பேருந்து நிலையத்தில் நின்றிருந்தவள் தன் கையில் இருந்த கைப்பையை அத்தனை அழுத்தமாக பற்றி இருந்தாள். அவளுக்குள் அவ்வளவு கோபம், ஆற்றாமை அதை வெளிப்படுத்த முடியாத தன் இயலாமையை எண்ணி தன் மேலேயும் கோபம்.
அவள் அருகில் நின்று இருந்தவனோ வேண்டுமென்றே அவளை உரசும்படி நெருங்கி நிற்கவும். அவனை திரும்பி முறைத்தவள் அதற்குள் தான் செல்ல வேண்டிய பேருந்து வந்து விடவும் கண்களாலேயே அவனை எரித்து பஸ்பம் ஆக்கிவிட்டு அப்பேருந்திற்குள் ஏறிக்கொண்டாள்.
ஆண்கள் என்றாலே இப்படி தான் என்று அவள் மனதிற்குள் ஒரு பிம்பம் எழ இப்படிப்பட்ட ஆடவர்கள் தான் காரணமாகி போயினர்.
ஏனென்றால் அவள் வாழ்நாளில் அவள் சந்தித்த ஆண்கள் அனைவரும் அவளிடம் இப்படி தானே நடந்து கொள்கிறார்கள். பேருந்தில் பயணச்சீட்டை பெற்றுக் கொண்டு ஜன்னலோரம் கிடைத்த இருக்கையில் அமர்ந்தவளின் மனமோ தெளிவில்லாமல் அப்படி தத்தளித்துக் கொண்டிருந்தது.
தன் வாழ்க்கை எங்கே சென்று கொண்டிருக்கின்றது என்பதே அவளுக்கு இன்னும் விளங்கவில்லை. அவள் சுதாரிப்பதற்குள்ளாகவே அடுத்த அடுத்த அடிகளாக அவளுக்கு விழுந்து கொண்டிருக்க அனைத்தையும் வாங்கி வாங்கியே மரத்துப்போன நிலை தான் அவளுக்கு.
இவ்வளவு அமைதியாக உன்னை இருக்க விட்டுவிடுவேனா என்பது போல் அவளின் அலைபேசி சிணுங்க திரையில் தெரியும் எண்ணை பார்த்தவள் அதை உயிர்ப்பிக்க கூட தோன்றாமல் அப்படியே உடல் இறுகி போய் அமர்ந்திருந்தாள்.
கண்களில் இருந்து கண்ணீர் விழுந்து விடும் நிலை. மற்றவர்களுக்கு காட்சி பொருளாக ஆக விரும்பாதவள் அதை கடினப்பட்டு உள்ளிழுத்துக்கொண்டு அப்படியே கல் போல் அமர்ந்திருந்தாள்.
மீண்டும் மீண்டும் திரையில் மின்னும் அந்த எண்ணை பார்க்க உடல் முழுவதும் உதறல் எடுக்க தொடங்கியது. தன் நடுங்கும் கைகளால் மெதுவாக அந்த அழைப்பை ஏற்று தன் காதில் வைத்தாள் இல்லை என்றால் இவள் ஏற்கும் வரை அழைப்பு வந்து கொண்டே இருக்குமே பிறகு அதற்கும் சேர்த்து வேறு அல்லவா திட்டு வாங்க வேண்டும்.
எதிர் முனையில், “ஹலோ எவ்வளவு நேரமா போன் பண்றது போனை கூட எடுக்காம அப்படி என்ன பண்ணிட்டு இருக்க.. என்ன எங்களுக்கு தரவேண்டிய காசை கொடுத்தா எங்ககிட்ட இருந்து தப்பிச்சிடலாம்னு பணத்துக்காக வேற எவன் கூடவாவது போயிட்டியா” என்று அசிங்கமாக பேசினான்.
அவனின் வார்த்தைகள் இவளின் காதுக்குள் ஈயத்தை காய்ச்சி ஊற்றுவது போல் இருக்க முகமோ அருவருப்பில் சுருங்கியது.
“இங்க பாரு நீ எவன் கிட்ட போனாலும் அவ்வளவு பணத்தை உனக்கு எவனும் தரமாட்டான். ஒழுங்கா நாங்க சொல்றபடி கேட்டா பணமே தராம சந்தோஷமா இருக்கலாம். எதுக்காக தேவையில்லாமல் ஒரு மாசம் டைம் கேட்டு பணத்துக்காக இப்படி நாய் மாதிரி அலையுற..
நல்லா யோசிச்சு பாரு சாயந்திரம் நான் போன் பண்றேன் உன்னுடைய முடிவை மாத்திக்கிறதா இருந்தா நீ தாராளமா மாத்திக்கலாம்” என்று கேவலமாக பேசியவனோ சத்தமாக நகைத்துவிட்டு அணைப்பை துண்டித்து விட்டான்.
அவனின் வார்த்தையை கேட்டவளுக்கு அப்படி ஒரு அருவருப்பு. தன்னை பெற்றவரின் ஸ்தானத்தில் அல்லவா அவனை வைத்து பார்த்துவிட்டாள்.
அவன் வயது என்ன தன் வயது என்ன..
தன் மகள் போல் இருக்கும் பெண்ணிடம் எப்படிப்பட்ட வார்த்தைகளை எல்லாம் கேவலமாக பேசுகிறான். என்ன மாதிரியான மனித ஜென்மம் இவன் என்று எண்ணியவளுக்கோ ‘ச்சீ’ என்று ஆகிவிட்டது.
அவள் வேதவள்ளி..
21 வயது நிரம்பிய அழகு மங்கை. அந்த அழகே அவளை அழிவின் பாதையை நோக்கி இழுத்துச் செல்லும் என்று அவள் எண்ணியதே கிடையாது.
இதோ இப்பொழுது நிகழ்ந்து கொண்டிருக்கிறதே.. அவளை ஓட ஓட விரட்டி அடித்துக் கொண்டிருக்கிறது தன் மேலேயே அவளுக்கு வெறுப்பு தோன்றும் அளவிற்கு..
சிறு வயது முதலே அவள் ஒன்றும் இவ்வளவு சிக்கலுக்கு இடையில் வாழ தொடங்கவில்லை. ஆரம்பத்தில் அனைத்துமே நன்றாக தான் சென்று கொண்டிருந்தது.
அவளின் தந்தை இறக்கும் வரை அவளுக்கு எந்த ஒரு கஷ்டத்தையும் அவர் கொடுத்ததில்லை. ஏன் அவளின் தாயும் அப்படித்தான் அவளை அப்படி பார்த்துக் கொள்வார்.
அவளின் தாய், தந்தை இருவருமே ஆசிரியர்கள். பெரிய வசதி வாய்ப்பு மிகுந்த குடும்பம் எல்லாம் கிடையாது நடுத்தர வர்க்கம் தான். அதனாலேயே ஒரே குழந்தை போதும் என்று இருவரும் முடிவு செய்து விட்டனர்.
வாழ்க்கையில் அனைத்துமே இவளுக்கு நல்லதாக அமைத்து தர வேண்டும். இரு குழந்தைகள் பிறந்து விட்டால் இருவருக்குமே செய்யும் அளவிற்கு தங்களிடம் வசதி இல்லை என்று எண்ணியவர்கள் ஒரு பிள்ளையாக இருந்தாலும் இவளை நன்றாக வளர்த்தாலே போதும் என்று முடிவு செய்து விட்டனர்.
அதன் விளைவு தன் துக்கத்தை கூட பகிர்ந்து கொள்ள ஆளின்றி அனாதை போல் ஓடிக் கொண்டிருக்கிறாள்.
இப்பொழுது கிண்டியில் வீற்றிருக்கும் அந்த புகழ் பெற்ற எஸ் பி சாப்ட்வேர் சொல்யூஷனை நோக்கி தான் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறாள்.
வேதவள்ளி பொறியியல் பட்டதாரி. அவள் கல்லூரியின் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் பொழுது தான் அவளின் தாய்க்கு உடல்நிலை மிகவும் மோசமாகி போனது.
அதன் காரணமாக அவளால் கேம்பஸ் இன்டர்வியூவில் கலந்து கொள்ள இயலவில்லை. வேதவள்ளி நன்கு படிக்கும் மாணவி அதிக மதிப்பெண்கள் கையில் இருந்தும் கல்லூரியில் படிக்கும் பொழுதே வேலை எடுக்க முடியாமல் போனது. அதன் விளைவே இப்பொழுது தனக்கான வேலையை தேடி அலைந்து கொண்டிருக்கிறாள்.
அவள் இந்த புகழ்பெற்ற நிறுவனத்தை நாடி வந்ததற்கும் ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. அது அந்த நாராயண மூர்த்திக்கு அவள் கொடுக்க வேண்டிய பணம் தான்.
தன் தாயின் மருத்துவ செலவிற்காக கையில் இருந்த மொத்தத்தையும் செலவு செய்தவளுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் என்ன செய்வது என்று தெரியாமல் போனது. கல்லூரியில் படிக்கும் சிறு பெண்ணவள் அவள் இயலாமையை உபயோகித்து கொண்டார் நாராயண மூர்த்தி.
வேதவள்ளியின் தாயும் தந்தையும் ஆசிரியராக பணியாற்றினாலும் அவர்களுக்கு என ஒரு சிறிய அளவிலான சொந்த வீட்டை வாங்கி அதில் அழகிய குருவிக்கூடு போல் வாழ்ந்து கொண்டிருந்தனர்.
அந்நிலையில் தான் ஒரு நாள் வேதவள்ளியின் தந்தைக்கு எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. அதில் அவரின் உயிருமே அன்று பிரிந்து விட்டது.
அதன் பிறகும் கூட அவளின் தாய் அவளை நல்ல முறையில் தான் பார்த்துக் கொண்டார். அவள் ஆசைப்பட்டு தேர்ந்தெடுத்தது தான் பொறியியல் பட்டப்படிப்பு. அதையுமே அவளின் ஆசைப்படி படிக்க வைத்தார்.
எல்லாமே நன்றாக தான் சென்று கொண்டிருந்தது அவள் மூன்றாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் வரை. மூன்றாம் ஆண்டு இவள் படித்துக் கொண்டிருக்கும் பொழுது தான் அவளின் தாய்க்கு உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்படைந்தது.
என்னென்னவோ டெஸ்டுகள் எல்லாம் எடுத்தார்கள் இவளுக்கு ஒன்றுமே புரியாத நிலை. ஆரம்பத்தில் பெரிதாக இருக்காது என்று நம்பினார்கள். இவளின் தாயும் தனக்கு ஒன்றும் ஆகாது என்று நம்பிக்கையளித்தார்.
ஆனால் இறுதியில் நடந்ததோ வேறாகிப்போனது. லங் இன்பக்சன் என்று ஆரம்பித்தது இறுதியில் முடிவுற்றது என்னவோ லங் ட்ரான்ஸ்பிளான்டேஷன் செய்ய வேண்டும் என்பதில் தான்.
கையில் இருந்த சேமிப்பும் கொஞ்சம் கொஞ்சமாக காலி ஆகிவிட்டது. இறுதியில் வேறு வழியின்றி அவர்களின் வீட்டையும் விற்று விட்டாள்.
அவளின் தாய் எவ்வளவோ வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்தும், “எனக்கு நீங்க குணமாகி வந்தாலே போதும்மா.. உங்களை விட இந்த வீடு ஒன்னும் எனக்கு பெருசில்ல.. நீங்க குணமாகி என் கூட இருந்தால் போதும் நான் சம்பாதித்து உங்களுக்கு வீடு வாங்கி தரேன்” என்று கூறி அவரின் வாயையும் அடைத்து விட்டாள்.
மகளுக்கு துணையாக தான் இறுதி வரை இருக்க வேண்டுமே என்ற எண்ணத்திலேயே அதற்கு மேல் எதுவும் பேசாமல் அவரும் அமைதியாகிவிட்டார்.
இறுதிக்கட்டத்தில் கையில் இருந்த பணம் மொத்தமும் தண்ணியாய் செலவழிந்தது. வீட்டை விற்ற பிறகு வாடகை வீட்டிற்கு மாறினார்கள். அந்த வாடகை வீட்டின் உரிமையாளர் தான் நாராயணமூர்த்தி.
குறுகிய காலத்திலேயே இவளுடன் நன்கு பழகி விட்டார். ஆதரவுக்கு யாரும் இல்லாத சிறுபாவையோ அவரின் தேன் தடவிய வார்த்தைகளையும் வஞ்சகமான பேச்சையும் உண்மை என்று நம்பி ‘அங்கிள்.. அங்கிள்..’ என்று அனைத்து உதவிக்கும் அவரிடமே சென்று நின்றாள்.
அவரும், “உன்னை நான் என் பொண்ணு மாதிரி பார்க்கிறேன் மா. உனக்கு எந்த உதவி வேணும்னாலும் தயங்காமல் என்கிட்ட கேளு” என்று வாஞ்சையாக அவளின் தலையை தடவி கொடுப்பார்.
ஆனால் அதற்கு பின்னணியில் அவளை அவர் அதளபாதாளத்தில் தள்ளவிருக்கும் காரணம் தான் அப்பொழுது அவள் அறியவில்லை.
கையில் இருந்த பணம் மொத்தமும் கரைந்த பிறகு நாராயணசாமி தான் அவரின் நண்பரும் வட்டி தொழில் செய்பவருமான சடகோபனிடம் வேதவள்ளியை அழைத்து சென்றார்.
அவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் திட்டத்தை அறியாதவளோ அவர்களிடம் பத்து லட்சம் பணம் பெற்றுக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தாள்.
சடகோபன், “இங்க பாருமா என் பிரண்டு சொல்றானே என்று தான் உன்னை நம்பி எந்த ஒரு உத்திரவாதமும் கேட்காமல் என் பணத்தை தூக்கி கொடுக்கிறேன். நாளை பின்ன என்னை ஏமாற்றலாம் என்று நினைக்காத வட்டியும் முதலுமா சரியா கொடுத்திடனும்” என்றார் அதட்டும் தோணியில்.
அவரின் பேச்சே அப்படி தான் சரியான கரார் பேர்வழி. இவர்கள் இருவரும் தனக்கு விரிக்கும் வலை தான் இந்த உதவி என்பதை அறியாதவளோ சரியாக அவர்களின் வலையில் சென்று சிக்கிவிட்டாள்.
இப்பொழுது அவ்விருவரும் சேர்ந்து இவளை தங்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று அழைத்துக் கொண்டிருக்கின்றனர். அப்படி இல்லாவிடில் கொடுத்த 10 லட்சத்தையும் அதற்குண்டான வட்டியையும் உடனே ஒரு மாதத்திற்குள் திருப்பி தர வேண்டும் என்ற கெடுவும் விதித்துள்ளனர்.
அவளும் எவ்வளவோ அழுது புலம்பி பார்த்து விட்டாள். இருவருமே கொஞ்சமும் நெஞ்சில் ஈரம் இன்றி இவளிடம் பேசினர். அவர்களின் கொச்சையான வார்த்தைகளை கேட்பதற்கு பதிலாக எப்படியாவது பணத்தை திருப்பி கொடுக்கும் வழியை பார்க்கலாம் என்று வெறுத்துப் போய் அவர்களிடம் பேசுவதையே நிறுத்திவிட்டாள்.
ஆனாலும் நாராயணமூர்த்தி இவளை விடுவதாக இல்லை. அவ்வப்பொழுது குடிபோதையில் இருக்கும் பொழுதெல்லாம் இவளுக்கு தொடர்பு கொண்டு தொலைபேசியின் மூலம் இப்படித்தான் அசிங்கமாக பேசிவிட்டு வைத்து விடுவான்.
இவளிடம் இப்படி பேசுவதில் அப்படி ஒரு அகமகிழ்ச்சி அந்த ஈனப்பிறவிக்கு..
இவர்களிடமிருந்து தப்பிக்க வழி தெரியாமல் தான் எஸ் பி சாப்ட்வேர் சொல்யூஷன்சை நோக்கி அவளின் பயணம் தொடங்கி இருக்கிறது.
ஆனால் அவளின் தலையெழுத்தையே மாற்ற இங்கு ஒருவன் காத்துக் கொண்டிருக்கிறான் என்பதை அப்பொழுது அவள் அறியவில்
லை.
இக்கயவர்களிடம் இருந்து அவள் தன்னை எப்படி காக்க போகிறாள் என்பதை இனி வரும் அத்தியாயங்களில் காணலாம்.