அவளோ சற்றும் குற்ற உணர்வு இல்லாமல் திடமாக நின்று கொண்டே, “ஹி இஸ் மை பாய் பிரண்ட்” என்று அவனின் தலையில் இடியை இறக்கினாள்.
“வாட்! இப்படி சொல்ல உனக்கு கொஞ்சம் கூட வெக்கமா இல்ல? நான் உன்னுடைய ஹஸ்பண்ட்.. என்கிட்டயே வந்துட்டு உனக்கு பாய் பிரண்டு இருக்கான்னு சொல்ற ஹவ் டேர் யூ”.
“சோ வாட் சூர்யா! என்ன பேசுறீங்க நீங்க.. எனக்கு பிரேமை பிடிச்சிருக்கு. அவனுடன் நான் சேர்ந்து பழகுறேன் இப்போ என்ன அதுக்கு?” என்று திமிராக பேசவும் அவனுக்குள் கோபம் கொந்தளித்து கிளம்பியது.
“என்ன அதுக்கா.. அப்புறம் எதுக்குடி என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட? அவனையே கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே”.
“என்ன பண்றது என்னுடைய பேட் லக்.. உங்கள கல்யாணம் பண்ண பிறகு தான் எனக்கு அவர பத்தி தெரிஞ்சுது, முன்னாடியே அவர பத்தி தெரிஞ்சு இருந்தா நான் ஏன் பணத்துக்காக உங்களை கல்யாணம் பண்ணிக்க போறேன்” என்று கோபத்தில் வார்த்தையை விட்டாள்.
அவளின் வார்த்தையை கேட்டவன் முற்றிலுமாக நொறுங்கிப் போய் விட்டான், “என்ன பேசுற நீ?”.
இனி மறைத்து பயனில்லை என்பதை உணர்ந்த அக்ஷ்ராவோ தன் உண்மை முகத்தை காட்டத் துவங்கினாள்.
“ஆமா, பணத்துக்காக தான் உங்களை லவ் பண்ணேன்.. உங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. எனக்கு இந்த வசதியான வாழ்க்கை வேணும். ஃப்ரீயா ஜாலியா ஊர் சுத்தணும். யாருக்கும் கணக்கு கொடுக்கணும்ன்ற அவசியம் இருக்க கூடாது. அதுக்காக தான் நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். நான் ஆசைப்பட்ட மாதிரி சந்தோஷமா தான் இத்தனை நாளும் வாழ்ந்துகிட்டு இருந்தேன். உங்களை மாதிரி ஒரு டிபிகல் லைப் ஸ்டைல என்னால வாழ முடியாது.
நீங்க எவ்வளவு தான் பணம் இருந்தாலும் குடும்பம், ஃபேமிலி, வைஃப், குழந்தைன்னு செட்டில் ஆகணும்னு பாக்குறீங்க. பட், என்னுடைய ஆசையே வேற சூர்யா.. ஜாலியா சுத்திக்கிட்டு என் லைஃபை ஃபுல்லா நான் என்ஜாய் பண்ணனும்னு ஆசைப்படுறேன். எப்போ எனக்கு குழந்தை பெத்துக்கணும்னு தோணுதோ அப்ப குழந்தை பெத்துக்கணும்னு ஆசைப்படுறேன். பட், எனக்கும் உங்களுக்கும் கொஞ்சம் கூட செட்டாகாது. இருந்தாலும், நான் ஏன் உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு தெரியுமா.. இந்த லைப் ஸ்டைல்காக மட்டும் தான்!” என்று அழுத்தமாக கூறினாள்.
அவனின் கண்களோ சிவப்பேர.. நொடியில் கலங்கிவிட்டது.
“அதுக்காக தான் உங்களுக்கு தெரியாம பர்த் கண்ட்ரோல் பில்ஸ் சாப்பிட்டேன். நான் நினைச்ச போல நீங்களும் என்னை ரொம்ப கண்ட்ரோல் பண்ணல. சோ, என் லைஃபை நான் ஆசைப்பட்ட மாதிரி வாழ்ந்தேன். இப்போ எனக்கு தகுந்த மாதிரி எனக்கு பிரேம் கிடைச்சிருக்காரு.. உங்கள விட எனக்கு இப்ப அவர் தான் பெட்டர் ஆப்ஷனா தெரிகிறார். உங்களுக்கு என்கிட்ட இருந்து டிவோர்ஸ் வேணும்னாலும் அதை நீங்க தாராளமா என்கிட்ட இருந்து வாங்கிக்கலாம். பட், ஒன் கண்டிஷன்.. நான் கேட்கிற அலுமினியை நீங்க கொடுக்கணும்” என்றவள் பெரிய தொகையாக ஒன்றை கூறினாள்.
அவளின் வார்த்தையில் கொஞ்சம் கொஞ்சமாக நொறுங்கிக் கொண்டு இருந்தான் சூர்யா.
அவள் கேட்கும் பணத்தை கொடுப்பதெல்லாம் இவனுக்கு பெரிய விஷயம் அல்ல.. ஆனால், அவளின் மனதிற்குள் இத்தனை நாட்களும் இத்தகைய எண்ணத்துடனா தன்னுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருந்தாள் என்று எண்ணும் பொழுதே அவனுக்கு அசிங்கமாகவும், அருவருப்பாகவும் இருந்தது.
அதிலும், இன்னொருவனை பிடித்திருக்கிறது என்று அவனுடனும் உடலுறவு வைத்து இருக்கிறாள் என்பதையும் தெரிந்த பிறகு, இவளுடன் வாழ்ந்ததை எண்ணும் பொழுதே அவனுக்கு அவ்வளவு வேதனையாக இருந்தது.
“என்ன சூர்யா அப்படியே நிக்கிறீங்க.. நல்லா யோசிச்சு உங்க முடிவை சொல்லுங்க. பிரேம் எனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காரு நான் கிளம்புறேன்” என்று விட்டு அவள் கிளம்ப முற்படவும்.
தன் கையை உயர்த்தி அவளை தடுத்தவன், “இப்படி எல்லாம் என்கிட்ட பேச உனக்கு கொஞ்சம் கூட கில்டா இல்லையா.. நானா டி உன்னை காதலிச்சேன்.. நீ தானே என் பின்னாடியே சுத்தி சுத்தி வந்து என்னை லவ் பண்ண வச்ச.. கடைசியில நீ பண்ணது எல்லாமே பணத்துக்காக தான்னு சொல்ற.. இதுக்கு பேரு என்னன்னு தெரியுமா?” என்றான் ஆத்திரத்தில் முகம் சிவக்க.
அவளின் முகத்திலோ அப்படி ஒரு அப்பட்டமான அலட்சியம், “வாட் எவர்! ஐ டோன்ட் மைண்ட்.. ஐ நீட் மணி.. இதுக்கு என்ன பெயர் வைக்கணும்னு நீங்க ஆசைப்படுறீங்களோ வச்சுக்கோங்க. அது உங்க விருப்பம்” என்று விட்டு அவனின் கையை தட்டி விட்டு முன்னேறி சென்று விட்டாள்.
‘என்ன பெண் இவள்’ என்று சூர்யாவினால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
‘எப்படி எல்லாம் பேசி விட்டு போகிறாள்.. அவளுக்கு எத்தகைய அவப்பெயரை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாமாமே.. இப்படியும் ஒரு வாழ்க்கை இவளுக்கு தேவை தானா’ என்று அவனால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
அதன் பிறகு தான் சூர்யா அக்ஷ்ராவின் விவாகரத்து நடந்தேறியது.
பிரேம் அக்ஷ்ராவின் திருமணமும் நடந்தேறியது.
சூர்யா பேசிய வார்த்தைகளினால் அக்ஷ்ராவுக்கும் சூர்யாவின் மேல் கோபம் இருக்கிறது. ஆனாலும், அவன் தன்னை உண்மையாக காதலித்ததால் வேறு யாரையும் காதலிக்க மாட்டான், திருமணம் செய்து கொள்ள மாட்டான், வாழ்க்கையையே வெறுத்து போயிருப்பான். தன்னை நினைத்தே அவனின் வாழ்க்கை முழுவதையும் கழிப்பான் என்று எண்ணி கர்வமாக சுற்றி கொண்டிருந்தாள்.
இப்படி என்னவெல்லாமோ பகல் கனவில் மிதந்து கொண்டு இருந்தவளுக்கு அதிர்ச்சியாக வந்து சேர்ந்தது தான் சூர்யா மற்றும் வேதவள்ளியின் திருமணம்.
அக்ஷ்ராவின் தாய் எதற்குமே அக்ஷ்ராவிற்கு புத்திமதியும் கூறவில்லை, அவள் செய்வது தப்பு என்று சுட்டிக் காட்டவும் இல்லை.
உன் வாழ்க்கை உன் விருப்பம் என்று விட்டுவிட்டார். அவரும் அப்படிப்பட்டவர் தானே..
தாத்தா தான் மனதளவில் சூர்யாவின் வாழ்க்கையில் நடந்த விஷயங்களால் உருகுலைந்து போய்விட்டார். அதுவும் தன் உயிர் நண்பனின் பேத்தியே இப்படி எல்லாம் நடந்து கொள்வாள் என்று அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
காளிதாசுக்கும் தன் பேத்தியின் நடவடிக்கையில் பெரும் மன வருத்தம் தான்.
குடும்பத்திற்குள் இத்தனை சம்பவங்கள் நடந்தேறி இருந்தாலும், அவர்கள் இருவரின் நட்பு மட்டும் இன்னமுமே அழியாமல் இருக்கிறது.
மேலும், சூர்யாவின் வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்று இப்பொழுது காளிதாசும் ரங்கராஜுடன் சேர்ந்து கோவில் கோவிலாக சுற்றிக் கொண்டிருக்கிறார்.
சூர்யாவை பற்றி கேட்கவும் வேண்டுமா.. அக்ஷ்ரா விட்டு சென்ற பின்னர் அவன் அக்ஷ்ராவை நினைத்து ஒருநாளும் கவலை கொள்ளவில்லை.
தன்னை ஏமாற்றிவிட்டு சென்று விட்டாளே என்று அவள் மீது ஆத்திரம் இருந்தது என்னவோ உண்மை தான்.
ஆனால், அவளை இழந்துவிட்டோமே என்று அவன் ஒருநாளும் எண்ணி வருந்தியது கிடையாது. அவனின் வருத்தமெல்லாம் தன் மேல் தான்.
தன் மேலேயே கோபம், ஆத்திரம், வருத்தம் என அனைத்து உணர்வுகளையும் காட்டிக் கொண்டிருந்தான்.
அவளின் பொய்யான வார்த்தைகளையும், அன்பையும் அப்படியே உண்மை என்று நம்பி அவளை தன் மனைவியாக்கிக் கொண்ட தன் முட்டாள் தனத்தை எண்ணி எண்ணி தினம் தினம் நொந்து போய் இருந்தான்.
அக்ஷ்ரா நினைப்பது போல் அவன் இனி தன் வாழ்க்கையில் இன்னொரு திருமணம் இல்லை என்று முடிவு செய்து இருந்தான் தான். ஆனால், அதற்கு காரணம் அக்ஷ்ராவின் மேல் அவன் கொண்டிருக்கும் காதல் எல்லாம் ஒன்றும் கிடையாது.
திருமண வாழ்க்கையையே அவன் வெறுத்து விட்டான் என்று தான் கூற வேண்டும்.
தன் தாய் காதல் திருமணம் செய்து கொண்டார். அவரின் வாழ்க்கையும் நல்ல முறையில் அமையவில்லை.
இவனுமே காதல் திருமணம் தான் செய்து கொண்டான். இவனின் வாழ்க்கையும் நல்ல முறையில் அமையவில்லை.
இனி திருமணம் என்ற சொல்லே தன் வாழ்க்கையில் இருக்கக் கூடாது என்று முடிவெடுத்து விட்டான்.
ஆனால், உன்னை அப்படியே விட்டு விடுவேனா என்பது போல் அவனின் விதி வேத வள்ளியுடன் அவனின் வாழ்க்கையை அழகாக முடிச்சிட்டு விட்டது.
என்ன தான் அக்ஷ்ரா சூர்யாவிடம் இருந்து பிரிந்து சென்று விட்டாலுமே, காஞ்சனாவிற்கு சூர்யாவிற்கு மீண்டும் திருமணம் நடந்ததில் எல்லாம் சற்றும் உடன்பாடில்லை.
அதனாலேயே ரங்கராஜன் ரிசப்ஷன் பத்திரிகையை தூக்கிக்கொண்டு தங்கள் வீட்டிற்கு வருவதை கண்டவர் கண்டும் காணாதது போல் சோபாவில் கால் மேல் கால் இட்டுக்கொண்டு அமர்ந்திருந்தார்.
அவரை ரங்கராஜனுமே சற்றும் பொருட்படுத்தவில்லை.
காளிதாசன் காஞ்சனாவை முறைத்து பார்த்தாரே தவிர எதுவும் பேசவில்லை.
பேசினாலும் அவர் கேட்க மாட்டார் என்பது வேறு விஷயம்…
“ஆமா டா, அந்த பொண்ணு சூர்யா கம்பெனியில் தான் வேலை பாக்குறா.. ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிடிச்சு போலருக்கு. அதான் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க”.
“அது சரிடா, அது ஏன் அந்த பார்ட்டியில் கல்யாணம் பண்ணனும்?”.
“பார்ட்டிக்கு வந்திருந்தவங்க வேதவள்ளியை பத்தி ஏதோ தப்பா பேசி இருக்காங்க போலருக்கு. அதான் சூர்யா கல்யாணம் பண்ற மாதிரி ஆகிப்போச்சு. எல்லாம் நல்லதுக்குனு நினைச்சுக்க வேண்டியது தான்” என்றார் ரங்கராஜ்.
“கண்டிப்பா.. எனக்கு ரொம்ப சந்தோஷம். நீ வேணும்னா பாரு சூர்யாவோட வாழ்க்கை இனி சந்தோஷமா அமையப்போகுது. அவன் இத்தனை நாள் பட்ட கஷ்டத்துக்கும் சேர்த்து அவன் சந்தோஷமா வாழ்வான் டா” என்று மனநிறைவோடு மகிழ்ச்சியாக கூறினார்.
“ம்கூம்..” என்று நொடிந்தவாறு காஞ்சனா அமர்ந்திருக்கவும்.
“தேவையில்லாத ரூமர்ஸ் எல்லாம் அவங்கள பத்தி ஸ்ப்ரெட் பண்றதுக்காகவே தான் இங்க நிறைய பேர் இருக்காங்களே.. அதான் அவங்க வாயை எல்லாம் அடைக்கிறதுக்காக இந்த ரிசப்ஷன் உடனே வைக்கிற மாதிரி ஆகிடுச்சு” என்று காஞ்சனாவை முறைத்து பார்த்துக் கொண்டே கூறினார்.
அவரோ கோபமாக தன் முகத்தை திருப்பிக் கொண்டார்.
அங்கே நடந்த சம்பவத்தை சூர்யாவிடம் அப்படியே தாத்தா கூறி முடிக்கவும்.
“விடுங்க தாத்தா அவங்கள பத்தி எல்லாம் தெரிஞ்ச விஷயம் தானே.. அவங்க கிட்ட பேசுறது நமக்கு தான் அசிங்கம். இனி அவங்களை பத்தி எதுவும் பேச வேண்டாம்”.