“நான் தான் முதன்முதலாக உங்களிடம் என் காதலைக் கூறியிருக்கிறேன்.” என்ற ராதிகாவைப் பார்த்த விஸ்வரூபன், ” எப்ப சொன்ன ராதா? ” என்று யோசனையுடன் வினவ.
” நான் சொல்ல மாட்டேன். நீங்களே கண்டுபிடிங்க…” என்ற ராதிகா, அங்கிருந்து எழுந்து செல்ல முயல…
ஆனால் அவளால் முடியவில்லை, ஏனென்றால் அவளது கைகள் அவனது கையில் அல்லவா சிக்கிக் கொண்டது.
” பதில் சொன்னால் தான் போகலாம். அதுவரைக்கும் இப்படியே இருக்கலாம். எனக்கு நோ அப்ஜெக்ஷன்.” என்றவன், அவளைப் பார்த்து கண் சிமிட்ட…
முகம் செவ்வானமாக சிவக்க, ” முதன் முதலாக காலேஜ் பங்ஷன்ல நான் பாடினப் பாட்டு ஞாபகம் இருக்கா?” என்று அவனை நிமிர்ந்துப் பார்த்து வினவ.
” ப்ச்…” என்று உதட்டைப் பிதுக்கி கூற…
விஸ்வரூபனைப் பார்த்து முறைத்தாள் ராதிகா.
இப்போது விஸ்வரூபனின் முகத்தில், புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது.
” உங்களை நினைத்து தான் அந்த பாட்டு பாடினேன் தெரியுமா? ” என்று ராதிகா வினவ…
” அது தான் எனக்கு ஞாபகம் இல்லைனு சொல்லிட்டேனே மை டியர் ராதா.”
” சரி விஷ்வா… உங்க பேருக்கு அர்த்தம் தெரியுமா?”
” அதெல்லாம் எனக்கு தெரியாது ராதா மா… எனக்கு தெரிந்ததெல்லாம் அது எங்க தாத்தா பேரு… அப்புறம் யாரும் என்னை விஷ்வானு கூப்பிட்டதில்லை. நான் எல்லோருக்கும் ரூபன்.” என்றுக் கூறி புன்னகைக்க…
” அப்போ நான் அப்படிக் கூப்பிடக் கூடாதா?” என குரல் குழைய ராதிகா வினவ…
” நீ கூப்பிடுடணும்னு தானே, இவ்வளவு நாள் யாரையும் அப்படி அழைக்க விடாமல், காத்திருந்தேன். ” என்றவன் அவளை ஆழ்ந்துப் பார்க்க…
முகம் சிவந்தவள், பேச்சு எங்கேங்கோ திசை மாறுவதை உணர்ந்து, ” வேணும்னே பேச்சை டைவர்ட் பண்ணுறீங்க விஷ்வா…” என சிணுங்கினாள்.
இதுக்கு மேல் தனியாக இருந்தால் சரி வராது என்பதை உணர்ந்த விஸ்வரூபன், ” சரி சொல்லு ராதா… என் பெயருக்கு அர்த்தம் என்ன?” என்று நேரிடையாக விஷயத்திற்கு வந்தான்.
” விஸ்வரூபன் அந்த மாயக்கண்ணனோட இன்னொரு பெயர்.” என்றாள் ராதிகா.
” ஓஹோ… எனக்கு இவ்வளவு நாளாக தெரியாதே… அப்ப இந்த கண்ணனோட ராதிகா நீ தானா… இல்லை இல்லை… இந்த ராதிகாவோட கண்ணன் நான் தானா… ” என்றவன் அந்த மாயக்கண்ணனைப் போல் குறும்பாக சிரித்தான்.
அவன் கிண்டல் செய்வதுக் கூட தெரியாமல் அப்பாவியாக இருந்தாள் ராதிகா.
அவளது தோழி அனன்யா, வழக்கம் போல உதவிக்கு வந்திருந்தாள். சரியாக அந்த நேரம் விஸ்வரூபனுக்கு அழைத்திருந்தாள்.
” யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே…” என்று ராதிகாவின் குரலில் பாடல் ஒலித்தது.
இவ்வளவு நேரமாக என்ன பாட்டு பாடுன எனக்குத் தெரியாது என்றுக் கூறிக் கொண்டிருந்த விஸ்வரூபன் வெண்ணைத் திருடி மாட்டிக் கொண்ட கண்ணனென விழித்தான்.
தன்னை முட்டாளாக்கிய விஸ்வரூபனைப் பார்த்து முறைத்துக் கொண்டே, எழுந்தாள் ராதிகா.
” ஹேய் ராதா… என்ன இப்படி டக்குன்னு கோபப்பட்டால், என்பாடு தான் திண்டாட்டம். என்ன சொல்ல வர்றேன்னு முதல்ல கேளு.” என்று மீண்டும் அவளைக் கைப்பிடித்து அமர வைத்தான்.
“எனக்கு உன்னோட மனது புரிந்து தான் இருந்தது ராதா… உன் ஸ்டடீஸை டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னு தான் இவ்வளவு நாள் நான் அமைதியா இருந்தேன்.” என்றவன், தன் முதல் முத்திரையை அவளது கையில் பதித்தான்.
உடல் முழுவதும் மின்சாரம் பாய வேகமாக கையை உருவிக் கொண்டாள் ராதிகா.
” என்ன ராதா…” விஸ்வரூபன் கண்ணை சிமிட்ட…
” ஹாங்… அனு வேற ஃபோன் பண்ணியிருந்தா, நீங்க அட்டெண்ட் பண்ணவே இல்லை. வாங்க போகலாம்.” என்று படபடப்புடன் கூற…
அவளது சிவந்த கன்னத்தை வருடியவாறே, ” சரி வா போகலாம்.” என்றவன் வாய்விட்டு நகைத்தான்.
இருவரின் மகிழ்ச்சியான முகத்தைப் பார்த்த அனுவும் மிகவும் மகிழ்ச்சியடைந்தாள்.
ஒருவழியாக இரவு ஃப்ளைட்டை பிடித்தனர். இந்தியா செல்லும் வரையான பயணம், ஸ்வீட் நத்திங்ஸாக இருவருக்கும் இருந்தது. மலேஷியாவில் காத்திருந்த பத்துமணி நேரமும், நிமிடங்களாக பறந்தது.
அடுத்த நாள் எட்டு மணிக்கு இந்தியாவிற்கு சென்று கால் பதித்தனர். ராதிகாவின் மனமோ சிறகடித்ததது.
கிட்டத்தட்ட ஐந்தரை வருடங்களுக்குப் பிறகு தாய் மண்ணை மிதிக்கிறாள்.
ஏர்போர்டிற்கு வரேன் என்று சொன்ன விக்ரமிடம், நானே வந்துடுறேன்ணா என்று சொல்லியிருந்தாள் ராதிகா.
ராதிகாவின் முகத்தில் வந்து போகும் வர்ணஜாலத்தை விஸ்வரூபனும், அனன்யாவும் ரசித்துக் கொண்டிருந்தனர்.
அவள் தன் குடும்பத்தைப் பார்க்கப் போகிற ஆர்வத்தில் இருக்க, அதை உணர்ந்த விஸ்வரூபன் அமைதியாக இருந்தான்.
அனுவோ, ” ராது… எங்க வீட்டுக்கு வாயேன். எங்கம்மா, அத்தை, பாட்டி எல்லோரையும் பார்த்துட்டு நாளைக்கு தஞ்சாவூர் போகலாம்ல.” என்று கெஞ்ச…
“அது நைட் பஸ் ஏறுன காலைல தஞ்சாவூர் போயிடுவேன். நல்லா ரெஸ்ட் எடுக்கலாம்… இங்கே நாளைக்கு இருந்தாலும் ஜெட்லாக்கா தான் இருக்கும். அதான் கிளம்புறேன் டி. எப்.எம்.ஜி எக்ஸாம் எழுத வருவேன்ல அப்ப வரேன் ப்ளீஸ்டா.” என்றாள் ராதிகா.
” ப்ச் போடி… எங்க பாட்டியை கரெக்ட் பண்ணிட்டா, உங்க ரூட் கிளியர் ஆகும்னு பார்த்தால், ஏதாவது சொல்லிட்டே இருக்க… எக்ஸாம் எழுதும் போதாவது எங்க வீட்டுக்கு வருவியா? இல்லை… அப்போதும் ஏதாவது சாக்குபோக்கு சொல்லுவியா.”
” அதெல்லாம் கரெக்டா வந்துடுவேன் அனு செல்லம்.” என்று அவளது தாடையைப் பிடித்து சமாதானம் செய்த ராதிகாவிற்கு அப்போது தெரியவில்லை. தான் சொன்ன வாக்கை காப்பாற்ற போவது இல்லை என்றும், அவ்வாறு போயிருந்தால் கூட இவர்களுடைய வாழ்க்கை மாறாமல் இருந்து இருக்கும் என்றும் அப்போது தெரியவில்லை. விதி அவளை செல்ல விடவில்லை.
இவர்கள் இந்தியா வந்தவுடன் எப்.எம்.ஜி.எக்ஸாம் எழுத வேண்டும். அது இந்திய மெடிக்கல் கவுன்சிலில் வைக்கும் தேர்வு. எந்த நாட்டில் மெடிக்கல் படித்து வந்தாலும், இங்கு வந்தவுடன் அந்த தேர்வு எழுதி விட்டால் இந்தியாவில் டாக்டராக ப்ராக்டிஸ் செய்வதோ, அல்லது மேற்படிப்பு படிப்பதோ செய்யலாம்.
வருடத்திற்கு இரண்டு முறை நடைபெறும். தேர்வுகள் எழுத தமிழ் நாட்டில் சென்னை, வேலூரில் சென்டர் இருக்கிறது. இவர்கள் ஏற்கனவே சென்னையில் வந்து எழுவதுதாக ப்ளான் செய்திருந்தனர்.
ஜூன் மாதம் தான் எக்ஸாம். அதுவரை இவர்களது காதல் ஃபோனிலேயே வளர்ந்தது. விஸ்வரூபன் அவனது அன்பால் ராதிகாவை திகைக்க வைத்துக் கொண்டிருந்தான். அவள் எதிர்பார்த்தது இதைத்தான். தன் அன்பாலே சுழற்றியடிக்கணும் என்று எதிர்பார்க்க… அதே போல் வாழ்க்கை அமைய போவதை நினைத்தவள், துள்ளலாக தஞ்சாவூரில் சுற்றினாள்.
அது மட்டும் இல்லாமல், சுந்தரியின் மனமும் மாறியிருந்தது. பிறகென்ன வால் இல்லாத ஒன்று மட்டும்தான் குறை. மத்தபடி எல்லா சேட்டையும் செய்துக் கொண்டு சுற்றினாள் ராதிகா.
அதோ, இதோ என்று இவர்கள் தேர்வு எழுதும் நாளும் வந்தது. அன்று தான் நீண்ட நாட்களுக்கு பிறகு விஸ்வரூபனை சந்தித்தாள்.
காலையில் வந்தவள், தேர்வு எழுதி விட்டு அனுவுடன் வெளியே வர… வழக்கம்போல் அனு அவர்கள் வீட்டிற்கு கூப்பிட்டாள்.
‘போகலாமா…’ என்று ராதிகா யோசிப்பதற்குள் விஸ்வரூபன் இடையிட்டான்.
” ஏய் நந்தி… நீ வீட்டுக்கு கிளம்பு. எனக்கே அவ கூட டைம் ஸ்பென்ட் பண்ண ஒரு சான்ஸ் கிடைக்காதானு காத்திட்டுருக்கேன். நீ என்னடான்னா வீட்டுக்கு கூப்பிட்டு இருக்க… இன்னைக்கு நைட் வரைக்கும் அவ என்னோட தான் இருப்பா நீ கிளம்பு.” என்றுக் கூற…
” மாமா… நான் என்ன நந்தியா இப்படி சொல்றீங்க.” என அனன்யா பாவமாக வினவ.
” சும்மா சொன்னேன் டா. நீ இப்போ ட்ரைவரோட கிளம்பு. ப்ளீஸ் அனு…” என்று விஸ்வரூபன் கெஞ்ச…
“சரி..” என தலையசைத்து சென்றவளின், மனசு சற்று காயம் தான் பட்டது.
‘ தனக்கும், ராதிகாவிற்கும் நடுவில் மாமா வருகிறாரோ…’ என்று நினைத்த அனன்யா, அவர்களுக்கு ஸ்பேஸ் கொடுத்து விலகிச் சென்றாள்.
இதுதான் ஆரம்பம். இதுவே அவளது வாழ்க்கையை வேறு திசைக்கு இழுத்துச் சென்று, சூறாவளியில் சிக்க வைத்தது.
இன்று…
தங்கள் மகளின் வாயில் இருந்து உதிர்த்த வார்த்தைகளை கேட்ட சுந்தரி அதிர்ந்து இருந்தாள். சண்முகம் தான் அவளை ஆதரவாக பிடித்துக் கொண்டிருந்தார்.
ராதிகாவோ, விஸ்வரூபனை நொடிக்கு ஒருமுறை பார்வையிட்டுக் கொண்டே, அயர்வாக அமர்ந்து இருந்த கிருஷ்ணனிடம், ” சாரி சார்… நீங்க எதையும் நினைச்சுக்காதீங்க. ” என்று அழு குரலில் மன்னிப்புக் கேட்டாள்.
அவளது அழுகைக் குரலை கேட்டதும், இன்னும் இறுகிப் போயிருந்தான் விஸ்வரூபன்.
அந்த சூழ்நிலையை தன் கையில் எடுத்துக்கொண்டார் சண்முகம். ” சார்… இது என்னுடைய நம்பர்… நீங்க வீட்டுக்கு போயிட்டு ஃப்ரீயா இருக்கும் போது கால் பண்ணுங்க… மேற்கொண்டு கல்யாணத்தை பத்தி பேசலாம். நாங்க இன்னைக்கு தஞ்சாவூர் கிளம்பிடுவோம்.” என்றார்.
” சரிங்க சம்பந்தி… நான் வீட்ல கலந்துப் பேசிட்டு உங்களுக்கு ஃபோன் பண்ணுறேன்.” என்றார் கிருஷ்ணன். இவ்வளவு நேரம் இருந்த கலக்கம் மறைந்து மீண்டும் உற்சாகமாக இருந்தார்.
சுந்தரி ஒன்றும் கூறாமல் வெளியே சென்று விட, ராதிகாவும் மீண்டும் ஒருமுறை விஸ்வரூபனை பார்த்துவிட்டு கிருஷ்ணனிடம் வந்தவள், ” வரேன் சார்…” என்று கிளம்பி விட்டாள்.
கிருஷ்ணன் தன் மகனிடம் ஒன்றும் கூறாமல் அமைதியாக இருந்தாலும், உள்ளுக்குள் பெருகிய மகிழ்ச்சி முகத்தில் மின்னி மறைந்தது.
” டாட்… இப்பவும் ஒன்னும் பிரச்சினை இல்லை. இந்த கல்யாணத்தை ட்ராப் பண்ணிடலாம்.” என்றான் விஸ்வரூபன்.
” அது அவ்வளவு ஈஸி கிடையாது ரூபன். உங்களுக்கு நிச்சயதார்த்தம் ஆனதா சோஷியல் மீடியாவுல அனோன்ஸ்மெண்ட் பண்ணிட்ட. இனி இதிலிருந்து நீ பின் வாங்க முடியாது. வீட்டுக்கு போய் பேசிக்கலாம். முதல்ல எந்த மண்டபம் ப்ரீயா இருக்குன்னு கேட்கணும். நல்லா கிராண்டா செய்யணும்.” என்று ஏகப்பட்ட கற்பனைகளைக் கூற…
” ப்ச்…” என்று தலையசைத்த விஸ்வரூபன், ” டேட் நல்லா புரிஞ்சுக்கோங்க. என்னோட கல்யாணம் ஏதாவது ஒரு கோவிலில் செய்யுங்க. அப்படியே ரிஜிஸ்டர் பண்ணிடலாம் என்று. அப்புறமா ப்ரெஸ்ஸுக்கு ஒரு அறிவிப்புக் கொடுத்துடுங்க.” என்ற விஸ்வரூபன் வேறு எதையும் பேச விடாமல் வீட்டுக்கு அழைத்துச் சென்றான்.
அவன் செவிக்குள்ளோ, ” விஷ்வா… நம்ம கல்யாணம் எப்படி நடக்கணும் தெரியுமா?” என்றுக் கூறிய ராதிகாவின் வார்த்தைகள் வந்து மோதியது. தலையை உதறி அதை அலட்சியம் செய்தவன் தனது எண்ணத்தில் உறுதியாக இருந்தான்.
வீட்டிற்கு வந்த கிருஷ்ணன் அதற்குப்பிறகு அமைதியாக இருக்கவில்லை.
எல்லோரையும் அழைத்து விஸ்வரூபன் திருமணத்திற்கு சம்மதம் சொன்னதைக் கூறியவர், விஸ்வரூபனின் விருப்பத்தையும் கூறினார்.
அவனது அம்மாவிற்கும், அத்தைக்கும் நல்லபடியாக திருமணம் செய்தாலே போதும் என்றிருக்க, அவனது விருப்பத்திற்கு சரியென தலையசைத்தனர்.
அடுத்த முகூர்த்தத்திலே, அவர்கள் வடபழனி முருகன் கோவிலில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
சண்முகத்திற்கு அழைத்து அடுத்த முகூர்த்தத்திலேயே இருவருக்கும் திருமணம் செய்வதைப் பற்றியும், கோயிலில் ஏற்பாடு செய்ததைப் பற்றியும் கூறினார்.
அவரும் சரியென தலையாட்டி விட்டு சுந்தரியை சமாதானம் படுத்துவதற்குள், போதும் போதுமென்று ஆகிவிட்டது.
” ஏங்க இப்போ நமக்கு இருக்கிறது ஒரே பொண்ணுங்க… அவளுக்கு என்னென்ன செய்யணும்னு ஆசை இருக்குத் தெரியுமா? அவளுக்கு என்ன தலையெழுத்தா, இரண்டாம் தரமாக போறதுக்கு?” என்று புலம்ப…
” ப்ச்… சுந்தரி… இரண்டாம் தாரம் என்று சொன்னதையே சொல்லாத… உன் பொண்ணு அவரைத் தான் விரும்புறா… ரெண்டு பேரும் நமக்குத் தெரியாமலே மோதிரம் மாத்திக்கிட்டாங்க… நாமளே கல்யாணம் பண்ணி வைக்கிறது தான் நமக்கு கவுரவம். புரிஞ்சுக்கோ…” என…
விக்ரமும், ஸ்வேதாவும் சேர்ந்துக் கொண்டு, ” அம்மா… நீங்கள் எங்களுக்கு எப்படி ஆதரவாக இருந்தீங்க? இப்போ ராதிகாவுக்கு என்ற உடனே காதலை எதிர்க்கலாமா?” என்று வினவ.
சுந்தரியோ, ” நான் காதலுக்கு ஒன்றும் எதிரி இல்லையே… என் கிட்ட முன்பே சொல்லி இருக்கலாமே…” என்று புதுசாக ஒரு காரணத்தை கண்டுபிடித்தார்.
அவர்களுடன் கல்லூரிக்கும், ஹாஸ்பிடலுக்கும் லீவு போட்டுவிட்டு, ஊருக்கு வந்திருந்த ராதிகா, சுந்தரி பேசுவதைக் கேட்டுக் கொண்டு, ஒன்றும் கூறாமல் அமைதியாக இருந்தாள்.
அவளுக்கு வேண்டியது விஸ்வரூபனோட அவளது திருமணம். அவளுடைய அனுவுடைய குழந்தை, தாய் இல்லாமல் தவிக்கிறது. அதைத் தான் அவளால் தாங்க முடியவில்லை. அவள் தோழியின் குழந்தை, அவளது குழந்தையும் அல்லவா… எவ்வளவு சீக்கிரம் அந்த வீட்டிற்கு செல்கிறோமோ, அவ்வளவுக்கு சந்தோஷம் என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.
அவளுடைய அமைதியைப் பார்த்தே அவளது எண்ணத்தைப் புரிந்துக் கொண்ட சுந்தரியும் ஒரு வழியாக சமாதானமாகி அவர்கள் போக்கிற்கு தலையாட்டினாள்.
பத்தே நாட்களில் திருமணம், அதுவரை ராதிகாவை தஞ்சாவூரிலே இருக்க சொல்லி விட்டார் சுந்தரி.
” புடவை, நகை வாங்க வேண்டும்.” என்று ரஞ்சிதம் சுந்தரிக்கு அழைத்துச் சொல்ல…
” நாள் இல்லைங்க, அங்கே வந்துட்டு போறதுக்கு… நீங்களே பார்த்து எடுத்திருங்க.”
” ஓ… சரிங்க சம்பந்தி… அப்போ புடவை நகை வாங்கிட்டு, ஒரு நாள் நாங்க அங்க வரோம். இன்னும் பொண்ணை பார்க்கலையே நாங்க.” என்று வருத்தத்தை மறைத்துக் கொண்டு, அழகாக சமாளித்துக் கொண்டார்.
அவர்கள் இவ்வளவு தூரம் இறங்கி வந்த பிறகு சுந்தரியாலும் அதற்கு பிறகு கோபத்தை காண்பிக்க முடியவில்லை. தயங்கிக்கொண்டே, “சரிங்க சம்பந்தி… என்னைக்கு வர்றீங்க என்று போன் பண்ணுங்க… ” என்றாள்.
கௌரிக்கு ஹாஸ்பிடலில் ஒரு முக்கியமான ஆஃப்ரேஷன் இருக்க, அவளால் வர முடியவில்லை.
உடல்நிலை சரியில்லாத கிருஷ்ணனை அலைய விட வேண்டாம் என்று ஓய்வெடுக்க சொல்லிவிட்டு, வரமாட்டேன் என்று சொன்ன விஸ்வரூபனை வற்புறுத்தி அழைத்துக்கொண்டு புடவை வாங்கச் சென்றாள் ரஞ்சிதம்.
முகூர்த்த புடவையை தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்த ரஞ்சிதம், விஸ்வரூபனிடம் அபிப்பிராயம் கேட்க, அவனோ ஃபோனிலே கவனம் செலுத்திக் கொண்டிருந்தான்.
ஒன்றிரண்டு முறை கூப்பிட்டு பார்த்த ரஞ்சிதம், பிறகு அவளுக்கு பிடித்த மாதிரி ஒரு புடவையை தேர்ந்தெடுத்தாள்.
” சரி வா பா… அடுத்த செக்ஷனுக்கு போகலாம்.” என்றுக் கூற…
” முகூர்த்த புடவை எடுத்தாச்சா?” என்று கேட்க…
அவனது கேள்வியில் ஆச்சரியமான ரஞ்சிதம், எடுத்து வைத்த புடவையைக் காட்டினாள்.
இளம் சிவப்பு நிறத்தில் இருந்த புடவையை பார்வையிட்டவன், ” இது வேண்டாம் மா…” என்றவன், பிறகு என்ன நினைத்தானோ, அவனே தேர்ந்தெடுத்தான் அவளுக்கு மிகவும் பிடித்த பேபி பிங்க் கலர் புடவை எடுத்தான்.
” சூப்பரா இருக்கு பா. ” என்ற ரஞ்சிதம், அவனை வைத்துக் கொண்டே ராதிகாவிற்கு இன்னும் சில சாப்ட் சில்க் சாரிகளையும் வாங்கிக் குவித்தார். பிறகு நகைகளையும் வாங்கிக்கொண்டு, அடுத்த நாளே நல்ல நாளாக இருக்க, தஞ்சாவூர் சென்று வந்தனர்.
இதோ திருமண நாள்… வடபழனி முருகன் கோவிலில், எந்த வித ஆர்ப்பாட்டம் இல்லாமல், விஸ்வரூபன் ராதிகாவின் திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்தது
கோயிலில் தான் திருமணம் என்ற போதும் ராதிகாவுக்கு வருத்தம் ஒன்றுமில்லை.
ஆனால் அங்கு கோவிலில் அவள் எதிர்பார்த்த எந்த சடங்கு, சம்பிரதாயம் எதுவும் இல்லாமல் இருவீட்டாரின் ஆட்களுக்கு முன்பு அந்த தெய்வ சன்னிதானத்தில் முன்பு மாலை மட்டும் மாற்றி தாலி கட்டினான் விஸ்வரூபன்.
கண்கள் கலங்க கண்ணீர் துளி கீழே விழக் காத்திருக்க, அழக் கூடாது என்ற வைராக்கியத்தில், அதை உள்ளிழுத்துக் கொண்டாள் ராதிகா.