உயிர் தொடும் உறவே -30

5
(3)

உயிர் -30

தினமும் மீனாட்சி காலையில் எழுவாள், தனக்கும் அவனுக்கும்‌ சேர்த்து சமைத்து வைத்துவிட்டு கல்லூரிக்குச் சென்று விடுவாள்.

காலையில் அவன் கிளம்பும் போது தான் ஆதி உறக்கம் கலைந்து எழுந்து வருவான்.

தானே அவளை கல்லூரியில் கொண்டு வந்து விடுகிறேன்‌ என்பதற்கு கூட‌ மறுத்துவிட்டாள்.

ஒருவாரம் பேருந்தில் எவ்வாறு செல்வது என்பதை அவள் கூடவே இருந்து அவளுக்கு கற்றுக் கொடுத்தான்.

பிறகு அவளே தனியாக செல்ல ஆரம்பித்து‌விட்டாள்.

ஆதியிடம் எங்கே மென்மையாக பேச ஆரம்பித்து விடுவோமோ என்ற பயம் அவளைத் துரத்தியது.

அவனது பார்வை அவளையே தான் எப்பொழுதும் வட்டமடித்து கொண்டிருக்கும்.

முதலில் அதனைப் பெரிதுபடுத்தாமல் இருந்தவளுக்கு நாளைடைவில் அவனது பார்வை ஏதோ ஒரு தாக்கத்தை  ஏற்படுத்த ஆரம்பித்தது.

எதிலிருந்தோ தப்பிப்பது போலிருந்தது அவளது தினசரி செய்கை.

இருவரும் சந்தித்துக் கொள்ளும் நேரத்தை குறைக்க முயன்றாள்.

ஆனால் தினமும் மாலை இரண்டு மணி நேரம் கண்டிப்பாக அவனுடன் செலவிட நேர்ந்தது.

அனைத்தையும் தெளிவாகவும் அவளுக்கு விளக்கிக் கூறினான்.

சில நேரங்களில் அவனது‌ நெருக்கம் அவளுக்கு இம்சையாய் இருந்தது.

முகம் பார்த்து பேசுவதை முடிந்த அளவு தவிர்த்தாள்.

அவனுக்கு தான் அவளது பாரா முகம் வேதனையை கொடுத்தது.

கோமதி அவ்வப்போது மீனாட்சியிடம் பொதுவாக பேசிவிட்டு வைத்துவிடுவார்.‌

சங்கரபாண்டியன் கோமதியின் முகத்தை ஏக்கத்தோடு பார்ப்பார்.

மகள் ‌தன்னிடம் பேசவே மாட்டாளோ…என்ற‌ ஏக்கம்‌ நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

கோமதியோ அவரை சிறிதும்‌ கண்டுகொள்ளாமல் அவருக்குத் தேவையானவற்றை கடமையே என்று செய்து வைத்து கொண்டிருந்தார்.

இவ்வாறு கடமைக்கென செய்வது அவருக்கு கோபத்தை வரவழைக்க , ஒருநாள் ஆதங்கம் தாளாமல் கத்தி விட்டார்.

“ என்ன நினைச்சிட்டு இருக்கவ…? நானும் பாத்துட்டு இருக்கேன்…எல்லாம் கடமைக்குன்னு செய்ற….? அம்புட்டு ஏத்தமாகிட்டா..? கொஞ்சம் அமைதியா இருந்தா ஆளாளுக்கு ஆட்டம் காட்டுறீக…? உம் பொண்ணு என்னை மனுசனா கூட மதிக்க மாட்டிகா…வெளிநாட்டுக்குப் போய் ஒரு வருசமாகிப் போச்சு…பெத்த அப்பங்கிட்ட பேச மாட்டிக்கா….அப்படி என்ன தான் பண்ணிட்டேங்கேன். என் பொண்ணு நல்லா இருக்குனும்ன்னு நினைச்சு தானே செஞ்சேன்..குடிகாரன்ட்டயோ…காவாலிப் பயலுக்கோ கட்டி வைக்கலையே…” என்றார்.

“ ஆனா அவ மனசுக்கு புடிச்ச வாழ்க்கையை நீங்க கொடுக்கலயே…பெத்த பொண்ணு…பெத்த பொண்ணுன்னு சொல்றீகளே…கொஞ்சமாவது பாசம் இருந்திருந்திருந்தா…அவ மனசை உடைச்சிருக்க மாட்டீக.. உங்களுக்கு உங்க வரட்டு கௌரவந்தேன் முக்கியமா போயிட்டு…அதுக்கு அவ வாழ்க்கையை பலி கொடுத்துட்டீக… நீங்க கொஞ்சம் இறங்கி வந்திருந்தீஙக்ன்னா எல்லாருமே சந்தோசமா இருந்திருப்போம்…இப்ப பாருங்க…எல்லாரோட வாழ்கையுமே அந்தரத்துல ஊசலாடிட்டு இருக்குது. என் பொண்ணோட வாழ்க்கை மொத சரியாகட்டும்‌ அப்பறம் உங்களுக்கு சிரிச்ச முகமா பணிவிடை செய்யறேன்…என்னால பழைய கோமதியா இருக்க முடியாது.…போதும்…நீங்க செஞ்ச‌து வரைக்கும்…நான் இப்படிதேன் இருப்பேன்..” என்று முகத்திலடித்தார் போல் கூறிவிட்டார்.

சங்கர பாண்டியனுக்கு கோபம் தலைக்கேறியது.

இவ்வளவு வருடங்களாக தன்னை எதிர்த்துப் பேசாத தன் மனைவி இப்போது அலட்சியத்துடனும் ஆர்வத்துடனும் பேசுவதைப் போல உணர்ந்தார்.

“ உன் கையால் இனி சாப்பிட மாட்டேன்…நானே எனக்கு வேண்டியதை செஞ்சிக்குறேன்…எல்லாத்துக்கும் உன்னையே நம்பி இருக்குறேன்றதுன்னால தானே இப்படி திமிரும் எக்ததாளமாவே பேசிட்டு இருக்கவே…உன்னால செய்ய‌ முடியுற வேலையை என்னால செய்ய முடியாதா…?எந்துணியை நான் துவைச்சிக்குறேன். நானே காஃபி தண்ணி போட்டுக்குறேன்…நானே சமைச்சு சாப்டுக்குறேன்..உன்னோட தயவுல தான் நான் இருக்கேன்னு ஆடாத…” என காட்டுக்கத்தலாய் கத்தினார்.

அவரது இயலாமை கடுங்கோபமாக வெளிவந்தது.

மனைவியின் அலட்சியம், பெற்ற மக்களின் பாராமுகம் அவரை உருக்குலைத்துக் கொண்டிருந்தது என்னவோ உண்மைதான்.

இத்தனை வருடங்களாக தான் சொன்ன எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டதை போல இந்த திருமணத்தையும் எளிதில் ஏற்றுக் கொண்டு சமாதானம் ஆகிவிடுவார்கள் என்று தப்புக்கணக்கு போட்டுவிட்டார்.

ஆனால் இந்தளவிற்கு கடுமையை அவர் மனைவி மக்களிடமிருந்து எதிர்பார்க்கவேயில்லை.

எதிர்ப்பு என்பதையே சந்தித்திராதவர் முதன்முதலாக கடுமையான எதிர்ப்பு மட்டுமல்ல அலட்சகயத்தையும் தன் குடும்பத்திலிருந்து வருவதை அவரால் ஜீரணிக்க முடியாமல் திணறினார்.

வீம்பாக கோமதியிடம் கூறிவிட்டாரே ஓழிய துணித் துவைப்பதை தவிர எந்த சமையல் வேலையையும் அவருக்கு செய்ய‌த் தெரியவில்லை.

சமையலில் சாப்பாட்டு அரிசிக்கு பதிலாக இட்லி அரசியை ஊற வைத்தார்.

ஆழாக்கு அரிசிக்கு எந்தளவிற்கு தண்ணீர் வைக்க வேண்டும் எனத் தெரியவில்லை.

சாதம் குழைந்து போனது.

மிளகாய் தூளுக்கும் , சாம்பார் பொடிக்கும் வித்தியாசம் தெரியாமல் அள்ளிக் கொட்டினார்.

வெந்தும் வேகாத காய்கறி கார சாம்பார்.

கண்ணில் நீரை வரவழைத்தது.

அனைத்தையும் கொட்டி விட்டார்.

வயிறோ எனக்கு கொஞ்சம் உணவு கொடேன் என்று கூப்பாடு போட்டது.

பிறந்ததிலிருந்து

சமயலறை பக்கமே சென்றிடாதவருக்கு சமயலறை என்பதே அரியப் பொருட்கள் வைக்கப்படும் அருங்காட்சியகமாக காட்சியளித்தது.

தேநீர் சரியான பதத்தில் போடத் தெரியவில்லை.

வாயில் காஃபியை ஊற்றினால் வாந்தி தான் வந்தது சங்கர பாண்டியனுக்கு.

மனைவியிடம் கேட்கவும் கௌரவம் இடம் தரவில்லை.

நேரத்திற்கு உண்டு பழகியவரால் பசி தாங்க முடியாமல் தவித்தார்.

பாலும் பழங்களும் கூட அவரது பசியைப் போக்க வில்லை.

“அடச்சே…அவசரத்துக்கு ஒரு சோறு‌…குழம்பு கூட வைக்கத் தெரியலை…. இதெல்லாம் பழகியிருக்கனுமோ….” என முணுமுணுத்தார்.

காலம் கடந்த ஞானோதயம்.

கோமதி இவர் அடிக்கும் கூத்தை யெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாரே தவிர ஒன்றும் பதில் கூறாமல் தனக்கு வேண்டியதை மட்டும் சமைத்து சாப்பிட்டு பாத்திரத்தை கவிழ்த்து விட்டார்.

கோமதிக்கு மனம் பிசைந்தது தான்…ஆனால் எவ்வளவு காலம் சங்கர பாண்டியன் ஆடும் ஆட்டத்திற்கு பொறுத்துப்‌போவது…? பெண்களை எகத்தாளமாக பேசி தன்னகங்கரமாக வலம் வந்தவருக்கு இந்த பாடம் தேவைதான் என்று விட்டுவிட்டார்.

இரண்டு நாட்கள் சமையலுடன் போராடிப் பார்த்தவருக்கு அதற்கு மேல் காய்கறிகளுடனும், மசாலாப் பொடிகளுடனும் சண்டைப் போட தெம்பில்லை.

முதன்முறையாக தன்னுடைய வரட்டு கௌரவத்தை விட்டுவிட்டு மனைவிடம்‌ பேசினார்.

“ம்மகூம்….” எனத் தொண்டையை செருமினார்.

கோமதியோ அவரைக் கண்டு கொள்ளாமல் பூண்டை உரித்து வைத்துக் கொண்டிருந்தார்.

இருப்பினும் அதைப்‌பெரிது படுத்தாமல்,  “கோமு….இங்காரு…உன்ட்ட வீராப்பா சொல்லிட்டேனே ஒழிய எனக்கு ஒத்த சமையல் வேலையும் செய்யத் தெரியல டி…மன்னிச்சிக்க…ரொம்ப சுளுவா சமைக்கறதென்ன கம்ப சூத்தரமா..? அதொல்லாம் பொம்பளேள்ளுக்கு ஒரு வேலையான்னு எவ்வளவோ நாளு கேட்டுருக்கேன்…இப்பதேன் தெரியுது சமைக்க எவ்வளவு மெனக்கெடனும்ன்னு…பொழுதன்னைக்கும் அடுப்படில்ல ஏதாவது ஒரு வேலை செஞ்சிட்டு தான் இருக்க…அதையுமே நொட்டை சொல்லிட்டு தான் இருந்திருக்கேன்…என்னை மன்னிச்சுக்க..ஒரு நாள் கூட என்னால இந்த அடுப்படி பக்கம் நிக்க முடியல. அதனால நீயே.. முன்னைப் போல சமைச்சிடு…” எனத் தயங்கியபடி கூறினார்.

கோமதியோ அவரை அழுத்தமாக பார்த்தபடி, “இப்பவும் நீங்க சொன்ன வார்த்தையை தான் நான் சொல்லுதேன்..சமைக்கறது ஒண்ணும் கம்ப‌ சூத்திரமில்லை…ரெண்டு நாளு கஷ்டப்பட்டா மூணாவது நாளு…சமைக்க வந்துடும்… நான் திரும்ப சொல்லுதேன்…என்னையவே நம்பிகிட்டு இருக்காதீக…ஒரு வேளை உங்களுக்கு முன்ன நா‌போய் சேர்ந்துட்டா…” என முடிக்கும் முன்பே,  “என்ன பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்லுத…அப்படியெல்லாம் சொல்லாத…” என்றவரை இடைமறித்து, “நாம்‌ பேசி‌முடிச்சிடுதேன்…ஒருவேளை நா போயிட்டா…உங்களை நீங்க தான் பாத்துக்கனும்…யாரும்‌ வந்து உங்களுக்கு சமைச்சு போட்டுட்டு இருக்க மாட்டாங்க…அவுக அவுகளுக்கு அவுகளோட வேலை இருக்குது…அதை மட்டும் கொஞ்சம் நினைவுத் வச்சிக்கிடுங்க….இது தேன் நிசம்.‌‌.”என்றுரைத்துவிட்டு விடுவிடுவென சென்றுவிட்டார்.

யோசனையுடன் அமர்ந்திருந்தார் சங்கர பாண்டியன்.

புகழினியும் ஈஸ்வரனும் லண்டனுக்கு கிளம்பினார்கள்.

புகழினி ஏற்கனவே சில மருத்துவ கலந்தாய்வுகளுக்கு விமானத்தில் பயணித்திருக்கின்றாள்.

ஈஸ்வரனுக்கு அனைத்துமே புதிதாக இருந்தது .

வேஷ்டி சட்டையில் கிளம்பியிருந்தான்.

“ அண்ணே பேன்ட் சர்ட் போட்டுக்கண்ணே…குளிர் ஜாஸ்தியா இருக்கும். வேஷ்டி மேல் ஜெர்க்கின் போட்டா நல்லாவே இருக்காது…ப்ளீஸ்ண்ணே…” என கெஞ்சினாள்.

“எனக்கு இதுதேன் புடிச்சிருக்கு…ஏன் வேட்டி காட்டுனா ஃப்ளைட்ல ஏத்த மாட்டாகளா…?” என்றான்.

கப்பென்று வாயை மூடிக் கொண்டாள் புகழினி.

வெஸ்ட் மினிஸ்டரின்‌ கரோல் கன்ட்டி ரீஜினல் ஏர்போர்ட்டில் (caroll county regional airport) வந்திறங்கினார்கள் புகழினியும் ஈஸ்வரனும்.

அனைத்தும் புதிதாக இருந்தது அவனுக்கு.

வெள்ளை வேஷ்டியும் சட்டையும், முறுக்கு மீசையுமாக வந்திறங்கியவனை வித்தியாசமாக பார்த்தனர் சிலர்.

ஈஸ்வரனோ அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை.

அவன் வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்தான்.

நேஹா வருவதற்குள் விமமானம் தரையிறங்கியிருந்தது.

ஈஸ்வரனும் புகழினியும் தங்களுடைய பயணப்பொதிகளை எடுத்துக் கொண்டு வந்தனர்.

“ எங்க ஆரும் நம்மள அழைக்க வரலையா..? உனக்கு போறதுக்கு வழி தெரியுமா…?” என வெள்ளந்தியாக கேட்டான்.

“ நேஹா வர்றேன்னு சொல்லிருக்காண்ணே…கொஞ்சம் வெயிட் பண்ணுவோம்…” என்று கூறி கொண்டு இருக்கும் போது போதே வேகமாக மூச்சிறைக்க வந்து நின்றாள்.

“ ஐ யம் சோ சாரி…. கொஞ்சம் லேட்டாயிடுச்சு… வாங்க …புகழினி…வாங்க ஈஸ்வரன்…இட் இஸ் எ பிளண்ட் சர்ப்ரைஸ் ஃபார் மீ…ஐ மீன் நீங்க வந்தது…அண்ட் ஐ யம் சோ ஹேப்பி.. வாங்க போலாம்..” என்றவள் தனது காரில் அவர்களின் பயணப் பொதிகளை வைத்தாள்.

இருப்பதிலேயே சற்று சாதாரணமாக இருக்கும் உயர் ரக காரில் வந்திருந்தாள்.

அதுவே ஈஸ்வரனின் புருவத்தை உயரச் செய்தது.

வளவளவென பேசிக்கொண்டே லாவகமாக வண்டியை ஒட்டினாள்.

நாற்பது நிமிட‌ பயணத்திற்கு ‌பிறகு அந்த பிரம்மாண்டமான வீட்டின் முன்பு நின்றது அவளது கார்.

கிட்டத்தட்ட ஆங்கிலேயரின் அரண்மனை போன்ற வடிவமைப்பில் கட்டப்பட்டிருந்தது அவளது வீடு.

பிரம்மித்து போய் நின்றனர்‌ புகழினியும் ஈஸ்வரனும்.

புகழினிக்கு நா எழவில்லை.

அவள் சொந்த தொழில் பற்றி மேலோட்டமாகத் தான் தெரியும்.

ஆனால் அவளோ தான் நினைத்ததை விட பலமடங்கு உயரத்தில் அல்லவா இருக்கிறாள் .

கள்ளிக்குடியில் பாவமாக தன் வீட்டின் முன்னால் நின்றிருந்த நேஹா கண் முன்னே வந்து போனாள்.

தோற்றம்,நடை, உடை , பாவனை அனைத்திலுமே முற்றிலும் வேறுபட்ட நேஹாவாக இருந்தாள்

“ என்ன இங்கயே ரெண்டு பேரும் நின்னுட்டு இருந்தா என்ன அர்த்தம். உள்ள வாங்க…நம்ம வீடு தான்…” என்றவள் அப்பொழுது தான் இருவரது முகத்தையும் கூர்ந்து கவனித்தாள்.

நேஹாவிற்கு அவர்களின் எண்ணவோட்டம் ஒருவாறு புரிந்தது.

ஒரு பெருமூச்சுடன்,  “உங்களை விட‌ நான் ஏழை தான்….பணம் வெறும் காகிதம். அதால உறவுகளை வாங்க முடியாது, நிம்மதிய வாங்க முடியாது, அன்பை வாங்க முடியாது…இதெல்லாம் என்கிட்ட இல்லை…இந்த வீட்டையோ…நான் வாழ்க வாழ்க்கையையோ வச்சு என்னை எடைப்‌போடாதீங்க…ப்ளீஸ்…உள்ள வாங்க…” என்று இருவரையும் அழைத்து கொண்டு வீட்டினுள்ளே சென்றாள்.

அனைத்தும் ‌தானியியங்கி மயமாக இருந்தது.

வீட்டின் ஒவ்வொரு இடத்திலும் பணச்செழுமை தெரிந்தது.

 

ஈஸ்வரன் நேஹாவை பார்த்தான்.

அவளோ புகழினியுடன் சுவாரசியமாக பேசிக்கொண்டு இருந்தாள்.

அவனுள்ளே சுருக்கென்று ஏதோ தைத்தது.

உணர்வுகளை அவ்வளவு சீக்கிரம் வெளிப்படுத்தாதவன் அமைதியாக சுற்றி பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனுக்கு ஒன்று மட்டும் புரிந்தது. வீடெங்கும் பணச்செழுமை நினைத்திருந்தாலும் நேஹா கூறிய தனிமை அதை விட அதிகமாக எங்கும் வியாபித்திருந்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!