“சூர்யா உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும் பா” என்றவர் காளிதாஸ் அவரிடம் கூறிய செய்தியை அவனிடம் கூறினார்.
அவனிடம் அதற்கு எந்த ஒரு பதிலும் இல்லை அமைதியாக அமர்ந்தான்.
“என்ன சூர்யா எதுவுமே சொல்ல மாட்டேங்குற?” என்ற தாத்தாவை வெறுமையான பார்வை பார்த்தவன், “என்ன சொல்லணும்னு சொல்றீங்க தாத்தா.. எனக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு. அவளுக்கு இப்படி ஆயிடுச்சுன்றதுனால நான் வருத்தப்படணும்னு சொல்றீங்களா.. உங்க பிரண்டுடைய பேத்திக்கு உடம்பு முடியலன்னா அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?”.
“அதுக்கு இல்ல சூர்யா அவ உனக்கு எவ்வளவு பெரிய துரோகத்தை பண்ணா.. ஆனா கடவுள் அவளுக்கு எப்படி ஒரு தண்டனையை கொடுத்துட்டார் பாத்தியா”.
“தாத்தா அவளை பற்றி நான் எதுவுமே பேச விரும்பல. நானும் வேதாவும் இனி எங்களுடைய லைஃப்ல அவளை பற்றி யோசிக்கவும் மாட்டோம், பேசவும் மாட்டோம்னு முடிவு பண்ணி இருக்கோம். சோ, அவ சம்பந்தப்பட்ட எந்த விஷயத்தையும் இனி என்கிட்ட கொண்டு வராதீங்க.. உங்களுக்கு போய் பாக்கணும்னா கூட நீங்க தாராளமா போய் பாத்துட்டு நலம் விசாரிச்சிட்டு வரலாம். பட், என்கிட்ட அவங்க சம்பந்தப்பட்ட விஷயத்தை மட்டும் கொண்டு வராதீங்க தாத்தா”.
“சரிப்பா நீ சொல்றதும் நல்லது தான்” என்றவர் அத்தோடு முடித்துக் கொண்டார்.
அதன் பிறகு அனைவரும் சாப்பிட்டு விட்டு அறைக்கு சென்று விடவும்.
சூர்யாவின் கை அணைவுக்குள் படுத்திருந்த வேதவள்ளி, “சூர்யா நான் ஒன்னு கேட்டா நீங்க தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே?”.
சூர்யாவோ அவளின் நெற்றி கண்கள் கன்னம் என முத்த ஊர்வலத்தை நடத்திக் கொண்டே, “கேளு” என்றான்.
“நானும் தாத்தாவோட போய் அவங்கள பாத்துட்டு வரவா?”.
“யாரை?”.
“அக்ஷ்ராவை” என்றதும் ஒரு நொடி அவளை உறுத்து விழித்தவன், “எதுக்கு இப்போ இதெல்லாம்?”.
“பாவம் சூரியா, உடம்பு முடியாம இருக்கும் போது நலம் விசாரிக்கிறது தப்பில்ல இல்ல”.
“தப்பு இல்ல தான்.. ஆனா, நீ அவளை பார்க்க போனினா அவ வேணும்னே உன்ன ஹர்ட் பண்ற மாதிரி ஏதாவது பேசுவா.. இப்ப தான் நமக்குள்ள எல்லாமே சரியாகி இருக்கு. திரும்ப எதுக்கு நாமளே பிரச்சனையை விலை கொடுத்து வாங்கணும்”.
“அவங்க என்ன சொன்னாலும் அத நான் காதுல வாங்க மாட்டேன் சூர்யா. இப்ப நான் கிளியரா இருக்கேன்”.
“ப்ளீஸ் டி சொன்னா புரிஞ்சுக்கோ.. அவ உன்ன ஹர்ட் பண்ணுவா நீ ஹர்ட் ஆனா எனக்கும் ரொம்ப கஷ்டமா இருக்கும்”.
“ப்ளீஸ் சூர்யா” என்றவாறு அவள் தன் கண்களை சுருக்கி கெஞ்சலாக கேட்கவும்.
அவள் இதற்கு மேல் என்ன கூறினாலும் விடமாட்டாள் என்று எண்ணியவன், “என்னமோ பண்ணு” என்றதோடு முடித்துக் கொண்டான்.
மறுநாள் தாத்தாவும் வேதவள்ளியும் சேர்ந்து அக்ஷ்ராவை காண மருத்துவமனைக்கு சென்று இருந்தனர். சூர்யா எதிர்பார்த்தது போலவே அவள் வார்த்தைகளால் வேதவள்ளியை காயப்படுத்த தவறவில்லை.
தனக்கு இப்படி ஆகிவிட்டதே என்ற தாழ்வு மனப்பான்மையில் இருந்தவளுக்கு வேதவள்ளியை இங்கே கண்டதும் கோபம் தான் வந்தது.
தன்னை சங்கடப்படுத்தவே இவள் இங்கே வந்திருக்கிறாள் என்று எண்ணியவள் அவளை முறைத்துக் கொண்டே அமர்ந்திருந்தாள்.
காளிதாசும் அவ்விடம் தான் இருந்தார்.
“இப்ப உடம்பு எப்படிமா இருக்கு?” என்று தாத்தா அவளிடம் பரிவாக கேட்கவும்.
“இப்போ உங்களுக்கெல்லாம் எனக்கு இப்படி ஆனதால ரொம்ப சந்தோஷமா இருக்குமே.. என்ன நலம் விசாரிக்கிற மாதிரி என்னை குத்தி காட்டிட்டு போகலாம்னு வந்தீங்களா.. இதுக்கெல்லாம் நான் வருத்தப்பட மாட்டேன். என்னை பொறுத்த வரைக்கும் இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. இதுல இருந்து நான் திரும்பவும் மீண்டு வருவேன்” என்று அழுகையோடு கத்தினாள்.
“ஏய் அக்ஷ்ரா, இப்போ அவங்க என்ன கேக்குறாங்க நீ என்ன பதில் சொல்ற.. அவங்க என்ன உன்ன கஷ்டப்படுத்தவா வந்திருக்காங்க.. உடம்பு முடியலன்னு பாக்க வந்திருக்காங்க.. அவங்கள இப்படி அசிங்க படுத்துற மாதிரி பேசுற” என்று காளிதாஸ் கோபமாக திட்டவும்.
வேதவள்ளியை நோக்கி சொடக்கிட்ட அக்ஷ்ரா, “ஏய்! என்ன என்னை பார்த்து கிண்டல் பண்ணி சிரிக்கலாம்னு தான நீ இங்க வந்த.. அன்னைக்கு அவ்வளவு பேச்சு பேசுனியே.. என் புருஷனுக்கு குழந்தை பிறக்காதுன்னு சொன்னியே.. இப்ப உன் நிலைமை என்ன ஆச்சு பார்த்தியானு என்னை பார்த்து கேலி பண்ணி சிரிக்க தான டி நீ இங்க வந்த.. எனக்கு எல்லாம் தெரியும். நீங்க எல்லாரும் சிரிக்கிற மாதிரி என்னுடைய நிலைமை ஆயிடுச்சு இல்ல.. மரியாதையா எல்லாரும் இங்கிருந்து வெளியில் போங்க.. யாருக்கு வேணும் உங்களுடைய கரிசனம் எல்லாம்” என்று கண்டமேனிக்கு ஆற்றாமையில் கண்ணீரோடு கத்த தொடங்கி விட்டாள்.
“நீ வா ரங்கராஜ் இதுங்க எல்லாம் திருந்தாத ஜென்மங்கள். இன்னும் எவ்வளவு பட்டாலும் திருந்தாதுங்க” என்று ரங்கராஜை தன் கையோடு அழைத்துக் கொண்டு வெளியேறினார் காளிதாஸ்.
வேதவள்ளி அவரின் பின்னோடு வெளியேற சென்றவள் அக்ஷ்ராவை திரும்பிப் பார்த்து, “நீங்க நினைக்கிற மாதிரி உங்க நிலைமையை பார்த்து சந்தோஷப்படுறதுக்காக நாங்க இங்க வரல.. உடம்ப பாத்துக்கோங்க..” என்று விட்டு வெளியேற சென்ற சமயம் அவளை திரும்பி பார்த்தவள், “என் சூர்யாவுக்கும் இப்படி தானே வலிச்சிருக்கும்” என்றுவிட்டு சென்று விட்டாள்.
அவளிடம் சண்டை பிடிக்கவில்லை.. குத்திக் காட்டி பேசவில்லை.. ஆனால், தன் மனதில் உறுத்திக் கொண்டிருந்ததை கேட்டுவிட்டாள்.
செல்லும் வேத வள்ளியின் முதுகை வெறித்து பார்த்த அக்ஷ்ரா எதுவும் பேசவில்லை.
அக்ஷ்ராவிற்கும் இது நன்கு தெரியும். அவர்கள் இவளை கேலி கிண்டல் செய்ய வரவில்லை என்பது தெரியும். இருந்தாலும், இத்தனை நாட்கள் மற்றவர்களின் முன்பு கம்பீரமாகவும், தலை நிமிர்வாகவும் சுற்றிவிட்டு இப்பொழுது அவர்களுக்கு அடங்கி போகும் படி அமர்ந்திருக்க அவளால் முடியவில்லை.
அதிலும், அனைவரும் தன்னை நலம் விசாரிக்கிறேன் என்பது போல் வந்து பாவமாக பார்ப்பது வேறு அவளுக்கு பெரும் அவமானமாக இருந்தது.
ஏதோ அனைவரும் அவளை கேலி கிண்டல் செய்வது போலவே அவளுக்குள் ஒரு மாயை..
அவரவர் விதைத்ததை அவரவர் அறுவடை செய்து தானே ஆக வேண்டும்.
அக்ஷ்ராவிற்கும் அவளின் அறுவடை காலம் வந்துவிட்டது.
ஆபரேஷன் முடிந்து மருத்துவமனையிலேயே அவள் சில நாட்கள் தங்கும்படி ஆகிவிட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் ஒரு நாள் கூட பிரேம் அவளை நேரில் வந்து சந்தித்து ஆறுதலாக ஒரு வார்த்தை கூட அவளிடம் பேசவில்லை.
அது வேறு அவளின் மனதை வெகுவாக வலிக்கச் செய்தது. அவனுக்காக என்னவெல்லாம் செய்திருக்கிறாள். கட்டின கணவனை விட்டுவிட்டு வாழ்க்கையே வேண்டாம் என தூக்கி போட்டுவிட்டு வந்திருக்கிறாள்.
ஆனால், இவனோ அவளை சற்றும் சட்டை செய்யாமல் இருப்பது அவளுக்குள் பெரும் ஏமாற்றத்தையும், வலியையும் தான் ஏற்படுத்தியது.
செல்பேசியின் வாயிலாக அக்ஷ்ராவை தொடர்பு கொண்டு ஓர் இருமுறை பேசினானே தவிர, அவளை காண அவன் வரவே இல்லை. அது வேறு அவளுக்குள் பெரும் வலியை ஏற்படுத்தியது.
மருத்துவமனையில் இருந்து வீட்டை அடைந்த தாத்தாவிற்கும் வேதவள்ளிக்கும் அக்ஷ்ராவின் பேச்சு சற்று நெருடலாக தான் இருந்தது.
சூர்யா அலுவலகத்தில் இருந்து வருந்தவன் அவர்களின் வாயிலாக அக்ஷ்ரா பேசியதை கேட்டதும் அவனுக்கும் அத்தனை ஆத்திரம்.
“நான் தான் அப்போவே சொன்னேன் இல்லடி அங்க போக வேண்டாம்னு.. எங்கேயாவது என் பேச்சை கேட்டியா.. பெரிய இவ மாதிரி அவள போய் பாத்துட்டு வரேன்னு பேசுன.. இப்ப என்ன ஆச்சுன்னு பாத்தியா.. மனசுல என்ன பெரிய தியாகினு நினைப்பா உனக்கு.. அவ உன்னை அவ்வளவு பேச்சு பேசி இருக்கா மேடம் அவங்கள மன்னிச்சிட்டு நலம் விசாரிக்க போனீங்களோ.. இப்போ நான் சொன்ன மாதிரியே ஆயிடுச்சா.. அவ உன்ன நல்லா ஹர்ட் பண்ணி அனுப்பி இருக்கா.. இதெல்லாம் உனக்கு தேவையா டி” என்று கோபமாக தன் தலையை கோதியவன் அருகில் இருந்த நீர் குவளையை எடுத்து கட கடவென வாயில் சரித்தான்.
வேதவள்ளியோ பாவமாக தன் முகத்தை வைத்துக் கொண்டு நின்று இருந்தாளே தவிர எதுவுமே பேசவில்லை.
தாத்தாவோ, “அவளை ஏன்டா திட்டுற.. நாங்க ரெண்டு பேரும் தான் போயிட்டு வரலாம்னு முடிவு பண்ணோம்”.
“எனக்கு யாரை என்ன சொல்றதுன்னு தெரியல தாத்தா.. இவ தான் இப்படி இருக்கான்னு பார்த்தா.. நீங்க அவளுக்கும் மேல இருக்கீங்க” என்று கோபமாக சாடியவன் அறைக்கு சென்று விட்டான்.
வேதவள்ளியோ பாவமாக தாத்தாவை திரும்பிப் பார்க்க.
தாத்தா தன் கண்களை மூடி திறந்தவர், “அவனுடைய கோபத்தை பத்தி தான் உனக்கு தெரியுமில்ல வள்ளிமா.. அவனால உன்கிட்ட கொஞ்ச நேரத்துக்கு மேல கோபத்தை இழுத்து பிடித்து வைத்திருக்க முடியாது நீ போ எல்லாம் சரியாகிவிடும்”.
அதன் பிறகு சூர்யாவை தொடர்ந்து வேதவள்ளியும் அறைக்குள் நுழைய. அவளின் முகத்தையே பார்க்காமல் சூர்யா குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.
அவனின் நிராகரிப்பு வேத வள்ளிக்கு பெரும் வலியை கொடுத்தது. கண்கள் எல்லாம் கலங்கி போக வருத்தமான முகத்தோடு அவனுக்காக காத்துக்கொண்டு நின்று இருந்தாள்.
குளியலறையில் இருந்து வெளியே வந்தவன் அப்பொழுதும் வேதவள்ளியை கண்டு கொள்ளாமல் லேப்டாப்பில் எதையோ பார்த்துக்கொண்டு சோபாவில் அமர்ந்து விட்டான்.
அவன் அருகில் சென்று அமர்ந்த வேதவள்ளியோ அவனின் கையை கட்டிக்கொண்டு தோளில் தலை சாய்த்தவாறு, “சாரி சூர்யா” என்றாள் நலிந்த குரலில்.
அவ்வளவு தான்.. அதற்கு மேல் அவனின் கோபத்தை இழுத்து பிடித்து வைக்க முடியவில்லை. லேப்டாப்பை ஒதுக்கி வைத்தவன் அவளின் புறம் திரும்பி அவளின் கன்னத்தை தன் கைகளில் தாங்கியவாறு, “இதுக்கு தான் அப்போவே சொன்னேன் அவகிட்ட போகாதனு.. அவ ஒன்னும் நீ நினைக்கிற மாதிரி இல்லடி. ஷி இஸ் சச் அ டேஞ்சரஸ்.. இப்ப பாரு உன்னை எவ்வளவு ஹர்ட் பண்ணி அனுப்பி இருக்கா.. இதனால எனக்கு எவ்வளவு ஹர்ட் ஆகுதுன்னு உனக்கு தெரியுமா” என்றவாறு அவளின் நெற்றியில் அழுத்தமாக இதழ் பதித்தான்.