உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -17

5
(3)

அத்தியாயம் – 17

அன்று…

” ப்ளீஸ் அனு… நீ வீட்டுக்கு கிளம்பு.” என்று அவளை வீட்டுக்கு அனுப்பிய விஸ்வரூபன், ராதிகாவை முதலில் ஹோட்டலுக்கு தான் அழைத்துச் சென்றான்.

இருவரும் உணவருந்தி விட்டு ஷாப்பிங் சென்றனர்.

அவளுக்கு என்ன கலர் பிடிக்கும் என்று கேட்டு சுடிதார், சேரி என அவளுக்கு பிடித்ததை எல்லாம் வாங்கிக் குவித்தான்.

” விஷ்வா… போதும்…” என்று தடுத்தாள் ராதிகா.

” ஹேய் ராதா… இந்த ரெட் கலர் சேரி ரொம்ப அழகா இருக்கு.” என்றான் விஸ்வரூபன்‌.

” எனக்கு இந்த ரெட், மெரூன் கலரெல்லாம் பிடிக்காது. கல்யாணத்துக்கு கூட ரெட் கலர் வாங்கக் கூடாது என்று எங்கம்மாக் கிட்ட ஸ்ட்ரிக்டா சொல்லிட்டேன்.” என்று முகத்தை சுழித்தப்படிக் கூறினாள்‌.

” ஓஹோ… அப்போ நம்ம கல்யாணத்துக்கு எந்த கலர்ல வாங்கட்டும்.” என்று வினவ.

” எனக்கு பேபி பிங்க் கலர்ல தான் வேண்டும்.” என்றாள் ராதிகா.

” ஓ… அப்ப சரி. ” என்றவன், பட்டுப் புடவை செக்ஷனுக்கு திரும்பினான்‌‌.

” ஐயோ! விஷ்வா… இப்போ வேண்டாம். கல்யாணத்தப்ப வாங்கி கொடுங்க…” என்று அவனைத் தடுக்க…

 “ப்ச்… என்ன ராதாமா… ” என்று வருத்தப்பட்டாலும், அவளது உணர்வுக்கு மதிப்பளித்தான்.

அங்கிருந்து கிளம்பியவர்கள் அடுத்துச் சென்றதோ, மெரீனா பீச்சிற்கு தான்.

ஒரு முறை, அனன்யா சொல்லியிருந்தாள், ‘ராதிகா இதுவரை பீச்சிற்கு சென்றதே இல்லை. இங்கே பிலிப்பைன்ஸ் வந்து தான், சென்றிருக்கிறோம்.’ என்று, அதை நினைவில் வைத்திருந்தவன், நேராக அங்கு அழைத்துச் சென்றிருந்தான்.

இவ்வளவு நேரம், விஸ்வரூபன் தன் மேல் கோபத்தில் இருக்கிறானோ என்று தனக்குள் தவித்துக் கொண்டிருந்தவள், ஓயாமல் கரைத் தொட்டு செல்லும் அலையைப் பார்த்ததும் குழந்தையென குதூகலித்தாள்.

அவளது ஆர்ப்பாட்டத்தை கைக்கட்டிக் கொண்டு ரசித்தான்.

ஒரு பெரிய அலை வந்து அவளை இழுத்து செல்ல முயல, வேகமாக அவளை இழுத்து அணைத்தான் விஸ்வரூபன். இருவரும் சமாளிக்க முடியாமல் தடுமாறி தண்ணீரில் விழுந்து எழுந்தனர்.

பயத்தில் ராதிகா நடுங்க… ” ஹேய் ராதா மா… பயப்படாதே.” என்றவன் இன்னும் அவனது அணைப்பில் அழுத்தத்தைக் கொடுக்க…

அப்போது தான், தான் இருக்கும் நிலையை உணர்ந்த ராதிகா வேகமாக விலகினாள்.

” ஹோய்… ராதா நமக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது.” என்று அவள் கை விரல்களில் உள்ள மோதிரத்தை வருடிக்கொண்டே புன்னகையுடன் விஸ்வரூபன் கூற…

 அவள் முகமும் புன்னகைத்தது.

” அதுமட்டுமல்லாமல் இப்ப நீயும், நானும் வேற கிடையாது. இப்ப நீ என்னோட பாதி பொண்டாட்டி தெரியுமா?” என்று புருவத்தை உயர்த்தி வினவ…

அவள் முகம் சிவக்க, “ஆமாம்… இப்ப அதுக்கென்ன?” என்று மென்குரலில் வினவ.

” எனக்கு எல்லா ரைட்ஸும் இருக்கு.” என்றான் விஸ்வரூபன்.

” அதெல்லாம் கல்யாணம் முடியவும் தான்.” என்று முணுமுணுத்தாள் ராதிகா.

அவளை இழுத்துக் கொண்டு மணலில் அமர்ந்தவன், அவள் கண்களைப் பார்த்துக் கொண்டே, ” ராதா மா… அப்போ இங்கேயே இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாமா? நான் எது வாங்கிக் கொடுத்தாலும் வேண்டாம்னு சொல்லுற, எது செய்தாலும் தடுக்குற.” என்று கண் சிமிட்ட…

” விளையாடதீங்க விஷ்வா… நான் மேற்படிப்பு படிக்கணும். அப்புறம் தான் கல்யாணம்.” என்று முகச் சிவப்புடன் கூற.

” அதுக்கு தான் சொல்லுறேன். நாம சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கிட்டா. நம்ம காலேஜ்லேயே மேற்படிப்பு படிக்கலாம்ல. இப்பவே நீ ஓகேன்னு ஒரு வார்த்தை சொல்லு. இந்த நிலா சாட்சியா உன் கழுத்துல தாலி கட்டுறேன்.” என்று விஸ்வரூபன் கூற…

இப்பொழுது ராதிகாவிற்கு சினத்தால் முகம் சிவந்தது.

” விஷ்வா… எதுல விளையாடுறதுனு விவஸ்தையே இல்லையா? கல்யாணம்னா விளையாட்டா போயிடுச்சா? நம்ம ரெண்டு வீட்டு ஆளுங்களோட சம்மதத்தோடும், மனப்பூர்வமான ஒப்புதலோடும் நம்ம கல்யாணம் நடக்கணும்‌.எனக்கு நம்ம கல்யாணத்தப் பத்தி ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருக்குத் தெரியுமா?” என்று படபடத்தாள் ராதிகா.

” ம்… சரி இன்னும் உனக்கு பஸ்ஸுக்கு டைம் இருக்கு. அதுவரைக்கும் சொல்லேன் உன்னுடைய எதிர்ப்பார்ப்புகளை.” என்றவன் அந்த மணலில் சரிந்தான்.

“நம்ம முன்னோர்கள் கல்யாணத்துல வச்சிருக்குற ஒவ்வொரு சடங்குக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கு. என் கல்யாணம் பிரமாண்டமா நடக்கணும்னு ஆசை கிடையாது. ஆனால் எந்த சடங்கையும் மிஸ் பண்ணாம செய்யணும். ” என்று ராதிகா கூற…

” சரிங்க பாட்டி… அந்த சடங்குக்கான அர்த்தத்தையும் சொல்லுங்களேன்.” என்று அவளைப் பார்த்து கிண்டலாகக் கூற…

அவளோ ஒன்றும் கூறாமல், அவனைப் பார்த்து முறைக்க…

” ஹேய் ராதா… சீரியஸ்ஸா தான் கேட்குறேன் சொல்லு.” என்று விஸ்வரூபன் வினவ.

” சரி… நீங்க ரொம்ப கெஞ்சிக் கேட்குறதால சொல்றேன். பந்தகால் நடுவதுல இருந்து எல்லாமே செய்யணும். இது பஞ்ச பூதங்களோட ஆசியை பெறுவதாகும். பந்தக்கால் நட்டுட்டா வெளியே எங்கேயும் போகக்கூடாது. ஃப்ரெண்ட்ஸ், ரிலேட்டிவ்ஸ் எல்லோரும் வீட்டுக்கு வருவாங்க. நம்ம கூட இருந்து கேலி செய்வாங்க. செம ஜாலியா பொழுது போகும்.

அப்புறம் கல்யாணத்தன்னைக்கு, காப்பு கட்டுறதுல தொடங்கி, தாரை வார்க்குற சடங்கு வரை எல்லாமே இருக்கணும்.

தாரை வாக்குறதுனா எங்கப்பா, அம்மா “என் மகளை தெய்வங்களின் சாட்சியாக உங்களுக்கு மனைவியாக கொடுக்கின்றேன் “ என உங்களுக்குக் கொடுக்குறது.

இது ஒரு உறுதிமொழி மாதிரி தான்…

  உங்கள் மகளை இனி எங்களது மறு – மகள் ( மருமகள்) ஆக ஏற்றுக் கொள்கின்றோம் என்று உங்க பெற்றார் ஏற்றுக் கொள்வது தான்…

அப்புறம் தாலி கட்டுவது,

ஒன்பது இழையாள் பிணையப்பட்ட மஞ்சள் கயிற்றில் பொற்தாலி இருக்க, வந்து இருக்கும் உறவினர்கள் அனைவரிடமும், ஆசி வாங்கி, வேதங்களில் சொல்லப்பட்டப்படி அக்னி சாட்சியாக திருமணம் நடைபெறணும். மங்கள வாத்தியம் முழங்க, அர்ச்சகர் மந்திரம் சொல்ல, உங்க கையால மூன்று முடிச்சு வாங்கிக்கணும். அப்புறம் அம்மி மிதிச்சு அருந்ததி பார்த்துற சடங்கு.” என்று ராதிகா சொல்ல வர…

” ஹே… வெயிட்… கல்யாணத்தோட முடியலையா உன்னோட ஆசை. கால்ல விழுறவரைக்கும் உண்டா.” என்று இடையிட்டான் விஸ்வரூபன்.

” அம்மி மிதித்திக்கிறதுனா உடனே கால்ல விழறதுன்னு சொல்லிடுவீங்களே… 

அம்மி மிக உறுதியுடனும்,ஒரே இடத்தில் அசையாமல் இருக்குதோ, அதே மாதிரி, திருமணமான பெண்கள் புகுந்த வீட்டில் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும், கணவர், மாமானார், மாமியார், நாத்தானார் மற்றும் அனைவராலும் சங்கடங்கள் வந்தாலும்,மன உறுதியுடன் எதையும் எதிர்கொள்ளும் பக்குவத்தை கொண்டிருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே அம்மி மிதிப்பது ஆகும். ஜஸ்ட் அதுக்காகத்தான் மெட்டி போடுறீங்க.

அருந்ததி பார்ப்பது என்னத் தெரியுமா? ஏழு ரிஷிகளில் ஒருவரான வசிஷ்டரோட மனைவி.

வசிஷ்டர் நட்சத்திரத்தை கூர்ந்து கவனித்தால் அருகிலேயே அருந்ததி நட்சத்திரத்தையும் பார்க்கலாம். 

ஆனால் நம் கண்களுக்கு ஒரே நட்சத்திரமாக தெரியும்.அதேபோல் மணமக்கள் இருவராக இருந்தாலும், எண்ணங்களும், சிந்தனைகளும் ஒன்றாக இருக்க வேண்டும். அதற்காகத் தான் அருந்ததியை பார்க்க சொல்கிறார்கள். அவ்வளவு தான் விஷ்வா என்னோட ஆசைகள்…” என்று கண்களில் கனவு மின்னக் கூறினாள்.

” அவ்வளவுதானா உன் ஆசைகள்… இல்ல அதுக்கப்புறமும்… ” என்று அவன் இழுக்க…

” என்னது… ” என்று அவள் அதிர்ந்தாள்.

” ரொம்ப கற்பனை பண்ணாதே ராதா. எங்க ஹனிமூன் போகலாம்னு கேட்க வந்தேன்.” என்று சிரித்துக் கொண்டேக் கூற…

” அப்படியெல்லாம் ஒன்றும் யோசிக்கலை.” என்று அவனை முறைத்துக் கொண்டே கூறினாள் ராதிகா.

” நீ இல்லை என்று சொல்றதிலிருந்தே தெரியுது, உனக்குனு சில எதிர்பார்ப்புகள் இருக்கு என்று… பரவாயில்லை சொல்லு ராதா.”

” லேட்டாயிடுச்சு வாங்க போகலாம்.” என்று ராதிகா கிளம்புவதிலே குறியாயிருந்தாள்.

” அதெல்லாம் டைம் இருக்கு. நம்ம சாப்பிட்டு கிளம்பிப் போனா சரியா இருக்கும். இப்போ நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் இந்த இடத்தை விட்டு கிளம்ப மாட்டேன்‌.” என்று அவளைப் பார்த்துக் கொண்டே கூறினான்.

 ” ஹனிமூனுக்கு போகணும்னு கற்பனை பண்ணலை. பட் நான் ரொம்ப நாளா பார்க்கணும்னு நினைச்ச இடம் கேரளா.” 

” ரைட்டு… சரி அப்போ நாம அங்க போக வேண்டாம்.” என்று அடுத்த நொடியே விஸ்வரூபன் கூற…

ராதிகா அவனைப் பார்த்து முறைக்க…

” ஹே ராதா… நாம போறது ஹனிமூனுக்கு, நீ வேற பிடிச்ச இடம், அங்கப் போகணும், இங்கே போகணும் என்று சொன்னீனா என்னப் பண்றது. என்பாடு தான் திண்டாட்டம்.” என்று கண்ணடித்துக் கூற… ராதிகாவின் முகம் செவ்வானமாக சிவந்தது.

இன்று… 

கண்களிலிருந்து கண்ணீர் வராமல் இறுகிப் போய் நின்று இருந்த ராதிகாவை பார்த்தவர்கள், கல்யாண டென்ஷனில் இருக்கிறாளோ என்று நினைத்திருப்பார்கள்.

ஆனால் உண்மை அதுவல்லவே. அவளுக்கு அருகில் நின்றிருந்த அவனுக்கா தெரியாது, அவளது உணர்வுகள் அத்தனையும் அத்துபடியாயிற்றே.

அவளது மனம் படும் பாட்டைப் பார்த்து அவனும் இறுகிப் போய் இருந்தான். 

“கடவுளே துணை…” என்று அந்த முருகப்பெருமானை பார்த்துக் கொண்டிருந்தவன், மனதிற்குள் தீவிரமாக வேண்டிக் கொண்டு தான், அவள் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டிருந்தான்.

கோவிலில் நடத்த வேண்டும் என்பதற்கும் ஒரு காரணம் இருந்தது அது அவனுக்கு மட்டும்தான் தெரியும்.

கோவிலில் சாமி தரிசனம் முடித்தவர்கள், வெளியே வந்து சரவணபவனில் காலை உணவை முடித்து விட்டு, வீட்டிற்கு கிளம்பினர்… 

சுந்தரியும், சண்முகமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே முழிக்க…

கிருஷ்ணன் தான், ” என்னாச்சு சம்பந்தி. ஏன் நின்னுட்டே இருக்கீங்க. வாங்க வீட்டுக்குப் போகலாம்.” என…

” அது… தஞ்சாவூருக்கு மறுவீட்டுக்கு பொண்ணையும், மாப்பிள்ளையும் இன்னைக்கே அழைச்சிட்டு போறது தான் எங்கள்ல வழக்கம்.” என்று தயங்கித் தயங்கி சண்முகம் கூற… 

கிருஷ்ணன், விஸ்வரூபனைப் பார்க்க, ” இன்னைக்கு எனக்கு ஹாஸ்பிடல்ல ஒரு முக்கியமான ஆஃப்ரேஷன் இருக்கு. ஃப்ரை டே வர்றோம்.” என்றான்.

” அப்போ நாங்க கிளம்புறோம் சம்பந்தி. என் பொண்ணு ரொம்ப அமைதி. அவளுக்கு வேண்டும் என்பதைக் கூட வாய்விட்டு கேட்க மாட்டா… பார்த்துக்கோங்க…”

” ஓஹோ… அப்படியா… நாங்க பார்த்துக்குறோம். நீங்க கவலையே படாதீங்க.” என்ற கிருஷ்ணன், ராதிகாவைப் பார்த்து புருவத்தை உயர்த்தி வினவ.

‘ ஐயோ! சாரோட பார்வையே சரியில்லையே.’ என்று உள்ளுக்குள் பயந்தவள், வெளியேவோ முயன்று சிரித்தாள்.

அவளது பாவனையில், கிருஷ்ணன் வாய்விட்டு நகைக்க, விஸ்வரூபனோ, வாய்க்குள் சிரிப்பை அடக்கிக் கொண்டான். ராதிகா செய்யும் சேட்டையைப் பற்றி காலேஜில் கிருஷ்ணன் தெரிந்துக் கொண்டார். விஸ்வரூபனுக்கோ ஏற்கனவே தெரியுமே! அதான் சண்முகம் கூறவும் இருவருக்கும் சிரிப்பு வந்து விட்டது.

” ஏங்க … சம்பந்தி… வீட்டுக்கு வராம போறேன்னு சொல்றாங்க, நீங்க சிரிச்சுகிட்டே இருக்கீங்க.” என்று கிருஷ்ணனை கடிந்த ரஞ்சிதம்,

” வீட்டுக்கு வராம போய்டுவீங்களா? இனிமே அது உங்க பொண்ணோட வீடு. வீட்ல வந்து பொண்ணு மாப்பிள்ளையை விட்டுட்டு,விருந்து சாப்பிட்டு தான் கிளம்பணும். ஆற, அமர இருந்துட்டு நாளைக்குக் கூட போகலாம்.” என்று சுந்தரியிடம் கூற…

” இல்ல…” என்று தயங்கிய படியே விக்ரமையும், ஸ்வேதாவையும் பார்த்தார்.

” அவங்களையும் தான் வீட்டுக்கு கூப்பிடுறேன். என்ற ரஞ்சிதம், எல்லோரையும் வற்புறுத்தி வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

இப்படி வற்புறுத்தி அழைத்துச் செல்பவர், வீட்டிற்குச் சென்ற கொஞ்ச நேரத்திலேயே, இப்போது இருக்கும் மனநிலைக்கு மாறாக கோபத்துடன் இருக்கப் போவதையும், கிளம்புகிறோம் என்று கூறியவர்களையும் ஒன்றும் கூறாமல் தலையசைத்து அனுப்பி வைக்கப் போகிறார் என்பதையும் அப்போது அவர் அறியவில்லை.

ஒரு காரில் பொண்ணு, மாப்பிளையுடன் பொண்ணு வீட்டு ஆட்களை வர சொல்லி விட்டு, மற்றொரு காரில் அவர்கள் மூவரும் சென்றனர்.

ரஞ்சிதமும், கௌரியும் பொண்ணு, மாப்பிள்ளையை ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து, பூஜையறையில் விளக்கேற்ற சொல்லி விட்டு, பால் பழம் கொடுத்தனர்.

கிருஷ்ணனும், சண்முகமும் பேசிக் கொண்டிருக்க…  விக்ரம், ஸ்வேதாவுடன் மெல்லிய குரலில் ராதிகா பேசிக் கொண்டிருந்தாள்.

விஸ்வரூபன் மாடிக்கு சென்றிருந்தான்.

“வாங்க சம்பந்தி வீட்டைச் சுற்றி பார்க்கலாம்.” என்று அழைத்த ரஞ்சிதம் சுந்தரிக்கு வீட்டை சுற்றிக் காண்பித்தாள். பூஜையறையில் மாலைப் போட்டிருந்த அனன்யாவின் போட்டாவைப் பார்த்த சுந்தரி, ” இது…” என்று தடுமாறியப்படியே வினவ.

” இவ தான் என் பையனோட முதல் மனைவி. பிரசவத்துல இறந்துட்டா…” என்று நா தழுதழுக்கக் கூறினார் ரஞ்சிதம்.

” அப்போ அனு மா… ” என்ற சுந்தரி மீதியைக் கூறாமல் கண் கலங்கிக் தவிர்த்தார்.

அவரது தடுமாற்றத்தை கவனியாமல் ஹாலுக்கு அழைத்து வந்தார்.

சுந்தரியின் கண்களோ, குழந்தையை ஆர்வமாக பார்வையிட்டது.

குழந்தை அவந்திகாவோ, தட்டுத்தடுமாறி ராதிகாவிடம் வர…

ஆசையாக தூக்கினாள் ராதிகா.

அப்போது தான் பட்டு வேஷ்டியை மாற்றி விட்டு கேஷுவல் ட்ரெஸ்ஸில் கீழே வந்த விஸ்வரூபன், வேகமாக குழந்தையை அவளிடமிருந்து வாங்கிக் கொண்டான்.

அதிர்ந்து அவனைப் பார்த்தாள் ராதிகா.

” யாரும் என் பொண்ணுக்கு ஆயா வேலைப் பார்க்க வேண்டாம். அதற்காக ஏற்கனவே இரண்டு வேலையாட்கள் இருக்கிறார்கள்.” என்று கடுமையான குரலில் கூறியவன், சுந்தரியிடம் திரும்பி,” அனு… பெத்த அம்மாவாட்டம் தானே உங்களையும் நினைச்சா. அவக் குழந்தையை போய் தொந்தரவா நினைக்கிறீங்களே.” என்றுக் கூறியவன் குழந்தையை அழைத்துக் கொண்டு அவனது அறைக்குச் சென்று விட்டான்.

அவன் கூறியதை கேட்டு கௌரியும், ரஞ்சிதமமும் அதிர்ந்து நிற்க… சுந்தரியோ, தேவையில்லாமல் அன்று வார்த்தை விட்டதை எண்ணி குற்ற உணர்ச்சியில் தவித்தாள். 

அனு இந்த உலகத்திலே இல்லை என்ற செய்தியே அவளது செவிக்கு இப்போது தான் எட்டியது. 

அவளுக்கு என்ன நடந்ததோ அது எதுவும் சுந்தரிக்கு தெரியாது. ஒரு வருடமா அவளிடம் இருந்து எந்த தகவலும் வராமல், சுந்தரி தவித்து தான் போனாள். ராதிகாவிடம் கேட்க, அவளோ எனக்கும், அவளுக்கும் பிரச்சனை மா. எனக்கு ஃபோன் போட மாட்டா. உங்க கிட்ட பேசுன இந்த ஒரு வருஷம் கூட என் கிட்ட பேசலை என்று கூறியிருந்தாள்.

இப்போது அவள் இறந்த சேதி தெரிய வரவும், அதிர்ச்சியில் இருந்த சுந்தரி, ” சம்பந்தி…” என ஏதோ கூற வர…

கைநீட்டி தடுத்த ரஞ்சிதம், “எதுவும் நீங்க சொல்ல வேண்டாம்.”என்று விட்டு, அவளது அறைக்கு சென்று விட்டார்.

என்ன தான் இருந்தாலும், தன் மகனை பேசியதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

விக்கித்து போய் நின்றனர். ராதிகாவின் குடும்பத்தினர்.

கிருஷ்ணன் தான் சமாதானம் செய்தார். நீங்க எதுவும் சங்கடப்படாதீங்க. அவளோட கோபமெல்லாம் கொஞ்சம் நேரம் தான். நீங்க வாங்க சாப்பிட.” என்று அழைத்தவர்,கௌரியிடம் அவர்களுக்கு பரிமாறு.” எனக் கூற… 

அவரும் எல்லோரையும் உணவருந்த அழைத்தார்.

சுந்தரி, ” அனு மா… எனக்கு எதுவும் தெரியாது. என் அனுவோட குழந்தையை என்னைக்குமே தொந்தரவா நினைக்கவே மாட்டேன். ராதிகாவுக்கு எத்தனை குழந்தை பிறந்தாலும், என் மொத பேத்தி அம்முக்குட்டி தான்.” என்று கௌரியிடம் கூறியவர், பேருக்கு உணவருந்தி விட்டு கிளம்பி விட்டார். 

ரஞ்சிதமும் இருந்து நாளைக்கு செல்லலாம் என்று சொல்லாமல் தலையசைத்து அனுப்பி வைத்தார்.

அவர்கள் ஊருக்கு கிளம்புவதாக கிருஷ்ணன் கூறியும், கீழே இறங்கி வராமல் இருந்தான் விஸ்வரூபன்.

எல்லோரும் அவன் கோபத்தில் இருப்பதாக நினைத்திருக்க… அவனோ, தன்னோடு வாழ வந்த பாவத்திற்கு ராதிகா படும் துன்பத்தை எண்ணித் தனக்குள்ளே தன் தவித்துக் கொண்டிருந்தான்.

அவளது முகத்தை பார்க்கும் திராணியற்று மாடியிலே நடைபயின்றுக் கொண்டிருக்க…

அங்கு பெற்றோர், கூடப் பிறக்காத அண்ணன் குடும்பம் எல்லோரும் கிளம்ப, அவர்களை வழியனுப்ப வாசல் வரை சென்ற ராதிகாவிற்கு, ஆறுதல் கூறக் கூட யாருமில்லாமல் தனிமையில் நின்றுக் கொண்டிருந்தாள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!