எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 19

4.7
(24)

புயல் – 19

“சார் எல்லாமே நீங்க தான் சொல்றீங்க.. மேடம் சைலன்ட்டா இருக்காங்க. அவங்க முகத்தை பார்த்தா ஏதோ பயத்துல நிக்கிற மாதிரி இருக்கே.. நீங்க சொல்லுங்க மேடம் உண்மையிலேயே சார் சொல்றதெல்லாம் உண்மையா.. நீங்க ரெண்டு பேரும் காதலிச்சு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களா”.

சூர்யா அவளின் தோளை சுற்றி இருந்த தன் கையில் சற்று அழுத்தத்தை கொடுக்கவும், “நானும் சூர்யா சா..” என்று ஆரம்பித்தவள், அவனின் பார்வையை பார்த்து சட்டென்று நிறுத்தி, “நானும் சூர்யாவும் லவ் பண்றோம். ரெண்டு பேருமே விருப்பப்பட்டு தான் நேற்று அந்த கல்யாணம் நடந்துச்சு” என்று ஒரே மூச்சாக கடகடவென கூறி முடித்தாள்.

“இப்போ உங்க எல்லாருக்கும் கிளியர் ஆகி இருக்கும்னு நினைக்கிறேன். நேத்து நைட்ல இருந்து தேவையில்லாத ரூமர்ஸ் எல்லாம் ஸ்ப்ரெட் பண்ணிட்டாங்க.. அது எல்லாமே ரூமர்ஸ் மட்டும் தான். வி ஆர் லவ்விங் ஈச் அதர். சீக்கிரமே எங்களுடைய ரிசப்ஷனும் நடக்கும். அதுக்கும் நீங்க எல்லாரும் கண்டிப்பா வரணும்” என்று மென் சிரிப்புடன் கூறியவன் வேதவள்ளியின் கையை அழுத்தமாக பற்றியவாறு தன்னுடன் அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டான்.

அவன் சென்ற பிறகும் பத்திரிகையாளர்கள் தங்களுக்குள் சலசலத்துக் கொண்டே அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அங்கிருந்து வெளியேறிய பிறகு தான் வேதவள்ளிக்கு இழுத்துப் பிடித்திருந்த மூச்சு வெளியேறியது.

காலையில் அக்ஷ்ராவும் பிரேமும் கண் விழித்தது இந்த செய்தியில் தான்.

பிரேமின் புருவங்கள் ஆச்சரியமாக மேலுயர, “பரவாயில்லையே.. இவன் ஈஸியா இந்த பிராப்ளமில் இருந்து எஸ்கேப் ஆகிட்டான். நான் கூட கொஞ்சம் திணறுவான்னு நினைத்தேன். பட், நான் எக்ஸ்பெக்ட் பண்ணதை விட இவன் உஷாரான ஆளா தான் இருக்கான். ரெண்டு பேரும் லவ் பண்ணி மேரேஜ் பண்ணிக்கிட்டாங்களாமே..” என்று நக்கலாக புன்னகைத்தபடி கூறவும்.

அக்ஷ்ராவோ சூர்யா செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதையே வன்மமாக முறைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளின் தோளில் கையை போட்டவன், “என்ன டார்லிங் அப்படி பாக்குற?”.

“ஐ காண்ட் டைஜஸ்ட் திஸ் எனி மோர் பிரேம். அந்த சூர்யா கடைசி வரைக்கும் கல்யாணம் பண்ணிக்காம என் நினைப்பிலேயே கஷ்டப்படுவான்னு நினைத்தேன். இவ்வளவு சீக்கிரம் இந்த கேம் முடிஞ்சு போச்சு” என்றாள் வருத்தமாக.

“கேம் இன்னும் முடியல.. அந்த சூர்யா கேம்ம ஜஸ்ட் டைவர்ட் பண்ணி இருக்கான் அவ்வளவு தான். நீ ஒன்னும் பீல் பண்ணாத ஆட்டத்தை திரும்ப சூடு பிடிக்க வைத்துடுவோம்” என்று அவளை நோக்கி ஒற்றை கண்ணை சிமிட்டவும்.

அவளும் முகத்தில் இருந்த கோபம் குறைய புன்னகைத்தாள்.

வீட்டிற்குள் நுழைந்த வேதவள்ளிக்கு இன்னமுமே படபடப்பு குறையவில்லை. இதெல்லாம் அவளுக்கு மிகவும் புதியது. முதல் முறை இப்படி செய்தியாளர்கள் சந்திப்பை எல்லாம் காண்கிறாள். உள்ளுக்குள் வெடவெடத்து போய்விட்டது.

அதிலும், தன் பயத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் அவர்கள் முன்பு இருப்பது பெரும் பாடு என்றால், சூர்யாவை காதலிப்பது போல் தத்ரூபமாக பேசுவது மற்றொரு பாடாகி போனது.

ஒருவழியாக அனைத்தும் முடிந்து விட்டது என்று எண்ணி நிம்மதி பெருமூச்சை விடுவதற்குள்ளாகவே அடுத்த பிரச்சனை.

இனி சூர்யாவுடன் ஒரே வீட்டில் இருந்தாக வேண்டும் என்ற பெரிய பிரச்சனை..

வேதவள்ளிக்கு நேற்று முதல் ஏதோ கண்ணை கட்டி காட்டில் விட்ட நிலை தான். தலையே சுற்றுவது போல் ஆகிவிட்டது.

ஒன்று முடிந்தால் ஒன்று என்று எத்தனை பிரச்சனைகளை தான் எதிர்கொள்வது என்று ஒரு கட்டத்தில் அவளுக்கு சலிப்பே தட்டிவிட்டது.

“சரிடி எனக்கு டைம் ஆயிடுச்சு இன்னைக்கு டே ஷிஃப்ட் நான் கிளம்புறேன்” என்று சீதா கூறவும்.

உண்மையிலேயே இந்த நேரத்தில் சீதா வேதவள்ளிக்கு ஆதரவாக வந்தது அவளுக்கு பெரும் ஆறுதலாக இருந்தது.

“ம்ம்” என்று கலக்கமான முகத்துடன் தலையசைத்தாள்.

“நீ ஒன்னும் கவலைப்படாம போயிட்டு வாம்மா இனி வேதவள்ளி எங்க வீட்டு பொண்ணு.. எங்க வீட்டு மருமக.. அவளை நாங்க பத்திரமா பார்த்துக்கிறோம்” என்று புன்னகை முகமாக கூறவும்.

அவரின் வார்த்தை ராமின் மனதிற்குள் மெல்லிய வலியை உண்டாக்கியது என்னவோ உண்மை தான்.

அவரின் வார்த்தையில் சூர்யா அவரை முறைத்து பார்க்கவும். அதையெல்லாம் சட்டை செய்யாமல் கண்டும் காணாதது போல் அமர்ந்திருந்தார் தாத்தா.

அவருக்கு சம்மதமாக தலையசைத்த சீதா அங்கிருந்து கிளம்பும் முன்பு ராம்குமாரை பார்வையால் வருடிவிட்டே அங்கிருந்து புறப்பட்டாள்.

ராமை பற்றி வேதவள்ளி கூற கேட்டவளுக்கு அவனை காணாமலேயே அவன் மேல் ஒரு வித ஈர்ப்பு உண்டாகி விட்டது.

அவள் சென்றதும் ராம்குமாரை பார்த்த தாத்தா, “ராம் நாளைக்கு மறுநாள் இவங்களுக்கு கிராண்ட் பேலஸ்ல ரிசப்ஷன் வைக்கணும்”.

“வச்சிடலாம் தாத்தா”.

“நீ ஏன் முகத்தை ஒரு மாதிரி வச்சிருக்க.. உன் பிரண்டுக்கு இப்படி ஆகிடுச்சேனு ஃபீல் பண்றியா என்ன”.

“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல.. கொஞ்சம் கூட எக்ஸ்பெக்ட் பண்ணாத இவ்வளவு பெரிய விஷயம் நடக்கவும் எனக்கு எப்படி ரியாக்ட் பண்றதுன்னு தெரியல தாத்தா”.

“இதுவும் நல்லதுக்கு தான்னு நினைச்சுக்கோ இல்லனா, இந்த பையன் கடைசி வரைக்கும் ஒண்டிக்கட்டையாவே இருந்து இருப்பான். இந்த வீட்டுக்கும் இப்படி ஒரு மகாலட்சுமி மருமகளா வந்திருக்க மாட்டா” என்றவரை முறைத்துப் பார்த்த சூர்யா தன் பற்களை கடித்துக் கொண்டு, “அவ பேரு ஒன்னும் மகாலட்சுமி இல்ல வேதவள்ளி”.

“அது எனக்கு தெரியாதா.. நம்ம குடும்பத்துக்கு வந்த மகாலட்சுமின்னு சொன்னேன்டா”.

“ம்கூம்.. வாட் எவர்.. ரொம்ப முக்கியம்” என்று நொடிந்து கொள்ளவும் அவன் தவறவில்லை.

“சரி தாத்தா நான் போய் அரேஞ்மெண்ட்ஸ் எல்லாம் பாக்குறேன். உனக்கு எப்படி பண்ணனும்னு ஏதாவது ஐடியா இருக்கா டா” என்றான் சூர்யாவை பார்த்து.

“ஏதோ ஒன்னு பண்ணு” என்று கடுப்புடன் அவன் கூறவும்.

வேதவள்ளி பயத்தோடு எச்சிலை கூட்டி விழுங்கி கொண்டாள்.

அவளின் மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்தது ஒரே எண்ணம் தான்.

‘எப்படி தான் இவனுடன் வாழ்க்கை முழுக்க குப்பை கொட்ட போகிறோமோ’ என்பது மட்டும் தான். அது அவளின் முகத்திலேயே அப்பட்டமாக பிரதிபலித்தது.

அவளின் முகத்தை பார்த்தே அவளின் எண்ண ஓட்டத்தை சரியாக கணித்த சூர்யா அவளை நன்கு முறைத்து பார்த்து விட்டு தன் அறைக்கு எழுந்து சென்று விட்டான்.

அதன் பிறகு ராம்குமார் விடை பெற்று சென்று விட.

“நீ ஒன்னும் அவனை நினைச்சு கவலைப்படாதம்மா.. பாக்க தான் கொஞ்சம் முரட்டுத்தனமா இருப்பான். உள்ளுக்குள்ள அவன் ஒரு குழந்தை மாதிரி”.

“இவ்வளவு டெரரான குழந்தைய நான் இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லை” என்று நொந்து போய் அமர்ந்திருந்தாள் வேதவள்ளி.

“அவன் கிட்ட பழகி பார் உனக்கே அவனை ரொம்ப பிடிச்சிடும். ஒருத்தர் மேல உண்மையான அன்பு வச்சுட்டா யாருக்காகவும் அவங்களை விட்டுக் கொடுக்க மாட்டான்”.

அடுத்த அரை மணி நேரமும் தன் பேரனின் புகழை பாடிவிட்டே வேதவள்ளியை அவர் சூர்யாவின் அறைக்குள் அனுப்பி வைத்தார்.

“இந்த தாத்தா பேசுறதுக்கும் சூர்யா சாருக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லையே.. நல்லவரு வல்லவருனு ஓவரா பில்டப் பண்றாரு” என்று முணுமுணுத்துக் கொண்டே அவன் அறைக்குள் நுழையவும்.

அங்கே சோபாவில் கால் மேல் கால் இட்டவாறு ஒற்றை கையால் தன் நெற்றை தேய்த்துக்கொண்டு கண்முடி அமர்ந்திருந்த சூர்யா, இவள் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழையும் அரவத்தில் நிமிர்ந்து அவளை ஏறிட்டு பார்த்தவன்.

“என்னடி நினைச்சுட்டு இருக்க உன் மனசுல ரொம்ப தான் ஓவரா போற”.

எடுத்த எடுப்பிலேயே அவன் எகிரிக் கொண்டு வரவும். இவளுக்கு தான் ஒன்றும் விளங்கவில்லை.

அவனை புரியாமல் பார்த்தவள், “நான் என்ன ஓவரா போறேன்?”.

“என் கூட எப்படி லைஃப் லாங் வாழறதுன்னு தானே வெளியில் யோசிச்ச?” என்று அவளை துளைத்தெடுக்கும் பார்வை பார்த்துக் கொண்டே அவன் கேள்வி எழுப்பவும்.

“அடப்பாவி! எப்படி இவ்வளவு கரெக்டா சொல்றாரு” என்று திக்கென்று இருக்க ஒரு நொடி திரு திருவென விழித்தவள்.

“அது.. அதெல்லாம் ஒன்னும் இல்லையே” என்றாள் மெல்லிய பதட்டத்தோடு.

“ரொம்ப யோசிக்காத அந்த கஷ்டம் எல்லாம் உனக்கு இருக்காது. ஏன்னா, நீயும் நானும் லைஃப் லாங் ஒன்னா வாழ போறது கிடையாது” என்று அவளை பார்த்து அழுத்தமாக அவன் கூறவும்.

“ஓகே சார்” என்றாள் அவனிடமிருந்து தப்பித்தால் போதும் என்பது போல்.

“டோன்ட் கால் மீ சார்.. ரெண்டு பேரும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணி இருக்கிறதா நியூஸ் சேனல்ல நியூஸ் கொடுத்திருக்கோம். நீ என்னை சார்னு கூப்பிடுவதை யாராவது பார்த்தாங்கன்னா அது வேற தேவையில்லாத பிரச்சனையை கிளப்பி அப்புறம் தேவை இல்லாத தலைவலி.. இனிமேல் என்னை சூரியானே கூப்பிடு”.

“இல்ல.. வயசுல பெரியவங்கள போய் எப்படி பெயர் சொல்லி கூப்பிடுறது” என்று தயங்கி தயங்கி அவளின் வார்த்தைகள் வெளிவரவும்.

அவளை கோபமாக முறைத்துப் பார்த்தவன், “அப்போ என்னை வயசானவன்னு சொல்றியா?” என்றான் தன் ஒற்றை புருவத்தை ஏற்றி கேள்வியாக.

“ஐயோ! அப்படியெல்லாம் சொல்லல” என்று அவசரமாக அவள் மறுக்கவும்.

“லுக்! உனக்கும் எனக்கும் சிக்ஸ் இயர்ஸ் தான் டிப்ரன்ஸ். ஒழுங்கு மரியாதையா இனிமே என்னை பெயர் சொல்லி தான் கூப்பிடனும். திரும்ப ஏதாவது ஒரு பிரச்சனையை இழுத்து விட்டுடாத”.

அவனின் அதிகார பேச்சில் நாலாபுரமும் தன் தலையை ஆட்டி வைத்தாள்.

தன் கடந்த காலத்தை பற்றி இவளிடம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சூர்யா நினைத்தும் பார்க்கவில்லை.

இவளுடன் வாழ்க்கை முழுக்க ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்ற எண்ணம் அவனுக்குள் இருந்தால் தானே அவன் தன் கடந்த காலத்தை பற்றி இவளிடம் விவரிக்க முற்படுவான்.

அவனுக்கு தான் இவளுடன் வாழ்க்கை முழுக்க வாழ விருப்பமே இல்லையே.. இந்த பிரச்சனைகள் எல்லாம் தீரும் வரை மட்டும் இருவரும் ஒன்றாக இருக்கும் மனநிலையில் தானே அவன் இருக்கிறான்.

எனவே, அவளிடம் தன்னை பற்றிய எந்த ஒரு விபரத்தையும் அவன் கூறவில்லை.

அதே போல் அவளை பற்றிய எந்த ஒரு விபரத்தையும் அவன் கேட்கவும் முற்படவில்லை.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 24

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!