சூர்யாவின் அருகில் நடந்து வந்து கொண்டிருந்தவள் கால் இடறி கீழே விழ செல்லவும்.
அவளை பிடித்து நிறுத்தியவன், “பார்த்து வர மாட்டியா” என்று திட்டி விட்டு அவளின் கையை அழுத்தமாக பற்றி கொண்டான்.
அவனின் தீண்டலில் இவளுக்கு தான் சங்கடமாக இருந்தது.
“நானே பார்த்து வந்துக்கிறேன்” என்று அவள் தன் கையை அவனிடம் இருந்து உருவ முயற்சிக்கவும்.
அவனின் பிடி மேலும் இறுகியது, “ஒன்னும் தேவையில்லை வா” என்று அவளின் கையை பற்றி அழைத்து சென்று கடல் அலையில் காலை நனைத்தான்.
ஜில்லென்ற காற்று அவர்களின் உடலை தழுவி செல்ல..
கடல் நீரில் காலை நனைத்துக்கொண்டு நின்று இருந்தனர் இருவரும்.
இருவருக்குள்ளும் அத்தனை உணர்ச்சி போராட்டம்.
இவனுக்கோ தன் தந்தையால் தான் அவளின் குடும்பம் இப்படி ஆகி இருக்கிறது என்ற குற்ற உணர்வு.
அவளுக்கோ தன்னால் தான் தாத்தாவிற்கு உடல்நிலை சரி இல்லாமல் போய்விட்டதே என்ற வருத்தம்.
இருவரும் எதுவுமே பேசிக் கொள்ளவில்லை. தங்களின் சிந்தனையிலேயே உழன்று கொண்டு அமைதியாக நின்று இருந்தனர்.
அப்பொழுது சீதாவுடன் அவ்விடம் வந்து சேர்ந்த ராம், “ஓ! ரெண்டு பேரும் தான் வந்திருக்கீங்களா?”.
அவனின் குரலில் கலைந்தவர்கள் திரும்பிப் பார்க்கவும்.
சீதாவை வேதவள்ளி இங்கே சற்றும் எதிர்பார்க்கவில்லை, “ஹே சீதா! நீ எப்படி இங்க?”.
“நானும் ராமும் படம் பாக்கலாம்னு தியேட்டருக்கு போனோம். அப்ப பார்த்து கரெக்ட்டா சூர்யா சார் கால் பண்ணி பீச்சுக்கு வர சொல்லவும் அப்படியே இங்க வந்துட்டோம்”.
அவளை விசித்திரமாக பார்த்த வேதவள்ளி, “நீ ஏன் டி ராம் சார் கூட படம் பாக்க போன.. நீங்க ரெண்டு பேரும் பிரண்ட்ஸ் ஆகிட்டீங்களா”.
“யாரு.. நான் உன் பின்னாடி துரத்தினேனா?” என்று அவளை முறைத்துக் கொண்டே ராம்குமார் கேட்கவும்.
“எல்லாம் ஒரு பில்டப்புக்காக தான்” என்று அவனை நோக்கி தன் ஒற்றை கண்ணை சிமிட்டி காட்டினாள் சீதா.
“இங்க என்னடா நடக்குது?” என்ற சூர்யாவிடம் தங்கள் காதல் கதையை கூறி முடித்தனர் சீதாவும் ராம்குமாரும்.
“என்ன சொல்ற சீதா அப்போ அந்த ஆளுங்க உன்னை கடத்த பார்த்தாங்களா?” என்று அதிர்ச்சியாக கேட்டாள் வேதவள்ளி.
“ஆமா டி.. அப்போ ராம் தான் ஹீரோ மாதிரி வந்து அவங்க எல்லாரையும் அடிச்சு போட்டு என்னை காப்பாத்தினார்”.
“ராம் சார் மட்டும அன்னைக்கு வராமல் இருந்திருந்தா உன் நிலைமை என்ன ஆகி இருக்கும். எல்லாம் என்னால் தானே?” என்றவளுக்கோ கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது.
“சீ.. லூசு மாதிரி பேசாத டி.. உன்னால எல்லாம் ஒன்னும் இல்ல. அவன் இப்படி பண்ணதுக்கு நீ என்ன பண்ணுவ.. பாவம், நீயே அவன் கிட்ட மாட்டிகிட்டு முழிச்ச.. நல்ல வேளை, சூர்யா சாரோட உனக்கு கல்யாணம் ஆச்சு. இல்ல, அவனுங்க ரெண்டு பேரும் சேர்ந்து உன்ன ஏதாவது செஞ்சு இருப்பானுங்க”.
“அத வேற ஞாபகப்படுத்தாத டி அதை நினைச்சாலே பயமா இருக்கு”.
“என்ன சொல்ற சீதா.. யாரை பத்தி நீங்க பேசிட்டு இருக்கீங்க?” என்ற சூர்யாவிடம் சீதா நாராயண மூர்த்தியை பற்றியும் சடகோபனை பற்றியும் முழுதாக கூறி முடித்தாள்.
அதை கேட்டவனின் முகமோ கோபத்தில் சிவக்க, “ராஸ்கல்! இப்படி எல்லாம் செஞ்சிருக்காங்களா? நீ ஏன் என்கிட்ட இதையெல்லாம் சொல்லவே இல்ல” என்று தன் அருகே நின்றிருந்த வேதவள்ளியை முறைத்துக் கொண்டு அவன் கேட்கவும்.
அவளுக்கு தான் இப்பொழுது என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை. அனைத்து விஷயத்தையும் இலகுவாக இவனுடன் பகிர்ந்து கொள்ளும் மனநிலையிலா இருவரும் இருக்கின்றனர்.
இவளை எப்போது பார்த்தாலும் உர்ரென்று முகத்தை வைத்துக்கொண்டு சுற்றுகிறான்.
மேலும், கிடைக்கும் நேரத்தில் எல்லாம் திட்டிக் கொண்டே இருக்கிறான்.
இவனிடம் எப்படி அவள் தன் மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசுவாள் என்பதை அவன் சற்றும் சிந்தித்து பார்க்கவில்லை.
“அது.. மறந்துட்டேன்”.
“மறந்துட்டியா? அவங்க ரெண்டு பேரையும் நான் என்ன பண்றேன்னு பாரு” என்றவன்.
“ராம் அவங்க ரெண்டு பேரையும் உடனே தூக்குறதுக்கு ஏற்பாடு பண்ணு”.
“எதுக்குடா தேவையில்லாம பிரச்சனை”.
“அப்புறம் வேதா கிட்ட இவ்வளவு பிரச்சனை பண்ணி இருக்காங்க. அவங்களை அப்படியே சும்மா விட சொல்றியா?”.
‘ஓ! சார் லவ்வுல விழுந்துட்டாரு போலருக்கே’ என்று எண்ணிய ராம், “சரிடா ஏற்பாடு பண்றேன்”.
“நம்ம குடோனுக்கு கொண்டு வர சொல்லிடு. அவங்கள வெச்சு ஒரு வாரம் சிறப்பாக கவனித்து அனுப்பினா திரும்ப இப்படி பண்ணனும்ன்ற எண்ணம் கூட அவங்களுக்கு வராது” என்று கோபத்தில் ருத்ரமூர்த்தியாக பேசிக்கொண்டு இருந்தான்.
கோபத்தில் சிவந்து போய் கிடக்கும் அவனின் முகத்தை பார்ப்பதற்கே வேதவள்ளிக்கு அவ்வளவு பயமாக இருந்தது.
“ஆமா சார், அந்த ரெண்டு பேரையும் சும்மாவே விட கூடாது. இவளை எவ்வளவு டார்ச்சர் பண்ணி இருக்காங்க தெரியுமா? அவங்கள நல்லா வச்சு செய்யணும்” என்று சீதா வேறு ஏற்றி விட.
அவளின் கையை பற்றிய வேதவள்ளி, “சும்மா இருடி” என்றாள் பதட்டமாக.
“நீ சும்மா இரு வேதவள்ளி எல்லாத்துக்கும் பயந்துகிட்டே இருப்ப. அதான் இப்ப உனக்கு துணையா சூர்யா சார் இருக்காருல்ல.. எல்லாத்தையும் அவர் பார்த்துப்பாரு. அவர் உன் கூட இருக்கும் பொழுது உனக்கு என்ன பயம்?”.
அதன் பிறகு சற்று நேரம் கடல் மணலிலேயே அமர்ந்து நால்வரும் பேசிக்கொண்டிருந்து விட்டு அங்கிருந்து கிளம்பினர்.
இவர்கள் வீடு வந்து சேரவும் தாத்தா ஹாலில் அமர்ந்து டிவியை பார்த்துக் கொண்டிருந்தார்.
அவரை நோக்கி வேகமாக விரைந்த வேதவள்ளி, “சாரி தாத்தா என்னால தானே மதியம் உங்களுக்கு உடம்பு முடியாமல் போயிடுச்சு. என்னை மன்னிச்சிடுங்க.. இனிமே, நான் உங்களை எமோஷனல் ஆக்குற மாதிரி எந்த விஷயத்தையும் பேசமாட்டேன்” என்றாள் வருத்தத்தோடு.
அவளுக்கு பின்னே நடந்து வந்த சூர்யாவை தாத்தா பார்க்கவும்.
அவனோ தன் கண்களை மூடி திறந்து எதையும் கூற வேண்டாம் என்பது போல் சைகை செய்தான்.
“அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா.. எனக்கு என் பொண்ணு ஞாபகம் வந்துடுச்சு. அதான் கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன்”.
இப்பொழுது அவருக்கு என்ன சமாதானம் கூறுவது என்று வேதவள்ளிக்கு விளங்கவில்லை.
“சீக்கிரமே என் பொண்ணு உங்களுக்கு மகளா வந்து பிறக்கணும். எனக்கு திரும்ப என் மகள் கிடைச்சா நான் பழையபடி ஆகிடுவேன்”.
அவரின் வார்த்தையில் அதிர்ந்து விழித்த வேதவள்ளி சங்கடமாக அமர்ந்திருக்கவும்.
“ஒரு நிமிஷம் இரு மா இதோ வந்துடறேன்” என்றவாறு எழுந்து தன் அறைக்கு சென்ற தாத்தா வரும்பொழுது தங்க நிறத்திலான ஒரு பெட்டியை தன் கையில் எடுத்துக்கொண்டு வந்தார்.
அதில் என்ன இருக்கிறது என்பது சூர்யாவிற்கு நன்கு தெரியும்.
ஆனால், வேதவள்ளிக்கு தெரியாதே.. அவரை புரியாமல் பார்த்துக் கொண்டு அவள் அமர்ந்திருக்கவும்.
அவளிடம் அந்த பெட்டியை நீட்டிய தாத்தா, “இது உனக்கு தான் எங்க குடும்பத்து மருமகள்களுக்கு அவங்க மாமியார் இதை கொடுப்பாங்க. நீயும் கல்யாணம் முடிஞ்சு வந்த உடனேயே உனக்கு இதை கொடுத்து இருக்கணும். நான் தான் கொடுக்க மறந்துட்டேன். இன்னைக்கு என் பொண்ண பத்தி பேசினதும் தான் எனக்கு இது ஞாபகம் வந்தது. என் பொண்ணு அவளுக்கு வர போற மருமகளுக்காக இதை எடுத்து வச்சிருந்தா” என்கவும்.
அதை திறந்து பார்த்த வேத வள்ளியின் விழிகளோ மேலும் பெரிதாக விரிந்து கொள்ள.
“இது எங்க குடும்ப வளையல்.. ஒவ்வொருத்தரும் பத்திரமா பாதுகாத்து வச்சு அவங்க அவங்க மருமகளுக்கு கொடுப்பாங்க. இப்போ இது உனக்கு சேர வேண்டியது இதை போட்டுக்கோ”.
அதை பார்க்கும் பொழுதே தெரிந்தது அது மிகவும் விலை மதிப்பானது என்பது.
சட்டென்று தன் எதிரே இருந்த டேபிளின் மீது அதை வைத்தவள், “ஐயோ! வேண்டாம் தாத்தா.. எனக்கு இதெல்லாம் எதுவும் வேண்டாம்” என்றவாறு எழுந்து நின்று கொண்டாள்.
அந்த வளையல் அவ்வளவு அழகாக இருந்தது. பல விலை மதிப்பற்ற கற்கள் புதைக்கப்பட்டு பார்க்கவே கண்களை பறிக்கும் வண்ணம் அத்தனை கலை நயத்துடன் மிக மிக அழகாக இருந்தது.
அதை பார்க்கும் பொழுதே தெரிந்தது அது பல லட்சங்களை தனக்குள் விழுங்கி இருக்கும் என்பது.
அதை பார்க்கவே அவளுக்கு படபடப்பாக இருந்தது. இதில் எங்கிருந்து அதை தான் அணிந்து கொள்வது. அதிலும், இன்னமும் அவளுக்கும் சூர்யாவிற்கும் நடுவே ஒரு பிணைப்பு ஏற்பட வில்லையே..
இருவரும் தங்கள் வாழ்க்கையை தாமரை இலை மேல் தண்ணீர் போல் தானே நகர்த்திக் கொண்டிருக்கிறனர்.
இந்நிலையில் அதற்கு முழு உரிமையாளர் நான் தான் என்று உரிமை கொண்டாட அவளுக்கு மனம் வரவில்லை.
“என்னம்மா இப்படி சொல்ற.. நீ தானே இந்த வீட்டோட மருமக. அப்போ இது இனி உனக்கு தான் சொந்தம் போட்டுக்கோ”.
“வேண்டாம் தாத்தா, பார்க்கவே ரொம்ப காஸ்ட்லியா இருக்கு. நான் எங்கேயாவது தொலைச்சுட்டா என்ன பண்றது? நீங்களே பத்திரமா வச்சுக்கோங்க” என்று அவள் மறுக்கவும்.
வேகமாக அவளை நோக்கி நடந்து வந்த சூர்யா அந்த பெட்டியினுள் இருந்த இரு வளையல்களையும் எடுத்து அவளின் கையை பற்றி தானே அவளுக்கு அணிவித்து விட்டான்.
இதை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தன் மனைவியாகவும், அவளை இந்த வீட்டின் மருமகளாகவும் அவன் முழு மனதோடு ஏற்றுக் கொண்டதற்கான சாட்சி தான் இது.
அது வேத வள்ளிக்கு புரிந்ததோ இல்லையோ.. தாத்தாவிற்கு நன்கு விளங்கியது.