“அது வந்துண்ணா!” என்று தயங்கியபடி எழ முயன்றாள் தன்வி.
“சாப்பிட்டு முடி!” என்றவன் கைகளைக் கட்டிக் கொண்டு நிற்க.
தன்விக்கு இவ்வளவு நேரம் ரசித்து சாப்பிட்ட உணவு தொண்டைக்குள் இறங்க மறுத்தது.
மகளைப் பார்த்து இரக்கப்பட்ட தீபாவோ,“ வா ரித்து! நீயும் உட்காரு சாப்பிடலாம்.” என்று தட்டை எடுத்து வைத்து மகனை சாப்பிட அழைத்தார்..
“ இருக்கட்டும்மா!” என்றான் ரித்திஷ்பிரணவ்.
தன்வி பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு, “சாரி! அண்ணா.” என்றாள்.
“கேசவ்வும், “ சின்ன குழந்தை டா! தெரியாமல் பேசிட்டா.” என்று சமாதானம் செய்ய முயன்றார்.
“அதைத் தான் நானும் சொல்கிறேன். வயசுக்கு தகுந்த மாதிரி பேசணும்.”என்று இறுக்கமான குரலில் கூற.
கண்கள் கலங்க அண்ணனைப் பார்த்தாள் தன்வி.
“என் முகத்தையே பார்த்துட்டு இல்லாமல் சீக்கிரமா சாப்பிட்டுட்டு எக்ஸாமுக்கு படிக்கிற வேலையை பாரு. ஸ்டெடி ஹாலிடேவை கொஞ்சமாவது படிக்க பயன்படுத்து.” என.
“சரிண்ணா!” என்றவள், பாதி சாப்பாட்டிலே மீண்டும் எழுந்திருக்க முயல.
அதற்கும் முறைத்தான் ரித்திஷ்பிரணவ்.
அவனது பார்வையில் அரண்ட தன்வி வேகமாக சாப்பிட்டாள்.
தீபா,” டேய் நீயும் உட்காருடா. அதிசயமா இன்னைக்கு தான் வீட்டுல இருக்க.”என்றார்.
“ப்ச்! சாப்பிட மூடு இல்லை . எனக்கு வேண்டாம்.” என்று விட்டு வெளியே கிளம்பினான் ரித்திஷ்பிரணவ்.
“என்னைக்கோ ஒரு நாள் தான் லஞ்சுக்கு வீட்டுக்கு வருவ.”என்று தீபா கூற வருவதைக் காதில் வாங்காமல் அங்கிருந்து கிளம்பி விட்டான்.
“ம்! மட்டன் பிரியாணி! அவனுக்கு குடுத்து வைக்கலை.” என்று தோளைக் குலுக்கிய தீபா, சாப்பிட ஆரம்பித்தார்.
“ஆனாலும் உங்க பையன போல ஒரு ஆளை பார்த்ததே இல்லைமா. சாப்பிட வான்னு கூப்பிட்டா, எனக்கு பசிக்கலை வேணாம்னு சொல்லுவாங்க. இல்லைனா நான் டென்ஷனா இருக்கேன் வேணாம்னு சொல்லுவாங்க. அதை விட்டுட்டு சாப்பிட மூடு இல்லைன்னு சொல்லிட்டு போறாரு.”என்றாள் தன்வி.
“என்ன ரித்து!” என்று கேசவ் அழைக்க.
“ஐயோ! நான் இல்ல!” என்று வேகமாக பிரியாணியை எடுத்து வாயில் அடைத்துக் கொண்டாள் தன்வி.
தீபாவும், கேசவ்வும் விழுந்து, விழுந்து சிரிக்க.
நிமிர்ந்து பார்த்த தன்வி, அங்கு யாரும் இல்லை என்றதும் இருவரையும் பார்த்து முறைத்தாள்.
“இவ்வளவு பயம் இருக்குல்ல? அப்புறம் ஏன் அவனைப் பத்தி பேசுற?” என்று கேசவ் கிண்டலடிக்க.
“டாட்! நீங்க இரண்டு பேரும் அண்ணனுக்கு தானே சப்போர்ட் பண்ணுவீங்க . அவரை ஒரு வார்த்தை சொல்லக் கூடாதுன்னு தானே என் வாயை மூடுறிங்க.” என்று முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு வினவினாள் தன்வி.
“ ஹா! ஹா! சும்மா சொல்லிப் பார்த்தேன் அம்மு! ஆனால் உன் அண்ணனுக்கு இவ்வளவு பயப்படுவேன்னா, எதுக்கு அவனைப் பத்தி பேசுற.”
“அப்புறம் அவர் பண்ண காரியத்துக்கு பேசாமல் சும்மாவா இருக்க முடியும். கல்பனா ஆன்ட்டியை ரெஸ்பெக்ட் குடுக்கலைன்னு வேலையை நிறுத்திட்டு, எப்படி புது பி.ஏ செலக்ட் பண்ணாங்கன்னு கோபி அங்கிள் சொன்னார் தானே.
இவரு இன்டர்வியூ பத்து மணின்னு சொல்லி வெயிட் பண்ண வைப்பாராம். டென்ஷனா பேசுறவங்களை வேலைக்கு செலக்ட் பண்ணுவாங்களாம்.
உங்க பையன் என்ன மேக்னு தெரியலை.
நான் சொல்றேன் எப்பப் பார்த்தாலும் ரூல்ஸ் போட்டுட்டு இருக்க அண்ணனுக்கு, இந்த ரூல்ஸ் எல்லாம் பிரேக் பண்ற மாதிரி தான் வைஃப் வரப் போறாங்க.
நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து, உங்க பையனை தலையைப் பிச்சுக்க வைக்கல என் பேர் தன்வி கிடையாது.” என்று விட்டு அங்கிருந்து எழுந்து சென்றாள்.
“அடியே லெக் பீஸை சாப்பிடாமல் போற.” என்று தீபா கத்த.
கை கழுவச் சென்ற தன்வி,”ஐயோ! மறந்துட்டேன். எல்லாம் நீங்க பண்ண கலாட்டாவால தான். ஓ மை டேஸ்டி லெக் பீஸ் யம்மி! யம்மி!” என்று ராகமிட்டபடியே வந்து எடுத்துக் கொண்டு நகர்ந்தாள்.
“அடியே தீபா! என்ன நடக்குது இந்த வீட்டுல? என் பையனுக்கு நீ சாபம் விடுற? இப்போ உன் மக வேற புது சபதம் எடுத்துட்டு போறா?” என்று கேசவ் புலம்ப.
“அவ சொன்னதுல என்ன தப்பு இருக்கு? வரப் போற மருமகளாவது புத்தி சொல்லித் திருத்துனா சரி!”என்று விட்டு அங்கிருந்து நகர்ந்தார் தீபா.
*********************
வெளியே சென்ற ரித்திஷ்பிரணவ், கோபிக்கு ஃபோன் செய்தான். கோபியோ அப்பொழுது தான் வேலையை முடித்து விட்டு உணவருந்த தொடங்கினான்.
‘இப்ப தான் மேடம் ஃபோன் போட்டு இன்டர்வியூவைப் பத்தி விசாரிச்சாங்க. இப்போ இவர் ஃபோன் பண்ணி ஏன் சொன்னேன்னு கேக்க போறாரு. ரெண்டு பேர்கிட்டயும் மாட்டிகிட்டு நான் தான் முழிக்கப் போறேன்.’என்று புலம்பியவாறே, ஃபோனை அட்டெண்ட் செய்தவர், “சொல்லுங்க சார்!” என்றார்.
“இன்டர்வியூ முடிஞ்சதும், ஆஃபிஸ்ல வேற வேலையே இல்லையா?” என்று ரித்திஷ்பிரணவ் வினவ.
“சார்! நீங்க இல்லைன்னாலும் இன்ஸ்ட்ரக்ஷன் குடுத்திருக்கீங்களே சார். அந்த வொர்க் எல்லாம் முடிச்சிட்டு இப்போ தான் லஞ்சே சாப்பிடப் போறேன்.” என்று படபடப்புடன் கூறினான் கோபி.
“இவ்வளவு பிஸியா இருக்கிறீங்க? அப்புறம் இங்க ஆபீஸ்ல நடக்குற எல்லா விஷயத்தையும் ஜெட் வேகத்துல வீட்ல சொல்றீங்க? யாரை செலக்ட் பண்ணேங்குற வரைக்கும் சொல்லியிருக்கீங்க? எப்படி செலக்ட் பண்ணேங்குறதையும் சொல்லிட்டீஙகளா?” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் வினவ.
“அது வந்து சார்…”என்று இழுத்தான் கோபி.
“ஓ! காட்! எல்லாத்தையும் ஒப்பிச்சாச்சா? நீங்க என்ன நெனச்சிட்டு இருக்கீங்க? என்கிட்ட வேலை பாக்குறீங்களா? இல்ல எங்க வீட்ல உள்ளவங்க கிட்ட வேலை பாக்குறீங்களா?” என்று கோபத்துடன் வினவ.
“சார்! மேடம் கால் பணணி கேட்கும் போது சொல்லாமல் இருக்க முடியலை.” என்று கோபி தயங்கித் தயங்கிக் கூற.
‘ம்மா! நேத்து தானே ஆஃபிஸ் விஷயத்துல தலையிடாதீங்கன்னு சொன்னேன். கொஞ்சமாவது என் பேச்சை காதில் வாங்குறீங்களா!’ என்று மனதிற்குள் புலம்பியவன், வெளியே காட்டிக்கொள்ளாமல்,“ மிஸ் தியாழினியை நாளைக்கு எப்போ வர சொல்லி இருக்கீங்க?”என்று கேட்க.
“காலையில ஒன்பது மணிக்கெல்லாம் இருக்கணும்னு சொல்லிட்டேன் சார். அப்புறம் நீங்க சொன்ன எல்லா டீடெயில்ஸ்யும் அவங்களுக்கு இன்பார்ம் பண்ணிட்டேன்.” என்றார் கோபி.
“ ஓகே! யூ கேரி ஆன்.” என்றவனுக்கு, ‘அந்தப் பொண்ணு பர்பெக்டா இருக்கணுங்குற கவலை வந்து ஒட்டிக் கொண்டது. இல்லை என்றால் வீட்டில் உள்ள மூணு பேரும் சேர்ந்து என்னை கேலி செய்து ஒரு வழி பண்ணிடுவாங்க.’ என்று எண்ணியவன் இல்க்கில்லாமல் காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.
தன்வி கூறியதே அவன் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. ‘ வரப் போற அண்ணி பாவமாம்! குட்டிப் பிசாசு! அண்ணனை விட வரப்போற அண்ணி முக்கியமா போயிட்டாங்க போல. இருக்கட்டும் ஆனால் அந்த குட்டி பிசாசுக்கு தெரியாத ஒரு விஷயம், எனக்கு மனைவி வரப் போறவள் என்னைப் போலவே டிஸிப்ளின், பங்சுவாலிட்டியோட பொறுப்பான பொண்ணா தான் இருப்பா.’ என்று எண்ணிக் கொண்டிருந்தான்.
ஆனால் அவனுக்குத் தெரியவில்லை. அவனுடைய மனைவி வேதாளமாக தொங்கி அவன் உயிரை வாங்கப் போவதை அறியாமல், தன் போக்கில் காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.
தன்வி பேசியதைக் கேட்டு ஒன்னும் கோபம் வரவில்லை. அவளைக் கண்டிக்காமல் இருந்த அம்மாவையும், அப்பாவையும் நினைத்துத் தான் அவனுக்கு கோபம் பெருகியது.
கார் ட்ரைவ் பண்ணவுமே அவன் கோபம் குறைந்தது. கோபம் குறைந்ததும்,பசியெடுக்க வழியில் இருந்த ஒரு ஹோட்டலில் காரை நிறுத்தினான்.
*********************
அங்கே தியாழினியோ, “ பசிக்குது! சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வாங்க.” என.
கிச்சனுக்கு சென்ற வர்ஷிதாவோ சமையல் ஆள் செய்தவற்றை, எடுத்து வந்தாள்.
“தேங்க்ஸ் செல்லக்குட்டி!” என்று கொஞ்சிய தியாழினியின் முகம் மாறியது.
“ அண்ணா! எனக்கு ப்ரைட்ரைஸே பிடிக்காதே.” என.
“ஓ சாரிடா! ஆஃபீஸ் போற அவசரத்துல, சரளாக்கா கிட்ட என்ன சமையல் செய்யணுமோ செய்ய சொல்லுன்னு வர்ஷு கிட்ட சொல்லிட்டு போனேன்.” என்று தலையில் தட்டிக் கொண்டான் நேத்ரன்.
“சாரி தியா! உனக்குப் பிடிக்காதுன்றதை மறந்துட்டேன். ப்ரைட்ரைஸ் நேத்ராக்கு ரொம்ப பிடிக்கும்னு. அதை செய்ய சொல்லிட்டேன்.” என்றாள் வர்ஷிதா.
“ப்ச்! பசிக்குது!” என்றாள் தியாழினி.
“சரி! சீக்கிரம் ரெண்டு பேரும் கிளம்புங்க ஹோட்டலுக்கு போகலாம்.” என்று நேத்ரன் கூற.
தியாழினியின் முகம் மலர்ந்தது.
வர்ஷிதாவோ,” நேத்ராவுக்கு பிடிக்கும்னு தானே ப்ரைட் ரைஸ் செய்ய சொன்னேன். இப்போ என்ன பண்றது? அதுவுமில்லாமல் நேத்ரா இப்போ தான் ஹாஸ்பிடலில் இருந்து ரெக்கவராகி வந்திருக்கார். ஹோட்டல் ஃபுட் எல்லாம் கொஞ்ச நாள் அவாய்ட் பண்றது நல்லது.” என்றாள் வர்ஷிதா.
“அதுவும் சரி தான்.” என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு கூறினாள் தியாழினி.
ஆனால் தங்கையின் வாடிய முகததைப் பார்த்த நேத்ரனுக்கு ஒரு யோசனைத் தோன்றியது.
”ஐடியா! நான் இங்கே இருக்குற சாப்பாடை சாப்பிடுறேன். நீங்க ரெண்டு பேரும் வெளியில சாப்பிட போங்க.” என்றுக் கூற.
“ நீ வராமல் நான் மட்டும் போறதா?”என்று அதற்கும் தயங்கினாள் வர்ஷிதா.
“வர்ஷி! நான் ரொம்ப டயர்டா இருக்குறேன். சீக்கிரம் ஏதாவது ஒரு டெசிஷனுக்கு வா. இல்லை நான் மட்டும் கிளம்புறேன்.” என்று கோபமாக கிளம்பினாள் தியாழினி.
வர்ஷிதா தயக்கத்துடனே நேத்ரனை பார்க்க. “போ!” என்று கண் ஜாடைக் காட்டினான்.
முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு வர்ஷிதா, தியாழினியை தொடர்ந்து சென்றாள்.
இவள் வருவதற்குள் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து காத்திருக்க. அமைதியாக அவள் பின்னே அமர்ந்தாள் வர்ஷிதா.
ஹோட்டலுக்கு சென்ற பிறகும் ஒன்றும் பேசாமல் வர்ஷிதா அமைதியாக இருக்க.
தியாழினியோ அவளை சமாதானப் படுத்த முயன்றாள்.
“சாரி டி! இன்னைக்கு ஒரு நாள் தானே! நாளைலருந்து உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன்.”
“ஹான் அதெல்லாம் டான்னு ஐந்து மணிக்கு வீட்டுக்கு வந்துடுவேன்.”
“அதென்ன உங்க அண்ணன் கம்பெனியா, உன் இஷ்டத்துக்கு வர்றதுக்கு? வேலை முடிஞ்சா தான் கிளம்ப முடியும். சாப்பிடுறதுக்கு கூட நேரம் இருக்குமோ, என்னமோ?”
“என்னது சாப்பிடுவதற்கு கூட டைம் இருக்காதா? பொய் சொல்லாத வர்ஷி?”
“நான் பொய் எல்லாம் சொல்லல. வேலையை முடிச்சுட்டு சாப்பிட போக சொல்லுவாங்க. இல்ல சீக்கிரம் சாப்பிட்டுட்டு வர சொல்லுவாங்க. உனக்கு சாப்பிடற மூடே போயிடும்.” என்றாள் வர்ஷிதா.
“சாப்பிடுவதற்கு மூடு போயிடுமா? எனக்கெல்லாம் சாப்பாடுங்குற பேர கேட்டாலே பசி எடுக்க ஆரம்பிச்சுடுமே. வேலையை முடிச்சிட்டு போய் சாப்பிடுங்கன்னு சொன்னா என்ன பண்ணுவேன்” என்று புலம்ப.
அப்போது தான் அந்த ஹோட்டலுக்குள் நுழைந்த ரித்திஷ்பிரணவ் காதில், தியாழினியின் புலம்பல் ஒலித்தது.
நிமிர்ந்துப் பார்த்த ரித்திஷ்பிரணவ், தியாழினியைப் பார்த்ததும் முகம் இறுகியது.