திருவெற்றியூர் மாரியம்மன் கோயிலின் திடலில் ஊர் மக்கள் எல்லோரும் கூடி இருந்தனர். அவர்கள் அவரவர் குடும்பமாக சேர்ந்து வான வேடிக்கை பார்ப்பதற்கு ஆவலாக உட்கார்ந்திருந்தனர். மலரை நாடும் வண்டுகளைப் போல பெண்களை ஆண்கள் சுற்றிச் சுற்றி திரிந்தார்கள்.
சங்கரநாதனும் ரேணுகாவும் வினிதாவுடனும் தமிழ்ச்செல்வனுடனும் ஒரு இடத்தில் அமர்ந்திருந்தார்கள். கொஞ்ச நேரம் அவர்களோடு இருந்த தமிழ்ச்செல்வன் நண்பர்கள் அழைக்கவும் அவர்களுடன் சென்று விட்டான். வினிதாவும் அவள் தோழிகளுடன் செல்ல வேண்டும் என்று கேட்க, சங்கர நாதனோ “இருமா இந்த நேரத்துல எங்க சுத்தப் போறீங்க…. எங்கூட உட்கார்ந்து இரு….”
“அப்பா ப்ளீஸ் பா…. நான் போயிட்டு வரேன்… இங்க இருந்து போரடிக்குது….” என்றாள் வினிதா. “விடுங்க பாவம் அவ…. பிரண்ட்ஸ் கூட ஜாலியா இருந்துட்டு வரட்டுமே….” என்றார் ரேணுகா. உடனே சங்கர் நாதனும், “சரி… சரி ஆனால் பத்திரமா இருக்கணும்…” என்றார்.
அவளும், “சரிப்பா…” என்று சொல்லிவிட்டு தோழிகளுடன் இணைந்து கொண்டாள். வினிதாவும் அவளது தோழிகளும் சேர்ந்து ஒரு இடத்தில் இருந்தனர். அவரவர் கொண்டு வந்திருந்த கொறிக்கும் உணவை கொறித்துக் கொண்டு பேசி சிரித்து கொண்டிருந்தனர். அவர்களுடன் பேசிச் சிரித்துக் கொண்டிருந்த வினிதா திடீரென்று பின்னால் திரும்பி பார்த்தாள். பின்னர் திரும்பவும் தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்தாள். கொஞ்ச நேரத்தில் திரும்பவும் தனக்கு பின்னால் திரும்பிப் பார்த்தாள்.
இவள் இப்படியாக மூன்று முறை நடந்து கொள்ள, அவளது தோழி ஒருத்தி, “வினிதா என்னடி சும்மா சும்மா பின்னாலே திரும்பி பாத்துட்டு இருக்கே…. யாராவது இருக்காங்களா….?”
“யாராவது என்னை யாராவது அவளோட மாமா இருக்காரான்னு கேளுங்க….” என்றாள் இன்னொருத்தி.
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லைடி…. யாரோ பார்க்குற மாதிரி இருக்கு…. அதான் திரும்பி பார்த்தேன்… அங்க யாருமே இல்லைடி….”
“என்ன யாரோ பாக்குற மாதிரி இருக்கா…. இரு நான் பார்க்கிறேன்…” என்று வினிதாவின் தோழி ஒருத்தி எட்டிப் பார்த்தாள். “அங்க யாரையுமே காலையே வினி…” என்றார்கள். அவளது மற்றைய தோழிகளும் பின்னால் எட்டிப் பார்த்துவிட்டு, “சரி சரி வாங்க நம்ம வந்த வேலையை பார்க்கலாம்….” என்றவர்கள் அங்கே நடந்து கொண்டிருக்கும் வானவேடிக்கைகளை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர்.
இருந்தாலும் வினிதாவிற்கு யாரோ தன்னை குறுகுறு என்று பார்ப்பதை போல இருந்தது. மீண்டும் திரும்பி பார்த்தாள் ஆனால் யாரையும் காணவில்லை. ‘அட போங்கடா…’ என்றவள் வான வேடிக்கையை ரசிக்கத் தொடங்கி விட்டாள்.
அங்கிருந்த பெரிய அரசமரம் ஒன்றில் மறைந்து நின்றிருந்த வெற்றிமாறனின் வெளியே வந்தான். அவனைப் பார்த்த நண்பர்கள், “ஏன்டா மாப்ள…. நீ இப்ப என்ன பண்ணிட்டு இருந்த….?”
“என்னடா இப்படி கேக்குற…. நான் வான வேடிக்கை பார்த்துட்டு இருந்தேன்….”
“ஏது நீ வானவேடிக்கையா பார்த்தே… நம்பிட்டேன் மச்சான்….”
“நெஜமா நான் வானவேடிக்கை தான் பார்த்தேன்….”
“நீ பார்த்தது வான வேடிக்கையையா இல்லை அந்த வினிதா பட்டாசையா என்று எங்களுக்கு தெரியும் மச்சான்….”
“ஏய் நாயே, அவளை ஏன்டா நான் பார்க்க போறேன்…. நான் வானத்தில் தெரியும் வான வேடிக்கையைத் தான் பார்த்தேன்….”
“அப்போ கடைசி வரைக்கும் நீ எங்ககிட்ட உண்மைய சொல்ல மாட்டேல்ல….”
“மச்சான் அவளோதானா என் மேல நீங்க வச்சிருக்கிற நம்பிக்கையா… நட்புனா என்னனு தெரியுமா…? இந்த வெற்றினா யார்னு தெரியுமா….?”
“அடேய் போதும்டா… போதும்… நாங்களும் இந்த படத்தை எத்தனையோ தடவை பாத்துட்டோம்…. நீ யாருன்னும் எங்களுக்கு தெரியும்… நாங்க யாருன்னும் உனக்குத் தெரியும் மூடிகிட்டு வா….” என்றனர்.
குமுதாவும் அவள் தோழிகளுடன். உட்கார்ந்திருந்தாள். அவர்களுடன் பேசிக்கொண்டு வானவேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாலும் அவளது கயல்விழி கண்களோ அடிக்கடி யாரையோ தேடின. ‘இவரு இன்னைக்கு வரலையா…? எவ்ளோ ஆசையா இந்த தாவணியை கட்டிக்கிட்டு வந்தேன்…. எல்லாம் வீணா போச்சு ம்கூகூம்….” என்று மனதோடு பேசிக் கொண்டிருந்தாள்.
அப்போது அவனது தோழி, “குமுதா…. குமுதா…. அடியே குமுதா….” என்ற கத்தி அவளது கையை அசைத்தாள். “ஏன்டி கைய போட்டா அசைக்கிற… இங்க தானே உட்கார்ந்து இருக்கிறேன்…”
“ஆமா தாயி… நீங்க இங்கதான் உட்கார்ந்து இருக்கிறீங்க… ஆனால் உங்க யோசனை இந்த உலகம் ஃபுல்லா சுத்தி வருது….”
“என்னடி சொல்ற….?”
“என்ன சொல்றனா… என்னைப் பார்த்தா உனக்கு லூசு மாதிரி தெரியுதா….?”
“ஏய் எதுக்குடி இப்போ கோவப்படுற… என்ன ஆச்சு டி….?”
“என்ன நொன்னடி ஆச்சின்ற… எத்தனை தடவை கத்துறது குமுதா… குமுதா…. குமுதான்னு… ஏதோ யோசனையில் இருக்கிற மாதிரி தெரிஞ்சுது… அதுதான் கைய புடிச்சு ஆட்டினேன்….”
“உட்கார்ந்திருந்து உட்கார்ந்திருந்து சோம்பலா இருக்கு… வாங்க ஒரு ரவுண்டு போயிட்டு வரலாம்…” என்றாள்.
உடனே குமுதாவும், “நானும் வரேன்….” என்றாள். பின்னர் எல்லாரும் அந்த திடலை சுற்றிவர தொடங்கினார்கள். தோழிகளுடன் பேசியபடி நடந்து கொண்டிருந்தாலும் குமுதாவின் கண்கள் அலைமோதிக்கொண்டே இருந்தன.
இறுதியில் அவளது கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. ஆம் அவள் இத்தனை நேரம் யாரைப் பார்க்க வேண்டும் என்று துடியாய் துடித்துக் கொண்டாளோ, அவன் அங்கே நின்றிருந்தான். அவனைப் பார்த்ததும் அவன் அருகில் செல்ல கால்கள் துடித்தன. ஆனால் ‘என்ன செய்வது மனம் கவர்ந்தவனை சந்திக்க இந்த இடம் பொருத்தம் அல்லவே…’ என்று நினைத்துக் கொண்டாள்.
ஆனால் பார்வையை மட்டும் அவனை விட்டு விலக்கவில்லை. அவனும் பார்வையாலேயே அவளை அழகா இருப்பதாக சொல்லி காற்றின் மூலம் ஒரு முத்தத்தை அனுப்பி வைத்தான். அதில் அவளது முகமோ வெட்கத்தில் செந்தாமரையாக மாறியது.
“ஏய் குமுதா… என்னடி மெல்ல மெல்ல நடந்துட்டு இருக்கிற… இங்க என்ன அழகு ராணி போட்டியா நடக்குது….? வா சீக்கிரம்…” என்று அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்றனர்.
அவனிடம் கண்களாலே விடைபெற்றாள் குமுதா. இப்படியாக அந்த வான வேடிக்கை இரவு முடிந்து அனைவரும் தங்கள் வீடுகளுக்கு சென்று உறக்கத்தை தழுவினர். அடுத்த நாள் காலையில் திருவெற்றியூரில் பெரிய பெரிய அண்டாக்களில் மஞ்சள் நீரை வைத்திருந்தனர். திருமணமாகாத ஆண்கள் எல்லோரும் வெள்ளை வேஷ்டி சட்டையில் அந்த ஊரில் நடமாடினார்கள். பெண்களோ தங்கள் கையில் இருந்த சிறிய செம்புகளில் மஞ்சள் கலக்கப்பட்ட நீரை எடுத்துக்கொண்டு தங்கள் முறைப்பையின் மீது அல்லது அவர்கள் விரும்பும் ஆண்கள் மீது மஞ்சள் நீரை ஊற்றி விளையாடினார்கள்.
வெற்றிமாறனும் இன்னைக்கு வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று இருக்க. சரியாக சுந்தரம் ஒரு வேலையை கொடுத்து அனுப்பினார் அவனிடம். ‘அடச்சே…. இன்னைக்கு யாராவது தண்ணி ஊற்றினா அவ்வளவுதான்…. வெற்றி பத்திரமா போயிட்டு பத்திரமா அப்படியே வாடா….’ என்று அவனே அவனைத் தேற்றிக்கொண்டு புல்லட்டை எடுத்தான்.
இங்கே வினிதா நன்றாக மஞ்சள் கலந்த தண்ணீரை ஒரு செம்பு நிறைய எடுத்துக்கொண்டு அவள் தோழிகளுடன் ஊரை சுற்றி வந்தாள். அவர்களும் அவர்களுக்கு விருப்பப்பட்டவர் மீது மஞ்சள் தண்ணீர் ஊற்றி விளையாடினார்கள். ஆனால் யாருக்குமே ஊற்றாமல் தண்ணீரை மட்டும் கையில் வைத்துக் கொண்டு நின்று இருந்தாள் வினிதா.
“வினி என்ன பண்ற… இன்னமும் நீ யாருக்கும் தண்ணீர் ஊற்றலையா டி…?”
“எங்கடி…. நான் யாருக்கு ஊற்ற நினைக்கிறேனோ அவங்க என் கண்ணுலையே சிக்க மாட்டேங்கிறாங்க….”
“ஓ வெற்றி அண்ணனையா அப்போ நீ தேடுற…..?”
“ஆமா உங்க நொன்னனைத்தான் தான் தேடுறேன்….”
“வேற யாருக்காவது ஊற்ற வேண்டியதுதானே டி…”
“அது எப்படிடி முடியும்… அவங்க தானே எனக்கு முறை பையன்…. அப்போ அவங்க மேல தான் ஊற்றணும்….”
“சரி சரி கோச்சிக்காத… கோச்சுக்காத வா….” என்று அவளையும் தங்களோடு சேர்த்து இழுத்துக் கொண்டு திரிந்தார்கள்.
வினிதா வெற்றி வருவான் வருவான் என்று ஒவ்வொரு பக்கமும் சென்று கொண்டிருந்தாள். கடைசியாக வெற்றிமாறன் தனது புல்லட்டில், வினிதா நின்று இருந்த தெருவின் வழியாக வந்தான். அதைப் பார்த்து வினிதாவின் தோழிகள் “வினி இங்கே வா சீக்கிரம் வா…. உன் மாமா வர்றாருடி ரெடியா இரு…..”
“ஏய் உண்மையாவா மாமா தானே….”
“அட ஆமா டி வா… ஏய் முதல் தடவை இப்படித்தான் ஏமாத்தினீங்க என்னை…”
“அம்மா தாயே வா… வந்து உன் வெற்றி மாமாவுக்கு மஞ்சள் தண்ணியை ஊற்று இல்லை அங்கேயே உட்கார்ந்துக்க… எங்களுக்கு என்ன வந்துச்சு….” என்று அவளை முறைத்துக் கொண்டு அவர்கள் வெளியே பார்த்துக் கொண்டு நின்றனர்.
வினிதாவும் இவர்களை நம்பலாமா என்று யோசித்தவள், ‘சரி சரி எதற்கும் போய் பார்த்திடலாம்…. ஒருவேளை வெற்றி மாமாவா இருந்தா நமக்கு லக்தான்…’ என்று நினைத்த வினிதா எட்டிப் பார்க்க அங்கே புல்லட்டில் வெற்றிமாறன் வருவது தெரிந்தது. உடனே அவன் புல்லட்டின் முன்னால் வேகமாக வந்து நின்றாள் அவள். அவள் ஓடி வரும்போது அவளை கவனித்துவிட்ட வெற்றிமாறனும் புல்லட்டை சட்டென்று நிறுத்தினான்.
“ஏய் அறிவில்லையாடி உனக்கு… இப்படித் தான் வந்து வண்டியில வந்து விழுவியா…. உனக்கு சாவறதுக்கு வேற வண்டியா கிடைக்கல…?”
“ஆமா பெரிய பிஎம்டபிள்யூ கார் வந்துட்டாரு பேச…”
“ஆமாடி எனக்கு என்னோட புல்லட் பெரிசுதான்… இப்ப நீ எதுக்கு என்னோட வண்டியில வந்து விழப் பார்த்தே… அப்புறம் உன் அப்பா என்கூட சண்டைக்கு வரவா….?”
“இதோ பாரு மாமா… நான் உன் கிட்ட திரும்பத் திரும்ப சொல்றேன்… என்னைப் பற்றி என்ன வேணும்னாலும் பேசு… ஆனால் என் அப்பா பத்தி பேசுற வேலை வச்சிக்காத…”
“சரிதான் போடி உன் கூட மனுஷன் பேசுவானா….?” என்று புல்லட்டை ஸ்டார்ட் பண்ண வர வினிதா தனது தோழிகளிடம் கண்ணை காட்டினாள். அவர்கள் ஓடி வந்து வினிதாவின் கையில் செம்பை கொடுத்தனர்.
வினிதாவின் கையில் செம்பு எதுவும் இல்லாமல் வந்ததால் தான் அவள் தனக்கு மஞ்சள் தண்ணீரும் ஊற்ற மாட்டாள் என்று மகிழ்ந்து கொண்டிருந்தான் வெற்றிமாறன்.
ஆனால் அவள் கைக்கு செம்பை கொடுத்தவுடன் அதை வாங்கிய வினிதா வெற்றிமாறனின் மீது ஊற்றினாள். வெற்றிமாறன் தொப்பலாக நனைந்திருந்தான்.
“ஏய் என்னை விடுடி….”
“மாமா எப்படி மஞ்சள் தண்ணீர் ஊற்றிட்டேனா… இப்போ உனக்கு சந்தோஷமா…. உனக்கு முதலில் மஞ்சள் தண்ணீர் ஊற்றினதும் நான்தான்…” என்று குதித்தாள்.
“ஆமா இவங்க மஞ்ச தண்ணீர் ஊற்றணும்னுதான் நாங்க தவமாய் தவமிருந்தோம் வந்துட்டா….”
“நீ என்ன வேணா சொல்லு மாமா…. ஆனால் உனக்கு மஞ்சள் தண்ணீர் ஊத்துனது நான்தான்…. எனக்கு மட்டும் தான் உனக்கு மஞ்சள் தண்ணீர் ஊத்துற உரிமை இருக்கு…”
“இதோ பாருடா உரிமையை பற்றி எல்லாம் பேசுறதை… இங்க பாருடி நீ எப்படி என்ன பேசினாலும்… நீ ஆசைப்பட இதுவும் நடக்காது….”
“மாம்ஸ் அதையும் பார்த்திடலாம்… இந்த வினிதா நெனச்சதை அடையாம விடமாட்டேன்….”
“ஆமா பெரிய நீலாம்பரி சபதம் போடுறா பாரு…” என்று அவளை தள்ளிவிட்டு புல்லட்டை எடுத்துக் கொண்டு சென்றான்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊