தாத்தா தயக்கத்தோடு, “சூர்யா வேத வள்ளிக்கு உன்னுடைய பாஸ்ட் பத்தி எல்லாம் தெரியுமா?”.
அவருக்கு ‘இல்லை’ என்னும் விதமாக சூர்யா தலையசைக்கவும்.
“ஏன் பா இன்னும் சொல்லாம இருக்க.. எதிர்பாராமல் உங்க கல்யாணம் நடந்திருந்தாலும், அவ தான் இனி உன் பொண்டாட்டின்னு ஆகிப்போச்சு. அவகிட்ட எதையும் மறைக்காம எல்லா உண்மையையும் சொல்றது தானே நல்லது”.
“சொல்லனும் தாத்தா” என்றவன் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவாறு எழுந்து நின்றான்.
“நேரம் வரும்போது நானே சொல்றேன். இதை நெனச்சு நீங்க ஏதும் உங்க மனச போட்டு குழப்பிக்காதீங்க”.
அதன் பிறகு இருவரும் படுக்க சென்று விட்டனர்.
அறைக்குள் வந்து பார்த்தவனிற்கு வேதவள்ளி தூங்கிக் கொண்டிருக்கும் காட்சி தான் தெரிந்தது. தன் உடலை குறுக்கிக்கொண்டு கட்டிலின் ஓரமாக அதன் விளிம்பில் விட்டால் விழுந்து விடும் நிலையில் தான் தூங்கிக் கொண்டிருந்தாள்.
அவளை சற்று தள்ளி தாராளமாக படுக்க வைத்தவன் மறுபுறம் வந்து படுத்துக்கொண்டான்.
அவனின் மனதிற்குள் பெரும் குழப்பம் தான். ‘ஏன் இன்று வேதவள்ளியிடம் தான் அப்படி நடந்து கொண்டேன்’ என்று தனக்குத்தானே ஏதோ பேசி சமாதானம் கூறிக்கொண்டாலும் அவனின் மனதிற்குள் என்ன ஓடுகிறது என்பது அவனுக்கே புரியவில்லை.
தன் சிந்தனையிலேயே உழன்று கொண்டிருந்தவன் தனக்கு பக்கவாட்டாக திரும்பிப் பார்க்கவும். நிர்மலமான முகத்தோடு தூங்கிக் கொண்டிருக்கும் வேதவள்ளியின் முகம் தான் இவனுக்கு காட்சியளித்தது.
அதை பார்த்துக்கொண்டே படுத்திருந்தவன் எப்பொழுது கண்ணயர்ந்தான் என்பது அவனுக்கே விளங்கவில்லை.
மறுநாள் தாத்தாவோ அத்தனை மகிழ்ச்சியோடு கிளம்பி ஆயத்தமாகி வெளியே வந்தவர் ராம்குமார் உடன் பேசிக்கொண்டு இருந்தார்.
அனைவரும் ரிசப்ஷன் நடக்கவிருக்கும் ஹாலிற்கு வந்து விட்டனர்.
சூர்யா ஒரு அறையிலும், வேதவள்ளி மற்றொரு அறையிலும் கிளம்பி கொண்டிருந்தனர்.
“எல்லாம் சரியா தானே இருக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே” என்ற தாத்தாவை பார்த்து, “எந்த பிரச்சனையும் இல்ல தாத்தா. எல்லாமே பர்ஃபெக்ட்டா நடந்துட்டு இருக்கு” என்று அவன் கூறிக் கொண்டிருக்கும் பொழுதே பளிச்சென்ற புன்னகையோடு, “ஹாய்” என்று இவர்களை நோக்கி கை காண்பித்தவாறு அவ்விடம் வந்து சேர்ந்தாள் சீதா.
அவளை பார்த்த நொடி இவனுக்குள் ஏதோ ஒரு தடுமாற்றம்..
“தாத்தா நான் போய் அங்க அரேஞ்ச்மெண்ட்ஸ் எல்லாம் எப்படி இருக்குன்னு பாத்துட்டு வரேன்” என்றவாறு நைசாக நழுவி ஓடிவிட்டான்.
அவனின் செயல் புரிந்தாலும், அதை கண்டுகொள்ளாத சீதா, “தாத்தா எப்படி இருக்கீங்க வேதவள்ளி எங்க?”.
“நான் நல்லா இருக்கேன் மா. வேதவள்ளி அந்த ரூம்ல தான் ரெடியாகிகிட்டு இருக்கா.. நீ போய் பாருமா” என்று அனுப்பி வைத்தார்.
அவர் கூறியது போலவே அவ்வறைக்குள் நுழைந்த சீதா தன் இமைகளை சிமிட்டவே ஒரு நொடி மறந்து வேதவள்ளியை பார்த்துக்கொண்டு நின்று இருந்தாள்.
“ஹே சீதா.. வா.. வா.. காலையிலேயே வந்து இருக்கலாம் இல்ல” என்றவளை நோக்கி வேகமாக விரைந்தவள், “வாவ்! வேத வள்ளி செமையா இருக்க டி. உனக்கு இந்த டிரஸ், மேக்கப், ஹைர் ட்ரஸ் எல்லாம் சூப்பரா சூட்டாகி இருக்கு”.
“தேங்க்ஸ் டி” என்றாள் முகம் பளிச்சிட.
“ஒரே நாள்ல இப்படி ஆளே மாறி போயிட்டியே.. பார்க்க ஏதோ ஹிந்தி பட ஹீரோயின் ரேஞ்சுக்கு இருக்க” என்று புகழ்ந்து தள்ளவும்.
அவளின் புகழ்ச்சி இவளுக்கு மேலும் வெட்கத்தை கொடுத்தது.
“என்னை சுத்தி என்ன நடக்குதுன்னு எனக்கே ஒன்னும் புரியல. திடீர்னு கல்யாணம்.. அடுத்து பிரஸ்மீட்.. இப்போ ரிசப்ஷன்.. எல்லாம் அடுத்தடுத்து உடனே உடனே நடக்கிற மாதிரி இருக்கு. ஒரு மாதிரி ரெஸ்ட்லசா படபடப்பா ஃபீல் பண்றேன். அதுவும் இன்னைக்கு நிறைய பேர் வருவாங்களாம்.. இந்த ஹாலை பாத்தியா எவ்வளவு பெருசா இருக்குன்னு.. இதெல்லாம் எனக்கு கொஞ்சம் கூட பழக்கமே இல்லை சீதா. பாரு, இந்த டிரஸ் எவ்வளவு வெயிட்டா இருக்குன்னு தெரியுமா.. அதை விடு.. இந்த டிரஸ் எவ்வளவு விலைனு தெரியுமா.. கேட்டா உனக்கு தலையே சுத்திடும். இது எல்லாமே நாம நெனச்சதை விட ரொம்ப அதிகம். இல்லை.. இல்லை.. நாம நெனச்சு கூட பாக்க மாட்டோம். அவ்வளவு அதிகமா இருக்கு டி” என்று தன் பாட்டிற்கு படபடவென பேசிக்கொண்டே போனாள்.
அவளின் தோள் பட்டையை பிடித்த சீதா, “போதும்.. போதும்.. ரிலாக்ஸ். நல்லா மூச்சை இழுத்து விடு. இப்போ வா இங்க” என்று அருகில் இருந்த இருக்கையில் அவளை அமரச் செய்தவள், “இப்ப சொல்லு என்ன நடக்குது இங்க?”.
அவள் கூறியதை போல் தன்னை சற்று ஆசுவாசப்படுத்தி கொண்ட வேதவள்ளி, “இங்க எல்லாமே ரொம்ப ஓவரா இருக்க மாதிரியே பீல் ஆகுது சீதா. ரொம்ப செலவு பண்றாங்க.. இந்த டிரஸ் இரண்டு லட்ச ரூபாய்.. இந்த நகை எல்லாம் எவ்வளவு இருக்கும்னு நினைத்தாலே எனக்கு இதெல்லாம் போட்டுக்கவே பயமா இருக்கு. என் லைஃப்ல நான் இவ்வளவு பணம் செலவு பண்ணி எதுவுமே போட்டு பார்த்தது கிடையாது. பாரேன் இந்த ஹால் எவ்வளவு பெருசா இருக்கு.. எல்லாமே ரொம்ப.. எப்படி சொல்றதுன்னு எனக்கு தெரியல டி” என்று தடுமாறினாள்.
“பணக்கார தன்மையோட இருக்குன்னு சொல்றியா?” என்று சீதா எடுத்துக் கொடுக்கவும்.
வேகமாக அவளுக்கு ஆமோதிப்பாக தலையசைத்தவள், “ஆமா.. நான் இதுவரைக்கும் இப்படி எல்லாம் படத்துல தான் டி பார்த்து இருக்கேன். என் லைஃப்லயே இப்படி நடக்கும் போது எனக்கு ஏதோ கனவு மாதிரி இருக்கு. அதோட ரொம்ப பயமாவும் இருக்கு”.
அந்நேரம் சரியாக இவர்களின் அறை கதவை திறந்து கொண்டு சூர்யா உள்ளே நுழையவும். திடுக்கிட்டு விழித்த வேதவள்ளி சட்டென எழுந்து நின்றாள்.
இந்நேரத்தில் அவனை அவள் இங்கே சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அதிலும், தான் பேசியதை எல்லாம் அவன் கேட்டிருப்பானோ என்ற படபடப்பும் தொற்றிக் கொள்ள.. பயந்து போய் தான் நின்று இருந்தாள்.
சீதாவிற்கும் இவள் சற்று நேரத்திற்கு முன்பு பேசியதையெல்லாம் அவன் கேட்டிருப்பானோ என்ற எண்ணம் ஏழாமல் இல்லை.
ஆனாலும், அதை தன் முகத்தில் காட்டிக் கொள்ளாமல், “வாங்க சார்” என்றவாறு எழுந்து நின்றாள்.
வேதவள்ளியின் அருகில் வந்தவன் அவளை மேலிருந்து கீழ் அழுத்தமாக பார்த்துவிட்டு, “உன்னை ரெடி பண்ணிட்டதா மேக்கப் ஆர்டிஸ்ட் வந்து சொன்னாங்க.. அதான் எல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிட்டு போகலாம்னு வந்தேன். ஓகே, நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க” என்று விட்டு வெளியேறிவிட்டான்.
அவன் சென்றதும் பயத்தில் தன் கையை வேகமாக உதறியவள், “ஐயையோ! எல்லாத்தையும் கேட்டு இருப்பாரோ?”என்று பதட்டமாக வேதவள்ளி கேட்கவும்.
“ரிலாக்ஸ் டி.. அப்படியெல்லாம் அவர் எதுவும் கேட்டிருக்க மாட்டார். சப்போஸ் அவர் கேட்டு இருந்தாலும் நீ ஒன்னும் தப்பா பேசலையே.. உன்னுடைய மனசுல என்ன தோணுதோ அதை தான சொன்ன.. இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு? அவர் பிறந்ததுல இருந்தே பணத்தை அதிகம் பார்த்தவர். அதனால அவருக்கு இது எல்லாம் சாதாரணமான விஷயமா தெரியலாம். ஆனா, நமக்கு அப்படி இல்லை. மிடில் கிளாஸ்.. ஒவ்வொரு ரூபாயும் பார்த்து பார்த்து செலவு பண்றவங்க.. நம்மள கொண்டு வந்து திடீர்னு இப்படி ஒரு இடத்துல விட்டா நம்மளுடைய மனநிலை இப்படித்தானே இருக்கும். அவர் கேட்டு இருந்தாலும் கண்டிப்பா புரிஞ்சுப்பாரு நீ உடனே பயப்படாதே” என்று ஏதேதோ பேசி அவளை சமாதானம் செய்தாள்.
ஆனாலும், அவளின் முகம் தெளிவடையவே இல்லை.
ஆம், வேதவள்ளி பேசிய அனைத்தையுமே சூர்யா கேட்டு விட்டான் தான்.
ஆனால், அவனுக்கு கோபம் எல்லாம் இல்லை. இதழில் முதல் முறை மெல்லிய புன்னகை வேதவள்ளியின் செயலில்..
எப்பொழுதுமே வேதவள்ளியை பார்த்தாலே சிடுசிடுப்பவன், கோபப்படுபவன்.. இன்றோ முதல் முறை புன்னகைத்தான் அவளின் வார்த்தைகளை கேட்டு.
அத்தோடு வெளியேறும் பொழுது அவள் பேசியதையும் கேட்டுவிட்டே வெளியேறினான்.
கொஞ்சம் கொஞ்சமாக வேதவள்ளியின் மனநிலையை அவனும் புரிந்துகொள்ள ஆரம்பித்து விட்டான்.
ஆனால், வேதவள்ளிக்கு என்றுமே அவன் ஒரு புரியாத வினாத்தாள் தான்..
சற்று நேரத்தில் இனிதே ரிசப்ஷனும் ஆரம்பமாகியது. தாத்தாவிற்கு மிகவும் மன நிறைவாக இருந்தது.
வந்தவர்கள் அனைவரையும் புன்னகை முகமாக வரவேற்று கொண்டும், உபசரித்துக் கொண்டும் சுற்றிக்கொண்டு இருந்தார்.
சூர்யா வேதவள்ளியை தன்னோடு அழைத்துக் கொண்டே மேடை ஏறினான். அவளின் கையை அழுத்தமாக பற்றி இருந்தான்.
அதையெல்லாம் கவனிக்கும் நிலையில் தான் வேதவள்ளி இல்லை. அவளுக்கு அனைத்துமே அத்தனை மிரட்சியாக இருந்தது.
ரிசப்ஷன் ஹாலில் அவ்வளவு கூட்டம்..
அனைவரும் வந்து இவர்களை வாழ்த்தி விட்டு சென்றனர்.
நொடியும் சூர்யா வேதவள்ளியின் கையை விடவே இல்லை.
பற்றிக் கொண்டே நின்று இருந்தான்.
அவளின் கை சில்லிட்டு இருப்பதை உணர்ந்தவன் அவ்வபொழுது சற்று அழுத்தத்தையும் கொடுத்தான்.
அவன் அவளை இயல்பாக்குவதற்காக அழுத்தத்தை கொடுக்க.. இவளுக்கு தான் அவன் எதற்காக தன் கையில் அழுத்தத்தை கொடுக்கிறான் என்பது விளங்காமல் போனது.
‘என்ன இவரு எப்ப பாத்தாலும் கையை முறுக்கிக்கிட்டே இருக்காரு.. ஒருவேளை, இன்னும் நல்லா சிரிக்க சொல்றாரோ’ என்று தனக்குள்ளேயே குழம்பி போய் நின்றிருந்தாள்.
அப்பொழுது மேடை ஏறிய பிரேமும் அக்ஷ்ராவும் இவர்களை நோக்கி வர.
அவர்களை தன் பார்வையாலேயே பொசுக்கிய சூர்யா அமைதியாக நின்று இருந்தான்.
மேலும், சூர்யாவின் பிடி வேறு இன்னும் இறுகியது.
அது வேதவள்ளிக்கு வலிக்க செய்ய..
“கை வலிக்குது சா..” என்று ஆரம்பித்தவள் அவனின் பார்வையை உணர்ந்து, “கை வலிக்குது சூர்யா” என்றாள் மெல்லிய குரலில்.
அவள் கூறி முடியவும், அவர்கள் இருவரும் அவ்விடம் வந்து சேரவும் சரியாக இருந்தது.
மீண்டும் சூர்யா தன் பிடியை தளர்த்தினானே தவிர, விடுவதாக இல்லை.
“ஹாப்பி மேரிட் லைப் சூர்யா” என்று நக்கல் இழைந்தோடும் குரலில் கூறிய பிரேம் அவர்களை நோக்கி பரிசு பொருளை நீட்டவும்.