“யாழினி! யாரோ ரொம்ப புடிச்சவங்களுக்கு மட்டும் தான் செல்லப் பேரு வைப்பாங்களாமே! அப்படியா?” என்று புருவத்தை உயர்த்தி வினவினான் ரித்திஷ்பிரணவ்.
ரித்திஷ்ப்ரணவ் இருக்குறதை உணராமல் வாய்விட்டு பேசிய தன் மடத்தனத்தை நினைத்து நொந்தவள், அதற்குப் பிறகு தான் அவன் கூறியதையே கவனித்தாள்.
‘ஆமாம் நாம எப்பவும் மனதுக்கு நெருக்கமானவர்களுக்குத் தானே செல்ல பெயர் வைப்போம். அப்புறம் எப்படி இவருக்கு பேர் வைத்தோம்.’என்று குழப்பத்துடன் பார்க்க.
அவளது குழப்பமான பார்வை அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது. முயன்று அதைக் கட்டுப்படுத்தியவன், முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு, “ ஒருவேளை பிடிக்காதவங்களுக்கும் நிக் நேம் வைப்ப போல.” என்று ரித்திஷ்ப்ரணவ் கூற.
“ஆமாம்.” என்பது போல் தலையாட்டியவள், பிறகு “இல்லை!” என்று தலையாட்ட.
வாய்விட்டு சிரித்தான் ரித்திஷ்ப்ரணவ்.
எப்பொழுதும் இறுக்கத்துடன் இருக்கும் ரித்திஷ்ப்ரணவ்வின் இந்த புன்னகை மன்னன் அவதாரம், அவளை ஏதோ செய்ய, அவனைப் பார்த்து திகைத்து நின்றாள்.
ஒரு வழியாக சிரித்து முடித்த ரித்திஷ்ப்ரணவோ, “சரி! நான் கேட்ட பைலை எடுத்துட்டு வா யாழினி.க்யூக்!” என்று அவளை அனுப்பி விட.
விட்டால் போதும் என்று ஓடி வந்து தனது இருக்கையில் அமர்ந்தவளுக்கு, அப்பொழுது தான் அவனது யாழினி என்கிற அழைப்பே புத்தியில் உரைத்தது.
‘சாரு எதுக்கு நமக்கு நிக் நேம் வச்சு கூப்பிடுறாரு. ஒருவேளை நம்மளை அவருக்கு பிடிச்சிருச்சோ.’என்று எண்ணியதுமே முகம் குப்பென்று சிவந்தது.
ஆனால் உடனே அவள் முகம் வாடியது.
அவரோட அன்புக்கு நான் தகுதி கிடையாது. அவங்க குடும்பமே நம்ம மேல பாசமா இருக்காங்க. ஆனா நான் செய்யப் போற காரியம் அவங்களுக்குப் பெரிய துரோகமாச்சே.” என்று எண்ணிக் கலங்கித் தவித்தாள்.
அதெல்லாம் ஒரு நொடி தான்..
சிறுவயதில் அவள் பட்டத் துன்பமும், அதிலிருந்து மீட்டு வந்த தன் அண்ணனின் நினைவு வந்ததும், மற்றதெல்லாம் பின்னே சென்றது
‘அண்ணன் செய்தவற்றிற்கு சிறு கைமாறாக, அந்த உதவியை செய்து தான் ஆக வேண்டும்.’ என்று எண்ணியவளுக்குத் தெரியவில்லை. அவள் செய்வது எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம் என்று … அதற்கான பாடத்தை ரித்திஷ்ப்ரணவ் கற்றுத் தர போவதையும் அறியவில்லை.
*****************
முயன்று வேலையில் கவனத்தை செலுத்தினாள் தியாழினி.
ரித்திஷ்ப்ரணவ் கேட்ட ஃபைலை தேடி எடுத்தவள், அவன் அடுத்தடுத்து சொன்ன வேலைகளை கவனமாக செய்தாள்.
ரித்திஷ்பிரணவ்விற்கு வீட்டிலிருந்து மதிய உணவு வர.
“யாழினி! வா சாப்பிடலாம்!” என்றழைத்தான்.
“சார்!” என்று தியாழினி தயக்கமாக அழைக்க.
“என்ன யாழினி! அம்மா உனக்கும் சேர்த்து குடுத்து விட்டுருக்கேன்னு மெசேஜ் போட்டுருக்காங்க.” என்று ஃபோனை எடுத்து ஆட்டினான்.
“இல்லை! நான் எப்பவும் போல அங்கே போய் எல்லோரோடும் சாப்பிடுறேன் சார்.”
“நோ! இனிமேல் என் கூட தான் நீ லஞ்ச் சாப்பிடணும். இது இந்த ரூல்ஸ் மெஷினோட நியூ ரூல். மீறுன அவ்வளவுதான்.” என்று விரல் நீட்டி எச்சரித்தான்.
‘ சும்மா இருந்தவனை சொறிஞ்சு விட்டுட்டேன். இது எங்க போய் முடியப் போகுதோ கடவுளே!’ என்று மனதிற்குள் புலம்பியவாறே அவனைப் பார்க்க.
அவனோ, “பயந்துட்டியா? சும்மா மிரட்டிப் பார்த்தேன். சரி வா சாப்பிடலாம்” என்றுக் கூறி சிரித்தான்.
“சரி!” என்று தலையாட்டியவள், பலியாடு போல் அவனோடு சென்றாள்.
தியாழினி அவளது லஞ்சை எடுத்து வைக்க.
ரித்திஷ்ப்ரணவ் அவனது வீட்டிலிருந்து வந்த உணவை அவளுக்குப் பறிமாறி விட்டு, அவளது உணவை அவனும் எடுத்துக் கொண்டான்.
நடப்பதெல்லாம் கனவா, நினைவா என்று புரியாமல் மௌனமாக உணவை சாப்பிட ஆரம்பித்தாள்.
ரித்திஷ்ப்ரணவ்வோ, உணவோடு சேர்த்து அவளையும் பார்வையால் விழுங்கினான்.
அவனது பார்வை, அவளை பயமுறுத்தியது. எப்படியாவது வந்த வேலையை முடித்து விட்டு இங்கிருந்து சீக்கிரமாக ஓடிடணும் என்று முடிவெடுத்தாள்.
*************************
தியாழினி அவளது முடிவில் தெளிவாக இருந்தாள்.
தினமும் நேரத்துடன் அலுவலகத்திற்கு வந்தாள்.
ரித்திஷ்ப்ரணவ் சொல்வதற்கு முன்பே எல்லா வேலைகளையும் கரெக்டாக செய்து முடித்தாள்.
மதிய உணவு ரித்திஷ்பிரணவ்வோடு என்பதால், ப்ரேக் நேரத்தில் மற்ற அலுவலகர்களோடு, பேசி சிரித்து அவர்களது வேலையில் ஏதாவது உதவி செய்வாள்.
மாறதது ஒன்று தான். ரித்திஷ்ப்ரணவ் பார்வை அவளை சுற்றிக் கொண்டே இருந்தது. அதை கண்டும் காணமலும் இருக்கக் கற்றுக் கொண்டாள் தியாழினி.
அவளோ எல்லாருடன் நட்பு வைத்துக் கொண்டிருந்தோடு இல்லாமல், முக்கியமாக மேனேஜரிடமும், லெட்டர் டிஸ்பாட்ஜ் பண்றவங்களோட ரொம்ப நெருக்கமாக பழகினாள்.
‘அப்போதேதான் கொட்டேஷன் கோட் பண்ண அமௌன்டை எப்படியாவது தெரிஞ்சுக்க முடியும்.’ என்று எண்ணியவளுக்குத் தெரியவில்லை, ரித்திஷ்ப்ரணவ், மிக மிக நம்பிக்கையானவர்களிடம் மட்டுமே அந்தப் பொறுப்பை ஒப்படைப்பான் என்று…
************
காலமும், நேரமும் வேகமாக ஓடியது. தினமும் தீபா ஏதாவது ஸ்பெஷலான உணவை தியாழினிக்காக கொடுத்து விடுவதோடு, “எப்படி இருந்தது? சாப்பிட்டியா?” என்று இரவு ,அவளுக்கு ஃபோன் செய்து பேசுவதும் வாடிக்கையானது.
அவளோடு சேர்ந்து தனுவும், கேசவ்வும் பேசுவார்கள்.
மூவரோடு பேசும்போது தியாழினிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் பேசி முடித்து விட்டு வைக்கும் போது மனம் கனத்து விடும்.
‘நம்ம மேல இவ்வளவு பாசம் வைக்குறாங்களே! இவங்களுக்கு நான் செய்யப் போற விஷயம் தெரிஞ்சா என்ன நினைப்பாங்க.’என்று எண்ணித் தவித்தாள்.
நாட்கள் செல்ல, செல்ல அலுவலகத்திற்கு செல்லும் போது மிகவும் சோர்வாக உணர்ந்தாள்.
அவளது சோர்வை ரித்திஷ்ப்ரணவும் உணர்ந்திருந்தான்.
உடம்பு இன்னும் சரியாகவில்லை என்று நினைத்திருந்தான். ஆனால் அவளது மனமல்லவா சரியில்லை.
அவளை அலைய விட வேண்டாம் என்று சைட்க்கு ரித்திஷ்ப்ரணவ் தனியாகவே போய் வந்துக் கொண்டிருந்தான். ஆனால் அவளது முகத்தில் மலர்ச்சியே இல்லை.
சரி சைட்டுக்கு அழைத்துச் செல்வோம். ‘வெளியே போயிட்டு வரும் போதாவது மனம் விட்டு நம்மிடம் பேசுகிறாளா என்று பார்ப்போம்.’ என்று எண்ணியவன், “யாழினி!” என்று அழைக்க.
ஏதோ யோசனையில் இருந்தவளோ, திடுக்கிட்டு திரும்பினாள்.
“ஃபர்ஸ்ட் அவுட்டிங் தான் சொன்னேன் டேட்டிங்னா சொன்னேன். இவ்வளவு ஷாக்காகுற? ஷாக்கை குற. அதுவும் கம்பெனி விஷயமா சைட் விசிட் தானே போகணும்னு சொல்றேன். ரெஸ்பான்ஸே பண்ண மாட்டேங்குறே.” என்று புருவத்தை உயர்த்தினான் ரித்திஷ்ப்ரணவ்.
“ ஓகே சார்!”என்று தலையசைத்தவளுக்கு, ‘அவுட்டிங், டேட்டிங்னு இப்படியெல்லாம் பேசுறாரு. தியா! பீ ஸ்ட்ராங்.’ என்று எண்ணியவள், வேகமாக அங்கிருந்து ஓட.
அதைப் பார்த்த ரித்திஷ்ப்ரணவ் முகத்தில் புன்னகை விரிந்தது.
****************
மாலையில் தயாராக இருந்த தியாழினியை அழைத்துக் கொண்டு, கிளம்பினான் ரித்திஷ்ப்ரணவ்.
ட்ரைவரை வேண்டாம் என்றவன்,
கதவைத் திறந்து வைத்து தியாழினியை ஏற சொன்னவன், அவள் அமர்ந்ததும் கதவை சாத்தி விட்டு ட்ரைவர் சீட்டுக்கு சென்றான்.
இதையெல்லாம் ட்ரைவரும், குறுகுறுவென பார்க்க.
தியாழினிக்குத் தான் நெஞ்சு படபடவென அடித்துக் கொண்டது.
அவனோடு தனியே செல்வதே அவளுக்குப் படபட்பாக இருந்தது. அதுவும் இல்லாமல் உரிமையாக முன்னே உட்காரவைத்து அழைத்துச் செய்வதைப் பார்த்ததும் மயக்கம் வராத குறைதான். இதுல சைட்ல மேலே ஏறுவதை நினைத்து வேற பயம் அதிகரித்தது.
அதையெல்லாம் எண்ணி, அவள் அமைதியாக வர.
அவனோ, உற்சாகமாக விசிலடித்தவாறு வந்தான்.
அவளால் நம்பவே முடியவில்லை. ரித்திஷ்ப்ரணவ்வின் இந்த துள்ளலை கனவில் கூட எதிர்ப்பார்க்கவில்லை.
திரும்பித், திரும்பி அவனை பார்த்துக் கொண்டிருக்க.
“என்ன யாழினி வேணும். எதுக்கு என்னையே சைட் அடிச்சிட்டு இருக்க?” என்று வினவ.
“ஹான்!” என்று தியாழினி அதிர்ச்சியாக அவனைப் பார்க்க.
“இல்லை! என்னையே திரும்பித் திரும்பிப் பார்க்குறியே. அதான் கேட்டேன். என்ன விஷயம்.” என்று புன்னகையுடன் மீண்டும் வினவ
“ ஒன்னும் இல்லை சார்!’ என்றவளது பார்வை, தழைந்தது.
அதற்கும் சிரித்தான் ரித்திஷ்ப்ரணவ்.
சற்று நேரத்தில் அவர்கள் செல்ல வேண்டிய இடமும் வந்து விட.
வண்டியை ஓரமாக நிறுத்தினான்.
கீழே இறங்கிய தியாழினியோ, கண் முன்னே வானாளவ இருக்கும் கட்டிடத்தை மிரண்டு பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அவளது ஃபோன் இசைத்தது.
வழக்கம் போல் அழைத்தது தீபா தான்.
“எப்படி இருக்க தியா!”
“நல்லா இருக்கேன் ஆன்ட்டி.”
“நாளைக்கு லீவ் தானே! எங்க வீட்டுக்கு வா டா.”
“அது அண்ணனோட வாட்டர் பார்க் போகலாம்னு இருக்கோம் ஆன்ட்டி! இன்னொரு முறை வர்றேன். தப்பா நினைச்சுக்காதீங்க.” என்றவள் மனதிற்குள் வழக்கம் போல, தன்னை இழுத்தடிக்கும் அண்ணனையும், வர்ஷிதாவையும் திட்டிக் கொண்டாருந்தாள்.
“அப்போ! இப்போ வர்றியா?” என்று ஆர்வமாக வினவினார் தீபா.
“சைட் விசிட் வந்திருக்கோம் ஆன்ட்டி.”
“ஓ! சைட் விசிட்டா? அப்போ லேட்டாகிடும். இன்னொருமுறை பார்த்துக்கலாம். பை டா.” என்ற தீபா ஃபோனை வைத்து விட.
“ அச்சோ! தியாவுக்கு உயரத்தைப் பார்த்தால் பயம். ப்ரணாக்கு தெரியுமான்னு தெரியலையே.” என்றவர், உடனே மகனுக்கு அழைத்தார்.
காரை நிறுத்தி விட்டு வந்த ரித்திஷ்ப்ரணவ், அவளை அழைத்துக் கொண்டு கட்டிடத்தில் நுழைந்தான்.
ஒவ்வொரு இடமாக பார்வையிட்டுக் கொண்டே, இன்ஜினியரிடம் பேசியவன், மேல ஏறினான்.
தயக்கத்துடன் அவனைப் பின்பற்றினாள் தியாழினி.
ரித்திஷ்ப்ரணவ் ஃபோன் அடிக்க, எடுத்தான் அவன்.
“சொல்லுங்க டாட்! என்ன இந்த நேரத்தில கால் பண்ணியிருக்கீங்க.”
“அது சைட்டுக்கு வந்திருக்கியா?
“யெஸ்!”
“தியாவுக்கு ஹைட்னா பயம். கொஞ்சம் பார்த்துக்கோ.”
“ஓகே டாட். ஐ வில் டேக் கேர்.” என்றவன் தியாழினியைப் பார்க்க.
அவளோ ஏதோ கடவுள் பெயரை முணுமுணுத்துக் கொண்டே வர.
ரித்திஷ்ப்ரணவிற்கு சிரிப்பு தான் வந்தது. ‘ சின்ன குழந்தையாட்டம் என்ன பயம்? கொஞ்சம் விளையாண்டு பார்த்தால் தான் என்ன?’ என்று தோன்ற.
கூட வந்த இன்ஜியரிடம், “ நானே பார்த்துட்டு வர்றேன். நீங்க வேற வேலை இருந்தா பாருங்க.” என்று அனுப்பி வைத்தவன், “யாழினி!” என்று அழைக்க.
அவனருகே சென்றாள் தியாழினி.
“இந்த ரூம் பால்கனி வ்யூ அழகா இருக்கும். வா பார்க்கலாம்.”என்று அழைத்து சென்றவன், அங்கிருந்து கீழே காட்ட.
அவளுக்கு தலைசுற்றவது போல் இருந்தது.
தியாழினி, அவனது கையை இறுகப் பற்றிக் கொண்டாள்.
வியப்புடன் அவளைப் பார்த்தான் ரித்திஷ்ப்ரணவ். முதல் முறையாக அவள், அவனது கையைப் பற்ற, அவன் மனதிலோ தீ பற்றிக் கொண்டது. இன்னும் கொஞ்சம் விளையாடிப் பார்க்க நினைத்தவன், அவளை மேலிருந்து கீழே தள்ளுவது போல் ஆட்டம் காட்ட.
“ஐயோ! பயமா இருக்கு. என்னை தள்ளாதீங்க.” என்று அலறினாள் தியாழினி.
“இங்கே பாரு யாழினி! ஒன்னை ஒன்னும் பண்ணலை.”என்ற ரித்திஷ்ப்ரணவின் சமாதானம் எதுவும் அவளது செவியை எட்டவே இல்லை. சொன்னதையே திரும்ப சொல்லிக் கொண்டிருந்தாள்.
அவளை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் திகைத்த ரித்திஷ்ப்ரணவ், பிறகு அவளை இழுத்து அணைத்தான்.
அவனது அணைப்பில் பாதுகாப்பாக உணர்ந்த தியாழினியின் அரட்டல் மெதுவாக குறைந்தது.
இருவரின் இதயத்துடிப்பின் ஓசை மட்டும் அங்கு ஒலித்துக் கொண்டிருந்தது.