நேற்று காலை சீதா வேதவள்ளியின் வீட்டிலிருந்து வெளியேறியவள் அவர்களின் வீட்டு வாயிலில் நின்றுகொண்டு ஆட்டோவிற்காக காத்துக் கொண்டு இருந்தாள்.
அலுவலகத்திற்கு வேறு நேரம் ஆகிவிட்டது. ஒரு ஆட்டோவையும் அந்த புறமே காணவில்லை. இப்பொழுது எப்படி செல்வது என்று தெரியாமல் தன் கை கடிகாரத்தை திருப்பிப் பார்த்துக் கொண்டே சற்று பதட்டமாக தான் நின்று இருந்தாள்.
அதற்குள் அனைவரிடமும் பேசிவிட்டு ராம்குமார் விடைபெற்று வெளியே வந்தவனின் பார்வையில் விழுந்தாள் சீதா.
அவள் அருகில் காரை கொண்டு வந்து நிறுத்தியவன் கண்ணாடியை இறக்கி விட்டு, “என்ன ஆச்சு இன்னும் இங்கேயே நிற்கிறீங்க கிளம்பலையா?”.
இந்த நேரம் இவனின் தரிசனம் கிட்டும் என்பதை சற்றும் எதிர்பார்க்காத சீதாவிற்கு நிச்சயமாக இது இன்ப அதிர்ச்சி தான்.
அதுவும் அவனே வலிய வந்து தன்னிடம் பேசுவதை எல்லாம் அவளால் நம்பவே முடியவில்லை.
“ஆங்.. அது வந்து ஆபீஸ்க்கு கிளம்பனும் டைம் ஆகிடுச்சு” என்று தன் கை கடிகாரத்தை திருப்பி காட்டியவள்.
“ஆட்டோ எதுவும் வரல அதான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்” என்று மகிழ்ச்சியில் திக்கி திணறி வார்த்தைகள் தந்து அடிக்க கூறி முடித்தாள்.
“இஃப் யூ டோன்ட் மைண்ட் நான் வேணும்னா உங்கள டிராப் பண்ணட்டுமா?”.
அவ்வளவு தான்.. சீதாவின் கால்கள் தரையிலேயே நிற்கவில்லை.
“ஒய் நாட்.. ஷ்யோர்!” என்றவளோ தன் அக மகிழ்ச்சியை முகத்தில் காட்டாமல் இருக்க பெரும்பாடு தான் பட்டுப்போனாள்.
‘கொஞ்சம் அடக்கி வாசி அப்புறம் உன்னை அலைஞ்சான்னு நினைச்சிட போறாரு.. அப்புறம் அவர் மேல உனக்கு இருக்கிறது வெறும் கிரஷ் தான். ஓவரா எக்சைட் ஆகாதே’ என்று அவளின் மனசாட்சியோ அவளை அடக்க முடியாமல் போராடிக் கொண்டிருந்தது.
என்ன தான் அவளின் மூளை அவளை அடக்க முற்பட்டாலும், அவளின் மனமோ மற்றது அனைத்தையும் மறந்து போய் அவனின் பின்னோடு சென்று விடுகிறது.
ராம்குமார் காரை அமைதியாக ஓட்டிக்கொண்டிருந்தான்.
சீதாவிற்கு இருப்பதை போல் அவனுக்கு எந்த ஒரு எண்ணமும் இல்லை. சொல்லப்போனால் இப்பொழுது தான் முதல் முறை சீதாவையே காண்கிறான்.
ஆனால், சீதாவிற்கு அப்படி இல்லையே.. வேதவள்ளியின் வாயிலாக ராம்குமாரை பற்றி கேட்டு கேட்டு அவளுக்கு அவனின் மேல் ஒரு நல்ல அபிப்பிராயம் தோன்றிவிட்டது.
அவனை காண வேண்டும் என்று நினைத்தும் இருக்கிறாள். இன்று அவனை நேரில் சந்தித்ததில் அவளுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி. அதிலும், தன்னை அறியாமலேயே அவன் மேல் அவளுக்கு ஈர்ப்பு ஏற்பட்டுவிட, இப்பொழுது தன்னை அடக்குவதே அவளுக்கு பெரும் பாடாக இருந்தது.
அவனும் நேற்று முதல் அரங்கேறிய நிகழ்வுகளை எல்லாம் அசை போட்டு கொண்டே வந்தான்.
வேதவள்ளியின் மேல் காதலுக்கும் கீழ் நட்புக்கும் மேல் ஒரு உறவு மெலிதாக துளிர்விட்டுக் கொண்டு இருந்தது.
ஆனால், நேற்று முதல் அடித்த புயலில் அது முற்றிலுமாக இருந்த இடம் தெரியாமல் தன் உயிர்ப்பை தொலைத்து விட்டது என்று தான் கூற வேண்டும்.
வேதவள்ளியை காதலிக்கிறேன் என்று வெளிப்படையாக கூறும் அளவிற்கு அவளின் மேல் காதல் எல்லாம் இல்லை. ஆனால் நட்பிற்கு மேல் ஏதோ ஒரு அதீத அன்பு அவள் மேல் தோன்றியது.
அவளுமே இவனை சற்று ஈர்த்து விட்டாள் என்று தான் கூற வேண்டும்.
ஏனோ, அவளுக்கு சூர்யாவுடன் திருமணம் முடிந்தது இவனுக்கு சற்று மன வருத்தமாக தான் இருந்தது.
ஆனால், அப்பொழுது இருந்த சூழ்நிலைக்கு சூர்யா மீதும் தவறு சொல்ல முடியாத நிலை. ஆனாலுமே, ஏதோ ஒரு வருத்தம்..
தனக்கு என்ன தேவை என்பது ராம்குமாருக்கே தெளிவாக புரியாத நிலையில் தான் அல்லாடி கொண்டிருக்கிறான்.
கொஞ்சம் கொஞ்சமாக தன் மனதை அதிலிருந்து மாற்றவும் முயற்சித்துக் கொண்டிருக்கிறான்.
‘நீ ஒன்னும் அந்த பொண்ண லவ் பண்ணல. ஜஸ்ட் அந்த பொண்ணு மேல உனக்கு ஒரு அட்ராக்சன் ஏற்பட்டிருக்கு. அதுக்காக இவ்வளவு பீல் பண்ணனும்னு அவசியம் இல்ல. சூர்யா உன்னுடைய ஃப்ரெண்ட்.. அன்னைக்கு நைட்டு அவனையும் மீறி இப்படி எல்லாம் நடந்துடுச்சு. இப்போ மியூச்சுவலா ரெண்டு பேரும் வாழனும்னு முடிவு பண்ணி இருக்கிறது தான் அவங்க ரெண்டு பேரோட வாழ்க்கைக்குமே சரியா இருக்கும். வேதவள்ளிக்கும் இது தான் கரெக்டா இருக்கும். ஆல்ரெடி, அவளுக்கு வெளியிலயும் பிராப்ளம்ஸ் போயிட்டு இருக்கு. சூர்யாவால தான் அவளை இதிலிருந்து எல்லாம் காப்பாத்த முடியும். இந்த மாதிரி சிச்சுவேஷன்ல அவளுக்கு கல்யாணம் நடந்திருக்கிறது ஏதோ ஒரு விதத்துல நல்லதா தான் இருக்கும்” என்று தனக்குத்தானே ஏதேதோ பேசி சிந்தித்து தன் மனதை சமாதானப்படுத்திக் கொண்டான்.
அவள் மேல் துளிர்விட்ட அந்த சொல்லல்லா உணர்வுக்கு பெயர் வைக்கவெல்லாம் அவன் எண்ணவில்லை. துளிர் விடும்போதே கருகியதைப் பற்றி சிந்தித்து என்ன பயன் என்று நினைத்து விட்டான் போலும்..
மேலும், தற்போது அவள் தன் நண்பனின் மனைவி, இனி அவளை பற்றி சிந்திப்பதை கூட தவிர்க்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டான்.
தன் சிந்தனையிலேயே காரை ஓட்டிக்கொண்டு வந்தவனையே பார்த்துக் கொண்டிருந்த சீதாவிற்கு அவனிடம் ஏதாவது பேச்சு கொடுக்க வேண்டும் என்று தோன்றியது.
ஆனால், என்ன பேசுவது என்று தெரியவில்லை. அவனே பேசுவான் என்று பார்த்தால் அவனும் எதையோ தீவிரமாக சிந்தித்துக் கொண்டு அல்லவா வருகிறான்.
சற்று நேரம் பொறுத்து பார்த்தவள் தன் பொறுமையை இழந்து, “ஹாய் உங்க நேம்?” என்று இவளே பேச்சை துவங்கினாள்.
“ராம்.. ராம்குமார்”.
“நான் சீதா” என்று கூறியவளை பார்த்து மெலிதாக தலையசைத்தவன் மீண்டும் காரை ஓட்டுவதில் தன் கவனத்தை செலுத்தினான்.
‘பேர்ல கூட எங்களுக்கு எப்படி ஒரு பொருத்தம் பாத்தியா.. அவர் ராம்.. நான் அவரோட சீதா’ என்று தனக்குத்தானே எண்ணி மகிழ்ந்து போனாள்.
“வேதவள்ளி உங்கள பத்தி நிறைய சொல்லி இருக்கா.. அவளுக்கு பணம் கொடுத்து ஹெல்ப் பண்ண கூட நீங்க தான் உதவி பண்ணிங்கன்னு சொன்னா”.
“ஓ!” என்றவனோ அதற்கு மேல் ஒன்றும் பேசவில்லை.
‘என்ன இவர்கிட்ட இருந்து ஒரு வார்த்தை வாங்குறதுக்கு நாம ஒரு முழத்துக்கு பேசணும் போலருக்கே’ என்று ஆயாசமாக உணர்ந்தவளோ தன் முயற்சியை கைவிடாமல் அவனிடம் எது எதுவோ பேசி அவனை மெலிதாக சிரிக்கவும் வைத்துவிட்டாள்.
“நீங்க ரொம்ப கஞ்சமோ?” என்றவளை புரியாமல் பார்த்தவனிடம், “இல்ல, சிரிக்கவே இவ்வளவு யோசிக்கிறீங்களே.. காசா பணமா சிரிப்பு தானே அதை தாராளமாவே சிரிக்கலாமே.. வாழ போறது ஒரு வாழ்க்கை அதை சந்தோஷமா சிரிச்சுக்கிட்டே வாழலாம் தப்பு இல்ல” என்றவளின் வார்த்தையில் மீண்டும் அவனின் இதழில் மெல்லிய புன்னகை பூக்க.
“நெஜமாவே நீங்க வேதவள்ளியோட பிரண்டு தானா?” என்றான் அவளை ஒரு மார்க்கமாக பார்த்து.
“ஏன் இப்படி கேக்குறீங்க?”.
“அவங்க கொஞ்சம் சைலன்ட்டா இருப்பாங்க நீங்க இப்படி தொண தொணன்னு பேசிட்டே இருக்கிங்களே”.
“ரெண்டு பேருமே வாய மூடிட்டு வந்தா அப்புறம் யார் தான் பேசுறது? அவ எப்பயுமே சைலண்டா தான் இருப்பா.. அவளுக்கும் சேர்த்து நானே பேசிடுவேன். அப்புறம் இந்த நீங்க வாங்க போங்க எல்லாம் வேண்டாம். ஒருமையிலேயே அழைக்கலாம் நான் ஒன்னும் தப்பா நினைச்சுக்க மாட்டேன். வேத வள்ளிக்கு நீங்க எவ்வளவோ ஹெல்ப் பண்ணி இருக்கீங்க அவளுக்கு பிரண்டுனா எனக்கும் நீங்க பிரண்டு தானே” என்றுவிட்டு கடைக்கண்ணால் அவனின் முகத்தை குறுகுறுவென பார்த்தாள்.
“ஓகே” என்றவனோ அவளின் அலுவலகத்தை அடைந்துவிட.
“ச்ச.. என்ன இது அதுக்குள்ள ஆஃபிஸ் வந்திடுச்சா.. இப்ப தான் கார்ல ஏறுன மாதிரி இருக்கு” என்று சோகமாக தன் முகத்தை வைத்துக்கொண்டு கீழே இறங்கியவளிடம், “என்ன ஏதோ ஃபர்ஸ்ட் டே ஸ்கூலுக்கு பசங்க சோகமா போற மாதிரியே போறியே.. இவ்வளவு நேரம் நல்லா தானே பேசிகிட்டு இருந்த அதுக்குள்ள என்ன ஆச்சு?”.
“இன்னும் கொஞ்ச நேரம் உங்களோட இப்படியே ஜாலியா பேசிட்டு போகலாம்னு நினைச்சேன். என்ன பண்றது அதுக்குள்ள ஆபீஸ் வந்துடுச்சு” என்று தன் மனதில் நினைத்ததை சற்றும் எந்த ஒரு ஒளிவு மறைவும் இன்றி அவனிடம் கூறிவிட்டாள்.
அவளின் வார்த்தையில் அவனுக்கு தான் இப்பொழுது என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் விழிக்கும் நிலை.
கார் கதவில் சாய்ந்து நின்றவள், “எனக்கு சுத்தி வளைச்சு பேச எல்லாம் தெரியாது. வேதவள்ளி உங்கள பத்தி என்கிட்ட நிறைய சொல்லி இருக்கா.. அப்போலருந்தே எனக்கு உங்களை ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சிடுச்சு. நீங்க சம்மதம் சொன்னா லைப் லாங் இந்த ராமோட சீதாவா இருக்க நான் ஆசைப்படுறேன்”.
அவளின் கண்களிலோ அத்தனை காதல்…
இப்படி எந்த ஒரு பெண்ணும் தன்னிடம் கூறி கேட்டிடாத ராமிற்கு இப்பொழுது எப்படி செயலாற்றுவது என்பதை கூட சிந்திக்க அவனின் மூளை மறந்து விட்டது.
அவள் கூறியதை கேட்டு அவளையே பார்த்தவாறு அப்படியே அமர்ந்திருந்தான்.
சீதாவுமே தன் மனதில் இருப்பதை இப்படி அவனிடம் பட்டென்று போட்டு உடைப்போம் என்று சற்றும் நினைக்கவில்லை.
ஏதோ ஒரு ஊந்துதல்.. பேச்சுவாக்கில் அப்படியே தன் மனதில் இருப்பதையும் அவனிடம் கூறிவிட்டாள்.
எப்படி இருந்தாலும் என்றேனும் ஒருநாள் இதை அவனிடம் கூறி தானே ஆக வேண்டும். அவன் தான் தன் மனதிற்குள் புகுந்து பல நாட்கள் ஆகிவிட்டதே.. எதற்காக இன்னும் தாமதிக்க வேண்டும் என்ற எண்ணத்தினாலேயே தன்னையும் மீறி அவன் அருகில் தன் மனதில் இருப்பதை வெளிப்படுத்தி விட்டாள்.
தனக்கு பதிலளிக்காமல் அதிர்ந்த பார்வையோடு அமர்ந்திருப்பவனை பார்க்கும் பொழுது இவளின் இதழுக்குள் மெல்லிய புன்னகை பூக்க.
“நல்லா யோசிச்சு உங்க முடிவை சொல்லுங்க.. உங்களோட காட்டுக்கு வனவாசம் போகணும்னாலும் நான் ரெடி தான்” என்று தன் ஒற்றை கண்ணை சிமிட்டி கூறிவிட்டு விறுவிறுவென அலுவலகத்தினுள் நுழைந்துவிட்டாள்.
அவளுக்குள்ளும் அப்படி ஒரு படபடப்பு..
எப்படி சட்டென்று அவனிடம் தன் மனதில் இருப்பதை உரைத்தாள் என்பது அவளுக்குமே விளங்கவில்லை. ஆனால், சொல்லிவிட்டவரை திருப்தி தான்.
ஆனாலும், ஒருவித பூரிப்பு, குதூகலம் என அவளின் உணர்வுகள் அவளின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இல்லை.
இவளின் காதலுக்கு ராம் பச்சைக்கொடி காட்டுவானா என்பதை காத்திருந்து பார்ப்போம்.