மை ஒழுக்கம் இது தான் அவருக்கு உயிர் மூச்சு. தப்பு செய்தது யாராக இருந்தாலும் மன்னிக்க மாட்டார். அது எல்லாம் தெரிந்தும் எப்படி துணிந்து அத்தான் இந்த வேலை செய்தார் என்பது தான் அவளுக்கு ஆச்சரியம். தலையை உலுக்கிக் கொண்டு கதவை திறந்தாள்.
” ஊர்ல இருந்து வந்த எங்களுக்கு ஏதாவது செஞ்சு தருவோம்னு இல்லாம நீ பாட்டுக்கு கதவை சாத்திக்கிட்டு என்ன பண்ணிட்டு இருக்க?” என்று எதுவும் நடவாதது போல் தனம் வினவ.
” இப்போ எதுக்கு பிள்ளையை திட்ற?” என்றார் ராமன்.
அவரைப் பார்த்து முறைத்த தனம், ” உங்களை யாராவது பஞ்சாயத்துக்கு கூப்பிட்டாங்களா?” என.
வாயை மூடிக்கொண்டு அமைதியானார் ராமன்.
“சாரித்தை.” என்ற மேனகா சமையல்கட்டுப்பக்கம் செல்ல.
” இப்போ மணி மூணாகப் போகுது. நான் எப்பவோ சமைச்சிட்டேன். நீ வந்து ஒழுங்கா சாப்பிடு.” என்றவர் சாப்பாட்டை பரிமாறிக் கொண்டே, ” வர புதன்கிழமை உன்ன பொண்ணு பாக்க வர்றாங்க. நீ எப்போ ஊருக்கு வர்ற? எங்களோடவே வர்றியா?” என்று வினவ.
” இல்லத்தை அவ்வளவு நாள் எல்லாம் லீவு கிடைக்காது. நான் செவ்வாய்க்கிழமை கிளம்பி வரேன்.”என்றாள்.
” சரி அப்போ நாங்க இனன்னைக்கே கிளம்புறோம். அப்போ தான் எல்லா ஏற்பாட்டையும் செய்ய முடியும்.” என்றவரது முகம் மலர்ந்திருந்தது. ஆனால் அன்று அவள் மருமகள் வரப்போவதில்லை என்பதை இப்போது அறியவில்லை.