குளியலறைக்குள் புகுந்தவனுக்கும் இது தான் தானா என்று தன்னை நினைத்தே சந்தேகம்.
எப்படி எல்லாம் மாறிவிட்டான்..
எத்தனை இறுக்கமாகவும், அழுத்தமாகவும் இருந்தவன்.
அவளின் முன்பு மட்டும் இத்தனை மென்மையாகவும் உருகியும் போய்விடுகிறானே..
ஆம், உருகி போய்விடுகிறான் தான்.
ஆனால், இது அனைத்தும் அவளின் முன்பு மட்டும் தான்.. அவன் உருகி குழைந்தும் போகிறான்.
இது தான் காதலின் மாயாஜாலமோ என்று எண்ணி தனக்கு தானே சிரித்து கொண்டவன். தயாராகி வெளியே வரவும் அவனுக்காக காத்துக் கொண்டு இருந்தவள் அவனை கண்டதும் தன் தலையை தாழ்த்திக் கொண்டே எழுந்து நின்று கைகளை பிசைந்து கொண்டு நின்று இருந்தாள்.
அவள் அருகில் வந்தவன் காது மடல் அருகே கிசுகிசுப்பாக, “போகலாமா” என்க.
அவனின் மூச்சுக்காற்று இவளை தீண்டியதும் அவளின் உடலில் ஒரு வித சிலிர்ப்பு.
அவனின் கேள்விக்கு நாலாபுரமும் தன் மண்டையை ஆடியவள், விட்டால் போதும் என்பது போல் வேகமாக அறையில் இருந்து வெளியேறினாள்.
அவளின் செயலில் தன் பற்களை கடித்து சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டே அவளை பின் தொடர்ந்து சென்றான் சூர்யா.
பிறகு, வேதவள்ளியும் சூர்யாவும் தாத்தாவும் அமர்ந்து உணவை உண்டனர்.
சூர்யா தாத்தாவுடன் பேசிக்கொண்டே உணவை உண்டாலும் அவ்வப்பொழுது அவனின் பார்வை வேதவள்ளியில் தான் படிந்து மீண்டது.
அவளோ தன் தலையை சற்றும் நிமிர்த்தவே இல்லை. குனிந்து கொண்டு சாப்பிடுவதில் மட்டும் தன் கவனத்தை செலுத்தினாள்.
ஆனால், பாவம் ஒரு பருக்கை உணவு கூட அவளின் தொண்டை குழிக்குள் இறங்க மறுத்தது.
‘சாப்பிட்டு முடித்ததும் ஏதோ வேலை இருக்கிறது என்று கூறினானே என்னவாக இருக்கும்’ என்றே அவளின் மூளைக்குள் ஓடிக்கொண்டிருந்தது
சற்று பதட்டமாகவும், படபடப்பாகவும் காட்சி அளித்தாள்.
அவளின் நிலையை கண்டவனுக்கோ சிரிப்பு தான் எழுந்தது. ஏனோ, அவளை சீண்டுவது இவனுக்குள் சுவாரசியத்தை அளிக்க.. அவளையே குறுகுறுவென பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.
அவளின் பதட்டத்தை உணர்ந்த தாத்தா, “என்ன ஆச்சும்மா ஏன் என்னவோ போல இருக்க?”.
“ஆங்.. ஒன்னும் இல்ல தாத்தா” என்றவளோ பெயருக்கு உண்டு விட்டு அறைக்கு சென்று விட்டாள்.
தானும் சாப்பிட்டுவிட்டு தாத்தாவுடன் சற்று நேரம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த சூர்யாவும் அறைக்குள் நுழைய.
அதற்குள் வேதவள்ளி படுத்து உறங்குவது போல் கண்களை இறுக்கமாக மூடி கொண்டாள்.
அவள் அருகில் வந்தவன், “தூங்குற மாதிரி நடிக்காத உனக்கு இதெல்லாம் கொஞ்சம் கூட செட் ஆகல. நீ நடிக்கிறன்னு உன்ன பார்த்தாலே ஈஸியா தெரியுது” என்றதும் மெதுவாக தன் ஒற்றை கண்ணை மட்டும் திறந்து பார்த்தவள் தன் எதிரே ஆஜானுபாகுவாக நின்று இருப்பவனை கண்டு, “ஹி.. ஹி.. அது தூக்கம் வர மாதிரி இருந்துச்சு அதான் சும்மா கண்ண மூடி படுத்து இருந்தேன்” என்று சமாளித்தவாறு எழுந்து அமர்ந்தாள்.
அவள் அருகில் வேண்டுமென்றே நெருங்கி அமர்ந்தவன், “லைஃப்ல எப்பயும் ஒரே மாதிரி இருக்க கூடாது அடுத்தடுத்த ஸ்டேஜ் போயிட்டே இருக்கணும்” என்று சம்பந்தமே இல்லாமல் ஏதேதோ பேசத் தொடங்கினான்.
இவன் சாதாரணமாக பேசுவது கூட அவளின் பார்வைக்கு தவறாக தான் பட்டது.
‘அரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்பது போல் அவன் எதை பற்றி பேசினாலும் அவளின் மூளை முதலிரவை சுற்றியே வட்டமடித்துக் கொண்டிருந்தது.
‘லைஃப்ல அடுத்த ஸ்டேஜா.. அப்போ இன்னைக்கு ஃபர்ஸ்ட் நைட் கொண்டாடிடுவாரே’ என்று படபடப்பாக அவள் அமர்ந்திருக்கவும்.
வெகு நேரம் என்னென்னவோ பேசியவன், “நீ என்ன நினைக்கிற?” என்று அவள் முகத்தை பார்த்து கேட்கவும்.
இவள் எங்கே அவன் பேசியதை எல்லாம் கவனித்தாள், “ஆங்..” என்று திருதிருவென விழித்தாள்.
சூரியா கொஞ்சம் கொஞ்சமாக அவளை நோக்கி குனியவும், அவளோ செய்வதறியாது தன் உடையை அழுத்தமாக பற்றி கொண்டு அமர்ந்திருந்தவள் இறுக்கமாக தன் கண்களையும் மூடி கொண்டாள்.
“நாளைக்கு ஈவினிங் ஒரு பார்ட்டிக்கு போகணும் ரெடியா இரு” என்றவனோ எழுந்து சென்று படுத்துக் கொண்டான்.
ஆனால், அவளோ அவன் சென்றது கூட தெரியாமல் சற்று நேரம் அப்படியே அமர்ந்திருந்தாள்.
“என்ன உட்கார்ந்துகிட்டே தூங்குறியா?” என்ற சூர்யாவின் கேள்வியில் தன் கண்களை சட்டென மலர்த்தியவள் திரும்பிப் பார்க்கவும்..
சூர்யாவோ கட்டிலில் படுத்து கொண்டு இருந்தான். அப்பொழுது தான் அவளுக்கு ‘அப்பாடா’ என்று இருந்தது.
வேகமாக அவனுக்கு முதுகு காட்டி கட்டிலின் விளிம்பில் படுத்து தன் கண்களையும் இறுக்கமாக மூடிக்கொண்டாள்.
சற்று நேரத்திலேயே எதுவோ அவளை வலுவாக இழுத்தது போன்ற உணர்வு. பட்டென்று தன் கண்களை திறந்து பார்க்கும் பொழுது சூர்யாவின் கை அணைவுக்குள் படுத்திருந்தாள்.
மெதுவாக நிமிர்ந்து அவன் முகத்தை பார்க்கவும், அவனும் இவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவளின் முகத்திலோ அப்படி ஒரு தவிப்பு..
அவனிடமிருந்து விடுபடவும் முடியாமல், இதே நிலையில் இருக்கவும் முடியாமல் தவித்து போய் சங்கடமாக படுத்து இருந்தாள்.
அவளின் தவிப்பை உணர்ந்தவன் அவளின் உச்சந்தலையில் அழுத்தமாக தன் இதழை பதித்து விலகியவாறு, “குட் நைட்” என்று மேலும் அவளை தன் நெஞ்சோடு இறுக்கிக் கொண்டு நித்திரை கொள்ள துவங்கி விட்டான்.
இனி அவளுக்கு தூக்கம் வருமா என்ன..
அவளும் இத்தனை நாட்கள் சூர்யாவுடன் ஒரே அறையில் தான் இருக்கிறாள். இது நாள் வரை சூர்யா அவளிடம் இப்படி எல்லாம் நடந்து கொண்டதே கிடையாது.
முதல் முறை இவ்வாறு செய்கிறான்.. அவளுக்கோ எப்படி செயலாற்றுவது என்று கூட தெரியவில்லை. மேலும், அவளுக்கு வேறு அவனை பிடித்து தொலைத்து விட்டதே..
ஆம், பிடித்துவிட்டது..
எப்படி, எப்பொழுது என்றெல்லாம் அவள் அறியவில்லை. அவன் இவளிடம் தன்மையாக நடந்துகொள்ள துவங்கவும். கொஞ்சம் கொஞ்சமாக இவளே அறியாமல் இவளுக்குள் சத்தம் இன்றி நுழைந்து விட்டான்.
அவன் அணைப்பிலிருந்து சற்றும் அசைய கூட முடியாமல் படுத்திருந்தவள் எப்பொழுது உறங்கினாள் என்பது அவளுக்கே விளங்கவில்லை.
மறுநாள் வழக்கம்போல் அவளை சீண்டிக் கொண்டே அவனின் நேரங்கள் கழிந்தன.
சூர்யா வேத வள்ளியுடன் அந்த பார்ட்டி ஹாலிற்கு சென்று விட்டான்.
ராம்குமார் சீதாவுடன் வந்து கொண்டிருப்பதாக அவனுக்கு குறுஞ்செய்தியை அனுப்பி இருந்தான்.
வேத வள்ளிக்கு இது அனைத்துமே புதிதாக இருந்தது. அனைத்தையும் பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்தாள்.
சென்ற முறை ஏற்பட்ட அனுபவத்தால் சற்று பதட்டமாகவும் இருந்தது.
ஆனாலும், சூர்யா தன் அருகில் இருப்பதில் கொஞ்சம் பதட்டம் தனிய, அவனுடன் இருந்து சற்றும் நகராமல் சுற்றிக் கொண்டிருந்தாள்.
அவள் கையை அவன் சற்றும் விடவில்லை இறுக்கமாக பற்றி இருந்தான்.
அது அவளுக்கும் ஏதோ ஒரு பாதுகாப்பு உணர்வை கொடுக்க அவனை தடுக்கவில்லை.
நீல நிற டிசைனர் புடவையை அணிந்திருந்தாள் வேதவள்ளி.. புடவையில் ஆங்காங்கே கற்கள் பதிக்கப்பட்டும் எம்பிராய்டரி செய்யப்பட்டும் பார்க்கவே அத்தனை அழகாக இருந்தது.
தலை முடியை ஒரு கிளிப்பில் அடக்கி இருந்தவள் மெல்லிய அணிகலன்களுடனும் அலங்காரத்துடனும் தயாராகி வந்திருந்தாள்.
கைகளில் அவன் அணிவித்த வளையல்கள் மட்டுமே வீற்றிருந்தன. அதுவே இந்த உடைக்கு போதுமானதாக இருந்தது.
சூர்யாவோ வெள்ளை நிற ஷர்டும், நீல நிற கோட்டும், ஜீன் பாண்டும் என அவளின் உடைக்கு தகுந்தார் போல் அணிந்து வந்திருந்தான். இருவரின் ஜோடி பொருத்தமுமே அத்தனை அழகாக இருந்தது.
அக்ஷ்ரா அவன் மேல் போட்ட பழி சொல்லிற்கு பிறகு பார்போர் அனைவரும் அவன் முன்னே நன்றாக பேசினாலும், பின்னே அவனுக்கு இப்படி ஒரு குறை இருக்குமோ என்ற ஐயத்துடன் தங்களுக்குள் சலசலத்துக் கொள்வார்கள்.
முதலெல்லாம் அவர்களின் முன்பெல்லாம் சூர்யா வரவே விரும்ப மாட்டான். ஆனால், இப்பொழுது வேதவள்ளியுடன் அவர்களை கடந்து செல்லும் பொழுது ஏதோ ஒரு கர்வம் அவனை அறியாமலே அவனுக்குள் குடி கொண்டது.
இவர்களுக்கெல்லாம் ஒரே ஒரு டெஸ்ட்டின் மூலம் அவர்களின் வாயை இவன் நினைத்திருந்தால் அடைத்திருக்கலாம். ஆனால், அவனுக்கு யாரிடமும் தன்னை நிரூபிக்க தேன்றவில்லை போலும்..
சற்று தள்ளி நின்றிருந்த பிரேமும் அக்ஷ்ராவும் இவர்களையே வன்மமாக பார்த்துக் கொண்டு நின்றனர்.
அவர்கள் வந்திருந்தது ஒரு பிசினஸ் சம்பந்தமான பார்ட்டி தான். அனைவரும் தங்கள் மனைவியுடனும், கேர்ள் பிரண்டுடனும் வர வேண்டும் என்பது தான் இந்த பார்ட்டியின் ரூல்ஸ்.
அதன்படி தான் அங்கே வந்திருந்தோர் அனைவருமே அவரவர் துணையுடன் வந்திருந்தனர்.
சற்று நேரத்திலேயே சீதாவும் ராமும் வந்து சேர்ந்துவிட.
நால்வரும் சற்று நேரம் பேசிக்கொண்டு இருந்தவர்கள் உணவருந்த சென்று விட்டனர்.
உணவருந்தி முடிந்ததும், சற்று நேரத்தில் மெல்லிய பாடல் ஒளிபரப்பாக அவரவர் தங்கள் ஜோடியுடன் நடனமாட தொடங்கிவிட்டனர்.
தூரத்திலிருந்து இவர்களையே பார்த்துக்கொண்டு இவர்களை நோக்கி வந்த அக்ஷ்ராவும் பிரேமும், “என்ன சூர்யா மேரேஜ் லைப் எல்லாம் எப்படி போகுது?” என்றான் நக்கலான குரலில்.
அவள் கேட்க வருவதன் அர்த்தம் சீதாவையும் வேதவள்ளியையும் தவிர மற்ற அனைவருக்கும் புரிந்தது.
வேதவள்ளியோ ‘ஆமாம்’ என்பது போல் தலையசைக்க.
“அப்படியா! என்னால நம்ப முடியலையே.. உங்களுக்கு எல்லாம் திருப்தியா இருக்கா?” என்றாள் மீண்டும் அழுத்தமாக அவளை பார்த்துக் கொண்டே.
அவள் கேட்க வருவதன் அர்த்தம் புரியாமல் வேதவள்ளி சூரியாவை பார்க்கவும்.
சூர்யாவோ கோபத்தோடு, “மைண்ட் யுவர் வேர்ட்ஸ்!” என்றான் எச்சரிப்பது போல்.
அவனை பார்த்து கோணலாக புன்னகைத்த அக்ஷ்ரா, “நான் எதுக்காக மைண்ட் பண்ணனும்.. என்னை போல இந்த பொண்ணும் கஷ்டப்படக்கூடாதுன்ற நல்ல எண்ணத்தில் தான் நான் அவளுக்காக பேசிக்கிட்டு இருக்கேன்”.
அவள் என்ன கூறுகிறாள் என்பது புரியாமல் வேதவள்ளியும் சீதாவும் விழித்தனர்.
ராம்குமார், “சரி வாங்க நாம ஜூஸ் குடிச்சிட்டு வரலாம்” என்று அவர்களை அங்கிருந்து அழைத்து செல்ல முற்படவும்.
பிரேமோ ராமின் முன்பு தன் கையை நீட்டி வழியை மறித்தவன், “என்ன அவசரம் ராம் உங்க பிரண்டை பத்தின உண்மை எல்லாம் எல்லாருக்கும் தெரிஞ்சிடும்னு பயப்படுறீங்களா என்ன?”.
“தேவையில்லாத பிரச்சனையை ஆரம்பிக்க பாக்காதீங்க.. இப்போ தான் எல்லா பிராப்ளமும் சரியாகி இருக்கு. நீங்க எவ்வளவு ட்ரை பண்ணாலும் இவங்கள பிரிக்க முடியாது”.
“நாங்க ஏன் ட்ரை பண்ண போறோம் ராம் அந்த பொண்ண பார்த்தாலே தெரியுது ரொம்ப இன்னசெண்டா இருக்கா.. உன் ஃப்ரெண்ட் சொன்ன மொத்த கதையையும் அவ அப்படியே நம்பி இருப்பா. உண்மை என்னன்னு அவளுக்கு தெரியாதுல.. அதான் அவளுடைய லைஃப்க்காக நான் ஹெல்ப் பண்ணலாமுன்னு நினைக்கிறேன். அவளை பார்த்தாலே எனக்கு ரொம்ப பாவமா இருக்கு.. இப்படி ஒரு வாழ்க்கை அவளுக்கு அமைஞ்சிடுச்சேனு ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று உச்சுக்கொட்டி அனுதாபப்படுவது போல் அவள் பேசவும்.
சூர்யா தன் கையை இறுக்கமாக மூடி தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு நின்றான்.