சர்க்கரவர்த்தி கொலை நடந்து இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் பள்ளி வழக்கம் போல செயல்பட ஆரம்பித்தது. குந்தவை தன் வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தாள். வகுப்பில் எதையோ பரிகொடுத்தது போல அமர்ந்திருந்தாள் ஒரு மாணவி அவளது பெயர் தாரிகா. அவளைக் கவனித்த குந்தவை அமைதியாக பாடம் நடத்தினாள். மற்ற மாணவர்கள் ஆர்வமாக பாடத்தை கவனித்தனர். குந்தவையை பிடிக்காத மாணவர்கள் யாருமே அந்த பள்ளியில் இல்லை. அவள் மற்றவர்களுடன் பழகும் விதமும், மாணவர்களிடம் தான் ஒரு தோழி போலவே பழகுவாள். அவளிடம் உண்மையாக ஒரு தோழியிடம் எப்படி எல்லா விசயங்களையும் பகிர்ந்து கொள்வார்களோ அப்படியே பகிர்ந்து கொள்வார்கள். அப்படி இருக்கும் போது அவள் வகுப்பு என்றாலே மாணவர்கள் ஆர்வமாக கவனிப்பார்கள். அவள் பாடம் நடத்தும் விதம் மாணவர்களுக்கு எளிதில் புரியும் படியாகவே இருக்கும். அவள் தாரிகாவை பார்த்தவள் பெல் அடிக்கவும் சரி ஸ்டூடண்ட்ஸ் நான் கிளம்புறேன் என்று கூறிவிட்டு தாரிகா என்றிட அந்த பெண் தாரிகா எழுந்து நின்றாள். நீ மட்டும் ஸ்டாப்ரூம்க்கு வா என்று கூறி விட்டு கிளம்பினாள்.
என்ன சார் யோசனை என்று வந்தான் கார்முகிலன். அந்த ஸ்கூல் டீச்சர் மர்டர் கேஸ் பத்தி தான் யோசிச்சுட்டு இருக்கேன் முகிலன் என்றான் உதிரன். போர்ஸ்ட்மார்டம் ரிப்போர்ட் படி அந்த ஆள் உயிரோட இருக்கும் போதே அவனோட கண் விழிகள் தோண்டப்பட்டு எடுத்துருக்காங்க, அவனோட பிறப்புறுப்பும், நாக்கும், கை விரல்களும் கூட உயிரோட இருக்கும் போது தான் வெட்டி எடுக்கப்பட்டிருக்கு. அவனோட பற்கள் உடைச்சு, தாடையை உடைச்சு இவ்வளவு கொடூரமா கொலை செய்ய என்ன ரீசன் அவனைப் பத்தி விசாரித்த வரை ரொம்ப நல்ல மாதிரினு தான் சொல்லுறாங்க. அவனோட போன் நம்பர் , மெசேஜஸ் எல்லாமே கூட செக் பண்ணி பார்த்தாச்சு அவன் ரொம்ப நல்லவன் அப்படித் தானே இருக்கு அவன் வீட்டிலும் விசாரித்துப் பார்த்தாச்சு அவனோட மனைவி பாவம் அழுது புலம்புறாங்க என்ற உதிரன் எந்தத் தடயமும் இல்லாமல் ஒரு கொலை எப்படி யாரு இதை பண்ணிருப்பாங்கள். அவனுக்கு விரோதிகள் கூட யாரும் இல்லை. ஒருத்தன் எப்படி இவ்வளவு பெர்பெக்ட்டா இருக்க முடியும் அவன் கிட்ட ஏதோ தப்பு கண்டிப்பா இருக்க வாய்ப்பு இருக்கு என்றான் உதிரன். சார் அந்த ஸ்கூலுக்கு திரும்ப ஒருமுறை போயி விசாரிக்கலாமா என்ற முகிலனிடம் சரி வாங்க என்ற உதிரன் முகிலனுடன் கிளம்பினான்.
என்னாச்சு தாரிகா ஏன் ஒரு மாதிரியா இருக்க என்ற குந்தவையிடம் மேடம் என்ற தாரிகா பேச சிரமப் படுவதால் சரி வா என்று அவளை ஒரு மரத்தடியில் இருந்த கல்பெஞ்சில் அமரச் சொல்லி அவளருகில் அமர்ந்து கொண்டாள் குந்தவை. சரி சொல்லுமா என்ற குந்தவையிடம் தாரிகா சொன்ன விசயத்தை அமைதியாக கேட்டு முடித்த குந்தவை சரி இந்த பிரச்சனையை நீ மறந்திரு என்கிட்ட சொல்லிட்டல இனி நீ மறந்துட்டு நிம்மதியா இரு. எதையும் நினைத்து படிப்புல கோட்டை விட்டுறக் கூடாது ஒழுங்கா படி கண்டதையும் நினைத்து மனதை குழப்பிக்காதே என்று கூறி தாரிகாவை அனுப்பி வைத்த குந்தவை எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டு இருந்தாள்.
என்ன குந்தவை யோசனை என்னமோ உன் ஸ்டூடண்ட் கிட்ட ரகசியம் பேசிட்டு இருந்த என்றாள் கவிதா. அது ஒன்றும் இல்லை கவி அந்த பொண்ணை ஒரு பையன் லவ் பண்ணச் சொல்லி டார்ச்சர் பண்ணிட்டு இருக்கானாம் அதான் அதையே நினைச்சு அழுதுட்டு இருக்காள். சரி நீ போ இந்த பிரச்சனையை சரி பண்ணி தரேனு சொல்லி அனுப்பி இருக்கேன் என்றாள் குந்தவை. இது என்ன சோசியல் சர்வீஸா என்ற கவிதாவிடம் நம்மளோட ஸ்டூடண்ட் நம்ம குழந்தைகள் மாதிரி நம்ம குழந்தைக்கு ஒரு பிரச்சனை வந்து அதை சரி செய்றதுக்கு பெயர் சோசியல் சர்வீஸா இல்லைல அது நம்ம கடமை மாதிரி இதுவும் நம்ம கடமை தான் என்ற குந்தவை ரெஸ்ட்ரூம் சென்றாள்.
ஆஆஆ என்ற அலறலுடன் ரெஸ்ட்ரூமில் இருந்து ஓடி வந்தாள் குந்தவை. என்னாச்சு குந்தவை என்ற கவிதாவிடம் உள்ளே உள்ளே ரெஸ்ட்ரூம்ல மலர்கொடி மேடம் என்றவளால் பேச முடியவில்லை அப்படியே மயங்கி சரிந்தாள். குந்தவை, குந்தவை என்று கவிதா பதறிக் கொண்டு குந்தவையின் முகத்தில் தண்ணீர் தெளித்துக் கொண்டு இருந்தாள். கண் விழித்த குந்தவைக்கு மீண்டும் இரத்த வெள்ளத்தில் கிடந்த மலர்கொடியின் முகம் ஞாபகம் வர அவளுக்கு வெட்டி வெட்டி இழுக்க ஆரம்பித்தது. அந்த நேரம் சரியாக உதிரனும், முகிலனும் அங்கே வர லேடீஸ் டாய்லெட்டில் ஏதோ பிரச்சனை என்று மாணவர்கள் ஓட உதிரனும், முகிலனும் கூட அங்கு வந்தனர். அங்கே குந்தவைக்கு வலிப்பு வருவதைக் கண்ட உதிரன் குந்தவை குந்தவை என அவள் கன்னம் தட்டியவன் அருகில் நின்ற வாட்ச்மேனிடம் சாவிக் கொத்தை வாங்கி அவள் கையில் வைத்து அழுத்தினான். அதில் அவளது வலிப்பு குறைந்தது. மெல்ல கண்விழித்தவள் தான் இருக்கும் இடத்தை உணர தான் தன்னவனின் மடியில் இருப்பதைக் கண்டு அவள் முகம் மலர்ந்தாலும் கொஞ்ச நேரத்திற்கு முன்பு தான் கண்ட காட்சி நினைவு வர எழில் டாய்லெட்ல மலர் மலர்கொடி மேடம் என்றவளால் பேச முடியவில்லை. என்னாச்சு குந்தவை என்றவனிடம் எழில் நீங்களே போயி பாருங்களேன் என்றவளை கவிதாவிடம் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு உள்ளே சென்று பார்க்க அங்கு மலர்கொடி கண்கள் தோண்டி எடுக்கப்பட்டு, பற்கள் உடைக்கப்பட்டு, நாக்கு அறுக்கப்பட்டு , கை விரல்கள் துண்டிக்கப்பட்டு , பிறப்புறுப்பில் பல கத்திக்குத்துகளுடன் உடல் முழுவதும் பல கத்திக் குத்துக்களுடன் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தாள்.
உதிரன் வந்தவன் குந்தவையிடம் என்ன நடந்தது என்று கேட்டான். அவளோ தான் கண்டதைக் கூறினாள் . அவளிடம் மேலும் கிளறினால் அவளுக்கு மீண்டும் வலிப்பு வந்துவிடும் என்பதை அறிந்தவன் முகிலனிடம் மற்ற விசயங்களை கவனிக்கச் சொல்லி விட்டு குந்தவையை அழைத்துக் கொண்டு சென்றான். எங்கே போறோம் என்றவளிடம் பதில் கூறாமல் பைக்கை மருத்துவமனையின் முன்பு நிறுத்தினான். இங்கே ஏன் என்றவளை முறைத்து விட்டு அவளை மருத்துவரிடம் அழைத்துச் சென்றான்.
அவளைப் பார்த்தவுடன் என்னாச்சு குந்தவை திரும்பவும் வலிப்பு வந்துருச்சா என்றார் மருத்துவர். டாக்டர் இது எப்போ தான் சரியாகும் அதிகமான இரத்தத்தை பார்த்தாலே எனக்கு வலிப்பு வந்துருது என்றவளிடம் நீ மெடிசன்ஸ் ஒழுங்கா எடுத்துக்கோ குந்தவை எல்லாம் சரியாகிடும் என்ற மருத்துவர் அவளுக்கு சில டெஸ்ட் எல்லாம் எடுத்துப் பார்த்து விட்டு ஒன்றும் பிரச்சனை இல்லை உதிரன் உங்க வொய்ப் நார்மலா தான் இருக்காங்க என்றார். இரத்தத்தை பார்த்ததால பயத்துல வலிப்பு வந்திருக்கு மத்தபடி பெரிய பிரச்சனை எதுவும் இல்லை என்று கூறிய மருத்துவரிடம் இருந்து விடைபெற்ற இருவரும் கிளம்பினர். என் மேல இவ்வளவு அக்கரை வைத்துக் கொண்டு ஏன் என்னை ஒதுக்குறிங்க என்றாள். அவளை முறைத்தவன் ரோட்டில் போகும் போது ஒரு நாய்க்குட்டிக்கு அடி பட்டால் அதை அப்படியே விட்டுட்டு போகும் அளவுக்கு எனக்கு கல் நெஞ்சு இல்லை. அதை எப்படி ஹாஸ்பிடல்ல காட்டி மருந்து கட்டி பார்த்துக்குவேனோ அப்படித்தானே தவிர யார் மேலையும் எனக்கு அக்கறையும் கிடையாது பாசமும் கிடையாது என்றான் உதிரன். அவள் அமைதியாக இருந்தாள்.
இறங்கு என்று அவன் கூறியதும் தான் கவனித்தாள் அவளது வீடு வந்து விட்டது என்பதை. அவள் பைக்கை விட்டு இறங்கி எழில் நீங்கள் உள்ளே வரலாமே என்றாள். அவளை முறைத்து விட்டு வேகமாக பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினான். செல்லும் அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
என்ன அக்கா என்று சங்கவி அழைக்கவும் தான் திரும்பினாள் குந்தவை. ஒன்றும் இல்லை சங்கவி என்றவளிடம் அத்தான் வீட்டுக்குள்ள வராமல் போயிட்டாரேனு வருத்தமா என்றாள் சங்கவி. அவர் எப்படி சங்கவி வருவாரு நான் செய்த தப்பு அப்படி எந்த மனைவியும் செய்யக் கூடாத காரியத்தை செய்து விட்டு அவர் வரலைனு புலம்பினாள் என்ன அர்த்தம் என்ற குந்தவை அமைதியாக சென்று விட்டாள்.
என்ன குந்தவி கையில் ரிப்போர்ட் என்ற தேவகியிடம் பள்ளியில் நடந்தவற்றைக் கூறினாள் குந்தவை. உதிரன் உன்னை ஹாஸ்பிடல் அழைச்சுட்டு போனாரா என்ற தேவகியிடம் ஆமாம் அம்மா என்றவள் தன்னறைக்குச் சென்று அமைதியாக அமர்ந்திருந்தாள். அவளுக்கு எதிரே சுவற்றில் அவளது கல்யாண போட்டோ மாட்டப் பட்டு இருந்தது. உதிரன்எழிலமுதன், குந்தவைதேவி இருவரும் மணக்கோலத்தில் இருந்த அந்த போட்டோவைக் கண்டவளின் நெஞ்சம் தன்னுடைய முட்டாள்தனத்தை நினைத்து விம்மி விம்மி கதறியது. தன் மனம் போடும் கூப்பாடை அவள் யாரிடம் சொல்லுவாள்.
உதிரன்எழிலமுதனும் தன்னறையில் அமர்ந்து தன் எதிரே இருந்த தன் திருமண போட்டோவையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனது மனமோ உலை கணலாக கொதித்தது. தான் இன்று அவளுக்கு வலிப்பு வந்தவுடன் துடித்ததை நினைத்தவன் தன்னைத் தானே நொந்து கொண்டான். அவளுக்கு என்ன வந்தால் உனக்கு என்னடா ஏன் நீ துடிச்ச உன்னை வேண்டாம்னு சொல்லி தூக்கி எறிஞ்சுட்டு போனவள் தானே என்று நினைத்தவன் மனமும் தவித்தது. மனதை திசை திருப்ப நினைத்தவன் முகிலனுக்கு போன் செய்தான்.
இரண்டு நாட்கள் கடந்த நிலையில் சங்கவி தன் அக்காவின் வாழ்வை சரி செய்ய வேண்டும் என்று நினைத்தவள் தானே இதில் ஏதாவது முடிவு எடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு உதிரன் வேலை பார்க்கும் ஸ்டேசனிற்கே சென்றாள்.
கார்முகிலன் அங்கு இருந்தான். அவனிடம் இன்ஸ்பெக்டரை பார்க்க வேண்டும் என்று கூறினாள். சாரை பார்க்க முடியாது அவர் கேஸ் விசயமா பிஸியாக இருக்கிறார் என்ற முகிலனிடம் சார் ப்ளீஸ் கொஞ்சம் பர்சனல் அவர்கிட்ட தான் பேசனும் என்று அவள் கெஞ்சிட சரியென்று அவளை உதிரனை பார்க்க அனுமதித்தான் கார்முகிலன்.
சங்கவி உள்ளே சென்றவள் அத்தான் என்றிட அவளை முறைத்தவன் இங்கே எதற்காக வந்த என்றான். இல்லை அக்கா பத்தி என்று கூற வந்தவளிடம் அதான் கேஸ் கோர்ட்ல நடக்குதே அப்பறம் என்ன என்றான். அத்தான் ப்ளீஸ் புரிஞ்சுகோங்க அக்கா பாவம் என்றவளிடம் ஆமாம் உன் அக்கா பாவம் தான் நான் தான் பாவி சரியா இடத்தை காலி பண்ணு எனக்கு நிறைய வேலை இருக்கு என்றவன் முகிலன் என்று கத்தவும் அங்கு சென்றான் முகிலன்.
சார் என்ற முகிலனிடம் கண்டவங்களையும் என்னை பார்க்க அனுமதிச்ச அவ்வளவு தான் என்று அவனைத் திட்டி விட்டு சரி வா அந்த மலர்கொடி டீச்சர் வீட்டில் இன்வெஸ்டிகேசனுக்கு போகணும் என்று கிளம்பினான். சங்கவி கவலையுடன் கிளம்பினாள்.
….தொடரும்….