ஹாய் ஃப்ரெண்ட்ஸ் உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் கதையின் அடுத்த அத்தியாயம்
படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே
****************
அன்று…
அனன்யாவின் கேலியில், எல்லோரும் நகைக்க… விஸ்வரூபனும் சேர்ந்து சிரித்துக் கொண்டிருந்தான்…
” டேய் விஸ்வா… என்ன நெனச்சிட்டு இருக்க? நான் என் பேத்தியோட எதிர்காலத்தை நினைத்து கவலைப்பட்டுட்டு இருக்கேன். நீ என்னடான்னா அவளை கிண்டல் பண்ணிட்டு இருக்க.” என்ற ருக்குமணி விஸ்வரூபனைப் பார்த்து முறைத்தார்.
” ஐ நோ பாட்டி. எனக்கு எதுக்கு தாத்தா பேரை வச்சீங்கன்னு இப்போ நல்லாவே புரியுது.” என்று அழுத்திக் கூறிய விஸ்வரூபன், தன் பாட்டியைப் பார்த்து கிண்டலாக சிரித்தான்.
” டேய் படவா… எங்களோட ஒரே பேரன் நீ. உனக்கு அந்த பேரை வைக்காமல் அடுத்த வீட்டுக்காரனுக்காக வைக்க முடியும்.” என அவரும், அவனுக்கு சரி சமமாக கிண்டலில் இறங்க.
“எனக்கு அதெல்லாம் தெரியாது பாட்டி. உங்களுக்கு கோபம் வரும் போது தாத்தாவை திட்ட முடியாததற்காகத் தான் எனக்கு அவர் பேரை வச்சு, நல்லா திட்டிட்டு இருக்கீங்க. எங்க தாத்தா மட்டும் இருந்திருந்தா பாவம் உங்க கிட்ட மாட்டிகிட்டு முழிச்சிட்டு இருந்திருப்பார்.”
” டேய் என் புருஷனை திட்டணும்னா நான் நேராகவே திட்டிட்டுவேன். அதுக்காக எல்லாம் உனக்கு அந்த பேரை வைக்கலை. அவர மாதிரி பேரும்,புகழும் வாங்கணும்னு அந்த பெயரை வச்சேன். நீ என்னனா என்னையே கிண்டல் பண்ணுற. ம்… எல்லாம் அந்த மனுசன சொல்லணும். என்னை இப்படி விட்டுட்டு போயிட்டாரு. போகும் போது என்னையும் கூட்டிட்டுப் போயிருக்கக் கூடாதா? என் மேல அன்பு இருந்தா இப்படியா என்னை விட்டுட்டுப் போயிருப்பார்.” என்று புலம்ப.
” ஏன்? அங்கேயும் அவர் நிம்மதியாக இருக்க கூடாதா பாட்டி.”
” டேய்… என்னால உன்னை அடிக்க கூட ஓடி வர முடியாது.” என்று பாட்டி புலம்ப.
அவன் அருகில் நின்று கொண்டிருந்த அனன்யா, ” நான் இருக்கேன் பாட்டி. நீங்க ஏன் கவலைப்படுறீங்க. உங்களுக்கு பதிலாக மாம்ஸை நான் அடிக்கிறேன்.” , என்றவள் விஸ்வரூபனை பிடிக்க.
“ஏய் அந்துருண்டை ஒழுங்கா ஓடிப் போயிடு.”, என அவளை விரட்டினான் விஸ்வரூபன்.
அவர்கள் செய்யும் கலாட்டாவை பார்த்து
ரசித்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணமூர்த்தி.
தன் மாமியாரைப் பார்த்த ரஞ்சிதம், அவர் கவலையில் இருப்பதை உணர்ந்து, தன் கணவரிடம் ஜாடைக் காண்பித்தார்.
தன் அம்மாவின் முகத்தில் இருக்கும் கவலைக்கான காரணத்தை அறிந்து இருந்திருந்தவர், அதைக் களைவதற்கான முயற்சியில் இறங்கினார்.
“ரூபன்… பீ சீரியஸ். அனன்யாவை மெடிசின் படிக்க, பணம் கட்டி சேர்த்துடலாம். எந்த காலேஜ்ல சேர்க்கிறதுனுப் பாரு?” என்று கிருஷ்ணமூர்த்திக் கூற.
” டாட்… மணி இஸ் நாட் ஏ ப்ராப்ளம் அட் ஆல். நம்ம இன்ஃப்ளூயன்சை வச்சுக் கூட சேர்ததுடலாம். அது ஒன்னும் நமக்கு பிரச்சினை கிடையாது. நமக்குன்னு ஒரு ரெபுடேஷன் இருக்கு. இவ்வளவு மார்க் குறைவா இருக்கும் போது, நம்ம இங்கு சேர்க்க வேண்டாம். என்றவன் நிமிர்ந்து எல்லோரையும் பார்க்க.
எல்லோரும் அடுத்து அவன் என்ன சொல்லப் போகிறானோ? என்று தவிப்போடு பார்த்தனர்
அனன்யாவோ, முகத்தில் கலக்கத்தோடு அவனைப் பார்த்தாள்.’ எப்படியும் தன்னை மருத்துவப் படிப்பில் சேர்த்து விடுவார்கள் என்று அலட்சியத்தோடு, சற்று விளையாட்டுத் தனமாகவே படித்தாள்.’ ஆனால் இன்று அந்த அஸ்திவாரமே ஆட்டம் காண அச்சத்துடன் இருந்தாள்.
அவள் மனதில் ஓடும் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்ட விஸ்வரூபன், அவளை லேசாக அணைத்தான். “அந்துருண்டை… நீயும் இந்த வீட்டோட ஒன் ஆஃப் த டாக்டர். ஆனால் உன்னோட எய்ட்டி பர்சன்டேஜ்ஜிக்கு இங்கே வேண்டாம். பிலிப்பைன்ஸில் படிக்கலாம்.
அங்க அஞ்சு வருஷம் படிச்சிட்டு வா. அப்புறம் இங்கே ஒரு என்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுதிட்டால் போதும். நீ இங்கே ஃப்ராக்டிஸ் பண்றதோ, மேற்படிப்பு படிக்கறதோ எது வேணாலும் செய்யலாம்.” என…
அவன் கூறியதைக் கேட்ட அனன்யாவின் கண்களோ கண்ணீரை பொழிந்துக் கொண்டிருந்தது.
அந்த இடமே அமைதியாக இருந்தது. சொல்லி வைத்த மாதிரி எல்லோரும் பாட்டியையும், கௌரியையும் மாற்றி மாற்றிப் பார்க்க.
” அவ அப்பா தான் விட்டுட்டு போயிட்டான். அவ அம்மா இன்னமும் உயிரோடு தான் இருக்கா விஸ்வா…” என்று ருக்குமணி கண்டிப்புடன் கூற.
அம்மா… அத்தை… பாட்டி… என பல குரல்கள் அங்கு ஒலித்தது.
விஸ்வரூபனோ, கண்களில் அடிப்பட்ட பார்வையுடன் தன் பாட்டியைப் பார்த்தவன், சோஃபாவில் அமர்ந்து இருந்த தனது அத்தையைப் பார்க்க…
அவனது பார்வையின் அர்த்தத்தை உணர்ந்த கௌரி, எழுந்து நின்று,” இங்கே பாருங்க… எனக்கு ரூபன் மேல நம்பிக்கை இருக்கு. அவன் என்ன செய்தாலும், அது அனுவோட நல்லதற்காகத்தான் இருக்கும். எனக்கு எந்த அப்ஜக்சனும் இல்லை. ரூபன்… அனுவை பிலிப்பைன்ஸ்ல சேர்க்கிறதுக்கு என்ன ஏற்பாடு செய்யனுமோ செய்.” என்றவர் அந்த இடத்தை விட்டு சென்று விட்டார்.
அனு அழுதுக் கொண்டே, அவளது அறைக்குச் செல்ல… ருக்குமணியும் பேத்தியின் பின்னே சென்றார். அவருடைய செல்லப்பேத்தியோட கண்களில் கண்ணீரைக் கண்டால் தாங்குமா அவரது இதயம்! அது தான் அவளை சமாதானம் செய்வதற்காகச் சென்றார்.
“ஏன் டா தம்பி? அனு இந்த வீட்டை விட்டு எங்கேயும் போனதில்லையே. அவளால அங்க தனியா சமாளிக்க முடியுமா?” என ரஞ்சிதம் வினவ…
” மாம்… அனு இங்கேயே இருந்தால் உலக நடப்பு எதுவுமே தெரியாமல் போய் விடும். இப்படி லேசா கண்ணுல தண்ணி வந்துட்டாலே போதும். செல்லம் என்ற பெயரில் தாங்குறதுக்கு நீங்கள்லாம் இருக்கீங்களே. அப்புறம் அவ எப்படி வெளி உலகத்தை பேஸ் பண்ணுவா சொல்லுங்க ?” என கோபமாகக் கூற.
” காம் டவுன் ரூபன். அவளோட அப்பா இருந்தா பரவாயில்லை. அந்த ராஸ்கல் தான் விட்டுட்டுப் போயிட்டான். அனுவுக்கு அந்த குறைத் தெரியாமல் வளர்க்கணும் என்று தான் நாங்க அவளுக்கு செல்லம் கொடுக்கிறோம். இப்போ நாங்க கேட்கறதே? அவளால அங்க தனியாக சமாளிக்க முடியுமா? அதை யோசிச்சியா?” என்று கிருஷ்ணமூர்த்தி தலையிட.
“டாட். அங்கே போயிட்டா சமாளிச்சிக்குவா… நாமளும் அடிக்கடி போய் பார்க்கலாம். அவ எல்லாத்துக்கும் நம்மளையே டிஃபென்ட் பண்ணி இருக்கக் கூடாது. போல்டான நம்ம அத்தையே, அந்த ஆள் இவங்களை விட்டுட்டு போனப்ப எப்படி உடைஞ்சு போனாங்க… அதுக்காகத் தான் சொல்லுறேன்.”
” டேய் தம்பி… உங்க அத்தை என்ன பண்ணுவா? நாம பார்த்து, செய்து வச்ச கல்யாணம். ஏழுவருடம் சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லாமல் போயிடுச்சு. எனக்கும் உனக்கும் செட்டாகாது. நான் ஆஃபிஸ் முடிந்து வீட்டுக்கு வரும் போது, சிரிச்ச முகத்தோட இருக்கற மாதிரி மனைவி தான் வேணும்னு ஈஸியா சொல்லிட்டு போயிட்டார். ஆனால் ஐந்து வயது பொண்ணை வச்சிக் கிட்டு, இவ்வளவு நாள் வாழ்ந்த வாழ்க்கையை உதாசீனப்படுத்திட்டு போன வலி அவளுக்குத் தான் தெரியும்.” என ரஞ்சிதம் கூற.
” அதே தான் மாம். நானும் சொல்றேன். எல்லாவற்றையும் ஏத்துக்கிற பக்குவம் வரணும். அது அவ இங்கே இருந்தா வராது. அங்கே தனியாக இருந்தால் முட்டி மோதி எல்லாம் கத்துப்பா. அவளோட லைஃப்புக்கு நான் பொறுப்பு” என்றான் விஸ்வரூபன்.
அனுவை சமாதானம் செய்து விட்டு வந்த ருக்குமணியின் காதில் இந்த வார்த்தை விழுந்தது. அதைக் கேட்டதும் தான் நிம்மதி வந்தது. ‘எப்படியும் தன் பேரன், அவன் நினைத்ததை தான் நடத்துவான். அதிலெல்லாம் அவன் அவங்க தாத்தா மாதிரி.’ என்று பெருமையாக நினைத்தவர், ‘எப்படியோ அனுவை நினைத்து இனி கவலையில்லை.’ என மனதிற்குள் எண்ணிக் கொண்டார்.
ருக்குமணியின் கணவர் விஸ்வதட்சன். அவரும் ஒரு இதயமருத்துவர்.சுகம் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலை உருவாக்கியவர். இன்று அது பிரம்மாண்டத்துடன் சென்னையிலே இன்னும் இரண்டு இடத்தில் வெற்றிகரமாக செயல்படுகிறது.
அப்படிப்பட்ட சிறந்த மருத்துவமனையின் ஸ்தாபகரும், பிரபல இதயமருத்துவரான அவர் இறந்ததோ, எதிர்பாராத அதிர்ச்சியில் இதயம் செயலிழந்து இறந்து விட்டார்.
அதற்கான காரணமோ, தன் மகளின் எதிர்காலத்தை நினைத்து தான்…
தன் நண்பனின் மகன் என்ற ஒரே காரணத்தாலே வசதியைக் கூட பார்க்காமல் சங்கரை தனது மாப்பிள்ளையாக தேர்ந்தெடுதிருந்தார்.
ஆனால் அவனோ, தன் மகளையும், பேத்தியையும் கறிவேப்பிலையென தூக்கி எறிந்து இருக்க. அந்த அதிர்ச்சியிலே அவரும் போய் சேர்ந்து விட்டார். ருக்குமணி, தனது மகளுக்காகவும், பேத்திக்காகவும் எல்லா துக்கத்தையும் தனக்குள்ளே மறைத்துக் கொண்டு கம்பீரமாக வலம் வந்தார்.
இதோ இப்போதுக் கூட விஸ்வரூபன் கூறியதைக் கேட்டவரின் மனம் ஆசுவாசம் அடைந்தது. பேத்தியைப் பற்றிய கவலை மறைந்தது. எந்த வார்த்தை அவருக்கு நிம்மதி அளித்ததோ, அந்த வார்த்தையையே வாக்குறுதியாகப் பயன்படுத்தி பின்னாளில், பேரனின் காதலுக்கு முடிவுரை எழுதப் போவதை அப்போது அறியவில்லை.
**************
கோவிலில் இருந்து வந்தவுடன் டூவெல்த் ரிசல்ட்டைத் தெரிந்துக் கொள்வதற்காக பரபரப்புடன் முயற்சி செய்து கொண்டிருந்தாள் ராதிகா. எப்படியும் ஆயிரத்து நூற்று ஐம்பதுக்கு மேல் தான் மதிப்பெண் வரும் என்பதில் அவளுக்கு ஐயமில்லை. ஆனால் பள்ளியில் முதல் மூன்று இடத்திற்குள் வர வேண்டும் என்று நினைத்து இருந்தாள். ஆனால் கெமிஸ்ட்ரி எக்ஸாம் அன்று அவளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் விட்டது. அது தான் அவளது டென்ஷனுககு காரணம்.
ராதிகாவோ நெற்றியெல்லாம் வியர்வைத் துளிர்க்க, பயத்துடன் தன் தந்தையிடம் சென்றவள், ” பா… ஸ்கூலுக்கு போகலாம் பா. இங்கே பார்க்க முடியலை.”
“சரி மா. போகலாம்… முதல்ல சாப்பிடு.”
” அப்பா நீங்க சாப்பிடுங்க. எனக்கு பசிக்கலை பா.”
” அம்மாடி… சாப்பிடாமல் உங்க அம்மா போக விட மாட்டா. சும்மா என்னோட உட்கார்ந்து எழுந்துரு.” என்றவர் அவளை அழைத்துச் சென்று சாப்பிட வைத்தார்.
சண்முகமும் கடைக்கு வரமாட்டேன் என்று ஏற்கனவே சொல்லியிருந்தார். மேனேஜர் வந்து சாவியை வாங்கிட்டு போயிருந்தார். கீழவாசலில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் வைத்திருக்கிறார்.
அவதிஅவதியாக மூன்று இட்லிகளை பிட்டு வாயில் போட்டுக் கொண்டவள்,” மா… நானும், அப்பாவும் ஸ்கூலுக்கு போயிட்டு வரோம்.”, என்று கூற…
“இருடா தங்கம். ஸ்வீட் செஞ்சுட்டேன். சாப்பிட்டு போகலாம்.”, சுந்தரியின் குரல் கிச்சனிலிருந்து வர.
” இல்லை மா. டைமாயிடுச்சு வந்து சாப்பிடுறேன்.”
” இருடா… எதுக்கு இவ்வளவு அவசரம்? ஐந்து நிமிஷம் பொறு. ஆமாம் உன் மார்க் எவ்வளவு. அதை சொல்லலையே.”
“இங்கே தெரியலை. ஸ்கூல்ல போய் தான் பார்க்கணும். வந்து ஆற அமர உட்கார்ந்து சாப்பிடுறேன்.இப்போ ஸ்கூலுக்கு போயிட்டு வரேன். பை மா.”, என்றவள் தந்தையுடன் கிளம்பி விட்டாள்.
ஆனால் திரும்பி வரும் போது, சுந்தரி தன் மகளுக்கு பிடிக்குமென்று ஆசையாக செய்து வைத்திருந்த அசோகா அல்வாவை சாப்பிடும் மனநிலை தான் அங்கே யாருக்கும் இல்லை.
*******************
சண்முகம் ஸ்கூட்டியில் மகளை அழைத்துச் சென்றார்.
பள்ளிக்குள் நுழைந்தவள் வகுப்பாசிரியரை சென்றுப் பார்க்க…
அவரோ,” என்ன ராதிகா? நீ ஸ்டேட் லெவல் இல்லைன்னா டிஸ்டிரிக் லெவல் வருவேன்னு எதிர்பார்த்தேன். பட் ஸ்கூல் லெவல்லக் கூட ஃபர்ஸ்ட் த்ரீப்ளேஸ்ல இல்லை.” எனக் கூற…
ராதிகாவோ முகம் வாட நின்றாள்.
*******************************
இன்று…
கோவிலிருந்து வந்த ராதிகாவின் முகம் வாடி இருக்க…
” ஏன் டா தங்கம் முகம் வாடி இருக்கு?” என பதறி சுந்தரி கேட்க…
அம்மாவின் பதட்டத்தைக் கண்டதும், கலங்கும் கண்களை சமாளித்துக் கொண்டு, “வெளியில போயிட்டு வந்தது கொஞ்சம் டயர்டா இருக்கு மா. காஃபி போடுங்க.இதோ வந்துடுறேன்.” என்றவள், அவளது அறைக்குச் சென்று கதவைத் தாழிட்டாள்.
அப்படியே மடங்கி அமர்ந்தவளின் கண் முன்னே மேடிட்ட வயிறுடன் இருந்த அனன்யாவும், அவளை அணைத்து நின்ற விஸ்வரூபனும் தான் வந்து போயினர்.
கண்ணீரோ நிற்காமல் வழிந்தோடியது. எதையும் யோசிக்கும் மனநிலையில் இல்லை.
அதே நிலையில் அமர்ந்து இருக்க… அவளது தவத்தை களைக்க, சுந்தரி வந்து கதவை தட்டினாள்.
” ராது மா… காஃபி ரெடி… சீக்கிரம் வந்து குடி. அப்புறம் டிபன் எப்போ சாப்பிடுவ?”
” டூமினிட்ஸ் மா.” என்றவள், கண்ணாடி முன்பு நின்று, அவசரமாக முகத்தை துடைத்து லேசாக மேக்கப் செய்துக் கொண்டு வெளியே வந்தாள்.
இது தான் கடந்த ஏழு எட்டு மாதமாக அவளுடைய வழக்கம். மனதில் உள்ளதை மறைத்து, பொய்யான முகமூடியை போட்டுக் கொண்டு, தன் தாயையும், தந்தையையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறாள்.
இன்றும் காலை உணவு நேரத்தில் கலகலத்து விட்டு ஹாஸ்பிடலுக்கு கிளம்பி சென்றாள்.
அங்கோ அவளது சோர்ந்த மனதிற்கு மகிழ்ச்சி தரும் செய்தி வந்தது.
ஹாஸ்பிடலுக்குள் நுழைந்தவுடன் வேறு எந்த சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல், சிரித்த முகமாக எதிர்பட்ட ஊழியர்களிடம் தலையசைத்தவள், தனக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்தாள்.
இன்னும் பேஷண்ட்ஸ் வருவதற்கு நேரம் இருந்தது. அதற்குள் ரவுண்ட்ஸ் போக வேண்டும். பெரிய டாக்டருடன் இவர்களும் சென்று நோட்ஸ் எடுக்க வேண்டும். இன்டர்காம் ஒலிக்க…. அவளது நாள் ஆரம்பித்தது.
ரவுண்ட்ஸ் முடிந்து, கன்ஸல்டிங் ஹவரும் முடிந்து ப்ரேக்கில் கேண்டீனில் இருந்தாள். அவள் முன் ஆவி பறக்கும் காஃபி வீற்றிருந்தது. கெடுதல் என்று தெரிந்தாலும் அவளால் விட முடியாத பழக்கம்.
ரசித்துக் குடித்துக் கொண்டிருக்க அவளது செல்போன் இசைத்தது.
வெளிநாட்டிலிருந்து போன் கால் வந்திருக்க… உற்சாகத்துடன் பேசினாள்.
( ஆங்கிலத்தில் உரையாடிய உரையாடல் தமிழில்…)
” ஹலோ டாக்… வாட் ஏ ப்ளசன்ட் சர்ப்ரைஸ். ஹவ் ஆர் யூ.” ராதிகாவின் உற்சாக குரல் ஒலித்தது.
” ஐயம் ஃபைன் டியர். நான் உனக்கு ஒரு சந்தோஷமான நியூஸ் சொல்ல தான் கால் பண்ணேன்.” என்றார் டாக்டர் சேலவர்.
அவர் தான் ராதிகா எம்.பி.பி.எஸ் பண்ணும் போது டீச் பண்ண டாக்டர். வெரி ஃப்ரெண்ட்லி டைப். இப்போது வந்த ஃபோன் கால் அவரிடம் இருந்து தான் வந்திருந்தது.
அவர் கூறப் போவதை பற்றி யூகம் இருந்தாலும், அவரது வாயால் கேட்பதற்காக காத்திருந்தாள்.
“சொல்லுங்க டாக். ஐயம் வெயிட்டிங்.”
” யெஸ் டியர். உன்னோட கனவு நிறைவேறப் போகுது. நீ ஆசைப்பட்ட மாதிரியே கார்டியாலஜிஸ்ட் ஆகலாம். பீஜி என்ட்ரென்ஸ் எக்ஸாமோட ரிசல்ட் வந்ததும், சென்னையில் இருக்கிற என்னோட ஃப்ரெண்ட் கிருஷ்ணனை போய் பாரு… அவரோட காலேஜ்ல சீட் அலாட் பண்ணியிருக்கார். பணம் ஏதும் கட்ட வேண்டாம். அவரோட அறக்கட்டளை மூலமா படிக்க வைக்கிறேன் என்று சொல்லிட்டார். உனக்கு ஓகே தானே.”
” யா டாக்…”
” நான் சொன்னதை கேட்டதும், உற்சாகத்துல துள்ளிக்குதிப்பே என்று நினைத்தேன். நீ என்ன ரொம்ப அமைதியா இருக்க ராதி டியர்.எனி ப்ராப்ளம்?”
” நத்திங் டாக்… அப்போ காஞ்சிபுரத்துல தானே உங்க ப்ரெண்டோட காலேஜ் இருக்கு என்று சொன்னீங்க… இப்போ சென்னை என்று சொல்றீங்க? ”
“ஓ… அதுவா… அவங்க காலேஜ் அன்ட் ஓன் ஆஃப் த ஹாஸ்பிடல் காஞ்சிபுரத்துல இருக்கு. அவங்க இருக்கிறது சென்னை. அந்த நியாபகத்துல சொல்லிட்டேன். இது ஒரு பிரச்சினையா? சரி மத்த டீடெயில்ஸ் மெயில்ல அனுப்புறேன். காலேஜ்ல ஜாயின் ஆனதும் எனக்கு மெசேஜ் பண்ணு. பை டியர்.” என்று வைத்து விட.
‘ அப்பாடா… கொஞ்ச நேரத்துல கதிகலங்க வச்சுட்டாரே…’ என்று எண்ணியவள் ஓய்வு அறைக்கு சென்றாள்.இனி மாலை தான் அவுட் பேஷண்ட்ஸ் வருவார்கள். அது வரை அவளுக்கு ஓய்வு தான்.
அவளது ஓய்வு நேரத்தை, லைப்ரேரியிலிருந்து எடுத்து வரும் மருந்துவ சம்பந்தமான புத்தகங்களை படிப்பதில் செலவிடுவாள்.
இன்றோ எதிலும் மனம் லயிக்கவில்லை. காலையில் சந்தித்த இருவரின் முகமே கண்ணில் வந்து போனது.
‘ கடவுளே! அவர்கள் இருவரையும் இனி என் வாழ்நாளில் சந்திக்க கூடாது.’ என்று வேண்டிக் கொண்டாள்.
********************
” மாமா… அங்க பாருங்க… நம்ம ராது போறோ… சீக்கிரம் கூப்பிடுங்க… ” என்று பதறினாள் அனன்யா
அவளை ஒரு பார்வை பார்த்தவன் ஒன்றும் கூறாமல் அமைதியாக இருந்தான்.
” என்னைய விடுங்க மாமா… நான் போய் அவளைக் கூப்பிடுறேன். இல்லைன்னா அவ போயிடுவா. அவக் கிட்ட பேசணும் மாமா. ப்ளீஸ் விடுங்க…” என்று கெஞ்ச…
அவன் அசையவில்லை. அவளையும் தன் பிடியிலிருந்து விடவில்லை. ராதிகா இவர்களின் பார்வையிலிருத்து மறைந்து விட்டாள்.
அனன்யாவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. விஸ்வரூபன் அதையும் பொருட்படுத்தவில்லை.
கோவிலிலிருந்து அவளை ரூமிற்கு அழைத்துச் செல்வதிலே கவனமாக இருந்தான்.
ரூமிற்கு சென்றதும், இண்டர்காமில் அவள் குடிப்பதற்கு மாதுளம் ஜூஸ் ஆர்டர் குடுத்து விட்டு, ரூம் வெகேட் பண்ணுவதற்கான ஏற்பாடையும் செய்ய சொன்னான்.
அவர்களது உடமையை எடுத்து வைத்துக் கொண்டு இருந்தான். அவன் செய்வதை பார்த்துக் கொண்டே இருந்த அனன்யா, ” மாமா… ஏன் இப்படி இருக்கீங்க? ராதிகாவை பார்க்கறதுக்குத்தான் நான் இங்கே வந்தேன். ப்ளீஸ் எப்படியாவது அவ வீட்டை கண்டு பிடிச்சு கூட்டிட்டு போங்க மாமா.” என கெஞ்சினாள்.
” ஓ… இதுக்காகத் தான் தஞ்சாவூர் கோவிலுக்கு போகணும்னு சொல்லி அடம் பிடிச்சியா அனு? இது முன்னேயே எனக்கு தெரிந்திருந்தால் அழைச்சிட்டே வந்திருக்க மாட்டேன்.” என்றான் இறுகிய குரலில் …
அவன் கூறியதைக் கேட்ட அனு நம்ப மாட்டாமல் அதிர்ச்சியில் அவனை பார்த்து நின்றாள்.
” மாமா…” என.
“ஆமாம். நீ கோவிலுக்கு போகணும்ன்னு ஆசைப்பட்டதால தான் வந்தேன். உனக்காகத் தான் வந்தேன். அப்புறம் அவங்க வீடு தெரியலைன்னா தான் தேடணும். எனக்குத் தெரியும்.” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினான்.
“அப்போ எனக்கு இப்பவே ராதிகாவைப் பார்க்கணும். அவக் கிட்ட கூட்டிட்டு போங்க. அவளைப் பார்த்து மன்னி
ப்பு கேட்கணும்.இல்லண்ணா நான் செத்துப் போயிடுவேன்.” என்று ஹிஸ்டிரியா பேஷண்ட் போல கத்தினாள் அனன்யா.