ஒரு நிமிடம் ஷாட்ஸும், கோர்ட்டும் கையில் ஃபைலுமாக ரித்திஷ்ப்ரணவை கற்பனை செய்து பார்த்த குமார் பதறியபடியே, “சார்! ஷாட்ஸோட எல்லாம் ஆஃபிஸுக்கு போனா நல்லா இருக்காது சார்!” என்றான்.
“அது எனக்கும் தெரியும் மேன். நீ ஏன் இவ்வளவு பதட்டப்படுற?” என்ற ரித்திஷ்ப்ரணவ் அவனை ஆராய்ச்சியாகப் பார்க்க.
“அது வந்து சார்…” என்று இழுக்க.
“ப்ச்! நானே ஆஃபிஸுக்கு என்ன ட்ரெஸ் போடுறதுன்னு யோசிச்சுட்டு இருக்கேன். நீ வேற டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்க. உருப்படியா ஐடியா கொடுக்க முடிஞ்சா குடு. இல்லைன்னா இடத்தை காலி பண்ணு.”
“ என் கிட்ட ஒரு ஐடியா இருக்கு சார். ஆனால் உங்களுக்கு பிடிக்குமான்னு தெரியலை.” என்று தயங்கினான் குமார்.
“என்னன்னு சொல்லு.”
“அது வந்து வேஷ்டி கட்டிக்கலாமே சார். அது உங்களுக்கு நல்லா இருக்கும்.”
“ப்ச்! எனக்கு முதல்ல வேஷ்டி கட்டத் தெரியாது. அதுவுமில்லாமல் அது அவுந்து விழுமோன்னு வேற கவனிச்சிட்டே இருக்கணும். அதெல்லாம் எனக்கு செட்டாகாது. பேசாமல் ஷாட்ஸோடவே ஆஃபிஸுக்கு வர்றேன். என்னோட கன்வெனியன்ட தான் எனக்கு முக்கியம்.”
“ நீ என்ன அந்த வேஷ்டிக்கு பிராண்ட் அம்பாஸ்டரா? இந்த அளவுக்கு விளம்பரம் பண்ற?” என்று புருவத்தை உயர்த்தினான் ரித்திஷ்ப்ரணவ்.
“அப்படியெல்லாம் இல்லை சார்! ஷாட்ஸோட ஆஃபிஸுக்கு வந்தா நல்லா இருக்காதுல்ல. அதுக்காகத் தான் சொன்னேன்.” என்றான் குமார்.
“ஓகே! வேஷ்டி, சட்டையை ட்ரை பண்ணி பார்க்குறேன். எனக்கு கம்பர்டபுளா இல்லைன்னா ஷாட்ஸோட தான் வருவேன்.” என்று ரித்திஷ்ப்ரணவ் கூற.
“அப்போ நான் போய் வாங்கிட்டு வரவா சார்? என்று ஆர்வமாக வினவினான் குமார்.
“நீ எதுக்கு இவ்வளவு ஆர்வமா இருக்க?” என்று சந்தேகமாக பார்த்துக் கொண்டே ஃபோனை எடுத்து அவனது காஸ்ட்யூம் டிசைனருக்கு அழைத்தான்.
“ஹலோ! கே.ஆர் ஸ்பீக்கிங்.” என்றான்.
அந்தப் பக்கமோ, “சொல்லுங்க சார். இம்பார்ண்டன்ட் மீட்டிங் வருதா சார். கோட் சூட் எதும் ரெடி பண்ணனுமா சார். ஆஸ் யூஸ்வல் க்ரே கலர் தானே?” என்று அவனது காஸ்ட்யூம் டிசைனர் கேட்க.
“எனக்கு வேஷ்டி சட்டை வேணும் தீரஜ்.”
“மேரஜுக்கா சார்! வாழ்த்துக்கள். ஒரிஜினல் பட்டு வேஷ்டி சேலத்துல நல்லா இருக்கும். அங்கே இருந்து வர வைக்குறேன். வித் இன் ஒன் வீக்ல ரெடி பண்றேன்.” என்றான் தீரஜ்.
“ஸ்டாப் நான்ஸென்ஸ் தீரஜ். சொல்ல வர்றதை முதல்ல முழுசா கேளு. எனக்கு காட்டன் வேஷ்டி மட்டும் போதும். ஓட்டிக்கோ, கட்டிக்கோ டைப். வித் இன் ஒன் ஹவர்.”
“அதுக்கு முன்னே கொடுத்துடுறேன் சார்! உங்களுக்கு என்ன கலர் வேணும்? எத்தனை செட் வேணும் சார்?” என்று தீரஜ் வினவ.
“வேஷ்டிலையும் கலர்ஸ் இருக்கா?” ஆச்சரியமாக வினவ.
“ஷர்ட் அண்ட் வேஷ்டி கலர், கலரா அவைலபிள் சார்.”
“ப்ச்! உனக்குத் தான் என்னைப் பத்தி தெரியுமே. வொயிட் வேஷ்டி மட்டும் போதும். ஒரு பத்து செட் அனுப்பு. கோட் ஷுட், ஷர்டே டூ ஆர் த்ரீ கலர்ஸ் மட்டும் தான் வைச்சுருப்பேன். இதுல வேஷ்டி கலர், கலரா வாங்கி அதுல எதைப் போடுறதுன்னு யோசிக்கிறது எல்லாம் வேஸ்ட் ஆஃப் டைம். ” என்று விட்டு ஃபோனை வைக்க.
அவன் பேசுவதையே வாயைப் பிளந்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தான் குமார்.
“என்ன வாயைப் பார்த்துட்டு இருக்க. சீக்கிரம் ரெடியாகு. எனக்குத் தேவையான மெடிசின், ஃபுட் எல்லாம் ரெடி பண்ணு. ஒன் ஹவர்ல ஆஃபிஸ்ல இருக்கணும்.” என்ற ரித்திஷ்ப்ரணவின் அதட்டலில் அங்கிருந்து ஓடினான் குமார்.
சொன்னது போலவே அவனது டிசைனர் வேஷ்டியை அனுப்பி வைத்தார்.
“நாட் பேட்.” என்று காஸ்ட்யூம் டிசைனரைப் பாராட்டிக் கொண்டே, தயாராகி வந்தான் ரித்திஷ்ப்ரணவ்.
லைட் க்ரே ஷர்ட்டை மடக்கி விட்டுக் கொண்டு கீழே இறங்கியவனைப் பார்த்து காஃபி குடித்துக் கொண்டிருந்த மூவரும் அதிர்ந்தனர்.
இது அவர்களது தினசரி வழக்கம். தீபா, கேசவ், மற்றும் தன்வி மூவரின் அரட்டை கச்சேரி நேரம். ஏழு மணியிலிருந்து, அவர்களது வேலையைப் பொறுத்து எட்டு மணி வரை நீளும்.
ரித்திஷ்ப்ரணவுக்கு அந்த நேரம் ஒத்து வராது. எட்டு மணிக்கு எல்லாம் அவனுக்கு ப்ரேக் பாஸ்ட் ரெடியாகி இருக்க வேண்டும். சாப்பிட்டு விட்டு ஆபிஸுக்கு சென்று விடுவான்.
எப்பொழுதும் அவன் வருவதற்குள் முடிந்திருக்கும் அரட்டை கச்சேரி, உடம்பு சரியில்லாததால் அவன் எங்கே கீழே வரப் போகிறான் என்று அவர்களது அரட்டை கச்சேரி நீண்டுக் கொண்டே இருந்தது.
திடீரென்று அவனைப் பார்க்கவும், ‘இவனுக்கு ஆக்சிடென்ட்டாகி கால்ல கட்டுப் போட்டு இருந்ததே. அதுக் கனவா? இல்ல இப்ப வந்து நிற்கிறானா இது கனவா?’ என்று கண்ணை கசக்கி யோசித்துக் கொண்டிருந்தார் கேசவ்.
தீபாவோ,” ரித்திஷ்! பார்த்து கண்ணா? எதுக்கு கீழே வர? ரூமுக்கே டின்னர் அனுப்புறேன்னு சொல்லியிருந்தேனே.” என்று வினவ.
“நோ ப்ராப்ளம் மாம்!” என்றவாறே கை கழுவிட்டு உணவருந்த அமர்ந்தான்.
தன்வியோ,” யூ லுக் ஹாண்ட்ஸம்னா. கல்யாண மாப்பிள்ளை போல இருக்கீங்க? யாரையாச்சும் லவ் பண்றீங்களா? வீட்டுக்குத் தெரியாமல் ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்க போறீங்களா?” என்று வினவ.
ரித்திஷ்ப்ரணவ் அவளைப் பார்த்து முறைத்தான்.
“சாரி! சாரி அண்ணா !நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்ட!” என்று முணுமுணுத்தாள் தன்வி.
“வாட்?” என்று தங்கையை கூர்ந்துப் பார்த்தான் ரித்திஷ்பிரணவ்
“ அது வந்துண்ணா! உனக்கு கால்ல அடிபட்டு இருக்குல்ல உன்னால ஓட முடியாதுன்னு சொல்ல வந்தேன்.” என்று வாய்க்கு வந்ததைக் கூற.
தலையசைத்த ரித்திஷ்ப்ரணவ் ஏதோ கூற வர.
“ சின்ன பிள்ளையா, லட்சணமா இருக்கணும் அதானே அண்ணா. நான் எதுவும் சொல்லலை.”என்று அந்த இடத்தை காலி செய்தாள் தன்வி.
மகனுக்கு பிடித்தது போல் முறுகலாக தோசை ஊற்றிக் கொண்டு வந்த தீபா, அப்பொழுது தான் மகனது உடையையே கவனித்தார்.
“என்னப்பா வெளியே கிளம்புறீயா? எதுவும் முக்கியமான மேரேஜா? உனக்குத் தான் முடியலையே. அவாய்ட் பண்ணக் கூடாதா?” என்று அக்கறையாக வினவினார் தீபா.
தன்னை ஒரு முறை குனிந்து பார்த்த ரித்திஷ்ப்ரணவோ, தோளைக் குலுக்கிக் கொண்டு,”நான் ஆஃபீஸுக்கு தான் போறேன்.”
“என்னப்பா சொல்ற? அப்பா தான் ஆஃபிஸை பார்த்துக்குறேன்னு சொல்லிட்டாங்களே. டாக்டர் வேற கால்ல ஸ்ட்ரெஸ் குடுக்க வேணாம்னு சொல்லியாருக்காங்களே.” என்று கவலையாக தீபா கூற.
“ஆல்ரெடி டாக்டர் கிட்ட பேசிட்டேன். பெயின் இருக்குங்குறதால தான் ஸ்டெயின் பண்ணிக்க வேண்டாம்னு சொன்னார். ஐ வில் மேனேஜ். அதுவுமில்லாமல் குமார் என் கூடத் தான் வர்றார்.”
“ ஓ! அப்ப சரி!” என்று தீபா அமைதியாகி விட.
“நானும் வர்றேன்!” என்ற கேசவ்வை, “ உங்களுக்கு வேற எதுக்கு டாட் அலைச்சல்? நீங்க வீட்லையே ரெஸ்ட் எடுங்க.” என்று விட்டு கிளம்பிவிட்டான்.
“ஊஃப்.” என்று தளர்வாக அமர்ந்தார் கேசவ்.
“ம்! ஆஃபிஸுக்கு போற வேலை இல்லைன்னு சந்தோஷப்பட்டுக் கிட்டு ஃப்ரெண்ட்ஸுங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ண ப்ளான் போடாதீங்க. ஈவினிங் என்னை கோவிலுக்கு கூட்டிட்டு போங்க.” என்று விட்டு தீபா அங்கிருந்து நகர.
“ தீபு! நான் என்னமோ வேலைக்கு போக விருப்பமில்லாத மாதிரி பேசிட்டு போற. நீயும், உன் பையனும் சேர்ந்து தான் என்னை ஆஃபிஸ் வேலையிலிருந்து ரிட்டயராக வச்சிங்க. நான் என் ஃப்ரெண்ட்ஸ மீட் பண்றதே வேற ஏதாவது பிசினஸ் செய்யலாமான்னு டிஸ்கஸ் பண்ண தான் தெரியுமா?”
“தெரியும்! தெரியும்! உங்க பையன் பிஸ்னஸை டேக் ஓவர் பண்ணதுல இருந்து இந்த காரணத்தை சொல்லி தானே வெளியே சுத்திட்டு இருக்கீங்க. உங்களுக்கு உங்க ஃப்ரெண்ட்ஸோட ஜாலியா என்ஜாய் பண்ணனும். அதுக்கு எதாவது காரணம் வேணும். உங்கள கல்யாணம் பண்ணி வந்த நாளில் இருந்து பிஸ்னஸ், பிஸ்னஸ்னு ஓடிட்டே இருக்கீங்க. இனியாவது என் கூட கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணலாம்ல.”என்று முறைத்தபடியே வினவ.
“நீ சொல்றதும் சரி தான். உன் கூட இன்னும் கொஞ்சம் நேரம் இனிமையா செலவு பண்ணியிருக்கலாம். சாரி தீபு.” என்று மனதார வினவினார்.
“ப்ச்! சாரியெல்லாம் எதுக்கு? இனி உள்ள நாளை அழகாக்கிக்குவோம்.” என்று புன்னகைத்தார் தீபா.
அந்தப் புன்னகை கேசவையும் தொற்றிக் கொண்டது.
**********************
ரித்திஷ்ப்ரணவ் வந்த கார், கே.ஆர் பில்டிங் முன்பு நின்றது.
நிதானமாக கீழே இறங்கிய ரித்திஷ்ப்ரணவ் அந்த நான்கடுக்கு பில்டிங்கை கூர்மையாக பார்த்தான். ஒரு நாள் வராததே, பல யுகம் கழித்து வந்ததுப் போல் தோன்றியது.
ஆச்சரியத்துடன் வணக்கம் வைத்த வாட்ச்மேனுக்கு தலையசைத்து விட்டு லிஃப்டை நோக்கிச் சென்றான் ரித்திஷ்ப்ரணவ். அவன் பின்னே வந்தான் குமார்.
இன்னும் அலுவலகம் இயங்குவதற்கான நேரம் இருக்க. ஆள் நடமாட்டம் சற்றுக் குறைவாகவே தெரிந்தது.
இருந்தாலும் கண்ணில் தென்பட்டவர்கள், இவனை ஆச்சரியமாக பார்த்து விட்டு தான் சென்றனர்.
லிஃப்டில் ஏறியவனோ, அங்கிருந்த கண்ணாடியில் ஒரு முறை தன்னைப் பார்த்தவன், ‘வேஷ்டி சட்டையில் நல்லா தானே இருக்கேன். ஏன் எல்லாமே வித்தியாசமா பாக்குறாங்க?’ என்று யோசித்தவன் தோளைக் குலுக்கிக் கொண்டு, லிப்டில் இருந்து வெளியேறி தனது அலுவலகத்திற்குள் நுழைந்தான்.
அவன் செய்வதையெல்லாம் புரியாமல் பார்த்துக் கொண்டே பின் தொடர்ந்தான் குமார்.
ரிசப்ஷனில் யாரும் இல்லாததை கவனித்தவன் மணியையும் பார்த்தான் எட்டு முப்பதை தாண்டியிருந்தது.
அலுவலகம் பத்து மணிக்குத்தான் ஆரம்பமாகும்.
இருந்தாலும் ரித்திஷ்ப்ரணவ் ஒன்பது மணிக்கு அலுவலகத்திற்கு வந்து விடுவான். அவன் வருவதற்குள் ரிசப்ஷனிஸ்ட்டும், மேனேஜரும், மற்றும் அவனது பி.ஏ மூவரும் வந்து விடுவார்கள்.
இன்று இவன் வரமாட்டான் என்பதால் மெத்தனமாக இருக்க, அதைப் புரிந்துக் கொண்டவனோ, கடுப்புடன் உள்ளே நுழைந்தான்.
“ ஹலோ சார்! நீங்க தப்பா வந்துட்டீங்க? இது ரிஜிஸ்டர் ஆஃபீஸ் இல்லை. அது பக்கத்து பில்டிங்.” என்று ஒரு குரல் கேட்க.
நிமிர்ந்துப் பார்த்தவன் அங்கிருந்தவளைப் பார்த்து திகைத்துப் போனான்.
தன் கால் அடிபடுவதற்கு யார் காரணமோ, அந்தப் பொண்ணை தன்னுடைய அலுவலகத்திலே பார்ப்போம் என்று ரித்திஷ்ப்ரணவ் எதிர்ப்பார்க்கவில்லை.
அவளோ ரித்தீஷ்ப்ரணவ் பதில் சொல்லவில்லை என்றதும், அவன் முன்பு கைகளை ஆட்டிக்கொண்டு,” ஹலோ சார் என்னாச்சு? தூங்கறீங்களா?”என்று வினவ.
நிகழ்வுக்கு வந்த ரித்திஷ்ப்ரணவுக்கு கோபம் பெருகியது.
அவளைப் பார்த்து முறைத்து விட்டு தனதுஅறையை நோக்கிச் செல்ல.
“ஹலோ சார்! யார் நீங்க? அப்பாயிண்ட்மெண்ட் இல்லாமல் எம்.டியை பார்க்க முடியாது.” என்று இரு கைகளையும் நீட்டி அவனை மறித்தப்படி நின்றாள் தியாழினி.