எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே – 24

4.6
(12)

புயல் – 24

தாத்தா பத்திரிக்கையை வைக்க செல்லும் பொழுது காளிதாசன் வீட்டில் நடந்த நிகழ்வை சூர்யாவிடம் விளக்கி கூற துவங்கினார்.

தன் வீட்டில் ரங்கராஜனை சற்றும் எதிர்பாராத காளிதாஸ் இன்பமாக அதிர்ந்தவர், “வாடா உள்ள வா.. ஏன் அங்கேயே நின்னுட்ட” என்றவாறு வாசல் வரை சென்று அவரின் கையை பற்றி அழைத்துக் கொண்டு உள்ளே வந்தார்.

இனி இப்படிப்பட்ட நிகழ்வுகள் எல்லாம் நடக்குமா என்று அவர் பல நாள் வருந்தி இருக்கிறார்.

ரங்கராஜனும், காளிதாசும் சிறு வயது முதலே தோழர்கள்.

இருவருமே வளர்ந்து திருமணம் ஆகி இருவருக்கும் ஒவ்வொரு பெண் பிள்ளைகள் பிறந்தனர்.

ரங்கராஜன் தன் மகளுக்கு ‘கமலா’ என்று பெயரிட.

காளிதாசோ ‘காஞ்சனா’ என்று பெயர் சூட்டினார்.

கமலா மிகவும் மென்மையானவர், அன்பாகவும் அரவணைப்பாகவும் அனைவரிடமும் நடந்து கொள்வார்.

காளிதாசன் குடும்பத்தை விட ரங்கராஜன் குடும்பம் சற்று பணபலம் படைத்தவர்கள் தான். ஆனால், அந்த பகட்டுத்தன்மை பந்தா எதுவுமே கமலாவிடம் காண முடியாது.

ஆனால் காஞ்சனா அப்படி கிடையாது. நடுத்தர வர்க்கம் என்று கூறி விட முடியாவிட்டாலும் அவர்களும் சற்று வசதி படைத்தவர்கள் தான். பணக்காரர்களுக்கும் நடுத்தர வர்க்கத்திற்கும் இடையேயான குடும்பம்.

ஆனால் பார்த்தால் அப்படி தெரியாது. கமலாவை விட அதிக பந்தாவும், பகட்டுத் தன்மையும் தென்படும்.

இருவருமே ஒன்றாக ஒரே பள்ளியில் தான் படித்தார்கள்..

ஒரே கல்லூரியில் தான் படித்தார்கள்..

கமலாவிற்கு நிறைய நண்பர்கள் பட்டாளம் உண்டு. அவளை சுற்றி எப்பொழுதுமே நண்பர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள்.

ஆனால், காஞ்சனாவிற்கு அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. என்ன தான் சிறு வயது முதலே கமலாவுடன் ஒன்றாக படித்தாலும் கூட அவளை தன்னுடன் வைத்துக் கொள்ள விரும்ப மாட்டார்.

அதற்கு முக்கிய காரணம் அவரின் மேல் இவருக்கு இருக்கும் பொறாமையும், தாழ்வு மனப்பான்மையும் தான்.

அவளை விட நாம் வசதியில் சற்று குறைவாக இருக்கிறோம்..

அழகில் குறைவாக இருக்கிறோம்..

அந்தஸ்தில் குறைவாக இருக்கிறோம் என்று ஏதேதோ எண்ணங்களை மனதில் வளர்த்துக் கொண்டார்.

அவர்கள் இருவரும் வளர வளர காஞ்சனாவின் மனதில் இருக்கும் எண்ணமும் வளர்ந்து கொண்டே போனது.

சிறு வயதில் ஒற்றுமையாக இருந்தவர்கள் வளர வளர காஞ்சனாவின் இத்தகைய குணத்தினால் இருவருக்கும் இடையே கொஞ்சம் கொஞ்சமாக பிளவு ஏற்பட தொடங்கியது.

அவரின் மனதில் இருக்கும் எண்ணத்தை எல்லாம் அறியாத கமலாவோ எப்பொழுதும் போல் காஞ்சனா உடன் நெருக்கமாக பழக தான் முற்படுவார்.

ஆனால், காஞ்சனா ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி அவரை தவிர்த்துக் கொண்டே இருப்பார். ஆனால் அவருக்கு இப்படி ஒரு புத்தி இருக்கும் என்பதை கமலா அப்பொழுது சற்றும் அறிந்திருக்கவில்லை.

அவர்கள் கல்லூரி படிக்கும் காலகட்டம் அது..

கமலாவிற்கு உடன்படிக்கும் விஷ்ணுவின் மீது பிடித்தம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாகவும் மாறியது.

அதை காணும் பொழுதெல்லாம் காஞ்சனாவிற்கோ அப்படி ஒரு சந்தோஷம்.

ஏனென்றால், விஷ்ணு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர் தான். அந்த அளவிற்கு வசதி வாய்ப்பு எல்லாம் கிடையாது.

இப்படிப்பட்ட ஒருத்தரை கமலா திருமணம் செய்து கொண்டாள். தன்னைவிட தரத்தில் கீழ் இறங்கி விடுவாள் என்று தனக்குத்தானே எண்ணிக்கொண்ட காஞ்சனா அவர்களின் காதலுக்கும் உதவி புரிய தொடங்கினார்.

நாளுக்கு நாள் அவர்களின் காதல் அதிகரிக்க. கல்லூரி படிப்பை முடித்ததும் தன் தந்தையிடமும் இதைப்பற்றி வெளிப்படையாக கூறிவிட்டார் கமலா.

பணத்தை பெரிதாக எண்ணாத ரங்கராஜனும் விஷ்ணுவை பற்றி விசாரிக்க. அவருக்கு விஷ்ணுவின் குணம் மிகவும் பிடித்துப் போனது.

தன் ஒற்றை மகளுக்கு பணம், அந்தஸ்து என்று எதையும் பார்க்காமல் விஷ்ணுவை மணமுடித்து வைத்தார்.

காஞ்சனாவிற்கு சிறு வயது முதலே கமலாவுடன் ஒரு வித பிளவு ஏற்பட்டதற்கு சுற்றி இருப்பவர்கள் அனைவருமே முக்கிய காரணம் வகுத்தனர் என்று தான் கூற வேண்டும்.

அவளின் தந்தை கூட அடிக்கடி, “கமலாவ பாரு, எப்படி இருக்கா நீ ஏன் இவ்வளவு பகட்டு தன்மையா நடந்துக்கிற? அவள பாத்து கத்துக்கோ” என்று எதற்கெடுத்தாலும் கமலா, கமலா என்று அவருடனேயே இவரை ஒப்பிட்டு பேசிக் கொண்டிருந்தார்.

அதன் தாக்கமே அவரை இவருக்கு சுத்தமாக பிடிக்காமல் போய்விட்டது என்று தான் கூற வேண்டும்.

அனைத்துமே ஆரம்பத்தில் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது. விஷ்ணுவும், கமலாவும் மனமொத்த தம்பதிகளாக ஒற்றுமையாக சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு இருந்தனர்.

காஞ்சனாவோ தங்களின் வசதிக்கு ஏற்ப ஒருவரை காளிதாசன் கொண்டு வந்து நிறுத்தவும் அவரையே மணந்து கொண்டார். ஆனால் இவரின் பகட்டுத்தன்மைக்கு தான் அவர் சற்றும் ஈடு கொடுக்கவில்லை.

என்ன தான் திருமணமாகி இருந்தாலும், இருவரும் அவர் அவர் போக்கிற்கு வாழ்ந்தனர். இப்படியே இவர்களின் வாழ்க்கையில் சென்று கொண்டிருந்தது.

விஷ்ணுவிற்கு கொஞ்சம் கொஞ்சமா கிளப்பிங் செல்லும் பழக்கம் ஏற்பட்டது.

அங்கே ஏற்பட்ட நண்பர்கள் மூலம் பணத்தை வீண்விரயம் செய்யும் அனைத்து வேலைகளிலும் ஈடுபட்டார்.

வசதி இல்லாமல் இருக்கும் பொழுதெல்லாம் நன்கு வேலை பார்த்து வசதி வாய்ப்போடு வாழ்க்கையை சந்தோஷமாக வாழ வேண்டும் என்று எண்ணியவர்.

திருமணத்திற்கு பின்பு அத்தனை வசதியும் பணமும் அவரை வந்து சேரவும், அதீத பண புழக்கத்தால் தேவையில்லாத சவகாசத்தை எல்லாம் வைத்துக் கொண்டார்.

கொஞ்ச நாளிலேயே சிகரெட், மதுபானம், மேலும் பெண்கள் சகவாசம் கூட ஏற்பட துவங்கி விட்டது.

இவரை காதலித்து கரம் பிடித்த கமலாவிற்கு இவரின் இத்தகைய நடவடிக்கை சற்றும் பிடிக்கவில்லை. எவ்வளவோ எடுத்துக் கூறி பார்த்து விட்டார் விஷ்ணு கேட்பதாகவே இல்லை.

சண்டையிட்டும், திட்டியும் கூட பார்த்து விட்டார். இவரிடம் சரி, சரி என்று கூறுபவரோ அவர் நண்பர்களை பார்த்தால் முற்றிலும் வேறு ஒருவராக மாறிவிடுவார்.

இவரே சும்மா இருந்தாலும் இவரின் நண்பர்கள் தவறாமல் அவரை வந்து அழைத்து சென்று விடுவார்கள். பிறகு, அவர்களுக்கும் சேர்த்து செலவு செய்வது இவர் தானே..

அதனாலேயே தினமும் அவர்கள் செல்லும் இடத்திற்கெல்லாம் அழைத்துச் சென்று சீரழித்துக் கொண்டு இருந்தனர்.

ஒரு கட்டத்திற்கு மேல் தவறான பழக்க வழக்கங்களுக்கு எல்லாம் அடிமையாகவே ஆகிவிட்டார்.

ஒரு நாளும் மதுபானம் இல்லாமல் அவரால் இருக்க முடியாது. அப்படி ஒரு சூழலுக்கு தள்ளப்பட்டார்.

இதை எல்லாம் பார்க்கும் பொழுது காஞ்சனாவிற்கு தான் பெரும் மகிழ்ச்சியாக இருந்தது.

தன் கணவருடன் மணமொத்து நாம் வாழவில்லையே என்பதெல்லாம் அவருக்கு ஒரு விஷயம் இல்லை.

கமலாவின் வாழ்க்கை சீரழிந்து விட்டது. அதை எண்ணும் பொழுதே அவருக்குள் அப்படி ஒரு பேரானந்தம்.

தன் ஒரே மகளின் வாழ்க்கை இப்படி நிலை குலைந்து போனதை எண்ணி ரங்கராஜன் வருந்தாத நாளில்லை. அவரின் மனைவியும் தங்கள் மகளின் வாழ்க்கை இப்படி ஆனதை எண்ணி கோவில் குளமாக செல்ல துவங்கி விட்டார்.

எவ்வளவோ கட்டுப்படுத்தியும் இனி அவரை திருத்த முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்ட கமலா, முடிந்த அளவு அவரின் பழக்கத்தை குறைக்கவாவது முற்படலாம் என்று அதில் இறங்கி விட்டார்.

சிறு வயது சூரிய பிரசாத்திற்கு அப்பொழுது இருந்தே தன் தந்தையின் இத்தகைய நடவடிக்கைகள் சுத்தமாக பிடிக்காது.

அவன் கல்லூரி பயின்று கொண்டிருந்த சமயம் அது.. ஒரு நாள் அவனின் தாயும், தந்தையும் விபத்தில் இறந்து விட்டதாக செய்தி வந்தது.

அன்று உறவினர் ஒருவரின் வீட்டு விசேஷத்திற்காக அவனின் தாயும், தந்தையும் கிளம்பி சென்று இருந்தனர்.

நன்றாக தான் சென்று இருந்தனர். திரும்பி வருகையில் விஷ்ணு மதுவை அருந்திவிட்டு வண்டியை ஓட்டிக் கொண்டிருந்திருக்கிறார்.

கமலா எவ்வளவோ தடுத்தும் நான் தான் ஓட்டுவேன் என்று சண்டையிட்டு வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தவர் எதிரே வந்த வண்டியின் மீது மோதினார். அதீத வேகத்தால் விபத்து ஏற்பட்டுவிட்டது.

எதிரே வந்தவர்கள் உட்பட யாருமே சம்பவத்தில் உயிர் பிழைக்கவில்லை. ஒருவரின் செயல் பல அப்பாவி உயிர்களை சேர்த்து எடுத்து விட்டது.

அத்தோடு சூர்யா வாழ்க்கையையே வெறுத்து விட்டான். ஒரே சமயத்தில் தாயையும், தந்தையும் இழந்தவன் சிறிது காலத்திலேயே தன் பாட்டியையும் இழந்துவிட்டான்.

அப்பொழுது முதல் அவனுக்கு உறவு என்று இருப்பது அவனின் தாத்தா ஒருவர் மட்டும் தான்.

ஏனோ, சூர்யாவிற்கு மது என்றாலே சற்றும் அவனின் உடலுக்கு ஏற்றுக் கொள்ளாது. கொஞ்சம் குடித்தாலும் முற்றிலுமாக தன் நிதானத்தை இழந்து விடுவான்.

என்ன செய்கிறோம் என்பதே தெரியாது. போதை தெளிந்த பின்னரும் போதையில் என்னவெல்லாம் செய்தோம் என்பதும் நினைவுக்கு வராது.

அதனாலேயே மதுப்பழக்கம் வைத்துக் கொள்ள மாட்டான். சூர்யா அவன் முதல் முறை குடிக்க துவங்கியதே அவனின் முதல் மனைவி அக்ஷ்ரா அவனை விட்டு பிரிந்து சென்ற பிறகு தான்.

ஆம், அக்ஷ்ரா வேறு யாரும் அல்ல, காஞ்சனாவின் ஒரே மகள்..

கமலாவிற்கு சூர்யாவும், காஞ்சனாவிற்கு அக்ஷ்ராகும் பிறந்த பிறகு காஞ்சனா அக்ஷ்ராவை சூர்யாவுடன் விளையாட கூட அனுமதிக்க மாட்டார்.

எப்பொழுதுமே அவளை சூர்யாவுடன் நெருங்க விடாமல் பிரித்து வைத்துக் கொண்டே இருப்பார். ஆனால் அவளுக்கோ தன் பருவ வயதில் சூர்யாவின் மேல் காதல் மலர்ந்தது.

அக்ஷ்ராவுமே தன் தாயை ஒத்த குணம் உடையவள் தான். அவளுக்கு சூர்யாவின் மீது காதல் துளிர் விட முக்கிய காரணமே அவன் பணம் படைத்தவன் என்பதினால் தான்.

சூர்யாவிற்கு அக்ஷ்ராவின் மீது சிறு வயது முதலே பெரிதாக நாட்டம் இருந்தது கிடையாது. அவனின் கல்லூரி காலகட்டத்தில் தான் அக்ஷ்ரா அவனையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தாள்.

ஆரம்பத்தில் முடியாது என்று மறுத்தவன் தன் தாய் தந்தையின் இறப்புக்கு பிறகு தனக்குள்ளேயே மிகவும் உடைந்து போய்விட்டான். அந்த சமயம் அவனுக்கு அன்பாகவும், ஆதரவாகவும் இருப்பது போல் அக்ஷ்ரா பேசி அவனை தன் காதல் வலைக்குள் விழ வைத்தாள்.

அவளுக்கு தேவை நன்கு வசதியான பகட்டான வாழ்க்கை.. என்ன தான் தங்களின் வசதிக்கு ஏற்ப ஒரு மாப்பிள்ளையை திருமணம் செய்தாலும், சூர்யாவை திருமணம் செய்து அந்த பகட்டான வாழ்க்கையை அனுபவிப்பது போல் இருக்குமா.. நிச்சயமாக இருக்காது.

அதனாலேயே அவள் சூர்யாவை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முன்னதாகவே முடிவு செய்துவிட்டாள்.

அதன்படி தன் ஆசையை நிறைவேற்றியும் விட்டாள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!