குமுதாவும் கையில் மஞ்சள் நீர் நிறைந்த செம்புடன் அவளின் மனம் கவர்ந்தவனை தேடி சென்றாள். அவனும் அவளைத்தான் தேடி வந்து கொண்டிருந்தான். அவன் மீது மஞ்சள் நீரை ஊற்ற எத்தனையோ பேர் முன்வந்தும் அவன் யார் கையிலும் சிக்காமல் தன்னவள் கையினால் அந்த மஞ்சள் நீரை வாங்க வேண்டும் என்று எண்ணி அவளை தேடி வந்தான்.
ஒரு இடத்தில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். அவனைப் பார்த்ததும் குமுதா தலையை குனிந்து கொண்டாள்.
“என்னடி தலையை குனிச்சிட்டு நிக்கிற…. வெட்கமா….?” என்று கேட்டான். அதற்கு அவள் தலையை ஆட்டினாள்.
“அது சரி… இப்படி கீழே குனிந்து கொண்டு நிற்கவா என்னை வரச் சொன்ன…. இல்லைல அப்புறம் என்ன… நிமிர்ந்து என்னைப் பாரு…” என்றதும், மெல்ல அவனை நிமிர்ந்து பார்த்தாள் குமுதா. அவள் கன்னம் இரண்டும் ஆப்பிள் பழத்தைப் போல சிவந்திருந்தன.
“இந்த வெட்கத்தில் சிவக்கும் உன்னோட கன்னங்கள் பார்க்க அவ்வளவு அழகு.. இங்க பாரு குமுதா… நீதான் எனக்கு மஞ்சள் தண்ணீர் ஊற்றணும்னு யார் கையிலேயும் சிக்காமல் ஓடி வந்து இருக்கேன்… எங்கடி மஞ்சள் தண்ணீர்….?” என்று கேட்டான்.
“இதோ இங்கதான் இருக்கு…” என்றவள் அந்த மஞ்சள் நீரை அவன் மீது ஊற்றினாள்.
“அம்மா ப்ளீஸ்மா…. இன்னைக்கு மட்டும் நிற்கிறேனே… பக்கத்து வீட்டு ராஜா இருக்கிறான்ல அவன்கூட இன்னைக்கு ஸ்கூல் போகலை அம்மா…. நான் மட்டும் எப்பிடி அம்மா காலேஜ் போற…?”
“அடிச்சேன்னு வையேன் உனக்கு… ஏய் நீ என்ன சின்ன குழந்தையாடி… காலேஜ் போற அதுவும் பைனல் இயர்… ராராஜா சின்ன பையன்டி அவன் இப்போதான் செகண்ட் ஸ்டாண்டட்… அவனும் நீயும் ஒண்ணா…? சின்னப் பசங்க தான் லீவு முடிஞ்சு ஸ்கூலுக்கு போறதுக்கு அழுவாங்கன்னு பார்த்தா…
நீ இப்படி அஞ்சு நாள் திருவிழாக்கு நின்னுட்டு காலேஜுக்கு போறதுக்கு அழுதுட்டு இருக்க… அசிங்கமா இல்லை உனக்கு…?”
“அம்மா நான் என்னம்மா பண்றது…. அஞ்சு நாளும் கோயில், திருவிழா, சாப்பாடு, பிரண்ட்ஸோட சுத்துறதுனு ஜாலியா இருந்துட்டு இப்போ காலேஜுக்கு போக முடியலை அம்மா…. ப்ளீஸ்மா…. ப்ளீஸ்மா… இன்னைக்கு இருந்துட்டு நாளைக்கு போறேனே….”
“இங்க பாரு வினி என்னை கோபப்படுத்தாம மரியாதையா போய் கெளம்பு…” என்று சொல்லி விட்டு ரேணுகா வேறு வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்.
ரேணுகாவை மனசுக்குள் திட்டிவிட்டு வினிதா காலேஜ் செல்ல தயாராகினாள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு மெதுவாக ரெடியாகி வந்தாள். அவளைப் பார்த்து முறைத்த ரேணுகா, “ஏன்டி கொஞ்சம் வேகமா வந்தால் தான் என்ன… ஆடி அசைந்து மெதுவா வர்ற… உனக்கெல்லாம் கொஞ்சம் கூட படிக்கணும்னு அக்கறையே இல்லை…”
“அம்மா காலையிலே ஆரம்பிக்காதம்மா…. நானே திருவிழா முடிஞ்சு காலேஜ்க்கு போற கடுப்பில் இருக்கிறேன்….”
“சரி… சரி இந்தா லஞ்ச் பாக்ஸ்… சாப்பாட்டை ஃபுல்லா சாப்பிட்டு வரணும் சரியா….?”
“போமா… ஸ்கூல்ல ஆரம்பிச்சு இப்போ காலேஜ் போறேன் இப்போ வரைக்கும் நீ மாறாம சொல்ற ஒரே டயலாக்…. சாப்பாடு வச்சிருக்கிறன் ஃபுல்லா சாப்பிட்டு வரணும்…. இதை மாற்றவே மாட்டியா அம்மா…?”
“வேகமா போடி பஸ் வந்துட போகுது…. என்னை விரட்டுவதிலேயே குறியா இரு…. சரி நான் போயிட்டு வரேன்…” என்றவள், ரேணுகாவை அணைத்து ஒரு முத்தம் வைத்துவிட்டு பஸ் ஸ்டாண்டுக்கு சென்றாள். வினிதா அவள் ஊரிலிருந்து பக்கத்து ஊரில் உள்ள கல்லூரிக்கு செல்கின்றாள். அதனால் எப்போதும் அவள் தோழிகளுடன் சேர்ந்து பஸ்ஸில் செல்வது வழக்கம்.
அங்கே அவளது தோழிகள் வினிதாவிற்காக காத்திருந்தனர். இவள் வந்ததும், “என்னடி மூஞ்சை சோகமா வச்சுக்கிட்டு வர்ற….?”
“அட ஏன்டி நீங்க வேற… அஞ்சு நாள் காலேஜ் இல்லாமல் வீட்டில ஹேப்பியா இருந்துட்டு… இப்போ திரும்பவும் காலேஜ் போகணும்னா கஷ்டமா இருக்கும் இல்லடி… எனக்கு காலேஜ் வரவே சுத்தமா விருப்பம் இல்லை…”
“உனக்கு என்னம்மா நீ காலேஜ் டாப்பர். நீ வந்தாலும் வரலைனாலும் எக்ஸாம்ல நல்ல மார்க்ஸ் எடுத்துடுவ… ஆனால் நாங்க அப்படியா…. தொடர்ந்து கட்டடிக்காமல் காலேஜுக்கு போறதனால ஏதோ பாஸ் பண்றோம்…”
“சரி சரி ஓட்டாதிங்கடி…. ஓட்டாதிங்கிடி பஸ் வருதான்னு பாருங்க…” என்று சொன்னாள் வினிதா.
சிறிது நேரத்தில் பின்னர் ஒரு பேருந்து கூட்டத்தோடு வந்தது. கூட்டமாக இருந்தாலும் நேரம் போகிறது என்று எல்லோரும் பஸ்ஸில் ஏறிக்கொண்டனர். ஐந்து நாட்களின் பின் காலேஜ் போவதால் வினிதா முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டே இருந்தாள்.
அவளது தோழிகளும் எவ்வளவோ சொன்னார்கள். “விடு வினி சமாளிச்சுக்கலாம்…” என்று ஆனால் அவள் தான், “இல்லைடி இன்னைக்கு மனசே இல்லை எனக்கு காலேஜ் வர்றதுக்கு….” என்று அதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தாள்.
அந்த நேரம் பார்த்து ஒரு எருமை மாடு அவளை இடித்துக் கொண்டு இருந்தது. வினிதாவும் ஒருமுறை அவனை முறைத்துப் பார்த்துவிட்டு சற்று விலகி நின்றாள். சிறிது நேரம் அமைதியாக இருந்தவன் மீண்டும் தனது வேலையைக் காட்ட ஆரம்பித்தான். வினிதாவுக்கு வந்ததே கோவம்… காலிலிருந்த செப்பலை எடுத்து அவன் முகத்தில் பளார் என்று நான்கு வைத்தாள்.
“வினி என்னடி பண்ற… விடுடி… விடுடி….” என்று அவளின் தோழிகள் அவளை இழுத்தனர்.
“என்னடி என்ன… எதஎதற்கு இவனை விடணும்… நானும் பார்த்துகிட்டே இருக்கிறேன்…. இடிச்சிட்டே இருக்கிறான்…. ஏன் நீ எல்லாம் அக்கா தங்கச்சி கூட பொறக்கல… பொறுக்கி நாயே….” என்றாள். இவளின் சத்தத்தில் பஸ் நிறுத்தப்பட்டது.
“ஏம்மா இங்க எத்தனை பேரு வேலைக்கு போறவங்க இருக்கிறாங்க…. நீ பாட்டுக்கு இப்படி சண்டை போட்டுட்டு இருந்தால் நாங்க எத்தனை மணிக்கு வேலைக்கு போறது….?” என்று கேட்டனர் சிலர்.
“ஓ இங்கே ஒரு பொண்ணை இந்த பொறம்போக்கு இப்படி இடிச்சிட்டே நிற்கிறான்… நீங்க அதை பார்த்துகிட்டு இருக்கிறீங்க… உங்களுக்கு எல்லாம் வெட்கமா இல்லையா….?” என்று கேட்டாள்.
அதற்கு அவர்களோ, “பஸ்ல கூட்டம் இருந்தா அப்படித்தான் இருக்கும்…. எதுக்கும் நீங்க தான் பார்த்து பொறுமையா இருக்கணும்….”
“ஓ நாங்க அமைதியா இருக்கணுமா…? எப்படி உங்களை மாதிரி ஆளுங்க இருக்கிறதுனால தான் இப்படி இவனை மாதிரி எருமை எல்லாம் பொண்ணுங்களை இடிச்சிட்டே தெரியுதுங்க… இறங்குடா கீழே…” என்று அவனைப் பிடித்து தள்ளினாள் வினிதா.
ஆனால் அவனோ தனக்கும் இந்த கூட்டத்தில் ஒரு சிலரின் சப்போர்ட் இருப்பதை உணர்ந்தவன். “ஏ பொண்ணே ஏதோ பிரேக் அடிக்கும் போது தெரியாம கை பட்டுட்டு… அதுக்கு இந்த குதி குதிக்கிற….?” என்று சொன்னான்.
வினிதாவிற்கு மீண்டும் கோபம் வந்தது. “என்ன சொன்ன…. தெரியாமல் பட்டுட்டா….? தெரிஞ்சு தொடுறதுக்கும் தெரியாம படுறதுக்கும் வித்தியாசம் எனக்கு தெரியாம இல்லடா….”
“அப்போ நீ என்ஜாய் பண்ணிட்டுதான் இருந்திருக்க… இப்போ எதுக்கு கத்துற….? நான் முதல்ல இடிக்கும் போதே நீ கத்தியிருக்க வேண்டியது தானே….” என்று அவளை தப்பா பேச வினிதாவிற்கு ஒரு மாதிரியாகிவிட்டது. எதுவும் பேசாமல் பஸ்ஸிலிருந்து இறங்கி விட்டாள். அவள் தோழிகள் பஸ்ஸில் இருந்து இறங்குவதற்கு முன்னரே பஸ்ஸை எடுத்து விட்டார் அந்த டிரைவர் எதற்கு வீண் பிரச்சனை என்று.
கீழே இறங்கிய வினிதா அங்கிருந்த ஒரு கல்லில் அமர்ந்து விட்டாள். அவளுக்கு கோபம் கோபமாகவும் வந்தது. அதே சமயத்தில் அசிங்கமாகவும் இருந்தது. அவன் ஒரு பொறுக்கி அவனை சட்டையை புடிச்சு கேள்வி கேட்டால் கடைசியில அவன் என்னையே தப்பான பொண்ணா காட்டிட்டானே பொறுக்கி ராஸ்கல்… திருந்தவே மாட்டானுங்க…. என்று கீழே குனிந்து ஏசிக் கொண்டிருந்தவள் கண்களில் கண்ணீர் மட்டும் வந்தது.
‘வினி நீ இப்போ எதுக்கு அழுற… நீ ஒன்னும் தப்பு பண்ணலையே… அவன் உன்னை தொட்டதுக்கு நீ அடிச்சிட்ட அவ்வளவுதான்…. அவன் பேசுறது எல்லாத்தையும் நீ கண்டுக்க கூடாது…. நீ தைரியமானவ…’ என்று சொல்லி அவளை அவளே தேற்றி கண்ணீரை துடைத்துக் கொண்டு நிமிர்ந்தால்.
அங்கே எதிரே தனது புல்லட்டில் சாய்ந்து கொண்டு நின்றிருந்தான் வெற்றிமாறன். அவனைப் அங்கே பார்த்ததும் என்னை நினைத்தாளோ, “மாமா….” என்று கத்திக் கொண்டு அவனை அணைத்துக் கொண்டாள். அவன் நெஞ்சிலே சாய்ந்து அழுதாள். வெற்றிமாறனும் அவளை அணைத்துக் கொண்டு அவள் தலையை வருடிக் கொடுத்தான். “என்னாச்சு என் சண்டைக்காரிக்கு…?”
“மாமா….. மாமா இன்னைக்கு பஸ்ல என்ன ஆச்சுனா, இன்னைக்கு பஸ் கொஞ்சம் கூட்டமா இருந்துச்சா அதுல ஒருத்தன் என்னை இடிச்சிட்டே இருந்தான் ஒரு தடவை இடிச்சான் நானும் சரி தெரியாம இடிக்கிறானு நினைச்சிட்டேன்…. அவன் மறுபடியும் வந்து என்னை இடிச்சான். எனக்கு கோபம் வர கால்ல இருந்த செப்பல்லால நாலு வச்சேன்… ஆனால் பஸ்ல இருந்தவங்க கூட்டமா இருந்தா அப்படித்தான் இருக்கும்…. நீங்க தான் அட்ஜஸ்ட் பண்ணி நிற்க்கணும்னு சொன்னாங்க…. அவனும் ஏதோ அவன் இடிச்சதை நான் என்ஜாய் பண்ணிட்டு இருந்தேன்னு சொல்லிட்டான் மாமா… அதுக்கு யாருமே எனக்காக பேசலை…. எனக்கு ஒரே அசிங்கமா போயிட்டு…. சொல்லு மாமா நான் அப்படியா…. உன்னைத் தவிர வேற யாரையாவது இப்படி தொட்டுத் தொட்டு பேசி இருப்பேனா மாமா…. சொல்லு மாமா…. நான் அப்படிப்பட்ட பொண்ணா….” என்று சிறு பிள்ளை போல உதட்டை பிதுக்கி அவன் முகத்தைப் பார்த்து கேட்டாள்.
அவளது கண்ணில் இருந்த கண்ணீரை துடைத்து விட்ட வெற்றிமாறன், “இங்க பாருடி…. அதெல்லாம் ஒன்னும் இல்லை…. நீ பத்தரமாத்து தங்கம்டி…. நான் என்ன நினைக்கிறேன்னா உன்னோட வெயிட்டால பஸ் ஓட்ட கஷ்டமா இருந்துச்சு போல இருக்கு…. அதுதான் டிரைவர் உன்னை இறக்கி விட்டு போயிட்டானு….” என்றான்.
“மாமா நான் இவ்ளோ சீரியஸா பேசிக்கிட்டு இருக்கேன்… நீ என்னனா இப்படி பேசுற போ மாமா….”
“விடு வினிமா நீதான் சிங்கப்பெண்ணாச்சே… இதை எல்லாம் தூசா நினைச்சி இங்கேயே உதறிட்டு வா… சரி வா உன்னை நானே காலேஜ்ல விட்டுட்டு போறேன்….”
“போ மாமா… நான் காலையிலேயே காலேஜ்க்கு போக மாட்டேன்னு உன் அத்தைட்ட சொன்னேன்…. ஆனால் ரேணுகா தான் கட்டாயப்படுத்தி அனுப்பி வச்சிட்டு… இப்போ பாரு என்ன ஆச்சுன்னு….?”
“ஏய் எனக்கு நல்லாவே தெரியும் டி உன்னை பற்றி…. அஞ்சு நாள் லீவு எடுத்துட்டு இப்போ காலேஜுக்கு போகணும்னு சொன்ன உடனே உனக்கு கசக்குது….?”
“இல்லை மாமா… அப்படியெல்லாம் இல்லை மாமா….” என்று தனது முட்டைக் கண்களை உருட்டினாள்.
“ஏய் முட்டக் கண்ணி… கண்ணை எல்லாம் உருட்டாதே… உன்னைப் பற்றிதான் எனக்கு தெரியுமே… சரி வா நான் காலேஜ்ல உன்னை விட்டுட்டு போறேன்….”
“அதெல்லாம் முடியாது நான் காலேஜுக்கு போக மாட்டேன்… நான் இப்படியே நல்லா ஊரை சுத்திக்கிட்டு வீட்டுக்கு போயிடுவேன்…”
“சொன்னாக் கேளுடி… வா உன்னை காலேஜ்ல விடுறேன்… இல்லை அத்தை கிட்ட போய் போட்டு கொடுத்துடுவேன்….”
“ஆமா பொல்லாத அத்தை….” என்றவள், “மாமா ஐஸ்கிரீம்…”
“இந்த டைம்லயா டி….?”
“ஆமா அதுக்கு எல்லாம் நல்ல நேரமா பார்ப்பாங்க…. எனக்கு இப்போ நீ ஐஸ்கிரீம் வாங்கி கொடுக்கணும் அவ்வளவு தான்…” என்று. சொல்லிக்கொண்டே அவன் புல்லட்டில் வந்து ஏறினாள்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊