“ச்சீ.. பொறுக்கிங்க.. எப்படி பார்க்குறாங்கனு பார்த்தியா.. இவனுங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்ல வேதவள்ளி. அவங்க வயசு என்ன நம்ம வயசு என்ன.. நம்ம அப்பா வயசு இருக்கும் அவனுங்க ரெண்டு பேருக்கும்.. கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம நம்மளை எப்படி பார்க்குறாங்க.. எனக்கு இப்பவும் அவனுங்க பார்த்ததை நினைச்சாலே அருவருப்பா இருக்கு” என்று தன் முகத்தை அஷ்ட கோணலாக சுழித்தாள்.
சீதா கோபமாக அவர்களை திட்டிக் கொண்டிருக்க..
வேதவள்ளியோ புன்னகைத்துக் கொண்டு அவளுடன் நடந்தாள்.
“என்ன டி அவங்க நம்மகிட்ட இப்படி நடந்து இருக்காங்க உனக்கு கொஞ்சம் கூட கோபமே வரலையா.. இப்படி லூசு மாதிரி சிரிச்சுகிட்டு வர”.
“எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு சீதா”.
“எதுக்கு அவனுங்க ரெண்டு பேரும் நம்மள அப்படி பார்த்ததுக்கா?”.
“ச்ச.. ச்ச.. நான் அதை சொல்லல டி. இந்த பிரச்சனையை எப்படி முடிக்க போறோம்னு தெரியாம தினம் தினம் பயத்துலேயே செத்துக்கிட்டு இருந்தேன். நைட்டு படுத்தா தூக்கமே வராது.. மனசு முழுக்க இவனுங்களை நினைச்சு பயமாவே இருந்துச்சு. இப்போ தான் சந்தோஷமா இருக்கு ரொம்ப நாளைக்கு பிறகு நிம்மதியா தூங்க போறேன் டி” என்றாள் கண் கலங்க.
அவளின் நிலையிலிருந்து சிந்தித்த சீதாவிற்கும் மகிழ்ச்சியாக தான் இருந்தது.
அவளின் தோளை சுற்றி கையை போட்டவள், “சரி சரி ஃபீல் பண்ணாத.. இனிமே எந்த பிரச்சனையும் இல்லை நீ சந்தோஷமா இருக்கலாம். அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் இனிமேலாவது ஏதாவது பிரச்சனைனா வாயை திறந்து சொல்லு எல்லாத்தையும் உனக்குள்ளவே வச்சுக்காத”.
அவளுக்கு ஆமோதிப்பாக தலையசைத்தவள் தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு, “நிம்மதியா தூங்கி பல மாசம் ஆச்சு சீதா.. அம்மாவுக்கு எப்ப உடம்பு முடியாம போச்சோ அப்போதிலிருந்தே என் தூக்கம் போச்சு.. எங்க அம்மா என்னை விட்டுட்டு போயிடுவாங்களோனு பயந்துகிட்டே இருந்தேன்.
கடைசில அம்மா நிஜமாவே என்னை விட்டு போனதும் இவனுங்க கிட்ட மாட்டிகிட்டு தினமும் பயத்திலேயே செத்துகிட்டு இருந்தேன் தெரியுமா.. கண்ணை மூடினாலே பயம் தான் முன்னாடி வந்து நின்னுச்சு.
இப்போ எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்குனு தெரியுமா.. ஏதோ என் அம்மா அப்பா இரண்டு பேரும் எனக்கு திரும்ப கிடைச்ச போல இருக்கு டி” என்று உணர்வு பூர்வமாக அவள் நெகிழ்ந்து போய் பேசவும்.
அவளுக்காக உண்மையிலேயே மகிழ்ந்த சீதா, “இதுக்கு எல்லாத்துக்கும் நீ உன் சூரியா சாருக்கு தான் நன்றி சொல்லணும். அவர் மட்டும் ஹெல்ப் பண்ணலைனா இது எதுவுமே நடந்திருக்காது”.
“ஆமா டி சூரியா சார் மட்டும் ஹெல்ப் பண்ணலைனா என் நிலைமை என்ன ஆகியிருக்கும்னு என்னால் நினைச்சு கூட பாக்க முடியல”.
“அவர் ரொம்ப நல்லவர்ல”.
“நல்லவர் தான்.. ஆனா கொஞ்சம் சிடு மூஞ்சி.. இந்த பணத்தை கொடுக்குறதுக்கு கூட அவ்வளவு பேச்சு பேசினாரு.. ராமண்ணா மட்டும் எனக்கு ஹெல்ப் பண்ணலைனா கண்டிப்பா எனக்கு அவர் இந்த பணத்தை கொடுத்து இருக்கவே மாட்டார். எனக்காக ராமண்ணா அசுரன்ஸ் கொடுத்து பணத்தை வாங்கி கொடுத்து இருக்காங்க”.
“என்னடி சொல்ற.. நீ வேலைக்கு சேர்ந்தே ஒரு வாரம் தான் ஆகுது. நீ யாரு என்னன்னே அவருக்கு தெரியாது உனக்காக அவர் அசுரன்ஸ் கொடுத்து பணம் வாங்கி கொடுத்தாரா?”.
“ஆமா டி ரொம்ப நல்லவர்.. நான் தான் அவரை பற்றி சரியா புரியாம முதல் நாள் அடிச்சிட்டேன். அதை நினைச்சா எனக்கு இப்பவும் ரொம்ப கில்ட்டியா இருக்கு”.
“சரி விடு.. எது எப்படி ஆனாலும் இப்போ உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல எல்லாம் தான் சரி ஆயிடுச்சே”.
“ஆமா ராமண்ணாவுக்கும் சூர்யா சாருக்கும் நான் நிறையவே கடமை பட்டிருக்கிறேன்”.
“அது சரி எத்தனை இயர்ஸ் அக்ரிமெண்ட் சைன் பண்ணி இருக்க?”.
“அதை அவங்க மென்ஷன் பண்ணலடி அவங்க சொல்ற வரைக்கும்னு போட்டு இருந்துச்சு”.
“லூசாடி நீ.. அவங்க சொல்ற வரைக்கும்னா லைப் லாங் அவங்களுக்கு கீழவே சம்பளம் இல்லாம வேலை பார்க்க சொன்னாங்கனா என்ன பண்ணுவ?”.
“எனக்கு வேற வழி தெரியல சீதா.. பாத்த இல்ல நாம பணத்தை கொடுத்து இந்த பிரச்சனையை முடிக்க போயிருக்கோம் இப்போவே இப்படி பாக்குறாங்க.. அப்ப தனியா என்கிட்ட எப்படி எல்லாம் நடந்து இருப்பாங்கன்னு கொஞ்சம் யோசிச்சு பாரு.. எனக்கு இவங்க கிட்ட இருந்து எஸ்கேப் ஆகணும். காலம் முழுக்க சம்பளமே இல்லாம வேலை செய்ய சொன்னாலும் எனக்கு பரவாயில்ல”.
“சரி விடு கொஞ்சம் நாள் கழிச்சு இதை பத்தி உன் ஆபீஸ்ல பேசு”.
அவளுக்கு சம்மதமாக தலையசைத்தவள் வெகு நாள் கழித்து மன நிறைவாக இன்று தான் உணவை உண்டாள்.
மறுநாள் வழக்கம் போல் வேலைக்கு கிளம்பி சென்றவளை எதிர் நோக்கிய ராம், “என்ன வேதவள்ளி பணத்தை கொடுத்துட்டீங்களா?”.
“கொடுத்துட்டேன் சார்.. உங்களுக்கு தான் நான் ரொம்ப நன்றி சொல்லணும். நீங்களும் சூர்யா சார் மட்டும் ஹெல்ப் பண்ணலைனா என் நிலைமையை என்னால் யோசிச்சு கூட பாக்க முடியல”.
ராம் சற்று தயக்கத்தோடு, “நான் கேட்கிறேன்னு தப்பா நினைச்சுக்காத வேதவள்ளி அப்படி என்ன பிரச்சனை உனக்கு.. எதுக்காக இவ்வளவு பெரிய அமௌன்ட் வாங்கிட்டு போன.. உனக்கு விருப்பம் இருந்தா என்கிட்ட சொல்லு இல்லைனா வேண்டாம்”.
“ஐயோ! என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க.. எனக்காக இவ்வளவு பெரிய உதவி பண்ணி இருக்கீங்க உங்க கிட்ட இதை சொல்வதில் என்ன இருக்கு” என்றவள்.
தன் தாய் தந்தையின் இறப்பு முதல் நேற்று அவ்விருவருக்கும் பணத்தை திருப்பி கொடுத்தது வரை மொத்தத்தையும் கூறி முடித்தாள்.
இவள் கூறி முடித்ததும் கோபமாக தன் கையை இறுக்கி மூடியவன், “என்ன சொல்ற வேதவள்ளி இப்படியெல்லாம் கூடவா நடந்துக்குறாங்க”.
“ஆமா சார் அவரை நான் என்னுடைய அப்பா மாதிரி பார்த்தேன். அதனால் அவர் மேல சந்தேகப்பட தோணல”.
“சரி பணத்தை கொடுத்துட்ட இல்ல.. இனி அவங்க பக்கமே போகாத ரொம்ப ஏதாவது அவங்க பிரச்சனை பண்ணாங்கனா தயங்காம என்கிட்ட சொல்லு”.
“சரி சார்” என்றவளுக்கு இன்று ஏனோ மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
தனக்கு என்று யாரும் இல்லை என்று எண்ணியவளுக்கு உறுதுணையாய் வந்து சேர்ந்தாள் சீதா..
இப்பொழுது ராமும் அவளுக்கு ஆதரவாக பேசவும் அவளுக்குள் அத்தனை மகிழ்ச்சி.
அப்பொழுது தான் அலுவலகத்தினுள் நுழைந்த சூர்யா இவர்கள் இருவரையும் உறுத்து விழித்துக் கொண்டே தன் அறைக்கு சென்றான். அடுத்த நொடியே ராமின் செல்பேசி சிணுங்கியது.
“சூர்யா தான் கூப்பிடுறான் நான் போய் என்னன்னு பாத்துட்டு வரேன்” என்றவாறு லேசாக அவனின் அறை கதவை தட்டிவிட்டு இவன் உள் நுழையவும்.
“என்ன சார் ஆபீஸ்ல வாங்குற சம்பளத்துக்கு கொஞ்சம் வேலையும் பார்க்கலாமே.. எப்ப பாத்தாலும் கடலை போட்டுக்கிட்டே இருந்தா எப்படி” என்றவனின் நக்கல் குரலில் தன் நெற்றியை தேய்த்த ராம், “டேய் என்ன பாத்தா கடலை போடுறவன் போலவா இருக்கு?”.
“எனக்கு அப்படி தான் தெரியுது. சரி உன் விஷயத்தை பத்தி எனக்கு என்ன.. நாளைக்கு ஈவினிங் குபேரன் சார் டின்னருக்கு இன்வைட் பண்ணி இருக்காரு ஞாபகம் இருக்கு இல்ல”.
“அதுக்கு நாம கண்டிப்பா போகணுமாடா?”.
“ஏன்?”.
“இல்ல டா அங்க நிறைய பேர் வருவாங்க” என்று இழுத்தவனை பார்த்தவன், “அவங்க என்ன நமக்கு மட்டுமா ஸ்பெஷல் டின்னர் கொடுக்குறேன்னு சொல்லி இருக்காங்க.. இது பிசினஸ் மீட்டிங்.. அங்க வர எல்லா கம்பெனிஸோடவும் அவங்களுக்கு டை அப் இருக்கு. அது மட்டும் இல்ல, நமக்கும் குபேரன் சாருக்கும் இடையில் இருக்க அக்ரீமெண்ட் எக்ஸ்பயரி ஆக போகுது. அதை ரினிவல் பண்ணவும் தான் நம்ம நாளைக்கு போக போறோம்” என்றான் அழுத்தம் திருத்தமாக.
“அதுக்கு இல்லடா அங்க அந்த பிரேம் வருவான். அதான் யோசிக்கிறேன்.. நாம அங்க கண்டிப்பா போய் தான் ஆகணுமா”.
“லுக் ராம்! நம்ம போறது பிசினஸ் சம்பந்தப்பட்ட மீட்டிங்.. இதுக்கு நிறைய பேரு வருவாங்க தான் அதையெல்லாம் பார்த்தால் சரி வருமா.. நாம நாளைக்கு போறோம் அவ்வளவு தான் பி ரெடி.. அக்ரீமெண்ட் ரெனிவல் பண்றதுக்கு எல்லாம் ரெடி பண்ணு”.
அவன் கூறியதை கேட்டு பெருமூச்சை வெளியேற்றியவன், “ஓகே” என்று விட்டு வெளியேறினான்.
அவன் சென்ற பிறகு ஓரிரு நொடி சூரிய பிரசாத்தின் முகம் இறுக்கத்தை தத்தெடுத்துக் கொண்டது.
சூர்யா கூறியது போலவே ராம் அனைத்தையும் அன்றே தயார் செய்து விட்டான்.
மறுநாள் மாலை 6:00 மணிக்கு மேல் கிளம்புவதாக இருந்தது.
ஐந்து மணிக்கு ராமை அழைத்த சூர்யா, “என்னடா எல்லாம் ரெடி தான ஒன்னும் பிரச்சனை இல்லையே?”.
“நோ வொரிஸ் டா எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன். எல்லாம் பர்ஃபெக்ட்டா இருக்கு” என்னும் பொழுதே அவனின் செல்பேசி சிணுங்கியது.
“அம்மா தான்டா கால் பண்றாங்க”.
“எடுத்து பேசு” என்ற சூர்யாவும் கையில் இருந்த பைலை பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்ன ஆச்சு மா.. எதுக்கு இப்போ அழறீங்க?”.
எதிர் முனையில் என்ன கூறப்பட்டதோ, “அப்படியா! எப்போ?” என்று அவனின் குரல் பதட்டத்தை தத்தெடுத்துக் கொண்டது.
அவனின் குரல் மாறுதலில் அவனை நிமிர்ந்து பார்த்தான் சூர்யா.
“சரி.. சரி மா.. நீங்க ஒன்னும் பயப்படாதீங்க நான் உடனே வரேன்” என்றவன் அவசரமாக அழைப்பை அணைக்கவும்.
“என்னாச்சு ராம் எனி ப்ராப்ளம்?”.
“சூர்யா அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் இப்ப தான் ஹாஸ்பிடல் கூப்பிட்டு போயிட்டு இருக்காங்களாம். அம்மா போன் பண்ணி அழுறாங்கடா” என்றவனின் வார்த்தைகள் அத்தனை பதட்டமாக வெளிவந்தது.
“ஓகே.. ஓகே.. யூ டோன்ட் வொரி.. அப்பாவுக்கு எதுவும் ஆகாது எவ்ரிதிங் வில் பி ஆல்ரைட் நீ கிளம்பு நான் பாத்துக்கிறேன்”.
“சரிடா நான் எல்லா பைலையும் வேதவள்ளி கிட்ட கொடுக்கிறேன். அவளுக்கு எல்லா டீடைல்ஸும் தெரியும் அவளை உன்னோட கூட்டிட்டு போ” என்றான் அவசர குரலில்.
“சரிடா நீ போய் அப்பாவுக்கு என்ன ஆச்சுன்னு பாரு” என்று அவனை அனுப்பி வைத்தவன் வேதவள்ளியுடன் அவ்விடத்தை நோக்கி புறப்பட்டான்.
வேண்டா வெறுப்பாக அவளுடன் கிளம்
பி செல்பவன் அவனே நினைத்தாலும் பிரிக்க முடியாத பிணைப்போடு திரும்பி வரப்போகிறான் என்பதை அப்பொழுது அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை.