“இன்னும் எத்தனை உண்மையை தான் என்கிட்ட இருந்து மறைச்சு இருக்கீங்கன்னு சொல்லுங்க சூர்யா.. எதுவா இருந்தாலும் எல்லாத்தையும் இன்னைக்கே சொல்லிடுங்க” என்று கண்களில் கண்ணீர் வடிய கேட்டவளை பார்த்தவனுக்கோ மனம் முழுவதும் வேதனை மட்டும் தான் நிறைந்திருந்தது.
“நடந்த எந்த விஷயத்திலுமே என் மேல எந்த தவறும் இல்லடி. நீ என்னை புரிஞ்சுக்கணும்னு ட்ரை பண்ணாலே போதும் என் மேல எந்த தப்பும் இல்லைனு உனக்கே தெரியும்” என்றான் ஆதங்கமான குரலில்.
“நானும் முயற்சி செஞ்சுக்கிட்டு தான் இருக்கேன். ஆனா, என்னால முடியல.. ஏன்னா, நான் உங்களை அவ்வளவு லவ் பண்றேன் சூர்யா” என்றவளோ தன் முகத்தை மூடி அழ தொடங்கி விட்டாள்.
அவளுக்கு சற்று நேரம் அவகாசம் கொடுக்கலாம் என்று எண்ணியவன். அவளிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி இருக்க துவங்கி விட்டான்.
அவள் மனம் என்ன எண்ணுகிறது என்பது அவளுக்கே புரியவில்லை.
நாம் விலகி இருந்தாலாவது அவளால் தெளிவான முடிவை எடுக்க முடியும். அவள் தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற முடிவை எடுத்தாலும் சரி, என்னை விட்டு பிரிந்து செல்ல வேண்டும் என்ற முடிவை எடுத்தாலும் சரி, அவளின் முடிவு எதுவாக இருந்தாலும் அதை நான் மதித்து அதற்கு துணையாக நிற்பேன் என்ற முடிவுடன் அவளை விட்டு சற்று விலகி இருக்க துவங்கி விட்டான்.
இருவருக்கும் பெரிதாக பேச்சு வார்த்தைகள் எதுவும் கிடையாது. அவளுக்குமே இந்த நேரம் தேவைப்பட்டது.. தன் மனதை கொஞ்சம் கொஞ்சமாக தேற்ற துவங்கினாள்.
இதற்கிடையில் தாத்தாவும் அவளிடம் பேசினார். சூர்யாவின் மீது எந்த தவறும் இல்லை இது முற்றிலுமாக அவனின் தந்தையின் தவறு என்றும் எடுத்துரைத்ததோடு அக்ஷ்ராவின் விஷயத்தைப் பற்றியும் கூறினார்.
அவளுக்கும் அனைத்துமே புரிந்தது. அவளின் தந்தையின் விதி என்று நினைத்துக் கொண்டாள்.
அக்ஷ்ராவின் விஷயத்தை தான் அவளால் ஜீரணிக்க முடியவில்லை. அதற்காக சூர்யாவை விட்டு பிரிந்து செல்லவும் அவள் மனம் முன் வரவில்லை.
அன்று கோவிலுக்கு சென்றவள். வெகு நேரம் அமைதியாக அமர்ந்து தனக்குள்ளேயே யோசித்து கொண்டு இருந்தாள்.
ஆம், சூர்யாவின் காதல் முதல் கிடைத்தது அக்ஷ்ராவுக்கு தான். ஆனால், சூர்யா கூறியது போல் அவனாக முன் வந்து முதலில் காதலித்தது என்னை தானே.. என்று அந்த விஷயத்தில் தன் மனதை தேற்றிக் கொண்டாள்.
அடுத்ததாக சூர்யா அவளுடன் தான் முதலில் தன்னை இழந்து இருக்கிறான். அதை மட்டும் அவளால் சற்றும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
பிறகு, சிந்தித்தவள் ‘சரி அவர்கள் இருவரும் ஒன்றாக இருந்ததாகவே இருந்தாலும், அவர்களுக்கு தான் குழந்தை என்று எதுவும் இல்லையே.. சூர்யாவின் குழந்தையை முதலில் கருவில் சுமப்பது தானாக இருந்தால் அவன் முழுவதுமாக தனக்கு தானே சொந்தம். அவனின் குழந்தையும் தனக்கு தான் சொந்தம். அவனின் வாழ்க்கையிலும் முக்கியமானவள் நானாக தானே இருப்பேன்’ என்று எண்ணி தன் மனதை திடமாக மாற்றியவாறு வீடு நோக்கி புறப்பட்டாள்.
அக்ஷ்ராவோ கடும் வயிற்று வலியில் படுக்கையில் படுத்து புரண்டு கொண்டு இருந்தாள்.
அவள் அருகில் வந்த பிரேம், “என்ன அக்ஷ்ரா” என்று மது போதையில் தள்ளாடியவாறு கேட்கவும்.
“என்னால முடியல பிரேம் வயிறு ரொம்ப வலிக்குது. டாக்டர் கிட்ட போகலாம் வாங்க” என்று அழுது கொண்டே பேசினாள்.
“சாரி அக்ஷ்ரா எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. நைட் ஃபுல்லா பார்ட்டி போயிட்டு வந்தது பயங்கர டயர்டா இருக்கு. நீ நம்ம டிரைவரோட போயிட்டு வந்துடு” என்றவாறு பொத்தென்று கட்டிலில் விழுந்தான்.
அவனை வெறுப்பான ஒரு பார்வை பார்த்தவள் நடக்க முடியாமல் நடந்து சென்று தங்கள் காரில் மருத்துவமனையை அடைந்தாள்.
டாக்டரோ அவளை பரிசோதித்து விட்டு, “சிம்டம்ஸ் எல்லாம் பார்க்கும் போது கொஞ்சம் கிரிட்டிக்கல் ஆக தான் இருக்கு மேடம். சில டெஸ்ட் எல்லாம் எடுக்க வேண்டியது இருக்கு எடுத்து பாத்துட்டு தான் சொல்ல முடியும். ரிசல்ட் ஈவினிங் தான் வரும் அது வரைக்கும் வெயிட் பண்ணுங்க”.
அக்ஷ்ராவிற்கோ பயம் பிடித்துக் கொண்டது. தன் தாய்க்கு அழைப்பு விடுத்தவள் நடந்ததை கூறவும்.
“அதிகமா பர்த் கண்ட்ரோல் பில்ஸ் எடுத்துக்காதேனு நான் இதுக்கு தான் சொன்னேன். எங்கேயாவது என் பேச்சை கேட்டியா.. வருஷ கணக்குல இத சாப்பிட்டா உடம்பு என்னத்துக்கு ஆகிறது. அது தான் ஏதாவது பிரச்சனையா இருக்கும். நான் முதல்ல ஹாஸ்பிடல் கிளம்பி வரேன் நீ போனை வை” என்றவர் அவசரமாக கிளம்பி மருத்துவமனைக்கு புறப்பட்டார்.
“என்னம்மா என்ன ஆச்சு? அக்ஷ்ராவுக்கு என்னவாம்?” என்ற காளிதாசனிடம், “அப்பா ஏதோ ரொம்ப வயிறு வலியா இருக்காம். அதான் ஹாஸ்பிடல் போய் அட்மிட் ஆகி இருக்கா நான் போய் என்னன்னு பாத்துட்டு வந்துடறேன்”.
“அச்சச்சோ! என்னமா சொல்ற.. ஹாஸ்பிடல் போய் அட்மிட் ஆகுற அளவுக்கு என்ன பிரச்சனை?”.
“தெரியலப்பா.. டெஸ்ட் எல்லாம் எடுத்து இருக்கிறாங்களாம் போய் பார்த்தால் தான் தெரியும்” என்று கலங்கிய குரலில் கூறியவர் அவசரமாக புறப்பட்டார்.
சாயந்திரம் போல் முடிவு அவர்களின் கைக்கு கிடைத்தது. அளவுக்கு அதிகமான கருத்தடை மாத்திரைகளை உட்கொண்டதால் அவளின் கர்ப்பப்பையில் கட்டி வளர்ந்திருப்பதாக அதில் எழுதப்பட்டிருந்தது. அதை பார்த்த தாய்க்கும் மகளுக்கும் முகமே விடியவில்லை.
கலங்கிய கண்களோடு தன் தாயை ஏறிட்டு பார்த்த அக்ஷ்ரா, “இப்போ என்னம்மா பண்றது?” என்றாள் குரல் நடுங்க.
“டாக்டர் என்ன சொல்றாங்கன்னு பாப்போம்” என்று அவளுக்கு சமாதானம் கூறிக் கொண்டிருந்தார் அவளின் தாய்.
சற்று நேரத்தில் டாக்டர் இவர்களின் அறைக்கு வர ரிப்போர்ட்டை பார்த்தவர், “நீங்க சொன்ன சிம்டம்ஸ்லாம் கேட்கும் போதே எனக்கு கொஞ்சம் கிரிட்டிக்கல் மாதிரி தான் தெரிஞ்சது. நான் நெனச்ச மாதிரி தான் ரிப்போர்ட்லயும் இருக்கு. வேற வழி இல்ல மேடம் உங்களுடைய கர்ப்பப்பையை ரிமூவ் பண்ணி தான் ஆகணும்”.
அவர் கூறியதை கேட்டு தன் தலையில் அடித்துக் கொண்டு அழுத அக்ஷ்ராவின் தாய், “என்ன டாக்டர் இப்படி சொல்றீங்க என் பொண்ணுக்கு கல்யாணம் ஆகி இன்னும் குழந்தை கூட பிறக்கல.. அதுக்குள்ள இப்படி சொல்லிட்டீங்களே”.
“வேற வழியில்லம்மா.. கட்டி இப்போ பைனல் ஸ்டேஜ்ல இருக்கு. எப்ப வேணும்னாலும் அது உடையலாம். அதுக்குள்ள நம்ம ஆப்ரேட் பண்ணி கர்ப்பப்பையை வெளியில் எடுப்பது தான் உங்க பொண்ணுடைய உயிருக்கே பாதுகாப்பு. இல்லன்னா, அவங்களுடைய உயிருக்கு இதனால ஆபத்து ஏற்படலாம். எவ்வளவு சீக்கிரம் ஆப்பரேஷன் பண்றோமோ அவ்வளவு சீக்கிரம் அவங்க உயிருக்கு எந்த பிரச்சனையும் இல்ல.. இதுக்கு மேல நீங்க தான் யோசிச்சு உங்க முடிவை சொல்லணும்” என்று விட்டு வெளியேறிவிட்டார்.
தாய்க்கும் மகளுக்கும் இப்பொழுது என்ன செய்வது என்றே தெரியவில்லை.
எப்படி எல்லாம் ஆட்டம் போட்டார்கள்.. ஒருவனின் ஆண்மையையே கேள்விக்குறியாக்கி விட்டு வேறொருவனை பணத்திற்காக திருமணம் செய்து கொண்டாள்.
இப்பொழுது குழந்தையே பிறக்காது என்பது போல் ஆகிவிட்டதே என்று எண்ண எண்ண இருவருக்கும் அழுவதை தவிர வேறு வழி இல்லை.
உடனே விஷயத்தை அக்ஷ்ரா பிரேமுக்கு தெரிவிக்க.. அவனும், “உன் இஷ்டம் என்ன வேணும்னாலும் செஞ்சுக்கோ” என்றதோடு அழைப்பை துண்டித்து விட்டான்.
மறுநாளே அவளுக்கு ஆபரேஷன் நடந்தது. கர்ப்பப்பையையும் நீக்கிவிட்டனர்.
அவ்வளவு தான்.. அனைத்தும் முடிந்துவிட்டது.
இனி அக்ஷ்ரா தாய்மை என்ற உணர்வையே உணர முடியாது.
எந்த குழந்தை தனக்கு வேண்டாம் என்று இத்தனை நாட்களும் அவள் தடுத்துக் கொண்டு இருந்தாளோ.. அந்த வரம் இனி அவளுக்கு கிடைக்கப் போவதே இல்லை என்பதை உணரும் பொழுது தான் அதன் வீரியமே அவளுக்கு புரிந்தது.
வீட்டிற்கு வந்த வேதவள்ளியோ வெகு நாட்கள் கழித்து மலர்ந்த முகத்தோடு சூர்யாவிற்காக காத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
சூர்யா வீட்டிற்கு வந்ததும் இவளிடம் புன்னகையை மட்டும் சிந்தியவன் சாப்பிட்டுவிட்டு படுக்க வந்து விட்டான்.
இருவரின் உறவும் இப்பொழுது இப்படி தான் மேலோட்டமாக சென்று கொண்டு இருக்கிறது.
அவளின் மனம் மாறும் வரை சூர்யா தான் காத்திருக்க முடிவு செய்து விட்டானே..
அறைக்குள் வந்தவனை பார்த்து வேதவள்ளி புன்னகைக்கவும்.
“என்ன இன்னும் தூங்கலையா?” என்றவாரே கையில் ஒரு புத்தகத்துடன் கட்டிலில் வந்து அமர்ந்தான் சூர்யா.
இந்நேரம் எல்லாம் சூர்யாவை எதிர் கொள்ள முடியாமல் வேதவள்ளி தூங்கிவிடுவாள். இன்று அதிசயமாக அவள் விழித்துக் கொண்டிருப்பது இவனுக்கும் ஆச்சரியமாக தான் இருந்தது.
தயக்கமாக அவன் அருகில் சென்று நின்றவள், “சூர்யா நாம குழந்தை பெத்துக்கலாமா?” என்று தயங்கி தயங்கி தான் கேட்டாள்.
அவளின் வார்த்தையில் இவனின் இதழோ பெரிதாக விரிந்து கொள்ள..
அவளின் கையை பற்றி தன் மடியில் அமர்த்தியவன் அவளின் தோள்பட்டையில் தன் தாடையை வைத்து, “என்னடி சொல்ற நிஜமா தான் சொல்றியா?” என்றான் கண்களில் ஆசையோடு.
அவனின் உணர்வுகளை பார்க்கும் பொழுது தான் அவன் எவ்வளவு தனக்காக தன் உணர்வுகளை அடக்கிக் கொண்டும், தனக்காக காத்துக் கொண்டும் இருக்கிறான் என்பது வேதவள்ளிக்கு புரிய வந்தது.
அதில், தன் மேலேயே குற்ற உணர்வு எழ, “ஆமா சூர்யா, நாம குழந்தை பெத்துக்கலாம். நீங்க அவங்களோட வாழ்ந்து இருந்தாலும் உங்க குழந்தை முதல்ல எனக்கு தானே கிடைக்க போகுது” என்று அவள் புன்னகைத்துக் கொண்டே கூறவும்.
“நீ நல்லா யோசிச்சு தான் சொல்றியா?” என்றான் அவளை பார்த்து சந்தேகமாக.
இல்லை என்றால் அன்று போல் கூடல் முடிந்து அவள் அழுதால் அதை இவனால் தாங்கிக் கொள்ள முடியாதே..
அவனுக்கு அமோதிப்பாக தலையசைத்தவள், “ஆமா, தாத்தாவுக்கு அவருடைய பொண்ணு நமக்கு குழந்தையா வந்து பிறக்கனுமாம். அவருடைய ஆசையை நம்ம நிறைவேற்றி வைக்கணும் இல்ல”.
“அப்போ குழந்தை வேணும்னு உனக்கு ஆசை இல்லை. தாத்தாவுக்காக தான் ஓகே சொல்றியா?” என்றவனின் வார்த்தையில் தன் தலையை தாழ்த்தி கொண்டவள் வெட்கத்தோடு, “எனக்கும் தான்” என்றாள் மெல்லிய குரலில்.