ராம், “ப்ளீஸ்டா அவங்களுக்கு ஏதோ அவசரம்னு தானே கேக்குறாங்க நாம என்ன சும்மாவா குடுக்க போறோம் அதான் அக்ரிமென்ட் போட போறோம் இல்ல அப்புறம் என்ன பிரச்சனை”.
தனக்கு எதிரே இருந்த டேபிளின் மீது கையை குற்றியவாறு அவர்களையே துளைத்தெடுக்கும் பார்வை பார்த்தவன், “யாரு என்னன்னே தெரியாத ஒருத்தவங்களுக்கு வேலைக்கு சேர்ந்த ஒரே வாரத்தில் எந்த பைத்தியக்காரனும் 10 லட்சம் பணத்தை தூக்கி கொடுக்க மாட்டான். என்னை பாத்தா உங்க ரெண்டு பேருக்கும் என்ன பைத்தியக்காரன் மாதிரியா தெரியுது?” என்று ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தம் கொடுத்து நிறுத்தி நிதானமாக பேசினான்.
அவனின் வார்த்தையில் வேதவள்ளிக்கு ராமிடம் பேசிய பிறகு எழுந்த நம்பிக்கையும் துடைத்து எடுத்தார் போல் ஆகிவிட்டது. நிச்சயம் இவன் பணம் கொடுக்க மாட்டான் என்று முடிவு செய்துவிட்டாள்.
“என்னடா நீ இப்படி பண்ற.. ப்ளீஸ் டா நம்ம கிட்ட வொர்க் பண்றவங்க நம்ம கிட்ட ஹெல்ப் கேக்காம வேற யார் கிட்ட கேட்க முடியும்”.
“இந்த பொண்ண யாரு என்னனே எனக்கு தெரியாது. எதை நம்பி என்னை பத்து லட்சம் பணத்தை தூக்கி தர சொல்ற.. ஒரு வேளை இவ பணத்தை வாங்கிட்டு வேற எங்கேயாவது ஓடி போயிட்டானா எங்க போய் இவளை தேடுறது”.
“சரிடா இப்போ உனக்கு என்ன பிரச்சனை.. வேதவள்ளிக்கு நான் அசுரன்ஸ் தரேன் போதுமா”.
“ஓ! ரெண்டு பேரும் ரொம்ப க்ளோஸ் ஆகிட்டீங்க போலருக்கே.. சார் அவங்களுக்காக அசுரன்ஸ் தர அளவுக்கு வந்துட்டீங்க” என்றவனின் பார்வை இப்பொழுது ராமை துளைத்தெடுத்தது.
அவனின் பார்வையில் தடுமாறியவன், “அது.. ஒன்னும் இல்லடா.. நம்ப ஆஃபிஸ் ஸ்டாப் ஒரு கஷ்டம்னு வந்து நிற்கும் போது நாம தானே ஹெல்ப் பண்ணனும்”.
“வாட் எவர்.. உனக்காக தரேன்” என்றவன் வேதவள்ளியை நோக்கி சொடக்கிடவும் அவளும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“லுக்! என் பிரண்ட் இவ்வளவு தூரம் கேட்கிறதால் தான் உனக்கு நான் பணம் தர சம்மதிக்கிறேன். பணத்தை வாங்கினதும் எங்களுக்கு தெரியாமல் எங்கேயாவது ஓடி போயிடலாம்னு மட்டும் நினைக்காத.. அண்ட் ஒன் மோர் திங்.. சும்மா ஒன்னும் இந்த பணத்தை நான் உனக்கு தர மாட்டேன். இந்த பத்து லட்சம் பணத்துக்கு நீ எத்தனை இயர்ஸ் எங்க கம்பெனியில் ஒர்க் பண்ணனும்னு காண்ட்ராக்ட் ரெடி பண்ணி கொடுக்கிறேன் அதுல சைன் பண்ணிட்டு பணத்தை வாங்கிக்கோ”.
வேதவள்ளிக்கோ போன நம்பிக்கை இப்பொழுது தான் மீண்டு வந்தது.
‘எவ்வளவு திட்டினாலும் பரவாயில்லை பணம் தருகிறேன் என்று ஒப்புக்கொண்டானே இதுவே போதும்’ என்று எண்ணியவள் கண்கள் கலங்க அவனின் முன்னே கையெடுத்து கும்பிட்டு, “ரொம்ப தேங்க்ஸ் சார்” என்றாள் நெகிழ்ச்சியாக.
“இந்த ட்ராமாவை எல்லாம் இந்த முட்டாள் வேணும்னா நம்புவான் என்கிட்ட ட்ரை பண்ணாத யூ மே கெட் அவுட் நவ்!”.
அவனின் திட்டுதலும் அவமதிப்பான பேச்சும் வேதவள்ளியின் காதில் ஏறவே இல்லை. அவன் பணம் தருகிறேன் என்று ஒப்புக்கொண்டதே அவளுக்கு அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது.
கண்களில் ஆனந்த கண்ணீரோடு அவள் சூர்யாவின் அறையில் இருந்து வெளிவரவும்.. அவளுக்கு அழைத்து இருந்தாள் சீதா.
அணைப்பை ஏற்றவள், “சொல்லுடி”.
“என்ன டி குரலே ஒரு மாதிரி இருக்கு அங்க ஏதாவது பிரச்சனையா?”.
“ச்ச.. ச்ச.. அப்படியெல்லாம் இல்ல சீதா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். சூரியா சார் பணம் கொடுக்க சம்மதிச்சிட்டார்”.
“அப்படியா! ரொம்ப சந்தோஷம்! முதல்ல அந்த பணத்தை வாங்கிட்டு போய் அந்த வீணா போனவனுங்க முகத்திலேயே விட்டு எறிஞ்சிட்டு வா”.
“சரி டி இன்னைக்கே போய் கொடுத்துட்டு வரேன்” என்று அழைப்பை அவள் துண்டிக்க போகவும்.
“ஒரு நிமிஷம் போனை வச்சிடாத.. நீ தனியா போக வேண்டாம் நீ போகும் போது சொல்லு நானும் உன் கூட வரேன்”.
“ஏன் டி அதெல்லாம் நான் பாத்துக்கிறேன் உனக்கு எதுக்கு வீண் சிரமம்”.
“எனக்கு ஒரு சிரமமும் இல்லை. நான் வரேன்னு சொல்றேன்ல போகும் போது கால் பண்ணு” என்று அவள் அணைப்பை துண்டித்து விட்டாள்.
இந்த இடைப்பட்ட காலத்தில் சீதாவும் வேதவள்ளியும் நன்கு நெருங்கி விட்டனர்.
வேதவள்ளி அறையை விட்டு வெளியேறியதும் ராமை சந்தேக பார்வை பார்த்த சூர்யா, “என்னடா அந்த பொண்ணுக்காக சார் அசுரன்ஸ் எல்லாம் கொடுக்குறீங்க.. என்ன நினைச்சுட்டு இருக்க உன் மனசுல.. அவ உன்னை அடிச்சதெல்லாம் மறந்துட்டியா என்ன”.
“டேய் ஏன்டா நீ வேற.. இன்னும் நீ அதை விடலையா.. பாவம்டா அந்த பொண்ணு பிரண்ட்லியா தான் ஹெல்ப் பண்ணலாம்னு நினைச்சேன்”.
“ஓ! அப்படியா.. பார்த்தா அப்படி தெரியலையே” என்றவனின் பார்வையின் வீரியத்தை தாங்க முடியாமல், “நிஜமா தான் டா.. நிஜமா தான் சொல்றேன். நான் ஏன் உன்கிட்ட பொய் சொல்ல போறேன்”.
“ஆமா அந்த பொண்ணு உன்னை அண்ணானு சொன்னதும் சார் தங்கச்சினு கமிட் பண்ணிட்டீங்களோ?”.
அவனின் வார்த்தையில் அதிர்ந்தவன், “அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.. திரும்ப அண்ணன் தங்கச்சினு எல்லாம் பேசாதே” என்றான் பட்டென்று.
ராமையே குறுகுறுவென பார்த்தவன், “ஏன் அப்படி சொன்னா என்ன.. அந்த பொண்ணு உன்னை அண்ணானு தான கூப்பிடுது”.
“அதெல்லாம் அப்போ.. இப்போ அந்த பொண்ணு என்னை அண்ணானு எல்லாம் கூப்பிடல சார்னு தான் கூப்பிடுறா”.
அவனின் வார்த்தையில் தன் தலையை இரு பக்கமும் ஆட்டிய சூர்யா, “இல்லடா.. நீ கொஞ்சம் கூட சரியில்லை. பார்த்து கேர்ஃபுல்லா இருந்துக்கோ பொண்ணுங்களுக்கெல்லாம் பணம் தான் முக்கியம். ஒருவேளை இவளும் பணத்துக்காக தான் உன் பின்னாடி சுத்துறாளோ என்னவோ.. இப்ப பாரு பத்து லட்சம் பணம் கிடைத்ததும் இங்கிருந்து எஸ்கேப் ஆக போறா.. அசுரன்ஸ் கொடுத்த பாவத்துக்கு சார் தான் என்கிட்ட நல்லா வாங்கி கட்ட போறீங்க” என்றான் எச்சரிக்கும் குரலில்.
“வள்ளி அப்படியெல்லாம் கிடையாது ரொம்ப நல்ல பொண்ணு” என்ற வார்த்தைகள் சடுதியில் வந்து விழுந்தது.
“ஓ! அவ்வளவு நம்பிக்கையா அந்த பொண்ணு மேல.. நீ சரி இல்ல என்னமோ தப்பா இருக்கு”.
“சரி நான் போய் அக்ரீமெண்ட் காப்பியை ரெடி பண்ணி எடுத்துட்டு வரேன்” என்றவன் அதற்கு மேல் சூர்யாவின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் அவசரமாக அறையை விட்டு வெளியேறினான்.
சற்று நேரத்திலேயே அவன் நீட்டிய அக்ரீமெண்டில் கையொப்பமிட்டவள் சூர்யாவிடம் இருந்து பத்து லட்சம் பணத்தையும் பெற்றுக் கொண்டு நாராயண மூர்த்தியையும், சடகோப்பனையும் காண சீதாவுடன் விரைந்தாள்.
சடகோப்பனின் வீட்டில் தான் அவர்களை சந்திப்பதாக இருந்தது.
இருவரும் சோபாவில் அமர்ந்திருக்க.. அவர்களுக்கு எதிரே இருந்த டீப்பாயின் மேல் 10 லட்சம் பணத்தை வைத்தவள், “உங்ககிட்ட வாங்குன பத்து லட்சம் பணத்தை கொடுத்துட்டேன். இதுக்கு மேல உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தயவு செஞ்சு இனி என்னை தொந்தரவு பண்ணாதீங்க”.
சற்றும் எந்த ஒரு நெருடலும் இன்றி தன் எதிரே நின்றிருந்த வேதவள்ளியையும், சீதாவையும் தலை முதல் பாதம் வரை பார்வையாலேயே வருடினர் அவ்விருவரும்.
சீதாவிற்கும் கூட அவர்களின் பார்வை அருவருப்பை கொடுத்தது.
வேதவள்ளியின் கையை அழுத்தமாக பற்றியவள், “பணத்தை கொடுத்தாச்சுல்ல வா கிளம்பலாம்” என்று அவள் காதில் கிசுகிசுக்கவும்.
“இந்த குட்டி யாரு?” என்றான் சடகோபன் சீதாவை ரசனை பார்வை பார்த்தவாறு.
“குட்டி கிட்டினு பேசுனீங்க மரியாதை கெட்டுடும். உங்ககிட்ட வாங்குன பணத்தை அவ கொடுத்துட்டா இதுக்கு அப்புறம் உங்களுக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதுக்கு மேல அவளுக்கு மிரட்டுற வேலையெல்லாம் வச்சுக்காதீங்க” என்று கோபமாக பொரிந்தவள்.
“வாடி போகலாம்” என்று வேதவள்ளியின் கையையும் பற்றி கொண்டு அங்கிருந்து விறுவிறுவென வெளியேறினாள்.
செல்லும் இருவரையும் சடகோபன் தன் நாடியை நீவி விட்டவாறு பார்த்துக் கொண்டிருக்க.
நாராயணமூர்த்தி, “என்ன ஒன்னும் செய்யாமல் அப்படியே விட்டுட்ட.. இவளால் பணத்தை ரெடி பண்ண முடியாதுன்னு நினைச்சேன். ச்ச.. எப்படியோ பணத்தை ரெடி பண்ணி கொண்டு வந்துட்டா.. இதுக்கு தான் நான் அப்போவே சொன்னேன் அவளுக்கு ஒரு மாசம் டைம் எல்லாம் கொடுக்காத உடனே நம்ப வேலையை பார்க்கலாம்னு.. நீ தான் இவளால் என்ன பண்ண முடியும்னு அசால்டா விட்டுட்ட.. இப்ப பாரு பணத்தை எப்படி ரெடி பண்ணானு தெரியல”.
“ம்ம்.. நான் கூட இவளை சாதாரணமா நினைச்சுட்டேன். பரவாயில்ல சொன்ன நேரத்துக்குள்ள பணத்தை ரெடி பண்ணி கொடுத்துட்டாளே” என்று அவளை மெச்சியவாறு பேசவும்.
அவரின் தோளில் தட்டிய சடகோபன், “ஏன் மூர்த்தி அவசரப்படுற.. முதலிலேயே கிடைச்சிருந்தா ஒருத்தி தான். இப்போ ரெண்டு பேரு.. அந்த பொண்ணு கூட எப்ப பார்த்தாலும் அழுது வடிவா.. ஆனா அவ கூட இருக்குற குட்டி எப்படி பட்டு பட்டுன்னு பேசிட்டு போறா இல்ல..”
“ம்ம் ஆமா.. ஆனா இனி நாம என்ன செய்ய முடியும். அவ தான் பணத்தை கொடுத்துட்டாளே”.
“பணத்தை கொடுத்துட்டா எல்லாம் முடிஞ்சு போச்சா.. நமக்கு வேற ஏதாவது வழி கிடைக்கும். இந்த விஷயத்தை என்கிட்ட விடு நான் பாத்துக்குறேன்”.
அதன் பிறகு இருவரும் மது பாட்டிலை எடுத்து தங்கள் வருத்தம் தீர மூக்கு முட்ட அருந்தினர்.
சடகோப்பனின் மனதிற்குள் வேதவள்ளியை விட இப்பொழுது சீதாவை தன் வசப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தான் மேலெழுந்தது.
இக்கயவர்களின் எண்ணம் புரியாத அவ்விரு பேதைகளும் பிரச்சனை முடிந்து விட்டது என்று எண்ணி மகிழ்ச்சியோடு திரும்பினர்.
பாவம், பிரச்சனையே இனி தான் என்பதை இப்பொழுது அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.