“தியா! தியா குட்டி! எழுந்திருடா…” என்று நேத்ரன் தியாழினியை எழுப்ப முயன்றுக் கொண்டிருந்தான்.
“டேய் அண்ணா! இப்ப தானே தூங்குனேன். அதுக்குள்ள விடிஞ்சிருச்சா. இந்த சூரி மட்டும் எப்படி தான் இவ்வளவு சுறுசுறுப்பா இருக்கானோ!” என்று தூக்கக் கலக்கத்தோடு தியாழினி கூற.
ஷாக்கானான் நேத்ரன்.
“யாருடா அந்த சூரி?” என்று படபடப்புடன் வினவ.
“சூரியனை தான் சொல்றேன். இன்னும் கொஞ்ச நேரம் தூங்க விடுணா. காலேஜ் தான் முடிஞ்சிருச்சே!” என்றுக் கூறி விட்டு போர்வையை எடுத்து தலை முழுவதும் மூடிக் கொண்டாள்.
சிரமப்பட்டு விழிகளைத் திறந்த தியாழினி, தனதருகே கிடந்த செல்ஃபோனை தேடி எடுத்து மணியை பார்த்தவளோ, “டேய் அண்ணா! திஸ் இஸ் டூமச். மணி ஏழு தான். அதான் கண்ணே தொறக்க முடியலை. இவ்வளவு இயர்லியா ஏன்னா வந்து எழுப்புற? நான் இன்னும் கொஞ்சம் நேரம் தூங்குறேன்.” என்று படுக்க முயன்ற தியாழினியை தடுத்தான் நேத்ரன்.
“அண்ணா! நான்லாம் செமஸ்டருக்கே எட்டு மணிக்கு முன்னால எழுந்தது கிடையாது.
இன்டர்வியூ பத்து மணிக்கு தானே அதுக்காக ஏன் அண்ணா இப்படி அர்த்தராத்திரிலே எழுப்புறீங்க.”
“குட்டி மா! சீக்கிரம் போகணும் டா லேட்டா போனா பிரச்சனை ஆயிடும். கே.ஆர் டைம் கீப்பப் பண்ற ஆள். பங்சுவாலிட்டியை ரொம்ப எதிர்ப்பார்ப்பான்.” என்று நேத்ரன் கூற.
“ டேய் அண்ணா உன் தொல்லை தாங்க முடியலை. ஹாஸ்பிடல்ல இருந்து வந்ததுல இருந்து கே.ஆர், கே.ஆர்னு சொல்லி உயிரை வாங்குற. கே.ஆருக்கு இப்படி இருந்தா பிடிக்கும். அப்படி இருந்தா புடிக்கும்னு ரொம்ப படுத்துற அண்ணா.”
“ப்ளீஸ்! குட்டி ஒரு த்ரீ மன்த்ஸ் மட்டும் அண்ணனுக்காக பொறுத்துக்கோ. இப்போ எழுந்து கிளம்புடா. ப்ளீஸ்.”என்று நேத்ரன் கெஞ்ச.
“ஓ மை கடவுளே! அடுத்த மூணு மாசம் அந்த கே ஆரை பொறுத்துக்குற அளவுக்கு எனக்கு பொறுமையை கொடு. “ என்று கடவுளிடம் மனு போட்டவளுக்குத் தெரியவில்லை. காலம் முழுவதும் அந்த கே.ஆருடன் மல்லுக்கட்டப் போகிறாள் என்று…
நீட்டி, நெளித்த தியாழினி படுக்கையில் உருண்டுக் கொண்டே, “ அண்ணா! டீ போட்டு தா… அப்ப தான் தூக்கமே கலையும்.”என்றாள்.
“நேத்ரா! தியா!” என்று குரல் கொடுத்துக்கொண்டு கரெக்டாக அந்த நேரத்தில் வந்தாள் வர்ஷிதா.
“பாருடா! உனக்கு விஷ் பண்றதுக்காக வர்ஷி கூட வந்துட்டா.” புன்னகையுடன் கூறினான் நேத்ரன்.
“ஹே! தியா! இன்னும் எழுந்திருக்கவே இல்லையா?” என்று வினவினாள் வர்ஷிதா.
“இல்லை வர்ஷு! அவ டீ குடிச்சா தான் எழுந்திருப்பேன்னு சொல்றா.” என்று நேத்ரன் கூற.
“ஹே! நான் டீ போட்டுக் கொண்டு வர்றேன்.”என்று உற்சாகமாகக் கூறினாள் வர்ஷிதா.
“ஐயோ! டீயை நீ போடப் போறியா? அப்போ எனக்கு டீயே வேண்டாம். ஆளை விடு! அப்புறம் நான் வேண்டாம்னு சொன்னேன்னு எங்க அண்ணனுக்கு போட்டுக் கொடுத்து அவனைக் கொல்லப் பார்க்காதே. அவனே இப்போ தான் ஹாஸ்பிடல்ல இருந்து பொழைச்சு வந்திருக்கான்.”என்றவள் எழுந்து குளிக்கச் சென்றாள்.
பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு நேத்ரன் இருக்க.
முகத்தை சுருக்கிய வர்ஷிதாவோ,” நேத்ரா! எங்க வீட்ல தான் கிச்சன் பக்கம் விட மாட்டேங்குறாங்கன்னா, இங்கேயாவது ட்ரை பண்ணலாம்னு பார்த்தா, தியாவும் கேலி பண்றா?அப்புறம் நான் எப்ப சமையல் கத்துகிறது?” என்று சிணுங்கினாள்.
“அதுக்கு பேரு சமையல் கத்துக்குறது இல்லை. டீ போடுறது.” என்று குளியலறையில் இருந்து குரல் கொடுத்தாள் தியாழினி.
வர்ஷிதா முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள.
“நீ கவலைப்படாதே செல்லம். கல்யாணம் முடிஞ்சு நீ இங்கே வரும் போது நான் கத்துத் தரேன் டார்லிங்.” என்ற நேத்ரன்,”நம் சமையலறையில் உப்பா,சக்கரையா?” என்று பாடியவாறே வர்ஷிதாவை நெருங்கினான்.
“செருப்பு!’ என்ற தியானியின் குரலில் பதறி விலகினான் நேத்ரன்.
“எருமை! எவ்வளவு ரொமாண்டிக்கா நேத்ரா பாடினார். நீ கிண்டல் பண்றியா?”
“பின்னே சின்ன பொண்ணை வச்சுக்கிட்டு நீங்க பாடி, ஆடுறது எல்லாம் டூமச் இல்லையா? உங்க ரொமான்ஸெல்லாம் வெளியே போய் வச்சுக்கோங்க.” என்று தியாழினி பாத்ரூமில் இருந்து கத்த.
“ நாங்க போய் அரை மணி நேரம் ஆகுது.” என்று வர்ஷிதா கூறினாள்.
நேத்ரன் முகத்திலும் புன்னகை.
“ சரி! தியா பசி தாங்க மாட்டா. நான் ஜூஸ் போடுறேன் எனறு மாதுளம் பழத்தை எடுத்து உரித்து கொண்டு இருந்தான் நேத்ரன்.
நீண்ட நேரம் ஆகியும் தியாழினி வெளியே வரவில்லை.
கடிகாரத்தையும், தியாழினியின் அறையும் மாறி மாறி பார்த்த நேத்ரன்,” வர்ஷு! டைம் வேற ஆச்சு. இன்னும் தியா கிளம்பாமல் என்ன பண்றான்னு தெரியலை. நீ போய் பார்த்துட்டு வா” என்று அவளை அனுப்பினான்.
தனது கஃபோர்டுக்குள் தலையை நுழைத்துக் கொண்டு தீவிர யோசனையில் இருந்தாள் தியாழினி, “தியா!” என்று சத்தம் போட்டுக் கொண்டு வந்தாள் வர்ஷிதா.
அவளது குரலில் தூக்கிவாரிப்போட, “ எருமை! எதுக்குடி இப்படி கத்துற? பயந்துட்டேன் தெரியுமா?.”
என்றாள் தியாழினி.
“ஹேய்! நீ பயப்படுற ஆளா டி? பத்து பேரே பதற வைக்குற ஆள் டி நீ.”என்றாள் வர்ஷிதா.
“உனக்கு இப்போ என்னடி பிரச்சனை? நானே எதிரியோட இடத்துல வாண்ட்டடா போய் தலையை குடுக்கப் போறேன். இது சரியா வருமான்னு டென்ஷனா இருக்கேன்.”
“என்ன தியா! உங்க அண்ணா என்னென்ன கிளம்பலையான்னு கேட்டுட்டு இருக்காங்க. நீ இப்போ பேக்கடிக்கிறியே!”
“நான் எப்போ போக மாட்டேன்னு சொன்னேன். ஒரு தடவை கமிட்டாகிட்ட, என் பேசசை நானே கேட்க மாட்டேன்.சரி என்ன டிரஸ் போடலாம்னு ஏதாவது ஐடியா குடு.”என்றாள் தியாழினி.
“வேலைக்கு தானே போற. என்னமோ அந்த ஆளை கவுக்க போற மாதிரி ட்ரெஸ்ஸை தேடிட்டு இருக்க.”
“ ஹேய்! ஃபர்ஸ்ட் இம்ப்ரேஷன் இஸ் பெஸ்ட் இம்ப்ரெஷன். பார்த்தவுடனே ஒரு மரியாதை வரணும். அதுக்கு தான் உன்னை கேட்டேன்.”
“அப்போ இந்த காட்டன் குர்தி போடு. ரிச் லுக் தரும்.” என்று வெள்ளை நிற குர்தியை தேரந்தெடுத்துக் கொடுத்தாள்.
அதைப் பார்த்ததும் முகம் மலர்ந்த தியாழினி, “தேங்ஸ்டி செல்லம். இதுக்கு தான் வர்ஷு வேணும்ங்குறது. டூ மினிட்ஸ்டி ரெடியாகிட்டு வந்துடுறேன்.” என்றவள், சொன்னது போலவே தயாராகி வந்தாள்.
அவள் முகத்தில் யோசனை படர.
தங்கையின் அருகில் வந்தவன் அவள் தலையை வருடி,”குட்டிமா! பயப்படாதே!”என்றான்.
“பயமா? எனக்கா?நெவர்.”என்றாள் தியாழினி.
“அப்போ ஏன் முகம் டல்லடிக்குது.”
“அது ஒன்னுமில்லைண்ணா. இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணி, எனக்கு வேலை கிடைக்காமல் போயிட்டா என்ன பண்றது?”
“அந்த கே. ஆரை பத்தி எனக்கு நல்லாத் தெரியும். நான் சொல்றபடி நீ நடந்துக்கிடடாலே போதும். இன்டர்வியூக்கு முன்னால ஹால்ல வெயிட் பண்ண சொல்லுவாங்க. அங்க உட்கார்ந்துட்டு லொட, லொடன்னு பேசாமல் அமைதியா இரு.”
“இதென்ன முட்டாள்தனமா இருக்கு. வெயிட்டிங் ஹால்ல நாங்க எப்படி இருந்தா அவருக்கு என்ன வந்ததாம்? எவ்வளவு நேரம் உட்கார வைப்பாங்களோ? ஐயோ! போரடிக்குமே.”
“ப்ளீஸ் குட்டி! நான் சொல்றதை கேளு. அங்க படிக்க ஏதாவது புக்ஸ் இருக்கும். அதை எடுத்து படி. நல்லா கேட்டுக்கோ அவனுக்கு அதிகம் பேசுறதும் பிடிக்காது.”என்றான் நேத்ரன்.
“என்னது பேசுறது பிடிக்காதா? அப்போ அவங்க வீட்ல உள்ளவங்க எல்லாம் எப்படி பேசுவாங்கா? சைகையிலா”என்று நக்கலாக வினவினாள் தியாழினி.
“ப்ச்! இந்த வாய் தானே வேணாங்கறது. அவனோட பிஏவை வேலையை விட்டு தூக்குனதுக்கு காரணமே தேவையில்லாம வெளி இடத்தில பேசிட்டு இருந்தாங்கன்னு தான்.”
“என்னண்ண சொல்றீங்க? அந்த ஆளு என்ன சைக்கோவா? எப்படி பேசாமல் இருக்க முடியும்? வேலை கிடைச்சாலும் அங்க இருக்கிறது ரொம்ப கஷ்டம் போலயே.”என்றாள் தியாழினி.
“ஒரு மூணு மாசம் தானே அது வரைக்கும் அண்ணனுக்காக கொஞ்சம் அடக்க ஒடுக்கமாக இருந்துட்டு, நமக்கு வேண்டிய தகவலை தெரிஞ்சுக்கிட்டு ஓடி வந்துடு.”
“ஐ வில் ட்ரை அண்ணா.முடிஞ்ச வரைக்கும் நான் ஆபீஸ்ல அமைதியா இருக்க பாக்குறேன். அப்படி இல்லன்னா அந்த கே. ஆரை எனக்கேத்த மாதிரி மாத்திடுவேன்.”
“ என்னடி சொல்ற ? நீ ஒன்னும் யாரையும் திருத்துற வேலையைப் பார்க்க வேண்டாம். எதுக்காக அங்கப் போறியோ அதை மட்டும் செஞ்சிட்டு, வேற எந்த வம்பு தும்புக்கும் போகாமல் நல்லபடியா வந்துடு தாயே!” என்று வர்ஷிதா கூற.
“ட்ரை பண்றேன் செல்லம். பசிக்குது முதல்ல சாபபாடு எடுத்து வை.” என்றவள், நேத்ரன் செய்து இருந்த கிச்சடியை சாப்பிட்டு விட்டு, வ
மாதுளம்ஜுஸையும் பருகி விட்டு தெம்பாக சென்றவள், நன்றாக வம்பு வளர்த்தாள்.
****************
நேத்ரன் சொன்னது போலவே இன்டர்வியூவிற்கு முன்னதாகவே சென்றாள்.
ரிசப்ஷனில் இன்டர்வியூவிற்கு வந்ததாக கூற, அவளை ஒரு அறைக்கு அழைத்துச் சென்று, காத்திருக்குமாறு புன்னகையுடன் ரிசப்ஷனிஸ்ட் கூறினாள்.
அங்கோ நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். அவர்களுடன் தியாழினியும் ஐக்கியமானாள்.
நேத்ரன் கூறியது போலவே நல்ல பிள்ளையாக காத்திருக்கும் அறையில் அமர்ந்து இருந்தாள்.
அக்கம், பக்கம் இருப்பவர்களுடன் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளாமல், அங்கிருந்த மேகஸினை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தாள்.
இன்டர்வியூ நேரமான பத்து மணியை தாண்டியும் அவர்கள் அழைக்கப்படாமல் இருக்க. தியாழினியின் பொறுமை பறந்தது.
பொறுத்து பொறுத்துப் பார்த்தவள், மணி பதினொன்றானதும், எழுந்து ரிசப்ஷனை நோக்கி சென்றாள்.
“ஹலோ மேம்! எங்க உங்க எம். டி அவரைப் பார்க்கணும்”என்றாள் தியாழினி.
“சார் இன்னும் வரலை. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.” என்று ரிசப்ஷனிஸ்ட் கூறவும்,
தியாழினியின் பொறுமை காற்றில் பறந்தது.
“வாட்? உங்க எம். டி இன்னும் வரலையா? பத்து மணிக்கு இன்டர்வியூ என்று சொல்லிவிட்டு இன்னமும் வராமல் இருக்காரே. பங்சுவாலிட்டினா என்னன்னு தெரியுமா?” என்றாள் தியாழினி.
“மேம்! கொஞ்சம் பொறுமையா இருங்க.”
“என்ன பொறுமையா இருக்கிறது. இவ்வளவு பெரிய கம்பெனியோட எம்.டி சொன்ன சொல்லை காப்பாத்தலைன்னா, சொன்ன மாதிரி பில்டிங்லாம் எப்படி கட்டித்திருவார். இர்ரெஸ்பான்ஸிபல் பர்ஸன்.”என்று திடடித் தீர்த்தாள் தியாழினி.