“நீ என்னம்மா வந்த உடனேயே கிளம்பலாம்னு கூப்பிடுற.. இப்போ தான் நாங்க பேசவே ஆரம்பிச்சிருக்கோம் இன்னும் பேச எவ்வளவோ இருக்கு” என்றவாறு வேதவள்ளியை மேலிருந்து கீழ் எடைபோடும் பார்வை பார்த்தவன் தன் நாடியை நீவிகொண்டு, “நாட் பேட்.. இன்னும் கொஞ்சம் ஃபிட்டிங்கா டிரஸ் பண்ணா நீயும் நல்லா செக்ஸியா தான் இருப்ப” என்கவும்.
வேதவள்ளிக்கோ நெஞ்சை அடைத்த உணர்வு. இவ்விடத்திற்கு வந்திருக்கவே கூடாதோ என்று காலம் தாழ்ந்து சிந்தித்தாள்.
அவனின் வார்த்தையை கேட்டு பதறியவள் இன்னும் சூர்யாவின் அருகில் நெருங்கி நின்று கொண்டு, “சார் போகலாம் சார்” என்கவும்.
சூர்யாவோ கொஞ்சம் கொஞ்சமாக தன் நிதானத்தை இழந்து கொண்டு இருந்தான்.
“நான் முன்னாடியே சொன்ன மாதிரி சூர்யா உனக்கு எங்கேயோ மச்சம் இருக்குடா.. அதான் உன்ன தேடி இப்படி அழகான பொண்ணுங்களா வந்து விழறாங்க.. முதல்ல அக்ஷ்ரா இப்போ இவ” என்று தன் எதிரே நின்று இருந்த வேதவள்ளியை கண்களால் காட்டியவன்.
“அது என்னமோ தெரியல, உனக்கு பிடிச்ச பொண்ணுங்கன்னு தெரிஞ்சாலே எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிடுது. உடனே அவங்கள உன்கிட்ட இருந்து எடுத்துக்கணும்னு தோணுது” என்றவாறு வேதவள்ளியை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்கவும்.
வேதவள்ளி அவனின் வார்த்தையில் பதறியே விட்டாள். சூழ்நிலை மோசமாகுவதை எண்ணியவள் பதட்டத்தில் என்ன செய்கிறோம் என்று புரியாமல் சூர்யாவின் கையை வேகமாக பற்றி கொண்டு, “சார் எழுந்திரிங்க சார் கிளம்பலாம்” என்று அவனை எழுப்ப முற்பட்டாள்.
அவளின் உதவியோடு எழுந்து நின்றவன், “மைண்ட் யுவர் வேர்ட்ஸ்.. இவ என்கிட்ட வேலை பாக்குறவ தப்பா பேசுன கொன்னுடுவேன் டா உன்ன” என்றான் வார்த்தைகள் குளறியபடி தள்ளாடியவாறு.
“இப்ப நீ இருக்கிற நிலைமைக்கு உன்னால என்னை ஒன்னும்..” என்று கெட்ட வார்த்தையை பேச வந்தவன் அதை தன் தொண்டைக்குள்ளேயே விழுங்கி கொண்டு, “பண்ண முடியாது” என்றான் அழுத்தமாக.
“என்ன சொல்ற பேபி சூர்யாக்கு பிடிச்ச பொண்ணு வொர்த்தா இல்லையானு செக் பண்ணி பாத்துடுவோமா” என்றவாறு அக்ஷ்ராவை பார்க்கவும்.
அவளோ தன் ஒற்றை கண்ணை சிமிட்டியவள், “என்ஜாய் யுவர் நைட்” என்றது தான் தாமதம் வேதவள்ளி தன் நெஞ்சின் மீது அதிர்ந்து கையை வைத்து விட்டாள்.
எப்படிப்பட்ட கணவன் மனைவி இவர்கள் என்று நினைத்து அவளால் அருவருத்து போகாமல் இருக்க முடியவில்லை.
கணவன் வேறொரு பெண்ணை பற்றி மனைவி இடமே தவறாக பேசுவதும், அவளோ அதை ஊக்குவிக்கும் படி அவனுக்கு பதிலுறைப்பதும் பார்க்கவே வேதவள்ளிக்கு குமட்டி கொண்டு வந்தது.
அவளின் முகம் அருவருப்பை அப்பட்டமாக வெளிப்படுத்தி விட.
“ஏய்! என்ன முகத்தை இப்படி வச்சிருக்க.. இது எல்லாம் இங்க சகஜம் உன்ன மாதிரி பிச்சைக்காரங்களுக்கு எல்லாம் இந்த கல்ச்சர் கொஞ்சமும் புரியாது” என்றாள் அவளை மேலிருந்து கீழ் பார்த்துக் கொண்டே அக்ஷ்ரா.
‘என்ன கருமம் கல்சரோ.. இதெல்லாம் எனக்கு புரியுறதுக்கு புரியாமலே இருந்துட்டு போகட்டும்’ என்று உள்ளுக்குள் எண்ணியவள் சூர்யாவின் கையை மேலும் அழுத்தமாக பற்றி கொண்டாள்.
அவள் சூர்யாவின் கையை பற்றியதை பார்த்ததுமே அக்ஷ்ராவிற்குள் கோபம் பத்திக் கொண்டு வந்தது.
அதன் விளைவு, “இன்னும் எதுக்காக வெயிட் பண்றிங்க டார்லிங் யூ கேன் என்ஜாய் யுவர் நைட் எப்படியும் சூர்யாவால் அவளுக்கு சந்தோஷத்தை கொடுக்க முடியாது. அட்லீஸ்ட், உங்களாலாவது அவ சந்தோஷமா இருந்துட்டு போகட்டும்” என்று ஏதோ பெரிய மனதோடு கூறுவது போல் அவள் கூறவும்.
“ச்சீ..” என்று தன் முகத்தை திருப்பிக் கொண்டாள் வேதவள்ளி.
இங்கே வரும் போது கூட இப்படி எல்லாம் நடக்கும் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மேலும், சூர்யா தன்னுடன் இருக்கும் பொழுது யாரும் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள மாட்டார்கள் என்று வேறு எண்ணினாள்.
ஆனால் அவனோ இப்பொழுது நிதானத்தில் இல்லாமல் போகவும் தான் இவளுக்கு பயம் பிடித்துக் கொண்டது.
நிலைமை மோசமாவதை உணர்ந்தவள் தன்னையும் மீறி பயத்தில் சூர்யாவின் கையை அவள் விடவே இல்லை. சட்டென்று யோசனை வந்தவளாக ராம்குமாரின் எண்ணிற்கு அழைப்பு விடுத்து அவனிடம் இங்கே நடப்பது அனைத்தையும் விவரிக்கலாம் என்ற எண்ணத்தோடு அவள் தன் செல்பேசியை ஆன் செய்யவும்.
அதை அவளிடம் இருந்து வெடுக்கென பிடுங்கிய அக்ஷ்ரா தன் கையில் வைத்து சுழற்றிக்கொண்டு நின்றிருந்தாள்.
அவளின் செயல் வேதவள்ளிக்கு கோபத்தையும் எரிச்சலையும் ஒருசேர கொடுத்தது.
“என்ன மேடம் பண்றீங்க அது என்னோட போன் கொடுங்க”.
அக்ஷ்ராவுக்கோ ஏன் என்றே தெரியாமல் வேதவள்ளியின் மேல் அத்தனை ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அதிலும், தன்னிடத்தில் அவளா என்று தேவையில்லாத கற்பனையை எல்லாம் செய்து கொண்டாள்.
அவன் தன்னிடம் வேலை பார்க்கும் பெண் என்று தான் கூறினான். இருந்தாலும், உரிமையோடு அவள் சூர்யாவின் கையை பற்றி கொண்டு நிற்கும் விதம் இவளுக்கு அவளின் மேல் பெரும் கோபத்தை தான் தூண்டியது.
இவர்களின் செயலில் ஏற்படும் பயத்தினால் அவளை அறியாமலே அவள் சூர்யாவின் கையை பற்றிக் கொண்டு நிற்கிறாள் என்பது வேறு விஷயம்.
ராமிற்கு விஷயத்தை தெரிவித்து இருந்தாலாவது அவன் வந்து நிலைமையை சரி செய்து இருப்பான். இப்பொழுது என்ன செய்வது என்று ஒன்றும் விளங்காமல் பரிதவித்து போய் நின்று இருந்த வேதவள்ளியின் கையை சட்டென்று பிரேம் பற்றவும் முற்றிலுமாக நடுங்கிப் போய்விட்டாள்.
“ஐயோ! சார் இங்க பாருங்க சார்” என்று சூர்யாவை பிடித்து அவள் இழுக்கவும்.
அவனோ தன் தலையை இரு கைகளாலும் உலுக்கிக் கொண்டு கண்களை திறக்க முடியாமல் திறந்து இக்காட்சியை பார்த்தான்.
“கையை எடுடா.. ஹவ் டார் யூ.. எவ்வளவு திமிரு இருந்தா அவ மேல கையை வைப்ப” என்று குளறியவாறு கூறிக்கொண்டே தள்ளாடும் நடையுடன் நிற்கவும்.
அவனின் வார்த்தை மேலும் அக்ஷ்ராவின் கோபத்தை தூண்ட, “அவ மேல கை வச்சா நீ ஏன் இவ்வளவு கோபப்படுற”.
“தட்ஸ் நன் ஆஃப் யுவர் பிஸ்னஸ்! உன் வாழ்க்கையை நீ ஆசைப்பட்ட மாதிரி வாழ உனக்கு முழு சுதந்திரம் இருக்கும் பொழுது என் வாழ்க்கையை நான் ஆசைப்பட்ட மாதிரி வாழ எனக்கு உரிமை இல்லையா” என்றான் அந்த போதையிலும் அழுத்தமாக.
“ஓ! அப்போ உன் வாழ்க்கையை நீ ஆசைப்பட்ட மாதிரி வாழுறியா.. எல்லாத்தையும் மறந்துட்டு உன்னால முதல்ல இருந்து உன் வாழ்க்கையை ஸ்டார்ட் பண்ண முடியும்னு நினைக்கிறாயா?”.
“ஏன் முடியாதா.. என்னால முடியும்”.
“உளராத சூர்யா” என்று அவள் கூறி முடிக்கவில்லை பிரேமோ, “என்ன சார் டயலாக் எல்லாம் பலமா இருக்கு. உங்க வாழ்க்கையை நீங்க ஆசைப்பட்ட மாதிரி வாழ போறீங்களோ.. நீங்க ஆசைப்பட்டா மட்டும் போதாது மத்தவங்க ஆசையை உங்களால் நிறைவேற்ற முடியுமா” என்று தன் ஒற்றை புருவத்தை ஏற்றி நக்கல் இழைந்தோடும் குரலில் கேட்டவனின் கைகள் இன்னும் வேதவள்ளியின் கையை அழுத்தமாக பற்றி கொண்டு தான் இருந்தது.
இவர்களுக்குள் நடக்கும் வாக்குவாதத்தை எல்லாம் கவனிக்கும் மன நிலையில் அவள் இல்லை. பிரேமிடமிருந்து தன் கையை விடுபட போராடிக் கொண்டிருந்தாள்.
ஆனால் அவனின் பிடியோ உடும்பு பிடியாக இருந்தது.
சூரியா போதையின் பிடியில் தன் நிலை இழந்தவன், “யார பார்த்து டா சந்தோஷமா பாத்துக்க முடியாதுன்னு சொன்ன” என்றவாறு அவனின் சட்டையை பிடித்து இழுக்கவும்.
வேதவள்ளியின் கையை விட்ட பிரேம் சூர்யாவின் கையை தன் சட்டையில் இருந்து விலக்க முற்பட்டவாறு, “உன்னை பார்த்து தான் டா சொல்றேன். உன்னால யாரையும் சந்தோஷமா பாத்துக்க முடியாது. யாருடைய தேவையையும் பூர்த்தி பண்ணவும் முடியாது. அது இந்த ஊருக்கே தெரியும் ஏன் உனக்கும் இந்த விஷயம் தெரியும் தானே.. இப்போ என்ன புதுசா துள்ளுர”.
வேதவள்ளி சூர்யாவின் கையை பற்றி இழுத்து பிரேமிடமிருந்து பிரிக்க முற்பட்டவள், “வேண்டாம் சார் நாம கிளம்பிடலாம் வாங்க” என்று கெஞ்சாத குறையாக அழுது விடும் குரலில் அழைத்தாள்.
போதையின் பிடியில் இருக்கும் சூர்யாவை தன்னிடமிருந்து விலக்குவது பிரேமுக்கு ஒன்றும் அவ்வளவு கடினமாக எல்லாம் இல்லை.
ஒரே ஒரு தள்ளில் அவனை தன்னிடமிருந்து விலக்கியவன், “இவ மேல கைய வச்சதுக்கு தானே நீ என் ஷர்ட் மேல கை வச்ச.. இவ யாருடா உனக்கு.. ஆஃப்ட்ரால் உன் கம்பெனியில் வேலை பார்க்கிற ஒரு ஸ்டாஃப்.. அவளுக்காக எல்லார் முன்னாடியும் என் சட்டையை பிடிச்சுட்ட இல்ல.. இனி அவளை என்ன பண்றேன்னு பாரு”.
“அவ மேல உன் மூச்சு காத்து பட்டாலும் அடுத்த நிமிஷம் நீ உயிரோட இருக்க மாட்ட”.
“ஒரு சாதாரண ஸ்டாப்காக நீ ஏன் இவ்வளவு கோபப்படுற சூர்யா.. அப்படி அவ மேல உனக்கு என்ன உரிமை இருக்கு” என்று அக்ஷ்ரா சீறிக்கொண்டு கேட்கவும்.
இவ்வளவு நேரம் இவர்கள் இருவரும் பேசிய வார்த்தைகள் அனைத்தும் சூரியாவிற்குள் பெரும் கோபத்தை எழுப்பியது.
முற்றிலுமாக தன் நிதானத்தை இழந்தவன் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் போதையின் பிடியில் தன் பேண்ட் பாக்கெட்டினுள் வீற்றிருந்த தன் தாத்தா கொடுத்த மஞ்சள் கயிற்றை எடுத்தவன் சற்றும் எதை பற்றியும் சிந்திக்காமல் வேதவள்ளியின் கழுத்தில் அதை அணிவித்து விட்டான்.
ஆம், அவளை திருமணம் செய்து கொண்டான்.
அவளிடம் சம்மதம் வேண்டவில்லை..
அவளுக்கு இதில் விருப்பம் இருக்குமா என்றும் சிந்திக்கவில்லை.
சிந்திக்கவில்லை என்பதை விட சிந்திக்கும் நிலையில் அவன் இல்லை என்று கூறினால் சரியாக இருக்கும்.
எங்கே மீண்டும் பிரேம் தன் கையை பிடித்து இழுத்து ஏதேனும் பிரச்சினை செய்வானோ என்ற பயத்துடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்த வேதவள்ளி இதை சற்றும் கவனிக்கவில்லை.
தன் கழுத்தில் சூர்யாவின் கை உரசுவதை உணர்ந்தவள் அப்பொழுது தான் குனிந்து பார்த்தாள். சாதாரண மஞ்சள் பிணைக்கப்பட்டிருந்த மஞ்சள் கயிற்றை அவளின் கழுத்தில் அவன் கட்டிக் கொண்டு இருந்தான்.
சூர்யாவின் செயலை சற்றும் எதிர்பார்க்காத வேதவள்ளிக்கு மயக்கம் வராத குறை தான் தூக்கி வாரி போட்டது.
அதிலும், தன் முகத்தருகே கண்கள் சொருக போதையின் பிடியில் தான் என்ன செய்கிறோம் என்பதை கூட நிதானிக்கும் நிலையில் இல்லாத சூரியாவின் முகத்தை கண்டவளிற்கு மூளை வேலை நிறுத்தம் செய்து விட்டது.
அவனின் போதையிலும், கோபத்திலும் சிவந்த விழிகளும்..
இவளின் பதட்டத்தில் அதிர்ந்து விரிந்த விழிகளும் ஒன்றோடு ஒன்று பின்னிக் கொண்டது.