உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -8

4.9
(7)

நினைவு- 8

அன்று

” ஹேய் பர்த்டே பேபி… எதுக்கு அழற? கண்ணுல தண்ணி நிக்குது பாரு.”

” நான் அழல அனு. கண்ணு வேர்த்துருச்சு.” என்று கண் சிமிட்டி ராதிகா சிரிக்க…

” இதோடா… என்னோட சேர்ந்த ஒரு வாரத்திலேயே நல்லா பேசக் கத்துக்கிட்ட.” என்று அனுவும் சேர்ந்து நகைத்தாள்.

நாட்கள் விரைந்தோட, இருவருடைய நட்பும் இறுகியது.

இன்னும் அனுவின் வீட்டில், யார் யார் இருக்கிறார்கள் என்று ராதிகாவிற்குத் தெரியாது. அனுவின் வீட்டிலிருந்து, ஃபோன் கால் வந்தால், ராதிகா அவளுக்கு தனிமைக் கொடுத்து விட்டு வெளியே சென்று விடுவாள்.

ஆனால் ராதிகாவின் பெற்றோர் அழைக்கும் போது, அனன்யா வெளியே செல்ல மாட்டாள். ஓரிரு வார்த்தை அவர்களிடம் பேசி விட்டு, அங்கேயே அமர்ந்து வேறு வேலை செய்ய ஆரம்பித்து விடுவாள்.

ஏனெனில் அப்படி வெளியே போக வேண்டுமென்றால் அடிக்கடி போற மாதிரி இருக்கும். 

ராதிகாவின் அம்மா, தூங்குவார்களா என்றுக் கூட தெரியாது. ராதிகா வேலையை விட்டு வந்த உடனே ஃபோன் வந்துவிடும். காலையில் எழுந்தவுடன் ஒரு முறை, அப்புறம் இவர்கள் கல்லூரிக்கு கிளம்புவதற்கு முன்பு ஒரு முறை, என்று இதேப் போல் அடிக்கடி ஃபோன் வந்து கொண்டே இருக்கும்.

ராதிகாவும் சலிக்காமல் பேசுவாள். அதைப் பற்றி ராதிகாவிடம் அனன்யா வினவ, அவள் முகம் மாறி விட்டது. அதற்குப் பிறகு அவளும் கேட்பதில்லை. 

ஸ்டெடிஸ் ஒன்றும் அவ்வளவு கடினமாக இல்லை. ஜாலியாகவே போய்க் கொண்டிருந்தது.

அன்று காலேஜில் இருந்து இருவரும் நடந்து வந்துக் கொண்டிருக்க… அனு தான் ஆரம்பித்தாள். ” ஏய் ராது‌. நானும் வெளில போகலாம்னு ஆறு மாசமா சொல்லிட்டு இருக்கேன். இந்த வாரம், அடுத்த வாரம் என்று தள்ளிப்போட்டுட்டே இருக்க.” என்று குறைபட…

” அடியே போன வாரம் தானே, உங்க ஃபேமிலியோட போயிட்டு வந்த. அப்புறம் என்னடி.”

“அது…” என அனு ஏதோக் கூற வர…

“என்ன அது போன வாரம்… இது இந்த வாரம்… என்று சொல்லப் போறீயா?” என்று ராதிகா கிண்டலடிக்க…

“அது வேறன்னு சொல்ல வந்தேன். உன்னோட போகணும்னு ஆசையா இருக்கு டி. அதுவும் அந்த இடம் செம்ம அழகு. போற வழியெல்லாம் இயற்கை அழகு கொஞ்சுது தெரியுமா. அருவில நல்லா ஆட்டம் போடலாம். போன தடவை சேஞ்ச் பண்ண வேற ட்ரெஸ் எடுத்துட்டு போகாதால குளிக்கலை‌.” என பாவமாகக் கூற‌.

 ” ஓகே… இந்த சண்டே உனக்காக நீ சொன்ன இடத்துக்கு நம்ம போகலாம் சரியா. அதுக்காக இப்படி கேவலமாக ஆக்ட் பண்ணாதே சகிக்கலை.” என அனுவை வாரினாள் ராதிகா.

அனு போகணும் என்று ஆசைப்பட்ட இடம் பூடா வாட்டர் ஃபால்ஸ் அண்ட் ரெசார்ட். அது ஹீல்ஸ் ஸ்டேஷன். இவர்கள் இருக்கும் இடத்திலிருந்து ஒன்றரை மணி நேர பஸ் பயணம்.காலையில் நேரத்தோடு எழுந்து ராதிகாவும், அனுவும் அறையில் இருந்த இண்டேக்சன் ஸ்டவில் இலகுவான சமையல் செய்து எடுத்துக் கொண்டனர் அங்கு உணவு அவ்வளவாக இருக்காது.

அங்கு செல்லும் வழியில் நிறைய வ்யூவ்பாய்ன்ட் இருக்க… அங்கெல்லாம் நின்று இருவரும் ஃபோட்டோ எடுத்துக் கொண்டனர். ஹார்ஸ்ரைடிங்கு வர மாட்டேன் என்ற ராதிகாவை வற்புறுத்தி அழைத்துச் சென்றாள் அனன்யா.

இறுதியாக அங்கிருந்த அருவிக்கு செல்ல… ஒத்தையடி பாதையாக வழி இருக்க… ஒருவர் பின் ஒருவராக நடந்துச் சென்றனர். அனு, ராதிகாவின் கையைப் பிடித்துக் கொண்டே சென்றாள்.

ராதிகாவிற்கு இதையெல்லாம் ரசிப்பதற்கு இரண்டு கண்கள் போதவில்லை. கரடு முரடான பாதையில் கூட கவனம் வைக்காமல், தோழியின் கைப்பிடி தந்த தைரியத்தில், அருகில் சலசலவென ஓடிக்கொண்டிருந்த ஓடையை ரசித்துக் கொண்டு வந்தாள்.

ஹோ…. என்ற அருவி சத்தத்தில், மனதில் உற்சாக ஊற்று பெருக்கெடுத்தது. இருவரும் நன்றாக ஆட்டம் போட்டனர். ஒரு வழியாக குளித்து முடித்து விட்டு ரெஸ்ட் ரூமிற்குச் சென்று டிரஸ் சேஞ்ச் செய்துக் கொண்டு வந்தவர்கள், எடுத்து வந்திருந்த உணவினை சாப்பிடத் தொடங்கினர்.

 இனிய சூழலில் மனம் மயங்கி இருக்க, அதில் அபஸ்சுவரம் போல் ராதிகாவின் ஃபோன் அடித்தது. அதை பார்த்ததும் முகம் இறுக அமைதியாக இருந்தாள் ராதிகா.

தன் அம்மாவிடம் சொல்லாமல் வந்த தன்னுடைய மடத்தனத்தை நினைத்து ராதிகா நொந்துக் கொண்டிருக்க… 

 மீண்டும், மீண்டும் அழைப்பு வந்து கொண்டே இருந்தது. பெருமூச்சு விட்டுக் கொண்டே எடுத்தாள்.

” ஹலோ மா… எப்படி இருக்கீங்க? நான் நல்லா இருக்கேன்.” என.

” ஏன் டா… இவ்வளவு நேரமா ஃபோன் எடுக்கலை. இன்னைக்கு லீவாச்சே ஹாஸ்டலில் தானே இருப்ப? என்று ஃபோன் பண்ணேன்.” என்றவாறே சுந்தரி சுற்றுப்புறத்தை பார்த்தவள் யோசனையாக ராதிகாவைப் பார்த்து பேச்சை நிறுத்த…

” அதும்மா… அனு ரொம்ப நாளா அவுட்டிங் போகணும்னு சொல்லிக் கிட்டே இருந்தா. அதான் இன்னைக்கு வெளியே வந்து இருக்கோம்.” என்றுக் கூற…

” என் கிட்ட சொல்லி இருக்கலாமே. சரி டா… என்ன தலையெல்லாம் விரிச்சுப் போட்டுருக்க. தண்ணீல ஆடுனீயா. ஜாக்கிரதை டா. அனுப் பொண்ணையும் கேட்டேன் சொல்லு.”என்று அரை மணி நேரம் அறிவுரை கூறி விட்டு தான் ஃபோனை வைத்தார்.

இவ்வளவு நேரம் இருந்த மகிழ்ச்சி மறைந்து விட்டது. 

 அனன்யா தான் அவளை சமாதானப்படுத்த, ” ஏன் ராது ஆன்ட்டி இப்படி பிஹேவ் பண்றாங்க? இது அப்நார்மலா தெரியுது. எப்பவுமே இப்படித் தானா… ஐ கான்ட் டைஜஸ்ட். ஆனால் நீ ரொம்ப பொறுமைசாலி.” என.

எங்கேயோ பார்வையை பதித்தபடி ராதிகா, ” அனு… முன்னெல்லாம் அவங்க இப்படி இல்ல. எல்லோரையும் போலத் தான் இருந்தாங்க. இரண்டு வருஷத்துக்கு முன்பு எங்க வீடு எப்படி இருக்கும் தெரியுமா? கலகலன்னு இருக்கும்.

நானும், எங்க அக்காவும் சேர்ந்துட்டா வீடே ரணகளமாயிடும். ”

“என்ன ராது சொல்லுற… உனக்கு அக்கா இருக்காங்களா… எங்க இருக்காங்க? அவங்களைப் பத்தின பேச்சே இது வரைக்கும் வரலையே.” என அதிர்ச்சியாக அனு வினவினாள்.

“இருந்தாங்க. பட் நவ் ஷீ இஸ் நோ மோர்.”

ஓ… சாரி டி.”

” ப்ச் இப்ப எதுக்கு சாரியெல்லாம். எங்க தலையெழுத்து.” என்று சொல்லி விட்டு அமைதியானாள் ராதிகா.

“அக்கா பேரு என்ன ராது? என்னாச்சு அவங்களுக்கு?”

” அவந்திகா… அது தான் அக்கா பேர். நான் டென்த் படிச்சிட்டுருந்தேன். அக்கா காலேஜ் செகண்டியர். எனக்கு லீவ் விட்டுட்டா போதும், அக்காவை கூப்பிட்டுக்கிட்டு பெரிய கோவிலுக்கு போயிடுவேன்.அந்த கோவிலில் உள்ள இண்டு, இடுக்கு எல்லாமே அத்துப்படி. எப்ப எங்களுக்கு போரடிக்குதோ கோவிலுக்கு போயிடுவோம். அங்க இருக்கவங்களுக்கு எங்களைத் தெரியாமலே இருக்காது‌.

ஐப்பசி சதயத் திருவிழாவுக்கு போகணும்னு ப்ளான் பண்ணிட்டு இருந்தோம். ராஜராஜ சோழன்னா எங்களுக்கு அப்படி ஒரு க்ரேஸ். ஸ்கூல், காலேஜ் எல்லாம் லீவ். 

அன்னைக்கு கிளம்பும் போது, திடீரென்று எனக்கு போக முடியாத சூழ்நிலை. அவ மட்டும் கிளம்ப, அவ போகக் கூடாதுன்னு நான் அழுது ரகளைப் பண்ணேன். அக்கா கேட்கலை. பிடிவாதமா கிளம்பிப் போனவ திரும்ப வரலை. அங்கேப் போனால் நேரங்காலம் பார்க்காமல் நாங்க இருந்துட்டு தான் வருவோம். அன்னைக்கு அவ திரும்பி வரவே இல்லை‌ எப்பவும் போல வந்துடுவா என்று அலட்சியமாக இருந்துட்டோம்.

அப்புறம் பார்த்தா அவளுக்கு ஆக்சிடென்ட் ஆகியிருந்திருக்கு. பக்கத்துல இருந்த ஹாஸ்பிடல்லுக்கு கூட்டிட்டு போயிட்டாங்க.

அங்கே ஃபர்ஸ்ட் எய்ட் மட்டும் செய்துட்டு, பணம் கட்டறதுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்திருக்காங்க. எங்களுக்கு தகவல் தெரிஞ்சு நாங்க அந்த ஆஸ்பத்திரிக்கு போறதுக்குள்ள அக்காவுக்கு கிரிட்டிக்கல் ஆயிடுச்சு. கையில காசும் இல்லை. நாங்க எப்படியும் கட்டிடுவோம் என்று சொன்னதுக்கு அந்த மேனேஜ்மென்ட் ஏத்துக்கலை.

என்ன செய்யறதுன்னு தெரியாமல் அம்மாவும், அப்பாவும் தெகைச்சுப் போய் நின்னாங்க.

அம்மா தான் வீட்டிலிருக்கும் நகையை எடுத்துட்டு வரச் சொன்னாங்க.உங்க கல்யாணத்துக்காக வாங்குன நகை இப்போ எதுக்கு பயன்படுது என்று அழுதுட்டே சொன்னாங்க… 

அப்பா தான் இப்போ வாயை மூடப் போறீயா என்னன்னு திட்டிட்டு, போய் எடுத்து வந்தார்.

பட் கடவுளுக்கு கண்ணில்லை அவளை எடுத்துக்கிட்டு, எங்களை கொஞ்சம் கொஞ்சமாக சாகடிக்கிறாரு.

அன்னைக்கு மட்டும் நான் அக்காக் கூட போயிருந்தா, இல்லை நான் போகக்கூடாது என்று அழுததற்காக அவப் போகாமல் இருந்திருந்தா, இல்லை பொண்ணை காணுமே என்று எங்க அப்பா, அம்மா ஃபோன் பண்ணியிருந்தா, இப்படி எத்தனையோ இருந்திருந்தால், அக்கா உயிரோட இருந்திருப்பான்னு தோணும்.

எனக்கே இப்படி தோணும் போது, எங்க அம்மாவை கேட்கவா வேண்டும்.

அன்னையிலிருந்து நான் ஸ்கூலுக்கு போனாலும் திரும்பி வரும் வரை வாசலிலே நின்னுட்டே இருப்பாங்க. டியூஷன், எக்ஸ்ட்ரா கிளாஸ் எதுக்கு போகணும்னு சொன்னாலும் அப்பாவை தான் தொந்தரவு செய்வார்.

அவரும் அம்மாவுடைய மனநிம்மதிக்காக‍, அவருடைய உடல் நிலையைக் கூட பொருட்படுத்தாமல் எப்போ, எங்க போகணும்னாலும் அழைச்சிட்டு போவார். அதுக்காகவே எந்த ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்கும் போக மாட்டேன். அனாவசியமாக எங்கேயும் போகணும் நினைக்க மாட்டேன். 

ரொம்ப நாள் வரை பெரிய கோவிலுக்கு போகவில்லை. அங்கப் போனா அக்கா நியாபகம் வந்துடும். அப்புறம் வீட்டிலேயே இருக்கிறது, ரொம்ப இரிட்டேட்டிங்கா இருக்க, அதுக்கப்புறம் கோவிலுக்கு போக ஆரம்பிச்சேன்.

நானும், எங்கப்பாவும் அம்மா போக்குக்கே போயிட்டு இருப்போம். நான் இரண்டு விஷயத்துக்காக தான் அவங்களை எதிர்த்துப் பேசியிருக்கேன்.

ஒன்னு கோவிலுக்கு போகறது, இன்னொன்னு என்னுடைய கனவை நிறைவேற்றுவதற்காக இங்க வந்தது.

கனவுன்னா சின்ன வயசிலருந்து டாக்டராகணும்னு இல்லை.எங்க அக்காவுக்கு ஆக்சிடென்ட் ஆனதிலிருந்து தான் ஒரு வெறி. எப்படியாவது டாக்டராகணும். நம்மாலான உதவிகளை தேவைப்படுற மக்களுக்கு செய்யணும்‌. அப்படின்னு நினைச்சிட்டு, அந்த உத்வேகத்தில் இவ்வளவு தூரம் வந்துட்டேன்.

ஆனா அங்க இருந்துட்டும் எங்க அம்மா புரோடெக்ட் பண்ணும் போது, என்னுடைய இயல்பு ரொம்ப பாதிக்கப்படுது. ஆனால் அதைத் தடுக்கவும் முடியாது.

எனக்குள்ளே வச்சிக்கிட்டு மூச்சு முட்டுது. இப்போ உன் கிட்ட சொன்னதும் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கு. ‘என்று அவளது கதையை ராதிகாக் கூறி முடிக்க.

” என்ன சொல்றதுன்னே தெரியலை ராது. அம்மாவ நினைச்சாலும் பாவமா தான் இருக்கு. அவங்க மனசுல குற்ற உணர்ச்சி இருக்கும். அவங்களை நீங்க சரியா கவனிக்கலையோ தோணுது. இப்படியே விட்டா டிஃப்ரஷன்ல கொண்டு போய் விட்டுடும். சைக்யாட்ரிஸ்ட்டுக் கிட்டே கவுன்சிலிங் போனால் ஃபீல் பெட்டர்.

“நான் சொல்லிப் பார்த்துட்டேன் கேட்கலை.” என்று ராதிகா பெருமூச்சு விட…

” ஓகே ராது. நீ கவலைப்படாதே. நான் அம்மாக்கிட்ட பேசுறேன். ” என்று அனன்யா ஆறுதல் அளிக்க…

அவளது ஆறுதலான பேச்சில் நிம்மதியானாள் ராதிகா.

இன்று… 

” சரி விடு ஆதி. ஈவினிங் பேசலாம். வா இப்போ கிளாஸுக்குப் போகலாம்.” என்று கூறிய ராதிகா, அவனது தேவதையின் நினைவில் இருந்து தற்காலிகமாக மீட்டெடுத்தாள்.

ஒரு வழியாக அன்றைய வகுப்பு முடிந்ததும்‍, என்னோட ட்ரீட் என்று, பிரபல ஹோட்டலுக்கு ராதிகா அழைக்க.

” அதெல்லாம் வேண்டாம். காஃபி மட்டும் போதும்.” என்று ஆதி கூறி விட…

அரை மனதாக, ஆதியுடன் அவர்களது கல்லூரிக்கு பக்கத்தில் இருந்த காஃபி ஷாப்புக்கு சென்றாள்.

பெரிய, பெரிய காலேஜுக்கு பக்கத்தில் அங்கு படிக்கும் மாணவர்களை கவருவதற்காக உருவாக்கிய காஃபி ஷாப். காஃபியில் உள்ள அத்தனை வகைகளும் இருந்தது. ஓப்பன் ப்ளேஸில் குடைக்கு கீழ் சேர் போட்டு இருந்தது. சுற்றிலும் மரம் கொடி இருக்க. காற்று ரம்மியமாக வீசியது.

“ஆதி… ஜூஸ் ஆர்டர் பண்ணவா.” என்று ராதிகா வினவ.

” இல்ல எனக்கு வேண்டாம். எனக்கு காஃபி மட்டும் போதும். வித்தவுட் சுகர். நான் இன்னைக்கு இனிப்பு சாப்பிட மாட்டேன்.”.” என்றுக் கூற…

அவன் சொன்னது போல, அவனுக்கு சொல்லி விட்டு, தனக்கு கூல் காஃபி ஆர்டர் கொடுத்து விட்டு, அவனை ஆழ்த்துப் பார்த்தாள்.

‘அவளுக்கு அவனிடம் தெரிந்துக் கொள்வதற்கு நிறைய இருந்தது. முதலாவது, முக்கியமானது இன்று மதியம் லஞ்ச் பிரேக்கில் அவன், நாங்கள் என்று சொன்னது, யார் என்று தெரிந்துக் கொள்ள வேண்டும்.’ என்று நினைவுத்தவள், ” ஆதி… உன்னைப் பத்தி சொல்லு. உங்க வீட்ல யார், யார் இருக்குறாங்க. ” 

” இப்போதைக்கு நானும், எங்கப்பா, அம்மா மட்டும் தான். இதுவே போன வருஷம் கேட்டிருந்தீன்னா, எனக்கு ஒரு அண்ணன் இருக்கிறான், என்னுடைய முதல் தோழன் என்று சொல்லிருப்பேன். இன்றைக்கு தான் அவனுக்கு நினைவுநாள்.” என்று மரமரத்தக் குரலில் கூறினான்.

” என்ன ஆதி சொல்லுற… இன்னைக்குத் தானா…”என்று தடுமாறியவள், ” ஐயம் எக்ஸ்ட்ரீம்லி சாரி ஆதி. உன்னை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேனா.”

” அதெல்லாம் இல்லை ராதிகா. எனக்கு என் மனசுல உள்ளதை, யார் கிட்டயாவது ஷேர் பண்ணிக்கிட்டா, கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்னு தோணுது.

ஆஸ் யூஸ்வல் பணக்கார பேரன்ட்ஸ் போலத் தான் என்னுடைய பேரன்ட்ஸும். 

இரண்டு பேருமே டாக்டர்ஸ்‌. பணத்துக்குப் பின்னாடி போக, நானும், அண்ணனும் வேலைக்காரர் வசம் தான் வளர்ந்தோம்.” என்றவன் சற்று நேரம் அவனது அண்ணனின் நினைவில் இருக்க.

” ஆதி… உன் பேரன்ட்ஸ் டாக்டர்ஸ். சோ அவங்க நேரங்காலம் பார்க்காமல் வேலைப் பார்க்க வேண்டியிருக்கும். விடு ஆதி. உனக்குத் தெரியாததா?

“அது சரி தான் ராதிகா. அவங்களுக்கு ஹாஸ்பிடல் முக்கியமாக இருந்தாலும், வீட்டுக்கும் வரும் போது கூட எங்களை கவனிப்பது கிடையாது. அதனால நானும், எங்க அண்ணனும் எங்களுக்குன்னு தனி உலகம் உருவாக்கிட்டோம். நாங்க இரண்டு பேரும் எதையும் எங்களுக்குள்ள மறைச்சிக்கிட்டதே கிடையாது. எல்லா விஷயத்தையும் ஷேர் பண்ணிப்போம். என்னுடைய பெஸ்ட் ஃப்ரெண்ட் அவன் தான். 

இப்படியே எங்க வாழ்க்கை போயிட்டு இருக்கும் போது, என் அண்ணன் அவனும் டாக்டர் தான். மேற்படிப்புக்கு வேற காலேஜ் சேர்ந்தான். அவன் வாழ்க்கையில் ஒரு புயல் வந்தது. அந்த இனிய புயல், எங்கள் வாழ்க்கையை வண்ணமயமாக சுழற்றி அடித்தது.

காலேஜில் பார்த்தவுடனே லவ் பண்ணான். எப்பவும் போல என் கிட்ட வந்து ஷேர் பண்ணான். எங்க வீட்டுக்கு வருவாங்க. சிரிக்க, சிரிக்க பேசுவாங்க.” என்றவன் அவளது நினைவில் முகமெல்லாம் இளகியிருக்க.

” ஆதி அவங்க பேர் என்ன?”

” ஆகாஷ்…”

” நான் அண்ணா பேர் கேட்கலை. அவங்க லவ்வர் பேரைக் கேட்டேன்.”

” அவங்க பேர் வேண்டாம் ராதிகா. நான் அவங்களை பேபின்னு தான் கூப்பிடுவேன்.”

” ம்… சரி.” என்றவள் அமைதியாக இருக்க.

மீண்டும் பேச்சை ஆரம்பித்தான் ஆதவன். ” என்னுடைய பிறந்தநாள், அண்ணாவோட பிறந்தநாள் எல்லாம் அப்படி சர்ப்ரைஸ் பண்ணாங்க.

அதெல்லாம் ஒரு வருஷம் தான். அடுத்த வருஷம் பிறந்தநாள் அன்னைக்கு, சர்ப்ரைஸ் பண்ணாலும் ஏதோ மிஸ்ஸிங். எப்பவும் என் கூடவே இருக்குற அண்ணன் கூட, அன்னைக்கு என் கூட இல்லை.

 காலையிலேயே பர்த்டே செலப்ரேட் பண்ணிட்டு ,ரெண்டு பேருக்கும் முக்கியமான கிளாஸ் இருக்கு என்று கிளம்பி போயிட்டாங்க. ஆனா அன்னைக்கு அவங்க ரெண்டு பேர் முகமும் சரியில்லை‌. ஏதோ சம்திங் ராங்க் என்று தோணுச்சு.

அப்புறம் பார்த்தா ரெண்டு பேரும் மேரேஜ் பண்ணி இருக்காங்க. ஈவினிங் வரை எங்க கெஸ்ட்ஹவுஸ்ல இருந்துட்டு, காலேஜ் முடியற டைம் கிளம்பி வந்திருக்காங்க.

ஆகாஷோட பைக்க லாரி மோதிருச்சு.

ஏதோ டூவிலர் மோதுற மாதிரி வந்துச்சுன்னு, பைக்கை வளைச்சான்னு சொன்னாங்க. அந்த ஏரியால தான் ரேஸ் மாதிரி வண்டியை ஓட்டுவாங்களே அதனால ஆச்சா? இல்லை எங்கண்ணனோட கவனக்குறைவால ஆச்சா? ஏதோ ஒன்னு ஆக்சிடென்ட் ஆகிடுச்சு. எல்லாம் முடிச்சிருச்சு. எங்களுக்கு அப்புறமாத் தான் தெரியும். இரண்டு பேரும் அன்னைக்கு காலேஜ் போகலை என்று. அண்ணா ஸ்பாட் அவுட். அவங்களுக்கு லேசான அடி தான்.” என்று முடித்தவன், பேரர் கொண்டு வந்து வைத்து விட்டு போன காஃபியை குடிக்க ஆரம்பித்தான்.

தன்னுடைய அக்காவின் ஞாபகம் வந்துவிட… கலங்கிய கண்களை சமாளித்து, ” ஃபைவ் மினிட்ஸ் ஆதி. ” என்று கூறி விட்டு, ரெஸ்ட் ரூம் போய் அழுதவள், முகத்தை நன்கு கழுவி விட்டு வந்தாள்.

திரும்பி வந்தவள் பார்த்தது என்னவோ, ஆதியின் சட்டையைப் பிடித்து அவனை, அடிக்கும் விஸ்வரூபனைத்தான்.

அங்கிருப்பது விஸ்வரூபன் தானா என்று அதிர்ந்து நின்றாள். ‘ஆளே மாறிப் போயிருந்தான். தஞ்சாவூர்ல பார்த்ததை விட மெலிந்து, கண்ணெல்லாம் சிவக்க ருத்ரமூர்த்தியாக நின்றிருந்தான்.’ 

ஒரு நொடி தான் இதையெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தாள்.

அடுத்த நொடி, அடி வாங்கிக் கொண்டிருந்த ஆதியிடம் வேகமாகச் சென்றாள்.

அவர்கள் இருவருக்கும் நடுவில் வந்து நின்று ஆதியை தாங்கிப் பிடிக்க…

‘யாருடா இந்த பொண்ணு!’ என எரிச்சலுடன் பார்த்தவன், அங்கு ராதிகாவைப் பார்த்ததும், அவனது கை, தன்னாலே கீழே இறஙகியது.

கண்கள் கலங்கித் தவித்த ராதிகாவைப் பார்த்தவன், அடிக்க முடியாத ஆத்திரத்தை அருகில் இருந்த கிளாஸில் காண்பித்து விட்டு, அவ்விடத்திலிருந்து வெளியேறினான். 

செல்லும் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் ராதிகா.வேறு இரு விழிகளும் அங்கு நடந்ததை சிரித்துக் கொண்டே கவனித்தது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!