இதே வார்த்தைகளை ஆதி கூறிய போது விளையாட்டுத்தனமாக எடுத்து கொண்டவளால் மீனாட்சி அதே வார்த்தைகளை கண்களில் இறைஞ்சுதலுடன் கேட்டுக் கொண்டதை மறுக்கத் தோன்றாது அமைதியாகி விட்டாள்.
அனைவரும் மீனாட்சியின் உடல்நலம் குறித்து பதட்டத்தில் இருந்ததால் அவளது கண்களில் தோன்றிய இறைஞ்சுதலை யாரும் கவனிக்கவில்லை.
ஆனால் நேஹா அதனை சரியாக கண்டு கொண்டாள். மீனாட்சியின் சிகிச்சைக்கு முன்பு பேசியதோடு சரி… அதன் பிறகு ஒருமுறை மருத்துவமனையில் பார்த்து விட்டு வந்தாள்.
அதன் பிறகு அவளுக்கு தனது நிறுவனத்தின் காலாண்டு கணக்குகளை சரி பார்க்கவே நேரம் சரியாக இருந்தது.
இருப்பினும் மீனாட்சியின் வார்த்தை மனதினோரத்தில் முணுக்கென்று குத்திக் கொண்டு தான் இருந்தது.
பதினைந்து நாட்கள் மருத்துவமனையில் இருந்துவிட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாள் மீனாட்சி.
சங்கர பாண்டியனது வீட்டிற்கு வந்தவள் தந்தையிடம் முகம் கொடுத்துக் கூட பேசவில்லை.
அவளுக்கு அதற்கு மேல் அங்கிருப்பது நல்லதாக தெரியவில்லை.
ஏதோ யோசித்தவள் நேஹாவிற்கு அழைத்து வீட்டிற்கு வரச் சொன்னாள்.
சற்று நேரத்திற்கெல்லாம் நேஹா மீனாட்சியின் முன்பிருந்தாள்.
“ சொல்லுங்க மீனாட்சி…என்ன விஷயம் .?” என நேரடியாக விஷயத்திற்கு வந்தாள்.
“ நேஹா உன்னை பத்தி எனக்குத் தெரிஞ்சதெல்லாம் உனக்குன்னு யாரும் கிடையாது. தனியா வியாபாரம் பண்ணி நல்ல நிலைமையில இருக்கன்னு மட்டுந்தேன் . வேற எதைப் பத்தியும் நான் தெரிஞ்சுக்க விரும்பல…மாமா பாவம். அது படபடன்னு பேசுமே ஒழிய மனசுல எதுவும் இருக்காது. சூது வாது தெரியாது. யாருக்கும் ஒண்ணுன்னா முன்ன போய் நிக்கும். என்னடா இவ அவருக்காக பேசுறேன்னு நினைச்சுக்காத…உன் கிட்ட கேக்காமலயே உன்னையே கல்யாணம் பண்ணிக்க சொல்ல கேட்டுட்டேன். மன்னிச்சிடு. உன்னோட அந்தஸ்து , பணம் , புகழை வைச்செல்லாம் உன்னைய மாமாவ கட்டிக்க சொல்லல. எனக்கு என்னவோ நீ அது பக்கத்துல இருந்தா அதோட வாழ்க்கை நல்லா இருக்கும்னு தோணுது. மாமா இப்படியே விட்டா பட்ட மரமா தான் நிக்கும். என்னோட வாழ்க்கை சரியாகுமான்னு தெரியலை. ஆனா அது நல்லா இருக்கனும். போதும் …அது வாழ்க்கையில பட்ட கஷ்டமெல்லாம் . இனி அதோட வாழ்க்கை சரியாகனும் . அதோட நினைப்புல இருந்தும் மனசுல இருந்தும் நான் விலகனும். என்னைய விட அருமையான் வாழ்க்கையை உன்னால தர முடியும் நேஹா. உன்னோட குணத்துக்கும் அவர் சரியானவரா இருப்பாரு. எனக்காக இந்த உதவியை செய்றீயா…? நான் செய்யறது சரி தப்புங்கறத விட அதோட வாழ்க்கை சரியாகனும் …உன்னைய பலி கடாவா ஆக்குறேன்னு நினைக்காத..அப்படி நீ நினைச்சனா இப்பவே சொல்லிடு…இந்த கல்யாணம் வேணாம். சொல்லு நேஹா நீ மாமாவ கட்டிக்கிறியா…? “ என அவளது சம்மதம் வேண்டி முகம் பார்த்து நின்றாள்.
அவளருகே வந்து நின்ற நேஹாவோ ,” எல்லாரோட வாழ்க்கையிலும் ஒரு முதல் காதல் இருந்திருக்கும். அந்த முதல் காதல் எப்பவும் ரொம்பவே ஸ்பெஷல் தான் . அந்த முதல் காதலை தாங்குற ஆணோ… பெண்ணோ ரொம்பவே லக்கி. அந்த வகையில நீங்களும் லக்கி …ஈஸ்வரனும் லக்கி தான். உங்க காதல் ஜெயிச்சிருந்தா எப்படியிருந்திருக்கும் என்னால சொல்ல முடியலை. ஆனா தோத்திருக்கக் கூடாதுன்னு நினைச்சேன். தட்ஸ் ஓகே…எல்லாருக்கும் அவங்களுக்கு பிடிச்ச லைஃப் கிடைச்சா அது வரப்பிரசாதம். ஆனா அந்த வரப்பிரசாதம் எல்லாருக்கும் கிடைச்சிடாது. அமையிற வாழ்க்கையை ஏத்துக்கிட்டு எல்லாரும் போயிட்டு தான் இருக்காங்க. எனக்கு ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க மீனாட்சி…உங்க மாமா மனசுல இருந்து அவ்வளவு சீக்கிரம் உங்களை வெளியே தள்ளிட்டு நான் அவரு மனசுல நுழைய முடியும்ன்னு நினைக்கிறிங்களா..? இல்லை நீங்க தான் ஆதியை அவ்வளவு சீக்கிரம் ஏத்துப்பிங்களா…? ஈஸ்வரனுக்கு கொஞ்சம் நீங்க டைம் கொடுத்திருக்கனும். எல்லா வகையிலும் நொந்து போய் உக்காந்திருக்குற மனுஷனை கொண்டு போய் கத்தி முனையில நிக்க வச்சு கட்டிக்கோன்னா அவருக்கு எப்படியிருக்கும்னு யோசிச்சிங்களா…? ஈஸ்வரனை கட்டிக்க மட்டுமில்லை இவ்வளவு அன்பும் பாசமும் இருக்குற உறவுகள் கிடைக்கவும் நான் கொடுத்து வச்சிருக்கனும். எல்லாரும் செய்ற தவறை நான் செய்ய விரும்புல…ஆனா இனி அவரு மட்டும் தான் என்னோட வாழ்க்கை . நான் அவரோட உணர்வுகளை மதிக்கிறேன். நான் எவ்வளவு நாள் இல்லை வருஷமானாலும் அவருக்காக வெயிட் பண்ணுறேன். ஆனா அவரோட முழு சம்மதத்தோட இந்த கல்யாணம் நடக்கும்ன்னு ஆசைப்படுறேன். இந்த விஷயத்தில கட்டாயப்படுத்தாதீங்க…உங்க ஆதங்கம் எனக்குப் புரியுது. நான் உங்களுக்கு வாக்கு கொடுக்கிறேன் கண்டிப்பா உங்க மாமா கல்யாணம் பண்ணிப்பாரு. அதுக்கு நேரம் எடுக்கும் தான். ரணங்கள் அவ்வளவு சீக்கிரம் ஆறாது. பரவாயில்ல… நான் வெயிட் பண்ணுறேன். நான் என்ன சொல்ல வர்றேன்னு உங்களுக்கு புரியுதா…?” என்றாள் நேஹா.
மீனாட்சியின் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது.
“ எவ்வளவு தெளிவாக சிந்திக்கிறாள் இவள்…இவள் தான் ஈஸவ்ரனுக்கு எல்லா வகையிலும் பொருத்தமாக இருப்பாள் “ என்று நினைத்துக்கொண்டு, “புரியுது நேஹா…நிச்சயமா கட்டாயப்படுத்த மாட்டேன்…ஆனா என் மாமாவை எந்த இடத்திலும் நீ விட்டுக் கொடுத்துடாத… “ என உணர்வுபூர்வமாக கேட்டுக்கொண்டாள்.
“ நிச்சயமா…”என்றவள் ஒரு கணம் தயங்கி நின்றாள்.
“ ஏதாவது என் கிட்ட சொல்லுன்னுமா…? “ என்றாள் மீனாட்சி.
“ ம்ம்…நான் ஆதியை நியாயப்படுத்துறேன்னு நினைக்காதீங்க. இது நீங்க கேட்டதுக்கு ப்ரதிபலனா நான் கேக்குறேன்னும் நினைக்காதீங்க. ஆதி நல்லவன் தான் ஆனா உங்களோட விஷயத்துல தான் அவன் எல்லாமே தப்பு தப்பா பண்ணிட்டு இருக்கான். உடனே உங்க மனசை மாத்திட்டு அவனோட வாழச் சொல்லல….ஆனா எப்பவாவது அவனை மன்னிக்கனும்ன்னு தோணிச்சுன்னா மன்னிச்சிடுங்க…உங்களை விட்டுடக் கூடாதுங்கற பயத்துல தான் அவன் இவ்வளவு தப்பு பண்ணிருக்கான். “ என்றாள் நேஹா.
மீனாட்சியோ விரக்தியாக சிரித்தபடி, “ ஆதி பண்ணது தப்புன்னா மன்னிச்சிடுவேன். ஆனா பண்ணுனது பாவம்…பச்சைத் துரோகம்…தப்புன்னு தெரிஞ்சே பண்ணுனது …அதை மன்னிக்கப் கூடிய அளவுக்கு என் மனசு பக்குவப்படல. அவர் மேல எனக்கு ஏன் இவ்வளவு வெறுப்புன்னு உனக்குத் தெரியாது. ஆதியை என்னால மன்னிக்க முடியுமான்னு தெரியலை…இதை பத்தி மேலே பேச வேண்டாமே…” என கையெடுத்து கும்பிட்டாள்.
நேஹாவிற்கு ஆதி ஈஸ்வரனுடைய நிலத்திற்கு நெருப்பு வைத்தது தெரியாது. ஆதி விடாப்பிடியாக மீனாட்சியினை திருமணம் செய்து கொண்டதால் தான் வெறுக்கின்றாள் என நினைத்துக் கொண்டாள்.