உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -25

5
(1)

அத்தியாயம் – 25

அன்று…

” நான் அனன்யாவை கல்யாணம் செய்துக்கிறேன்.” என்ற விஸ்வரூபனின் வார்த்தைகளை கேட்டதும், ருக்குமணியின் முகம் மலர… ரஞ்சிதமோ முகம் மாற வெளியே சென்றார்.

அவருக்கு பின்னே வந்த கிருஷ்ணனோ ஆறுதலாக கையைப் பிடிக்க.

” ஏங்க… நான் எவ்வளவோ இந்த குடும்பத்துல உள்ளவங்களுக்காக பொறுத்துப் போய் தானே இருக்கேன். ஆனால் அத்தை, என்னை இந்த வீட்ல ஒருத்தியா நினைக்கலை. ரூபனை அவங்க பேரனா நினைக்கலை. அவங்களுக்கு, அவங்க பேத்தி தான் முக்கியம். நாங்க எங்கிருந்தோ வந்தவங்க தானே.” என்று கதறி அழ…

” ரஞ்சிதம்… அம்மா வயசானவங்க… ஏதோ புரியாம பேசுறாங்க விடு…” என்று கிருஷ்ணன் சமாதானம் செய்ய முயல…

“சும்மா ஏதாவது என்னை சமாளிக்கறதுக்காக சொல்லாதீங்க. அவங்க வயசானவங்கன்னா இருந்துட்டு போகட்டும். அதுக்காக என் பையனோட ஆசையில் குறுக்க நிப்பாங்களா.”

” அனு நம்ம வளர்த்த பொண்ணு இல்லையா… இப்படி எல்லாம் பேசாத ரஞ்சிதம்.”

” நம்ம பையன் யாரையும் விரும்பலைன்னா, நானே முன்ன நின்னு கல்யாணம் செய்து வைப்பேனே. என் பையன் அவ்வளவு ஈஸியா அவன் ஆசைப்பட்டதை நிறைவேத்தாமல் இருக்க மாட்டானே. இப்போ அந்த பொண்ணை மறக்கணும்னா, அவனால முடியுமா? என் பையன் வாழ்க்கை அவ்வளவு தானா?” என்று புலம்பிக் கொண்டே நிமிர்ந்தாள் ரஞ்சிதம்.

அங்கோ அனன்யா, அனைத்தையும் கேட்டு விட்டேன் என்பது போல முகம் வெளுக்க நின்றாள்.

ஏற்கனவே ஆகாஷ் இல்லாமல் வாழவே விருப்பமில்லாமல் இருந்தவள், குழந்தை உண்டானதும் தான் கடவுள், அவளது வாழ்க்கையில் கருணை காட்டியதாக நினைத்தாள்.

ஏனென்றால், அவளது ஆகாஷின் ஜீவனல்லவா, அவளது வயிற்றில் உதித்திருக்கிறது.

ஆனால் அதை எண்ணி சந்தோஷம் கூட பட முடியாமல், அடுத்தடுத்து நிகழ்வுகள் நடந்தேறிட, அலையில் மிதக்கும் துரும்பாக மிதந்தாள்.

 நேற்று இரவு நடந்த களேபரத்தில் கூட, தனக்கு ஆறுதலளிக்க தான் குழந்தை உண்டாகிருக்கிறது என்று உள்ளுக்குள் ஒரு சின்ன மகிழ்ச்சி ஏற்பட்டது.

 ஆனால் அதுவும் இப்பொழுது நொறுங்கி போய் விட்டது. தனது மாமாவின் காதலுக்கு தானே முட்டுக்கட்டையாக இருக்க போவதை எண்ணிக் குழம்பியவள், வெளியே வர ‌…

தனது அத்தை பேசிய அனைத்தையும் கேட்டு உள்ளுக்குள் மரித்தாள். தான் ஏன் இன்னும் உயிரோடு இருக்கணும். இருந்தால் எல்லோருக்கும் தொல்லை தான் என்று எண்ணத் தொடங்கினாள்.

குழந்தைக்காக கூட உயிர் வாழ வேண்டும் என்று எண்ணவில்லை அனன்யா.

அனன்யா வெளியே சென்ற பிறகு, அவளைத் தேடி வந்தான் விஸ்வரூபன்.

அவனிடம், ” மாமா… இந்த கல்யாணம் வேண்டாம்.” என்று அனன்யா உறுதியாகக் கூற.

“நான் பாட்டியிடம் வாக்குக் கொடுத்து விட்டேன். இதைப் பற்றி எதுவும் பேச வேண்டாம். ” என்றவன்,

கிருஷ்ணனிடம், ” பாட்டி இப்பவே, இங்கேயே திருமணம் செய்யணும் என்று சொல்றாங்க. ஏற்பாடு பண்ணுங்க பா.” என்றவன் அவனது ஓய்வு அறைக்குச் சென்று விட்டான்.

” ரூபா…” என்ற ரஞ்சிதத்தின் குரல் அவனது செவியை எட்டவில்லை. அதற்கு பிறகு அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

மிகப் பெரிய சுகம் ஹாஸ்பிட்டலின் சேர்மனின் திருமணம், ஹாஸ்பிடலில் எளிமையாக நடந்தது.

 தன் பேத்தியின் திருமணம் நடந்த சந்தோஷத்தில், மீண்டும் ஹார்ட் அட்டாக் வர, ருக்குமணியின் உயிர் மகிழ்ச்சியோடு பிரிந்தது.

                    ******************

 தினமும் எவ்வளவு வேலை இருந்தாலும், ஒரிரு நிமிடங்களாவது ஃபோன் செய்து பேசும் விஸ்வரூபன் பேசாமல் இருக்க, ராதிகாவிற்கு ஏனோ மனம் பதட்டமாகவே இருந்தது.

இரவு முழுவதும் அவனுக்கு அழைத்துக் கொண்டு இருக்க… ஹாஸ்பிட்டலில் இருந்ததால் சைலன்டில் போட்டிருந்தான்.

காலையில் முதல் வேலையாக அனன்யாவிற்கு, அழைத்தாள் ராதிகா.

அவளோ பாட்டி இறந்த அதிர்ச்சியிலும், திடீர் திருமணத்திலும் பிரம்மை பிடித்தாற் போல் இருந்தாள்.

அருகில் இருந்த நர்ஸ் தான் ஃபோனை எடுத்து, அனன்யாவின் பாட்டி இறந்த தகவலைக் கூற…

 ஒரு நிமிடம் அனுவையும், விஷ்வாவையும் நினைத்து கவலைக்கொண்டவள், பிறகு சுந்தரியிடம் சென்று, ” மா… அனுவோட பாட்டி இறந்துட்டாங்க. நான் போகணும் மா.” என ராதிகா கூற.

” இன்னைக்கு விக்ரம் கடைக்கு வர மாட்டான். ஃப்ரெண்டோட ரிஷப்ஷனுக்கு போகணும்னு சொன்னான். உங்க அப்பா வர்றது சந்தேகம்.” என சுந்தரி கூறினார்…

‘ கடைசியா விஷ்வாவோட பாட்டிய பார்க்கக் கூட முடியாதா… எத்தனையோ முறை, அனுவும், விஷ்வாவும் கூப்பிட்டாங்களே… போயிருக்கலாமோ…’ என தனக்குள் யோசித்து முகம் வாடி நின்றாள்.

வெளியே சென்றிருந்த சண்முகமும் உள்ளே வர வாடி நின்ற ராதிகாவை தான் பார்த்தார்.” ஏன் டா ராது… என்னமோ போல இருக்க. என்ன பிரச்சினை?”என்று வினவ.

சுந்தரி தான் நடந்ததைக் கூற…

சண்முகமோ, ” நான் வர முடியாது மா. ஆனால் விக்ரம் சென்னைக்கு தான் போறான். அவனோட போய் உன் ஃப்ரெண்ட் வீட்ல இறங்கிக்கோ. விக்ரம் பங்ஷன் முடிந்து, திரும்ப வரும்போது உன்னைக் கூப்பிட்டுப்பான்.” என்று அவளது வருத்தத்தைப் போக்க உடனடியாக தீர்வு கண்டுபிடித்தார்.

விக்ரமோடு கிளம்பியவள், விஸ்வரூபனது வீடு இருக்கும் ஏரியாவில் இறங்கிக் கொண்டாள்…

” ஃபோன் பண்ணுறேன் ராதிகா. டேக் கேர்.” என்று விட்டு விக்ரம் அவனது வேலையைப் பார்க்கச் சென்று விட்டான்.

ராதிகா அந்த வீட்டிற்குள் கூட நுழையவில்லை. வெளியே தான் எல்லோரும் இருக்க. ருக்குமணியை தூக்குவதற்கு ஏற்பாடு நடந்துக் கொண்டிருந்தது.

அனுவைப் பார்த்தவள் மெல்ல அவளருகில் சென்று, ” அனு…” என ஆறுதலாக அழைக்க.

இதுவரை எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவள், ராதிகாவைப் பார்த்ததும் அழுகை கட்டுக்கடங்காமல் பெருகியது.

அனுவோ, தான் அவளது வாழ்க்கையை தட்டிப் பறித்ததை நினைத்து அழுது கரைய… ராதாகாவோ, பாட்டியை நினைத்து அழுவதாக எண்ணி, ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள். ” அனு..‌. பாட்டி நம்மக் கூடத்தான் இருப்பாங்க. அழாதே.” என்றாள்.

அனு அழுவதைப் பார்த்த பெரியவர், ” தம்பி விஸ்வரூபா… உன் பொண்டாட்டிய பாரு. அழுதுக்கிட்டே இருக்கா. அவளை சமாதனப்படுத்து.” என்று தனது கட்டைக் குரலில் கூறினார்.

அவரது குரல் செவியில் நுழைய, அதிர்ச்சியாக தன் தோழியைப் பார்த்தாள் ராதிகா.

 அனன்யாவோ தலைக்குனிந்து நிற்க… விஸ்வரூபனும் அவ்விடத்திற்கு வந்தான்.

தர்மசங்கடமான சூழ்நிலை நிலவ…

அனன்யாவும், விஸ்வரூபனும் ,” ராது…” என்றழைக்க…

அவளோ, அனன்யாவின் கழுத்தில் மஞ்சள் மாறாமல் இருந்த தாலிக்கயிறைப் பார்த்ததுக் கொண்டே அங்கிருந்து அகன்றாள்.

அவளது கண்களில் வழிந்த கண்ணீர் பாதையை மறைக்க, தடுமாறிக் கொண்டே அவ்விடத்தை விட்டு அகன்றாள்.

 விக்ரம் வரும் வரைக்கும், அருகிலிருந்த பஸ் ஸ்டாப்பில் தனியாக அமர்ந்து கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள். அவளது காதல், அவளுடைய வீட்டில் யாருக்கும் தெரியாமலேயே போனது .

விஸ்வரூபனோ மனதிற்குள், ‘ ராதிகாவிற்கு எல்லாம் தெரிந்தது நல்லதுதான். என் மேல் உள்ள கோபத்திலாவது அவளுக்கென ஒரு வாழ்க்கையை அமைத்து கொள்ளட்டும் என்று நினைத்தான்.

நாட்களும் வேகமாக மறைய… அனன்யா ஏனோ தானோவென்று இருந்தாள். குழந்தை அதுபாட்டுக்கு வளர்ந்தது.

 ஒழுங்காக மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளாமல் அவளது உடல்நிலையைக் கெடுத்துக் கொண்டு இருந்தாள்.

வேண்டுமென்று செய்யவில்லை, ஆனால் அலட்சியமாக இருந்தாள்.

திடீரென்று ஒரு நாள் கிருஷ்ணனுக்காக காத்திருந்தவள் அவர் வந்ததும், ” மாமா… என்னோட ஃப்ரெண்ட்க்கு நம்ம காலேஜ்ல ஒரு சீட் அலார்ட் பண்ணுறீங்களா?” என்று தயங்கித் தயங்கிக் கேட்டாள்.

” அனு மா… நம்ம காலேஜுன்னு சொல்லிட்டு, அப்புறம் என்னமா தயக்கம். அது உன்னோட காலேஜ். யாரை வேணும்னாலும் சேர்க்கலாம், எத்தனை பேரு வேணும்னாலும் சேர்க்கலாம் சரியா…” என்றவர் அவளது தலையை வருட.

 கலங்கிய கண்களை சமாளித்துக்கொண்டு, ” சரி.” என்பது போல் தலையை ஆட்டினாள்.

” மாமா… ஆனால் என் பேரை சொல்லாமல், நம்ம சேலவர் டாக் மூலமாக , ஃப்ரீ கோட்டால ஏற்பாடு பண்ணுங்க.” என்று மெல்லிய குரலில் கூற…

தனது மருமகளை கூர்ந்துப் பார்த்தார் கிருஷ்ணன்.

அவரது பார்வையில், தடுமாறிய அனன்யா, ” மாமா… சிபாரிசில் சேர அவளுக்கு விருப்பம் இல்லை. அதான்…” என்று ஏதேதோ கூறி சமாளித்தாள்.

” சரி டா.” என்ற கிருஷ்ணனுக்கு, உள்ளுக்குள் சந்தேகமாக தான் இருந்தது. ‘ என்னைக்காக இருந்தாலும் உண்மையை மூடி மறைக்க முடியாது.’ என்று எண்ணிக் கொண்டு, அவ்விடத்தை விட்டு அகன்றார்.

“தேங்க் காட்.” என்று கடவுளுக்கு நன்றி கூறினாள் அனன்யா. ஆம் அவள் எப்படியாவது ராதிகாவை, இங்கே வர வைத்து, அவளையும், விஸ்வரூபனையும் சேர்த்து வைத்து விட்டு, தான் அவர்களது வாழ்க்கையில் இருந்து விலக வேண்டும் என்று எண்ணினாள்.

அவர்களது வாழ்க்கை விட்டு தான் விலக வேண்டும் என்று நினைத்தாள். ஆனால் இறைவனோ, இவ்வளவு நாள் அவள் பட்ட துன்பங்களே போதுமென அவரிடம் அழைத்துக் கொண்டார்.

தனது மாமாவின் சம்மதம் கிடைத்தவுடன்,’ ராதிகாவை ஒரு முறை தஞ்சாவூர் சென்று பார்த்தால் என்ன?’ என்று தோன்றி விட.

“தஞ்சாவூர் கோவிலுக்கு போகணும்னு ஆசையா இருக்கு அத்தை…” என்று ரஞ்சிதத்திடம் கூறினாள்.

” அப்படியா தங்கம். இரு ரூபனை கூட்டிட்டு போக சொல்றேன். அப்படியே பக்கத்துல உள்ள கோயிலுக்களுக்கும் போயிட்டு வாங்க.” என்றவர் உற்சாகமாக திட்டம் தீட்டினார்.

எப்படியாவது தன் மகனும், மருமகளும் சந்தோஷமாக வாழ்ந்தால் போதும் என்று நினைத்தார். அவரது கோபமெல்லாம் சில நாள் தான் இருந்தது. அதுவும் அவரது மாமியார் மேல் மட்டுமே. அவரும் இறந்து விட… இறந்தவர் மேல் கோபப்பட்டு என்ன ஆகப் போகிறது என்று விட்டுவிட்டார்.

விஸ்வரூபன் வீட்டிற்கு வந்ததும் ரஞ்சிதம், “தம்பி… அனு தஞ்சாவூர் கோவில் பார்க்கணும்னு ஆசைப்படுறா… போயிட்டு வாங்க.” என்றார்.

அங்கு ஹாலில் டிவியில் கண் வைத்துக் கொண்டு, காதை இவர்கள் பேச்சில் வைத்துக் காத்திருந்தாள் அனன்யா.

அவளை ஆராய்ச்சியாக ஒரு பார்வை பார்த்தவன் தன் தாயிடம், ” சரி மா.” என்று விட்டு அவனது அறைக்கு சென்று விட்டான்.

‘ ராதிகாவை பார்க்கவே கூடாது.’ என்று கடவுளுக்கு அவசர வேண்டுதல் வைத்து விட்டு, ஊருக்கு செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தான்.

ஆனால் அவளை சந்தித்ததும் அல்லாமல், அவளது தவிப்பைக் கண்கொண்டு பார்த்து விட்டும் தான் வந்தான்.

ராதிகா மட்டும் தவிக்கவில்லை. அனன்யாவும் தான் தவித்துப் போனாள்.

ராதிகாவின் பாராமுகம் கண்டு தவித்தவள், ஹிஸ்ட்ரியா பேஷண்ட் போல கத்த… அவளை சமாளித்து சென்னைக்கு கூட்டி வருவதற்குள் விஸ்வரூபனுக்கு போதும் போதுமென்று ஆனது.

சென்னை வந்ததும் முதல் வேலையாக கௌரியிடம், ” அத்தை… அனு எப்படி இருக்கா? அவ ஹெல்த் கண்டிஷன் எப்படி இருக்கு. ரொம்ப டென்ஷனாகுறா. அவளது பிகேவியர், சம்திங் டிஃபரெண்ட்.” என்று சொல்ல…

 கௌரி ஒரு டாக்டர். அதனால் அனன்யாவுடைய உடல்நிலையும்,, மனநிலையும் நன்கு புரிந்தது. அதைப் பற்றி பெரிதாக கூறாமல், ” பி.பி கொஞ்சம் அதிகமாக இருக்கு. டேப்ளேட் கொடுத்துருக்கேன்.” என்று மட்டும் கூறினாள்.

” ஓ…” என்ற விஸ்வரூபன் அமைதியாக சென்று விட்டான்.

அனு அனிமீக்காக இருக்கிறாள், பிரசவத்தின் போது ஓவர் ப்ளீடிங் ஆகாமல் இருக்க வேண்டும் என்பதை சொல்லவில்லை. எல்லோரையும் ஏன் பயமுறுத்த வேண்டும், தான் கவனமாக பார்த்துக்கலாம் என்று நினைத்திருந்தவள், அனுவிடம் மட்டும், ” பி.பி ரைஸ்ஸாகக் கூடாது. டேப்ளெட்டெல்லாம் ஒழுங்கா எடுத்துக்கோ. பெயின் லைட்டா வரும் போதே சொல்லு.” என்றெல்லாம் கூற…

அதை காற்றில் பறக்கவிட்டாள் அனன்யா.

கௌரியின் பதற்றத்தை உணர்ந்துக் கொண்டாள். அவளுக்கு வாழும் எண்ணம் துளிக் கூட இல்லை.

கிருஷ்ணனிடம் சென்று, ” மாமா… எனக்கு பிரசவத்துல ஏதாவது ஆனால், ராதிகாவை மாமாவுக்கு கட்டி வைச்சிடுங்க.” என.

” அனு… இப்படி எல்லாம் பேசாதே. உனக்கு ஒன்னும் ஆகாது. ஆமாம் யார் அந்த ராதிகா?” என்று கிருஷ்ணன் வினவ.

” ராதிகா தான் மாமா லவ் பண்ற பொண்ணு. அவளைத் தான் நம்ம காலேஜ்ல சேர்க்க கேட்டேன்.” என்று அழுகையை அடக்கிக் கொண்டு கூற.

” ஓ… நீ எதையும் நினைச்சு குழம்பாத. அந்த பொண்ணு ரூபனோட பாஸ்ட். நீ தான் அவன் லைஃப் புரியுதா?” என்ற கிருஷ்ணன் அங்கிருந்து சென்று விட்டார்.

அனன்யாவோ, ‘எப்படியோ மாமாவுக்கு விஷயம் தெரிந்தால் போதும்.’ என்று நினைத்தவள், நிம்மதியைடைந்தாள்.

கௌரி பயந்தது போலவும், அனன்யா எதிர்ப்பார்த்து போலவுமே, ஹைபர் டென்ஷன் அண்ட் ஓவர் ப்ளீடிங்… குழந்தையை பெற்றுக் கொடுத்தது விட்டு, வாழ்க்கையில் போராடியவள், உயிருக்குப் போராடாமல் இறைவனடி சென்று விட்டாள்.

இன்று…

தன் தோழியை நினைத்து கண் கலங்கி நின்ற ராதிகாவை பார்த்த விஸ்வரூபன், ” உன்ன கஷ்டபடுத்தக் கூடாதுன்னு தான் நான் நினைத்தேன். ஆனாலும் பெரிய கோவிலில் கலங்கிய உன் முகத்தைப் பார்த்ததும், என் உயிரே போய்டுச்சு.

என்னுடைய உணர்வுகளை கூட வெளிக்காட்ட முடியவில்லை.

நான் வருத்தப்பட்டால், என் வாழ்க்கை இப்படி ஆயிடுச்சே என்று அம்மா வருத்தப்படுவார்கள். ஏற்கனவே பாட்டி மேல கோபத்துல இருந்தாங்க.

அனுவோ, ஏற்கனவே குற்றவுணர்ச்சியில் தவிச்சிக்கிட்டு இருந்தா, அத்தையோ தான் மட்டுமில்லாமல், தன் மகளும் இப்படி வாழ்க்கையை தொலைச்சிட்டு இருக்காளே என்று கலங்கித் தவிச்சிட்டு இருந்தாங்க.

இப்படி இருக்க, என் உணர்வுகளை வெளிக்காட்டினால் யாரும் தாங்க மாட்டாங்க.

அதான் என்னுடைய உணர்வுகளையெல்லாம் எனக்குள்ளே புதைத்துக் கொண்டேன்.

 உயிரிலே தளும்பும் உன் நினைவுகளை வெளிக்காட்டாமல், எனக்குள்ளே அடக்கிக் கொண்டேன். அந்த ஒரு வருடமும் எனக்கு நரகம் தான்.

என்னுடைய அறையில் மட்டுமே, நான் நானாக இருந்தேன். எனக்குத் துணை உன்னுடைய குரல் மட்டுமே. அதுவே எனக்கு பழகிப் போனது. அனுவும் வாழ விருப்பம் இல்லாமல் இந்த உலகத்தை விட்டுப் போய்ட்டா. குழந்தை மட்டுமே என் உலகமாக மாறிப்போனது.

தனக்கு பெண் குழந்தை தான் என்று அவளுக்கு தெரிந்ததால், அம்மா, அப்பாவிடம், “அவந்திகா.” என்று தான் வைக்கணும் என்று சொல்லியிருந்தா… அதான் அவந்திகான்னு பெயர் வச்சோம். கூப்பிடுவது அம்முக்குட்டி.

அம்முக்குட்டி நான் வீட்டுக்கு வந்துட்டா, என்னை விட்டு நகரவே மாட்டா… அவளுக்கும் உன் பாட்டுனா ரொம்ப பிடிக்கும்.” என்றவன் அன்றைய நாளுக்கு சென்று விட்டு வந்தான்.

 ” பழசெல்லாம் இப்போ எதற்கு விஷ்வா? நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும் நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். ” என்று ஆறுதலாக கூற.

” ஆனாலும் ராதா. நான் உன்னோட காதலுக்கு தகுதியானவன் இல்லை. நான் கொஞ்சம் செல்ஃபிஷ் தான் இல்லையா? இல்லைன்னா பாட்டி பேச்சைக் கேட்டுட்டு உன்னை விட்டுக்கொடுத்து இருப்பேனா…” என்று குற்றவுணர்வுடன் வினவ .

அவனுக்காக வரிந்துக் கட்டிக்கொண்டு வக்காலத்து வாங்கினாள் ராதிகா.

” என்னை சும்மா ஒன்னும் விட்டுக் கொடுக்கவில்லை. என்னுடைய நலனுக்காக மட்டும் தான் நீங்க விட்டுக் கொடுத்தீங்க. நான் கஷ்டப்படக்கூடாது. உங்க பாட்டியோட சாபம் பலிச்சுடக் கூடாது, என்று உங்களை கஷ்டப்படுத்திக்கிட்டீங்க. உங்க காதலை அடைய நான் கொடுத்து வச்சுருக்கணும். எனக்கு உங்களையும் நல்லாத் தெரியும். அனுவையும் நல்லாத் தெரியும். ஏதோ தவிர்க்க முடியாத சூழ்நிலையால் தான் உங்கள் திருமணம் நடந்திருக்கும் என்று என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது. என்னைப் பார்த்தால், உங்க இருவருக்கும் தர்மசங்கடமா இருக்கும் என்று தான் விலகிப் போனேன்.” என்றாள்.

இப்போது விஸ்வரூபனின் முகத்தில், தனது காதலைப் புரிந்துக் கொண்ட மனைவியை எண்ணி பெருமிதம் வழிந்தது.

” சரி வாங்க கீழே போகலாம். எல்லோரும் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க.”என்ற ராதிகா வேகமாக இரண்டு எட்டுத் தான் எடுத்து வைத்திருப்பாள்.

பிறகு வேகமாக திரும்பி வந்தவள், அவள் பின்னே வந்த விஸ்வரூபனின் மேல் மோதி நின்றாள்.

” ஹே… ராதா பார்த்து… ” என்றான் விஸ்வரூபன்.

” விஷ்வா.. ஆதி கிட்ட நீங்க ஏன் சண்டை போடுறீங்க. அவன் என்ன தப்பு பண்ணான். ” என்று ராதிகாவை மிரட்ட.

அவனோ ஒன்றும் கூறாமல் அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.

” விஷ்வா நான் சொல்றதை கேட்பீங்களா…” என்று தன்மையாக வினவினாள் ராதிகா.

“முதல்ல என்ன விஷயம். அதை சொல்லு.” என்று அவளை இறுக்கமாக பார்க்க…

” அது வந்து நம்ம… இல்லை உங்க வீட்டுக்கு வர்றதுக்கு பர்மிஷன் தரணும்.” என்று தயங்கித் தயங்கிக் கூறினாள் ராதிகா.

அவளைப் பார்த்து முறைத்த விஸ்வரூபன், ” உதை வேணுமா? அது நம்ம வீடு.” என்று முதலில் திருத்தியவன் பிறகு, ” ஆதி விஷயம் வேறு. அது நான் மட்டுமா முடிவெடுக்க முடியாது. வீட்டுக்கு வர்றதுக்கு அத்தைக் கிட்ட தான் கேட்கணும். ஆனால் நான் சண்டை போட மாட்டேன் என்று வேணும்னா உறுதி தரேன்.”என்று விட.

“கௌரி மா கிட்ட நான் சொல்றேன் அவங்க புரிஞ்சுப்பாங்க. யாரோ செஞ்ச தப்புக்கு ஆதவனை ஏன் தண்டிக்கனும். ” என்றாள் ராதிகா.

” நீ சொல்றதும் சரி தான். கொஞ்சம் பொறுமையா யோசிச்சு இருந்திருந்தா, நம்ம அனுவும் நம்மக் கூடவே இருந்திருப்பா” என்று விஸ்வரூபன் கண்கலங்க.

” சரி விடுங்க விஷ்வா. முடிஞ்ச விஷயத்தைப் பற்றி பேச வேண்டாம். ஆனால் குழந்தையை பற்றி எப்படி ஆதிக்கு தெரியும்.”

” அது கல்யாணம் முடிஞ்சு கெஸ்ட் ஹவுஸ்க்கு தான் அவங்க போனாங்க. மே பி வாட்ச்மென் சொல்லியிருக்கலாம். ஆக்ஸிடென்ட் ஆனதையே வாட்ச்மேன் ஃபோன் பண்ணி தான் அவங்களுக்கு தெரியவந்தது. அதுக்கப்புறம் எனக்கு தெரியவந்தது.

அனுவைப் பார்க்க, பலமுறை வீட்டுக்கு வந்திருந்தான். நாங்க தான் அனுமதிக்கவில்லை. ஒருமுறை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்லும்போது அவள் மாசமாக இருப்பதை பார்த்து விட்டான். அதற்குப் பிறகு அனு எப்போ வெளியே போனாலும் வந்திருவான். அனு அந்தளவுக்கு எதையும் கவனிக்க மாட்டாள். அவளுக்கு பிறகு, குழந்தையை வெளியே அழைத்து வரும் போது எப்படியாவது பார்த்து விடுவான்.” என்றவன் அமைதியாக.

” சரி விஷ்வா… நீங்க ஆதிக்கிட்ட கோபப்பட மாட்டீங்கள்ல” என்று மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்ள…

” அது… நீ நடந்துக்கிறதில் தான் இருக்கு.”

” என்ன சொல்ற விஷ்வா?”

” அதுவா… எனக்கு இப்போ ஒரு கிஃப்ட் வேண்டும். அது தந்துட்டினா நீ சொல்றபடியெல்லாம் நான் கேட்குறேன்.” என்று கள்ளச்சிரிப்புடன் வினவ.

‘பார்வையே சரியில்லையே.’ என்று நினைத்துக்கொண்டே, ” என்ன கிஃப்ட்.” என்று வினவினாள்.

” இறுக்கி அணைச்சு ஒரு உம்மா குடு.” என்றான் விஸ்வரூபன்.

” ஹாங்.” என்று அதிர்ந்தவள்,” ஊகூம்.” என்று முகம் சிவக்க கூறினாள்.

அந்த பிடிவாதக்காரனோ, தான் நினைத்ததை சாதித்து தான் விட்டான்.

முகம் முழுக்க, பூரிப்புடன் கீழே இறங்கி வந்த இருவரையும் பார்த்தே அங்கிருந்தவர்களுக்கு புரிந்தது.

” வாங்க மாப்பிள்ளை சாப்பிடலாம்.” என்று சண்முகம் அழைக்க.

” எனக்குப் பசிக்கலை. லஞ்சே சாப்பிட்டுக்கிறேன்.” என்றான் விஸ்வரூபன்.

” அது வந்து மாப்பிள்ளை… மதிய சாப்பாடு ரெடியாயிடுச்சு.” என்று தயங்கிக் கொண்டே கூறினார்.

அப்போது தான் மணியைப் பார்த்தான். அசடு வழிய ராதிகாவைப் பார்க்க… அவளோ முகம் சிவக்க தலைக்குனிந்து இருந்தாள்.

” ராது மா. மாப்பிள்ளையை கூட்டிட்டு வந்து உட்கார்.” என்று சுந்தரி கூற.

ஒரு வழியாக அனைவரும் உணவருந்த சென்றனர். ” அப்போ… நான் கிளம்புறேன்.” என்றான் ஆதவன்.

” ராதா… உன் ஃப்ரெண்ட் ஓவரா பண்றான். வந்து ஒழுங்கா சாப்பிட சொல்லு.” என்றான் விஸ்வரூபன்.

அவன் அப்படி சொன்னதிலே மகிழ்ந்த ஆதவன், ராதிகாவின் மறுபக்கத்தில் அமர்ந்தான்.

ஒருபக்கம் உயிரானவனிருக்க மறுபக்கம் உற்ற தோழனிருக்க நிறைவுடன் உணவருந்தினாள் ராதிகா.

சுந்தரியும், சண்முகமும் தன் மகளின் முகத்தில் தெரிந்த நிறைவிலே நெகிழ்ந்துப் போயினர்.

இவர்களது மகிழ்ச்சி குன்றாமலிருக்க தஞ்சை பெருவுடையார் அருள் புரிவார்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!