வெற்றிமாறனும் ரைஸ் மில்லில் இருந்து வேலை பார்த்துக் கொண்டு இருந்தான். அப்போது ஒரு புதிய வண்டியில் இருந்து அரிசி மூட்டைகளை கொண்டு வந்து அடுக்கிக் கொண்டு இருந்தனர். அதைப் பார்த்துக் கொண்டு இருந்த வெற்றிமாறனுக்கு சந்தேகமாக இருந்தது. எழுந்து அவரிடம் சென்றான்.
“அண்ணே இந்த அரிசி மூட்டை எல்லாம் எங்கிருந்து வருது….?”
“அது வந்து தம்பி….” என்று அவர் தலையைச் சொரிந்தார்.
“அண்ணே உங்களைத்தான் கேட்கிறேன்… ஏன் இந்த மூட்டைல ஒரு இடத்தில மட்டும் எதையோ மறைக்கிற மாதிரி பேப்பரை ஒட்டி வச்சிருக்கிறீங்க…?” என்றவன் வந்து அந்த பேப்பரை கிழித்தான். அதில் ஏதோ முத்திரை இருந்தது.
“இந்த மூத்திரையைப் பார்த்தால் அரசாங்க சொத்து மாதிரி இருக்கு….”
“அது வந்து….” என்று அவர் மீண்டும் இழுத்தார்.
“நிறுத்துங்க நீங்க எடுத்து வந்த மூட்டை எல்லாம் இந்தப் பக்கம் எடுத்து வைங்க….” என்றான்.
அவரும் அவன் சொன்னபடி அவர் கொண்டு வந்த மூட்டைகளை எல்லாம் ஒரு பக்கம் எடுத்து வைத்தார். அந்தப் மூட்டையின் உள்ளிருந்த பையைப் பார்த்த வெற்றிமாறன் அதிர்ச்சி அடைந்தான்.
“என்னங்க இது ரேஷன் கடைக்கு வந்த அரிசியை இங்கே கொண்டுவந்து வந்திருக்கிறீங்க…. இதெல்லாம் நல்லா இல்லை… போலீஸ் கையில சிக்கினீங்கனா உங்களை காலம் ஃபுல்லா லாக்கப்லயே வச்சுடுவாங்க…. இதெல்லாம் ரொம்ப தப்பு…. மரியாதையாக இது எல்லாவற்றையும் எடுத்துட்டு போயிடுங்க….” என்றான் வெற்றிமாறன்.
அதற்கு அவரும், “அது இல்லை தம்பி எங்க ஐயாதான்…”
“உங்க ஐயாவை பற்றி எனக்கு கவலை இல்லை… இப்போ இதை மட்டும் நீங்க எடுத்திட்டு போகலை… அப்புறம் உங்களை நானே போலீஸ்ல புடிச்சு குடுத்துடுவேன்… எடுத்துட்டு போங்க இங்க இருந்து…” என்று சொல்லி அவரை எச்சரித்து அனுப்பினான் வெற்றிமாறன்.
அழுது அழுது, ஏதேதோ புலம்பியபடி வெங்காயம் வெட்டிக்கொண்டிருந்த வினிதாவை, அவள் வீட்டு வாசலில் நின்று அவளது தோழிகள் கூப்பிட்டனர். உடனே வினிதாவும் வெங்காயத்தை அப்படியே வைத்துவிட்டு அவர்களிடம் ஓடினாள். “ஏய்… ஏய்… எங்கடி போற…?” என்று கத்தினாள் ரேணுகா .
“இருமா இவ்வளவு வெங்காயம் தான் வெட்டிட்டேன் இல்லை… மீதியை நீயே பார்த்துக்கோ…. அவளுங்க வந்துட்டாளுங்க… நான் அப்படியே சுத்திட்டு வரேன்…” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாள். “என்னதான் பெண்ணோ தெரியல…” என்று தலையில் அடித்துக் கொண்டு ரேணுகா வேலையை பார்க்க ஆரம்பித்தார்.
வெளிய வந்த வினிதா, “ஏய் வர இவ்வளவு நேரமாடி…. எங்க அம்மா என்னை வெங்காயம் வெட்ட விட்டுடுச்சுடி…. கொஞ்சம் முன்னாடி வந்திருக்கலாம்ல…” என்றாள். அதற்கு அவர்களும், “அட நீ வேறடி…. எங்க அம்மாவும் என்னை நல்ல வேலை வாங்கிருச்சு இன்னைக்கு… ஒரு நாள் ஃப்ரீயா சுத்தலாம்னு பார்த்தா எங்க விட்டாங்க…” இப்படி ஒவ்வொருவரும் தாங்கள் வீட்டில் செய்த வேலைகளைப் பற்றி சொல்லிக்கொண்டே ஊரை சுற்றக் கிளம்பி விட்டார்கள்.
வினிதா அவள் தோழிகளிடம், “எனக்கு மாங்கா சாப்பிடணும் போல இருக்கு….”என்றாள்.
“என்ன வினி எங்ககிட்ட சொல்லவே இல்லை…”
“அடச்சீ நீங்க வேற ஏன்டி….? இந்த டைம்ல மாங்கா சாப்பிட்டா நல்லாத்தான் இருக்கும்…”
“உங்க மாந்தோப்பு தான் இருக்குல்ல வா அங்க போகலாம்….” என்றார்கள். அதற்கு வினிதா, “சொந்த தோப்புல சாப்பிட்டால் எப்படிடி நல்லா இருக்கும்….? திருடி திங்கிற மாங்கா தான் ருசியா இருக்கும்….”
“என்னது திருட போறியா…. அப்படி எங்கடி திருட போற….?”
“அதுக்கெல்லாம் ஒரு இடம் இருக்கு வாங்கடி….” என்று அவர்களை இழுத்துக் கொண்டு சென்றாள் வினிதா.
வினிதா தோழிகளை அழைத்துக் கொண்டு சென்றது வேறு எங்கேயும் இல்லை. வெற்றிமாறனின் மாந்தோப்பிற்குத் தான். இதைப் பார்த்த அவளை தோழிகள், “என்னடி இது… வெற்றி அண்ணாவோட மாந்தோப்புக்கு வந்திருக்கிறோம்….?”
“ஆமா, இங்க தான் நம்ம நம்மளோட கைவரிசையை காட்டப் போறோம்….” “வேண்டாம் வினி இதெல்லாம் ரொம்பத் தப்புடி…. உங்க மாந்தோப்பு தான் இருக்குல்ல அங்க போலாம்….”
“முடியவே முடியாதுடி…. நான் மாமாவோட தோப்புல இருக்கிற மாங்காயைத்தான் பறிச்சு சாப்பிடுவேன்…. நீங்க என்கூட வர்றீங்க…. உங்களுக்குத் ஒன்னு தெரியுமா….? மாமாவோட தோப்புல இருக்கிற மாங்காய் ரொம்ப ருசியா இருக்கும்…. அதுவும் உப்பும் மிளகாய்தூளும் போட்டு சாப்டா சும்மா அப்படி இருக்கும்…. ஒரு தடவ சாப்பிட்டா அப்படியே நாக்குல அதோட ருசி இருக்கும்…. உங்களுக்கு வேணாம்னா நீங்க போங்கடி….” என்று அவள் தோழிகளுக்கு ஆசை காட்டி அந்த தோப்பினுள் அழைத்துச் சென்றாள்.
அங்கே மாமரங்களின் இலைகள் தெரியாதவாறு நிறைய மாங்காய்கள் தொங்கின. அந்த மாங்காய்களைப் பார்த்த உடனேயே இவர்கள் அனைவரின் வாயிலும் எச்சில் ஊறியது. நீ நான் என்று போட்டி போட்டுக் கொண்டு மாங்காய்களை பறிக்கத் தொடங்கினார்கள். ஆனால் வினிதாவோ ஒரு மாமரத்தின் மேலே இருக்கும் மாங்காயையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்தவர்கள், “ஏய் வினி என்னடி… அந்த மாங்காயையேயே பார்த்துட்டு இருக்க….?”
“இல்லடி அங்க இருக்கும் அந்த மாங்காய், மாங்காயும் இல்லாமல் பழமும் இல்லாமல் இடையில் இருக்கும் போல இருக்கு…. அப்படி ஒரு மாங்கா சாப்பிட்டா சூப்பரா இருக்கும்….”
“ஏய் அது எங்க இருக்குன்னு பார்த்தியா…..அது மரத்தின் உயரமான கிளை மேல இருக்கு… அந்த மாங்காயை எல்லாம் பறிக்கணும்னா மரத்துல ஏறித்தான் பறிக்கணும்….”
“ஆமால மரத்திலேயே ஏறித்தான் பறிக்கணும்…. சரி நீங்க எல்லோரும் இங்க இருங்க நான் போய் அந்த மாங்காயை பறிச்சிட்டு வரேன்…..”
“வினி உனக்கு என்ன லூசா…? நீ எப்படி அந்த மரத்துல ஏறப் போற…. அதெல்லாம் வேணாம் வாடி போகலாம்…. இப்போ பறிச்ச வரைக்கும் போதும்…. வெற்றி அண்ணன் வேற வந்தாங்க நம்ம தோலை உரிச்சு உப்பு கண்டம் போட்டுடுவாங்க….”
“ஏய் அதெல்லாம் ஒண்ணுமில்லை…. மாமா இப்போ வராது…. அப்படியே மாமா வந்தாலும் அதை நான் சமாளிச்சுடுவன்….”
“ஏய் சொன்னா கேளுடி…. மரத்தில ஏறி கீறி விழுந்து அடிபட்டது… பிறகு நீ தான் அடி வாங்குவ வீட்டில் போய்….”
“அதெல்லாம் சமாளிச்சுக்கலாம்… இந்த வினிதாவை என்னன்னு நினைச்ச…. ரேணுகாவை சமாளிக்கிறது ஒன்னும் எனக்கு பெரிய வேலை இல்ல சரியா…. எனக்கு அந்த மாங்காய பார்த்ததும் சாப்பிடணும் போல இருக்கு…. நான் ஏறப் போறேன்…. நீங்க எல்லாம் இங்கேயே இருங்க…”
“சரி…” என்று அவளின் தோழிகள் அனுமதியளிக்கவும் மரத்தில் ஏறத் தொடங்கினாள் வினிதா. சிறுவயதில் இருந்து மரம் ஏறக் கற்றுக் கொண்டவள் வினிதா. அதனால் மிகவும் லாவகமாக அந்த மாமரத்தில் ஏறி, அவள் நினைத்த, ஆசைப்பட்ட மாங்காயைப் பறித்தாள். அது மட்டும் இல்லாமல் அங்கு அதேபோல பல மாங்காய்கள் இருக்க அதையும் ஆசையில் பறித்து தாவணியில் கட்டி இடுப்பில் சொருகிக் கொண்டாள்.
அப்போது பார்த்து வெற்றியின் புல்லட் சத்தம் கேட்டது. கீழே இருந்த தோழிகள், “அடியே வினி வெற்றி அண்ணன் வருதுடி…” என்றனர்.
“சும்மா போங்கடி பொய் சொல்லாமல்…”
“இல்லடி நிஜமாத்தான்… வாடி போயிடலாம்…”
“நீங்க போங்கடி…. இந்த மாங்காய் ருசியா இருக்கு…. அதுவும் மரத்துல இப்படி கால் ஆட்டிக்கிட்டே மாங்காய் சாப்பிடுறதே தனி சுகம் தான்டி…. இருங்கடி சாப்பிட்டு முடிச்சுட்டு வரேன்…. உங்களுக்கு வேணுமா….?” என்று ஒரு மாங்காயைப் அவர்களிடம் நீட்டியபடி கேட்டாள்.
“அட கூறு கெட்டவள்… இதுக்கும் மேல இங்கே இருந்தால் மாட்டிக்குவோம்… நீ மெதுவாக ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டுட்டு வா… நாங்க போயிடுறோம்….” என்று சொல்லி அவர்கள் அங்கிருந்து ஓடி விட்டார்கள்.
அப்போதுதான் வெற்றிமாறன் வருவதைப் பார்த்த வினிதா, “ஐயையோ நிஜமா மாமாவே தான்…. ஏய் ஓடாதீங்கடி…. நில்லுங்கடி… இறக்கி விடுங்கடி… ஐய்யய்யோ பயமா இருக்குதே… ஏதோ ஒரு ஆர்வத்துல ஏறிட்டேன்… மாமா கையில கிடைச்ச கைமா தான்…. அடியே நில்லுங்கடி நில்லுங்கடி….” என்று கத்தினாள் வினிதா.
அவளது சத்தம் கேட்காத தூரத்திற்கு ஓடிவிட்டார்கள் தோழிகள். வினிதாவின் சத்தம் கேட்டு அந்த இடத்துக்கு வந்தான் வெற்றிமாறன். ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்து நன்றாக கால்களை ஆட்டிக் கொண்டிருந்த வினிதாவை பார்த்தவன், “ஏய் குரங்கே அங்க என்ன பண்ற….?” என்றான்.
“ஆஆஆ இந்த தோப்புல ஒரு பத்து ஏக்கர் வாங்கலாம்னு வந்தேன்….” என்றான்.
“மாமா திருடி திங்கிற மாங்காய் தான் ருசி அதிகம்…. அதுதான் இங்க வந்தேன்… நான் ஒன்னும் யாரோ தெரியாதவங்க தோப்புக்கு வரலை…. என்னோட மாமாவோட மாந்தோப்புக்குத் தான் வந்தேன்….”
“திருடிட்டு இந்த பேச்சு பேசுற… இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை….” என்று திட்டியவனைப் பார்த்து முப்பத்திரண்டு பல்லும் தெரியுமாறு இழுத்து வைத்து சிரித்தாள் வினிதா.
தலையில் அடித்துக் கொண்ட வெற்றிமாறன், “உன்னை எல்லாம் திருத்தவே முடியாது…. இறங்குடி கீழே… வயசு பொண்ணு மாதிரியா நடந்துக்கிற…. முதல்ல கீழள இறங்குடி….”
“மாட்டேன் நான் கீழே இறங்கினா நீ அடிப்ப….”
“இங்க பாரு நீயா கீழே வந்த உன்னை மன்னிச்சு விட்டுருவேன்… நான் மேல வந்தேன் மவளே நீ செத்தடி….”
“நீதான் மேலே வர மாட்டியே… நீ கண்டிப்பா அடிப்ப அதனால வரமாட்டேன்….”
“அப்படியா மேடம் சரி நீங்க அங்கேயே இருக்க நான் வரேன்….” என்ற வெற்றி கடகடவென்று அந்த மாமரத்தில் ஏறி, வினிதாவின் அருகில் இருந்தான்.
“மாமா…. மாமா…. மாமா… மாமா… ப்ளீஸ் மாமா அடிக்காத மாமா…. நான் பாவம்ல….” என்றாள் அப்பாவி மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு.
“ஏய் நடிக்காதடி… இவ்வளவு சொல்லியும் நீ இறங்க மாட்டேன்னு இருக்கிறல உன்னை…” என்றவன் அவள் கழுத்தை தனது கையால் வளைத்து, அவள் தலையில் ணங்கு ணங்கு என்று நாலு கொட்டு வைத்தான்.
“ஐயோ மாமா வலிக்குது…. வலிக்குது….. வலிக்குது…” என்று அழுதாள் வினிதா.
“குந்தாணி நான் உனக்கு மெதுவாத்தான் கொட்டினேன்.. அது உனக்கு வலிக்குதா…?”
“ஆமா மாமா வலிக்குது….”
“கீழே இறங்குடி…”
“மாமா மேல ஏறிட்டேன் தான் ஆனால் கீழ இறங்க பயமா இருக்கு மாமா… ப்ளீஸ் நீங்க என்னை இறக்கி விடுங்க மாமா….”
“ஏன்டி நீ ஒரு வயசு பொண்ணு மாதிரி எப்ப தான் நடந்துக்குவ….”
“அட போ மாமா எப்ப பாரு அதையே சொல்லிக்கிட்டு இருக்காமல்…. நான் என்னோட மாமாகிட்ட தானே பேசுறன்… நான் உன்கிட்ட எப்படி வேணாலும் பேசுவன்….”
“அது சரி….விட்டா இதைவிடவும் பேசுவ… ஆனால் அதை கேட்க நான் தயார் இல்லம்மா….” என்றவன் மரத்திலிருந்து இறங்கினான்.
“மாமா…. என்ன மாமா என்னை விட்டுட்டு நீ மட்டும் இறங்கிட்ட என்னையும் இறக்கி விடு மாமா….”
பின்னர் அவனுக்கும் அவள் மீது பாவம் வர அவளது இடுப்பை பிடித்து கீழே இறக்கினான் வெற்றிமாறன். அவன் அவளை திருப்பிப் பிடித்து தூக்கும்போது அவளின் தாவணி லேசாக விலக, வெற்றிமாறனின் கை அவள் வெற்றிடையில் பதிந்தது. ஒரு நிமிடம் மௌனமானால் வினிதா. அவளது கண்கள் வெற்றிமாறனின் கண்களைப் பார்த்தன. இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றனர். அப்போது ஒரு குயில் சத்தத்தில் இருவர் பிரிந்தனர்.
“ஏய் பார்த்துப் போடி….” என்றான் வெற்றிமாறன்.
“சரி மாமா…” என்று தலையாட்டிவிட்டு அங்கிருந்து சென்று விட்டாள் வினிதா. வெற்றியின் கைகைகள் குறுகுறுவென்று இருந்தது. அவனை திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே சென்றாள் வினிதா.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
Very nice epi