எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 20

4.7
(15)

புயல் – 20

அன்றைய நாள் அப்படியே கழிந்தது. மறுநாள் வழக்கம் போல் சூர்யா அலுவலகம் கிளம்பவும், வேதவள்ளியும் கிளம்பி வெளியே வந்தாள்.

நேற்று முதல் சூர்யா வேதவள்ளியை சற்றும் கண்டு கொள்ளவே இல்லை. தன் அறையில் இப்படி ஒருத்தி இருக்கிறாள் என்பதை கூட அவன் கருத்தில் கொள்ளவில்லை.

அவளுமே அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

வழக்கம் போல் இன்றும் வேலைக்கு செல்ல ஆயத்தம் ஆகி வெளியே வந்தவளை உற்றுப் பார்த்தவன், “எங்கே போற?” என்றான் தன் புருவத்தை ஏற்றி கேள்வியாக.

“ஆபீஸ்க்கு தான்”.

“ஒன்னும் தேவையில்லை”.

“ஏன் நான் தான் உங்களுக்கு அக்ரீமெண்ட்ல சைன் பண்ணி கொடுத்து இருக்கேனே.. நீங்க எத்தனை வருஷம் வேலை பார்க்க சொல்றீங்களோ அதனை வருஷம் ஃப்ரீயாவே வேலை பார்க்கிறேன்னு.. சைன் பண்ணி கொடுத்து தானே உங்ககிட்ட இருந்து பணம் வாங்கி இருக்கேன். இப்போ வராமல் இருந்தா எப்படி அந்த கடனை அடைக்கிறது?”.

“நீ உழைச்சு கொட்டி தான் என் கம்பெனி முன்னேற போகுது பாரு.. நீ ஆபீஸ்க்கு வந்து வேலை செய்யுறதை எவனாவது பார்த்தா திரும்ப தேவையில்லாத பிரச்சனை.. கொஞ்சம் நாள் நீ அந்த பக்கமே வராத” என்று சிடுசிடுத்தான்.

“ஏன் சூர்யா இப்படி சொல்ற.. வீட்டுக்குள்ளவே இருந்தா அந்த பொண்ணுக்கும் போர் அடிக்கும் இல்ல எப்பயும் போல வேலைக்கு வரட்டுமே”.

“தாத்தா இப்ப தான் எல்லா பிரச்சனையும் கொஞ்சம் சரி ஆகி இருக்கு. இப்ப திரும்ப இவ அங்க வந்து சாதாரண ஸ்டாஃபா வேலை பார்த்தா திரும்ப வேற ஏதாவது ஒரு ரூமரை கிரியேட் பண்ணுவாங்க. கொஞ்சம் நாள் இவ வீட்டிலேயே இருக்கட்டும். இந்த பிராப்ளம் எல்லாம் கொஞ்சம் சரியாகட்டும், அப்புறமா இவ வேலைக்கு வரலாம்” என்று விட்டு அவன் மட்டும் அலுவலகம் கிளம்பி சென்று விட்டான்.

தாத்தாவிற்கும் அவன் கூறுவது சரி என்று தோன்றவே, அவரும் அவனை எதுவும் தடுக்கவில்லை.

அவன் சென்றதும் வேதவள்ளியின் முகமோ வாடி விட.

அதை கவனித்த தாத்தா, “என்னம்மா சூர்யா சொல்றதும் வாஸ்தவம் தானே.. இப்போ தான் பிரஸ்ல நியூஸ் கொடுத்து இருக்கீங்க.. அப்புறம் தேவையில்லாத ரூமர்ஸ் எல்லாம் கிரியேட் பண்ணிடுவாங்க. கொஞ்சம் நாள் போகட்டும் அதுக்கப்புறம் சூர்யா சொன்ன மாதிரி திரும்ப நீ வேலைக்கு போகலாம்”.

“அதுக்கு இல்ல சார் நான் அவர்கிட்ட கடன் வாங்கி இருக்கேன். அதை திரும்ப கொடுக்கனும் அதான்..” என்று தயக்கத்தோடு இழுத்தாள் வேதவள்ளி.

அவள் கூறியதை கேட்டு மென்மையாக புன்னகைத்தவர், “என்னமா பேசுற நீ புருஷன் பொண்டாட்டிக்குள்ள போய் கடன் அது இதுன்னு.. கணவன் மனைவி என்பது ரொம்பவே புனிதமான பந்தம். இதுல மனைவி கணவனுக்கு கடன் படுறதும், கணவன் மனைவிக்கு கடன் படுவதும் சாதாரணமான விஷயம் தான். இத போய் நீ பெருசு படுத்திக்கிட்டு இருக்கியே”.

“இல்ல சார் நான் ஒரு கஷ்டமான சூழ்நிலையில இருக்கும் பொழுது எனக்கு சூர்யா சார் தான் பணம் கொடுத்து ஹெல்ப் பண்ணாங்க. அந்த நன்றியை நான் அவ்வளவு சீக்கிரம் மறந்துட மாட்டேன். அப்போ நான் அவருக்கு கண்டிப்பா இந்த பணத்தை திரும்பி கொடுப்பேன்னு சொல்லி அக்ரிமெண்ட்ல சைன் பண்ணி இருந்தேன். நான் கொடுத்த வாக்கை காப்பாத்தணும் இல்ல”.

“நீ சொல்றது சரி தான். ஆனால் அப்போ சூர்யா யாரோ நீ யாரோ.. ஆனா இப்போ அப்படி இல்லையே.. சூர்யா உன்னுடைய புருஷன். அவனுக்கு சொந்தமான எல்லாத்துலயும் உனக்கும் சம பங்கு இருக்கு. அப்படி பார்த்தா இந்த 10 லட்சம் எல்லாம் உனக்கு ஒண்ணுமே இல்ல. சூர்யாவுடைய பிசினஸ்லயே உனக்கு பங்கு இருக்கும் பொழுது பத்து லட்சத்தை போய் பெருசா பேசிக்கிட்டு இருக்கியே.. அப்புறம் இன்னொரு விஷயம் இனிமே என்னை சார்னு கூப்பிடாத.. தாத்தானு உரிமையா கூப்பிடு. என் பேரன் எப்போ உன் கழுத்துல தாலி கட்டினானோ அப்போவே நீயும் என்னுடைய பேத்தியாகிட்ட.. அதனால இனிமே உரிமையா தாத்தானு தான் நீ என்னை கூப்பிடனும்” என்று உரிமையோடு அவர் கண்டிப்பான குரலில் கூறவும்.

வேத வள்ளியின் தலை தானாக ‘சரி’ என்பது போல் ஆடியது.

அதன் பிறகு வேதவள்ளியும், தாத்தாவும் வெகு நேரம் பேசிக்கொண்டு அமர்ந்திருந்தனர். அவர்களுக்குள் ஏதோ ஒரு பிணைப்பு உருவாகிவிட்டது. தாத்தாவிற்கு வேதவள்ளியின் கள்ளம் கபடமற்ற குணம் மிகவும் பிடித்து போய்விட்டது.

சடகோபன் கடுகடுத்த முகத்தோடு அமர்ந்திருந்தார்.

அவரின் தோளில் தட்டிய நாராயணமூர்த்தி, “சரி‌ விடு பார்த்துக்கலாம்”.

“ச்ச.. எவ்வளவு ஆசையா இருந்தேன்னு தெரியுமா.. கடைசில எல்லாம் இப்படி ஆயிடுச்சே.. இவ எப்படி டா அவ்வளவு பெரிய ஆளை பிடிச்சிருப்பா?”.

“ஆள் பாக்க அழகா இருக்கா.. அதை வச்சு தான் பிடிச்சிருப்பா”.

“ஆனா நம்ம கிட்ட எல்லாம் ரொம்ப முரண்டு பிடிச்சாளே.. அவன்கிட்ட மட்டும் எப்படி சம்மதிச்சிருப்பா”.

“இது என்னடா கேள்வி? நீ என்ன அவளை கல்யாணம் பண்ணி கூட வச்சுக்கவா கூப்பிட்ட.. அது மட்டும் இல்லாம நமக்கு அவளுடைய அப்பா வயசு இருக்கும். அந்த சூர்யா வயசு பையன், அழகாவும் இருக்கான், பணக்காரனாவும் இருக்கான். இதைவிட அவளுக்கு வேற என்ன வேணும்? வேலைக்கு போன இடத்துல எப்படியோ அவனை கரெக்ட் பண்ணிட்டா.. ஆனா, நான் கூட அவளுக்குள் இந்த அளவுக்கு திறமை இருக்கும்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை. நான் நினைச்சதை விட அவ பயங்கரமான ஆளா தான் இருக்கா”.

“தப்பு மொத்தமும் என் பெயரில் தான். நீ அன்னைக்கே அவ பணம் கொடுக்க வந்திருந்த போதே அவளை விடக்கூடாதுன்னு சொன்ன.. நான் தான் எங்க போயிடப் போறா.. பெத்தவங்களும் இல்ல, உறவுனு சொல்லிக்கவும் யாரும் இல்ல.. ஈசியா நம்மகிட்ட சிக்கிடுவானு நினைச்சு அசால்டா இருந்துட்டேன். அது தான் நான் பண்ண பெரிய தப்பு. ச்ச.. அன்னைக்கு மட்டும் உன் பேச்சை கேட்டு இருந்தா இன்னைக்கு இப்படி புலம்பிக்கிட்டு இருக்க நிலைமை வந்து இருக்காது”.

“சரி விடு, எனக்கும் வருத்தமா தான் இருக்கு. அதுவும் எவ்வளவு பிளான் பண்ணேன் அவளுக்காக.. அவங்க அம்மா சாக கிடக்கும் போது அவ்வளவு உதவி பண்ணேன். அந்த நன்றிக்காகவாவது அவ நம்மளோட அட்ஜஸ்ட் பண்ணி போவான்னு நினைச்சேன். ஆனா, சரியான திமிரு பிடிச்சவ.. எப்படியோ பணத்தை ரெடி பண்ணி கொண்டு வந்து கொடுத்துட்டா” என்று வாய் கூசாமல் இருவரும் வேதவள்ளியை பற்றி மாறி மாறி புலம்பிக் கொண்டு இருந்தனர்.

சடகோபன் சட்டென்று முகம் பளிச்சிட, “சரி, அவளை விடு.. இனி அவ கிட்ட கூட நெருங்க முடியாது. அன்னைக்கு அவ பணத்தை கொடுக்க வரும்போது அவளோட பிரண்டு ஒருத்தி கூட வந்தாளே அவ எப்படி?” என்றார் கண்கள் மின்ன.

நாராயண மூர்த்தியின் முகமோ அலட்சியத்தை அப்பட்டமாக வெளிப்படுத்த, “எனக்கு அந்த பொண்ணெல்லாம் பிடிக்கல. நீ தான் அவளை பிடித்திருக்குனு சொல்லிட்டு இருக்க. எனக்கு எப்படியாவது திரும்ப அந்த வேதவள்ளியை நம்ம கைக்குள்ள கொண்டு வரணும்”.

“உளராதடா.. இனி நீயே நினைச்சாலும் அவளை நாம நெருங்க கூட முடியாது. அவ ஒன்னும் இப்போ பழைய வேதவள்ளி கிடையாது. அந்த அர்ஜுனோட பொண்டாட்டி! இந்நேரம் அவளுக்கு பயங்கர செக்யூரிட்டியை கூட அவன் போட்டு இருக்கலாம். பார்த்த இல்ல பிரஸ் மீட்ல ரெண்டு பேரும் எப்படி ஜோடியாக வந்து நியூஸ் கொடுத்துட்டு போறாங்கன்னு.. லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கலாமே! என்னால அவங்க சொன்ன எதையுமே நம்ப முடியல. ஆனா, லவ் பண்ணலைன்னா அந்த சூர்யா எதுக்காக அவ கழுத்துல போய் தாலி கட்டி இருக்க போறான்னு சந்தேகமாவும் இருக்கு. ஒருவேளை, உண்மையிலேயே இரண்டு பேரும் லவ் பண்ணி இருப்பாங்களோ”.

“அப்படி இருந்திருந்தா நம்மள பத்தி அவன்கிட்ட அவ முன்னாடியே சொல்லி இருப்பாளே.. அப்படி சொன்னது போல தெரியலையே. திடீர்னு தானே இந்த கல்யாணம் நடந்திருக்கு”.

“ம்ம்.. நீ சொல்றது சரிதான். இதுவரைக்கும் சொல்லல சரி, ஆனா இனிமே சொல்லிட்டா?” என்றதுமே பதறிய நாராயணமூர்த்தி, “என்னடா சொல்ற?”.

“ஆமா டா.. இவ்வளவு நாள் சொல்றதுக்கு டைம் கிடைக்கலைன்னு வச்சுக்கோ.. ஏன்னா, அவ ஆபீஸ்ல வேலைக்கு சேர்ந்தே கொஞ்சம் நாள் தான் ஆகுது. அதுக்குள்ள ரெண்டு பேரும் லவ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. அதுல நம்மள பத்தி எல்லாம் சொல்லாம விட்டுட்டான்னு வச்சுப்போம். இப்போ கல்யாணம் ஆயிடுச்சு நாம அவளுக்கு கொடுத்த டார்ச்சர் பத்தி எல்லாம் அவ புருஷன் கிட்ட சொல்லி நமக்கு ஏதாவது வேட்டு வச்சுட்டா என்ன பண்றது?”.

“அந்த அளவுக்கெல்லாம் அவ போக மாட்டாடா. அவளே சரியான பயந்தாங்கோலி” என்று அலட்சியமாக கூறினாலும் நாராயண மூர்த்திக்குள் சற்று உதறல் எடுத்தது என்னவோ உண்மை தான்.

“அப்படியெல்லாம் நினைச்சுடாதடா.. அவ ஒன்னும் இப்போ பழைய வேதவள்ளி கிடையாது. பிசினஸ் மேன் உடைய பொண்டாட்டி! அவன் நினைச்சா நம்மள என்ன வேணும்னாலும் பண்ணலாம்”.

“சும்மா இருடா.. நீ வேற எதையாவது பேசி பயமுறுத்தாத. இப்ப என்ன பண்ணனும்ன்ற?”.

“அந்த வேதவள்ளியை திரும்ப எப்படியாவது நம்ம கைக்குள்ள கொண்டு வரணும்னு சொன்னல.. அந்த எண்ணத்தை அடியோட மறந்துடு. அது தான் நம்ம ரெண்டு பேருக்குமே இப்போதைக்கு நல்லது. அவளா வாயைத் திறந்து சொல்லலைனாலும் நம்மளே வாண்டடா போய் மாட்டிக்கிட்ட மாதிரி ஆகிட கூடாது. இப்போதைக்கு அந்த சீதாவை வைத்து அட்ஜஸ்ட் பண்ணிக்கோ”.

சலிப்பான பெருமூச்சை வெளியேற்றியவர், “வேற வழி.. அதை தான் செஞ்சாகணும். என்னவோ போ, காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் தூக்கிக்கொண்டு போன மாதிரி ஆகிடுச்சு நம்ம கதை. சரி, அந்த பொண்ணயாவது சீக்கிரம் தூக்க ஏற்பாடு பண்ணு. இதுக்கும் வேற எவனாவது பிரச்சனை பண்ண வந்துட போறான்”

விடிந்து பல மணி நேரங்களை கடந்த பிறகும் சீதா கட்டிலில் இருந்து எழ சற்றும் மனமின்றி குப்புற படுத்துக்கொண்டு தலையணையை இறுக்கமாக அணைத்திருந்தவளின் மனக்கண் முன்போ நேற்று ராம்குமார் உடனான அந்த உரையாடலே தோன்றி மறைந்து கொண்டு இருந்தது.

அதற்கே அவளின் உடலில் அப்படி ஒரு சிலர்ப்பு!

இவளின் எண்ணம் இங்கே இப்படி இருக்க.. அவன் அங்கே யாரைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறானோ..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!