” சொல்வது எளிது. ஆனால் செயல்படுத்துவது எவ்வளவு கஷ்டம்.” என்பது அனன்யாவுக்கு நன்கு புரிந்தது.
ராதிகாவையும், ரூபனையும் தொந்தரவு செய்யாமல் ஒதுங்கிப் போக நினைக்க. அதை செயல்படுத்துவது அவ்வளவு கடினமாக இருந்தது.
ராதிகாவும், விஸ்வரூபனும் ஃபோன் மூலமாக காதலை வளர்த்தனர்.
ரிசல்ட் வரும் வரை காத்திருந்த அனன்யா, ரிசல்ட் வந்த பிறகு அவர்களது ஹாஸ்பிடலிலே கொஞ்ச நாள் ஃப்ராக்டிஸ் செய்தாள்.
பிறகு மேற்படிப்புக்கு எக்ஸாம் எழுதி காலேஜில் சேர்ந்து விட்டாள். அது வரைக்கும் தனது முகத்தில் சிறு வருத்தத்தைத் கூட வரவிடாமல், தன்னை உற்சாகமாகக் காட்டிக் கொண்டாள்.
புதுசு புதுசாக எதையாவது கற்றுக் கொள்கிறேன் என்று வீட்டை ரெண்டு பண்ணிக் கொண்டிருந்தாள்.
ருக்குமணி அனன்யாவை மேற்படிப்பு படிக்க தங்களது காலேஜ்ல சேரட்டும் என்றுக் கூற…
விஸ்வரூபனோ, ” பாட்டி… அதெல்லாம் சரி வராது. இங்கே இருந்தா அவளுக்கு அனுபவம் கிடைக்காது.” என்றுக் கூறியவன் வேறொரு சிறந்த காலேஜில் சேர்த்துவிட்டான்.
இதற்கும் ருக்குமணி முணுமுணுக்க… அவன் அதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் இருந்தான்.
விஸ்வரூபன், ராதிகாவிடம் ஃபோனில் பேசும் போது, ” அனன்யாவை காலேஜ்ல சேர்த்துட்டோம் ராதா.” என.
” ஓ… அவ சொல்லவே இல்லையே.”
” நீயாச்சு… உன் ஃப்ரெண்டாச்சு உங்களுக்கு இடையில் நான் வரலை. என்னை ஆளை விடு. எதுவா இருந்தாலும் நீ அவக் கிட்டயே கேளு.” என்ற விஸ்வரூபன் வைத்துவிட.
உடனே அனன்யாவிற்கு அழைத்து விட்டாள் ராதிகா.
” அனு… எப்படி இருக்க டி. ஆளையே காணும். ஒரு ஃபோன் கால் கூட இல்லை.” என.
“ம்… நான் நல்லா இருக்கேன் மேடம். நீங்க தான் பிசியா இருக்கீங்க.” என்று அனு கலாய்க்க.
” அது…” என்றவள் நாக்கை கடித்துக் கொண்டு அமைதியாக இருந்தாள்.
” மேடம் வேலையிலே பிஸியா இருக்கீங்க. கிடைக்கும் கொஞ்ச நேரத்திலும் கனவில் மிதக்க தான் டைம் இருக்கிறது. நான் டெய்லி அம்மா கிட்ட பேசிட்டு தான் இருக்கேன். அதுக்கூட உனக்குத் தெரியலை. காதலர்கள் வாழ்க்கைல இதெல்லாம் சகஜம் தான் என்று பொறுமையா இருந்தா என்னையே கிண்டல் பண்ணுறீயா? ” என்று அனுக் கூற.
” சாரி டி அனு. அதை விடு. காலேஜ் நீ என்னோட தான் சேருவே என்று நினைச்சேன். ஆனால் நீ பீ.ஜி ஜாயின் பண்ணப் போறீயா?” என…
“நீ தான் இரண்டு வருஷமாவது வொர்க் பண்ணிட்டு தான், பீ.ஜி பண்ணணும் என்று சொன்ன… அதுவுமில்லாமல், நீ எப்படியும் கார்டியாலஜி தான் படிக்கப் போற? நான் டி ஜி ஓ படிக்கப் போறேன். அதான் நான் இப்பவே சேர்ந்துட்டேன்.
எப்படியும் நீ எங்க வீட்டுக்கு தான வரப் போறே. அப்ப உன்னை விடாமல், உன் கூடவே சுத்துறேன். போதுமா? ” என்ற அனு சிரிக்க சிரிக்க கேலி செய்து போனை வைத்தாள்.
ராதிகாவின் மனதில் ஏதோ ஒரு நெருடல். ஆனால் அது என்ன என்று யோசிக்கவில்லை. அப்படியே விட்டுவிட்டாள்.
காலங்கள் வேகமாக ஓட ராதிகாவிற்கு ஹாஸ்பிடலுக்கு செல்வதில் பொழுது போனது. மிச்ச சொச்ச நேரத்தை விஸ்வரூபன் விழுங்கினான்.
அனுவும் காலேஜுக்கு செல்ல ஆரம்பித்திருந்தாள்.
அங்கு சென்று தான் ஆகாஷின் அறிமுகம் கிடைத்தது. ஆனால் உடனே கிடைக்கவில்லை.
முதல் நாள் காலேஜில் அனன்யா நுழைய… மனமோ, ஒரு வெறுமையை சுமந்திருந்தது. ‘ இப்போ மட்டும் ராது என் கூட இந்த காலேஜிற்கு வந்திருந்தா, எவ்வளவு ரகளை பண்ணிருப்போம். முதல் நாளே இவ்வளவு இரிட்டேட்டிங்கா இருக்கு. எப்படி நான் படிச்சு, மகப்பேறு மருத்துவரா ஆகப் போறேனோ.’ என்று பெருமூச்சு விட்டுக் கொண்டு நடந்தவள், எதிரே வந்த நெடியவனின் மேல் மோதி நின்றாள்.
” ஹேய் பார்த்து…” என்றவனை நிமிர்ந்துக் கூடப் பார்க்காமல், ” சாரி…” என்று ஒரு தலையசைப்புடன் நகர்ந்துச் சென்றாள்.
பூக்குவியல் போல தன் மேல் மோதிச் சென்றவளை, ஆர்வமாக பார்த்தான் ஆகாஷ்.
இதுவரை அவன் பார்த்த பெண்கள், அவனது கவனத்தை கவரவே முயல்வார்கள்.
அவளோ, கல்லோ, மண்ணோ என்பது போல் ஆகாஷை பார்த்து விட்டு,அமைதியாக சென்று விட..
அவளது அமைதியே, ஆகாஷின் கவனத்தை ஈர்த்தது.
அன்றிலிருந்து, அவளைப் பார்ப்பதே ஆகாஷின் முக்கிய வேலை.
அங்கு படிக்க வந்திருந்தவர்கள், தங்களது திறமையை வெளிப்படுத்தி ஆராவாரமாக இருக்க. இவளோ, ஆர்ப்பாட்டமே இல்லாமல் கவனத்தை படிப்பில் வைத்தாள்.
அவள் கூடத் தான் ஆகாஷ் படிக்கிறான் என்பதே அவளுக்குத் தெரியவில்லை.
‘ தன்னைப் போல அன்புக்கு ஏங்குகிற ஜீவன்.’ என்று நினைத்த ஆகாஷுன் மனதில் பார்த்த உடனே பதிந்தாள்.
அவனுக்கோ எப்படியாவது அவளிடம் பேசி முதலில் நட்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணினான்.
அதற்கான வாய்ப்பு உடனே கிடைக்கவில்லை. ஒரு மாதம் சென்ற பின்னே தான் கிடைத்தது.
ஒரு நாள் கிளாஸ் முடிந்து ஃப்ரீ டைம் கிடைத்ததும், வழக்கம் போல லைப்ரரிக்கு சென்றிருந்தாள்.
எப்படியும் அனன்யா லைப்ரரிக்கு தான் வருவாள். ‘இன்றாவது தன்னைக் கண்டு கொள்கிறாளா? பார்ப்போம்…’ என்று நினைத்த ஆகாஷ், அவளுக்கு முன்பே வந்திருந்தான். பேருக்கு ஒரு புக்கை கையில் எடுத்து வைத்துக் கொள்ள…
லைப்ரரியில் நுழைந்த அனன்யாவோ ஒரு மெடிக்கல் சம்பந்தமான புத்தகத்தை தேடிக் கொண்டிருந்தாள்.
அதுவோ ஆகாஷின் கைகளில் இருந்தது.
அதை ஒரு கணம் பார்த்த அனு,’ கேட்போமா? வேண்டாமா?’ என்று தனக்குள் யோசிக்க…
ஆகாஷ் கண்டுக் கொண்டான். அவளுக்குத் தேவையான புத்தகம் தன் கையில் இருக்கிறது.
கடவுளுக்கு நன்றியை மனதிற்குள் கூறிக் கொண்டு, இந்த சான்ஸை மிஸ் பண்ண வேண்டாம் என்று எண்ணியவன், அவளருகே சென்று, ” ஹலோ அனன்யா… உங்களுக்கு இந்த புக் வேண்டுமா ?” என்று வினவ…
“ஆமாம்…” என்றுக் கூறியவள்,
அவன் புத்தகத்தை நீட்டவும், “இல்லை வேண்டாம்.” என்றாள்.
” பரவால்ல நீங்க படிச்சுட்டு தாங்க. நான் அப்புறமா படிக்கிறேன்.” என்று வற்புறுத்தி அவளிடம் கொடுத்துவிட்டு சென்றான்.
இப்படி ஆரம்பித்தது தான் அவர்களுக்கிடையேயான பழக்கம்.
ஒரு நாள் இருவரும் படிப்பை பற்றி சுவாரசியமாக பேசும்போது, அனு அவனை வாயே திறக்க விடாமல் கிண்டல் செய்துக் கொண்டிருந்தாள்.
அவளுடைய வால்தனம் மீண்டும் ஆரம்பமாகிருந்தது.
” அனு… உன்னப் பார்த்தா அமைதியான பொண்ணுன்னு நெனச்சேன். ஆனால் சரியான அராத்தா இருக்க.” என்று அவளைப் பார்த்து புன்சிரிப்புடன் கூற.
” ஹலோ ஆக்ஸ்…. நான் சொன்னேனா நான் அமைதியான பொண்ணுன்னு. ஆனால் உங்களுக்கு எல்லாம் அமைதியான பொண்ணா இருந்தா தானே பிடிக்கும். எங்களை போல வஞ்சமில்லா நெஞ்சமுள்ள வஞ்சியரை யாருக்கு பிடிக்கும்?” என்று குறும்பாக அவனைப் பார்த்துக் கூறினாள் அனு.
” யார் சொன்னா? உன்னை பிடிக்காது என்று. எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். என் உயிர் மூச்சு இருக்கும் வரை உன்னோட வாழ ஆசை.
அப்புறம் ஆக்ஸ் என்று மட்டும் கூப்பிடாதே. எருமை என்று வேண்டும்னாலும் கூப்பிடு. உனக்கு ஃபுல் ரைட்ஸ் இருக்கு.” என்ற ஆகாஷ் அவளைப் பார்த்து கண்ணடித்து சிரித்தப்படியே தனது காதலை சொன்னான்.
அதிர்ச்சியில் வாயைப் பிளந்த அனன்யா,என்ன பதில் சொல்வது என்றுத் தெரியாமல், அங்கிருந்து ஓடி விட்டாள்.
அவளுக்கு யாரிடமாவது ஷேர் செய்து, ஒப்பினியன் கேட்க வேண்டும் என்று தோன்ற… விஸ்வரூபனிடம் சென்று பேசலாம் என்று எண்ணி, அவனது அறைக்குச் செல்ல… அவனோ, ராதிகாவிடம் ஃபோனில் பேசிக்கொண்டிருந்தான்.
“ஐந்து நிமிடம்…” என்று கண்களால் கெஞ்சியவன், எத்தனை ஐந்து நிமிடங்கள் கழித்தும் ஃபோனை வைத்தபாடில்லை.
தனது மாமா, காதலியிடம் பேசும் அழகை ரசித்துப் பார்த்தவள், மனதிற்குள்ளோ,’ நாமும் ஆகாஷுக்கு ஓகே சொன்னா என்ன?’ என்று நினைத்தாள்.
விஸ்வரூபனிடமும், ராதிகாவிடமும் கலந்து பேசி, பிறகு ஆகாஷிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தவள், விஸ்வரூபன் இப்போதைக்கு வருவதாக இல்லை எனவும் தன்னிச்சையாக முடிவெடுத்து, தன் காதலை ஆகாஷிடம் உடனடியாகத் தெரிவித்தாள்.
ஆகாஷ் வீட்டில் நிலையில்லாமல் தவித்ததுக் கொண்டிருக்க, அப்போது தான் உள்ளே நுழைந்த ஆதி, ” டேய் அண்ணா? என்ன இவ்வளவு சோகமா இருக்க?”
” நான் ஒன்னும் சோகமா இல்லை. ஆமாம் நீ எங்க போயிட்டு வர்ற?”
” நம்ம ஹாஸ்பிடலுக்குத் தான் போயிட்டு வர்றேன். நீ சாப்டியா ஆகாஷ்?”
” எனக்கு பசிக்கல. நீ சாப்பிடு.” என்றவன் தனது அறைக்கு செல்ல…
தன்னிடம் ஒழுங்கா பேசாமல் செல்லும் அண்ணனையே குழப்பத்துடன் பார்த்தான்.
அறைக்குள் சென்ற ஆகாஷ், அமைதியிழந்து தவிக்க. அவனது ஃபோன் அடித்தது.
யார் என்றுப் பார்க்க … அழைத்ததோ அனன்யா.
அவனுக்கு நம்பமுடியாமல் இருந்தது.
ஆகாஷ் இன்று தனது காதலை அவளிடம் தெரிவிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. பேசிக் கொண்டிருக்கும் போது தானாக வந்து விட்டது. அவள் பதில் கூறாமல் சென்றதில் தான் வீட்டிற்கு வந்தவன், வருத்தத்தோடு சுற்றிக் கொண்டிருக்க…
இப்பொழுது அவள் ஃபோன் செய்யவும் அவனுக்கு கொஞ்சம் படபடப்பைக் கொடுத்தது.
ஃபோனை ஆன் செய்தவன் ஒன்றும் பேசாமல் இருக்க…” ஹலோ… ஹலோ… ஆக்ஸ் இருக்கீயா?” என்று அனன்யா படபட பட்டாசாகப் பொறிய.
” ம்… என்ன அனு?”
” அது வந்து…. நீ சொன்னதுக்கு எனக்கு ஓகே.” என சொல்ல…
அவனுக்கோ ஒரே மகிழ்ச்சி. அதை மறைத்துக் கொண்டு, ” ஆமாம் நான் என்ன சொன்னேன்?” என.
அனுவோ, பல்லைக் கடித்துக்கொண்டு,” ம் அது தான். உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு , வாழ்நாள் முழுக்க இம்சை பண்ணலாம்னு முடிவு எடுத்துவிட்டேன்.” என்றுக் கூற…
” அதுக்கு தானே காத்திட்டுருக்கேன்.”
” ஓகே … லவ் அக்ஸப்ட் பண்ணியாச்சு. நெக்ஸ்ட்…” என்று ஏதோ அனு கூற வர…
” ப்ச் ஆக்ஸ். உங்க வீட்ல யார், யார் இருக்காங்க சொல்லு என்று தான் கேட்க வந்தேன். ஸார் தான் ரொம்ப ஸ்பீடா இருக்கீங்க.” என்று கலாய்க்க…
” ஓ… அவ்வளவு தானா. நான் என்னவோ நினைச்சேன். என்னை ஏமாத்திட்ட… சரி விடு. அப்புறம் எங்க வீட்ல, எங்க அப்பா, அம்மா இரண்டு பேருமே டாக்டர்ஸ். தம்பியும் டாக்டருக்கு படிச்சுட்டு இருக்கான். அவன் தான் எனக்கு எல்லாமே. உனக்கு ஒரு நாள் அறிமுகப்படுத்துறேன்.” என்றவன் பிறகு ஸ்வீட் நத்திங்ஸாக பேசிவிட்டே வைத்தான்.
நாட்கள் வேகமாக செல்ல… ஒரு நாள் ஆகாஷ், ” அனு… நாளைக்கு நான் காலேஜுக்கு லீவ். என் தம்பியோட பிறந்தநாள். அன்னைக்கு முழுவதும் அவனோட தான் இருப்பேன்.
நீ நாளைக்கு ஈவினிங் எங்க வீட்டுக்கு வர்றீயா? தம்பியோட பர்த்டே பார்ட்டி இருக்கு.
எங்க ஃபேமிலியையும் இன்ட்ரொடியூஸ் பண்ணுறேன்.” என
” ம் சரி… அப்புறம் உங்க தம்பிக்கு என்ன சர்ப்ரைஸ் பண்ணப் போற.”
” சர்ப்ரைஸா அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.” என்று ஆகாஷ் கூற…
“இப்படியுமா ஒரு அண்ணன் இருப்பாங்க. ” என்று திட்டிய அனு, ” ஓகே… நாளைக்கு நானும் காலேஜுக்கு லீவ் போட்டுறேன். அட்ரெஸ்ஸ ஷேர் பண்ணு. காலையிலே வர்றேன். உங்க வீட்ல எதுவும் சொல்ல மாட்டாங்கள்ல…”
” அதெல்லாம் எந்த பிரச்சனையும் கிடையாது. மகாராணியின் வரவுக்காகத்தான் நான் காத்திருக்கிறேன்.” என்ற ஆகாஷ் புன்னகைக்க…
அவளும் புன்னகைத்தாள்.
மறுநாள் கோலாகலமாக ஆதியின் பிறந்த நாளை கொண்டாடினார். ஆதிக்கும் அவளை ரொம்ப பிடித்து விட்டது.
இருவரும் காதலிப்பதாக ஏற்கனவே சொல்லியிருந்தான் ஆகாஷ்.
ஆனால் இன்று தான் இருவருக்கும் ஒருவரை, ஒருவர் அறிமுகம் செய்து இருந்தான் ஆதவன்.
” அனு… இவன் தான் என்னுடைய தம்பி, ஃப்ரெண்ட், வெல்விஷர் எல்லாமே இவன்தான்.”என்று ஆதியைக் கட்டிப்பிடித்துக் கொண்டுக் கூற…
அனுவோ, ” எனக்குத் தான் தெரியுமே ஆக்ஸ்.” என்றாள்.
” ஆதி… இவ தான் என்னோட சரிபாதி. உன்னோட அண்ணி.” என.
“என்னது அண்ணியா? பார்க்க பேபியாட்டாம் இருக்காங்க. நான் பேபினு தான் கூப்பிடப் போறேன்.” என்ற ஆதி அதே மாதிரி தான் கூப்பிட்டான்.
மூவரும் காலையிலிருந்து உற்சாகமாக இருந்தனர்.
மாலை பார்ட்டியில் தன் பெற்றோரிடமும், அனன்யாவை காதலி என அறிமுகம் செய்ய…
அவர்களும் பெரியதாக எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காமல் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.
உற்சாகமாக இருந்த காதல் ஜோடிகளோடு, ஆதவனும் சேர்ந்துக் கொள்ள, மூவரும் அடிக்கடி வெளியே சென்றனர்.
இப்படியே மகிழ்ச்சியாக சென்ற அவளது வாழ்க்கையில் புயல் வீச ஆரம்பித்தது.
இன்று…
” டேய் ரூபா… ” என்ற குரல், தன் பின்னால் இருந்து ஒலிக்க…
திரும்பி பார்த்தால், கிருஷ்ணன் முறைத்துக் கொண்டு நின்றார்.
அவரைப் பார்த்ததும் அமைதியாக, விஸ்வரூபன் இருக்க…
அவரோ, ” என்ன நினைச்சுட்டு இருக்க ரூபன்? நான் தான் அவளை ஒன்வீக் லீவ் போட சொன்னேன். இங்க ரெண்டு டாக்டர் வீட்டில் இருக்கோம். அங்க நடத்துற லெசன்ஸ நாங்க உனக்கு கவர் பண்ணிடுறோம் என்று சொல்லியிருந்தேன். என்ன ஏதுன்னு தெரியாமல் நீ இப்படி பேசுறது தப்பு. முதல்ல மன்னிப்பு கேள்.” என.
தன் தந்தைக் கூறியதைக் கேட்டவன், தனது தவறை உணர்ந்து, ராதிகாவைப் பார்த்து, ” சாரி…” என்றவன் பாதி சாப்பாட்டில் எழுந்து செல்ல முயல…
இப்பொழுது ரஞ்சிதம், ” தம்பி சாப்பாட்டை வேஸ்ட் பண்ணக் கூடாது. அது நேஷனல் வேஸ்ட்.” என்றுக் கண்டிப்புடன் கூற…
தலையசைத்தவன் ஒன்றும் கூறாமல் உண்ண ஆரம்பித்தான்.
“எதுக்காக அண்ணா லீவு போட சொன்னாங்க என்று கேட்கலையா ரூபா?” கௌரி எடுத்துக் கொடுத்தாள்.
விஸ்வரூபன் தன் தந்தையை பார்க்க…
” நீங்க ரெண்டு பேரும் ஹனிமூன் போறதுக்காகத் தான் லீவ் போட சொன்னேன். எங்கேயும் போகலைன்னா… நம்ம சர்க்குள்ல பெரிய இஸ்யூஸ் ஆகிடும். அதுவும் நம்ம ஸ்டேட்டஸ்காக எல்லாரும் எதிர்பார்ப்பாங்க… சோ டூ ஆர் த்ரி டேஸ் எங்கேயாவது போயிட்டு வந்துடுங்க.” என்றுக் கூறியவர் சாப்பிட அமர…
” ஆனா பாப்பா என்னை விட்டிட்டு இருக்க மாட்டா.” என்றான் விஸ்வரூபன்.
” பாப்பாவையும் கூட்டிட்டு போ… நோ ப்ராப்ளம்.” என்ற கிருஷ்ணன் தன் சாப்பிட்டில் கவனத்தை செலுத்த…
இப்பொழுது கௌரியும், ரஞ்சிதமும் தலையிட்டர்கள். ” பாப்பாவை எப்படி இவங்களால பார்த்துக்க முடியும்.” என்று வினவ.
” பின்னே நர்ஸ், கேர்டேக்கர் எல்லோரையுமா ஹனிமூனுக்கு அவங்கக் கூட அனுப்ப முடியும். எல்லாம் அவங்க பாத்துப்பாங்க. ஒரு குழந்தையைக் கூடப் பார்க்க முடியாதா?” என்று எல்லோரது வாயையும் அடைத்து விட்டார்.
‘ கேர்டேக்கரை எங்கக் கூட அழைத்துச் செல்கிறோம்.’ என்று அடுத்து அதைத் தான் கேட்கலாம் என்று நினைத்திருந்தான் விஸ்வரூபன்.
அதற்கும் கிருஷ்ணன் ஆப்பு வைக்க… குழப்பத்துடனே அங்கிருந்து கிளம்பினான்.
” மாமா… விஷ்வா பேசிய முறை தப்பா இருந்தாலும், நான் படிக்கலைன்ற ஆதங்கத்துல அப்படிப் பேசிட்டார். நீங்க அதைப் பெரிசு பண்ணாதீங்க.” என்றாள் ராதிகா. மனதிற்குள்ளோ, ‘ நான் உன் மேல வெறுப்பா இருக்கணும்னு தான் இப்படிலாம் செய்யுற… ஆனா என்னைக்காவது என் கிட்ட மாட்டாமலா போவ… அன்னைக்கு வச்சு செய்யுறேன்.’ என்று திட்டிக் கொண்டிருந்தாள்.
” அதை விடு மா. டூருக்கு எங்கே போறது என்று பேசி முடிவெடுங்க.”
” மாமா… அவசியம் போகணுமா. எனக்கு பயமா இருக்கு.” என்றாள் ராதிகா.
” மருமகளே… நீ யாருன்னு எனக்குத் தெரியும். நீ படித்த ஸ்கூல்ல நான் தான் ஹெட்மாஸ்டர்… இல்லை, இல்லை… நீ படிக்குற காலேஜில நான் தான் டீன். அதை மறந்துட்டீயா… உன்னைப் பற்றி நல்லா தெரியும். ” என்ற கிருஷ்ணன், காலேஜில் அவரைப் பார்த்து கண்ணடித்ததை நினைத்துப் பார்த்தவர் சிரிக்க…
ராதிகாவாலும் சிரிப்பை அடக்க முடியாமல், அசடு வழிய சிரித்து வைத்தாள். கௌரியும், ரஞ்சிதமும் வாஞ்சையாக அவளைப் பார்த்து சிரித்தனர். டெய்லி காலேஜில் நடக்கும் கலாட்டாக்களை தான் கிருஷ்ணன் வந்து கூறிவிடுவாரே…
இதையெல்லாம் வெளியே நின்று பார்த்துக் கொண்டிருந்த விஸ்வரூபன், ராதிகாவை வைத்த கண் வாங்காமல் ரசித்துக் கொண்டிருந்தான். தன்னுடைய ஹாஸ்பிடல் பேக்கை வைத்து விட்டு சென்றிருக்க. அதை எடுப்பதற்காக உள்ளே வந்தவன் ராதிகா பேசிய எல்லாவற்றையும் கேட்டு பெருமூச்சு விட்டுக்கொண்டான்.
நாட்கள் விரைந்தோட இவர்கள் ஹனிமூனுக்கு செல்லும் நாளும் வந்தது. விஸ்வரூபன் வேண்டுமென்ற கேராளாவுக்கு அழைத்துச் சென்றான்.
கோபப்படாமல் அமைதியாக இருப்போம் என்று ராதிகா நினைத்தாலும் அவளால் கோபத்தை கண்ட்ரோல் பண்ண முடியவில்லை. இறுக்கமாக அமர்ந்திருந்தாள்.
அவளை ஓரக்கண்ணால் பார்த்த விஸ்வரூபனோ, ‘ எதுக்கு இவ்வளவு டென்ஷனா இருக்கா? அவ ஆசைப்பட்ட மாதிரி கல்யாணத்தை தான் நடத்தலை. அட்லிஸ்ட் அவ போகணும்னு நினைச்ச கேரளாவுக்காவது அழைச்சிட்டு போவோம்னு, இங்க கூட்டிட்டு வந்தா, எதுக்கு முகத்தை தூக்கி வைச்சிட்டு இருக்கா?’ என தனக்குள் கேட்டுக்கொண்டான்.
ஒரு வழியாக கேரளா வந்திறங்கினர்.
ட்ராவல் முழுவதும் குழந்தை தூங்கிக்கொண்டே வந்ததால் விஸ்வரூபனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
அவர்கள் தங்குவதெற்கென ஏற்பாடு செய்திருந்த ரிவர்ஸ் ரெஸார்டு வந்து சேரும் போது,இரவாகி இருந்தது.
இருவருக்கான உணவை விஸ்வரூபன் ஆர்டர் செய்ய…
ஒன்றும் கூறாமல் இருவரும் உணவருந்தினர்.
பிளைட்டில் நன்றாக உறங்கி இருந்த குழந்தை விளையாட … அவனுக்கு உடம்பு அசதியாக இருந்தாலும்
குழந்தைக்காக, அவள் பின்னே ஓடிக் கொண்டிருந்தான்.
ராதிகாவோ, அவர்கள் இருவரையும் கண்டுக்கொள்ளாமல் தன்னுடைய வேலைகளை பார்த்து விட்டு வந்து படுத்தாள்.
குழந்தையோ, விஸ்வரூபனை நன்றாக வச்சு செய்து விட்டு, உறக்கம் வரவும் அழ ஆரம்பித்தது.
குழந்தை எதற்காக அழுகிறாள் என்பதை புரிந்துக் கொண்ட விஸ்வரூபனோ என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்க…
குழந்தையோ அவனது ஃபோனை எடுத்துக் கொடுத்து, ” பா… மா…” என்று மழலையில் கூறி விட்டு, அழ…
ராதிகாவை பார்த்தவாறே, ஃபோனை எடுத்து ஆன் செய்தான்.
” யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே” என்று இவளது குரலில் பாடல் ஒலிக்க…
குழந்தையோ சமர்த்தாக படுத்துக் கொண்டது.
ராதிகவோ, ‘அடப்பாவி.’ என்று மனதிற்குள் திட்டிக் கொண்டே பார்க்க…
அவனோ அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு, லைட்டை ஆஃப் செய்து விட்டு உறங்க முயன்றான்.