எண்ணம் -28

5
(4)

எண்ணம் -28

‘என்னது அம்மா, அப்பா சாவுக்கு நான் தான் காரணமா? இதை அண்ணனால எப்படி சொல்ல முடிந்தது?’என்று எண்ணி விக்கித்து நின்றவளின் மனதில் அன்றைய நாள் நினைவு இத்தனை வருடங்கள் கழித்தும் கண் முன்னே அப்படியே வந்து நின்றது.

‘“தியா!” என்று மகிழ்வுடன் ஒரு குரல் ஒலிக்க.

“என்னங்க! கூப்டிங்களா?”என்று கிச்சனிலிருந்து சந்தியாவும், “கூப்டிங்களா அப்பா!” என்றவாரு ரூமிலிருந்து தியாழினியும் வர.

திருதிருவென முழித்தார் ரமேஷ்.

சந்தியாவும், அங்கு மேட்ச் பார்த்துக் கொண்டிருந்த நேத்ரனும் சிரிப்பை அடக்கிக் கொண்டனர்.

தியாழினி தந்தையைப் பார்த்து முறைத்தாள்.” அப்பா! என்னைத் தானே கூப்பிட்டீங்க. அப்புறம் ஏன் அம்மாவும் வந்து நிக்கிறாங்க? முதல்ல அவங்களுக்கு வேற பேரு வைங்க.” என.

“ அடியே சில்வண்டு! உனக்கு முன்னாடி நான்தான் அவர் லைஃப்ல வந்தேன். ஃபர்ஸ்ட் என்னை தான் தியான்னு கூப்பிட்டார்! நீ சொல்றதுக்காகல்லாம் வேற பேருல கூப்பிட மாட்டார்.” என்று சொல்லி சிரிக்க.

டிவி பார்த்துக் கொண்டிருந்த நேத்ரனோ, அம்மாவிற்கு ஹைஃபை கொடுத்தான்.

இருவரையும் முறைத்துக் கொண்டே, ரமேஷை பார்த்தவள்,“அப்பா!” என்று சினுங்கலாக அழைத்தாள்.

“ உன்னை எல்லோரும் கூப்பிடுறது போல தியான்னு கூப்பிட்டா நல்லாவா இருக்கும். நீ என் தங்கப்புள்ளடா. நீ வந்து தான் எங்க வாழ்க்கை இனிமையானது. அதான் அப்பா, உன்னை யாழினின்னு கூப்பிடுறேன்.” என்றுக் கூறிய ரமேஷின் தோளில் சலுகையாக சாய்ந்துக் கொண்டு, அம்மாவையும், அண்ணனையும் பார்த்து நாக்கை துருத்தி, பதிலுக்கு வம்பு பண்ணினாள் தியாழினி.

“போதும்! போதும்! உங்க பொண்ணை செல்லம் கொஞ்சுனது. முதல்ல எதுக்கு கூப்பிட்டீங்க. அதை சொல்லுங்க. கிச்சன்ல எனக்கு வேலை இருக்கு.” என்றாள் சந்தியா.

“நீ பாட்டி ஆகிட்ட.”

“என்ன சொல்றீங்க?”

“நம்ம நந்தனாவுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு. அண்ணன் ஃபோன் பண்ணாங்க. ஆப்ரேஷனாம். ஈவினிங் ரெடியா இரு. கால் டாக்ஸி புக் பண்றேன். பிள்ளைங்களையும் அழைச்சிட்டு போய் குழந்தையைப் பார்த்துட்டு வந்துடுவோம்.”

“ஹை! குட்டிப்பாப்பா பொறந்திருச்சா ஜாலி!” என்று கத்தினாள் தியாழினி.

மகளைப் பார்த்து புன்னகைத்த சந்தியா, “ஹாஸ்பிடலுக்கு எல்லாம் பிள்ளைங்க வேண்டாம். நீங்களும், நானும் மட்டும் போகலாம்.” என்றாள்.

“இல்லை சந்தியா! குழந்தையைப் பார்க்க எப்படியும் பிள்ளைங்களை கூட்டிட்டு தான் போகணும். இங்கே பார்க்கலைன்னா, அப்புறம் வீட்டுக்கு கூட்டிட்டு போகணும். அங்க அண்ணன் பிள்ளைங்க கிட்ட ஏதாச்சும் வம்பு பண்ணுவாரு. இதை தொடாதே! அதை தொடாதேன்னு சொல்லுவாரு. பிள்ளைங்க மனசு சங்கடப்படும். ஹாஸ்பிட்டலிலே எல்லோரும் போய் பார்த்துட்டு வந்துடுவோம்‌.”

“சரி!” என்ற சந்தியாவுக்கு, ஏனோ மனம் சஞ்சலத்தில் ஆழ்ந்தது.

“ எனக்கு செமஸ்டர் எக்ஸாம் ஸ்டார்டாகிடுச்சு. ஈவினிங் படிக்கணும். நான் வரலை.” என்று நேத்ரன் இடையிட்டான்.

“அப்ப நீ வரலையா கண்ணா? இப்ப என்ன பண்றது மூணு பேருக்காக கால் டாக்ஸி புக் பண்ணனுமா. பைக்லையும் அவ்வளவு தூரம் போக முடியாது. நீ இங்கேயே இருக்கிறியா தங்கம். நான் அண்ணனோட உன்னை இன்னொருநாள் கூட்டிட்டு போறேன்.” என்று தியாழினியிடம் ரமேஷ் கூற.

“அப்பா ப்ளீஸ்பா! நானும் வர்றேன். குட்டி பாப்பாவை பார்க்கணும்னு ஆசையா இருக்கு.” என்று கண்ணை சுருக்கிக் கெஞ்சினாள் தியாழினி.

மறுக்க இயலாமல் அழைத்துச் சென்றனர், ரமேஷ், சந்தியா தம்பதியினர்.

வீட்டிலிருந்து போகும்போது பேச்சும், சிரிப்புமாக சென்றனர்.

குழந்தையைப் பார்த்து விட்டு திரும்ப வரும் போது, ஒன்வேயில், எதிர்ப்பாராமல் ஒரு கார் கட்டுப்பாட்டு இழந்து வந்து மோத, வண்டியில் இருந்த மூவரும் தூக்கி வீசப்பட்டனர்.

தியாழினி லேசான அடியுடன் உயிர்ப்பிழைத்திருக்க, சந்தியா நிகழ்விடத்திலே உயிர் பிரிந்திருக்க,

 . ரமேஷோ உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.

அருகே இருந்த ஹாஸ்பிடல் என்று குழந்தையைப் பார்க்க சென்ற, அதே ஹாஸ்பிடலில் சேர்க்க.

எந்த அண்ணன் வீட்டிற்கு போனால் பிள்ளைகள் சங்கடப்படும் என்று நினைத்தாரோ,

 அந்த அண்ணனிடமே பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு உயிரை விட்டார் ரமேஷ்.

 ஒரு நொடியில் அழகிய கூடு ஒன்று, கலைந்துப் போனது.

‘இதில் என்னோட தவறு என்ன? அம்மா, அப்பாவோட வெளியே போகணும்னு நினைத்தது தவறா?

அண்ணன் மட்டும் வந்திருந்தால் கால் டாக்ஸியில் போய் இருக்கலாம் தானே‌. அப்போ அந்த விபத்து நடந்ததற்கு அண்ணா தானே காரணம். ஆனால் அண்ணன் என்னை குற்றம் சுமத்துறானே!’ என்று எண்ணிக் கலங்கித் தவித்தாள் தியாழினி.

திடீரென்று அவள் தோளில் ஒரு கை விழ. திரும்பிப் பார்த்தாள் தியாழினி.

அங்கு நின்றிருந்தவளோ வர்ஷிதா.

தனது தோழியை பார்த்ததும், “வர்ஷி!”என்று அவள் மேல் சாய்ந்து அழ ஆரம்பித்தாள் தியாழினி.

 “செய்யறதெல்லாம் செஞ்சுக்கிட்டு இப்போ எதுக்கு அழற தியா? நேத்ரா பாவம்! உனக்காக அவரோட எல்லா கனவையும் விட்டுக்கொடுத்துட்டார். இப்பவும் உனக்காகத்தான் பார்க்குறார். எங்க வீட்ல எங்க காதலைப் பத்தி சொன்னா, வீடு, பிஸ்னஸ்னு எல்லாத்தையும் விசாரிப்பாங்க.

பிஸ்னஸ் சரியில்லைன்னா, வீட்டோட மாப்பிள்ளையா வரச் சொல்லுவாங்க. உன்னை விட முடியாதுங்குறதுக்காகத் தான் பார்க்குறார். நீ மட்டும் எப்படியாவது கொட்டேஷன் எவ்வளவுன்னு சொல்லிட்டா, இந்த ப்ராஜெக்ட் நமக்குத் தான். எங்க மேரேஜூம் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நடக்கும்.”

“அது வந்து … ரித்திஷ்ப்ரணவ் சார் ஃபேமிலியே என் மேல பிரியமா இருக்காங்க. நான் இந்த தப்பை செஞ்சா நம்பிக்கை துரோகம் இல்லையா?” என்று அழுதுக் கொண்டே வினவினாள் தியாழினி.

“இப்போ கொஞ்ச நாள் பழகுன அந்த குடும்பத்தை நினைக்கிறியே. நீ சின்ன பிள்ளையா இருக்கும் போது, நேத்ரன் உன்னை எப்படி எல்லாம் கவனிச்சுக்கிட்டாரு. நீ தானே என் கிட்ட அதைப்பத்தி எல்லாம் சொன்ன‌.”

“ஆமாம்!” என்று தலையசைத்தவளுக்கு,பெரியப்பா வீட்டில் அடைக்கலம் ஆன பிறகு நடந்ததெல்லாம் நினைவுக்கு வந்தது.

ரமேஷிடம் சேமிப்பு என்று பெரியதாக எதுவும் இல்லை. வீடு கட்டுவதற்காக அலுவலகத்திலும் லோன் வாங்கி இருக்க. இறந்த பிறகு அந்த லோனை மட்டும் தள்ளுபடி செய்திருந்தனர்.

ஆனால் அவர்களது வீடு மெயினான இடத்தில் இருந்தது.

அந்த இடத்தை விற்க இவர்களது பெரியப்பா முயற்சி செய்ய.

“கொஞ்ச நாளாகட்டும் பெரியப்பா. இப்பவே வித்தா உங்களை தான் தப்பா பேசுவாங்க. அதுவுமில்லாமல் இன்னும் இரண்டு, மூணு வருஷத்துல அந்த இடத்தோட மதிப்பு டபுளாகும். இப்போதைக்கு வாடகை விடலாம் பெரியப்பா. அம்மாவோட நகை இருக்கு அதெல்லாம் நீங்க வித்து எங்கள படிக்க வைங்க.” என்று நேத்ரன் கூற.

அவனது ஐடியா அவருக்கு பிடித்தது.

அவனையும் பிடித்தது. ஏற்கனவே ஆண் பிள்ளை என்று நேத்ரன் மேல் பிரியம் தான். ஆனால் படிக்க வைக்கிற அளவுக்கு மனமில்லாமல் இருந்தது. படிக்க வைக்கலான்னா ஊரார் பழிப்பாங்களேன்னு யோசனையாக இருந்தது. இப்போ எல்லாவற்றுக்கும் தீர்வு சொன்னவனை மிகவும் பிடித்துப் போனது.

நேத்ரனுக்கு எல்லாமே கிடைத்தது. அவனை நன்கு கவனித்தார். கல்லூரிக்கு போறவனுக்கு நேரத்தோடு சாப்பாடு ரெடியாகிடும். பஸ் செலவுக்கு பணமும் கொடுத்து விடுவார்.ஆனால் தியாழினியையோ பொறுமையா தானே ஸ்கூலுக்கு போற. அப்புறம் சாப்பிடு என்று கூறி விடுவர்.

எல்லோரும் சாப்பிட்டதும் மீதி கொஞ்சம் கிடைக்கும். பசி தாங்காமல் தவித்தவள், அண்ணனிடம் கூற.

“கொஞ்ச நாள் பொறுத்துக்கோ தியா! நான் படிப்பை முடிச்சு வேலைக்கு போயிட்டா, உன்னை இங்கே இருந்து கூட்டிட்டு போறேன். அதுவரைக்கும் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ.” என்றவன், தியாழினி கண்கலங்கவும்,

“அழாதே குட்டி மா! இந்தா பஸ்ஸுக்காக பெரியப்பா குடுத்த காசு. நான் நடந்து போறேன். நீ இதுல ஏதாவது வாங்கி சாப்பிடு.” என்று தங்கையிடம் அந்தப் பணத்தை நீட்ட.

“இல்லை! வேணாம்ணா.” என்றாள் தியாழினி.

“ப்ச் புடிடா.” என்று வற்புறுத்தி அவளது கையில் திணிப்பான்.

அந்தக் காசில் டீ, காஃபி வாங்கிக் குடித்து ஒப்பேத்தினாள் தியாழினி.

நேத்ரன் சொன்னது போலவே படிப்பை முடித்ததும் வேலைக்கு சென்றவன், தியாழினியை அங்கிருந்து அழைத்துச் சென்றான், அவர்கள் வீட்டிற்கு செல்லாமல் வாடகைக்கு வீடு எடுத்தான்.

“ஏன் அண்ணா? நம்ம வீட்டை இன்னும் அவங்க காலி பண்ணலையா?” என்று தியாழினி வினவ.

“இல்லை! அங்கப் போனா, அம்மா, அப்பா ஞாபகம் வருது. அதான் என்னோட ஆஃபிஸுக்கும், உன்னை சேர்க்கப் போற காலேஜுக்கும் பக்கமா இருக்குறது போல வீடு வாடகைக்குப் பார்த்திருக்கேன்.” என்றான்.

ஒரு வருடம் வேலைப் பார்த்து, தொழில் நுணுக்கங்களை கற்றுக் கொண்டவன்,

அவர்களது வீட்டையும் விற்க முயன்றான்.

அதைக் கேள்விப்பட்டு தடுக்க வந்த பெரியப்பாவையும் எடுத்தெறிந்து பேசினான்.

“நீங்க இதுல எல்லாம் தலையிடாதீங்க. அப்புறம் எங்க அம்மாவோட நகையெல்லாம் கேட்டு கேஸ் போடுவேன். உங்கக் கிட்ட கொடுத்ததுக்கு ஆதாரம் இருக்கு

“ என்று மிரட்ட.

“எப்படியோ போய் தொலைங்க.” என்று அவர் ஒதுங்கிக் கொண்டார்.

வீடு வித்தப் பணத்தில் புதிதாக கன்ஸ்ட்ரக்சன் பிசினஸை தொடங்கினான்‌ ஆனால் அவன் எதிர்பார்த்தது போல் லாபம் வரவில்லை. தொழில் மட்டும் பிரச்சனை என்றால் மெதுவாக முன்னேறலாம் என்று நினைத்திருப்பான். இதில் அவனது வாழ்க்கையும் பிணைந்திருக்க, தியாழினியின் உதவியை நாடினான்.

அதை எல்லாம் நினைத்துப் பார்த்தவள், குழம்பித் தவித்தாள்.

“ஏதாவது யோசிச்சு குழம்பாதே. உன் அண்ணனை மட்டும் நினை.” என்று அவளை அழைத்துக் கொண்டு கீழே கார் பார்க்கிங்கு அழைத்துச் சென்றாள்.

அங்கு சோகமாக இருந்த நேத்ரனைப் பார்த்ததும்‍, தியாழினியின் மனமும் கலங்கித் தவித்தது.

“ப்ச்! போ தியா!நேத்ராவை சமாதானம் படுத்து.” என்று வர்ஷிதா கூற.

 “ சாரி அண்ணா! “ என்று தியாழினி ஆரம்பிக்க.

“சாரி குட்டிமா!” என்று அதே நேரம் நேத்ரனும் கூற, இருவரும் சிரித்தனர்.

 “போதும் உங்க பாசமலர் படம்!” என்று இடையிட்ட வர்ஷிதா,”தியா சம்மதம் சொல்லிட்டா! அவ கண்டிப்பா அந்த கொட்டேஷன் அமவுண்ட தெரிஞ்சுக்கிட்டு வரேன்னு சொல்லிட்டா. சொல்லு தியா உங்க அண்ணன் கிட்ட.”என்று கூற.

 வேறு வழி இல்லாமல் அண்ணனுக்காக தலையாட்டினாள் தியாழினி.

மறுநாள் அலுவலகத்திற்கு சென்றவளால் ரித்திஷ்ப்ரணவ் முகத்தைப் பார்க்க முடியாமல் குற்றவுணர்ச்சியால் தவித்தாள்.

‘ கடவுளே! அந்த கொட்டேஷன் அமவுண்ட் என் பார்வைக்கு வராமலே போகணும்.’ என்று இடைவிடாது வேண்டிக் கொண்டிருந்தாள்.

ஆனால் கடவுள் அவளது வேண்டுதலுக்கு செவி சாய்க்கவில்லை.

மதிய உணவிற்குப் பிறகு,” யாழினி!”என்று அழைத்தான் ரித்திஷ்ப்ரணவ்.

“சார்!”என்று பதட்டத்துடன் திரும்பினாள் தியாழினி.

“எதுக்கு இவ்வளவு பதட்டம்? ”

“ஒன்றும் இல்லை.” என்பது போல் தலையசைத்தாள் தியாழினி.

“இந்த கம்பெனிக்கு கொட்டேஷன் ஃபில் பண்ணிருக்கேன். இதை டெஸ்பாட்சுக்கு அனுப்பிடு. முக்கியமான மீட்டிங் இருக்கு. அவசரமாக நான் போகணும். இல்லைன்னா நானே தான் இந்த வேலையை செய்வேன். வேற யார்கிட்டயும் இந்தப் பொறுப்பை ஒப்படைக்க மாட்டேன். கவனம்.” என்று விட்டு ரித்திஷ்ப்ரணவ் சென்று விட.

படபடக்கும் நெஞ்சை அழுத்தியவாறே அந்த கவரிலிருந்த பேப்பரைப் பிரித்து அதில் ஃபில் பண்ணியிருந்த அமவுண்டைப் பார்த்தாள். அந்த எண்கள் அவள் கண் முன்னே பறந்து கொண்டிருந்தன.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!