புயல் – 13
அவள் அவனையே அதிர்ந்து பார்த்துக்கொண்டு நின்று இருந்தாள். அவளால் சற்றும் நிலை கொள்ளவே முடியவில்லை..
நடந்த சம்பவத்தை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை..
ஒரு நொடி அவளின் மூளை வேலை நிறுத்தம் செய்து விட்டது.
எதை பற்றியும் சிந்திக்கவும் முடியவில்லை..
தன்னை சுற்றி நடப்பதை தனக்குள் உள்வாங்கிக் கொள்ளவும் முடியவில்லை. ஏதோ பித்து பிடித்தவள் போல் நின்றிருந்தாள்.
அவளின் தோளை சுற்றி தன் கையை போட்டு தன்னோடு இறுக்கிக் கொண்டவன், “இப்போ இவ மேல எல்லா உரிமையும் எனக்கு மட்டும் தான் இருக்கு. இவ என்னோட பொண்டாட்டி! இவ மேல இனி எவனோட மூச்சு காத்தாவது பட்டுச்சு அப்புறம் அவனோட மூச்சையே நிறுத்திடுவேன்” என்றான் கர்ஜனையாக.
சூரியா தாலியை அணிவிக்க சென்ற நொடியே பல கேமராக்கள் அங்கே நடக்கும் சம்பவத்தை தங்களுக்குள் உள்வாங்க தொடங்கி விட்டது.
ஏதோ சினிமா காட்சியை பார்ப்பது போல் சுற்றி நின்று இவர்களை வேடிக்கை பார்க்க தொடங்கி விட்டனர்.
சட்டென்று அவன் தாலியை கட்டியது வேதவள்ளிக்கு மட்டும் அதிர்ச்சி அல்ல..
பிரேமும் அக்ஷ்ராவும் கூட அதிர்ந்து தான் பார்த்தனர்.
அதிலும், அக்ஷ்ராவிற்கு இதனை சற்றும் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. தான் அவனை விட்டு பிரிந்தது முதல் அவன் தன்னை நினைத்தே உருகுவான் என்று கர்வமாக எண்ணிக் கொண்டிருந்தாள்.
இத்தனை நாட்கள் அவனும் அப்படி தானே இருந்தான். ஆனால் இன்று அவளின் அத்தனை கர்வமும் ஒரே நொடியில் தகர்த்தெறியப்பட்டதை அவளால் சற்றும் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.
அந்த கோபம், ஆத்திரம் அப்பட்டமாக அவளின் முகத்தில் தெரிந்தது.
இவர்களையும் தாண்டி பேரதிர்ச்சியோடு அதிர்ந்து விழித்தது இரு விழிகள்..
அது வேறு யாரும் அல்ல சடகோபன் தான்.
எப்படியும் வேதவள்ளியை இன்று அடைந்து விடலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தவருக்கு இப்பொழுது அவள் வேறொருவனின் மனைவி ஆகிவிட்டதை சற்றும் யோசித்தும் பார்க்க முடியவில்லை.
அதிலும், பிரபலமான தொழில் அதிபரின் மனைவி. இனி அவள் மேல் கை வைக்க முடியுமா என்று எண்ணியவருக்கு பெரும் ஏமாற்றமே எஞ்சி இருந்தது.
“ச்ச” என்று எரிச்சலோடு கூறியவர். அதற்கு மேல் அங்கே நிற்காமல் கடகடவென மதுபானங்கள் அடுக்கி வைத்திருந்த இடத்தை நோக்கி நடந்தார்.
அப்பொழுது அவ்விடம் வந்து சேர்ந்த குபேரன் சூர்யாவின் கையை பிடித்து குலுக்கியவர், “கங்கிராட்ஸ் சூர்யா.. என்னுடைய ஃபங்ஷனுக்கு வந்து தான் உங்களுக்கு மேரேஜ் ஆகணும்னு இருந்து இருக்கு போலருக்கு. யு போத் லுக் மேட் ஃபார் ஈச் அதர்” என்று குளறியபடியே வாழ்த்துகளை தெரிவித்தார். அவருமே போதையின் பிடியில் தான் இருந்தார்.
வேதவள்ளிக்கு கொஞ்சம் கொஞ்சமாக நிதர்சனம் உரைக்க. இப்பொழுது என்ன செய்வதென்று தெரியவில்லை. அதிலும் சூர்யாவின் கரம் வேறு தன்னை சுற்றி அவனோடு தன்னை இறுக்கமாக பிணைத்திருப்பது அவளுக்கு சற்று அசௌகரியமாக தான் இருந்தது.
ஆனால் அப்படியெல்லாம் எதுவும் சூர்யாவிற்கு இல்லை போலும்.. மற்றவர்களிடம் பேசுவதில் கவனமானவன் அவளை தன்னுடன் வைத்திருப்பதையே மறந்து போனான்.
குபேரனுக்கு நன்றி தெரிவித்தவன். மேலும் சிலரும் அவனுக்கு வந்து வாழ்த்தியவர்களுக்கும் நன்றி தெரிவித்துவிட்டு அங்கிருந்து வேதவள்ளியுடன் வெளியேற எத்தனித்தவன்.
பிரேமையும் அக்ஷ்ராவையும் உறுத்து விழித்து விட்டு, “நீ எனக்கு குட் நியூஸ் சொன்ன மாதிரி நானும் உனக்கு சீக்கிரமாவே குட் நியூஸ் சொல்றேன் பிரேம். என்னால முடியுமா முடியாதானு சீக்கிரமே உங்களுக்கு காட்டுறேன்” என்று அவ்வளவு போதையிலும் காரமாக அவனை பார்த்து உரைத்து விட்டே வெளியேறினான்.