சூர்யா ஏதேதோ பிதற்றிக் கொண்டிருக்க.. அவ்வழியாக செல்வோர் அனைவரும் அவர்களை பார்த்துவிட்டு சென்றனர். அது வேறு வேதவள்ளிக்கு பெரும் சங்கடமாக இருந்தது. அவனை அடக்கவும் முடியாமல், என்ன செய்வது என்றும் தெரியாமல் கைகளை பிசைந்து கொண்டு விட்டால் அழுது விடும் நிலையில் நின்று இருந்தாள்.
சொன்னது போலவே ராம்குமார் சற்று நேரத்தில் அவ்விடம் வந்து சேர அவனை பார்த்த பிறகு தான் வேதவள்ளிக்கு பெரும் பலன் கிடைத்தது போல் உணர்ந்தாள்.
அவனை கண்டதும் பாய்ந்து ஓடியவள், “சார் இங்க பாருங்க சூர்யா சார் எப்படி இருக்காருன்னு” என்றவாறு அவன் அருகே அவனை அழைத்து சென்றாள்.
அதற்குள் அவளின் கண்ணீரும் கீழ் இறங்கி விட்டது. அதை எல்லாம் சற்றும் அவள் பொருட்படுத்தவில்லை.
வழியும் கண்ணீரை துடைத்துக் கொண்டே, “சார் பெரிய பிரச்சனை ஆயிடுச்சு சார் என்ன நடந்துச்சுன்னு எனக்கு ஒண்ணுமே புரியல” என்று அழுகையோடு அவனிடம் நடந்த மொத்தத்தையும் ஒப்பித்தாள்.
தேம்பி தேம்பி அழுதவாறு அவள் பேசுவதை கேட்கவே ராம்குமாருக்கு மனம் பிசைந்தது.
“ஓகே ஓகே.. ரிலாக்ஸ்.. ஒன்னும் பிரச்சனை இல்ல இந்த தண்ணிய ஃபர்ஸ்ட் குடி” என்று அருகில் இருந்த வாட்டர் பாட்டிலை அவளை நோக்கி நீட்டினான்.
அவளுக்குமே இப்பொழுது அது மிகவும் தேவைப்படும் ஒன்றாக தான் இருந்தது. எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்காமல் அவன் நீட்டிய பாட்டிலை வாங்கி தன் வாய்க்குள் சரித்தவளுக்கு இப்பொழுது தான் சற்று ஆசுவாசமடைந்தது போல் ஆனது.
“இப்போ என்ன சார் பண்றது?”.
அவளின் முகமோ அத்தனை பதட்டத்தோடும் பரிதவிப்போடும் காட்சி அளித்தது.
ராம்குமாருக்குமே அவளுக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை.
பெருமூச்சொன்றை வெளியேற்றியவன், “வீட்டுக்கு போகலாம்.. தாத்தா என்ன சொல்றாங்களோ மத்ததெல்லாம் அப்புறமா பாத்துக்கலாம்” என்றான் அந்த வீடியோவை மனதில் வைத்துக் கொண்டு.
“சூர்யா சார் வீட்டுக்கா?” என்று அவளின் வார்த்தைகள் அதிர்ச்சியோடு வெளியேறின.
“ம்ம்.. ஆமா”
“இல்ல.. வேண்டாம் சார்.. ஏதாவது பிரச்சனையாகிட போகுது” என்று அவள் பதறவும்.
“இப்ப சிச்சுவேஷன் நம்ம கையை மீறி போயிடுச்சு வேதவள்ளி இனி எந்த முடிவா இருந்தாலும் தாத்தாவே எடுக்கட்டும். சூர்யா சார் உனக்கு தாலி கட்டி இருக்காரு இதை அப்படியே விட சொல்றியா”.
“இது எல்லாமே எதிர்பார்க்காமல் நடந்தது சார். அவர் ஏன் எனக்கு தாலி கட்டினார்னு கூட எனக்கு தெரியல. சடனா அவர் அப்படி பண்ணுவாருன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கவே இல்ல. கண்டிப்பா அவரு வேணும்னு செஞ்சு இருக்க மாட்டாரு.. அவரே அறியாமல் தான் செஞ்சிருப்பாரு நாம வேணும்னா இதை கழட்டிடலாமா” என்று மெல்லிய குரலில் கேட்டாள்.
எப்படியும் அந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்துவிட்டனர். எனவே நாமாக எந்த முடிவும் எடுக்க முடியாது என்று எண்ணியவன், “இங்க பாரு வேதவள்ளி தெரிந்து நடந்தாலும் தெரியாமல் நடந்தாலும் சூர்யா உன் கழுத்தில் தாலி கட்டி இருக்கிறார். அதை இல்லைன்னு சொல்ல முடியாது இல்ல.. அது மட்டும் இல்ல இது ஒன்னும் இங்கே இருக்கிறவங்களுக்கு மட்டும் தெரிந்த விஷயம் இல்ல.. ஊருக்கே தெரிஞ்சிடுச்சு இங்க பாரு” என்றவாறு தன் செல் பேசியில் அந்த வீடியோவை ஓடவிட்டு அவளின் கையில் கொடுத்தான்.
அதை பார்த்தவளின் விழிகளோ அதிர்ந்து விரிய.. தன் வாயின் மீது கையை வைத்தவள் அதிர்ந்து போய் நின்று இருந்தாள்.
“பார்ட்டிக்கு வந்த யாரோ உனக்கு சூர்யா தாலி கட்டியதை வீடியோ எடுத்து சோசியல் மீடியால போட்டு இருக்காங்க. இப்போ ட்ரெண்டிங்கே உங்க வீடியோ தான். அதனால் இந்த விஷயத்துல நாம எந்த முடிவும் எடுக்க முடியாது. தாத்தா கிட்ட போய் சொல்லலாம் நீ பஸ்ட் கார்ல ஏறு”.
அவளுக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.
ராம் கூறியபடி காரில் ஏறியவள் வெளியே வெறித்து பார்த்துக் கொண்டு அதிர்ச்சி மாறாத முகத்தோடு அமர்ந்திருந்தாள்.
அவளின் மனநிலை தற்பொழுது எப்படி இருக்கும் என்பது ராம்குமாருக்குமே நன்கு விளங்கியது.
சூர்யா மற்றவர்களின் மேலிருக்கும் கோபத்திலும் போதையின் பிடியிலும் நிதானம் இழந்து தான் என்ன செய்கிறோம் என்பதை உணராமல் வேதவள்ளியின் கழுத்தில் தாலியை அணிவித்து விட்டான்.
ஆனால் வேதவள்ளிக்கு அப்படி இல்லையே.. அவன் ஏன் இப்படி செய்தான் என்பதற்கான காரணம் கூட அவளுக்கு இன்னும் புரியவில்லை. அவ்வளவு ஏன் சூர்யாவின் கடந்த காலத்தை பற்றி இவளுக்கு எதுவும் தெரியாதே..
தெரிய வந்தால் இவள் எப்படி செயலாற்றுவாளோ என்ற எண்ணமும் ராம்குமாரின் மூளைக்குள் ஓடிக் கொண்டிருந்தது.
இருவருமே வெவ்வேறு சிந்தனையில் தங்களுக்குள்ளாகவே உழன்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்குள் எந்த ஒரு பேச்சு வார்த்தையும் இல்லை. வெளியே வெறித்து பார்த்துக் கொண்டு வந்தனர். சூர்யா தான் புலம்பிக்கொண்டே வந்து கொண்டிருந்தான்.
காரும் வீட்டை சென்று அடைந்தது. தன் நடுங்கும் கைகளால் கார் கதவை திறந்த வேதவள்ளி மெதுவாக கீழே இறங்கினாள். அவளுக்குள் அத்தனை பதட்டம்..
அதுவும் சூர்யாவின் வீடே அவர்களின் செழுமையை வேறு பறைசாற்ற.. தனக்கு சற்றும் தகுதி இல்லாத இடத்திற்கு தான் வந்து நிற்கிறோம் என்ற தர்ம சங்கடம் வேறு அவளுக்குள் தோன்றியது.
வேண்டுமென்று எந்த தவறும் செய்யவில்லை. தன்னையும் மீறி நடந்த தவறை எப்படி சரி செய்வது என்றும் தெரியாமல் அல்லாடிக் கொண்டு இருந்தாள்.
சூர்யாவை கை தாங்கலாக பிடித்த ராம்குமார் வீட்டுக்குள் அழைத்து செல்லவும். இவர்களின் வண்டி சத்தத்தை கேட்டு தாத்தா வாசலுக்கே விரைந்து விட்டார்.
சூர்யாவின் நிலையை கண்டவர் வருத்தமான முகத்தோடு அவனின் அறையை நோக்கி கண்ணை காட்டவும். ராமும் சிறு தலையசைப்புடன் அவனின் அறைக்குள் அழைத்து சென்று அவனை படுக்க வைத்து விட்டு வெளியே வந்தான்.
வேதவள்ளிக்கோ எப்படி அவரை எதிர்கொள்வது என்று தெரியவில்லை. அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமா.. அல்லது நடந்த தவறுக்காக தன் வருத்தத்தை தெரிவிக்க வேண்டுமா.. என்று ஒன்றுமே விளங்காமல் திருதிருவென விழித்தபடி நின்று இருந்தாள்.
அறையில் இருந்து வெளியேறிய ராம், “தாத்தா வீடியோவை பார்த்தீர்களா?”.
“ம்ம்.. பார்த்தேன்”.
“இப்போ என்ன பண்ணலாம்?” என்றதும் அவர் வேதவள்ளியை பார்க்க.
“வேணும்னு.. எதுவும் பண்ணல சார்.. தெரியாம.. தான்..” என்றவளுக்கு அதற்கு மேல் பேச முடியாமல் அழுகை வேறு அவளின் தொண்டையை அடைத்தது.
அவளின் கலங்கிய முகமே அவளின் மன நிலையை எடுத்துரைக்க.
அவளை பார்த்து மென்மையாக புன்னகைத்த தாத்தா, “சரி வாங்க உட்கார்ந்து பேசலாம்” என்றவாறு அவர்களை அழைத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்தார்.
சற்று நேரம் மூவரிடத்திலும் அமைதி..
வேதவள்ளிக்கும் தன்னை நிலைப்படுத்த இப்போது இந்த அமைதி தேவைப்படுவதாக இருந்தது.
முதலில் அதை கலைத்த ராம்குமார், “அந்த பிரேமும் அக்ஷ்ராவும் தான் சூர்யாவை தூண்டி விடுற மாதிரி பேசி இருக்காங்க தாத்தா அதனால தான் சூர்யா இப்படி நடந்திருக்கான்”.
“புரியுது ராம் எப்படியோ அவன் கல்யாணமே செஞ்சுக்க மாட்டான்னு நினைச்சேன். இப்படியாவது அவனுக்கு கல்யாணம் நடந்துச்சே” என்கவும்.
அவரை அதிர்ந்து பார்த்த வேதவள்ளி அப்படியே ராம்குமாரையும் பார்க்க.
“இப்போ என்ன பண்ணலாம் தாத்தா?”.
“எதுவா இருந்தாலும் சூர்யா கண்விழிச்ச பிறகு பேசிக்கலாம். ஆனா இந்த பொண்ணு தான் இந்த வீட்டு மருமக” என்றார் திட்டவட்டமாக.
“சரி தாத்தா அப்ப நான் கிளம்புறேன். காலைல வரேன்” என்றவாறு அவன் கிளம்பி சென்று விடவும்.
அவர்கள் இருவருமே அடுத்து என்ன என்பதை பேசி விட்டனர். இவளுக்கு இதில் என்ன கூறுவது என்றும் தெரியவில்லை.
தயங்கி தயங்கி அவள் அமர்ந்திருப்பதை கண்ட தாத்தா, “என்னம்மா என்கிட்ட ஏதாவது சொல்லனுமா?”.
“நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க சார். இதெல்லாம் சரி வராது ஏதோ கோவத்துல சூர்யா சார் இப்படி எல்லாம் நடந்துக்கிட்டாரு.. அதுக்காக வாழ்க்கை முழுக்க அவரால் என்னோட இருக்க முடியாது. அவருக்கு என்னை கண்டாலே பிடிக்காது. எப்பவுமே என்னை திட்டிக்கிட்டே தான் இருப்பார். காலையில் கண் விழிச்சாருன்னா இந்த விஷயம் எல்லாம் நடந்திருக்குன்னு தெரிஞ்சாலே அவர் எப்படி ரியாக்ட் பண்ணுவாருன்னு எனக்கு பயமா இருக்கு. இதுல நான் எப்படி அவரோட இந்த வீட்ல இருக்க முடியும்” என்று ஒருவாறு தன் மனதில் இருந்ததை கேட்டு விட்டாள்.
அவளின் வார்த்தைகளில் இருந்த பயமும் தாத்தாவிற்கு புரியாமல் இல்லை, “இங்க பாருமா சூர்யா கொஞ்சம் கோவக்காரன் தான். அதுக்காக அப்படியே விட்டுவிட முடியுமா என்ன.. அவன் உனக்கு தாலி கட்டி இருக்கான் அதுக்கு அவன் பதில் சொல்லி தானே ஆகணும். கோவத்துல கட்டினாலும் சரி.. தெரியாமல் கட்டினாலும் சரி.. கட்டுனது கட்டுனது தானே.. நீ ஒன்னும் கவலைப்படாத நாளைக்கு அவன் கண்ணு முழிச்சதும் அவன் கிட்ட நான் பேசுறேன்”.
“இல்ல வேண்டாம் சார். எனக்கு அவரை நினைச்சாலே பயமா இருக்கு. எதுக்கு தேவையில்லாத பிரச்சனை இதை இப்படியே விட்டுடலாமே”.
“என்னமா பேசுற நீ சூர்யா தாலி கட்டி உன்னை அவன் பொண்டாட்டியா ஏத்துக்கிட்டு இருக்கான். அது இந்த ஊரு உலகத்துக்கே தெரிஞ்சு போச்சு. இனி அதை அவனே நினைச்சாலும் மாற்ற முடியாது. எதுவா இருந்தாலும் சரி அதை நான் பார்த்துக்கிறேன் நீ நாளைக்கு அவன் என்ன பேசினாலும் எதுவும் ரியாக்ட் பண்ண கூடாது. எல்லா பிரச்சனையும் நான் சரி பண்றேன். நீ எதுக்கும் பயப்படாத உனக்கு சப்போர்டா நான் இருக்கேன்” என்று அவளுக்கு நம்பிக்கை அளித்தவர், “நீ போய் சூர்யா ரூம்ல படு”.
“அவரோட ரூம்லயா?” என்று அடுத்த அதிர்ச்சி அவளிடம்.
“ஆமா புருஷன் பொண்டாட்டினா ஒரே ரூம்ல தானே இருக்கணும். அப்ப உன் புருஷன் ரூம்ல தானே நீ இருக்கணும். அவன் உனக்கு தாலி கட்டி இருக்கான் உனக்கு தர வேண்டிய உரிமையை அவன் கொடுத்து தான் ஆகணும். அவன் அப்படி கொடுக்க முடியாதுன்னு சொன்னா நாம அதை பிடுங்கி எடுத்துக்கலாம்” என்றார் விளையாட்டாக கூறுவது போல்.
அவர் உண்மையாக தான் பேசுகிறாரா என்று புரியாமல் அவரையே வேதவள்ளி புரியாமல் பார்த்தாள்.