எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 31

4.8
(15)

புயல் – 31

தான் காபி கப்பை உடைத்ததால் தான் அவன் தன் மீது கோபமாக இருக்கிறான் என்று எண்ணிய வேதவள்ளியோ காபி கப்பை உடைத்ததே அவன் தான் என்பதை பற்றி சிந்திக்க சாவகாசமாக மறந்து விட்டாள்.

ஆம், இவள் காபி கப்பை அவன் அருகில் வைத்தது உண்மை தான். ஆனால், இவள் ஒன்றும் உடைக்கவில்லையே..

அருகில் வைத்துவிட்டு அவனிடம் கூறுவதற்குள்ளாக அவனின் கையால் தட்டி விட்டு உடைத்தது அவனின் தவறு.

ஆனால், முழு தவறும் ஏதோ இவள் மேல் மட்டும் தான் இருக்கிறது என்பது போல் அவன் இவளை சாடுகிறான். இவளும் அதை பற்றி எல்லாம் சிந்திக்காமல் அவன் கூறுவதை அப்படியே ஏற்றுக் கொண்டு விட்டாள்.

“நம்ம மேல தான் தப்பு.. சரி, வேற ஏதாவது பேச்சு கொடுத்து இவரை டைவர்ட் பண்ணுவோம்” என்று எண்ணியவள் வசமாக நாம் அவனிடம் சிகப் போகிறோம் என்பதை அப்பொழுது அறிந்திருக்க வாய்ப்பில்லை.

சூர்யாவின் எண்ணமோ வேறாக இருந்தது.

வேதவள்ளி வாழ்க்கையை அதன் போக்கில் வாழலாம் என்று முடிவெடுத்துவிட்டாள்.

ஆனால், சூர்யா அப்படி இல்லை.. எங்கே நாளடைவில் வேதவள்ளியின் மேல் தனக்கு பிடித்தம் ஏற்பட்டு அவளுடன் ஒன்று சேர்ந்து வாழலாம் என்று தனக்குள் எண்ணம் எழுந்து விடுமோ என்று பயந்தான்.

அது மட்டுமல்லாமல், தன் கடந்த காலத்தை பற்றி வேதவள்ளிக்கு எதுவும் தெரியாதே.. அவளுக்கு அதெல்லாம் தெரிந்தால் நிச்சயமாக அவளின் மனமும் இதனால் காயப்படும் அவளுக்காகவும் சேர்த்து தான் அவளை தவிர்க்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறான்.

“உங்க கிட்ட ஒன்னு கேட்கணும்?” என்றாள் தயங்கிக் கொண்டே.

“என்ன?”.

“அது.. நேத்து ஒரு அக்கா பங்ஷனுக்கு வந்து இருந்தாங்களே.. உங்கள பத்தி கூட எல்லாமே தெரியும்னு சொன்னாங்களே.. உங்களை பத்தி ஏதாவது சந்தேகம் இருந்தா கூட அவங்க கிட்ட கேட்க சொன்னாங்க இல்ல.. அந்த அக்கா யாரு உங்க பிரண்டா?”.

அவளின் கேள்வியில் லேப்டாப்பில் எதையோ டைப் செய்து கொண்டிருந்தவனின் கரம் அப்படியே நின்று விட்டது.

என்னவென்று இவளிடம் விளக்கி கூறுவது.. தன் கடந்த காலத்தை பற்றி கூறி விடலாமா என்றும் ஒரு நொடி சிந்தித்தவனிற்கு எப்படி இவளிடம் அதையெல்லாம் கூறுவது என்று புரியவில்லை.

அவளை திரும்பி முறைத்துப் பார்த்தவன், “சரி, நான் கேக்குறதுக்கு முதல்ல நீ பதில் சொல்லு.. நேத்து அவ என்னை பத்தி எல்லாமே தெரியும் உனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் அவளை கேட்டு தெரிஞ்சுக்க சொன்னாளே.. அதுக்கு எதுக்குடி சரின்னு சொன்ன”.

அவனின் குரலே அத்தனை கோபத்தை உள்ளடக்கி இருந்தது.

‘நாமலே சிக்கிடோம் போலருக்கு. இன்னைக்கு இவருக்கு மூடே சரியில்ல போலருக்கு. நாம எது பேசினாலும், செஞ்சாலும் கோபப்படுறாரு’ என்று எண்ணியவள் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு அவனை பார்த்தாள்.

“உன் கிட்ட தானே கேக்குறேன் என் புருஷன பத்தி எனக்கு தெரியும். யாரும் எனக்கு எதுவும் சொல்லிக் கொடுக்க தேவையில்லைன்னு அவகிட்ட சொல்லி இருக்க வேண்டியது தானே.. எதுக்காக சரின்னு மண்டையை ஆட்டுன”.

“அது.. அது வந்து.. எனக்கு தான் உங்கள பத்தி ஒன்னும் தெரியாதே”.

“அது உனக்கு மட்டும் தான் தெரியும். வெளியில் இருக்குறவங்கள பொறுத்த வரைக்கும் நாம லவ் பண்ணி கல்யாணம் பண்ணி இருக்கோம். நீ இப்படி சரின்னு மண்டையாட்டுனினா அப்புறம் நாம சொன்னதெல்லாம் பொய்னு அவ கண்டுபிடிச்சிட மாட்டாளா”.

“இல்ல, நான் அவங்க உங்க பிரண்டுன்னு நினைச்சுட்டேன். உங்கள பத்தி எல்லாமே தெரியும்னு சொல்லவும் நீங்க ரெண்டு பேரும் ரொம்ப குளோஸ்ன்னு நினைச்சு தான் அப்படி..” என்றாள் இழுவையாக.

அவளின் வார்த்தையில் ஏன் என்றே தெரியாமல் சூர்யாவிற்கு கோபம் எழ. கோபமாக எழுந்து அவள் அருகில் வந்தான். இவளின் கால்களும் அவனின் கோபத்தை கண்டு தானாக எழுந்து நிற்க.

“அப்படின்னு நான் சொன்னேனா.. நாங்க ரெண்டு பேரும் கிளோஸ்னு நானா உன்கிட்ட சொன்னேன். நீயா ஏதாவது ஒன்னு நினைச்சுக்கிட்டு நீயா அவகிட்ட சரின்னு சொல்லுவியா?”.

“சாரி, இனிமே சொல்ல மாட்டேன்” என்றாள் அவசர கதியில்.

“அப்போ இனிமே அவ ஏதாவது இப்படி பேசினா என்ன சொல்லுவ?”.

“எனக்கு உங்கள பத்தி எல்லாமே தெரியும்னு சொல்றேன்”.

“என்னை பத்தி உனக்கு என்ன தெரியும்?” என்றான் தன் ஒற்றைப் புருவத்தை ஏற்றி கேள்வியாக.

இப்படி கேட்டால் அவளும் என்ன தான் சொல்வாள்.. தெரியும் என்று சொன்னாலும் கோபப்படுகிறான். தெரியாது என்று சொன்னாலும் கோபப்படுகிறான்.

இவனிடமிருந்து எப்படி தப்பிப்பது என்று வழி தெரியாமல் விழி பிதுங்கிப் போய் நின்றாள்.

“அது.. நேத்து அவங்க சொன்னாங்க இல்ல உங்கள பத்தி முழுசா அவங்களுக்கு தான் தெரியும்னு அதே மாதிரி நானும் தெரியும்னு சொல்லவா”.

அவள் எதை வைத்து கூறினாள்.. ஆனால், இவள் எதை கூறிக் கொண்டிருக்கிறாள் என்று எண்ணியவனுக்கு இவளின் வார்த்தையில் சிரிப்பு தான் எழுந்தது.

அவள் அறியாமல் தன் பற்களை கடித்து அதை மறைத்தவன், “ஒன்னும் தேவையில்லை” என்று விட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

இவனின் செயலில் இவன் எதை நினைத்து கோபப்படுகிறான்.. எதை தெரியும் என்று சொல்ல சொல்கிறான் என்பதே அவளுக்கு புரியாமல் போனது.

ஆனால், ஒரு விஷயம் மட்டும் அவளுக்கு நன்கு விளங்கி விட்டது. இனி யார் என்ன கூறினாலும் சரி சூர்யாவிடம் பேச்சே கொடுக்கக் கூடாது என்று முடிவெடுத்துவிட்டாள்.

அதன் பிறகு இருவரின் நாட்களும் அமைதியிலேயே கழிந்தது.

அவனும் அவளை கண்டு கொள்ளவில்லை..

அவளும் அவன் இருக்கும் திசையை கண்டாலே தலை தெறித்து ஓடிக் கொண்டிருந்தாள்.

அதை கண்டும் காணாமல் இருந்து கொண்டான் சூர்யா.

அன்று தாத்தாவும் வேதவள்ளியும் கார்டனில் அமர்ந்து டீயை அருந்தியவாறு அவர்களின் குடும்ப கதையை சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்தனர்.

தாத்தாவிற்கு இப்பொழுதெல்லாம் வேதவள்ளி வீட்டில் இருப்பது நன்கு பொழுது போக துவங்கி விட்டது.

முன்பெல்லாம் காளிதாஸ் உடன் சேர்ந்து கோவில், குளம் என்று சுற்றிக்கொண்டு இருப்பவர். இப்பொழுது வேதவள்ளியுடன் சேர்ந்து நன்கு கதைகளை பேச துவங்கி விட்டார்.

அன்று ஏதேதோ பேச்சு சென்று கொண்டு இருந்து. இறுதியில் சூர்யாவின் அம்மாவின் திருமண பேச்சை துவங்கி இருந்தனர் இருவரும்.

தாத்தா அவரின் மகளின் திருமண வாழ்க்கையை பற்றி வருத்தத்தோடு கூறி முடித்தார்.

“நீங்க ஒன்னும் பீல் பண்ணாதீங்க தாத்தா”.

“ஒரே பொண்ணுன்னு அவ்வளவு ஆசையா வளர்த்தோம் மா.. காதலிக்கிறேன்னு வந்து நின்னா.. நல்ல பையனா தானே இருக்கான்னு வசதி எதை பத்தியும் பாக்காம கட்டி கொடுத்தேன். ஆனா, அவரு இப்படி மாறுவார்னு நாங்க யாரும் கொஞ்சம் கூட நினைச்சு பாக்கல.. கடைசியில் என் பேரனை தனியா தவிக்க விட்டுட்டு அம்மா அப்பா இரண்டு பேருமே போய் சேர்ந்துட்டாங்க.. என் பொண்ண வளர்த்த மாதிரி இப்போ என் பேரனை வளர்த்துக்கிட்டு இருக்கேன்”.

“கவலைப்படாதீங்க தாத்தா நீங்க அவரை நல்லா தானே பாத்துக்கிறீங்க”.

“என்ன இருந்தாலும் அம்மா அப்பா இருந்து பார்த்துக்கிற மாதிரி வராதுல” என்று இவர் கூறிக் கொண்டிருக்கும் பொழுதே சூர்யா வீட்டிற்கு வந்து சேர்ந்து விட்டான்.

வீட்டிற்குள் நுழைய போனவனுக்கு தாத்தாவின் குரல் வருத்தத்தோடு இவனின் செவியை வந்தடைந்தது. குரல் வரும் திசையை நோக்கி நடந்து சென்றவன் அவர் பேசுவதை கேட்டு அப்படியே நின்று விட்டான்.

“அப்படியெல்லாம் யோசிக்காதீங்க தாத்தா.. அவருக்காவது துணையா நீங்க இருக்கீங்க. ஆனா, என்னை பத்தி நினைச்சு பாருங்க.. என்னை மாதிரி எத்தனையோ பேரு அப்பா அம்மா சொந்தம் பந்தம்னு யாருமே இல்லாம கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்காங்க. என்னுடைய அப்பாவும் அம்மாவும் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.. ரெண்டு பேருமே கவர்ன்மென்ட் ஸ்கூல் டீச்சர்ஸ். நான் பிறந்த பிறகு வேற குழந்தையே பெத்துக்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டாங்களாம்.

அப்புறம் அவங்க ரெண்டு பேரும் சம்பாதிச்சு ஒரு குட்டி வீடு வாங்கி நாங்க மூணு பேருமே அந்த வீட்ல தான் இருந்தோம். எல்லாமே நல்லா தான் போயிட்டு இருந்துச்சு. நான் காலேஜ் படிக்கும் போது அம்மாவுக்கு ரொம்ப உடம்பு முடியாம போயிடுச்சு. லட்ச கணக்குல செலவாகும்னு சொல்லிட்டாங்க.. நானும் வீட்டை வித்து தெரிஞ்சவங்க கிட்ட எல்லாம் கடன் வாங்கி பணத்தை அரேஞ்ச் பண்ணி அம்மாவுக்கு ட்ரீட்மென்ட் பார்த்தேன். ஆனா, கடைசி வரைக்கும் அம்மாவ காப்பாத்த முடியாமலே போயிடுச்சு”.

“அப்போ உன்னுடைய அப்பா?”.

“அப்பா நான் ஸ்கூல் படிக்கும்போதே ஆக்சிடென்ட்ல இறந்துட்டாங்க தாத்தா. அப்பாவும் அம்மாவும் லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டதால ரெண்டு குடும்பத்துக்கும் நடுவுல பிரச்சனை. ரெண்டு குடும்பத்து ஆளுங்களுமே எங்க கூட பேசுறது கிடையாது. நான் இதுவரைக்கும் அவங்க யாரையும் பார்த்தது கூட கிடையாது. அப்போ அப்பாவுடைய வீட்ல அவங்க கூட பிறந்தவங்க எல்லாம் சொத்தை பிரிக்க போறதா சொல்லி அப்பாவை சைன் பண்ண வர சொல்லி இருந்தாங்க. அப்பா சைன் பண்றதுக்காக அவங்க சொந்த ஊருக்கு போயிருந்தார்.

திரும்பி வந்துட்டு இருக்கும்போது எதிரில் வந்த கார் மோதி ஆக்ஸிடென்ட்ல அங்கேயே இறந்துட்டாருன்னு எங்களுக்கு நியூஸ் தான் கிடைச்சுச்சு. என்ன நடந்துச்சுன்னு எங்களால் கண்டுபிடிக்கவே முடியல. ஏன்னா, எதிர்ல வந்த கார்ல இருந்தவங்களும் இறந்து போயிட்டாங்களாம். சைடுல வந்த லாரி வேற இடிச்சிடுச்சுன்னு சொன்னாங்க.. அதனால யார் மேல தப்பு எப்படி தப்பு நடந்துச்சுன்னு எதுவுமே தெரியாம போயிடுச்சு. மறுநாள் தீபாவளி.. வருஷா வருஷம் அப்பா எனக்கு நிறைய பட்டாசு வாங்கி தருவாங்க. ஊருக்கு போயிட்டு வந்து என்னை கூப்பிட்டு போய் பட்டாசு வாங்கி தரேன்னு சொல்லிட்டு ஊருக்கு போனாங்க. ஆனா, திரும்பி வரவே இல்லை. அதுக்கு அப்புறம் நாங்க தீபாவளி கொண்டாடுவதையே விட்டுட்டோம்” என்றாள் விழி நீர் வழிய.

தாத்தாவிற்கு அவள் அந்த ஆக்சிடென்டை பற்றி விவரித்ததில் எதுவோ புரிவது போல் இருந்தது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!