புயல் -15
வேதவள்ளி அவரை புரியாத பார்வை பார்க்க, “என்னமா அப்படி பாக்குற.. இப்போ உன்னுடைய மனநிலை எப்படி இருக்கும்னு என்னால நல்லா புரிஞ்சுக்க முடியுது. சூர்யா சின்ன வயசுல இருந்தே நிறைய கஷ்டத்தை அனுபவிச்சு இருக்கான். இனிமேலாவது அவன் வாழ்க்கையில் சந்தோஷம் மட்டும் தான் இருக்கணும்னு நான் ஆசைப்படுறேன். அவன் வாழ்க்கைக்குள்ள நீ வந்த நேரம் எல்லாமே நல்லதா தான் நடக்கணும்.. கண்டிப்பா நடக்கும்”.
இப்பொழுதும் கூட வேதவள்ளியின் முகம் சற்றும் தெளிவடையவில்லை. அவனுடன் ஒரு நாள் ஒன்றாக இருந்ததற்கே திருமணம் வரை கொண்டு வந்து விட்டு விட்டான். இந்நிலையில் வாழ்க்கை முழுக்க எப்படி அவனுடன் இருப்பது..
“அட.. உன்னுடைய குடும்பத்தை பத்தி விசாரிக்க மறந்துட்டேன் பாரு உன் வீட்ல கண்டிப்பா இந்த விஷயம் தெரிஞ்சா ரொம்பவே கோபப்படுவாங்க. நீ ஒன்னும் கவலைப்படாத மா அவங்க கிட்ட எல்லாம் நான் பேசுறேன். நடந்த விஷயத்துக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு நான் அவங்களுக்கெல்லாம் புரிய வைக்கிறேன். உன் குடும்பத்தில் இருக்கிறவங்களும் நடந்த விஷயத்தை புரிந்து கொண்டு உங்களை ஏத்துப்பாங்க”.
“எனக்கு யாரும் இல்ல சார் நான் ஒரே பொண்ணு அப்பா கொஞ்சம் வருஷத்துக்கு முன்னாடி ஒரு ஆக்சிடென்ட்ல இறந்துட்டாங்க. அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் போன வருஷம் இறந்துட்டாங்க இப்போ எனக்குனு யாரும் இல்லை”.
இத்தனை நாளும் தன் பேரன் தான் இவ்வளவு கஷ்டத்தில் வாழ்கிறான் என்று எண்ணிக்கொண்டு இருந்தவருக்கு வேதவள்ளியின் நிலையை கேட்கும்பொழுது சூர்யாவே பரவாயில்லை என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.
சூர்யாவிற்காவது ஆறுதலாக அரவணைப்பாக நாம் இருக்கிறோம். ஆனால் இவளுக்கு அப்படி கூட யாரும் இல்லையே என்று எண்ணும் பொழுதே வேதவள்ளியின் மீது ஒருவித அன்பு உருவானது.
அவளின் தலையில் கையை வைத்து தடவி கொடுத்தவர், “இனி அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. உனக்கு நான் இருக்கேன், சூர்யா இருக்கான் சரியா..”.
ஏனோ அவரின் வார்த்தைக்கு தானாக ‘சரி’ என்பது போல் தலையாட்டி வைத்தாள்.
அதற்குள் அவளின் செல்பேசி சிணுங்க..
“சரிம்மா யாருன்னு பார்த்து பேசிட்டு நீ போய் படு” என்றுவிட்டு அவரும் அவர் அறை நோக்கி சென்று விட்டார்.
செல்பேசியை எடுத்து பார்த்தாள்.. சீதா தான் அழைத்திருந்தாள். எப்படியும் இந்த வீடியோவை பற்றி தான் அவள் கேட்க போகிறாள் என்பது தெரியும். என்ன கூறுவது என்று தெரியாமல் அணைப்பை ஏற்றாள்.
“ஹலோ.. வேதவள்ளி.. எங்கடி இருக்க.. வீடியோல என்னலாமோ சொல்றாங்க.. பிரபல தொழிலதிபர் சூர்யா அவர்கிட்ட வேலை பாக்குற பொண்ண வலுக்கட்டாயமா கல்யாணம் பண்ணிக்கிட்டதா நியூஸ்ல எல்லாம் போடுறாங்க” என்றாள் பதட்டமாக.
அவள் கூறியதை கேட்டு மீண்டும் ஒருமுறை அதிர்ந்த வேதவள்ளி, “என்னடி சொல்ற?”.
“ஆமா டி அத பார்த்து தான் பயந்து போய் நான் உனக்கு கால் பண்றேன். ஏதோ பார்ட்டி இருக்கு சூர்யா சார் கூட லாஸ்ட் மினிட்ல நான் போகிற மாதிரி ஆகிடுச்சுனு தான நீ என்கிட்ட சொன்ன.. ஆனா நியூஸ்ல எல்லாம் என்னென்னமோ சொல்றாங்களே”.
“தெரியல சீதா, ஆனா நீ சொல்ற மாதிரி எல்லாம் எதுவும் நடக்கல” என்றவள் ஒரே மூச்சாக அங்கு நடந்த மொத்தத்தையும் இவளிடம் கூறி முடித்தாள்.
“என்னடி சொல்ற உன்கிட்ட எதுவுமே கேட்காம அவர் இஷ்டத்துக்கு எப்படி அவர் தாலி கட்டலாம்” என்று கோபமாக பொரிய தொடங்கிவிட்டாள்.
“அவருக்கு ட்ரிங்க்ஸ் எடுத்துக்கிட்டா நிதானமே இருக்காதாம். என்ன பண்றோம்னு கூட தெரியாதாம். அதுல தான் இப்படி பண்ணிட்டாரு”.
“அதுக்காக இது என்ன சின்ன விஷயமா கட்டிட்டு கழட்டிக்கிறதுக்கு”.
“இப்ப யாரும் கழட்ட சொல்லல சீதா இங்க நடந்ததே வேற” என்றவள் இவ்வளவு நேரம் இங்கே நடந்த விஷயத்தையும் அவளிடம் முழுமூச்சாக கூறி முடிக்க.
“இது தான் சரி, ஊரெல்லாம் தெரிஞ்ச பிறகு எப்படி நீ வெளியில தலை காட்ட முடியும். நானும் காலையில அங்க வரேன் நீ பாட்டுக்கு பெரிய தியாகி மாதிரி தாலிய கழட்டி கொடுக்கிறேன்னு எதுவும் லூசுத்தனமா பேசி வைக்காமல் இரு” என்றுவிட்டு அணைப்பை துண்டித்தாள்.
தனக்கென இப்பொழுது இருப்பது சீதா மட்டும் தான். எனவே, அவளை வர வேண்டாம் என்று கூறி மறுக்க வேதவள்ளிக்கு ஏனோ மனம் வரவில்லை.
வேதவள்ளி ஒன்றும் சிறு வயது முதலே பாசத்தை பற்றி அறியாதவள் எல்லாம் இல்லையே.. ஒற்றை பெண் பிள்ளையாக அத்தனை பாசத்தோடு வளர்க்கப்பட்டவள் தான். விதி அவளையும் இப்பொழுது நட்டாற்றில் நிற்க வைத்து விட்டது.
பாசத்தின் ருசியை பார்த்தவளிற்கோ இப்பொழுது அது இல்லாமல் இருக்க முடியவில்லை. யாரேனும் தன் மேல் பாசத்தை கொஞ்சமாக காட்டினாலும் அதை மறுக்காமல் ஏற்க தொடங்கி விடுகிறாள்.
தயங்கி தயங்கி சூர்யாவின் அறைக்குள் சென்றவளுக்கு எங்கே படுப்பது என்று தெரியவில்லை. நான்கைந்து பேர் படுக்கும் அளவிற்கு பெரிய கட்டில் தான். அவனின் அறையே அத்தனை பிரம்மாண்டமாக இருந்தது.
அந்த அறையை சுற்றிப் பார்க்கவே அவளுக்கு நிச்சயம் நிறைய நேரம் எடுக்கும் என்று தான் தோன்றியது. மெதுவாக மேலோட்டமாக அறையை நோட்டம் விட்டாள்.
மினி வீட்டையே அறையாக்கி வைத்திருக்கிறான் என்பது மட்டும் நன்றாக விளங்கியது. அறைக்குள்ளேயே சிறிய அளவில் பிரிட்ஜ் இருப்பதை விழி விரித்து பார்த்தவள் ஆச்சரியமாக அதன் அருகில் சென்றாள்.
இதையெல்லாம் அவள் படத்தில் தான் பார்த்து இருக்கிறாள். தன்னையும் மீறி ஆசையோடு அதை அவள் திறந்து பார்க்கவும்.. அவளின் முகமோ அஷ்ட கோணலாக மாறியது. அதற்குள்ளோ விதவிதமான மது பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. சட்டென்று அதை மூடிவிட்டவள் தன் முகத்தை சுழித்து கொண்டு திரும்பினாள்.
அவளுக்கு நேர் எதிரே படுத்திருந்த சூரியாவின் முகம் தான் தெரிந்தது.
“எப்பவாவது தான் ட்ரிங் பண்ணுவாருன்னு கேள்விப்பட்டிருக்கோமே.. ஆனால் வீட்ல இவ்வளவு ட்ரிங்க்ஸ் இருக்கு. அப்போ டெய்லியும் ட்ரிங் பண்ணுவாரோ.. டெய்லி டிரிங்க் பண்ணா இப்படித்தான் தினமும் புலம்புவாரோ..” என்று எண்ணும் பொழுதே அவளுக்கு ஆயாசமாக இருந்தது.
அவனின் முகத்தையே பார்த்துக் கொண்டு அவள் சிந்தித்துக் கொண்டிருக்க சூர்யாவோ புரண்டு படுத்தான்.
அவனின் அசைவில் இவளின் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது என்று கூறலாம்.
உண்மையிலேயே பயந்துவிட்டாள்.
பதட்டத்தோடு தன் நெஞ்சின் மீது கையை வைத்தவள், “அய்யோ! இவ்வளவு நேரம் நம்ம நினைச்சதெல்லாம் அவருக்கு கேட்டு இருக்குமோ.. ச்ச.. ச்ச.. நினைச்சது போய் எப்படி கேட்கும்” என்று தன்னைத்தானே கொட்டிக் கொண்டவள்.
“பதட்டத்துல பைத்தியம் ஆயிட்ட போலருக்கு” என்று திட்டவும் தவறவில்லை.
எங்கே படுப்பது என்று சுற்றி முற்றி பார்த்தாள். அவனுடன் ஒன்றாக ஒரே அறையில் படுப்பதற்கே மூச்சு முட்டுவது போல் இருக்கிறது. இதில் எங்கிருந்து ஒரே கட்டிலில் படுப்பது..
என்ன தான் கட்டில் விசாலமாக இருந்தாலும், அவன் அருகில் சென்று படுக்க இவளுக்குள் ஏதோ ஒரு தயக்கம். அதிலும், விடிந்தால் என்ன நடக்குமோ என்ற கலக்கம் வேறு அவளுக்குள் இன்னும் இருக்க தான் செய்கிறது. எனவே, அறைக்குள்ளேயே போடப்பட்டிருந்த சோபாவில் சென்று படுத்துக் கொண்டாள்.
சற்று அசௌகரியமாக இருந்தாலும் அந்த கட்டிலுக்கு இது எவ்வளவோ மேல் என்று தான் அவளின் மனம் கூறியது.
அன்றைய நாளின் சம்பவங்கள் ஒவ்வொன்றாக அவளுக்குள் அலை மோத அப்படியே கண்ணயர்ந்து போனாள்.
காலையில் முதலில் கண் விழித்தது சூர்யா தான். எழுந்தவனுக்கு தலை விண் விண் என்று பயங்கர வலி. தன் தலையை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தவன் தனக்கு பக்கவாட்டாக இருந்த சோபாவில் படுத்திருந்தவளை சற்றும் கவனிக்கவில்லை.
“ஓ காட்! என்ன இது இப்படி வலிக்குது..” என்று அப்படியே சற்று நேரம் அமர்ந்திருந்தவன் எழுந்து குளியலறைக்குள் சென்று விட்டான்.
குளித்து முடித்து இடுப்பில் துண்டுடன் வெளியே வந்தவன் அந்த ஆளுயர கண்ணாடியின் முன்பு நின்று தன் தலையை கோதும் பொழுது தான் கண்ணாடியினோடு சோபாவில் படுத்திருக்கும் வேதவள்ளியையே கண்டான்.
கண்ட மாத்திரத்தில் அவனுக்குமே பேரதிர்ச்சி தான்.
“இவ எதுக்கு என்னுடைய ரூம்ல வந்து படுத்து இருக்கா” என்று கோபமும் பெருக்கெடுத்தது.
விறுவிறுவென அவள் அருகில் நடந்து சென்றவன் அவளை நோக்கி சொடக்கிடவும். அவளிடம் எந்த ஒரு அசைவும் இல்லை. நிர்மலமான முகத்தோடு ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள்.
நேற்றைய நிகழ்வுகள் அனைத்தையும் சுத்தமாக சூரிய பிரசாத் மறந்து விட்டான். அக்ஷ்ராவிடமும் பிரேமிடமும் சண்டையிட்டது வரை மட்டும் தான் அவனுக்கு நினைவிருக்கிறதே தவிர, நடந்த மற்ற எதுவும் அவனுக்கு நினைவில்லை.
“நேத்து பார்ட்டி முடிச்சிட்டு வந்ததும் என்னோடவே வந்துட்டாளா.. அதுக்காக வேற எங்கேயாவது படுக்க வேண்டியது தான என்னுடைய ரூமுக்குள்ள வந்து படுத்து இருக்கா.. யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க.. இடியட்! கொஞ்சம் கூட அறிவுன்றது இல்ல.. ஒரு வயசு பொண்ணு இப்படி ஒருத்தனோட ரூம்ல இருக்கானு தெரிஞ்சா மத்தவங்க எல்லாம் என்ன பேசுவாங்க” என்று அவளுக்கு சரமாரியாக வாய்க்குள்ளேயே வசை பாடினான்.
பாவம், இதைவிட பெரிய சம்பவத்தை நாம் செய்திருக்கிறோம். அதை இந்த ஊர் உலகமே பார்த்துவிட்டது என்பதை அப்பொழுது அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
“ஏய்! எழுந்திரி” என்றான் அடி குரலில் சீற்றமாக.
அப்பொழுதும் அவளிடம் எந்த ஒரு அசைவும் இல்லாமல் போக.. கடுப்பானவன் தன் தலையை அழுத்தமாக கோதியவாறு சுற்றி முற்றி பார்க்கவும். அவனின் கண்களுக்கு சிக்கியது அங்கே வைக்கப்பட்டு இருந்த தண்ணீர் ஜக்கு தான்.
விறு விறுவென நடந்து சென்றவன் அதை வெடுக்கென்று எடுத்துக் கொண்டு இவள் அருகில் வந்து சற்றும் யோசிக்காமல் அதிலிருந்த நீர் மொத்தத்தையும் அவளின் முகத்திலேயே ஊற்றினான்.
அவனின் இத்தகைய செயலை சற்றும் எதிர்பாராதவள் மூச்சடைக்க திணறிக்கொண்டு எழ. பதட்டத்தில் பிடிக்க அருகில் எதுவும் இல்லாததால் தன் அருகில் நின்ற அவனின் துண்டை அவள் அழுத்தமாக பிடிக்கவும்..
அதுவோ சூர்யாவிற்கு பிரியா விடை கொடுத்துவிட்டு அவன் இடுப்பிலிருந்து நழுவி விட்டது. இதை இருவருமே சற்றும் எதிர்பார்க்கவில்லை.
பதறிக்கொண்டு கண்ணை திறந்தவளின் முன்னே இப்படி ஒரு காட்சியில் சூர்யா நிற்பான் என்பதை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அடுத்தடுத்து நடந்த சம்பவங்களினால் பயந்து போனவள் அவனின் இத்தகைய நிலையை கண்டு மேலும் அரண்டு போக, “ஆ..ஆ….” என்று அந்த வீடே அதிரும் வண்ணன் கத்த தொடங்கி விட்டாள்.