மத்தளம் போல் கொட்டிய நெஞ்சை சமாளித்துக் கொண்டு,” சார் நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியல. நீங்க யாருன்னு தெரியாமல் பேசிட்டேன். அதுவும் நீங்க வேஷ்டி சட்டையில் வரவும் தப்பா நினைச்சுட்டேன். வேற எதுவும் இல்லையே.” என்று திக்கித் திக்கிக் கூறினாள் தியாழினி.
“ப்ச்! இன்னும் ஏன் அந்த வேஷ்டியையே பிடிச்சு தொங்கிட்டு இருக்கீங்க. ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் டிரஸ்ல என்ன இருக்கு? எது எனக்கு கம்பர்டபுளோ அதுல தானே நான் வர முடியும். சோ இந்த டிரஸ் மேட்டரை விட்டுட்டு அடுத்ததுக்கு போவோமா?” என்று அவளை கூர்ந்துப் பார்த்துக் கொண்டே கூறினான் ரித்திஷ்பிரணவ்.
“என்ன சார் சொல்றீங்க?” என்று வார்த்தைகளை தந்தியடித்த தியாழினியோ மனதிற்குள்,’ ச்சீ! இந்த ஆளோட வேஷ்டியை நான் ஏன் புடிச்சு தொங்கப் போறேன். சரியான வில்லங்கம் புடிச்ச ஆளா இருப்பார் போல. என்னை டேமேஜ் பண்றேன்னு, இவரையே இவர் டேமேஜ் பண்ணிக்கிறாரு. நான் மட்டும் இவரோட வேஷ்டியை புடிச்சு தொங்குனா, இவரோட மானம் தானே போகும். ஆள் வளர்ந்திருக்குற அளவுக்கு அறிவு வளரவே இல்லை.’ என்று புலம்பிக் கொண்டிருந்தாள்.
“மிஸ். தியாழினி! உங்களுக்கு வேலைக்கு வரதுல துளிக் கூட விருப்பம் இல்லைன்னு எனக்கு நல்லாத் தெரியும். என்ன ப்ளானோட இங்கே வேலைக்கு வந்திருக்கீங்கன்னு நீங்களே சொல்லிடுங்க.” என்ற ரித்திஷ்ப்ரணவின் பேச்சைக் கேட்டதும் முழித்தாள் தியாழினி.
‘நம்மளோட லட்சியம் எல்லாம் இவருக்கு எப்படித் தெரியும்.’ என்று தனக்குள் யோசித்து குழம்பியவள்,” அப்படியெல்லாம் இல்லை சார்.” என்று ரித்திஷ்பிரணவிடம் மறுத்தாள்.
“ பொய் சொல்லக் கூடாது. உங்களோட திட்டம் எனக்குத் தெரியும். போன வாரம் ஈட்&சாட் கார்னர்ல உங்க ஃப்ரெண்ட்ஸுங்களோட பேசிய எல்லாத்தையும் நான் கேட்டுட்டேன். ஜாலியா தூங்கி, நல்லா சாப்பிட்டு ரெஸ்ட் எடுப்பது தான் உங்க வாழ்நாள் லட்சியம்னு சொன்னீங்க? பட் இப்ப வேலைக்கு வந்துருக்கீங்க? அது தான் உங்க மேல சந்தேகமா இருக்கு.” என்று புருவத்தை உயர்த்த.
இப்பொழுது தான் தியாழினிக்கு போன உயிரே திரும்ப வந்தது.
“ஓ! இதைத் தான் சொன்னீங்களா சார்?” என்று நிம்மதி பெருமூச்சுடன் வினவினாள்.
“நீங்க எதைன்னு நினைச்சீங்க?” என்று புருவத்தை சுருக்கி அவளைப் பார்த்தான் ரித்திஷ்ப்ரணவ்.
“அது வந்து… நான் எதுவும் நினைக்கலை சார். எனக்கு இப்போ இந்த வேலை ரொம்ப அவசியம். ” என்று தயங்கித் தயங்கிக் கூறினாள்.
“அது தான் ஏன்னு கேட்கிறேன்? போன வாரம் இல்லாத அவசியம். இந்த வாரம் எப்படி வந்தது?” என்று புருவத்தை உயர்த்தினான் ரித்திஷ்ப்ரணவ்.
“அது வந்து எங்க அண்ணனுக்கு உடம்பு சரியில்லை. செத்துப் பிழைச்சார். அதான் நான் வேலைக்கு வந்தேன் சார்.” என்று பாதி உண்மையும், பாதி பொய்யுமாகக் கூற.
“எனக்கு பொய் சொன்னா பிடிக்காது. உண்மையிலே உங்க அண்ணனுக்கு முடியலையா? இல்ல சும்மா சொல்றீங்களா?” என்று அவளைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே வினவினான் ரித்திஷ்பிரணவ்.
“அச்சோ! நான் பொய் சொல்லலை. காட் ப்ராமிஸ் சார்.” என்றவளின் கண் முன்னே,அவனது அண்ணன் ஹாஸ்பிடலில் இருந்த தோற்றம் வந்து சிரிப்பை வரவழைத்தது.
‘எங்கே தான் சிரித்தால் அவ்வளவு தான். காரியமே கெட்டு போயிடும்.’என்று கட்டுப்படுத்திக் கொண்டு பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு நின்றாள் தியாழினி.
ஆனால் அவளது கண்கள் பளபளப்பதை வைத்து, அவள் நகைக்கிறாள் என்பதைக் கண்டுகொண்டான் ரித்திஷ்ப்ரணவ்.
‘சம்திங் ராங்! வேலை செய்யணும்னு ஆர்வமே இல்லாதவ எதுக்கு என் கிட்ட வேலைக்கு வந்திருக்கான்னு தெரியலை. என்னைப் பத்தி அவளுக்குத் தெரியலை. புரிய வச்சுற வேண்டியது தான். என் ஸ்பீடுக்கு ஒத்து வரலைன்னா ஒரே வாரத்துல துரத்திட வேண்டியது தான்.’ என்று எண்ணிக் கொண்டவன்,
“ஃபைன் மிஸ் தியாழினி! இதுவரைக்கும் நீங்க எப்படி வேணும்னாலும் இருக்கலாம். பட் என் கிட்ட வேலைப் பார்க்கும் போது டிசிப்ளின் மஸ்ட். எல்லா வொர்க்கும் பர்ப்பெக்ஷனா இருக்கணும். தென் லேட்டா வர்றது சுத்தமா பிடிக்காது. இன்னைக்கு சீக்கிரம் வந்துட்டீங்க. குட். இதையே மெயின்டெய்ன் பண்ணுங்க. ஒரு நாள் சீக்கிரம் வந்துட்டு, அப்புறம் லேட்டா வந்தீங்க அவ்வளவு தான். ட்ரைனிங் ப்ரீயட்ல லீவ் எடுக்கக் கூடாது. அதுக்கப்புறமும் காரணமில்லாமல் லீவ் எடுக்க் கூடாது. பாட்டிக்கு உடம்பு சரியில்லை, தாத்தா இறந்துட்டாருன்னு ஏதாவது ஏமாத்து வேலைப் பண்ணது தெரிஞ்சது, தூக்கிடுவேன்.” என்று பெரியதாக லெக்சர் அடிக்க.
‘ஓ காட்! இதே டயலாக்கை எத்தனை முறை தான் கேட்பது. இன்டர்வியூக்கு வந்த போது மேனேஜர் திரும்பத், திரும்ப சொல்லி ப்ளேடு போட்டார். வீட்டுல அண்ணாவும் இதையே சொல்லி, உசுர வாங்கினான். இப்ப இவரும் இதே விஷயத்தையே திரும்பத், திரும்ப சொல்லி கழுத்தருக்குறாரு. இன்னும் எத்தனை பேர் இவரோட அருமை, பெருமையை சொல்லிட்டு வருவாங்களோ தெரியலேயே. சேவ் மீ காட்!’ என்று மனதிற்குள் புலம்பி கொண்டிருந்தாள் தியாழினி.
அவளது அமைதியைப் பார்த்தவனோ,”என்ன பதிலை காணும்? இப்பவே இங்கிருந்து ஓடிடலாம் போல இருக்கா?” என்று கிண்டலாக வினவினான் ரித்திஷ்பிரணவ்.
“ச்சே! ச்சே! அப்படியெல்லாம் இல்லை சார். வந்த வேலையை முடிக்காமல் போக மாட்டா இந்த தியா!” என்று வேகமாக மறுத்தாள் தியாழினி.
“ வாட்? என்ன சொன்ன? திரும்ப சொல்லு?” என்று ரித்திஷ்ப்ரணவ் அவளை அழுத்தமாக அளவிட.
“அது வந்து சார்… வேலைக்குன்னு வந்துட்டேன். வந்த வேலையை விட மாட்டேன்னு சொல்ல வந்தேன் சார். டங்கு ஸ்லிப்பாகிடுச்சு.” என்றுக் கூறி சமாளித்தாள் தியாழினி.
“லுக் மிஸ் தியாழினி. என்னோட சேர்ந்து வொர்க் பண்ணும் போது பேசுற பேச்சுல இருந்து, பார்க்குற பார்வை, நம்மை சுற்றி என்ன நடக்குதுன்னு சர்வைவ் பண்றதுன்னு எல்லாத்துலையும் கவனமா இருக்கணும்.”
“ஓகே சார்! இனி கவனமா இருக்கேன்.” என்றாள் தியாழினி.
“ம்! நேத்து கேன்சல் பண்ண மீட்டிங்கை இன்னைக்கு அரேஞ்ச் பண்ணிடுங்க. தென் அந்த மீட்டிங்ல நடக்கிறதை நோட்ஸ் எடுத்து, எனக்கு மெயில் அனுப்பணும். உங்களுக்கு ஷார்ட்ஹேண்ட் தெரியும் தானே.” என்று வினவ.
“தெரியும் சார்! அதை விட ஈஸியா நீங்க பேசுறதை போன்ல நான் ரெகார்ட் பண்ணிடுறேன் சார்.”என்ற தியாழினியை ஒரு மார்க்கமாக பார்த்தான் ரித்திஷ்பிரணவ்.
“என்னாச்சு சார்? ஏன் இப்படி பார்க்குறீங்க? என்னுடைய ஐடியா பிடிக்கலையா?”
“இல்லை! உங்களைப் போல சோம்பேறியை வேலைக்கு வச்சுக்குறதிலையும் ஒரு நல்லது இருக்கு. நோட்ஸ் எடுக்க சோம்பேறித்தனம் பட்டுக்கிட்டு, ஒரு நல்ல ஐடியாவை கண்டுப்பிடிச்சிட்டீங்க. பட் கேர்ஃபுல்… ரெகார்ட் பண்றேன்னு சொல்லிட்டு, ஏதாவது சொதப்பி வச்சா அவ்வளவு தான். மீட்டிங்ல என்னென்ன நடந்ததுன்னு நோட் பண்ணியிருக்கணும். ஒரு சின்ன விஷயம் மிஸ்ஸானாலும், அப்புறம் என்னோட இன்னொரு முகத்தைப் பார்க்க வேண்டியிருக்கும். காட் இட்.” என ரித்திஷ்ப்ரணவ் கூற.
“ஓகே சார்.” என்று தலையைசைத்த தியாழினியோ,’ ஆள் அழகா இருந்தாலும் இந்த முகத்தையே பார்க்க முடியலை. இதுல இன்னொரு முகத்தை வேற பார்க்கணுமா? வேண்டாம்டா சாமி! நான் வந்த வேலை முடிஞ்சதுன்னா, உனக்கு ஒரு கும்பிடு. உன் ஆஃபிஸுக்கு ஒரு கும்பிடு.’ என்று தனக்குள் புலம்பிக் கொண்டிருந்தாள்.
“அப்புறம் ஏன் நின்னுட்டே இருக்கீங்க? போய் வேலையை பாருங்க.” என்று அவளைத் துரத்தினான் ரித்திஷ்ப்ரணவ்.
“ ஓகே சார்! என்றவள் மனதிற்குள், ‘ டேய் அண்ணா! நீயும், உன் காதலியும் சீக்கிரம் கல்யாணம் பண்ணனும்ங்குறதுக்காக என்னை இப்படி ஒரு ரூல்ஸ் மாஸ்டர் கிட்ட மாட்டி விட்டுட்டியேடா.’ என்று தன்னை இதற்குள் சிக்க வைத்த அண்ணனை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள்.
அவளது புலம்பல் அத்தோடு முடியவில்லை. அன்று முழுவதும் தொடர்ந்தது.
ரித்திஷ்ப்ரணவ் அவளை வச்சு செஞ்சுட்டான்.
மீட்டிங் மதியம் தான் ஏற்பாடு செய்திருந்தாலும் அதற்கான வேலை காலையில் இருந்தே அவளுக்கு தொடங்கி விட்டது.
ரித்திஷ்ப்ரணவ் கேட்ட பைலை தேடி எடுத்து, அவன் செய்ய சொன்னவற்றை செய்வதற்குள்ளே அவளுக்கு அல்லுவிட்டது.
அவன் கேட்ட தகவலை, உடனே தர வேண்டும் என்று எதிர்ப்பார்த்தான்.
புதிதாக வேலையில் சேர்த்திருந்த தியாழினிக்கோ, அந்த பைலைத் தேடி எடுப்பதற்குள்ளே போதும், போதுமென்றாகி விட்டது.
எப்படியோ, அவன் சொன்ன எல்லா வேலைகளையும் முடிக்கும் போதே, மணி ஒன்றைத் தாண்டியிருக்க அவள் வயிற்றில் மணி அடிக்க ஆரம்பித்தது.
“ சார்! லஞ்ச்…” என்று இழுத்த தியாழினியை, மேலும், கீழும் பார்த்த ரித்திஷ்ப்ரணவ், “ ஒன் தெர்டிக்கு மீட்டிங். அதுக்குள்ள நீங்க சாப்பிட்டுட்டு, மீட்டிங் ஹாலையும் ரெடி பண்ணியிருக்கணும். எனக்கு டாக்டரோட அப்பாயிண்ட்மெண்ட் இருக்கு. ஐ வில் ஜாயின் யூ சூன்.” என.
“ ஒகே சார்!” என்றவளோ,‘தேங்க் காட்! சாப்பிட டைமாவது கொடுத்தாரே!’ என்று எண்ணியவள், வேகமாக உணவை முடித்துக் கொண்டு வெளியே வர, அவனோ டாக்டருடன் பேசிக் கொண்டிருந்தான்.
‘ ஓ! காட் இங்கே ஆஃபிஸ்ல தான் மீட்டிங்கா? அப்போ சீக்கிரம் போய் கான்ப்ரென்ஸ் ஹாலை ரெடி பண்ணனுமே!’ என்று ஓடினாள்.
எப்படியோ அவனிடம் பாராட்டை வாங்கிட வேண்டும் என்று ஓடி, ஓடி வேலைப் பார்த்தாள் தியாழினி.
மீட்டிங்கும் நல்லபடியாக முடிந்தது. ஆனால் அவள் எதிர்ப்பாராத்த பாராட்டு மட்டும் கிடைக்கவில்லை.
“ஓகே தியாழினி! நீங்க மீட்டிங்க பத்தின டீடெயில்ஸ் எல்லாத்தையும் நோட் பண்ணிக்கிட்டீங்க இல்லை. அதை எனக்கு நைட்டே மெயில் பண்ணிடுங்க.” என்றுக் கூறி,அவளை அதிர்ச்சியில் ஆழ்த்தினான்.
“ என்னது வீட்டில் போய் ஹோம்வொர்க் செய்யணுமா?” என்று மனதிற்குள் பேசுவதாக நினைத்து வாயை விட.
“ ஓஹோ! வீட்ல போய் வொர்க் செஞ்சா, அதுக்கு பேரு ஹோம்வொர்க்கா? அப்போ நோ ப்ராப்ளம்! இங்கே உட்கார்ந்து வேலையை முடிச்சிட்டே நீங்க வீட்டுக்கு போகலாம்.” என்றான் ரித்திஷ்ப்ரணவ்.
“ நோ பிராப்ளம் சார்! நான் வீட்ல இருந்தே மெயில் அனுப்புறேன் சார்.” என்று விட்டால் போதுமென்று அங்கிருந்து கிளம்பினாள் தியாழினி.
ட்ராஃபிக்கில் வண்டி ஓட்டி, வீடு வந்து சேருவதற்குள் சோர்ந்து போயிருந்தாள் தியாழினி.
“வாடா குட்டிமா! இன்னைக்கு நாள் எப்படி போனது? ஜாலியா இருந்ததா?” என்று நேத்ரன் வினவ.
“ என்னைப் பார்த்தா எப்படித் தெரியுது? ஜாலியா பிக்னிக் போய் விட்டு வந்தது போலவா தெரியுது?” என்றவாறே நேத்ரன் கழுத்தை நெறிக்கப் போனாள் தியாழினி.