உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -22

4.8
(4)

அத்தியாயம்- 22

அன்று…

” வாட் ஆகாஷ்? இவங்க படிச்சவங்க தானே. மேனர்ஸ் தெரியாதா? டாக்டர் ஃபேமிலி என்று தானே சொன்ன… ஓ காட் என்னைக்கோ நடந்த விஷயத்தை இன்னும் நினைச்சுட்டு இருக்காங்க.

உங்க அத்தை மேஜர். அவரும் மேஜர். ரெண்டு பேரும் ஆசைப்பட்டு இருக்காங்க. நம்ம என்ன பண்ண முடியும். டீசண்டா ஒதுங்கி தானே போக முடியும். அதை விட்டுட்டு எங்க கிட்ட வந்து கோவப்பட்டா, என்ன செய்ய முடியும்.” என்று ஆகாஷின் அம்மா கூற…

” ஷட் அப்… முதல்ல இந்த இடத்துல இருந்து எல்லாரும் கிளம்ப போறீங்களா? இல்லையா?” என்று கிருஷ்ணன் கத்த…

” வாங்க போகலாம்…” என்று மரம் போல நின்றுக் கொண்டிருந்த ஆகாஷையும், ஆதவனையும்அழைத்துக் கொண்டு கிளம்பினர். இருவரது பார்வையும், முகமெல்லாம் வெளுத்து போய் கண்ணிலிருந்து நீர் வழிய, நின்றுக் கொண்டிருந்த அனன்யாவையோ பார்த்தனர்.

 காரில் போகும்போது ஆகாஷின் அப்பாவும், அம்மாவும், ” உனக்கு இருக்கிற தகுதிக்கு, இதை விட பணக்கார வீட்டிலிருந்து சம்பந்தம் வரும். நீ பொறுமையா இரு.” என்று பேசிக்கொண்டே இருக்க.

” இரண்டு பேரும் முதல்ல வாயை மூடுங்க… மேனர்ஸ், டிஸன்ஸி, ஸ்டேட்டஸ் , சொசைட்டி என்று இப்படி தான் உங்களுக்குப் பேசத் தெரியுமே ஒழிய… குடும்பத்தில் உள்ளவர்களோட மனசு, அவங்களுக்குனு ஒரு இதயம் இருக்கும். அதற்குள்ள ஒரு உணர்வு இருக்கும் என்று எதுவுமே தெரியாது.

 அன்னைக்கும் அப்படித்தான் அத்தையை புரிஞ்சுக்காம உங்களோட பியாரிட்டிய பணத்தை தேடுறதுல காண்பிச்சீங்க.

அவங்கக் கிட்ட கொஞ்சம் அக்கறையா இருந்திருந்தால், அவங்க ஏன் கல்யாணம் ஆன ஒருத்தர் கிட்ட தேடப் போறாங்க. தப்பெல்லாம் நீங்க பண்ணிட்டு, உங்களை நியாப்படுத்திக்கிட்டீங்க.

இன்னைக்கும் அண்ணனைப் பத்தி நினைக்காமல், பணத்தை பத்தியே பேசிட்டு இருக்கீங்க. நீங்க வழக்கம்போல டீசன்ட்டா ஒதுங்கியிருங்க. ஆகாஷோட வாழ்க்கை,

அவன் விருப்பம். அவன் பார்த்துப்பான்.” என்று ஆதவன் பேச…

 தோள்களைக் குலுக்கிக் கொண்டு, அவர்களது பெற்றோர் அமைதியாகி விட்டனர். அவ்வளவுதான் அவர்களுடைய அன்பு. பிள்ளையை படிக்க வைக்க வேண்டியது அவர்களுடைய கடமை. பணத்திற்கு பின்னால் ஓடிக் கொண்டிருக்க, மனிதனின் மன உணர்வுகளைப் பற்றித் தெரிந்துக் கொள்ள முயலவில்லை.

அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தலையில் கை வைத்துக்கொண்டு கண்களை மூடி இருந்தான் ஆகாஷ். கண்ணுக்குள் கண்ணீருடன் இருக்கும் அனுவே வந்து போனாள்.

அங்கோ ருக்குமணி திட்டிக் கொண்டிருந்தாள், ” கொஞ்சம் கூட பயமில்லாமல், எப்படி தான் நம்ம வீட்டுக்கு வராங்கன்னு தெரியலை. என் பொண்ணு வாழ்க்கையை கெடுத்தது போதாதுன்னு, இப்ப அவங்க மகன் மூலம் என் பேத்தி வாழ்க்கையும் கெடுக்கப் பார்க்குறாங்க.

அன்னைக்கு அந்த ஆளு என் பொண்ணோட வாழ முடியாதுன்னு, அவங்க வீட்டு பொண்ணை விரும்புறேன்னு சொன்னப்ப, நானும், என் புருஷனும் அவங்க வீட்டு முன்னாடி போய் எவ்வளவு கெஞ்சுனோம். கல்யாணம் ஆனவன் அவனை விட சொல்லுங்க உங்க தங்கச்சியை என்று…

அதெல்லாம் அவங்களோட தனிப்பட்ட விஷயம். இதில் என்னால ஒண்ணும் பண்ண முடியாது என்று நிர்தாட்சணயமா மறுத்துட்டாங்களே. கொஞ்சம் அந்த பொண்ண கண்டித்து வைச்சிருந்தா, அவரை நம்ம வழிக்கு கொண்டு வந்து இருக்கலாம். இப்படி என் பேத்தி அஞ்சு வயசுல இருந்து அப்பாவோட அன்பு தெரியாமல் கஷ்டப்பட்டு இருக்க மாட்டா.” என்று புலம்ப…

” என்ன பாட்டி சொல்றீங்க.” என அனன்யா அழுதுக் கொண்டே வினவ‌.

” எல்லாம் உன் அப்பன் பண்ண வேலையைப் பத்தி தான் சொல்லிட்டு இருக்கேன்… என் பொண்ணோட ஏழு வருஷம் வாழ்ந்துட்டு, ஒரு நாள் டைவர்ஸ் வேணும்னு நிக்கிறான். என்னன்னு விசாரிச்சா, இப்போ வந்தாங்களே அவங்க தங்கச்சி தான் காரணம். எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்கலை. அப்படிப்பட்ட குடும்பத்துல உன்னை கட்டிக் கொடுக்க மாட்டேன். அதை முதல்ல நல்லா புரிஞ்சுக்கோ.”

அவர் கூற,கூற சிலையென சமைந்தாள்.

“என்ன ஒன்னும் சொல்லாமல் இருக்க? அவனோட பேசுவதை நிறுத்திக்க. இல்லைன்னா காலேஜை விட்டு நிறுத்திடுறோம். சீக்கிரமா உனக்கு நான் நல்ல மாப்பிள்ளையா பார்த்துக் கட்டி வைக்கிறேன். அப்புறமா படிக்கிறதுன்னா படி.”

” பாட்டி படிப்பெல்லாம் நிறுத்தினா சரி வராது பாட்டி.” என்று இடையிட்டான் விஸ்வரூபன்.

ஆகாஷின் கார் வெளியேறியதுமே, விஸ்வரூபன் வீட்டிற்குள் நுழைந்தவன், ருக்குமணி பேசிய அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தான்.

படிப்பை நிறுத்துவேன் என்றதும் வாயைத் திறக்க…

ருக்குமணியோ, ” நீ முதல்ல சும்மா இரு டா… எல்லாம் உன்னால வந்தது தான். நீ தான் அவளை வெளிநாட்டுக்கு அனுப்பி வச்ச… இங்கேயே இருந்திருந்தா, அவ ஒழுங்கா, எப்பவும் போல என்கிட்ட எந்த விஷயத்தையும் மறைக்காமல் இருந்திருப்பா. வெளிநாட்டுக்கு போயிட்டு வந்ததுல இருந்து தான் ஆளே மாறிட்ட.

அதுக்கு அப்புறமாவது மேற்படிப்பை நம்ம காலேஜ்ல சேர்த்தியா… எங்கேயோ போய் சேர்த்த… அதனால தான அவங்க கூட சுத்திட்டு இருக்கா.” என்று திட்ட…

 அதிர்ந்தான் விஸ்வரூபன்.

 கிருஷ்ணனும், ரஞ்சிதமும் அமைதியாக இருந்தனர். வாயைத் திறந்தால் பிரச்சினை பெரிதாகும் என்று தெரிந்ததால்…

கௌரியோ, ” நான் என்ன பாவம் செஞ்சேன்? என் வாழ்க்கைத் தான் இப்படி இருக்கின்னுப் பார்த்தால், என் பொண்ணு வாழ்க்கையும் கேள்விக்குறியாகிடுச்சு.” என்று அழுதுக் கொண்டே கூறினாள்.

” பாட்டி… அனு புரிஞ்சுப்பா. நாம்ம மாப்பிள்ளை பார்ப்போம். அதுவரைக்கும் அவ காலேஜ் போகட்டும்.” என்றவன் அனுவை ஆழ்ந்துப் பார்த்தான்…

அவளோ, ‘ இப்போதைக்கு காலேஜுக்கு அனுப்பினால் போதும்.’ என்றிருக்க.

விஸ்வரூபன் கூறியதற்கு, ” சரி.” என தலையாட்டினாள்.

அடுத்த நாள் காலேஜுக்கு சென்றவள், ஆகாஷை அழைத்துக் கொண்டு கேண்டீன் சென்றாள்.

” அனு… நடந்த எதுவுமே எனக்குத் தெரியாது. யாரோ செஞ்ச தப்புக்கு, நம்ம ரெண்டு பேரையும் சிலுவை சுமக்க சொல்லுறாங்களே.” என.

 ” அதை விடு ஆக்ஸ். எங்க பாட்டியும், மாமாவும் கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கிறாங்க‌. என்ன பண்றதுன்னு சொல்லு. எனக்கு ரொம்ப பயமா இருக்கு.” என்றாள் அனன்யா.

” பயப்படாதே அனு. நான் உன்ன தான் கல்யாணம் பண்ணிப்பேன். என்னோட சைட்ல எந்த பிரச்சினையும் கிடையாது. நீ இப்ப கூட வா. நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம். நான் உனக்காகத் தான் யோசிக்கிறேன்.” என.

” ம்… நான் பாட்டிக் கிட்ட பேசி பார்க்குறேன். ஆனா இப்போ பேசுனா‍, என்ன காலேஜுக்கு அனுப்ப மாட்டாங்க. உன்ன பார்க்காமல் என்னால இருக்க முடியாது.” என்று அனு கண்ணீர் விட.

” சரி அனு. அழாத. முதல்ல பொண்ணு பார்க்க வர்றவங்கக் கிட்ட பேசி பார்ப்போம். நாம ரெண்டு பேரும் லவ் பண்றதை சொல்லிடலாம். புரிஞ்சுப்பாங்க. இப்படியே வரன் தட்டிப் போயிட்டே இருந்தா, அப்புறம் உங்க பாட்டிக்கு பயம் வந்திடும். அப்போ நீ மறுபடியும் என்னைத் தவிர வேறு யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என்று ஸ்ட்ராங்கா நில்லு. அவங்க இறங்கித் தான் வரணும். எத்தனை நாளைக்கு அவங்க வைராக்கியமா இருக்காங்கன்னு பார்ப்போம்.” என்று அப்போதைக்கு அந்த பிரச்சினையை தள்ளிப்போட்டனர்.

ருக்குமணியும், விஸ்வரூபனும் தேடித் தேடி வரன் பார்த்தனர். டாக்டர் மாப்பிள்ளைத் தான் வேண்டும் என்று முடிவெடுத்தனர். அதோடு குணத்தையும் பார்த்து, பொறுமையாகத் தான் தேடினர்.

அதுமட்டுமில்லாமல் அனன்யாவை நம்பினர். அவளும் ஆகாஷ் குடும்பத்து மேல் வெறுப்பாக இருப்பாள் என்று நினைத்தனர்.

அவளோ, ஆகாஷ் மூலம் அவளுக்கு வந்திருந்த இரண்டு மூன்று வரனை, அவர்களே வேண்டாம் என்று சொல்லுமாறு செய்திருந்தாள்.

முதல் இரண்டு வரன் வேண்டாம் என்று சொல்லும் போது பெரியதாக எதுவும் யோசிக்கவில்லை. மூன்றாவது வரனும் தட்டிப் போகவும், இதற்கு பின்னால் யாரோ இருக்கிறார்கள் என்று எண்ணிய விஸ்வரூபன், இந்த முறை நேரே சென்று அந்த மாப்பிள்ளையைப் பார்த்தான்.

முதலில், அது, இதுன்னு சமாளித்தார் அந்த டாக்டர் மாப்பிள்ளை.

விஸ்வரூபனின் விடாப்பிடியில், ” சார் உங்க வீட்டுப் பொண்ணு லவ் பண்ணுதாமே. அந்த பொண்ணோட லவ்வரும், அவங்க தம்பியும் நேரடியா வந்து சொல்லிட்டாங்க. பேசாம அவங்களுக்கே கல்யாணம் பண்ணி வைங்க சார். அவங்களும் டாக்டராமே… இந்த காலத்தில், படிச்சிருந்தும் இப்படி இருக்கிறீங்க.” என்று அவனுக்கு அட்வைஸ் செய்து விட்டுப் போனான்.

விஸ்வரூபனோ, அவர்கள் இருவர் மீதும் கொலை வெறியில் இருந்தான்.

அனு இன்னும் அவர்களுடன் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது புரிந்தது. அதனால் இந்த முறை பாட்டியிடம் சொல்லி ரகசியமாக மாப்பிள்ளை பார்த்து எல்லாம் முடிவாகட்டும் அப்புறமாக அனுவிடம் சொல்லிக்கொள்ளலாம் என்றான்.

 இப்படியே ஐந்தாறு மாதம் கடந்திருக்க, அனன்யாவோ நம்ம திட்டம் வொர்க் அவுட் ஆகிடுச்சு என்று சந்தோஷப்பட்டுக் கொண்டாள்.

 அடுத்த வருட ஆதியின் பிறந்தநாள் வந்தது.

அன்று காலையில் கிளம்பும் போதே, ” ஈவினிங் சீக்கிரமா வா.” என்றாள் கௌரி.

” ஏன் மா?”

” கோவிலுக்கு போகணும்.” என்று வாய்க்கு வந்ததைக் கூறினாள் கௌரி.

” சரி மா.” என்று வெளியே சென்றவளுக்குத் திடீரென்று தான் ஞாபகம் வந்தது. இன்று ஆதிக்கு பிறந்தநாள். ஈவினிங் பார்ட்டிக்கு வரச் சொல்லியிருந்தான்.

தான் வர லேட்டாகும் என்று சொல்வதற்காக திரும்பி வந்தவள், ரஞ்சிதமும், கௌரியும் அன்று மாலை நடக்கப் போகும் நிச்சயதார்த்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்க…

 அவளுக்கு முகமெல்லாம் வியர்த்து, இதயம் வெடிப்பது போல் ஆனது.

வந்த தடமே தெரியாமல் வெளியே சென்று விட்டாள்.

இன்று…

காலையில் எழுந்து கல்லூரிக்கு கிளம்பினாள் ராதிகா.

 குளித்து முடித்து விட்டு கண்ணாடி முன் நின்று பார்க்க… முகமோ வீங்கி போய் இருந்தது. இரவெல்லாம் தூங்காமல் அழுததன் பலன்…

கீழே உணவருந்த வந்தவளை, ஒரு நிமிடம் கிருஷ்ணனும், விஸ்வரூபனும் ஆராய்ச்சியாக பார்த்தனர்.

 விஸ்வரூபன் அவளைப் பார்த்து விட்டு, அலட்சியமாக திரும்பி விட…

 கிருஷ்ணனோ, ‘ பாவம் ராதிகா.’ என மனதிற்குள் எண்ணினார்.

அவளை சமாதானம் படுத்துவதற்காக, ” ராதிகா… இந்த வீக்கென்ட் தஞ்சாவூருக்கு இரண்டு பேரும் போயிட்டு வந்துடுங்க.” என.

கிருஷ்ணனை நிமிர்ந்துப் பார்த்தான் விஸ்வரூபன். கிருஷ்ணனோ, ‘நீ கண்டிப்பாக போய்த்தான் ஆகணும்.’ என்பதுப் போல் பார்த்தார்.

  அவரது பார்வையில், விஸ்வரூபன் அமைதியாகி மீண்டும் உணவில் கவனத்தை செலுத்தினான்.

” ஓகே அங்கிள்.” என்ற ராதிகா, மகிழ்ச்சியாக காலேஜுக்கு கிளம்பினாள்.

காலேஜுலோ ராதிகாவிற்காக காத்திருந்தான் ஆதவன். ராதிகாவோ, அருகில் அமர்ந்திருந்தவனை ஒரு பொருட்டாக நினையாமல், அவனுடன் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்…

வகுப்புகள் நடந்ததால் ஆதவனும், பொறுமையாக காத்திருந்தான்.

லஞ்ச் பிரேக்கில், ” ஏன் ராது… உன் ஹஸ்பெண்ட் என்னை வீட்டை விட்டு அனுப்புனதை நினைச்சு பீல் பண்றியா?” என.

 ஒன்றும் கூறாமல் அவனைப் பார்த்து முறைத்தாள் ராதிகா.

” என்னாச்சு ராதிகா?”

” உனக்கும், விஷ்வாக்கும் என்ன பிரச்சனை? ஏற்கனவே உங்க ரெண்டு பேருக்கும் ஒத்துவராது தானே? சொல்லு… என்கிட்ட நீ எதுவும் சொல்லலை. உன்னை என்னோட ஃப்ரெண்டா தான் நினைச்சேன். நீ அப்படி எதுவும் நினைக்கலை. என்னை வச்சு ஏதோ கேம் ப்ளே பண்ணியிருக்க… ரைட்… ” என்றாள் ராதிகா.

” ராது… ” என்று ஆதவன் இழுக்க.

” எதுவும் இல்லை என்று சொல்லாத‌‌… எந்த சால்ஜாப்பும் வேண்டாம். உனக்கு சொல்ல விருப்பம் இல்லைன்னா விடு. அவன் ஒருத்தன் என்ன போட்டு படுத்துறது போதாதுன்னு… நீ வேற… என்ன நடந்ததுன்னு இரண்டு பேரும் எதுவும் சொல்ல மாட்டேங்கறீங்க… எனக்கு தலையே வெடிச்சிடும் போல இருக்கு.‌..” என்று கண்கள் கலங்க ராதிகாக் கூற.

 ” நானே உன் கிட்ட சொல்லணும் தான் இருந்தேன் ராது. என்ன சொல்றதுன்னு தெரியலை. எனக்கும் அந்த வீட்டுக்கும் உள்ள உறவுன்னு சொல்லனும்னா, அங்க இருக்கிற பேபி தான். ஆனால் உரிமை கொண்டாடுற நிலையில் நாங்க இல்லை. அதுக்கு எங்க பெற்றோரோட தான்தோன்றித்தனம் தான் காரணம். அவங்களைப் பொறுத்தவரை அது தனிமனித சுதந்திரம். அதுல பாதிக்கப்பட்டதோ, நானும், என் அண்ணனும் தான்.” என்றவன் ஐந்து நிமிடம் அமைதிக்காத்தான்.

அந்த ஐந்து நிமிடம், அவனது உடன்பிறப்பும், உயிர் நண்பனுமாகிய ஆகாஷைப் பற்றி நினைத்தான்.

பிறகு பெருமூச்சு விட்டுக் கொண்டே, அவர்களது வாழ்க்கையில் வந்த, இனிய புயலான தென்றலையும், அதற்கு பிறகு அவர்களது வாழ்க்கையில் சுழற்றி அடித்த சூறாவளியையும் ராதிகாவிடம் பகிர்ந்துக் கொண்டான்.

 இப்போது ராதிகாவிடம் அந்த அமைதி வந்து ஒட்டிக் கொண்டது. கண்களில் இருந்து கண்ணீர் வழிய…

” அழாதே ராது… அதான் உன் கிட்ட சொல்லாமல் தள்ளிக்கிட்டே போனேன். உன்னை பார்த்ததுமே பேபி தான் ஞாபகம் வந்தது. பட் அப்போ நீ யாருன்னு எனக்குத் தெரியாது. ஆனால் பேபி என்கிட்ட பேசுனா பத்து வார்த்தைல, இரண்டு வார்த்தை ராது… ராது… என்பதாகத் தான் இருக்கும். அந்த ராது நீதான் என்று அதுக்கப்புறம் தெரிஞ்சுக்கிட்டேன். அப்புறம் உன்னை வச்சு ப்ளே பண்ணனும் நினைக்கலை. உன் மூலமாவது குட்டி பேபியை பார்க்கணும் நினைச்சேன். தேங்க் காட்… குட்டிமாவைத் தூக்கிக் கொஞ்சிட்டேன்.” என்றவன் அமைதியாக அவளைப் பார்க்க…

” சாரி ஆதி… நான் உன்னை தப்பா நினைச்சுட்டேன். நீ கவலைப்படாதே… சீக்கிரமே பாப்பாவோட உன்னை சேர்த்து வைக்கிறேன்.” என்றாள் ராதிகா.

” அவ்வளவு பெரிய ஆசையெல்லாம் இல்லை. எப்பவாவது உங்க வீட்டுக்கு வந்து போக அனுமதி தந்தாளே போதும். ஆனால் எப்பப் பார்த்தாலும், வீட்டை விட்டு வெளியே போ என்று உங்க வீட்டு ஆளுங்க சொல்லிட்டே இருக்காங்க .” என்று பெருமூச்சு விட்டபடியே கூறினான் ஆதி.

” அதெல்லாம் பார்த்துக்கலாம். இந்த வீக்கென்டே பாப்பாவை பார்க்க வைக்கிறேன்.” என்றவள் மனதிற்குள்ளோ, ‘ என் வீடு என்று என் கிட்டேயே சொன்னல்ல விஷ்வா டியர். இரு உன்னை கதறடிக்கிறேன்.’ என்று மனதிற்குள் நினைத்தாள் ராதிகா.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!