இன்னிசை -6

4.6
(5)

இன்னிசை – 6

மேனகா அவசரமாக ஊருக்கு சென்றது தெரிந்ததும், தம்பியிடம் கடுப்படித்த ஜீவாத்மன், தன்னுடைய திட்டத்தை மாத்தவில்லை. பழங்குடி மக்களை சென்று சந்தித்தான். ஆனால் அவனை பேச விடாமல் பொன்னாம்மாள் தடுத்தார்.

இவர்களைப் பார்த்ததுமே அவரது முகத்தில் ரௌத்திரம் தாண்டவமாடியது.

” யாருக்கு வேணும் உங்க பணம்? முதல்ல இங்கிருந்து எல்லாரும் கிளம்புற ஜோலிய பாருங்க.” என்றார்.

” இங்க பாருங்க மா… நடந்த விஷயம் எங்களுக்கும் வருத்ததை தான் தருது. நாங்களும் எங்களாலான முயற்சி செய்துட்டு தான் இருக்கோம். ஆனாலும் இந்த மாதிரி சில நேரத்தில் அசம்பாவிதம் நடந்துடுது. அதுக்காக கவர்மெண்ட்ல இருந்து உங்களுக்கு தர்ற நிவாரண நிதியை மறுக்காதீங்க. இது உங்க உரிமை.”என்று தன் இயல்புக்கு மாறாக தன்மையாக ஜீவாத்மன் கூறிக் கொண்டிருந்தான்.

” எது உரிமை? எங்களோட உரிமை இந்த காட்டுல இயற்கையோடு இயற்கையா வாழுறது தான். அதை முதல்ல புரிஞ்ச்சுகோங்க. அப்புறம் உயிருக்கு விலையா நீங்க விட்டெறியற காசு யாருக்கு வேணும்? இந்த பணத்துக்கு பதிலா என் மருமகளோட உசுர கொண்டு வர உங்களால முடியுமா?” என்று ஆக்ரோஷமாக பொன்னாம்மாள் வினவினார்.

” இங்க பாருங்க மா. உங்க ஆதங்கம் புரியுது. இந்த மாதிரி சில அசம்பாவிதம் காட்டுல இருக்கும் போது நடக்கத் தான் செய்யும். இதை தடுக்கத் தான் அரசாங்கம் உங்களுக்காக வேற இடத்துல இடம் ஒதுக்கிருக்காங்க. நீங்க தான் இங்க இருந்துட்டு வரமாட்டேன்னு சொல்றீங்க.”

” அதானே பாத்தேன். அங்கத்தொட்டு இங்கத்தொட்டு கடைசியில இங்கன தான் நிப்பீங்க. அதான் புலி நடமாட்டம் இருக்குன்னு நாங்க புகார் மேல புகார் கொடுத்தும், கண்டு காணாம இருந்தீங்களா? அதனால போனது என் மருமகளோட உசுரு. அந்த புள்ளைங்க ரெண்டையும் பாருங்க. ஆத்தா இல்லாம எப்படி தவிக்குது?” என்று கண்கலங்க.

அங்கு ஜீவனே இல்லாமல் இருந்த குழந்தைகளைப் பார்த்து, ஒரு நிமிடம் பரிதவித்து போனான் ஜீவாத்மன். பிறகு தன்னை சமாளித்துக் கொண்டு,

” இங்க பாருங்க மா. இனி இப்படி ஒரு தப்பு நடக்காது.” என்றான்.

அவனை கோபத்துடன் பார்த்த பொன்னாம்மாள்,”

 இனி எங்களை பார்த்துக்க எங்களுக்குத் தெரியும். உங்க ஜோலிய பாத்துட்டு போங்க.” என்றார்.

” அம்மா… உங்க ஆதங்கம் எங்களுக்கு புரியுது. முன்ன இருந்த அதிகாரி மெத்தனமா இருந்துட்டாரு. நான் அப்படி கிடையாது.” என்று இறுக்கமான குரலில் கூறினான் ஜீவாத்மன்.

” ஆமா… இப்படித்தான் ஒவ்வொரு தரவ வர அதிகாரிங்களும் வந்து சொல்லிட்டு போறீங்க. அப்புறம் இந்த காட்டுல இருந்து எங்களை துரத்தனும்னு கங்கணம் கட்டுறீங்க. ஆனால் அதுக்கு சொல்ற காரணம் மட்டும் வேற வேறையா இருக்குது. என் மருமவ துடிதுடிச்சு செத்தது, என் கண்ணுக்குள்ள நிக்குது. இனி எங்க சணத்துல யாருக்கும் இந்த மாதிரி நடக்க கூடாது. நடக்கவும் நாங்கள் விடமாட்டோம். முதல்ல நீங்க இங்கிருந்து கிளம்புங்க.”

” மா… நான் அப்படிப்பட்டவன் கிடையாது. அதை உங்களுக்கு எப்படி புரிய வைக்கிறது? இல்ல நான் என்ன செஞ்சா நீங்க நம்புவீங்க சொல்லுங்கம்மா?”

” நான் சொல்றதை செஞ்சுருவீங்களா? அதையும் தான் பார்க்குறேன். என் மருமகளோட சாவுக்கு காரணமானவங்க யார்‍, யாரோ? அவங்க எல்லாரையும் அரெஸ்ட் பண்ணனும்.”

” மா… உங்க மருமக புலி அடிச்சு தான இறந்தாங்க.” என்றான் ஜீவாத்மன்.

“எளியவங்க மேல பழிய சுமத்துர மாதிரி, அந்த புலி மேல சுமத்தாதீங்க. இங்கன ஒரு மாசமா புலி நடமாட்டம் இருக்குன்னு நாங்க எத்தனை முறை சொன்னோம். யாராச்சும் வந்து பார்த்தாங்களா? இல்லையே… எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமா இருந்த அத்தனை பேர் மேலயும் கேஸ் போடுங்க.”

” அதான் மா என்னோட அடுத்த வேலையே. நான் அப்படி பண்ணிட்டா, கவர்மெண்ட் தர பணத்தை நீங்க கண்டிப்பா வாங்கிக்கணும்.” என்றான் ஜீவாத்மன்.

” சரி.” என்று தலையாட்டிய பொன்னாம்மளுக்கு துளி கூட ஜீவாத்மனின் மேல் நம்பிக்கை இல்லை. அவனை ஏளனமாகவே பார்த்தார்.

அவரது உள்ளத்துணர்வை புரிந்துக் கொண்ட ஜீவாத்மன், அவரிடம் பேசி புரிய வைக்கவில்லை. செயலில் காண்பித்துக் கொள்வோம் என்று எண்ணி அமைதியாக திரும்பினான்.

ஆதிரனும் அவனை தொந்தரவு செய்யாமல் அமைதியாக வந்தான்.

வெளியே அமைதியாக வந்த ஜீவாத்மனோ, உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்தான். அவனது கோபமெல்லாம் இரண்டு நாள் கழித்து, வந்த மேனகாவைப் பார்த்ததும் பொங்கி வழிந்தது.

 தினமும் பாரஸ்ட் ஏரியாவிற்கு ரவுண்ட்ஸ் வந்தவன், விடுமுறை முடிந்து வேலைக்கு வந்த மேனகாவை பார்த்ததும்,” அப்புறம் மேனகா உங்க மாமா எப்படி இருக்காங்க? இப்போ நல்லா இருப்பாங்களே…” என்று வினவ.

அவனை புரியாத பார்வை பார்த்தவள், தலையை மட்டும் ஆட்டினாள்.

” அதான் தெரியுமே… இந்த அரசியல்வாதிகளுக்கு அரஸ்ட் பண்ண வருகிறார்கள்னு தெரிஞ்சதும் ஹார்ட் அட்டாக் வருவது போல, உங்களைப் போல ஆளுக்கு திடீர்னு உடம்பு சரியில்லாமல் இருக்குற உறவினர்கள் இருப்பாங்க. அப்பத்தான அதை சாக்கா வச்சு ஓடி ஒளிய முடியும்.” என்று நக்கலாக கூறினான் ஜீவாத்மன்.

“அண்… சார்…” என்று மேனாகாவுடன் நின்றிருந்த ஆதிரன் ஏதோ கூற வர.

அவனை தீயென முறைத்த ஜீவாத்மன், ” வாயை மூடுமாறு.” சைகை செய்தான்.

” என்ன சார் சொல்றீங்க? ஒன்னும் புரியலை.” என்று சற்று எரிச்சலுடனே அவனைப் பார்த்தாள் மேனகா.

” ஓஹோ… மேடமுக்கு நான் சொல்ல வர்றது புரியலையா? சரி உனக்கு புரியுற மாதிரியே சொல்றேன்.இன்னும் எத்தனை நாளைக்கு அந்த பழங்குடி மக்களை பார்க்காமல் தவிர்க்க போறீங்க? உண்மையிலே உங்க மாமாவுக்கு முடியலையா? அது பொய் தானே…” என்று அவளைப் பார்த்துக் கொண்டே வினவ.

” அது வந்து… ” என்றவளது குரலே அதற்கு அடுத்த வார்த்தையை உதிர்க்காமல் சண்டித்தனம் செய்தது. மெல்ல சமாளித்து வாயைத் திறக்க…

” வில் யூ ஷட்டப் மேனகா… பொய் சொல்ல ட்ரை பண்ணாதீங்க. என்னைக்காவது உண்மை வெளியில வந்து தான் ஆகும். சீக்கிரமா அந்த செத்துப் போன பொண்ணோட சாவுக்கு காரணமானவங்களை நான் கண்டுபிடிப்பேன்‌. அவங்களுக்கான தண்டனை நிச்சயம் உண்டு. யாராலும் அதை தடுக்க முடியாது.”என்று அவளை கூர்ந்து பார்த்துக் கொண்டே பேச.

 அந்த சம்பவத்தை பற்றி பேசவும் மேனகாவின் உடலுக்குள் நடுக்கம் ஏற்பட்டது. மெல்ல அவள் சமாளித்துக் கொண்டு நிமிர, ஜீவாத்மனோ அவளை குற்றவாளியென சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தான்.

அவனது பார்வையை புரிந்துக் கொண்டவளோ,” முதல்ல குற்றவாளியை கண்டுபிடிங்க. அப்புறம் என்னை பற்றி பேசலாம். அதுக்கு முன்னாடி என்ன பத்தி ஜட்ஜ் பண்ண தேவையில்லை.” என்றவள் விறுவிறுவென அங்கிருந்து வெளியேறினாள்.

” சார்… ” என்று ஆதிரன் மீண்டும் ஏதோ பேச வர.

” கெட் லாஸ்ட்…” என்று கத்தினான் ஜீவாத்மன்..

‘ தேங் காட்.’ என்று மனதிற்குள் கடவுளுக்கு நன்றி சொன்ன ஆதிரனோ, மேனகாவின் பின்னே ஓடினான்.

தன் போக்கில் நடந்து சென்ற மேனகாவை இரண்டே எட்டில் எட்டிப் பிடித்தான்.

” மேனகா கூல்.” என்று அவளது கையைப் பற்றி நிறுத்த.

“ப்ச்… சரியான லூசா இருப்பார் போல.”

” யாரை சொல்றீங்க மேனகா.” என்று தெரிந்துக் கொண்டே ஆச்சரியமாக வினவினான் ஆதிரன்.

” எல்லாம் நம்ம ஹையர் ஆபீஸரை தான் சொல்றேன். அவர் கேள்வி கேட்குறாரு. ஆனால் என்னை பதில் சொல்ல விடமாட்டேங்குறாரு. இதுல பொய் சொல்றேன்னு வேற சொல்றாரு. எங்கேயாவது என்னை பேச விட்டாரா? அவரா ஏதோ உளறிட்டு போறாரு. லூசு.”என்று பொறிய.

“சரி அதை விடுங்க. ஆனால் உங்க முகத்தைப் பார்த்தாலே தெரிஞ்சது. நீங்க பொய் சொல்லப் போறீங்கன்னு…” என்று ஆதிரன் இழுக்க.

” நான் சொன்னா தானே அது உண்மையா, பொய்யானு தெரிய வரும். அதுக்குள்ள அவசரக் குடுக்கை மாதிரி உளற வேண்டியது. இடியட்.”

” ஏங்க… என்ன இருந்தாலும் அவர் நம்ம மேலதிகாரி.” என்று ஆதிரன் வாய்விட்டு கூறினாலும், உள்ளுக்குள் குதூகலமாக இருந்தான். பின்னே வீட்டில் ஆதிரனை ஜீவாத்மன் திட்டும் வார்த்தைகளையெல்லாம் ஜீவாத்மனைப் பார்த்து ஒரு அழகான பெண் திட்ட, கேட்கவா வேண்டும்.

” நம்ம மேலதிகாரின்னா என்னைப் பற்றி எப்படி வேண்டுமானாலும் ஜட்ஜ் பண்ணலாமா?” என்று மீண்டும் பொறுமினாள்.

” அப்போ உங்க மாமாவுக்கு முடியலைன்னு சொன்னது உண்மை தானா?”

” ஆமாம்.”

” ஓ காட்… இப்போ உங்க மாமா எப்படி இருக்கார். நல்லா இருக்கிறாரா? ஒன்னும் பிரச்சினையில்லையே.” என்று பரபரத்தான் ஆதிரன்.

” அவருக்கென்ன அவர் நல்லா தான் இருக்கிறார்.” என்று பல்லைக் கடித்தாள் மேனகா.

” அப்போ முடியலைன்னு சொன்னது பொய் தானே.” என்று முறைத்தான் ஆதிரன்.

” நான் பொய் சொல்லலை.”

” ஐயோ! சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லி கொல்லாதீங்க‌. என்னால முடியலை. நான் அழுதுருவேன்.” என்று வடிவேல் போல கூற.

மேனகாவின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

” குட் கேர்ள். இப்படியே சிரிச்சிட்டே திடீர்னு எதுக்கு ஊருக்கு போனீங்கனு சொல்லுங்க. ” என்று ஆதிரன் கூறியதும், மலர்ந்த மேனாகாவின் முகம் வாடியது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!